Skip to content
Post Views: 1,439
ஆராதனா வாசுதேவன்
வழக்கமான திங்கட்கிழமையின் பரபரப்பு இன்றி நிதானமாகப் போய் கொண்டிருந்தது இன்றைய தினம்.
ஷர்மா முதல் பாதி விடுப்பில் இருப்பதால் மீட்டிங்க்ஸ் எல்லாம் மதியத்திற்கு மேல் தான்.
மேல் தளத்தில் இருக்கும் ஓபன் ஃபுட் கோர்ட்டில் போஹாவையும் காபியையும் ஆர்டர் செய்தபடியே மும்பை டு சென்னை ஃப்ளைட்ஸ் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தேன்.
Advertisement
அடுத்த அசைன்ட்மன்ட் தொடங்குவதற்குள் வீட்டிற்குப் போய்வர வேண்டும். அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு குடிவந்த புதிதில் இரண்டே தினங்கள் எட்டிப் பார்த்து விட்டு வந்ததோடு சரி.
எனது பத்து வயது வரை சென்னையில் தான் குடியிருந்தோம். அப்பா வங்கியில் வேலை செய்ததால் குவார்ட்டர்ஸில் இருந்தோம். அம்மாவும் அதே வங்கியில் தான் வேலை பார்த்து வந்தார்.
அப்பாவிற்குப் பதவி உயர்வு கூடவே மாற்றலும் வர அம்மாவிற்கு அதே கிளையில் இடமாற்றம் கிடைக்கவில்லை. எனவே வேலையை ரிசைன் செய்து விட்டிருந்தார்.
Advertisement
அரசாங்க வங்கி வேலையை இமை மூடும் நேரத்தில் கொஞ்சம் கூட ஆலோசனை செய்யாமல் விட்டு விட்டதை அவர்கள் நட்பு வட்டாரத்தில் முட்டாள்தனம் என்று கூறினர்.
Advertisement
ஆனால் அம்மா அதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
“படித்தப் படிப்பும், வளர்த்துக் கொண்ட திறமையும் எங்கேயும் போய்விடாது. இந்த வேலை இல்லைனா இன்னொன்னு” என்று மிகச் சாதாரணமாக சொன்னது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.
இரண்டே வருடங்களில் தனியார் வங்கி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிட்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அப்பாவிற்கு இடமாற்றம் வரும் போதெல்லாம் அதே ஊரின் தனியார் வங்கி கிளைக்கு அம்மாவும் மாற்றல் வாங்கிவிடுவார்.
Advertisement
பிள்ளை பிராயம் முழுவதும் பல்வேறு ஊர்களில் வங்கிக் குடியிருப்புகளில் வாசம். கல்லூரி சேர்ந்த பிறகு ஹாஸ்டல் வாசம். இங்கே சோனாவின் வீட்டில் அவளது ஹவுஸ்மேட்டாக.
இத்தனை வருடங்களில் சொந்த வீடு இப்போது தான் அமைந்திருக்கிறது. சில சமயம் சென்னைக்கே போய்விடலாமா என்று கூடத் தோன்றும்.
ஃப்ரீலான்ஸ் லாயராக வேலை செய்து கொண்டே சட்ட ஆலோசனை மற்றும் உதவி தேவைப்படும் பாமர மக்களுக்கு இலவசமாக அதை வழங்க வேண்டும் என்பதே எனது கரீயர் கோல்.
ஆனால் அதற்கு நான் இன்னும் தயாரா என்று எனக்கே தெரியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன் ஜூனியர் லாயராகத் தான் இங்கே பணியில் சேர்ந்தேன். இத்தனை குறைவான காலத்தில் சீனியர் லீகல் அட்வைசராக உயர்வு பெற்றது ஷர்மாவின் பரிந்துரையால் தான்.
