Skip to content
Post Views: 905
விக்ரம் பார்த்தசாரதி 11
ஆராதனா அமெரிக்காவுக்கு சென்று கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்து விட்டது. அங்கே சென்ற பிறகு கூட ஒரு குறுஞ்செய்தி கூட வரவில்லை அவளிடமிருந்து.
மனம் சற்று தளர்ந்துதான் போனது எனக்கும். அப்படி என்னை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு என்ன செய்து விட்டேன் நான்? நிச்சியம் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்பது அத்தனை பெரிய குற்றமா என்ன?
கடந்த ஒரு மாதமாகவே நான் இந்தியாவில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
Advertisement
ஆராவை பற்றிய ஏதேதோ நினைவுகள் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்த நிலையில், ஒரு ஓரத்தில் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் குட்டி ஆரா.
அவளைப் பார்த்து வருடங்கள் ஆகின்றன. ‘இப்போதும் அவள், கௌதமின் உதகை விருந்தினர் மாளிகையில்தான் இருக்கிறாளா?’ ஒரு பெரிய கேள்வி புறப்பட்டது எனக்குள்ளே. பதில் தெரியவில்லை
அவளைப் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் என்னைத் தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருந்தது. கண் முன்னே நிறைய வேலைகள் குவிந்து கிடந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இரவோடு இரவாக உதகை நோக்கி கிளம்பியிருந்தேன் நான்.
Advertisement
நான் உதகைக்கு செல்கிறேன் என்று கௌதமிடம் கூட சொல்லாமல் கிளம்பியிருந்தேன். ஆனால் மறுநாள் அதிகாலையில் அங்கே சென்றதும் தான் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. குட்டி ஆரா அங்கே இல்லை.
Advertisement
அங்கே இருந்தே அழைத்தேன் கௌதமை.
“சொல்லு விக்ரம்” உடனேயே ஏற்று இருந்தான் அழைப்பை.
“நான் உன்னோட ஊட்டி கெஸ்ட் ஹவுஸ் வந்திருந்தேன் கெளதம். இங்கே…”
Advertisement
“ஓ அங்கே இருக்கிறவங்களுக்கு உன்னைத் தெரியாதே. நீ அவங்க கிட்டே உன் போன் குடு நான் பேசறேன்”
“இல்ல கெளதம் நான் இங்கே ஸ்டே பண்ண வரலை. ஆராதனாவை பார்க்க வந்தேன் அவ இங்கே இல்லையா?”
எனது குரலில் எதை கண்டு கொண்டான் அந்த சதுரங்க வீரன் என்பது எனக்குப் புரியவில்லை.
“என்னாச்சு விக்ரம்?” என்றான் சற்றே இறங்கிய தொனியில்.
“எனக்கு ஆராதனாவை பார்க்கணும் போலே இருந்தது கெளதம். வேறே எதுவும் இல்லை” இயல்பாகவே இருக்க முயன்றேன் நான்.
கௌதம் நல்ல நண்பன்தான் என்றாலும் எனது மனதில் இருப்பதை எல்லாம் கொட்டும் எண்ணம் எனக்கு அர்ஜுனிடம் மட்டுமே வந்திருக்கிறது.
“ஆராதனாவை பார்க்கணும்னா நீ கோவைதான் வரணும். அவ இங்கே எங்க வீட்டிலேதான் இருக்கா இப்போ”
“அப்போ உடனே கிளம்பி வரவா அங்கே?” கேட்டும் விட்டேன் அவனிடம். நான் நானாகவே இல்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்து போனது எனக்கு.
“இது என்னடா கேள்வி. உடனே கிளம்பி வா” சொன்னான் கௌதம்.
அடுத்த சில மணி நேரங்களில் அவனது வீட்டை அடைந்து இருந்தேன் நான். அவனும் அவனது மனைவி சஞ்சனாவும் என்னை அன்பாக வரவேற்று உபசரித்தார்கள்.
ஆனாலும் எனது பார்வை குட்டி ஆராதனாவைத் தேடிக் கொண்டே இருந்தது.
“ஆராதனா எங்கே கௌதம்?” கேட்டேன் நான்.
“அவ ஸ்கூல் போயிருக்காடா. ஈவினிங் வந்திடுவா” என்றான் அவன். “அது வரைக்கும் நீ ரெஸ்ட் எடு வா” என்று என்னை மதிய உணவை சாப்பிட வைத்து, விருந்தினர்கள் அறைக்கு அழைத்து வந்தான் கெளதம்.
