Skip to content
Post Views: 1,284
எபிலாக் 1
அதே பீச்!
அலைகளில் கால் பதித்தபடி கடலைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் ஆராதனா.
ஒரு வருடம் முன் இதே நாளில் தான் விக்ரமோடு அவளது நிச்சயதார்த்தம் நடந்தது, அன்றிரவு இதே இடத்தில் தான் அதை இருவரும் முறித்தும் கொண்டனர்.
Advertisement
அன்று அவன் யாசித்ததை மறுத்தாள் அவள். இன்று அவளே எல்லா ஏற்பாடுகளும் செய்து கோர்ட்க்குச் செல்ல வேண்டும் என்று அவனை அழைத்துச் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டாள்.
“நீங்க என்னிடம் முதன் முதலாக கேட்டது” ரிஜிஸ்டரில் சைன் செய்யும் போது அவள் சொல்ல உருகித் தான் போனான் விக்ரம்.
இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
Advertisement
விக்ரம் தவிர எல்லோரிடமும் கலந்து பேசிவிட்டு பதிவு திருமணத்திற்கு ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தாள் ஆராதனா. மறுவாரம் முறைப்படி திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர்.
Advertisement
மாலை அவனை அழைத்துக் கொண்டு அவளே டிரைவ் செய்து இங்கே வந்திருந்தாள்.
அந்த பீச் ஹவுஸ்.
விக்ரம் அவளுக்காக வாங்கிய மாளிகை.
Advertisement
விக்ரம் முக்கியமான போன் கால் பேசிக் கொண்டிருக்க இவள் அலைகளிடம் அளவளாவ வந்துவிட்டிருந்தாள்.
‘நீ மட்டும் வந்திருக்கிறாய். எங்கே உன்னவனைக் காணவில்லை’ அவள் பாதங்களை தட்டி தட்டி கேட்டுச் சென்றன அலைகள்.
ஊன்றுகோலை மணலில் பதித்து மெதுவாக அவளை நோக்கி வந்தான் விக்ரம்.
அடர்நீல நிறத்தில் வெண்ணிற நட்சத்திரங்கள் பதித்த புடவையை அணிந்திருந்தாள் அவள். அது அவனுக்குப் பிடித்தமான புடவை. முதன்முதலில் அவர்கள் சந்தித்த போது அவள் அணிந்திருந்த புடவை.
‘என்ன அழகு’ அவளைப் போலவே அழகாய் உடுத்திக் கொள்ள எனக்கும் ஆசையாக இருக்கிறதே என்ற வானம் அதே போல அடர்நீல பட்டை உடுத்திக் கொண்டு வர நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக அதில் பூத்தன.
“பின்னாடி திரும்பிப் பாரேன், உன்னையே வைத்தக் கண் வாங்காமல் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்று அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து சேதி சொல்ல முயன்றது காற்று.
அவளோ கடலோடு ஓர் மோன உரையாடலில் இருந்தாள் போலும்.
எப்போதும் எல்லாவற்றையும் வெற்றிக் கொண்டே பழக்கப்பட்டவன்; விட்டுக் கொடுப்பது என்றால் என்ன என்று அகராதி புரட்டி அதில் இல்லை என்பவன் தான் விக்ரம்.
ஆனால் அவளுக்காக விட்டுக் கொடுத்தான், அவனது ஈகோ! பிடிவாதம்! அனைத்தையும்.
இதோ அவளது பாதங்களை கொஞ்சும் உரிமையை அலைகளிடம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
விட்டுக் கொடுப்பதில் இத்தனை இன்பம் இருக்கக் கூடுமோ! சிலிர்த்தான்! .அந்த உணர்வை மிகவும் ரசித்தான். அதில் திளைத்தான்.
“உனக்காக ஒருவன் கசிந்துருகிக் கொண்டிருக்கிறான். பாரேன்” காற்று இப்போது அவள் முடியைப் பிடித்து இழுத்தது.
‘காற்றே விட்டுவிடேன், அவளுக்கு வலிக்கப் போகிறது’ அடுத்தவரின் வலிகள் பற்றி ஒரு காலத்தில் கவலை கொள்ளாதவன் அவன். இப்போது அவளுக்கு வலிக்குமே என்று தவித்தான்.
மேகத்திற்குள் இருந்து ரகசியமாய் எட்டிப் பார்த்த நிலவு. க்ரௌசிங் டைகர் என ஊரே பார்த்து பயம் கொள்பவனை பரிகாசம் செய்தது..
ஊருக்குத் தான் க்ரௌசிங் டைகர். வான் நிலவே! உனக்கும் தான். என் வெண்ணிலவு மட்டும் விதிவிலக்கு என்று நிலவைப் பார்த்து சொல்லாமல் சொன்னவனை முறைத்துக் கொண்டு மேகத்திற்குள் மீண்டும் ஒளிந்து கொண்டது வெண்ணிலவு.
ஒரு வருடத்திற்கு முன் அவன் சொன்னான் அவளிடம். அன்று அவன் சொன்னதை அவள் நம்பவில்லை, அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம், அவனுமே வேண்டுமென்று நிகழ்த்தியவை அல்ல.
