Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவேவிழாக் காணுமே வானம்

வான் தழுவிடிலோ வெண்ணிலவே 01

விக்ரம் பார்த்தசாரதி 1

நட்சத்திரங்களின் கீழ் ஒரு சிம்மாசனம்.

நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன் நான்.  பொதுவாக சிம்மாசனங்களை நான் தேடிப் போவதில்லை. நான் உட்காரும் இருக்கைகள் எல்லாமே  எனது சிம்மாசனங்களாகிப்  போகின்றன.

இப்போது நான் அமர்ந்து இருப்பது மும்பை விமான நிலையத்தின் வி.ஐ.பி லௌஞ்சில். அந்த பெரிய மென் இருக்கையே  எனது சிம்மாசனமாய், எனது தலைக்கு மேல் மின்னிக் கொண்டிருக்கும்  அழகு மின் விளக்குகளே நட்சத்திரங்களாய் இருக்க, அமர்ந்திருந்த இடத்திலேயே  எனது அடுத்த மிகப் பெரிய வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.



Advertisement

நான் விக்ரம்! விக்ரம் பார்த்தசாரதி! எனக்கு கிரௌசிங் டைகர் என்று மற்றொரு பெயரும் உண்டு.

நான் அணிந்திருந்த லீவைஸ் ஜீன்சும், சற்றே மடக்கி விடப் பட்ட முழுக்கை சட்டையும், கையிலும் கழுத்திலும் மின்னிக் கொண்டிருந்த தங்கமும் அணிந்திருந்த சதுர வடிவ தங்க முலாம் கண்ணாடியும் எனக்கு அழகு சேர்க்கிறது என்று நீங்கள் நினைத்தால்  அது பொய்

அவற்றுக்கு வேண்டுமானால் நான் அழகை கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

Advertisement

என்னை வருடிய குளிர் சாதனத்தின் இளம் காற்றை வாய்திறந்து உள்ளிழுத்துக் கொண்டு எனது உள்ளங்கைகளை தேய்த்து விட்டுக் கொண்ட போது அங்கே எனக்கெதிரில் இருந்த ஒரு மென்  இருக்கையில் வந்தமர்ந்தார் அமைச்சர் தர்மேந்திரன்.

Advertisement

அவர் மகாராஷ்டிர மாநில அமைச்சர்களில் ஒருவர். அவரும் தமிழர்தான்

எனது கண்ணாடியின் வழியே தெரிந்த எனது கூர் விழிகள் எதிரே அமர்ந்து இருந்த அந்த மனிதரை பதம் பார்த்துக் கொண்டிருந்தன. என்னைப் பார்த்ததும் அவரது முகத்தில் மிரட்சி.  அதைத்தான் நான் எதிர்ப்பார்த்து இருந்தேன்.

அப்படி எல்லாம் மற்றவர்களை மிரட்டி, அவர்களின் பயத்தில் வெற்றிகளை  குவிக்கும் ரகத்தை சேர்ந்தவன் இல்லை நான் .

Advertisement

அதே நேரத்தில் என்னை சீண்டிப் பார்த்து  விளையாடும் யாரையும் அத்தனை எளிதில்   மன்னிப்பதும் இல்லை . மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு, துளியும் புன்னகை இல்லாமல் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒலித்தது எனது கைப்பேசி.

“அம்மா” என ஒளிர்ந்தது தொடு திரை. எனது விரலசைவில், ப்ளூ டூத் வழியே காதுக்குள் பேசினார் அம்மா.

“சொல்லுமா” என்றேன்.

“கிளம்பிட்டியா விக்ரம். நைட்குள்ளே வீட்டுக்கு வந்திடுவேதானே? நாளைக்கு உனக்கு நிச்சியதார்த்தம்”

“ம்”

வார்த்தைகளை கூட ரேஷனில் விநியோகித்து பழகி விட்டேன். அதை மாற்றிக் கொள்ள முடியவும் இல்லை. அதற்கான அவசியங்களும் இருப்பதாக தெரியவில்லை.

“எத்தனை மணிக்குடா வருவே?”

“எனக்காக முழிச்சு இருக்காதே. தூங்கு” மிக மெலிதான குரலில் அதிராமல் பேசிக் கொண்டிருந்தேன்.

