Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

வரம் – 1

அத்தியாயம் – 1


விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே



Advertisement

குணாநிதியே குருவே சரணம்

குறைகள் களைய இதுவே தருணம்

Advertisement

Advertisement

என்று முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி பாடும் இப்பாடலின் சப்தம் அவ்வீட்டை நிறைத்து அந்த கைபேசியில் அழைப்பு வந்ததற்கான அறிகுறியைக் காட்டியது.

Advertisement

முழு அழைப்பும் அடித்து ஓய்ந்து போக இருந்த கடைசி நொடியில், அந்த அழைப்பை ஏற்று கைபேசியை தன் செவிக்கு கொடுத்தது ஒரு வளைக்கரம்.

“ஹலோ பெரியப்பா!!” என உற்சாகமாக பேச்சைத் தொடங்கினாள் அந்த வளைக்கரத்துக்கு சொந்தக்காரியான வந்தனா.

“அடடே தனுக்குட்டியா?? எப்படிடா கண்ணு இருக்க?? ” என்று அன்பொழுக மறுமுனை இவளை விசாரிக்க, 

“நான் சூப்பரா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? பெரியம்மா, அண்ணன் எல்லாரும் நல்லா இருக்காங்களா? அந்த சங்கி மங்கி என்ன பண்றா?? போன் கூட பண்றது இல்லை.. மேடம் அவ்ளோ பிஸியா??” என வந்தனா வாய் ஓயாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

“கொஞ்சம் மூச்சு விட்டு பேசுடா குட்டி” என அவளைக் கிண்டல் செய்தவர்,

“இங்கே எல்லாரும் நலம் டா குட்டி.. அப்பா எங்கடாம்மா? மணி எட்டு ஆகப்போகுதே இன்னுமா வயல்ல இருந்து வரலை?” என்று அவர் இவளின் முதற்கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு தான் அழைத்த காரியத்திற்கு தாவினார்.

முக்கியமான விஷயம் ஏதேனும் இருந்தால் மட்டுமே அவர் இந்நேரம் அழைப்பார் என்று புரிந்து வைத்திருந்த வந்தனா, “ஊர் திருவிழா வரப்போகுதுல பெரியப்பா.. அதான் அப்பா காலையிலே ஊர் பெரியவங்களை பார்க்க போயிருக்காங்க.. போன்ல சார்ஜ் கம்மியா இருந்ததுனால அதை இங்கேயே சார்ஜ் போட்டுட்டு போய்ட்டாங்க.. நான் அப்பா வந்ததும் உங்களை உடனே கூப்பிட சொல்றேன்” என அவள் பொறுப்பாக பதிலளிக்க,

மறுபுறம் புன்னகை முகமாக, “சரிடா அப்போ நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

“ஏண்டி மணி எட்டாகுது, இன்னும் குளிக்காம இங்க என்ன போனை பார்த்துட்டு இருக்க??” என்று அவளை அதட்டியபடியே வீட்டின் முற்றத்தில் இருந்து உள்ளே நுழைந்தார் வந்தனாவின் தாயார் இளவரசி.

“ம்மா!! நான் குளிக்க தான் போனேன்.. ஆனா உன் வீட்டுக்காரர் போனு தான் என்னை போக விடாம விநாயகா விநாயகன்னு கத்தி கூப்பிட்டுச்சு.. அய்யோ பாவமேன்னு வந்து பார்த்தா பெரியப்பா கூப்பிட்டாங்க.. சரி நம்ம பெரியப்பாவாச்சே போனை எடுக்காம நம்ம பாட்டுக்கு குளிக்க போனா அவருக்கு என்ன மரியாதை இருக்குன்னு தான் போன் எடுத்து பேசிட்டு இருந்தேன்.. இது ஒரு குத்தமா??” என அவள் இளவரசியிடம் வாயாட,

அவள் காதைப் பிடித்து திருகிய இளவரசியோ, “என்கிட்ட சொன்ன மாதிரி அப்படியே உங்க அப்பா கிட்ட சொல்லு பார்ப்போம்.. வாயெல்லாம் என் கிட்ட மட்டும் தான்.. மச்சான் எதுக்கு இவ்வளவு காலையில போன் பண்ணியிருக்காங்க.. என்ன விஷயம்னு ஏதும் சொன்னாங்களா?” என வினவ,