“உன் திறமை பட்டு. கார்பரேட் உலகத்தில் திறமை இருந்தால் நாம் மடமடவென்று முன்னேறிக் கொண்டே போகலாம். என்னையும் உங்க அப்பவையுமே எடுத்துக்கோ” என்று அம்மா சொல்லும் போது அப்பாவோ வேறு கோணத்தில் அணுகுவார்.
ஏற்கனவே வங்கியில் வேலை செய்த அனுபவம் இருந்த போதும் ஜூனியர் லெவலில் தான் தனியார் வங்கியில் சேர்ந்தார் அம்மா. ஆனால் பதினைந்து வருடங்களில் அப்பாவை விட உயர்ந்த பதவில் அதிக சம்பளத்துடன் ஓய்வு பெற்றார்.
“ஆனால் என்னை விட உனக்கு எவ்வளவு ஸ்ட்ரஸ் இருந்தது சுமி” என்று அப்பா சொல்லும் போது அம்மா ஒத்துக் கொள்வார்.
“பட்டு சமத்துப் பொண்ணா இருந்தா. நீங்க சப்போர்டிவா இருந்தீங்க. வேலையில் எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருந்தாலும் வீட்டிற்கு வந்ததும் ஸ்ட்ரெஸ் இருந்த இடமே தெரியாம காணாமல் போய்விடும். அந்த வகையில் நான் ரொம்பவும் கொடுத்து வைத்தவள்” என்று அம்மா சொல்லும் போது அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமையும் ஒளிரும்.
அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நிறைய விவாதங்கள் நடக்கும். அதில் என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். அது தான் ஹைலைட்.
“நீ சொல்லு பட்டு. உனக்கு என்ன தோணுது” என்று என்னுடைய கருத்தை கேட்பதோடு மட்டும் அல்லாமல் நான் சொல்லும் தீர்வை ஏற்கவும் செய்வார்கள்.
சென்னையில் செட்டிலான சில மாதங்களில் பயங்கர விவாதம். அதுவும் என்னைப் பற்றியது.
“மேட்ரிமோனில பதிவு செய்யலாம் என்று நான் சொல்றேன். அப்பா வேண்டாம்ன்னு ஒற்றைக் காலில் நிற்கிறார். ஃப்ரண்ட்ஸ் தெரிஞ்சவங்க இப்படி சொல்லி வைப்பதாம். எந்த காலத்தில் இருக்கார் பட்டு” இது அம்மா.
“வெப்சைட்ல எல்லாம் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கும்ன்னு தெரியாது தானே பட்டு. எனக்கு என்னவோ அது சரியாப் படலை” அப்பா அவர் கருத்தில் நின்றார்.
“ஜெர்மன் டீலில் நான் பிஸியாக இருக்கேன். இதில் என்னோட கருத்தை கேட்டுட்டு வராதீங்க. டீல் முடிஞ்சதும் ஊருக்கு வரேன். அப்போ பேசிக்கலாம்” என்று அப்போதைக்கு ஒத்தி வைத்தேன்.
சோனாவிடம் வாய் தவறி இதை சொல்லிவிட்டேன். அவ்வளவு தான் பிடித்துக் கொண்டாள்.
“இதற்கு தான் சொல்லிக் கொண்டே இருக்கேன் தட் யூ ஷூட் டேட் என்று. நீ கேட்டால் தானே. கிருஷ்ணா தான் உனக்கு ஒரு அர்ஜூனை செட் அப் செய்யணும்” என்று சொல்லவும் எனக்கு அவள் சொன்னது புரிய சில வினாடிகள் பிடித்தது.
“அர்ஜூனுக்குத் தான் சுபத்ராவை செட் பண்ணி விட்டாரே. ஆராதனாவுக்கு வேறு யாரையாவது தான் அவர் தேட வேண்டும்” என்றேன்.
நல்ல வேளையாக அலிபாகில் இந்தப் பேச்சை எடுக்காமல் இருந்தாள் சோனா.
