Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 1

அத்தியாயம் – 1

“சித்தா…என்ன எங்கிட்ட எதுவும் பேசாம யோச்சிட்டே வர ?”, கேட்டது சிந்து என்கிற ஏழு வயது சிந்துஜா. சித்தா என்பது அவள் சித்தப்பா விக்ரம். நம் கதையின் நாயகன்.

“ம்ம்…ஃபிகர கூட்டிட்டு மால்ல சுத்தற வயசில உன்ன கூட்டிட்டு கோயிலுக்கு போறனேன்னு, நானே நொந்து போயிருக்கேன் …நீ வேற …”

சிந்துவிற்கு தினமும் அவர்கள் வீட்டிற்கு நான்கு  தெரு தள்ளி இருக்கும் ஒரு அம்மன் கோவிலுக்கு செல்வது இஷ்டம். நெருக்கடியான  கிழக்கு தாம்பரம் ஏரியாவில்  உள்ளது  அவர்கள் வீடு. குழந்தை ஓடி ஆட வேண்டும் என்று அவள் பாட்டி, விக்ரமின் அம்மா பழகிவிட்டது , இன்றும் தொடர்கிறது.



Advertisement

இன்று சிந்துவின் தம்பி ஒரு வயதே நிரம்பிய சித்தார்த்துக்கு காய்ச்சல். அதனால் சிந்துவின் கோவில் விசிட் அவன் தலையில் கட்டிவிட்டார்.

‘ஃபிகர் எதுக்கு சித்தா  நீ கூட்டிட்டு போகணும்?”, ஆர்வமாய் வந்தது அடுத்த கேள்வி.

ஐயையோ, மைண்டு வாய்ஸ்ன்னு நெனச்சி, இவ கிட்ட உளறிட்டேனே ! சுதாரித்த விக்ரம், “இல்ல சிந்து குட்டி, உனக்கொரு சித்தி ரெடி பண்ணத்தான்..”, என்று சிரித்து வைத்தான்.

Advertisement

‘ஓ, சித்தி எப்படி, நயந்தாரா, தமன்னா மாதிரி இருக்கணுமா ?  சிந்து புருவம் ஏற்றி, இறக்கி சிரிப்புடன் கேட்டாள்.

Advertisement

‘ஏய், சில்வண்டு, அந்த காமெடி, நான் எற்கனவே பார்த்துட்டேன். நான் ஆமான்னு சொன்னா, நீ கண்ணாடி பாக்கறதில்லையா சித்தான்னு கேப்ப, அதான ?’ என்று அவள் தலையில், லேசாகக் கொட்டினான், பொய் கோபத்தோடு.

சித்தா, கோச்சிக்காதே… உனக்கு எப்டி இருக்கணும் பொண்ணு, சொல்லு…நான் பாக்கறேன்…அவள் தலை சாய்த்து கொஞ்சியதில் மயங்கி, அவளை அணைத்துக்கொண்டான்.

“அந்த மாதிரி ரொம்பல்லாம் அழகா வேண்டாம், ஏதோ எனக்கு பார்த்தா க்யுட்டா இருக்கணும். “, என்று முகம் தெரியாத ஒரு பெண்ணை சிலாகித்துக்கொண்டிருந்தான்.

Advertisement

“ஒரு கீர்த்தி சுரெஷ், ஸ்ரீ திவ்யா…? அப்படி ?”, விடாமல் கேட்டாள் சிந்து.

கலாய்க்கிறாளோ என்று ஒரு பார்வை பார்த்தான் விக்ரம். ஆர்வம் மட்டுமே இருக்க, மையமாய் தலையாட்டினான்.

ம்ம்…க்யுட்டா இருக்கணும் , வேற சித்தா ? என்று புருவம் உயர்த்தி தோரணையாக கேட்டாள்.

“அப்பறம்….ம்ம், முடி நீளமா இருக்கணும், உன்னுது மாதிரி..”, என்றான்.

“அப்ப, அவங்களுக்கு நீதான் ஹார் ட்ரையர் போட்டு விடணும், அப்பா எனக்கு போடற மாதிரி…ஓகே வா ? “

ஒரு நிமிடம் ஜெர்க்காகி, யோசித்து, பத்து செகண்டில், ஒரு ரொமான்ஸ் சீன் ஃப்ளாஷ் அடிக்க, “ அதவிட வேற என்ன வேலை குட்டி, நானே போடுறனே..” என்று பெரிதாய் பல்லைக் காட்டினான்.