தன் காதை அவரிடமிருந்து விடுவித்துக் கொண்ட வந்தனாவோ,

“ம்ம்ம்… மோடி கூட கபடி ஆட ஆள் பத்தலையாம்.. அதான் அப்பாவையும் உன்னையும் உடனே கிளம்பி டெல்லிக்கு போய் விளையாடி கில்லி மாதிரி ஜெய்ச்சுட்டு கப் அடிச்சிட்டு வர சொன்னாரு.. கப்பு முக்கியம் பிகிலு!!” என தாயிடம் வம்பிழுத்தவள், அவர் அடிக்க வரும்முன் அங்கிருந்து சிட்டாய் பறந்து குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

“சரியான வாலு” என புன்னகையுடன் அலுத்துக் கொண்ட இளவரசி, பின் சமையல் வேலைகளை கவனிக்கச் சென்று விட்டார்.

நாட்டரசன் – இளவரசி தம்பதியரின் ஒரே செல்ல புதல்வி தான் நம் கதையின் நாயகி வந்தனா. திருச்சி அருகில் உள்ள வயலூர் எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட நாட்டரசன், தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்த இருபத்தி ஓராம் நுற்றாண்டிலும் விவசாயத்தை கைவிடாமல், தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரின் நிலம் போலவே அவரும் சற்று கரடு முரடான மனிதர் தான் என்றாலும், நிலத்தடி நீர் போல் அவருள்ளும் பாசம் மனதின் அடி ஆழத்தில் ஊறிப் போய் தான் கிடக்கிறது. இளவரசி, பெயருக்கேற்றார் போல் பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி அரசியாகவே வலம் வருபவர். கணவரின் கோபத்தின் பின் மறைந்திருக்கும் பாசத்தை இவர் உணர்ந்து கொண்டதினால் தான் இந்த இருபத்தி ஐந்து வருட இல்லறம் இனிமையாக சென்று கொண்டிருக்கிறது. இளங்கலை வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் வந்தனா, இவர்கள் வாழ்வில் வசந்தம் சேர்க்க வந்தவள். நெருக்கமானவர்களிடம் மட்டும் சுட்டிக்குழந்தையாக இருப்பவள், தந்தையைக் கண்டால் மட்டும் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவாள். இதுவே இவர்களின் அழகான அளவான குடும்பம்.

வந்தனா குளித்து விட்டு வருவதற்கும், அவளின் தந்தையான நாட்டரசன் வெளியில் சென்று வீடு நுழைவதற்கும் சரியாக இருந்தது.

உள்ளே வந்தவர் தன் மகளைப் பார்த்து, “என்ன இப்போ தான் குளிச்சிட்டு வரியா?” என அவர் என்னமோ சாதரணமாகத் தான் கேட்டார்.

ஆனால் அவரின் குரலும் எப்போதும் கடுகடுவென இருக்கும் அந்த முகமும் என்றும் போல் இன்றும் வந்தனாவை மிரள வைக்க, 

“இல்.. இல்லை ப்பா அப்போவே குளிக்கத் தான் போனேன்.. அதுக்குள்ள உங்க போனுக்கு பெரியப்பா கூப்பிட்டுட்டாங்க.. அதான் அவங்க கூட பேசிட்டு போக லேட் ஆகிடுச்சு” என தந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் கடகடவென ஒப்பித்தவள், அவர் அடுத்த கேள்வி கேட்கும் முன்னே அங்கிருந்து ஓடியிருந்தாள்.

மகளின் செய்கையில் சிரிப்பு வரப்பார்த்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவர்.

‘அண்ணன் எதுக்கு இம்புட்டு காலையில கூப்பிட்டுருக்காங்க?’ என யோசித்துக் கொண்டே தன் அண்ணனுக்கு அழைப்பு விடுத்து மறுமுனை எடுக்க காத்திருந்தார்.