ஷ்யாம் லண்டன் சென்றிருந்த நிலையில் நேற்று இரவு திரும்பியிருந்தான். அவனை வரவேற்க சோனா ஏர்போர்ட் செல்ல வேண்டியிருந்ததால் மதியமே கிளம்பிவிட்டோம்.
அங்கிருந்து சோனா அவர்கள் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் கழித்து வருவதாக சொல்லியிருந்தாள்.
“மாம் வரச் சொல்லி மெசேஜ் பண்ணாங்க. இரண்டு நாட்கள் போல அங்கே இருப்பேன் என்று நினைக்கிறேன். நீ எப்போ சென்னை போகப் போற” நேற்று மாலை திரும்பி வரும் போது என்னிடம் கேட்டாள்.
“ஷர்மா கிட்ட லீவ் சொல்லிட்டு உடனே கிளம்பலாம் என்று இருக்கேன். மே பீ டியூஸ்டே” என்று நான் சொல்லவும்
“அப்போ நான் இங்கே இருந்து என்ன செய்வது. ஐ வில் ஸ்டே தேர்” என்றவள் “எனிவேஸ் நீ முடிவு பண்ணு. அப்புறம் யோசிக்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
போஹாவை உண்டு முடித்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த போது எனது மொபைல் ஒலிக்க காலர் ஐடி ஷ்யாம் என்று காட்டியது.
“ஹலோ ஷ்யாம். எப்படி இருக்க. ஹவ் வாஸ் லண்டன்” என்றேன் உற்சாகமாக.
ஷ்யாம் சோனா இருவரும் ஒரே சர்க்கிளில் வளர்ந்தவர்கள். மூன்று வருடங்களுக்கு முன் ஒரு விளம்பர ஷூட்டிற்காக சோனா கோவா சென்றிருந்தாள். ஷூட்டின் போது சோனாவிற்கும் விளம்பர டைரக்டருக்கும் பிரச்சனை ஏற்பட அது பிரஸ் வரை போகவிருந்த சமயத்தில் சோனாவின் அப்பா ஷ்யாமின் குடும்பத்தை அணுக ஷ்யாம் அதை சால்வ் செய்திருக்கிறான்.
ஷ்யாமின் குடும்பம் பத்திரிக்கை நிறுவனத்தை நடத்தி வந்தனர். விளையாட்டு, பிஸ்னஸ், ஃபேஷன் என பல மேகசின்ஸ் அவர்கள் நிறுவனத்தில் இருந்து வெளிவருபவை.
காலத்திற்கு ஏற்ப இ மேகசினை ஷ்யாம் தான் முன்னெடுத்து செயல்படுத்தி வந்தான்.
அந்த சம்பவத்தின் போது சோனாவிற்கும் ஷ்யாமிற்கும் நேரடி பரிச்சயம் ஏற்பட நட்பில் தொடங்கி காதலில் விழுந்தனர் இருவரும்.
அவர்களுடனே இந்த மூன்று வருடங்களும் பயணித்ததால் ஷ்யாம் எனக்கும் நல்ல நண்பன் ஆகியிருந்தான்.
ஒரு முறை அம்மா அப்பா இங்கே வந்திருந்த போது லஞ்சுக்கு அவனை அழைத்திருந்தோம்.
அம்மா அப்பா இருவருக்குமே அவனை ரொம்பவும் பிடித்துப் போனது.
“பண்பும், மரியாதையும் கொண்ட நல்ல பையனா இருக்கான்” என்று என் அம்மா சர்டிபிகேட் கொடுத்து விட சோனாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.
சோனாவின் வீட்டிலும் ஷ்யாமின் வீட்டிலும் இவர்கள் காதல் தெரிந்தே இருந்தது. இரு குடும்பங்களும் நட்பு வட்டத்தில் இருந்ததால் இவர்களின் திருமணத்திற்கு வீட்டினர் தரப்பில் சம்மதமே.
