Skip to content
Post Views: 1,363
விக்ரம் பார்த்தசாரதி 14
நியூயார்க்கின் டிசம்பர் மாத காலை குளுகுளுவென விடிந்து இருந்தது. எனது அறையில் இருந்த கண்ணாடி ஜன்னலின் திரையை விலக்கி நியூயார்க்கை ஒரு முறை பார்த்துக் கொண்டேன். கட்டிலில் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
நகரம் முழுவதும் ஒரு மென்மையான பனித்தூறல் சூழ்ந்திருந்தது மக்கள் குளிரை எதிர்கொள்ள நீண்ட கோட்டுகள், கழுத்தில் சுற்றிய ஸ்கார்ஃப்கள், கைகளில் கையுறைகள் அணிந்து வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் மூச்சே கூட குளிரில் சிறிய வெள்ளை புகையாக மிதந்து மறைந்து போய்க் கொண்டிருந்தது.
ஏதேதோ யோசனைகளுடன் நான் நின்றிருந்த போது எனது மொபைலை தொட்டது குட்டி ஆராவின்
Advertisement
‘குட் மார்னிங்’. மெலிதான ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது என்னிடம்.
அன்று முழுவதும் பெரிதாக வேலைகள் இல்லை எனக்கும் அர்ஜுனுக்கும். எங்களுடன் ஊருக்கு வந்திருந்த ஸ்வாதிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். அது இன்றுதான் சற்றே குறைந்து இருக்கிறது. மாத்திரையின் தாக்கத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
நேரம் மாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
Advertisement
“ரெடி ஆக ஆரம்பிக்கலையா விக்ரம்?” என்றபடியே எனது அருகில் வந்தான் அர்ஜுன்.
Advertisement
“ரெடி ஆகணும் அர்ஜுன். என்ன ட்ரெஸ் போடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றேன் நான்.
“இதிலே என்ன யோசனை. சிம்பிளா வேஷ்டி ஷர்ட்லே வா”
“என்னது?”
Advertisement
“நிஜமாத்தான் சொல்றேன் விக்ரம். அண்ணி வாராங்க இல்லையா அதனாலேயே சொல்றேன்”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” இது நான்.
“நிறைய சம்மந்தம் இருக்கு. நீ ரெடி ஆகு”
“நான் வேஷ்டி எல்லாம் எடுத்திட்டு வரலை அர்ஜுன்”
“நான் எடுத்திட்டு வந்திருக்கேன். குளிருக்கு தெர்மல் போட்டுக் கொண்டால் ஆச்சு. கமான் கெட் ரெடி. நம்ம டிரஸ் போட ஏன் இத்தனை யோசிக்கறே? ” முடித்து விட்டான் அர்ஜுன்
அவனுடைய சொல்லை இப்போது மறுக்கத் தோன்றவில்லை எனக்கு.
அடுத்த ஒன்று ஒன்றரை மணி நேரத்தில் அந்த உணவகத்தை அடைந்து இருந்தோம். அங்கங்கே மரங்கள் வளைந்து நின்று ஒரு தோரண வாயில் போல நம்ம வரவேற்று நிற்கும் அந்த உணவகத்தின் முகப்பே மிகப் பிடித்தமாக இருந்தது எனக்கு.
பனிக்காற்று வீசிக் கொண்டிருக்க, அங்கங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த நியான் விளக்குகளின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது அந்த உணவகம்.
காரை விட்டு நானும் அர்ஜுனும் இறங்கி நின்ற அந்த நொடியில் இன்னொரு காரில் வந்து இறங்கினாள் ஆராதனா.
அவளைப் பார்த்து ஒரு சில நொடிகள் நின்று விட்டேன் நான். கார்மேக நிறத்தில் அங்கங்கே தங்கப் பூக்கள் வரையப்பட்ட சேலையும் அதற்கேற்ற மிதமான அலங்காரமுமாக அவள். Bottom of Form
காரை விட்டு இறங்கியவளும் என்னைப் பார்த்து நின்று விட்டாள்தான். எப்போதும் ஸ்யூட் உடையிலேயே என்னைப் பார்த்தவள் இப்படி ஒரு உடையில் நான் வந்து நிற்பேன் என்று நினைத்து இருக்க மாட்டாள்தான்.
அவள் தன்னிலை பெற்று எங்களின் அருகில் வருவதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது.
“ஹாய் அர்ஜுன்” என்றாள் என்னைப் பார்த்துக் கொண்டே.
“ஹாய்” என்றான் பொத்தாம் பொதுவாக.
