Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 4

அத்தியாயம் – 4

திரும்ப வீட்டிற்கு செல்லும் வழியில், மெதுவாக சிந்துவிடம், “ஏன் சிந்து, அன்னைக்கு அத்தனை வாட்டி இவங்க சித்தியாக ஒகே வா கேட்ட, அப்பறம், அப்படியே நிறுத்திட்ட ?”, என்று கேட்டான்.

“அச்சோ, அன்னைக்கு அம்மா இனிமே இப்படி பேசவேகூடாது. அவங்க அக்கா மட்டும்தானு கோபமா சொன்னாங்க. அதான் சித்தா.” என்றாள்.

லேசாக உதறல் எடுத்தது. ‘மகனே, வேதாவ, ரூட் போடனும், கடத்தனும்னு பாட்டெல்லாம் பாடின, இப்ப, சிந்துகிட்ட அண்ணி இப்படி சொன்னதுக்கே சைடு வாங்கற ?’ அடமானம் வைத்திருந்த அறிவு, திரும்ப வந்து நக்கல்லடித்தது. ‘பொண்ண ஒகே பண்ணி, உங்க வீடு, அவ வீடு எல்லாம் சரிகட்டி, நீ கல்யாணம் பண்ணுவ ? போடா டேய், போய் எந்த கம்பனி கணக்கையாவது ஆடிட் பண்ணு, நம்ம பவுசு தெரியாதா ராசா ?’,என்றது.



Advertisement

மனமோ, ‘ஏன் எனக்கு என்ன குறைச்சல் ? வேதாக்கு பிடிச்சிருந்தா, அண்ணா, அண்ணியே எனக்காக பேசுவாங்க, அவங்களும் லவ் பண்ணிதானே கல்யாணம் பண்ணாங்க ?’

‘அதுக்குள்ளே எவ்ளோ பொலம்புனாங்க அம்மா ? அண்ணிய என்னா கடுப்படிப்பாங்க ? வேதா சமாளிப்பாளா ?’, அறிவுக்கும் ஆசைக்கும் இடையில் சிக்கியவனாய் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டுக்குள் நுழையும் போதே, “அம்மா, நான் இன்னைக்கு ஸ்டார் வாங்கினேன். அதுக்கு, சித்தா ஐஸ்கிரீம் வாங்கிக்குடுத்தாங்களே”, என்று ஆரம்பித்து, வேதாவை, அவள் அண்ணனைப் பார்த்தவரை எல்லாம் ஒப்பித்தாள்.

Advertisement

பர்வதம்மா ஆர்வமாய் கேட்டுவிட்டு, “அவ அண்ணன் எப்படி டா ? பஜார்ல கடை இருக்காமே, உனக்கு தெரியுமா ?”, என்றார்.

Advertisement

இவங்களுக்கு என்ன இவ்ளோ ஆர்வம் என்று யோசித்தவாரே, “ தெரியும்மா, என் காலெஜ்ல, எனக்கு ஒரு வருஷம் சீனியர். அவர்தான் கண்டுபிடிச்சார். கடை பத்தியெல்லாம் தெரியாதுமா” , என்றான்.

“அந்த பொண்ணு கிட்ட என்ன பேசிட்டு இருந்த ?”, அடுத்த கேள்வி, வில்லாய் வர, என்ன சொல்வது என்று யோசிக்கும் முன்னரே,

“அத்தை, இப்பதானே உள்ள வந்தான், கொஞ்சம் விடுங்க. விக்ரம், நீ ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிட”, அவன் அண்ணி, அபயக்கரம் நீட்டினாள்.

Advertisement

மறுவார்த்தை பேசாமல் ஓடிவிட்டான் உள்ளே.

சாப்பிட்டு முடியும் தருவாயில், ராகவன், “விக்ரம் உங்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும், கை அலம்பிட்டு ஹாலுக்கு வா “ என்று சொன்னதும் தலையாட்டி அவ்வாறே செய்தான்.

அம்மாவும், அண்ணியும் கூட வந்து அமர்ந்தனர். சிந்து அண்ணி ரூம் டி.வியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த சத்தம் மட்டும் கேட்டது.

“என்னண்ணா ?”, என்றவாறே ராகவனைப் பார்த்தான். வீடு சம்பந்தமாக எதாவது ஆலோசனையாக இருக்கும் என்றுதான் நினைத்தான்.

