Skip to content
Post Views: 1,151
விக்ரம் பார்த்தசாரதி 10
ஆராதனாவை விமான நிலையத்தில் அமெரிக்காவுக்கு வழி அனுப்பி நான்கு நாட்கள் கடந்து இருந்தன. ஆராதனாவை சந்தித்து அவளோடு பயணித்த பழைய நாட்களின் நினைவுகளுடனே மலேசியாவில் வேலைகளை முடித்து விட்டு அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்து இருந்தேன் நான்.
அன்றுதான் அம்மாவும் அப்பாவும், அம்மாவின் அக்காவினுடைய மகள் திருமணத்திற்காக சிங்கப்பூர் கிளம்பி இருந்தனர். அவர்கள் திரும்ப பத்து நாட்கள் ஆகும்.
அவர்கள் கிளம்பிச் சென்றது மட்டுமே நான் அறிவேன். அதன் பிறகு நான் கண் திறந்த நிமிடத்தில் என்னை சுற்றி இருந்த மருத்துவமனை சுவர்கள் என்னை வரவேற்றன. கையில் சொட்டு சொட்டாக ஏதோ ஒரு திரவம் இறங்கிக் கொண்டு இருந்தது.
Advertisement
எதுவுமே புரியாமல் நான் படுத்து இருந்த கட்டிலில் எழுந்து அமர முயற்சி செய்த போது, எனது அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜுன்.
“என்னடா பண்ணி வெச்சிருக்கே உடம்பை? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? இத்தனை வளர்ந்து இருக்கே, உன் உடம்பை நீ பார்த்துக்க வேண்டாமா?” கேட்ட அர்ஜுனின் கண்களில் நிறைய கோபம் “டைஃபாய்டாம் உனக்கு. நேத்து திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டே தெரியுமா?”
அந்த நேரத்தில் அர்ஜுனின் “அறிவு இருக்காடா உனக்கு?” எனக்கு எப்படி அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது என்பது கொஞ்சம் கூட புரியவில்லை எனக்கு.
Advertisement
பொதுவாக இது போன்ற வார்த்தைகள் எனக்கு கோபத்தை கொடுப்பதே வழக்கம்.
Advertisement
“சின்ன மயக்கம்தானே? அதுக்கு எதுக்கு நீ என்னை ஹாஸ்பிட்டல் எல்லாம் கொண்டு வந்தே?” அவனிடம் கோபமாக பேச முயன்று அவனது முகம் பார்த்து தோற்றுப் போனேன் நான்.
“உனக்கு எல்லாம் சரியாகுற வரைக்கும், கொஞ்சம் வாயை மூடிட்டு இரு என்ன?” முறைத்தான் எனது தம்பி.
அது ஏனோ எப்படியோ அவனது வார்த்தைகளுக்கு மறுத்து பதில் பேசாமல் மட்டும்தான் இருக்க முடிந்தது என்னால்.
Advertisement
“அம்மா கிட்டே சொல்லிட்டியா அர்ஜுன்?”
“எதுக்கு? இல்லை எதுக்குன்னு கேக்கறேன். அவங்க கல்யாணத்தை விட்டுட்டு இங்கே ஓடி வரணுமா உனக்கு?. ஒண்ணும் தேவை இல்லை. நான்தான் இருக்கேன் இல்ல. உன்னை நான் பத்திரமா பார்த்துக்கறேன்”
பார்த்துக் கொண்டான். நான் என்னை, இத்தனை வருடங்களில் இல்லாத அளவிற்கு, தளர்வாக உணர்ந்த நாட்களில் அத்தனை அன்பாக, கனிவாக பத்திரமாகப் பார்த்துக் கொண்டான் எனது அர்ஜுன்.
“எங்கே போறே விக்ரம்?” நடு இரவில் நான் எழுந்து ஊன்று கோலை தேடுவதற்குள் விழித்துக் கொள்வான் அவன்.
“இல்ல வாஷ் ரூம் போகணும். என் ஸ்டிக்…”
“இரு இரு. நான்தான் இருக்கேன் இல்ல… நான் வரேன் இரு”
பல நேரங்களில் எனது ஊன்று கோலாகவே இருந்தான் அவன்.
“பசிக்குது அர்ஜுன்” அன்னையை உரிமையாய் எழுப்பவதைப் போலவே அவனை நடு இரவில் எழுப்பியும் இருக்கிறேன். கொஞ்சம் கூட சுருங்கியது இல்லை அவனது முகம்.
“பசிக்குதா? குட் குட். அப்போ நீ குணமாகிட்டு இருக்கேன்னு அர்த்தம். இதோ வந்திட்டேன் இரு” சட்டென எழுந்து விடுவான் எனது அருகிலேயே படுத்து உறங்கும் அவன்.
“உன்னை ரொம்ப படுத்தறேனாடா?”
“அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நான் உன்னை பார்த்துக்க தானே இருக்கேன். டூ நாட் வொர்ரி” புன்னகைப்பான் எனது அருமைத் தம்பி,
அவனது அன்பில் நனைந்து விடவே, கொஞ்சமாக தளர்ந்து கொள்வேன். என்னை நானே வேண்டுமென்றே தளர்த்திக் கொள்வேன். அந்த நேரங்களில் அவன் என்னை அப்படியே தாங்கிக் கொள்வான்.
அடுத்து வந்த பத்து நாட்களில் நிறையவே தேறி இருந்தேன் நான். இல்லை, இல்லை என்னை தேற்றி இருந்தான் எனது தம்பி.
இத்தனை வருடங்களில், இத்தனை நாட்கள் இப்படி யாரையும் சார்ந்து இருந்தது இல்லை நான்.
ஒரு நாளைக்கு நூறு முறையாவது அவனது பெயரை அழைத்து, முழு விருப்பத்துடனே அவனை சார்ந்து இருந்தேன் நான் என்பது நான் மட்டுமே அறிந்த உண்மை.
நான் அன்புக்காக எத்தனை ஏங்கி இருக்கிறேன் என்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது.
அம்மாவும் அப்பாவும் திரும்பி வரும் நாளில் அவர்களை அழைத்து வர இருவரும் விமான நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். இதுவரை நான் உடல் நலமில்லாமல் இருந்தது எதையும் அறிந்து இருக்கவில்லை எங்களை பெற்றவர்கள்.
காரை அர்ஜுன் செலுத்திக் கொண்டிருக்க, அவனது அருகில் அமர்ந்து இருந்த நான்
“ரொம்ப தேங்க்ஸ் அர்ஜுன்” என்றேன் மெதுவாக.
“எனக்கு எதுக்கு விக்ரம் தேங்க்ஸ்?”
“இந்த பத்து நாள் என்னை அத்தனை அன்பா பார்த்துக்கிட்டே அர்ஜுன்”
“அன்புக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லக் கூடாது மை டியர் ப்ரதர்” என்றான் அவன் திரும்பி எனது முகம் பார்த்து “கல்யாண நேரத்திலே உடம்பை பார்த்துக்கணும் விக்ரம். நான் இன்னும் அண்ணி கிட்டே கூட உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லலை”
மெலிதான சிரிப்பு எழுந்தது என்னிடம்.
“என்ன சிரிக்குறே விக்ரம்?”
“அவ உனக்கு அண்ணி அப்படின்னு நீ முடிவு பண்ணா போதுமா அவ முடிவு பண்ணணும் இல்லையா?”
அவனது பார்வை குழப்பத்தில் குளித்து இருக்க, அது என்னமோ இன்று அவனிடம் எல்லாவற்றையும் கொட்ட வேண்டும் என்று தோன்றியது எனக்கு.
அடுத்த நிமிடம் நிச்சிய தினத்தன்று எனக்கும் ஆராதனாவிற்கும் நடந்த வாக்குவாதத்தை அவனிடம் முழுவதுமாக சொல்லி முடித்தேன் நான்.
ஓட்டிக் கொண்டிருந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு என்னை அதிர்ச்சி பார்வை பார்த்தபடியே அமர்ந்து இருந்தான் அர்ஜுன்.
“ஏன் விக்ரம்? அன்னைக்கு நிச்சியதார்த்தத்தில் நடந்த சில விஷயங்கள் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணி இருக்கும் நினைக்கிறேன். அதனாலேதான் நீ அவங்ககிட்டே இப்படி எல்லாம் பேசிட்டே. நான் அண்ணிகிட்டே பேசறேன் இரு” அவன் படபடக்க
“வேண்டாம் அர்ஜுன்” என்றேன் நான் “அம்மா அப்பாகிட்டே கூட இதைப் பற்றி எதுவும் சொல்லாதே”
“அது சொல்ல மாட்டேன் நான். சொன்னா என்ன நடக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். பட் நான் அண்ணி கிட்டே பொறுமையா..”
“இல்லடா. கொஞ்ச நாள் முன்னாடி அவளை ஏர்போர்ட்லே பார்த்தேன்” என அங்கே நடந்ததையும் அவனிடம் சொன்னேன். ”அவளுக்கு என்னை பிடிக்கலையோன்னு தோணுது. என்னை ஒரு வில்லன் மாதிரி பாரக்குறாளோன்னு தோணுது”
“விக்ரம் உன்னைப் போய் யாருக்காவது…” என்று சொன்னவனுக்கு வைஷாலியின் நினைவு வந்திருக்க வேண்டுமோ? சற்றே மௌனமானான் அவன்.
“என்ன வைஷாலி நினைவுக்கு வந்திட்டளா? ஹாஹா.. ஐ நோ பெட்டர்” என்றேன் நான்.