இரண்டு ரிங்கிலே அழைப்பை ஏற்றார் நாட்டரசனின் ஒரே உடன்பிறப்பான அறிவழகன்.

“ஹலோ!! என்னண்ணே எப்படி இருக்கீங்க?? மதினி புள்ளைக எல்லாரும் சொகமா??” என சற்று நேரம் பரஸ்பர நல விசாரிப்புகள் நிகழ, அடுத்ததாய் விஷயத்திற்கு தாவினார் அறிவழகன்.

“அது ஒண்ணும் இல்லை அரசு.. நம்ம சங்கி பெங்களூருல ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை பார்த்துச்சுல.. அங்க அந்த கம்பெனி ஓனர் மேல ஏதோ விருப்பம் வந்திருக்கும் போல இருக்கு.. நானும் விசாரிச்சு பார்த்தேன்.. பையன் நம்ம கூட்டுறவுத் துறை அமைச்சர் நீதிமாணிக்கம் இருக்காருல… அவங்க பையன் தான்.. அவுகளும் நம்ம ஆளுக தான்.. விசாரிச்ச வரைக்கும் பையனைப் பத்தி ரொம்ப நல்ல விதமாத் தான் சொல்றாங்க.. அதான் சங்கி விருப்பத்துக்கே செய்யலாம்னு இருக்கேன்” என தான் பேச வந்த விஷயத்தை கோர்வையாக அவர் சொல்லி முடிக்க, 

இந்தப்பக்கம் நாட்டரசனின் முகமோ கோபத்தில் ஜிவுஜிவுத்தது.

“என்னண்ணே இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட எதுவும் சொல்லவும் இல்லை.. அவளை வேலைக்கு அனுப்புனா அதை மட்டும் பார்க்காம கண்ட கண்ட வேலையும் பார்த்துட்டு வந்திருக்கா, அவளைக் கண்டிக்காம நீ என்னடான்னா அவளுக்கு பிடிச்ச பையனையே கட்டி வைக்கிறேன்னு உளறிகிட்டு இருக்க.. அதுவும் அரசியல்வாதியோட பையன்.. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்குத் தேவையா?? எப்போ என்ன பிரச்சனை வரும்னு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணும்.. பேசாம நம்ம சங்கியை அந்தப்பையனை மறந்துட்டு நம்ம சொல்ற பையனை கட்டிக்கிட சொல்லுங்க.. நான் அவளுக்கு ராசாவாட்டம் மாப்பிள்ளை பார்க்குறேன்” என்று அவர் தன் கணீர் குரலில் கூற, அது உள்ளறையில் இருந்த அவரின் மனைவி, மகள் இருவரின் செவிகளிலும் நன்றாகவே சென்று விழுந்தது.

‘அடிப்பாவி சங்கி மங்கி!! என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம என்னென்ன வேலை பண்ணியிருக்க.. இரு உன்னை வச்சுக்கிறேன்’ என மனதிற்குள் தன் தமக்கையை வந்தனா வறுத்தெடுத்துக் கொண்டிருந்த நேரம், 

இங்கு அறிவழகனோ, “அட விடு அரசா.. பிள்ளைக சந்தோஷம் தான நமக்கு முக்கியம்.. அவளுக்கு பிடிச்சிருச்சு.. நல்ல குடும்பம்.. பையன் அரசியலே வேண்டாம்னு தான் தனியா தொழில் தொடங்கி பண்ணிகிட்டு இருக்காப்ல.. அதுனால இதுல நம்ம பயப்பட வேண்டியது எதுவும் இல்லைப்பா.. அவங்க வீட்டிலயும் பேசிட்டேன்.. அவங்களுக்கும் இதுல பரிபூரண சம்மதம்.. எலெக்ஷன் வரதுனால சீக்கிரமே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு அவங்க பிரியப்பட்டாங்க.. அதான் அடுத்த வெள்ளிக்கிழமை நிச்சயமும், அடுத்த மாசம் எட்டாம் தேதி கல்யாணமும் வச்சுக்கலாம்னு இருக்கோம் அரசா.. நீ நாளைக்கே குடும்பத்தோட கிளம்பி வந்து உன் மூத்த பொண்ணோட கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கணும்” என அவர் தன் தம்பியைப் பற்றித் தெரிந்ததால் சற்று பயத்தோட விஷயத்தைக் கூறி முடிக்க, 

அவர் எதிர்பார்த்ததைப் போல, நாட்டரசன் நடராஜனைப் போல் கோபத்தில் ருத்ரதாண்டவம் ஆடித் தீர்த்து விட்டார்.