ஸ்வாதி இங்கே இருந்திருந்தால் வார்த்தைக்கு இரண்டு அண்ணி சேர்த்துக் கொண்டிருப்பாள். இவன் கவனமாக தவிர்த்த அண்ணி, அவளை கொஞ்சம் உறுத்தி இருக்க வேண்டும் என்பதை சொன்னது அவளது முக பாவம். நேற்றும் அர்ஜூன் அவளிடம் எதுவும் பேசவில்லை.
“மிஸ்டர் எட்வர்ட் எங்கே ஆரா?” இது நான்.
“இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடுவான் விக்ரம். அவனுக்கு கொஞ்சம் வேலை இருந்ததா அதுதான் நான் தனியா கிளம்பி வந்திட்டேன்”
“எனக்கு அப்போ கூட வேறே யாரையும் பிடிச்சா நீங்க என்ன செய்வீங்க? உங்க அனுபவத்தில் யூ நோ பெட்டர்” சில மாதங்களுக்கு முன் சீறிய ஆராதனாவை இன்று காணவில்லை என்று தோன்றியது. அவளது இந்த இலகுத் தன்மைக்கு காரணம் எட்வர்டாகக் கூட இருக்கலாம் தானே?
“சரி நீங்க ரெண்டு பேரும் உள்ளே போய் உட்காருங்க. எனக்கு ஒரு கால் பேசணும். பேசிட்டு வரேன்” என எங்களுக்கு ஒரு தனிமை கொடுத்து விட்டு விலகினான் அர்ஜுன்.
சரியென தலை அசைத்துவிட்டு நாங்கள் இருவரும் உணவகத்தை நோக்கி நடந்தோம்.
அவள் புடவையிலும் நான் வேஷ்டியிலும் என அருகருகே நடந்தோம். இந்த நொடி என்றென்றைக்கும் நீண்டு கொண்டே போகாதோ என்று ஒரு பேராவல் எனக்குள்ளே.
பேராவல்கள் எனக்குள்ளே மட்டுமே இருந்தால் போதுமா என்று ஒரு கேள்வி எனக்குள்ளே எழுந்து மறைய
“விக்ரம்” மெல்ல அழைத்தாள் அவள்.
“ம்?”
“யூ லுக் வெரி ஹேண்ட்சம்”
“தேங்க் யூ ஆரா” நிமிராமல் நடந்தேன் நான். எனக்குள் எழுந்த எந்த உணர்வையும் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.
“இந்த ஈவனிங் எப்பவுமே ஞாபகம் இருப்பது போல ஒரு போட்டோ எடுத்துக்கணும் விக்ரம்”
“ஷூர் ஆரா கிளம்பறதுக்குள்ளே எடுப்போம்” சொல்லியபடியே நடந்தேன்.
கிறிஸ்துமஸ் சமயம் என்பதால் அங்கங்கே வண்ண வண்ண காகித தோரணங்கள் எங்களைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தன.
திடீரென அவளது கரம் எனது கேசத்தை தொட்டு வருடித் திரும்ப சற்றே திகைத்து நின்று திரும்பினேன் நான்.
“என்னாச்சு ஆரா?”
“இல்ல அது தலை மேலே ஏதோ பேப்பர் விக்ரம். அதுதான் சட்டுன்னு சொல்லாம தட்டி விட்டேன். ஸாரி.. விக்ரம்”
அந்த ஸாரி என்னை ஒரு நொடி புரட்டிப் போட, அவளது விழிகளுக்குள் நான் பார்த்த அந்த நொடியில், அங்கே சின்னதாக ஒரு கண்ணீர் துளி எட்டிப் பார்த்த உணர்வு எனக்கு.
விருட்டென பார்வையை திருப்பிக் கொண்டு விட்டாள் அவள். அவள் திரும்ப சற்று நேரம் பிடிக்க, நான் எனது கேசத்தை சரி செய்து கொண்டே நடக்க, இப்போது அவளது பார்வை எனது விரல்களோடே பயணித்தது.
அவள் மோதிரத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது
மறுபடியும் நடந்தோம் நாங்கள். எங்கள் தோள்கள் ஒரு முறை தன்னாலே உரசிக் கொள்ள, எந்த எதிர்வினையும் காட்டாமல் இருவரும் நடந்தோம். ஒரு இறுக்கமான மௌனம் அங்கே.
ரெஸ்டாரண்டில் நுழைந்தோம். நான் எனது பெயரை சொல்லவும், எங்கள் டேபிள் ரெடியாக இருக்கிறது என்றார் அங்கிருந்த மேனேஜர்.