அதே நேரத்தில் அந்த சதுரங்க வீரனின் பார்வை என்னை படிக்க முயன்றது.
நான் சொன்ன விஷயங்கள் சொல்லாத விஷயங்கள் அவை இரண்டுக்கும் இடையில் உள்ள விஷயங்கள் என அனைத்தையும் புரிந்து கொள்ளும் கலையில் வல்லவனாயிற்றே அவன்.
எங்கள் இருவருக்கும் கிடைத்த தனிமையில் கேட்டான் அவன். “இஸ் எவ்ரிதிங் ஒகே வித் யூ விக்ரம்?”
“எஸ் எஸ் அப்சலியூட்லி கௌதம். நான் நல்லாத்தான் இருக்கேன்” புன்னகைத்தேன் நான்.
எனது நிச்சியதார்த்ததிற்கு வந்திருந்தானே கௌதம். என்னவளின் பெயர் ஆராதனா என்பது அவனுக்கு நன்றாகத் தெரியுமே.
“நீ நல்லா இருந்தா முதலில் சந்தோஷப் படுறது நான்தான்டா. இப்போ இல்லை எப்பவுமே. உன் பிசினஸ்லே மட்டும் இல்ல உன் மனசுக்கு ஹெல்ப் தேவை பட்டாலும் கூட நான் இருக்கேன் சரியா?” என்று மிக நிதானமாக வார்த்தைகளை கோர்த்தான் கெளதம். “ஆராதனா நாலு மணிக்கு வருவா அதுவரை ரெஸ்ட் எடு” அவனது முகத்தில் இதமான புன்னகை.
எந்த நேரத்தில் நமக்கு என்ன உதவி தேவையோ அந்த உதவியை நமக்கு தேவையான அளவுக்கு மட்டும் செய்து விடும் கௌதமின் இந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
“சரி ஆராதனா ஏன் இங்கே இருக்கா? முருகன் இங்கே வேலை செய்யறாரா இப்போ?” இது நான்.
“இல்லடா.. அவளுக்கு அம்மா இல்லைதானே, அதனாலே முருகன் திடீர்னு வேறே கல்யாணம் பண்ணிகிட்டார். ஆனா வந்த பொண்ணுக்கு ஆராதனாவை சுத்தமா பிடிக்கலை. அவளை ஏதாவது ஆசிரமத்திலே சேர்த்து விட்டுடலாம்னு முயற்சி பண்ணாங்க”
அவன் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாமல் பார்த்திருந்தேன் நான்.
“பாவம் விக்ரம் ஆராதனா. அவளுக்கு எல்லாமே அப்பாதான்ன்னு இருந்தா. இப்போ திடீர்னு இப்படி ஒரு விஷயம் நடந்ததும் மனசாலே ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. அதுதான் அவளை இங்கே எங்களோட கூட்டிட்டு வந்துட்டேன். இப்போ என் பொண்ணோட சேர்ந்து சந்தோஷமா இருக்கா”
அவன் சொல்லச் சொல்ல எனக்குள்ளே அழுத்தமாக ஒரு வலி. வார்த்தைக்கு வார்த்தை ‘எங்கப்பா எங்கப்பா’ சொல்லும் பிஞ்சுக்கு மனதிற்குள் எத்தனை வலித்திருக்கும்.
‘நான் வந்துவிட்டேன் ஆரா. இனி உனக்கு நான் இருக்கிறேன்’ மனதிற்குள் குழந்தையிடம் சொல்லிக் பேசிக் கொண்டேன் நான்.
அது எப்படியோ அடுத்த இரண்டு மணி நேரங்கள் மிக நிம்மதியாக உறங்கி எழுந்தேன் நான். இப்போது ஆராதனா வரும் நேரம். முகம் கழுவி என்னை சரி செய்து கொண்டு குட்டி ஆராவை சந்திக்கத் தயாரானேன் நான்.
“அவளைப் பார்த்து வருடங்கள் ஆகின்றனவே. என்னை அவளுக்கு அடையாளம் தெரியுமா எனும் ஒரு கேள்வியுடன் ஒரு சின்ன சுவாரஸ்யம் என்னிடம் தொற்றிக் கொண்டது.