சோனா தான் அவளது clothing brand நல்ல பாப்புலராகும் வரை கல்யாணப் பேச்சிற்குத் தடா போட்டிருக்கிறாள்.
“லண்டன் பிஸ்னஸ் சம்பந்தமான பயணம். இட் வாஸ் ஒகே. ஆரா ஆர் யூ ஃப்ரீ டுடே.” என்று கேட்டான்.
“இன்னிக்கு வெட்டியாக தான் இருக்கேன். மதியம் ஒரு மீட்டிங் இருக்கு. அப்புறம் ஊருக்குப் போக லீவ் கேட்கணும். அவ்வளவு தான். ஏன் கேட்கிறாய்” என்றேன்.
“ஐ நீட் யுவர் ஹெல்ப். கேன் யூ கம் டு மை ஆஃபீஸ். சோனாவிடம் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்” என்றான் கெஞ்சுதலாக.
ப்ரொபோஸ் ஏதும் செய்யப் போகிறானா. அதற்குத் தான் என்னிடம் உதவி கேட்கிறானா. ஆனால் ஏன் ஆஃபீசிற்கு வரச் சொல்கிறான். ஏதேனும் கஃபேயில் மீட் செய்யத் தானே கேட்டிருப்பான்.
“சியூர். மூன்று மணி போல வரவா. இஸ் தட் ஓகே”
“ஓகே. தாங்க்ஸ் ஆரா” என்றான்.
“ஹே லண்டனில் இருந்து தாங்க்ஸ் எல்லாம் சொல்லக் கற்று கொண்டு வந்திருக்க. என்னதிது” என்றேன் அதட்டலாக.
“நீ இங்கே வரும் போது எதற்காக தாங்க்ஸ் சொன்னேன் என்று நீயாக புரிந்து கொள்வாய்” என்றான்.
என்னடா இது இப்படி எல்லாம் சஸ்பென்ஸ் வைக்கிறான்.
“ஒகே சி யூ தென்” என்று நான் ஃபோனை வைக்கவும் என் செக்ரட்ரி கூப்பிடவும் சரியாக இருந்தது.
“மேம் ஷர்மா சர் வாண்ட்ஸ் டு சி யூ” என்றாள்.
அதற்குள் வந்துவிட்டாரா என்று நினைத்துக் கொண்டே அவரது அறையை நோக்கிச் சென்றேன்.
குட் மார்னிங், நல விசாரிப்பு எல்லாம் முடிந்த பிறகு அவர் பேசும் முன் நான் முந்திக் கொண்டேன்.
“நான் சென்னை போய் வரலாம் என்றிருக்கேன். இந்த வாரம் முழுவதும் லீவ் வேண்டும்” என்றேன்.
“ஓஹ். இந்த வாரம் என்றால் எப்போது போகவிருக்கிறாய்” என்றார்.
“நீங்க லீவ் சாங்க்ஷன் செய்தால் நாளைக்கே. வீக் டே சோ டிக்கெட்ஸ் கிடைத்துவிடும்”
“ஒகே. நோ ப்ராப்ளம். யூ நீட் எ ப்ரேக்”
இவ்வளவு சுலபமாக சரி என்றுவிட்டார். அதுவும் எனக்கு ப்ரேக் வேண்டுமாமே. எதற்காம்.
“மில்லர் லண்டனில் இருந்து கால் செய்தார். உன்னைத் தான் மிகவும் புகழ்ந்து பேசினார். நெக்ஸ்ட் டேக் ஓவர் தில்லி மற்றும் அகமதாபாத்தில் ப்ளான் செய்கிறார்களாம். லண்டனில் வேறொரு பிஸ்னஸ் மீட்டில் இருப்பதால் இந்த வார இறுதிக்குள் டீடைல்ஸ் ஷேர் செய்வதாக சொன்னார்”
அதாவது இன்னும் ஒரு வருடத்திற்கு லீவ் எல்லாம் கேட்காதே. இப்போதே போய் வா என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்.