“இன்னும் இரண்டு பேருக்கு வெயிட் செய்கிறோம்’ என்றேன் அவரிடம்.
ரிசப்ஷனில் இருந்த சோபாவை காட்டி எங்களை அமரும் படி சொல்ல மறுத்தேன் நான். ஆராதனாவும் என்னுடனே நின்றாள்.
சுவரெங்கும் அழகழகான ஓவியங்கள் எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை சற்றே இலகுவாக்க முயன்றன.
அந்த ஓவியங்களில் ஒன்றில் ஒரு இளம் பெண் தனது கையில் ஒரு சாக்லேட்டை வைத்திருக்க அதில் ஒரு பகுதியை அந்தப் பெண்ணுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் ஒரு வாலிபன்.
நான் சற்றே ஊன்றிப் போய் அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்
“ரொம்ப பசிக்குது விக்ரம்” என்றாள் அவள். “இன்னும் எட்வர்ட் வந்து, நாம ஆர்டர் பண்ணி சாப்பிட ரொம்ப டைம் ஆகிடும்” என்றவள் அவள் கைப்பையை திறந்து ஒரு பெரிய சாக்லேட்டை வெளியே எடுத்தாள்.
“லெட்ஸ் ஷேர் விக்ரம்” என்னைப் பார்த்து அவள் சொல்ல புருவங்களை உயர்த்தினேன் நான்.
“சாக்லேட்” என்று சொல்லிக் கொண்டே அந்த சாக்லேட் பாரை பாதியாக உடைத்து என்னிடம் நீட்டினாள் ஆராதனா.
‘இப்போது நான் அதை அவளுக்கு ஊட்ட வேண்டுமா என்ன?’ என எனக்குள்ளே சந்தோஷ மேகங்கள் கூட அதற்குள்ளாக எங்கிருந்தோ வந்த எட்வர்ட் அவளது கையிலிருந்து அதை பறித்துக் கொண்டான்.
அவன் வேண்டுமென்றே செய்தானா இல்லை எதேச்சையாக அவளது கையில் இருந்ததை எடுத்துக் கொண்டானா? தெரியவில்லை எனக்கு.
ஆனால் ஆரா முகத்தில் கலவரம். என்னை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் கையில் இருந்த மறுபாதி சாக்லேட்டை என் முன் அவள் நீட்ட “நோ தேங்க்ஸ் ஆரா” சொல்லி விட்டு சற்றே முன்னால் நடந்தேன்.
“உனக்குத் தான் பிடிக்குமே, நீ சாப்பிடு” அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான் எட்வர்ட்.
சரியாக அர்ஜூனும் வந்துவிட எங்களுக்காக காத்திருந்த மேஜையை நாங்கள் அடைந்த போது, ஒரு வேளை ஆராதனா எனதருகில் அமர்வாளோ எனும் எனது ஆவலை நீருற்றி தணித்து விட்டு சுவாதீனமாக அவளது கரத்தை பிடித்து இழுத்து தனதருகில் அம்ர்ந்திக் கொண்டான் எட்வர்ட்.
நானும் அர்ஜுனும் அருகருகே அமர்ந்தோம். நான் எனது கைப்பேசியில் இருந்த குட்டி ஆராவின் புகைப் படத்தை ஒரு முறை பார்த்து விட மனம் ஒரு நிலைக்கு வந்து விட, இப்போது அந்த உணவகத்தை சுற்றி பார்வையை சுழற்றினேன்.
பழமையான மர அலமாரிகள், அதன் மேல் அழகாக அடுக்கப்பட்ட பித்தளை பாத்திரங்கள், சுவர்களில் இந்திய பாரம்பரியத்தை பேசும் ஓவியங்கள் என இந்தியாவின் பழங்கால அரண்மனையில் அமர்ந்திருக்கும் பிரமை.
சமையலறையிலிருந்து வரும் மசாலாவின் மணம் காற்றில் கலந்து அந்த இடத்தை சுகந்தமாக்க சற்றே நிமிர்ந்து அமர்ந்தேன்.
அர்ஜுன் மெனு கார்டை எனது பக்கம் நகர்த்த “நான் இங்கே அல்ரெடி வந்திருக்கேன் அர்ஜுன். மெனு எனக்கு மனப்பாடம். ஐ வில் கோ வித் கன் பவுடர் தோசை அண்ட் பணியாரம். இங்கே அது எக்ஸ்ட்ராடினரியா இருக்கும்” என்று நான் சொல்ல உடனே
“ஐ வில் கோ வித் விக்ரம்” சொல்லியும் விட்டாள் ஆராதனா.