இதற்குள், கோவில் இருக்கும் தெருவிற்குள் நுழைந்திருந்தனர்.

“அவ்ளொதானா சித்தா ?”

க்ளெவெரா இருக்கணும் செல்லம், அது ரொம்ப முக்கியம் என்றான் சீரியசாக, வரப்போகும் ஆப்பு தெரியாமல்.

செருப்பை விட்டுவிட்டு, இருவரும் உள்ளே நுழைந்தனர்.

கோவில் சிறிதாக இருந்தாலும், சுற்றி வரும் ப்ரஹாரம் விசாலமாக இருக்கும். அமர்வதற்கு ஏற்றவாறு, ஒரு மண்டபம். வீட்டில் விசாலமான இடம் இல்லாததால், இங்குதான் சிந்து நடை பழகியதும், ஓடி விளையாடியதும்.

பிள்ளையாரை பார்த்துவிட்டு, அம்மனை தரிசிக்க உள்ளே சென்றனர். இன்னும் ஆறு மணி ஆகவில்லை என்பதால், கூட்டம் இல்லை. அம்மன் அலங்காரம் பார்ப்பது சிந்துவிற்கு அலாதி பிரியம். அது தெரிந்து, அவளை கிட்டே தூக்கிச் சென்று காண்பித்தான்.

பூசாரியை காணவில்லை. நிதானமாய் அம்மனை பார்த்துக்கொண்டிருந்தாள் சிந்து. விக்ரமிற்கு அவ்வளவாய் பக்தியெல்லாம் இல்லை. ஆனால், இன்டெர்வியு  ரிசல்ட் நல்லதா வரணும் தாயே, என்று வேண்டுதல் வைத்தான் இன்று.

பூசாரி தாத்தா குரல் கேட்க, சிந்து திரும்பினாள். அவரோடு, இருவர் சன்னிதானம் வந்தனர்.

“சிந்துமா, வந்துடீங்களா?”, என்று விசாரித்த பூசாரியிடம், ஒரு சிரிப்பை உதிர்த்தவள் பார்வை, வந்த இருவர் மீதே இருந்தது.

சட்டென்று விக்ரம் தாடை பிடித்து திருப்பி, “இவங்க ஓகேவா சித்தா ?” என்று கேட்டாள்.

திரும்பியவன் பார்வையில் பட்டது, ஒரு இளம் பெண்ணும், அவள் தாய் போன்ற ஒரு பெண்மணியும்.

‘எதுக்கு சிந்து ?’, என்று புரியாமல் கேட்டான் விக்ரம். சித்தி பற்றி போட்ட லிஸ்டை சுத்தமாக மறந்திருந்தான்.

கையை நீட்டி, ‘சித்தியாக ஒரு பொண்ணு கேட்டியே , இவங்க ஓக்கேவா ? நீ கேட்ட லாங் ஹேர் கூட இருக்கு ’ என்று சத்தமாக கேட்டாள்.

“என்னாதூ……”, அந்தப் பெண்ணின் அம்மா கிட்டத்தட்ட கர்ஜித்தார்.

ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது விக்ரமிற்கு. அவன் பார்வை அவரிடம்தான் சென்றது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, கண்ணில் கோபக் கனல் தெறிக்க , குண்டாக, பெரிய பொட்டுடன் நிஜ சொர்ணாக்காவை போன்ற தோற்றத்தில், அவரைப் பார்த்த மாத்திரத்தில் வெலவெலத்துப் போனான்.

சிந்துவின் கையை மடக்கியவாரே, ‘ சாரிங்க, சாரிங்க..’ என்று, அவர் மேலும் பேசிட இடம் கொடாமல், நொடியில் இடத்தைக் காலி செய்தான்.

கோவில் மண்டபத்தில் இறக்கி விட்டு, ‘சிந்து, இப்பிடியா கேப்பே ?, அந்தம்மா விட்டா நம்மை அடிச்சிருப்பாங்க. தெரியாத யாரோ ஒரு பொண்ணை பார்த்து, எனக்கு ஓக்கேவான்னு கேக்கலாமா ? தப்பில்லையா ? என்னவோ நான் சொல்லிக்குடுத்துதான் நீ கேக்கறன்னு சொல்லுவாங்க’, என்று சிந்துவைக் காய்ந்தான்.

