Skip to content
Post Views: 8,557
இவ்வாறாக அவளின் எண்ணங்களோடு அவள் உழன்று கொண்டிருக்க, சங்கீதா அவளை அழைத்து, “என் செல்ல தங்கச்சி தான நீ?? அக்கா அன்னைக்கு மாதிரியே என் போனை அங்க ரூம்லயே வச்சுட்டு வந்துட்டேன்.. அதுனால என் செல்லம் கட கடன்னு ஓடிப் போய் அக்கா போனை மட்டும் எடுத்துட்டு வந்துடுவியாம்.. மாமா என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க நான் பேசிட்டு வரதுக்குள்ள நீ போய் எடுத்துட்டு வந்துடுடி செல்லம்” என வந்தனா மறுத்துப் பேசக் கூட வாய்ப்பளிக்காமல் சதிஷின் கைகளைப் பற்றிக் கொண்டு அங்கிருந்த ரெஸ்டாரண்ட்டில் நுழைந்தாள்.
காதலித்த இரு உள்ளங்கள் சற்று நேர தனிமையை விரும்புகிறது என்று வந்தனாவிற்கு புரிந்தாலும் அங்கு அவனைப் போய் மீண்டும் அதுவும் தனியாக எதிர்கொள்வதில் சற்றும் உடன்பாடில்லை பெண்ணவளுக்கு.
Advertisement
என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்து கொண்டு அங்கேயே சில நிமிடங்கள் தேங்கி நின்றாள்.
எவ்வளவு நேரம் இப்படியே நிற்பது? எப்படி இருந்தாலும் போகத் தானே வேண்டும் என நினைத்த வந்தனா தன் தமக்கையை திட்டிக் கொண்டே தடதடக்கும் நெஞ்சத்தோடு மீண்டும் வந்த வழியே மேலே சென்றாள்.
Advertisement
Advertisement
வினய் இருந்த அறையை அடைய சில அடிகளே இருந்த நிலையில் வந்தனாவின் கால்கள் அதற்கு மேல் அசைய மறுத்தது.
“அய்யோ பகவானே!! என்னை ஏன் இப்படி சோதிக்கிற? யாரை பார்க்கக் கூடாதுன்னு உன்கிட்ட கேட்டேனோ மறுபடியும் மறுபடியும் அவன்கிட்டயே என்னை கோர்த்துவிடுற.. இது நியாயமா?” என கடவுளிடம் மானசீகமாக புலம்பியவள்,
Advertisement
“ஓகே தனு!! பீ ஸ்டாரங்.. போற கதவைத் தட்டுற!! உள்ளே போய் போனை எடுத்துட்டு வந்துட்டே இருக்க.. அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கக் கூடாது.. அவன் பேசினாலும் கண்டுக்கக் கூடாது.. உன்னால முடியும்.. யூ கேன் டூ இட்” என தனக்குத் தானே தைரியம் கூறிக் கொண்டவள் நகர மறுத்த கால்களை பிரம்ம பிரயத்தனப்பட்டு முயன்று நகற்றி முன்னேறி அந்த அறையை அடைந்தாள்.
‘அவனை பார்க்கக் கூடாது’ என்று ஜபம் போல் மனதில் கூறிக் கொண்டே இருந்தவள் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கதவைத் தட்டப் போன சமயம் சரியாக வினய் கதவைத் திறந்திருந்தான்.
அதுவரை மனதில் உருப்போட்டுக் கொண்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் காணாமல் போக, மீண்டும் அவன் விழிகளில் அவள் விரும்பாமலே விழுந்தாள்.
சங்கீதாவின் கைபேசியைக் கண்ட வினய், அதை கொடுக்கும் சாக்கில் தன்னவளை மீண்டும் கண்ணார கண்டுவிட்டு வருவோம் என நினைத்து ஒரு துள்ளலுடன் கதவைத் திறக்க,
அவன் தேடிப் போன பொக்கிஷம் அவனைத் தேடி வந்து அவனை இன்ப அதிர்ச்சியில் தள்ளியது.
அதுவும் தன்னைக் கண்டதும் அவள் விழிகளில் அதிர்ச்சியையும் தாண்டிய ஒரு ஒளியைக் கண்டவனின் மனம் சந்தோஷத்தில் துள்ளியது.