“ஒரே நேரத்தில் இரண்டு டேக் ஓவர்ஸ். இட் வில் பி ஹார்ட். வெளியூர் வேறு” என்றேன்.
“டோன்ட் வொரி. உனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்ய நானிருக்கேன். லால் கூடவும் பேசினேன். வி வில் ஹையர் மோர் ஸ்டாஃப்”
“தட்ஸ் கிரேட். அண்ட் பை தி வே. கொஞ்சம் வேலை இருக்கு, இன்று மதியத்தில் இருந்தே லீவ் எடுத்துக் கொள்ளவா” நான் கேட்கவும் மறுக்காமல் சம்மதம் சொன்னார்.
மீட்டிங்கில் பெரிதாக எதுவும் விவாதிக்கவில்லை. எல்லோரும் நன்றாக பணியாற்றினீர்கள். அடுத்த அசைன்ட்மன்ட்டிற்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். அப்படி இப்படி என்று போனது.
கரணிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஷ்யாமின் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டேன்.
உயரமான அடுக்குமாடி கட்டிடத்தின் இருபத்து மூன்றாவது தளம் மொத்தமும் ஷ்யாமின் மேகஸின் அலுவலகம் தான்.
ரிசப்ஷனில் என் பெயர் சொல்லவும் அங்கிருந்த பெண் என்னை மேலும் கீழும் ஒரு முறை பார்த்தாள். “நீங்கள்… அட்வோகேட் ஆராதனா?” என்று கேள்வி நிறைந்த தொனியில் கேட்கவும் செய்தாள்.
“அப்படித் தான் நான் சொன்னதாக நியாபகம்” என்றேன் சிறு கேலி இழையோட.
“ஐ வில் கால் சர் டு கன்ஃபர்ம்” என்றாள்.
“ப்ளீஸ் டூ இட்” என் இதழ்களில் சிரிப்பு இழையோடியதைக் கண்டு இன்னும் சந்தேகமாகப் பார்த்தாள்.
“யூ மே ப்ளீஸ் கோ” என்றவள் ஷ்யாமின் கேபினுக்கு வழியையும் சொல்ல நன்றி சொல்லிவிட்டு ஷ்யாமின் அறையை நோக்கி நடந்தேன்.
அவன் அறையின் வாசலில் அமர்ந்திருந்த அவனது செக்ரட்டரி என்னைப் பார்த்ததும் எழுந்து ஷ்யாமின் அறைக் கதவை திறந்து விட்டாள்.
நான் உள்ளே நுழைந்ததும் ஷ்யாம் எழுந்து வந்து என்னை வரவேற்று பக்கவாட்டில் இருந்த சோபாவில் அமரச் சொன்னான்.
“லஞ்ச் சாப்பிட்டு இருக்க மாட்டே தானே. என்ன வேண்டும். ஆர்டர் செய்கிறேன்” என்று அவன் கேட்கவும் “உனக்கு என்ன சொல்கிறாயோ அதையே சொல்” என்றேன்.
இன்டர்காமில் ஆர்டர் செய்ய அவன் டேபிள் அருகில் செல்லவும் எனக்கு முன்னிருந்த டீபாயில் கிடந்த பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆணும் பெண்ணுமாக இரு டென்னிஸ் வீரர்களின் ஃபோட்டோ ஸ்போர்ட்ஸ் வீக்லியின் அட்டைப்படத்தில் இருக்க அம்மா சொன்ன அந்த பையனும் பொண்ணுமா இருக்குமோ என்று எனக்கு சந்தேகம்.
“ஷ்யாம் இந்த ஃபோட்டோவில் இருப்பது யார்” என்றேன்.
“ஆரா” கை கூப்பி என்னை கும்பிட்டவன் “தயவு செய்து என் ஃப்ரண்ட் நீ என்று வெளியில் சொல்லிவிடாதே” என்றான் சிரிப்புடன்.