“நீ அந்த பொண்ணை பார்த்தியா சித்தா ?”

“நான் எங்க பார்த்தேன் ? அந்த குண்டம்மாவைத்தான் பார்த்தேன். அந்தம்மாவ பார்த்தாவே டெரர்ரா இருக்கு, அப்பறம் யாரு அவங்க பொண்ணை பார்ப்பா ?”

“நீ சித்தி எப்டி இருக்கணும்னுதான் சொன்ன, அவங்க அம்மா எப்டி இருக்கணும்னு எல்லாம் சொல்லவே இல்லை”, கோபமாக முறைத்தாள் சிந்து.

அவள் ஒரு விஷயத்தை பிடித்தால் லேசில் விடமாட்டாள். “தெரிஞ்சி இவகிட்ட போய் வாய லூசுல விட்டேனே !”, என்று மண்டை காய்ந்து போனான் விக்ரம்.

“லூசாடி நீ ?, இப்படி பேசறத அந்தம்மா கேட்டுச்சு, என்ன அடுத்த நிமிஷம் போலீஸ் ஸ்டெஷன்ல நிக்கவெச்சிரும். லத்தி அடியெல்லாம் நான் தாங்க மாட்டேன் தாயே, நீ கெளம்பு வீட்டுக்கு போவோம் “, என்று பாதி கெஞ்சலும் பாதி கோபமுமாக சொல்லிக்கொண்டிருந்தான்.

சன்னிதானத்தில், சிந்து பேசியதைக் கேட்ட பூசாரி சீனி ஐயர், “மாமி கோச்சிக்கப் படாது. குழந்தை, எதோ தெரியாம பேசிட்டா. அவா குடும்பம் எனக்கு நல்லா தெரியும். அந்த பிள்ளையாண்டானும், ரொம்ப நல்ல மாதிரி. வீட்ல அவனுக்கு சம்மந்தம் ஏதாவது பேசிருப்பாங்க, அதை கேட்டு சிந்து இப்படி சொல்லிருப்பா… நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ.. “, என்று சமாதானம் செய்து, அம்மனுக்கு ஆரத்தி காட்டினார்.

சற்று நேரத்தில், அவர்கள் வெளியே வருவதைப் பார்த்த, சிந்து, “ சித்தா, நான் போய் அவங்க கிட்ட, சாரி சொல்லிட்டு வந்துடறேன்.”, என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சிட்டாய் பறந்துவிட்டாள்.

“அச்சோ …போச்சு ! இன்னைக்கு என் உடம்பை பன்சராக்கி, டின்ச்சர் போடாம, விட மாட்டா போலவே….”, என்று புலம்பியவாறே, இப்போதும் அந்தப் பெண்ணை விடுத்து அவள் தாயைத்தான் பார்த்தான்.

அவர்களிடம் சென்ற சிந்து, ‘சாரி பாட்டி, சித்தி நான் அப்படி திடீர்னு கேட்டிருக்கக் கூடாது.’

“அவ உனக்கு சித்தி இல்ல, அக்கான்னு கூப்பிடு” , சூடாய் பதில் வந்தது அந்தம்மாவிடம்மிருந்து. சிந்து முகம் வாடியதைப் பார்த்து,

“மா, சின்ன குழந்தைமா, சாரிதான கேக்கறா…”, என்ற அந்த இளம் பெண், “ஹாய் சிந்து” என்றாள்.

“சாரிக்கா..”என்று பாவமாக மறுபடி கேட்டாள் சிந்து.

அவள் உயரத்திற்கு, சற்று இறங்கி, குழந்தையிடம் பேச்சு கொடுத்தாள். இதில் மலர்ந்து, உற்சாகமாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் சிந்து.

அவங்க கிட்ட இன்னும் என்ன பேசறா என்று யோசித்து, ‘சிந்து போலாம் வா,’ என்று குரல் கொடுத்து, அவர்கள் பக்கமாக சென்றான்.

‘ நீங்க என்னக்கா படிக்கரீங்க ?’ அவனை சட்டை செய்யாமல் அந்தப் பெண்ணிடம் கேட்டாள் சிந்து.