அடுத்து கௌதம் கொடுத்த காபியை நான் சுவைத்து முடித்த வேளையில் வந்து நின்றனர் அந்த இரண்டு சுட்டிப் பெண்களும். ஒன்று கௌதமின் மகள் சரஸ்வதி. இன்னொன்று எனது ஆராதனா.
குழந்தைகளை பார்க்கப் போகிறோம் என்று தெரிந்தவுடனேயே அவர்களுக்கான பரிசுகளை அள்ளிக் கொண்டுதான் வந்திருந்தேன்.
இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். அழகான பள்ளிச் சீருடையில் இருவரும் அருகருகே நின்றிருந்தனர்.
முதலில் எனது அருகில் வந்தது கௌதமின் மகள் சரஸ்வதி. தனது அன்னையின் பெயரையே மகளுக்கு வைத்து அவளைக் கொண்டாடித் தீர்க்கும் தந்தை அவன்.
எனது அருகில் வந்தாள் சரஸ்வதி. பெரிய மனித தோரணையுடன் “ஹாய் அங்கிள்” என்று கை குலுக்கினாள். நானும் சின்ன சிரிப்புடன் கைக்குலுக்க
“அங்கிள் யாருன்னு தெரியுமா உனக்கு? பெரிய மனுஷி மாதிரி ஹேண்ட ஷேக் பண்றே?” கேட்டான் கௌதம்.
“நீங்க ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க டாடி இன்னைக்கு” பதில் சொன்னாள் குழந்தை
“ஸோ?” இது கௌதம்.
“இவர் கண்டிப்பா உங்க பெஸ்ட் ஃபிரெண்ட்டா தான் இருக்கும் டாடி” மலர்ந்து சிரித்தபடியே குழந்தையை அணைத்துக் கொண்டேன் நான். அடுத்து நான் கொடுத்த பரிசுகளை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடி விட்டாள் குழந்தை.
இப்போது ஆராதனாவின் பக்கம் திரும்பினேன் நான். அவளைப் பார்த்து இரண்டு மூணு வருடங்கள் ஆகியிருக்க நிறைய வளர்ந்து விட்டிருந்தாள் ஆராதனா.
என்னை விட்டு விழி அகற்றாமல் என்னை நோக்கி மெல்ல நடந்து வந்தாள் அவள்.
‘என்னை அவளுக்கு அடையாளம் தெரிகிறதா இல்லையா?’ சின்ன படபடப்பு எனக்குள்ளே. நான் கௌதம் இருவரும் எதுவுமே பேசாமல் நின்றிருக்க எனது அருகில் வந்து நின்று என்னை ஊன்றிப் பார்த்தாள் ஆராதனா.
“விக்ரம் பார்த்தசாரதி அங்கிள் தானே?” அவள் கேட்டு முடிக்கவில்லை அப்படியே அள்ளிக் கொண்டு விட்டேன் ஆராதனாவை.
அடுத்து நான் கொடுத்த பரிசுகளை எல்லாம் அள்ளிக் கொண்டு “சா…ரா…” என்று கத்திக் கொண்டே கௌதமின் மகள் சரஸ்வதியை நோக்கி ஓடினாள் அவள்.
அன்றைய நாள் மிக இனிமையாக கழிந்தது எங்களுக்கு. குழந்தைகள் இருவருடனும் விளையாடி மகிழ்ந்தேன்
இரவு குழந்தைகள் தூங்கியவுடன் கேட்டேன் கௌதமிடம் “நான் கொஞ்சா நாள் ஆராவை என்கூட சென்னை கூட்டிட்டு போகவா கௌதம்?”
என்னை சற்று கூர்மையாகப் பார்த்தவன் “வொய் நாட் விக்ரம். அவ விரும்பினா கண்டிப்பா கூட்டிட்டு போ. அவளுக்கு எக்ஸாம்ஸ் முடிஞ்சது. இன்னும் ரெண்டு மாசம் லீவ்தான்”
மறுநாள் காலையில் மகிழ்ச்சியுடன் என்னோடு கிளம்பினாள் ஆரா. சாராவுக்கு அவளை விட மனமில்லைதான் அதே நேரத்தில் தனது பெற்றோரை விட்டு என்னுடன் வரவும் தயக்கம். கடைசியில் ஒரு வழியாக சாராவை சமாதானப் படுத்தி விட்டு ஆராவை அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி கிளம்பி இருந்தேன்.