அம்மா கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை என்பது எனக்கே தெரியும் இருந்தாலும் அதுதான் நான்.

எனது பதில் அம்மாவுக்கு பிடித்தம் இல்லை என்று தோன்றியது

“நீ என்ன சொன்னாலும் நான் முழிச்சுதான் இருப்பேன்” அதுதான் அம்மா. “ஸ்வாதியும் அர்ஜுனும்  பீச் ஹவுசிலே உன் நிச்சியத்துக்காக  எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்காங்க.”.

“ம்” இதற்கும் அதே பதில்தான் என்னிடமிருந்து.

“சரிடா.. நீ வா. நான் வைக்கிறேன்” துண்டித்து விட்டார் அவர்.

அர்ஜுன் எனது உடன் பிறந்த சகோதரன். மிகப் பிரபலமான டென்னிஸ் வீரன். ஸ்வாதி சிறு வயதில் இருந்தே அவனுடைய உயிர் தோழி. அவளும் டென்னிஸ் வீராங்கனைதான்.

இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்து…

எனது அர்ஜுன், எனது தடுமாற்ற நேரங்களில் என்னைத் தோளோடு சேர்த்துக் கொண்டு நிமிர்ந்து நிற்க வைக்கும்  அசாதாரண தம்பி.

சரி நாம் நமது அமைச்சர்  தர்மேந்திரனின் கதைக்கு வருவோம்.

ஒரு பதினைத்து இருபது தினங்களுக்கு முன்னால், இந்த மகாராஷ்டிர அரசு ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனை ஒன்றை கட்டுவதற்கான மிக முக்கியமான டெண்டர் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது.

எனக்கு இது போன்ற அரசு டெண்டர்களில் எல்லாம் அத்தனை நாட்டம் இருந்தது இல்லை. இதை விட வெளிநாட்டு முதலீடுகளில் எனக்கு லாபம் அதிகம்.

ஆனாலும் எனது வியாபார பங்குதாரர்களுக்கு இதில் ஒரு ஈடுபாடு உண்டு.

“வொய் கான்ட் வீ விக்ரம்?” என்றார்கள் திரும்பத் திரும்ப.

“நெவர். ஐ டூ நாட் வான்ட் டு வேஸ்ட் மை டைம் ஆன்  தீஸ் டிராக்கிங் ப்ராஜெக்ட்ஸ்”

இது போன்ற இழுபறி வேலைகளில் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று நான் எத்தனை சொல்லியும் கேட்பதாக இல்லை அவர்கள்.

கடைசியில் அவர்களின் “வொய் டோன்ட் வீ” வென்று விட, இந்த அமைச்சருடனான ஒரு சந்திப்புக்காக நான் அவரது அலுவலகத்தில் காத்திருந்த அந்த நேரத்தில்தான்,  கீழே வந்து விழுந்தன அவரின் அந்த வார்த்தைகள்.

நான் அமர்ந்திருக்க, என்னைக் கடந்து அவர் நடந்த நேரத்தில்தான் தனது உதவியாளனிடம் உதிர்த்து விட்டு சென்றார் அந்த வார்த்தைகளை.

“இந்த நொண்டி பயலெல்லாம் டெண்டர் எடுத்து என்ன செய்யப் போறான்?” சுரீரென எனக்குள் புறப்பட்டது ஒரு எரிமலை. எனது அருகில் இருந்த எனது உதவியாளன் பாலாவின் முகம் கூட மாறித்தான் போனது.

ஆம்! எனது காலில் ஒரு சிறு ஊனம் உண்டுதான்.

ஒரு காலம் இருந்தது. இது போன்ற வார்த்தைகளில் நான் துவண்டு விழுந்த நேரங்கள் சில இருக்கத்தான் செய்தன. உடன் விளையாடிய நண்பர்களின் வார்த்தைகளில் அறைக்குள் புகுந்து கொண்டு அழுத நாட்கள் வந்துதான் சென்றன.

“என்னை மட்டும் ஏன்ம்மா இப்படி படைச்ச?” அம்மாவிடம் அழுது அவரையும் அழ வைத்து இருக்கிறேன். ஆனால் அந்த காலங்கள் எல்லாம் ஓடிச்சென்று மறைந்து பல வருடங்கள் ஆகின்றன.