‘உணவுக்கு மட்டும் தானா? அல்லது மொத்தமாகவே என்னுடன் வந்து விடுகிறாயா பெண்ணே’ நான் யோசிப்பதற்குள்
“கமான் பெல்லா, தட் கன் பவுடர் இஸ் சோ ஸ்பைசி. நமக்கு வேறு ஆர்டர் செய்கிறேன்” என்றான் எட்வர்ட்.
“நாம கூட வேறே ஏதாச்சும் ஆர்டர் செய்யலாமா விக்ரம்? ” என்றான் அர்ஜுன்.
“நோ அர்ஜுன்” எனது குரலில் கொஞ்சம் அழுத்தம் இருந்தது.
“இல்ல விக்ரம்..அது வந்து…” அர்ஜுன் ஏதோ சொல்ல வர
“விக்ரம் ஒரு தடவை நோ சொல்லிட்டா எப்பவுமே நோ தான்” நானே எதிர்பாராமல் சொல்லி விட்டேன் அங்கே.
நான் அன்று எங்களது விவாதத்தின் போது இந்த வார்த்தைகளை சொன்னது அங்கிருந்த எல்லாருக்குமே தெரியுமே.
அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு அங்கே ஒரு இறுக்கமான மௌனம் வந்து குடி கொண்டு விட்டது. ஆராவின் முகம் கூட மொத்தமாக மாறித்தான் போனது.
அதன் பின்னர் மௌனத்தை கலைத்தது எட்வர்டாகத்தான் இருந்தது. எங்களை நோக்கி வந்த சிப்பந்தியிடம் வேண்டியவற்றை சொல்லிக் கொண்டிருந்தான் அவன். அவன் சொன்னதை எல்லாம் சுவைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
‘நான் அவளது மனதை உடைத்து விட்டேனோ? இல்லை அப்படி எல்லாம் இல்லை. அவள்தான் மோதிரத்தை கழற்றி விட்டாளே அப்படி என்றால் என்னைப் பிடிக்கவில்லை என்பது தானே பொருள். அந்த ஓவியத்தை பார்த்து அவள் சாக்லெட்டை எடுத்தாள் என்பதெல்லாம் எனது கற்பனை. சரி என்னை அவளுக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவள் தான் விருப்பப்பட்ட வாழ்கையை வாழ்ந்து விட்டுப் போகட்டும்’
இது நான் தானா? முன்னொரு நாள் இதே போல ஒரு ஹோட்டலில் வைஷாலி அரவிந்தனை பிரித்து வைத்த அதே விக்ரம் தானா? எனக்கே சந்தேகமாகத்தான் இருந்தது.
கடைசியாக நான் நன்னாரி சர்பத்தை வாங்கி அருந்த, அர்ஜுன் நீர் மோரை சுவைத்துக் கொண்டிருந்தான்.
எல்லாவற்றையும் உண்டு முடித்து விட்டு சில பல டாலர்களை அவர்களுக்கு தானம் கொடுத்து விட்டு வெளியே வந்தோம் நாங்கள்.
அவளது மனதிற்குள் என்ன ஓடுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் அவளது நடையில் ஒரு விதமான தடுமாற்றம். அப்போது சட்டென கேட்டாள் எல்லாரிடமும்.
“இங்கே பக்கத்திலே ஒரு காஃபி ஷாப் இருக்கு. யாரெல்லாம் என் கூட வரீங்க. ஐ பேட்லி நீட் அ காஃபி நவ்”
“நீ மறுபடியும் காஃபி குடிக்க ஆரம்பிச்சிட்டியா ஆரா?” கேட்கத்தான் நினைத்தேன் நான். ஆனால் கேட்கவில்லை. அவளோடு இணையவும் தோன்றவில்லை.
“இல்ல ஆரா ஐ ஆம் ஃபுல்” மறுத்து விட்டேன் நான்.
“நீ அர்ஜுன்?” அவள் கேட்க அவனுமே மறுத்து விட
“கமான் பெல்லா ஐ ஆம் கமிங். நாம பாதி பாதி ஷேர் பண்ணிக்கலாம்” நகர்ந்தார்கள் இருவரும்.
அவர்கள் நகர்ந்தவுடன் கேட்டான் அர்ஜுன் “என்ன பண்றே விக்ரம் நீ?”