விக்ரம் வருவதைப் பார்த்து, நிமிர்ந்த அந்தப் பெண்ணும், “M.Sc Maths படிக்கறேன் சிந்து” என்று பதில் அளித்தாள்.

“ஓ,  மாத்ஸ்ஸா, அப்போ நீங்களும் க்ளவெர் தான் !” என்றவள்,  ஒரு  சிறு இடைவெளி விட்டு, “பாத்தா தெரியாது… ஆனா என் சித்தப்பா கூட ரொம்ப க்ளவெர், C.A. படிச்சிருக்காங்க “ என்றாள் பெருமையாக.

விக்ரம் ஸ்டன்னாகி நின்றான். தட் (that)  “என்னப்பார்த்து ஏண்டா அப்படி சொன்ன ?” மொமென்ட்.  இதுவரை எதிர்கொண்டதில்லை. கண் விரிந்து, வாய் சற்றே திறந்து, ‘ங்கே’ என்று, அவன் முகம் போன போக்கைப் பார்த்த அந்தப் பெண்ணோ, விரிந்த புன்னகையை அடக்கவே முயற்சிக்கவில்லை.

பளீர் என்று முகமும் கண்களும் புன்னகை மிளிர, “ஓ” என்றாள். அந்த ஒரு ஓவில் இருந்த சிரிப்பு…. விக்ரம் முகம் சூடாவதைப் போல உணர்ந்தான்.  அவன் முகம் சிகப்பேறியிருந்தது. அந்தப் பெண்ணின் அம்மா கூட புன்னகை அடக்கினார்ப்போல இருந்தது.

சட்டென்று முகத்தை இறுக்கியவன், சிந்துவை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விடு விடுவென இடத்தைக் காலி செய்தான். இதுக்கு மேலே ஒருத்தன டாமேஜ் செய்ய முடியுமா ? இது வெறும் ட்ரைலெர் தான் மகனே என்று சிரித்தது விதி.

மூச்சிறைக்க, வீடு வந்து சேர்ந்தார்கள். அவன் வேகத்திற்கு ஈடுகொட்டுக்க முடியாதாதால், சிந்துவை தூக்கிக்கொண்டு வந்திருந்தான். வரும்பொழுதே, அவர்களைப் பார்த்த, அவன் தாய் பர்வதம், “என்னாச்சுடா ? குழந்தைய தூக்கிட்டு வர ? விழுந்துட்டாளா ?” என்று பதறியபடியே எதிர்கொண்டார்.

தொப்பென்று கீழே போடாத குறையாக, அவளை இறக்கினான், விக்ரம்.

புசு புசுவென்று மூச்சிரைத்தபடியே, “ம்ம்ம்…அவ விழல, என் தன்மானம்தான் விழுந்துது, ஆறடிக்கு அதுவே குழியத்தோண்டி உள்ளே போய் பொதஞ்சிகிச்சு, போறுமா? “ என்று வள்ளென்று விழுந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும், அடக்கி, “என்னாச்சு சிந்து ?”, என்று பேத்தியைக் கேட்டார்.

“சித்தா ஒரு பொண்ணு வேணும்னு கேட்டார், அதே மாதிரி நானும் காட்டினேன். அவங்க அம்மா டெரர்ரா இருக்காங்கன்னு கோச்சிக்கிட்டார்” என்று சொன்னதும், “என்னாதூ…” என்று கத்துவது பர்வதம்மா முறையானது.

“இதே மாதிரிதான் அந்த அம்மாவும் கத்தினாங்க பாட்டி !”

“போச்சு, இந்த பிசாசு மொத்தமா போட்டு குடுத்துடுச்சு…வீட்லயும் மான மரியாதை ராகெட்ல பறக்கப்போகுது…”, என்று தலையில் கை வைத்தான் விக்ரம்.

“டேய்…என்னடா சொல்றா ? “ என்று உச்ச ஸ்தாயில் கத்தவும், உள்ளே அவர் பேரன் அழும் குரல் கேட்டது. உள்ளே சென்று அவனை தூக்கி வரவும், அவர் மருமகளும், சிந்துவின் அம்மாவுமான மாலினி அலுவலகம் முடிந்து உள்ளே நுழைந்தாள்.

குழந்தைகள் இருவரும் அம்மாவிடம் செல்ல, “இருங்க..”, என்று கை அலம்பச் சென்றாள்.