அவளது முதல் விமானப் பயணம் அது. மகிழ்ச்சியும், கொஞ்சம் பயமும், நிறைய உற்சாகமும் என ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வான் மேகங்களை ரசித்துக் கொண்டிருந்த ஆரா திடீரென என்னை அழைத்தாள்.
“விக்ரம் அங்கிள் நீங்க என் பெயரை ஆராதனா முருகன் சொல்லச் சொன்னீங்க தானே?”
“ஆமாம். அதுக்கு இப்போ என்னடா?”
“நான் அப்படி சொல்றது என்னோட சித்திக்கு பிடிக்கவே இல்லை தெரியுமா? அதனாலே என்னை அடிச்சாங்க. அப்புறம் என்னை கொண்டு போய் ஏதோ ஆசிரமத்திலே விட்டுட்டாங்க. எனக்கு அங்கே ரொம்ப பயமா இருந்தது. அப்புறம் ஒரு நாளைக்கு கௌதம் அங்கிளுக்கு போன் பண்ணேன். அவர் நம்பர் எப்பவும் தெரியும் எனக்கு. உடனே அவர் வந்து என்னை சாரா கிட்டே கூட்டிட்டு வந்திட்டார், இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”
குழந்தை சொல்லச் சொல்ல என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் திகைப்புடன் பார்த்திருந்தேன்
“ஆராதனா முருகன்ன்னு அப்பா பேர் சேர்த்து சொல்றது தப்பு போல அங்கிள். அதனாலே நான் இனிமே ஆராதனா மட்டும் சொல்லிக்கறேன். அதுவே நல்லா இருக்கு”
சொன்ன ஆராதனாவை என்னோடு சேர்த்துக் கொண்டு அதன் உச்சந்தலையில் முத்தமிட்டேன்.
“நீ கவலைப் படாதேடா. இனிமே உனக்கு நானும் இருக்கேன்” சொன்ன எனது மனதிற்குள் ஏதேதோ யோசனைகள்.
வீட்டிற்கு வந்ததும் “யாருடா இந்தப் பொண்ணு?” என்று முதலில் துவங்கியது அம்மாதான்.
“இது என் பெஸ்ட் ஃப்ரெண்டோட பொண்ணு மா. பெயர் ஆராதனா. இப்போ அவளுக்கு ஸ்கூல் ஹாலிடேஸ். அதனாலே கொஞ்ச நாள் என் கூட இருக்கப் போறா”
அந்தப் பெயர்தான் வீட்டில் உள்ளவர்களின் புருவங்களை உயர்த்தியது என்று சொல்ல வேண்டும்.
“அப்படி சொல்லிகுற அளவுக்கு யாருடா உனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்?” இதுவும் அம்மாதான்.
“அவன் பேர் சொன்னா உனக்கு தெரிஞ்சிடுமா? முதலிலே சாப்பாடு போடும்மா எங்க ரெண்டு பேருக்கும்”
அதன் பிறகு அம்மா என்னிடம் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்த அர்ஜுனிடமும் ஸ்வாதியிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டாள் ஆராதனா.
இரவு ஆரா எனது அறையிலேயே உறங்கி விட அதன் பிறகு அர்ஜுன் எனது அருகில் வந்தான்.
“யாரு விக்ரம் இந்த குட்டி ஆராதனா?” என்றான் எனது அருகில் அமர்ந்து கொண்டே.
“என் பொண்ணு” பட்டென சொல்லி விட்டேன். சட்டென திகைத்து விட்டான் அவன்.
“என்ன விக்ரம் திடீர்னு இப்படி எல்லாம்…”
“எதுவும் திடீர்னு இல்லை. சில விஷயங்கள் சீரியஸா யோசிச்சிட்டு இருக்கேன். பார்ப்போம். எமோஷனலா எந்த முடிவும் எடுக்க மாட்டேன். நல்லா யோசிச்சு பராப்பரா எல்லாத்தையும் பண்ணுவேன். அப்போ உன்கிட்டேதான் முதலிலே எல்லாத்தையும் சொல்வேன்”
எப்போதும் போல பதில் எதுவும் சொல்லாமல் எனது மனதை படித்திருந்தான் அர்ஜுன்.
error: Content is protected !!