“என்ன பண்றேன்?” என நான் அவனைப் பார்த்த பார்வையில் சற்றே மிரண்டு போனான்.
“என்னமோ பண்ணு போ” என திரும்பிக் கொண்டான் அவன்.
சில நிமிடங்கள் கழித்து காஃபி ஷாப்பை விட்டு அவர்கள் வெளியே வந்த நேரத்தில்
“அப்படியே நில்லுங்க ரெண்டு பேரும்” என்றேன் நான். ஒன்றும் புரியாமல் நின்றார்கள் அவர்கள் இருவரும்.
“உங்க ரெண்டு பேரையும் அப்படியே ஒரு ஸ்நாப்” என்றவன், பல வித காபிகளின் அழகு ஓவியங்களுடன் அங்கே நின்றிருந்த அந்த காஃபி ஷாப்பின் பின்னணியில், அவர்கள் இருவரையும் எனது கைப்பேசியில் பதித்துக் கொண்டேன் நான்.
“இந்த ஈவனிங் எப்பவும் ஞாபகம் இருக்கிற மாதிரி ஒரு பிக் எடுக்கணும்ன்னு ஆரா ஆசைப்பட்டா. இதோ அ பியூட்டி ஃபுல் பிக் ஃபார் யூ போத். அதுவும் ஆராவோட ஃபர்ஸ்ட் லவ் காஃபி யோட பேக் கிரௌன்ட்லே” சொல்லிக் கொண்டே அவளுடைய எண்ணுக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி இருந்தேன் நான்.
நான் இப்படி இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுப்பேன் என்று எட்வர்ட் கூட நினைக்கவில்லை என்பதை சொல்லிக் கொண்டிருந்தது அவனது முக பாவம். அர்ஜுன் அதிர்ச்சியின் உச்சியில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான் .
அவர்கள் இருவரின் அருகில் சென்றேன் நான்.
“தேங்க்ஸ் ஃபார் அன் வொண்டர் ஃபுல் ஈவினிங். ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன். பெஸ்ட் விஷஸ் டு போத் ஆஃப் யூ. ரெண்டு பேரும் எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்” சொல்லிக் கொண்டே நான் எட்வர்டை நோக்கி கை நீட்ட அவன் புரியாத பார்வை பார்த்துக் கொண்டே என்னுடன் கை குலுக்கினான்.
பேச்சிழந்து நிற்பதை போல நின்றிருந்தாள் ஆரா.
“பெஸ்ட் விஷஸ் ஆரா” என்று நான் அவளை நோக்கி கை நீட்ட, இரண்டு நொடிகள் உயரவில்லை அவளது கரம்.
பின்னர் அன்று நிச்சயதாரத்த தினத்தில் மோதிரத்துக்கு கையை கொடு என்ற ஒரு ஆணையுடன் எப்படி கை நீட்டினாளோ அப்படி நீட்டினாள் தனது கரத்தை.
ஆனால் இந்த முறை எனது கரம் கீழே இறங்கவில்லை. இப்போது அவளது கரம்தான் மேலே ஏற வேண்டி இருந்தது.
அவளது கரம் பற்றி குலுக்கி விட்டு இருவருக்குமாக புன்னகைத்து தலையசைத்து விட்டு திரும்பி நடந்தேன் நான்.
“ஒரு நிமிஷம் இங்கேயே இரு விக்ரம் நான் கார் எடுத்திட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அர்ஜுன்.
நான் அர்ஜுனுக்கு தலை அசைத்து விட்டு திரும்ப எட்வர்டும் விலகி நடந்து சென்று கொண்டிருந்தான். அவனும் காரை எடுத்துக் கொண்டு வர செல்கிறான் என்று தோன்றியது.
அவன் நகர்ந்தவுடன் எனது அருகில் வந்து நின்றாள் அவள். நொடிகள் கடக்க எங்களுக்கிடையில் மௌனப் பனிக்காற்று மட்டுமே வீசிக் கொண்டிருந்தது.நாங்கள் அணிந்திருந்த ஜாக்கெட் கூட எங்களது குளிரை குறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.
இது எங்கள் இருவருக்கும் மிகத் தேவையான தனிமை என்று கூட தோன்றியது எனக்கு.
மெல்ல விழிகளை நிமிர்த்தினேன் நான். மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நின்றவளின் கண்களில் கொஞ்சம் கோபம் இருந்ததா என்ன?