“ஓஹ் அப்போ எல்லாம் முடிவு பண்ணிட்டு போனா போகுதுன்னு என்கிட்ட தகவல் சொல்றீங்களா.. சரிதான்.. எனக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு நான் எதுக்கு வரணும். என் குடும்பத்துல இருந்து யாரும் அங்க வரமாட்டோம்.. நீங்க உங்க புது அரசியல்வாதி சொந்தத்தோடவே எல்லாம் பண்ணிக்கோங்க” என அவர் எகிற, 

அறிவழகனும் அவர் மனைவி வைஜெயந்தியும் சில மணி நேரம் போராடி எப்படியோ அவரை மலையிறக்கினர்.

இருந்தும் முழுதாக அவர்களின் இந்த முடிவில் உடன்பாடில்லாத நாட்டரசனோ, “நானும் அரசியும் நிச்சயத்தன்னைக்கு காலையில வரோம்.. வந்தனாவை மட்டும் வேணா ரெண்டு நாள் முன்னாடி அனுப்பி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

வந்தனாவை இப்போதே வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவழகன் குடும்பத்திற்கு ஆசை தான் என்றாலும், இதற்கு மேல் ஏதாவது பேசினால் அவர் வரவே மாட்டார் என்றுணர்ந்தவர்களுக்கும் சரியென்பதைத் தவிற வேறு வழி இருக்கவில்லை.

தன் அண்ணன் பேசியதை தகவல் போல் மனைவி மகளுக்கு சொன்னவர், வந்தனாவைப் பார்த்து, “இதோ பார், அங்க போனோமா வந்தோமான்னு இருக்கனும்.. வேற யார் கூடவும் அங்க வாயடிச்சிட்டு இருக்கதை பார்த்தேன் தொலைச்சிருவேன்.. உங்கக்கா மாதிரி இல்லாம ஒழுங்கா நான் கை காட்டுறவனுக்குத் தான் நீ கழுத்தை நீட்டணும்.. அதை உன் மனசுல நல்லா பதிய வச்சுக்கோ” என அவர் கர்ஜிக்க, 

வந்தனாவின் உடல் பயத்தில் தூக்கிப்போட்டது.

அதை கவனித்த இளவரசியோ, “நீ உள்ள போ தனு” என மகளை உள்ளே அனுப்பி விட்டு கணவன் பக்கம் திரும்பி அவரை நன்றாய் முறைத்தவர், “உங்க அண்ணன் மேல கோவம்னா அதை அங்க காமிங்க.. தேவையில்லாம என் பொண்ணை கஷ்டப்படுத்துற வேலை வச்சுக்காதிங்க.. படிச்சிக்கிட்டு இருக்க பொண்ணுகிட்ட கண்டதையும் பேசி நீங்களே அவ மனசு கலைஞ்சு போக காரணமா இருக்காதிங்க.. அவ்ளோதான் சொல்லுவேன்” என கடுமையான குரலில் கூறியவர் அங்கிருந்து விடுவிடுவென சென்று விட்டார்.

மனைவி சொன்னதில் இருந்த உண்மை நாட்டரசனை சுட்டதால் அவரும் அதற்கு ஏதும் பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

ஆனால் தந்தையின் பேச்சு வந்தனாவின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து போக, ‘செத்தாலும் யாரையும் லவ் மட்டும் பண்ணிற கூடாது டா சாமி’ என அவள் மனம் உறுதியெடுக்க, பாவம் அப்போது அவளுக்குத் தெரியவில்லை, அவள் உறுதியைக் கலைக்கவே ஒருத்தன் எப்போதோ உதயமாகிவிட்டான் என்று.