“ஹே. சொல்லு ஷ்யாம்”
“இது அர்ஜூன் ஸ்வாதி. வளர்ந்து வரும் டென்னிஸ் ஸ்டார்ஸ். இன்டர்நேஷனல் லெவலில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்காங்க” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்
“இவன் தான் அந்த அர்ஜூனா“ என்றேன்.
“எந்த அர்ஜூன். டூ யூ நோ ஹிம்” ஷ்யாம் கேட்க
“தெரியும் ஆனா தெரியாது“ என்று நான் சொல்லவும் ஷ்யாம் தலை சுற்றுகிறது என்பது போல பாவனை செய்தான்.
“அவனுக்கு ஒரு ஆறேழு வயசிருக்கும் போது நான் அவனைப் பார்த்திருப்பேனா இருக்கும். சென்னையில் நான் இருந்த போது ஒரே ஏரியாவைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்” நான் சொல்லவும் அவன் முகம் தெளிந்தது.
“அம்மா இரண்டு நாள் முன் தான் அவனைப் பற்றிப் பேசினாங்க. வி ஹாவ் எ காமன் ஃப்ரண்ட். அது தவிர அவனை எனக்கு சுத்தமா தெரியாது” என்று விளக்கமாகக் கூறினேன்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாம் ஆர்டர் செய்திருந்த உணவை பணியாள் ஒருவர் மேஜை மீது வைத்து விட்டுச் சென்றார்.
“சோ என்னை எதற்கு சோனாவிற்குத் தெரியாமல் ரகசியமாக இங்கே வரச் சொல்லியிருக்க. நாளை நான் ஊருக்குப் போவதால் நீ தப்பிச்ச. யூ நோ என்னால் அவளிடம் சொல்லாமல் இருக்க முடியாது”
“கண்டிப்பா அவளிடம் நீ சொல்ல மாட்டாய்” மிகவும் நம்பிக்கையோடு சொன்னவனை கேள்வியாகப் பார்த்தேன்.
“பிகாஸ் எனக்கு அட்வோகேட் ஆராதனாவின் உதவி தேவை” என்றவன்
“உனக்குத் தெரியும் ஆரா. இப்போ மேகஸின் படிக்கும் ரீடர்ஸ் கம்மியாகிக் கொண்டே வராங்க. இட்ஸ் விஷுவல் இரா. எனக்கு ஒரு சேனல் ஸ்டார்ட் செய்யும் எண்ணம் நீண்ட நாட்களாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் சேனலில் இருந்து ஸ்டார்ட் செய்யலாம் என்று ஐடியா. பட் டாட் சப்போர்ட் செய்ய மாட்டேன் என்கிறார்” இதை அவனது குடும்ப தொழிலாக இல்லாமல் சொந்த முயற்சியாக செய்ய எண்ணம் கொண்டுள்ளதாகச் சொன்னான்.
“நான் இன்வெஸ்ட்டர்களைத் தேடிக் கொண்டிருந்த போது தானாகவே ஒருவர் இன்டரஸ்ட் காட்டியிருக்கார். உனக்கு அவரைக் கண்டிப்பாக தெரிந்திருக்கும்” என்று புதிர் போட்டான்.
“நான் இன்வெஸ்டர் தேடுவது கொஞ்சம் க்ளோஸ் பிஸ்னஸ் சர்கிளில் தெரியும். அவராக இரண்டு வாரத்திற்கு முன் அப்ரோச் செய்தார். இதில் இன்டரஸ்ட் இருக்கு. டீடைல்ஸ் எல்லாம் ஷேர் செய்யச் சொல்லவும் நானும் எல்லா விவரங்களும் என் லீகல் டீம் மூலமாக மெயில் செய்தேன்” என்றவன் அவன் மொபைலில் இருந்து எனக்கு ஒரு மெயில் ஃபார்வேட் செய்தான்.