“போன இடத்துல என்னடா ஆச்சு ? “ என்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கினார்.

“இப்போ தெரியுது, சிந்துவுக்கு எங்கேருந்து இந்த புடிச்சா அதே புடியில இருக்கற குணம்”, என்று மனதில் நொந்துகொண்டவன், “ஒண்ணும் இல்லை விடுமா”, என்றான்.

அவன் அம்மாவே விட்டாலும், சிந்து விடுவாளோ ?

“அம்மா, இன்னைக்கு கோவில்ல, சித்தா கேட்ட மாதிரியே ஒரு பொண்ணு பார்த்து காமிச்சேன் மா. ஆனா, அவங்க அம்மா சொர்ணாக்கா மாதிரி இருக்காங்கன்னு, சித்தா எங்கிட்ட கோச்சிகிட்டாங்க”, என்று அவள் செய்ததை விடுத்து மிச்சத்தைக் கூறினாள்.

அவன் அண்ணியும் விக்ரமைப் பார்க்க, “குட்டிச் சாத்தான்”, என்று மனதில் வைதவன்,

“கோவில்ல வெச்சி திடீர்னு ஒரு பொண்ணைக் காமிச்சி சத்தமா அவங்களுக்கும் கேக்கறா மாதிரி கேட்டுட்டா அண்ணி , அந்த பொண்ணோட அம்மா குடுத்த ரியாக்க்ஷன்ல, உடனே இடத்தை காலி பண்ணிட்டோம்.” என்று விஷயத்தை முடிக்கப்பார்த்தான்.

“நான் அப்பறம் அவங்க கிட்ட போய் சாரி கேட்டேன் மா”, என்று அவள் அம்மா முறைக்கவும், அவசரமாய் சொன்னாள்.

அவன் பட்ட அவமானம் தகிக்க, “ எண்டி அப்படி சொன்ன, அவங்க கிட்ட ? “ என்று சிந்துவிடம் காய்ந்தான்.

“என்ன சொன்னேன் ?”, இன்னும் அவளுக்குப் புரியவில்லை.

“ம்ம்…என்ன பார்த்தா தெரியாது, ஆனா நானும் ரொம்ப க்ளெவர், சி.ஏ படிச்சிருக்கேன்னு ? சி.ஏ படிச்சா, கொம்பு வெச்சிட்டு இருக்கணுமோ ? “

அவன் அண்ணியும், அம்மாவும் இப்போது புன்னகைக்க ஆரம்பித்தார்கள்.

“ஓ, இதுக்குதான், முகம் ரெட்டாகி, அப்படி இருந்தியா சித்தா ?, என்று அவனை போலவே ‘ங்கே’ என்று விழித்துக்காட்டினாள்.

சிரிப்பொலி கேட்டது இருவரிடமிருந்தும். “ இப்படியா ஷாக் அடிச்ச தேவாங்கு மாதிரி இருந்தோம் ?  அதான் அவ்ளோ சிரிச்சாளோ ?“, லேசாகக் கவலையானான்.

“ சின்ன பொண்ணுகிட்ட போய் என்ன பேசி வெச்சிருக்க ? நீ அவளை சொல்றியா ? “, பாய்ண்ட்டைப் பிடித்தார் பர்வதம்மா.

“மா …அது சும்மா…” என்பதற்குள், “ வயசு இருவத்தேழு தானே ஆகுது. இதுக்குள்ள அவளுக்கு சித்தி எற்பாடு பண்றயா. ஒழுங்கா காயத்ரிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சேக்கற வழியப்பாரு” , என்று இடைமறித்தார் பர்வதம்.

விக்ரம் வீட்டின் கடைக்குட்டி சிங்கம்….இல்லை பூனை . அவன் அக்கா காயத்ரி. கல்யாணம் செய்து மதுரையில் வசிக்கிறாள். தாம்பரத்தில் உள்ளது அவர்கள் தந்தை மாணிக்கம்  கட்டியிருந்த வீடு.    அதை விக்ரம் மற்றும் அவன் அண்ணன், பர்வதம்மாவின் மூத்த மகன், ராகவன் பெயருக்கு மாற்ற, பொண்ணுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்றார் பர்வதம்.