****

“ஸ்டெல்லா, அந்த வீக்கெண்ட் மேக்ஓவர் கோர்ஸ்க்கு லிமிட்டெட் ஸ்லாட்ஸ் மட்டும் அலாட் பண்ணு.. போன டைம் மாதிரி நிறைய பேர் வந்தா ஹாண்டில் பண்றதும் கஷ்டம், எல்லாரையும் தனித் தனியா வாட்ச் பண்ண டைமும் இருக்காது.. சோ போஸ்ட் பண்றப்போ மென்ஷன் பண்ணிரு இவ்ளோ ஸ்லாட் தான் இருக்குன்னு” எனத் தன் முன் அமர்ந்திருந்த அந்த பிரபல நடிகையின் கண்களுக்கு அந்த செயற்கை ‘ஐ லேஷை( eye lash)’ பொருத்திக் கொண்டே தன் உதவியாளருக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் அவன் – வினய் சக்கரவர்த்தி. 

நாட்டின் தலைசிறந்த ஒப்பனைக் கலைஞர்களுள் ஒருவன்.

பிரபல நடிகர், நடிகையருக்கு ஆஸ்தான ஒப்பனைக் கலைஞரான இவன், இந்த இளம்வயதிலேயே அதுவும் பெண்கள் கோலோச்சி இருக்கும் இத்துறையில் தன் விடாமுயற்சியால் முயன்று முன்னேறி தன் உழைப்புக்குச் சான்றாய் இன்று இரண்டு தேசிய விருதுகளை கைப்பற்றியிருந்தான்.  

இவனைக் கண்டு பல இளைஞர்களும் இத்துறையில் தங்களுக்கான பாதையை வடிவமைத்துக் கொள்ள முன்வர, அவர்களைப் போன்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழிகாட்டுவதைப் போல் மாதம் ஒருமுறை ஒப்பனை பயிலரங்கை முன்னின்று நடத்திக் கொடுப்பது இவனின் வழக்கம்.

நடுத்தர வர்க்கத்தில் பிறந்திருந்தாலும் இன்று தன் உழைப்பால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களுள் இவனும் ஒருவனாகத் திகழ்கிறான். 

அழகும் திறமையும் ஒருசேர அமையப்பெற்ற 29 வயதான வாலிபனான வினய் இன்னும் பேச்சிலராக இருப்பது பல லட்சம் பெண்களின் மனதில் பேராசையை தூண்டிவிட, எனவே எந்நேரமும் பூவைச் சுற்றும் வண்டு போல், பெண்கள் கூட்டம் அவனைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

ஆனால் வினயோ கழுவும் மீனில் நழுவும் மீனைப் போல் அவர்களிடம் சிக்காமல் கடிவாளம் கட்டிய குதிரை போல் தன் தொழிலைத் தவிர வேறு எதிலும் கவனத்தை அலைபாய விடாமல் ஒரே நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருக்கிறான்.

“வாவ் மார்வலெஸ்!!” என தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து மெய்மறந்து போன அந்த நடிகையின் அதரங்கள் தன்னால் இந்த வார்த்தையை உதிர்த்திருந்தது.

உண்மையில் அவ்வளவு அழகாய் அவளை மாற்றியிருந்தான் வினய் சக்கரவர்த்தி.

“உங்க கையில கண்டிப்பா ஏதோ மேஜிக் இருக்கு மேன்!! யூ ஆர் சான்ஸ்லெஸ்.. வரப்போற ஃப்லிம்ஃபேர் அவார்ட்ஸ்க்கு நீங்க தான் எனக்கு மேக்கப்.. இப்போவே நான் புக் பண்ணிட்டேன்” என அவள் அவனை வெகுவாய் பாராட்ட,

அதை ஒரு அழகான புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவன், “சாரி சரிகா.. போன மாசமே அந்த அவார்ட் ஃபங்க்ஷனுக்கு சுனிதா புக் பண்ணிட்டாங்க.. ” என இவன் கைவிரிக்க,

“ச்சே!! மிஸ் பண்ணிட்டேன்!!” என வெகுவாய் வருந்தியவள், அடுத்த நிமிடமே “இட்ஸ் ஓகே.. எனிவே தேங்க்ஸ் ஃபார் யுவர் அமேசிங்க் வொர்க்” என அவனைக் கட்டியணைக்க, 

பதிலுக்கு அவனும் அவளை அணைத்து விடுவித்தவன், “இட்ஸ் மை பிளஷர்” என்று புன்னகையுடன் அவளிடம் விடைபெற்று அந்த கேரவேனை விட்டு வெளியேறி தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸில் ஏறினான்.