இப்போது சீண்டிப் பார்ப்பவரை மிரளச் செய்யும் புலியாக உருவெடுத்து இருக்கிறான் இந்த விக்ரம் பார்த்தசாரதி.

அவர் பேசிய அந்த நிமிடத்தில் முடிவெடுத்துக் கொண்டேன். இந்த டெண்டர் எனக்குத்தான் என்பதை எனக்குள்ளே உறுதி செய்து கொண்டேன்.

அப்படி ஒன்றும் அரசாங்கத்தை ஏமாற்றி அதன் பணத்தை கொள்ளை  கொள்ளப் போவதில்லை. வேலைகள் கனகச்சிதமாக மிகவும் நேர்மையாக நடக்கும். மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும்.

நான் தோற்கடிக்கப் போவது அந்த அமைச்சரை மட்டுமே.

மிக எளிதாக அவர் தனது வார்த்தைகளை உதிர்த்து விட்டு சென்ற பிறகு, நான்கு நாட்கள் உறக்கம் இல்லை எனக்கு. அதன் பலனாக எனது கையில் சிக்கியது ஒரு காணொளி.

அந்த அமைச்சரின் அரசியல் வாழ்க்கையை, அவரின் வியாபாரங்களை புரட்டிப் போட்டு  விடும் ஒரு காணொளி.

அது முதலமைச்சரின் கைக்கு சென்றால் அதுதான் அந்த அமைச்சரின்  அரசியல் வாழ்க்கைக்கான முற்றுப் புள்ளி என்பது நன்றாவே புரிந்து இருந்தது எனக்கு.

அப்படி ஒரு காணொளி என்னிடம் இருக்கிறது என்பதை மறைமுகமாக அவருக்கு தெரியப்படுத்தி விட்டு, ஊர் விட்டு  ஊர், நாடு விட்டு நாடு என்று உலவிக் கொண்டிருக்கிறேன். அது என்ன மாயமோ மந்திரமோ நான் போகுமிடமெல்லாம் எனது பார்வையில் தட்டுப் பட்டுக் கொண்டே இருக்கிறார் மனிதர்.

இன்றும் அவரை என்னிடம் வரவழைக்கும் ஒரு பெரிய ஆயுதத்தை தயாராக வைத்துக் கொண்டுதான் அமர்ந்து இருக்கிறேன்.

அந்த அமைச்சரின் முகத்தில் இருந்த பயத்தை ரசித்தபடியே, இதழோரம் தேங்கிய ரகசிய புன்னகையுடன்,  கைகளை தேய்த்து விட்டுக் கொண்டு நான் ஆயாசமாக சாய்ந்து கொண்ட நேரத்தில்

“ஹாய் விக்ரம்” என்றபடியே எனதருகில் வந்து அமர்ந்தான் தேஜஸ்வி. அவன் முதல்வரின் மகன். எனது கல்லூரி கால சீனியர். வா போ என பேசிக் கொள்ளும் அளவுக்கு நட்பு உண்டு.

“ஹாய் தேஜா. ஹவ் ஆர் யூ?” அவனது தோள் தட்டி நான் சிரிக்க, அதுவே அந்த அமைச்சருக்குள் மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.

“என்ன விக்கி? என்னமோ முக்கியமா பேசணும்னு சொன்னியே?” கேட்டான் அழகான ஹிந்தியில். “யாரைப் பத்தி?”

நாங்கள் பேசுவது அந்த அமைச்சரின் காதுகளில் விழுகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது எனக்கு.

“சொல்றேன் சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணு” நான் ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில்

“சர்” என என்னை நோக்கி வந்தது எனக்கான பழச்சாறு.

சின்ன தலையசைப்புடன் அதை எடுத்துக் கொண்டேன். நாவில் தொடங்கி எனது மனதின் அடி ஆழம்  வரை இனித்தது அது.

அதற்கு காரணம் அந்த தர்மேந்திரனின் முகத்தில் இருந்த பயப் பிரவாகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

“மேரே பாஸ் ஏக் வீடியோ….” நான் சொல்வதற்குள் இருக்கையை விட்டு எழுந்து விட்டிருந்தார் அந்த அமைச்சர்.

பதற்றத்தில் அவர் நடந்த வேகத்தில், அங்கிருந்த இருக்கையில் இடித்துக் கொண்டு சற்றே விந்திக் கொண்டுதான் எங்களது  அருகில் வந்தார் அவர்.