மாணிக்கம் இறந்த பின், அவர் செட்டில்மென்ட் பணம் , பர்வதம்மாளின் நகைகள், பற்றாகுறைக்கு வீட்டின் மேல் கடன் வாங்கி கல்யாணம் செய்திருந்தான் ராகவன். கல்யாண, பிள்ளைப்பேறு கடனை அடைத்ததும் அவனே. அப்போது விக்ரம் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தான். அதனால், இப்போது படித்து, வேலைக்கு போவதால், விகரம் இவன் பங்காக அக்காவிற்கு பணமாக கொடுக்கச் சொல்லியிருந்தார் பர்வதம். தினமும் ஒரிரு முறையாவது சொல்லிவிடுவார். விக்ரமும் அதற்குத்தான் அவன் சம்பளத்தில் பெரும் பங்கு ஒதுக்க ஆரம்பித்துள்ளான். இடையில், அவன் அண்ணன், அண்ணியுடன், இவனும் வீடுக்கடன் வாங்கி, அவர்கள் வீட்டை இடித்து, இரண்டு தளத்தில் வீடு கட்டிக்கொண்டிருந்தனர். கீழே அண்ணன் இருக்க, முதல் தளத்தில் உள்ள வீடு விக்ரமிற்கு என்று ப்ளான். இருந்த கொஞ்சம் சேமிப்பும், அக்காவிற்கு, முன்பணமாகக் கொடுத்திருந்தான்.

ஆயிரங்களில் சேர்த்து, எப்போது இவன் லட்சங்களில் பெண்ணிற்கு கொடுப்பது என்று பர்வதம்மாவிற்கு கவலை. அதற்காக பிடிங்கிக்கொண்டே இருந்தால் நடந்துவிடுமா ?

இருந்த கடுப்பில் தாயை எதாவது சொல்லிவிடுவோம் என்று விக்ரம் எதுவும் சொல்லாமல் முறைத்துக்கொண்டே படுக்கையறைக்கு சென்றான்.

சற்று நேரத்தில் வாசலில் நிழலாடியது.  அவன் அண்ணி மாலினி. “சொல்லுங்கண்ணி”, என்று படுக்கையிலிருந்து எழுந்தான்.

“உனக்கு பெருசா அட்வைஸ் பண்ண தேவயில்லை, ஆனா இண்ணைக்கு உனக்கு தேவைன்னு நெனக்கிறேன். Flight or fight தியரி பத்தி படிச்சிருக்கியா விக்ரம் ? எந்த சூழ்னிலையில நிண்ணு எதிர் கொள்ளணும், எப்போ விவேகமா விலகி போகணும் அப்படிங்க்ற கான்செப்ட்ல கூட இதை உபயோகிக்கலாம். கோவில்ல, அந்த அம்மா முறைச்சது, சிந்து உன் படிப்ப பத்தி அவங்க கிட்ட பேசினது, இப்ப அத்தை உங்கிட்ட காயத்திரிக்கு குடுக்க வேண்டிய பணம் பத்தி சொன்னது. மூணு இடத்திலயும், நீ விலகிதான் வந்திருக்க.“

“அதானே, ஏன் ஒடி வந்தோம் ? “, என்று யோசித்தான்.

“அந்த நேரம் ஒரு மாதிரி ப்ளாங்க் ஆகிட்டேன் அண்ணி. அந்தம்மா எதையாவது அசிங்கமா பேசி மானம் போகப்போகுதுன்னு மட்டும்தான் யோசிச்சேன். ரெண்டாவதும், மானம் போச்சுன்னுதான் ஃபீல் பண்ணேன்…. அம்மா கிட்ட மட்டும்தான், இருக்குற கடுப்புல எதாவது சொல்லிடப்போறேன்னு உள்ள வந்தேன் அண்ணி”.

“முதல் இரண்டும் உணர்வு பூர்வமா ரியாக்ட் பண்ண. அந்தம்மாவை அடக்க சிந்துகிட்ட “தெரியாதவங்களைப்பத்தி இப்படி பேசக் கூடாது, சாரி சொல்லுன்னு” சொல்லிட்டு, நிண்ணு, சாமி கும்பிட்டு வந்திருக்கணும்.  நீ பயந்து விலகினது உன்னை கம்மியா காட்டும். ரெண்டாவது சிந்து கிட்ட இங்க கேட்ட கொம்பா முளச்சிருக்கணும் கேள்விய அங்கயே கேட்டிருக்கலாம். சாதாரணமா போயிருக்கும். அங்க உன் ரியாக்க்ஷன் உன்னைத்தான் காமடி பீசா காட்டிச்சு.இங்க அம்மாகிட்ட வார்த்தை வளக்காமல் உள்ள வந்தது மட்டும்தான் மூளை கரக்டா செய்ய வெச்சது.”