மனதிற்குள்ளே பல நூறு முறை அவளிடம் சொன்னவன் இன்று மீண்டும் அவள் செவிகளில் சொல்லிவிடத் தான் துடித்துக் கொண்டிருக்கிறான்.
அவளை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தான் விக்ரம்.
அலைகள் அவனைப் போ போ என்று விரட்டவில்லை. என் காதலியை நீ எப்படி தட்டிப் பறித்துக் கொண்டு போகலாம் என்று கடல் அவன் மீது கோபம் கொண்டு பொங்கவில்லை.
அவள் மீதான அவனது உண்மையான ஆழமான நேசத்தைக் கண்டு ஆனந்தமே கொண்டது. தனது அலைக்கரங்களால் அவனையும் பற்றிக் கொண்டது கடல்.
மிக நெருக்கமாக அவளின் பின்னால் நின்று கொண்டிருந்தான் விக்ரம். ஆனால் அவள் அதை உணர்ந்ததைப் போலத் தெரியவில்லை.
ஆராதனா!
இவள் பெயரும் தான் இவளுக்கு எத்தனை பொருத்தமாக இருக்கிறது. என் மனம் நித்தம் ஆராதிக்கும் தேவியல்லவா இவள்.
அவன் மனதில் உதிர்த்த அவள் பெயரை இதழ்களும் ஸ்பரிசித்து விட அவளது செவிமடல்கள் அகலமாக திறந்து அவள் மனதிற்குள் செல்ல வழிவிட்டது.
அவள் சட்டென திரும்பவும் அவன் மீது மோதிக் கொண்டாள். வலது கையால் ஊன்றுகோலை நன்றாக பதித்துக் கொண்டவன் இடக்கரத்தால் அவளது இடையை அணைத்துக் கொள்ள சிறு புன்னகையுடன் அவன் மார்பில் கரம் பதித்தாள்.
“ஆரா, உன் அம்மா என்ன சொன்னாங்க” மெல்லக் கேட்டான்.
“என்ன சொன்னாங்க” அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் அணைப்பில் நின்று கொண்டே கேட்டாள்.
“முறைப்படி மேரேஜ் நெக்ஸ்ட் வீக் தான். இப்படி கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்” பரிகாசம் வழிந்தது விக்ரம் குரலில்.
“ம்ம்ம் என்ன ஆகும்” இதழ்களில் மென்னகையோடு எதிர்கேள்வி கேட்டாள்.
“எனக்குத் தெரியலையே! என் லீகல் அட்வைசரைத் தான் கேட்க வேண்டும்” என்றான் மந்தகாசப் புன்னகையோடு.
அவன் முகத்தையே ஒரு நொடி பார்த்திருந்தாள். அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் அவனது விழிகளை ஊடுருவியது அவளது கருவிழிகள். அவளது விழிகள் அவனிடம் எதையோ யாசித்தன.
‘சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ’
அவளது விழிகளின் யாசித்தலுக்கு பதில் பாடிக் கொண்டிருந்தான். அந்த பதிலில் மென் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது அவள் இதழ்களில். ஓர் ஆச்சரியம் குடி கொண்டது அவள் விழிகளில்.
“விக்ரம்” அவனை அழைத்தாள். அவனை பெயர் சொல்லி அழைப்பது ஒன்றும் முதல் முறையில்லை.
ஆனால் ஏனோ இக்கணம் அவள் அழைப்பில் கரைந்து போனான்.
“இவ்வளவு அழகா பாடுவீங்களா” ஆச்சரியப் புன்னகை பூத்த அவள் வதனத்தை அவளது முடிக்கற்றைகள் அவன் பார்வையில் இருந்து மறைக்க முயல அதை விலக்கி விட அவன் மனம் பரபரத்தது.
அவன் இடக்கரத்தை அவள் இடை பசை போட்டு ஒட்டிக் கொண்டுவிட்டதோ. அவனால் விலக்கவே முடியவில்லை. ஊன்றுகோலை பற்றிய வலக்கரத்தில் அவன் பார்வை பதியும் முன் அவளின் மனதில் எழுந்த நேச அலைகள் ஓடி வந்து முடிகளை விலக்கி விட்டன.
அவளே கரம் கொண்டு முகம் மறைத்த குழல்களை விலக்கி அவனுக்கு முகம் காட்டி நிற்க அவனால் அதற்கு மேல் நொடி கூட காத்திருக்க பொறுமையில்லை.
‘சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்’
அப்பாடா! ஒரு வழியாக சொல்லிவிட்டான்! காதலைச் சொல்லிவிட்டான்.
அன்றும் அவன் காதல் சொன்னான். அவள் நம்ப மறுத்தாள். அவன் காதலை அவளுக்கு உணர்த்தினான். சொல்லில் இல்லாமல் செயலில் நிரூபித்தான்.
“என்னவனே! இது பார் கன்னத்து முத்தமொன்று” எம்பி அவனது கன்னத்தில் இதழ் பதித்தாள்.
ஒரு வருட காத்திருப்பு!
வானமாகிய அவனை தழுவி நின்றாள் அவனின் வெண்ணிலா.
error: Content is protected !!