“இரு சாப்பிட்டு முடிச்சிட்டு பார்க்கிறேன்” என்று நான் கூற அவன் தொடர்ந்தான்.
“அவங்க கிட்ட இருந்து வந்த பதில் மெயில். என்னோட லீகல் டீம் இந்த மெயில் பார்த்து ஒன்னும் பெருசா சொல்லலை. பட் எனக்கு என்னவோ சரியில்லை அப்படின்னு தோணிகிட்டே இருக்கு. டாட் பேச்சை மீறி இதை செய்வதால் எனக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கான்னு தெரியலை. நீ கொஞ்சம் பார்த்துச் சொன்னா நல்லா இருக்கும்”
“அது சரி. இதை சோனாவிடம் ஏன் சொல்லக் கூடாது என்று தான் எனக்குப் புரியல” என்று கேட்டேன்.
“என் அப்பாகிட்ட சொல்லி இன்வெஸ்ட் செய்யச் சொல்கிறேன் என்பாள். உனக்கு அவளைத் தெரியாதா”
“ம்ம்ம். அது செய்தாலும் செய்வா” என்று சொல்லிக் கொண்டே உணவை முடித்துக் கொண்டு எனது மொபலை எடுத்து ஷ்யாம் அனுப்பிய மெயிலை ஓபன் செய்தேன்.
“எனக்கு கண்டிப்பாக தெரிஞ்சவர்ன்னு சொன்னாய். யாரென்று சொல்லவே இல்லை இன்னும்” என்று கேட்டுக் கொண்டே மெயிலில் இருந்து டவுன்லோட் ஆகியிருந்த டாகுமன்ட்டை ஓபன் செய்தேன்.
‘விக்ரம்’ அந்தப் பெயரைப் பார்த்ததும் என் கண்கள் சற்றே விரிந்தன.
“தி க்ரோசிங் டைகர் விக்ரமா” என் குரலில் ஆர்வம் தானாகவே தொற்றிக் கொண்டது.
“அதே விக்ரம் தான். சொன்னேனே உனக்குத் தெரிந்திருக்கும் என்று” ஷ்யாம் சொல்லவும் அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தேன்.
“தெரியும் ஆனா தெரியாது கதை தான். விக்ரம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். லால் அண்ட் ஷர்மாவில் இருந்து கொண்டு விக்ரமைத் தெரியாமல் இருக்க முடியாது”
“நீ விக்ரமைப் பார்த்ததில்லையா” என்று கேட்டான் ஷ்யாம்.
“இல்லை ஷ்யாம். எனக்கு அவர் யார் என்றெல்லாம் தெரியாது. ஆஃபீஸ் காசிப்ஸ்ல பேர் அவ்வப்போது அடிபடும். க்ரோசிங் டைகர் என்று அவரைச் சொல்வதால் ஒரு கியூரியாசிட்டி. அண்ட் எங்க ஊராமே அவர்” பேசிக் கொண்டே டாகுமன்ட்டில் பார்வை பதித்தேன்.
“அர்ஜூனை தெரியும் என்றாய்” ஷ்யாம் கேட்கவும் இதென்ன சம்பந்தம் இல்லாமல் அர்ஜூனை பற்றிக் கேட்கிறான் !
“அர்ஜூனுக்கு இப்போ என்ன. எல்லோருமே சென்னை. சென்னை பெரிய சிட்டி ஷ்யாம்” என்று சொல்லவும் அவன் வேறேதும் பேசவில்லை.
“எனக்கு இதை டீடைலா பார்க்கணும் ஷ்யாம். நாளைக்கு ஊருக்குப் போறேன். வீட்டில் சும்மா தான் இருப்பேன். முடிந்தால் நாளைக்குள் சொல்கிறேன்” என்று நான் சொல்லவும் “டேக் யுவர் டைம் ஆரா, அடுத்த வாரம் தான் ஃபர்ஸ்ட் மீட்டிங்” என்றான்.