“இந்த நொண்டி பயலெல்லாம் டெண்டர் எடுத்து என்ன செய்யப் போறான்?” எனது செவிகளில் மறுபடியும் எதிரொலிக்க இனிப்பாய் உள்ளிறங்கியது பழச்சாறு.

“குட் ஈவினிங் தேஜா” அவனுக்கு வணக்கம் சொல்லி விட்டு எனக்கும் ஒரு குட் ஈவினிங்கை கொடுத்து விட்டு தயங்கி எனது  முகம் பார்த்தார் மனிதர்.

“இவரைத் தெரியுமா விக்ரம் உனக்கு? ஒன் ஆஃப் தி ஹானஸ்ட் மினிஸ்டர்ஸ் இன் அவர் கவர்ன்மென்ட்” அவர் நேர்மையான அமைச்சர் என்று அவரைப் பற்றி பெருமை அடித்துக் கொண்டான் தேஜஸ்வி.

“ஓ ரியலி?” மெலிதாக சிரித்தேன், எதிரில் நின்றவரை பார்வையால் குடைந்து கொண்டே. அவருக்குள் பய மத்தளங்கள் ஒலித்து இருக்க வேண்டும்.

“சர் தெரியுமா தேஜா. பெரிய பிசினஸ்மேன். நம்ம ஹாஸ்பிட்டல் டெண்டர்க்கு அப்ளை பண்ணி இருக்கார். கிடைச்சிடும்னு நினைக்கிறேன்” என்றார் அவசரமாக.

இப்போதும் சிரித்தேன் நான். வாய்விட்டு சிரித்தேன். அந்த சிரிப்பின் அர்த்தம் தேஜாவுக்கு புரிந்ததோ இல்லையோ தர்மேந்திரனுக்கு நன்றாக புரிந்தது எனத் தோன்றியது எனக்கு .

அதன் பிறகு அவரிடம்  கொஞ்ச நேரம் பேசி விட்டு என்னை அழைத்துக் கொண்டு நடந்தான் தேஜா. இங்கே நாங்கள் போகும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் அந்த அமைச்சர்.

அதன் பிறகு தேஜா அவனுக்குரிய விமானத்தில் கிளம்பி விட நானும் எனது உதவியாளன் பாலாவும் எங்களது  விமானத்திற்காக  காத்திருந்த நேரத்தில் எங்கள் அருகில் வந்தார் அந்த அமைச்சர்.

“தம்பி பெரிய ஆளுன்னு கேள்விப் பட்டேன். இத்தனை நாள் தெரிஞ்சுக்காம விட்டுட்டேன். டெண்டர் உங்களுக்குத்தான். வேறே ஏதாவது உதவி வேணும்னாலும் கேளுங்க தம்பி”

அமர்ந்திருந்த என் முன்னால் அவர் நின்றிருக்க மெல்ல எழுந்து நின்றேன்.

“இதுவரைக்கும் எனக்கு எல்லாருக்கும் உதவி செஞ்சுதான் பழக்கம் வாங்கிப் பழக்கம் இல்லை” என்றேன் அழுத்தம் திருத்தமாய். “என்னை உரசிப் பார்க்க மட்டும் நினைக்காதீங்க”

அடுத்த சில நிமிடங்கள் கழித்து எங்களது விமானத்தின் எக்சிகியூடிவ் கிளாஸ் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தேன் நான்.

விமானம் பறந்து கொண்டிருக்க, எனக்கு சில இருக்கைகள்  பின்னால், எங்களுக்கு தேவையான காகிதங்களில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார் அமைச்சர் தர்மேந்திரன்.

விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி

வேண்டி னேனுக் கருளினள் காளி.

பாரதியாரின் வார்த்தைகள்தான் நினைவில் ஆடின.

வெளியில் தெரிந்த இரவு நேர வானத்தை நோக்கி விழிகளைத் திருப்பினேன் நான்.

எனது பார்வை வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை துரத்திக் கொண்டிருக்க, அவை ஏனோ என்னை விட்டு விலகி விலகி ஓடிக் கொண்டிருக்கும் பிரமை. வானத்தில் தெரிந்த முழு நிலவு மட்டும் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருந்தது.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!