‘ பேசாமல் நிற்கிறாளே? இத்தனை சாதுர்யமான வழக்கறிஞருக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லையாமா?’ நான் யோசித்துக் கொண்டே நின்ற நேரத்தில்
“லவ்லி” என ஒரு குரல் கேட்டது அங்கே.
ஒரு வயதான தம்பதி எங்களருகில் வந்திருந்தனர். அவர்கள் அந்த காபி ஷாப்பில் இருந்து வெளியே வந்திருக்கக் கூடும்.
“ஸைமன் இங்கே பார். இவங்க மிஸில்டோவின் கீழே நிற்கிறாங்க” அந்த வயதான பெண்மணி மிகுந்த உற்சாகமாக சொல்ல சட்டென எங்கள் இருவர் பார்வையும் மேலே உயர்ந்தது.
“லிஸி அவர்களை டிஸ்டர்ப் செய்யாதே. நீ வா. சாரி மை டியர்ஸ்” எங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே தனது மனைவியை இழுத்துக் கொண்டு நடந்தார் அந்த வயதான மனிதர்.
அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
பின் எங்கள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அலங்காரத்தை நோக்கினாள். அந்த அலங்காரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன அந்த மிஸில்டோக்கள்.
அவை வெண்ணிற பெர்ரி பழங்களை கொண்ட ஒரு ஒட்டுண்ணி செடிதான் என்றாலும் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் அவற்றிற்கு ஒரு தனி இடம் உண்டு.
இந்தப் பனிக்காலத்தில் மற்ற மரங்கள் செடிகள் எல்லாம் துவண்டு நிற்கும் போது இந்த மிஸில்டோக்கள் மட்டும் துவளுவதில்லை. அதனால் இவை நம்பிக்கை, காதல், சமாதானம் மற்றும் மன்னித்தலின் அடையாளமாக பார்க்கப் படுகின்றன என்பதை அறிவேன் நான்.
கிறிஸ்துமஸ் காலத்தில், மிஸ்டில்டோவை வீட்டின் கதவுகள் சுவர்கள் என பல இடங்களில் தொங்கவிடுவார்கள். அந்த மிஸ்டில்டோவின் கீழ் ஒரு ஆண், பெண் இருவரும் நின்றால், அவர்கள் முத்தமிட வேண்டும் என்று ஒரு பழக்கம் உள்ளது இங்கே. அப்படி முத்தமிடவில்லை என்றால் அது ஒரு துரதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை இங்கே உண்டு.
சின்னதான ஒரு படபடப்புடன் என்னைப் பார்த்தாள் அவள். பின்னர் சற்றே தணிந்து தலையை லேசாக சாய்த்து என்னைப் பார்த்த அவளது பார்வையின் அர்த்தம் மெலிதாக புரிந்தது எனக்கு.
முத்தமிட வேண்டுமா? சம்பிரதாயத்துக்காகவா? வாய்ப்பே இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நொடியில் எனது கழுத்தை கரம் கொண்டு வளைத்தவள் என் இதழ்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டாள்.
அடுத்த சில நொடிகளுக்கு என்னை எங்கெங்கோ அழைத்து சென்று கொண்டிருந்தாள். இத்தனை வருட வாழ்கையில் இப்படி எல்லாம் எந்தப் பெண்ணிலும் நான் உருகியது இல்லைதான்.
பாயும் புலியாகிய நான் அந்தப் பெண் சிங்கத்தின் ஆராதனையில் கரைந்துதான் போனேன் .
கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கழித்து விலகினோம் நாங்கள். இல்லை இல்லை வேறேதோ ஒரு உலகத்தில் இருந்து தரை இறங்கினோம் நாங்கள். இதழோரம் தேங்கிய சிறு புன்னகையுடன் என்னைப் பார்த்தாள் ஆராதனா.
கண்டிப்பாக இது சம்பிரதாயத்துக்காக கொடுத்த முத்தம் இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது. இருந்தாலுமே கேட்டேன்
“உன்னோட டிரெடிஷன் முடிஞ்சதா? நான் கிளம்பட்டுமா?”
அடுத்த நொடி திரும்பவும் என்னைப் பற்றி இழுத்தவள் மீண்டும் எனது இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
அடுத்து நாங்கள் விலகி நின்ற நான்காம் நொடியில் அர்ஜுன் எட்வர்ட் என இருவரது கார்களும் அங்கே வந்து நின்றன.
அங்கே எதுவுமே நடவாதது போலே நடந்து சென்று எட்வர்டின் காரில் ஏறிப் பறந்து இருந்தாள் ஆராதனா.
error: Content is protected !!