“உன்னோட உணர்ச்சிகள் உன்னை செலுத்தவிடாம பார்த்துக்கோ விக்ரம். இல்லாட்டி வேலை, வாழ்க்கை ரெண்டும் கஷ்டமாகிடும். யோசி. ஒரு பத்து செகண்ட் மூச்சை ஆழ இழுத்து, இது வேற ஒருத்தருக்கு நடக்குது, இதை அவங்களுக்காக நீ சம்மாளிக்கறன்னு நெனச்சிக்கோ, மூளை தானே வழி காண்பிக்கும்.”

இப்படி கேட்கும்போது புரிந்தது. “சரியண்ணி. கண்டிப்பா ட்ரை பண்ணறேன்.”, என்று ஒத்துக்கொண்டான்.

எப்பவுமே அவனை அரவணைத்து , கைட் பண்ணுவதில் அவன் அண்ணிக்கு நிகர் யாருமில்லை. அவன் அக்கா, அவனை திட்டி, நக்கலடித்து அவன் குறையை சரி செய்ய சொல்லுவாள்.  அவன் அம்மாவிற்கு கைதான் நீளும். இப்போது வாய். தந்தையும் அண்ணனும்தான் நெருக்கம். அண்ணனுக்கும் இவனிற்கும் கிட்டதட்ட ஒன்பது வருட வித்தியாசம். பாசமிருக்கும் அளவு நெருக்கமில்லை. தந்தை காலமானதும், ஒரு தந்தை ஸ்தானத்தில் ராகவனை பார்த்ததுதான் அதிகம்.

“ சரி வா, சாப்பிடலாம். உங்கண்ணாவும் வந்துட்டார்.” , என்று புன்னகைத்தவாறே மாலினி சென்றாள்.

ஹாலின் ஒரு ஓரத்தில், சமயலறையின் வாயிலை ஒட்டி போடப்பட்டிருந்த மேசையில், விக்ரம், சிந்து, ராகவன் அமர்வதற்கு மட்டுமே இடம். சைடில் ஒருவர் நின்று பரிமாறலாம். அவன் வந்து அமரும் போதே,

“என்னடா, குழியில புதஞ்ச உன் தன்மானம் உள்ளதான் இன்னும் இருக்கா, வெளிய வந்துச்சா ?” என்று நக்கல்டித்தார் பர்வதம்.

“ம்ம்…அண்ணி தோண்டி எடுத்து கொடுத்தாங்க.. நீங்க டிபனை வெய்ங்க.” என்றான் அவன் தாயை முறைத்தவாரே.”

மாலினியின் முகத்தை ஒரு பார்வை பார்த்த ராகவன், “அம்மா, நீங்க போய் சித்துவுக்கு சோஃபால உட்கார்ந்து ஊட்டிவிடுங்க. ரொம்ப நிக்காதீங்க, மாலினி இங்க பார்துக்கட்டும்.” என்று அவரைக் கிளப்பினான்.

சிந்துவிற்கு மாலினி தனியே வேப்பிலை அடித்திருந்ததால், வாயாடாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

மேலும் இதே விஷயத்தைக் கிளறாமல், அன்று இரவு கடந்தது.

காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்தது. புரண்டு எழுந்து கண்ணை தேய்த்தவன் மனக்கண்ணில், கண்ணும் முகமும் மலர்ந்து சிரித்த அந்த பெயர் தெரியாப் பெண்ணின் முகம் பளிச்சிட்டது.

“அய்யோ, இதென்னது…வண்டி ட்ராக் மாறுது”, என்று அரண்டுவிட்டான் விக்ரம். ‘இப்போதானே ராசா ஆரம்பிக்குது, பூனையை புலியாக்க இன்னும் எவ்ளோ வெச்சி செய்யணும் நானு’, என்று சிரித்தது அவன் விதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!