ஷ்யாமுடன் கொஞ்ச நேரம் மற்றக் கதைகள் பேசிவிட்டு விடைபெற்றேன்.
வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் போதே சோனா ஃபோன் செய்யவும் லீவ் கிடைத்து விட்டதை அவளிடம் தெரிவித்தேன்.
“நாளைக்கே கிளம்புகிறாயா. நான் இன்று வர முடியாது என்று நினைக்கிறேன். மம்மியோடு ஷாப்பிங்கில் இருக்கேன். ஃப்ளைட் எத்தனை மணிக்கு. ஏர்போர்ட் வருகிறேன்” என்றாள்.
“நான் இன்னும் டிக்கெட் புக் செய்யலை. வீட்டிற்குப் போய் தான் செய்யணும். மோஸ்ட்லி மார்னிங் கிளம்பிருவேன் சோனா. வீக் டே. டிராஃபிக் அதிகமா இருக்கும். உனக்கு அங்கிருந்து ஏர்போர்ட் தூரம். யூ கேரி ஆன். திரும்பி வரும் போது சொல்கிறேன். கம் டு பிக் மீ” நான் சொல்லவும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.
சென்னையில் இருந்து என்னென்ன வாங்கி வர வேண்டும் என்று அப்புறமாக லிஸ்ட் அனுப்புவதாக சொல்லி அவள் பேசி முடிக்கவும் நான் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.
காலை பத்து மணி ஃப்ளைட் புக் செய்து விட்டு பெட்டியை பேக் செய்து கொண்டே அம்மாவிற்குத் தகவல் சொன்னேன்.
தெரிந்தவர்கள் வீட்டு நலுங்கு ஃபங்ஷனில் இருக்கிறராம். அப்புறம் பேசுவதாக வைத்து விட்டார்.
காபி கலந்து கொண்டு வழக்கம் போல பால்கனி ஊஞ்சலில் வந்தமர்ந்தேன்.
காபியை சுவைத்துக் கொண்டே ஷ்யாம் அனுப்பிய மெயிலை ஓபன் செய்து பல பக்கங்கள் இருந்த டீடை (DEED ) வாசித்துக் கொண்டே வர என்னால் முதலில் நம்பவே முடியவில்லை. மீண்டும் ஒரு முறை நிதானமாகவே வாசித்தேன்.
“வாட் தி ஹெல். யாரிந்த விக்ரம். ஹவ் கேன் ஹி டூ திஸ் டு ஷ்யாம்” எனக்குள் சட்டென கோபம் எழுந்தது.
ஊஞ்சலை விட்டு எழுந்து பால்கனியில் நடந்து கொண்டே என்ன செய்வது என்ற யோசிக்க குழப்பமே மிஞ்சியது. எனது குழப்பம் விக்ரம் மேல் எழுந்த கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.
திடீரென வானம் சட சடவென பெரிய சொட்டுகளை தூவ சற்று நேரத்தில் சோவென மழை பொழிந்து சாரல் என்னை நன்றாக நனைத்து விட்டிருந்தது.
ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானித்தேன்.
“க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி ப்ரம்ஷாத் புத்தினாஷோ புத்திநாஷாத் ப்ரணஷ்யதி||
(பகவத் கீதை 2:63)
{கோபம் பகுத்தறிவின் மேகமூட்டத்திற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக நினைவுத் திறன் குழப்பமடைகிறது. நினைவாற்றல் குழப்பமடையும் போது, புத்தி அழிந்துவிடும்; மற்றும் புத்தி அழிந்தால், ஒருவன் பாழாகிறான்}
முகம் தெரியாத ஒருவன் மீது எப்படி சட்டென்று கோபப்பட்டு விட்டேன். என் தவறை உணர்த்துவதற்குத் தான் கண்ணன் மழையை அனுப்பி வைத்திருக்கிறான்.
“தேங்க் யூ தேங்க் யூ சோ மச் மை டியர் அண்ணா!
error: Content is protected !!