சற்று நேரம் இருவரும் தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு மோன நிலையில் இருக்க, வினய்யின் கைபேசி சப்தம் எழுப்பி இருவரையும் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
அதில் தன்னிலை அடைந்த வந்தனாவோ, எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும் அவனைக் கண்டதும் அனலில் உருகும் பனியாய் உருகிவிடும் தன் மனதை அறவே வெறுத்தாள்.
அவள் முகத்தில் வந்து போன பாவங்களை அவதானித்துக் கொண்டிருந்த வினய்யோ, அவள் மனதை வருத்தும் விஷயம் என்னவென்பதை அறிந்து அதை உடனே களைந்து விடத் துடித்தான்.
“அக்கா.. போன்.. உள்ளே.. வேணும்” என வார்த்தைகள் வேறு கோர்வையாக வராமல் சண்டித்தனம் செய்தது அவளுக்கு.
அவளின் தடுமாற்றம் அவன் முகத்தில் பெரியதொரு புன்னகையை தோற்றுவிக்க,
“என்ன வேணும்???” என அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் வினவ,
அது வந்தனாவின் கோபத்தை தூண்டிவிட்டது.
தன்னையும் மீறி அவனை ரசித்துத் தொலையும் தன் மனதின் மீது கொண்ட கோபம் அனைத்தும் இப்போது அவன் மீது திரும்ப,
‘எல்லாம் இவனால தான்!! இவன் ஒழுங்கா என்னை அப்படி பார்க்காம இருந்தா நான் ஏன் பார்க்கப் போறேன்?? தெளிவா இருந்த பிள்ளை மனசுல கல்லை வீசிட்டு இப்போ நக்கல் வேற பண்ணி சிரிக்குறான்.. இவனை!!! ‘ என்று நினைத்து கடுகடுத்து ஒரு காரமான பார்வையை அவனை நோக்கி வீசியவள்,
“எங்க அக்கா போனை உள்ள விட்டுட்டு போய்ட்டா அது வேணும் எனக்கு!! வழியை மறிக்காம தள்ளுங்க” என்றாள் கடுப்புடன்.
அவளின் ஒவ்வொரு பாவனைகளும் அவனுள் பல்லாயிரம் மலர்களைப் பொழிவதாய்!!!
மாறா சிரிப்புடன் அவளுக்கு வழியை விட்டவன், அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தான்.
அவனைக் கண்டுகொள்ளாமல் கைபேசியை தேடி எடுத்துக் கொண்டு இங்கிருந்து முதலில் சென்று விட வேண்டும் எனும் முனைப்போடு அந்த அறையெங்கும் அவள் கைபேசியைத் தேடி அலைய,
அவள் செய்கைகளை விரிந்த புன்னகையுடன் பார்த்திருந்தான் வினய்.
எங்கு தேடியும் சங்கீதாவின் கைபேசி அவளுக்கு கிடைக்காமல் போக, ஒருவேளை சங்கீதா தன்னை கழட்டி விடுவதற்காக பொய் சொல்லியிருப்பாளோ என்று கூட ஒரு நொடி சந்தேகம் கொண்டவள், ‘ச்ச ச்ச இருக்காது!!’ என அடுத்த நொடியே அதை மறுத்தாள். சரி எப்படி இருந்தாலும் அவளே வந்து தேடி எடுத்துக் கொள்ளட்டும் என நினைத்தவள் அங்கிருந்து கிளம்பப் போக,
அவளின் எண்ணங்களை புரிந்து கொண்ட வினய்யும் அவள் செல்வதற்கு முன் அவள் வழியை மறித்தவாரு வந்து நின்றான்.
அதில் அவள் புருவங்கள் நாணேற்றிய வில் போல் வளைய, பார்வை எனும் அம்புகள் அதன் இலக்கான அவனின் இதயத்தை சரியாய் சென்று தாக்கியது.
“வழியை விடுங்க!! நான் போகணும்” என சுவற்றைப் பார்த்துக் கொண்டு கடுப்புடன் அவள் மொழிய,
“போன் தேடி தான வந்திங்க!! எடுக்காமலே போறிங்க..” என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்வதாய் இல்லை.
“போன் இல்லை எடுக்கலை.. அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? ஃபர்ஸ்ட் வழியை விடுங்க” என பட பட பட்டாசாய் பொரிந்தாள் வந்தனா.