அவனைப் பின்பற்றி உள்ளே வந்த அவனின் உதவியாளர் ஸ்டெல்லாவிடம் தன் கைபேசியை வாங்கியவன் தன் அன்னைக்கு வீடியோ அழைப்பு விடுக்க, சற்று நேரத்திலே அந்த அழைப்பை ஏற்றார் அகிலா.

“சொல்லுடா கண்ணா!! வேலையெல்லாம் முடிஞ்சுதா?? எப்போ சென்னை வரப்போற??? வீ மிஸ்ட் யூ சோ மச்” என அவர் எடுத்ததுமே மகனின் வருகையை விசாரிக்க,

அதில் புன்னகைத்துக் கொண்டவன், “மாம்!! நான் சென்னையில இருந்து மும்பை வந்து ரெண்டு நாள் தான் ஆகுது.. ஏதோ ரெண்டு வருஷம் ஆன மாதிரி ஃப்லிம் காட்டுறீங்களே” என அவரைக் கேலி செய்தான்.

“உங்க அம்மாவைப் பற்றி தெரியாதாடா மகனே!! அவள் ஒரு ட்ராமா க்வீன்.. இவ காலேஜ் லெக்சரரா போனதுக்கு பதிலா ஹீரோயினா போயிருந்தா இந்நேரம் பல அவார்ட் வாங்கி வீட்டை நிறப்பிருப்பா” என அவனின் தந்தை கணேசனும் அவனுடன் சேர்ந்து அகிலாவை கிண்டல் செய்ய, 

இருவரையும் பொய்யாய் முறைத்து வைத்த அகிலா, பின் தன் பிள்ளையிடம் திரும்பி, “நீ ஃபர்ஸ்ட் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. எப்போ சென்னை வர?” என தன் கேள்வியில் குறியாய் இருக்க, 

எப்போதும் இப்படிக் கேட்பவர் இல்லை என்பதால், முக்கியமாக ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட வினய் தன் விளையாட்டை கைவிட்டுவிட்டு, “நாளைக்கு ஆஃப்டர்நூன் வரைக்கும் இங்க வேலை இருக்கு மாம்.. ரெண்டு மணிக்கு தான் இங்க ஃப்ளைட்.. தென் ஈவ்னிங்க் சென்னையில ஒரு எங்கேஜ்மென்ட் மேக்ஓவர்க்கு கமிட் ஆகியிருக்கேன்… அது முடிச்சிட்டு வீட்டுக்கு வர எப்படியும் மிட் நைட் ஆகிடும்.. எனிதிங்க் இம்பார்ட்டென்ட் மாம்??” என அவன் கேள்வியெழுப்ப,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்.. இப்போ போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. யூ லுக் சோ டயர்ட்” என அவனின் சோர்ந்த முகத்தைக் கண்டு அவனின் அன்னை கூற, 

மேலும் அவரைத் தோண்டித் துறுவாமல் அவனும், “ஓகே மாம்.. லவ் யூ போத்.. பை” என தாய் தந்தை இருவரிடமும் விடைபெற்று அலைபேசியை அணைத்தவன், 

இரண்டு நாட்களாய் தொடர்ந்த வேலையின் கழைப்பால் அடுத்த நொடி கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து சயனித்துவிட்டான். 

அவனின் இந்த தூக்கத்தைக் கெடுக்கவே அங்கே ஒருத்தி வந்துவிட்டாள் என உணராதவனும் நிம்மதியாய் உறக்கத்தைத் தொடர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!