ஆராதனா அன்று சொன்ன “யூ நோ பெட்டர்” என்னை இன்னும் துரத்திக் கொண்டே இருந்தது.
எனது வார்த்தைகளில் பதறிவிட்டான் அர்ஜுன்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் அண்ணிகிட்டே பேசறேன்..”
“இல்லடா கண்ணா” என்றேன் மெதுவாக. நான் அவனை கண்ணா என்றெல்லாம் அழைத்து அவன் பார்த்திருக்க நியாயமில்லை. அவன் பக்கமாக நன்றாக திரும்பி அமர்ந்தேன்.
“ஒரு உண்மையை சொல்றேன் உன்கிட்டே. எனக்கு ஆராதனாவை உயிருக்கு மேலே பிடிக்கும். இப்போன்னு இல்ல எப்பவுமே. ஆனா அவளுக்கு என்னை பிடிக்கலை. இந்த காதல், கல்யாணம் எல்லாம் மற்றவங்க பேசி பஞ்சாயத்து பண்ணி எல்லாம் செய்யக் கூடாது அர்ஜுன். அது தன்னாலே விரும்பி நடக்கணும்”
பதிலே பேசவில்லை அர்ஜுன்
“இதுவெல்லாம் ஒரு வகையிலே நான் வைஷாலி அரவிந்த் பார்த்து கத்துகிட்டேன்ன்னு கூட சொல்லலாம். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிறதுகாகவே அவளை விட்டு விலகி நிற்கிறேன். இப்போ ஆராதனா அவ விருப்பப்படி இருக்கட்டும். எப்பவாவது என்னை மனசார விரும்பினா மட்டும் அவ திரும்பி என்கிட்டே வரட்டும்”
“அப்படி அண்ணியை உயிருக்கு மேலே பிடிச்சு இருக்கு அப்படின்னா எதுக்கு விக்ரம் அவங்களோட சண்டை போட்டே?” அடுத்தக் கேள்வியை மிக மிகத் தயக்கத்துடன் கேட்டான் அர்ஜுன்.
“நான் அவளை உடனே கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னுதான் கேட்டேன் அர்ஜுன். ரொம்ப நேரம் பொறுமையாதான் பேசினேன். ஆனா கடைசியிலே அவ வைஷாலியை இழுத்து பேசினதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. யார் வேணும்னாலும் என்னை அப்படி பேசட்டும். எனக்கு கவலை இல்லை ஆனா ஆரா எப்படி அப்படி பேசலாம்? ஆயிரம்தான் புலியா வலம் வந்தாலும் எனக்கும் மனசு வலிக்கும் தானே அர்ஜுன்?”
அர்ஜுனின் முகத்தில் இப்போது கலவர ரேகைகள். அவனது பயப் பார்வை பார்த்து எனக்கு சின்ன சிரிப்பு கூட வந்தது
“பயப்படாதே அர்ஜுன். நான் வைஷாலியை துரத்திட்டு ஓடின பழைய விக்ரம் எல்லாம் இல்லை ”
நான் எத்தனை சொன்னாலும் அவனுக்கு மனம் ஆறவில்லை போலும்.
“விக்ரம் அண்ணி கண்டிப்பா வருவாங்க விக்ரம். நீ தோற்று போயிட்டதா மட்டும் வருத்தப் படாதே” என எனக்காக தவித்த தம்பியின் தோள்களை பரிவுடன் அணைத்துக் கொண்டேன் நான்.
“தென்கச்சி கோ சுவாமிநாதன் தெரியுமா? அவர் சொல்வாராம். “எப்போதுமே தோற்க தயாராக இருப்பவனை யாராலும் ஜெயிக்க முடியாது” அப்படின்னு. அதே போல என்னை அவளாலே ஜெயிக்கவே முடியாது பிகாஸ் நான் எப்போதுமே தோற்கத் தயாராகவே இருக்கிறேன். அவகிட்டே மட்டும். மை லவ் இஸ் அன்கன்டீஷனல் அர்ஜுன். (என்னுடைய காதல் நிபந்தனைகளற்றது)
நான் பேசப்பேச என்னை வியப்புடன் பார்த்திருந்தான் அர்ஜுன்.
“இங்கே பாரு அர்ஜுன் நீ என் மேலே நிறைய மரியாதை வெச்சிருக்கேன்னு தெரியும். அதே போல என்னோட மனசை நீ சரியா புரிஞ்சுப்பே அப்படின்னு நம்பிக்கையும் வெச்சிருக்கேன். அதை உடைச்சிடாதே அர்ஜுன். இதை எல்லாம் பற்றி நீ வேறே யார்கிட்டேயும் பேசாதே. ஆரா உட்பட”
அமோதிப்பாக அசைந்தது அர்ஜுனின் தலை.
error: Content is protected !!