“போன் இல்லைன்னா என்கிட்ட கேட்க மாட்டீங்களா??” என அப்போதும் அவள் கோபத்தை ரசித்தவன் மென்மையாகவே வினவ,
“உங்ககிட்ட நான் எதுக்கு கேட்கணும்?? நகருங்க நான் போகணும்.. இல்லை கத்தி எல்லாரையும் கூப்பிட்டிருவேன்.. அப்பறம் உங்களுக்கு தான் அசிங்கம்” என எப்படியாவது இங்கிருந்து இவன் பார்வை படாத தூரத்திற்கு சென்று விட வேண்டும் என்கிற உத்வேகம் அவள் குரலில்.
“ஹேய் ரிலாக்ஸ்!! ஏன் இவளோ டென்ஷன்?? தண்ணி குடிக்கிறியா??” என அக்கறையில் வினவியவன் ஒருமைக்கு மாறியிருந்ததை இருவரும் உணரவில்லை.
“ஹய்யோ பிளீஸ் உங்க அக்கறை ஒன்னும் வேண்டாம் கொஞ்சம் வழியை விடுங்க நான் போகணும்” என விட்டால் அழுதுவிடுபவளைப் போல் இருந்தாள் வந்தனா.
அவளின் இந்த முகம் அவன் மனதைப் பிசைய, “என்னடாம்மா?? என்னாச்சு??” என பட்டை விட மென்மையான குரலில் அவன் வினவ,
அந்தக் குரல் வந்தனாவின் மனதிற்குள் புகுந்து ஏதோ செய்தது.
“பிளீஸ் வழியை விடுங்களேன்” என்றவளின் கண்கள் இப்போது லேசாய் கலங்க, வினய் பதறிவிட்டான்.
“ஹேய் வதனா!! என்னடா?? என்னைப் பார்த்து என்னடாம்மா பயம்?? ஏன் இப்படி கண் கலங்குற?? நீ இப்படி இருக்கது உள்ளே என்னவோ பண்ணுது” என தன் நெஞ்சை அவன் சுட்டிக்காட்டிக் கூற,
அவன் குரலில் இருந்த வருத்தம் அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
தன் அழுகை அவனை பாதிக்கிறது என்பதை அவன் கண்களைக் கொண்டே அவளால் உணர முடிய அது மேலும் அவளை பலவீனமாக்கியது.
அவள் தன்னை பார்த்ததும் அவளின் கருவிழிகளுள் தொலைந்தவன், “அப்படி பார்க்காத வதனா!!! இந்த பார்வை என்னை ஏதோ பண்ணுது.. இந்தக் கண்ணை நான் கண் மூடுற கடைசி நொடி வரைக்கும் பார்த்து ரசிச்சுகிட்டே இருக்கணும்னு உள்ளே ஒரு குரல் விடாம கேட்டு என்னை இம்சை பண்ணுது.. உன் கையை பிடிச்சிட்டு இந்த உலகம் முழுசா சுத்தி வர இந்த மனசு துடிக்குது.. காலமெல்லாம் உன்னை பத்திரமா என் நெஞ்சுக்குள்ள பொத்தி வச்சு பார்த்துக்கணும்னு உன்னை நேத்து பார்த்ததுல இருந்து தோணிட்டே இருக்கு வதனா!! பார்த்துக்கட்டுமா??” என ஆழ்ந்த குரலில் அவன் கேட்க,
அவன் காதலை அவனின் வாய்மொழியாகவே கேட்டதில் வந்தனாவின் இதயம் தாளம் தப்பித் துடித்தது.
அவன் காதலைச் சொன்ன விதமும், சொன்ன பொழுது அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளும் அவனின் காதலின் அளவை வந்தனாவிற்கு உணர்த்தியதோடு அல்லாமல் அவன் காதலை அவளுக்குள் கடத்தியது.
“நீ என்னை உடனே ஏத்துக்கலைனாலும் பரவாயில்லை தயவு செஞ்சு அழுதுறாத.. நீ அழுதா உள்ளே என்னமோ பண்ணுது.. உன் சந்தோஷத்துக்கு மட்டுமே நான் இன்னைக்கும் காரணமா இருக்கணும்.. உன் அழுகைக்கு இல்லை!!! என்னால உன்னை தாண்டி எதையும் யோசிக்க முடியாது வதனா!! ஐ வில் பீ வெய்ட்டிங் ஃபார் யூ!! எத்தனை காலம் ஆனாலும்!!! இப்போ போ!!! காலம் வரப்போ நானே உன்னைத் தேடி வருவேன்!! கண்டிப்பா!! என் மனசு மாறுரதுக்குள்ள இங்க இருந்து போய்டு.. இல்லை உன்னை என்னை விட்டு எங்கேயும் போக விட என்னால முடியாது” என்றவன் சங்கீதாவின் கைபேசியை அவள் கைகளில் திணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்.
அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் பெண்ணவளின் மனதில் அடி ஆழம் வரை இறங்கி தித்திக்கச் செய்ய, தன்னைத் தாண்டி செல்லும் அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.
நொடிகள் நிமிடங்களாகக் கரைய, வந்தனா மெதுவாக அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்தாள்.
அவனை விட்டு எவ்வளுவுக்கெவ்வளவு விலக நினைக்கிறோமோ அதை விட வேகமாய் மேலும் மேலும் அவனை நோக்கி ஈர்க்கப்படுவதை உணர்ந்த வந்தனாவிற்கு இதற்கு மேல் இங்கு இருந்தால் தன் மனம் அவன் பால் முழுதாய் சாய்ந்து விடுமோ என்ற ஐயம் தோன்ற உடனடியாக அங்கிருந்து வெளியேறினாள்.
அவளின் கொலுசின் ஓசையை வைத்தே அவள் வெளியேறிவிட்டதை உணர்ந்த வினய்க்கு மனம் வெற்றிடமான உணர்வு..
அவளிடம் இன்று காதலை சொல்ல வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவே இல்லை.. தன்னையும் மீறி வெளிவந்துவிட்டது.. இப்போது அவள் பதில் என்னவாக இருக்கும் என அவனின் மனம் அலைபாய, நிச்சயம் அவளுக்கும் தன்னை பிடிக்கும் என அவன் ஆழ்மனம் உறுதியாய் நம்பியது.
தன் காதல் அவளைத் தன்னுடன் சேர்த்து வைக்கும் என உறுதியாக நம்பியவன், அவளுடன் இருந்த இந்த பொன்னான நொடிகளை மனதில் பொக்கிஷமாய் சேமித்து வைத்துக் கொண்டான்.
வெளியே வந்த வந்தனாவின் நிலையோ சொல்லவே தேவை இல்லை.
எப்படி கீழே வந்தாள், எப்படி சங்கீதாவை கண்டு கைபேசியை கொடுத்தாள், எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் எதற்குமே வந்தனாவிடம் விடை இருக்காது.
கனவில் சஞ்சரிப்பதை போல் அவன் காதல் சொன்ன கணத்திலே அவள் உலகம் நின்று விட, அவன் பேசிய வார்த்தைகளும் அவன் கண்களில் பொங்கி வழிந்த காதல் மட்டுமே அவள் மனதில் விடாமல் ஓடிக் கொண்டே இருந்தது.
இப்படியாக அவள் மீண்டும் நடந்ததை நினைத்து ரசித்து அவன் காதலுக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்த சமயம், அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்துவதைப் போல் இளவரசியிடம் இருந்து அழைப்பு மீண்டும் வர, அதை எடுத்து காதுக்கு கொடுத்தவள் எதிர்ப்புறம் இன்று வீட்டில் நடந்த கலவரத்தை பற்றி இளவரசியின் மூலமாக அறிந்து கொண்டு பலமாக அதிர்ந்தாள்.
அதுவரை காதல் வானில் சிறகடித்துக் கொண்டிருந்தவள் சட்டென கீழே விழ, மனம் பலமாய் அடி வாங்கியது.
‘எப்படி?? தன் தந்தையைப் பற்றி தெரிந்தும் தான் எவ்வளவு பெரிய தவறிழைக்கப் பார்த்தேன்’ என்று எண்ணி எண்ணியே தன்னை வருத்திக் கொண்டவள்,
அவன் மீது கொண்ட விருப்புக்கும் தன் தந்தை காதல் மீது கொண்ட வெறுப்புக்கும் இடையில் கிடந்து தல்லாடினாள்.
அவனா?? தந்தையா? என்று வரும் பொழுது நாட்டரசனே வெற்றி பெற புதிதாய் முளை விடத் தொடங்கிய நேசத்தை மனதிலே போட்டு எரித்தவள், கண்ணில் படாதது கருத்திலும் படாதது என்றெண்ணி அவனை விட்டு விலகிச் செல்ல கனத்த மனதுடன் முடிவெடுத்து அடுத்த நாளே அதை செயலாற்றியும் இருந்தாள்.
ஆம், அடுத்த நாளே வயலூருக்கு வினய்யின் நினைவுகளை மட்டும் நெஞ்சம் முழுக்க சுமந்து கொண்டு கிளம்பியிருந்தாள்.
error: Content is protected !!