“கோவில்ல, சிந்து உனக்கு கைகாட்டின பொண்ணை, உனக்கு பார்க்கலாமான்னு யோசிக்கறாங்க அம்மா. ஜாதகமெல்லாம் இனிதான் பார்க்கணும்.  பொருந்திவந்தாதான் மேல எதுவும் பேசுவாங்க. அதுக்கும் முன்னாடி, உன்ன கேக்காம எந்த ஸ்டெப்பும் எடுக்கவேணாம்னுதான் உங்கிட்ட சொல்றேன். “, ராகவன் நேரடியாக சொன்னதும், விக்ரம் ஸ்டன்னாகிவிட்டான். நல்ல வேளை, உட்கார்ந்திருந்தான்.

அவன் அதிர்ந்த முகத்தைப் பார்த்த மாலினி, “ ஏன் விக்ரம், பொண்ணொட அம்மா பத்தி யோசிக்கறயா ?” என்று கேட்டாள்.

“ஹா…இல்லை அண்ணி, இப்ப என்ன கல்யாணம், அன்னைக்கு கூட அம்மா, அக்காவுக்கு பணம் குடுத்துட்டு அப்பறம்தான்னே பார்க்கலாம்னு சொன்னாங்க ? “, என்று அவன் அம்மாவின் முகம் பார்த்தான்.

‘அறிவிருக்காடா டேய்…. என்னவோ ஒரு குருட்டு அதிர்ஷ்டம் இப்படி கூடி வருது, உங்க இஷடம்ன்னு ஒத்துக்கறத விட்டுட்டு, பணத்தப் பத்தி ஏண்டா ஆரம்பிச்ச ?’ மனம் காண்டாகியது.

“ஜாதகம் பொருந்துச்சுனா, இப்போ கல்யாணம் பண்ணலடா… அவ படிப்பு முடிய இன்னும் ஒன்றறை வருஷம் இருக்கு, அப்பறம்தான். அதுக்குள்ள முக்கால்வாசி பணத்தையாவது குடுத்துடனும். அவளும் படிப்ப முடிச்சு ஒரு வேலைய பார்த்தா, நீ மிச்ச காசையும் சீக்கிரம் சேர்த்துடலாம்.”, என்றார் பர்வதம்மா.

‘அதான, அம்மாவா கொக்கா…பக்காவா எல்லாத்தையும் யோசிப்பாங்களே..’ என்று நினைத்தான் விக்ரம்.

அம்மாவின் பேச்சில், அண்ணன், அண்ணி முகத்தில் வந்துபோன அதிருப்தியும் பார்த்தான். அண்ணன் சம்பளமெல்லாம் அக்காவின் கல்யாணம், குழந்தை செலவுக்குப் போக, அன்று அண்ணியின் சம்பளம் பெருமளவு குடும்ப பாரத்தை சுமந்தது இவனுக்கும் தெரியுமே.

‘அந்த நிலைமை வேதாவிற்கு விடமாட்டேன். கல்யாணத்திற்குள் அக்காவின் பணத்தை கொடுத்துவிடவேண்டும்’, என்று சபதம் எடுத்துக்கொண்டான்.

“நீ ரொம்ப யோசிக்காதே. ஜாதகம் பொருந்தினாத்தான் எதுவுமே. “, என்று விக்ரமை சமாதானம் செய்வதாக எண்ணி, அவன் வயிற்றில் புளியைக் கரைத்தார் பர்வதம்மா.

‘ஐயோ!, அப்ப பொருந்தலைன்னா கோவிந்தாவா ? ‘ அலறியது மனம். ‘எனக்கிருக்க அதிர்ஷ்டத்திற்கு, அந்த ஜோசியக் கடங்காரன் ஒரு பொருத்தம்கூட இல்லைன்னு சொல்லிடப் போறான்…ஆச காட்டி மோசம் பண்ணப்போறாங்க….’, மனதின் பொலம்பலை ஓரம் கட்டி…. “சரி , அப்படின்னா பாருங்க…அப்பறம் பார்க்கலாம்”, என்று எழுந்துவிட்டான்.

“அண்ணா, கொஞ்சம் வேலை இருக்கு, வெளிய போய்ட்டு வரேண்ணா”, என்று கிளம்பினான்.

ஞாயிறு காலை, அண்ணா, அண்ணி மற்றும் சித்துவும், இவன் ஜாதகத்துடன் கோவிலுக்கு கிளம்ப, சிந்துவை அவள் நீச்சல் வகுப்புக்கு அழைத்துச் சென்று வருவது விக்ரம் பொறுப்பானது.

நேற்றிலிருந்து யோசித்து யோசித்து ஒரு வழியாகிருந்தான். ‘எதுவும் உன் கையில் இல்லை, எதுக்கு யோசிக்கற ? பொருத்தம் பார்த்து முடிவு வரட்டும், அப்பறம் வருத்த பட்டுக்கலாம், என்ன பண்ணன்னு யோசிக்கலாம். இப்போ விடு’, என்ற அறிவின் கூற்றுப்படி மனதை தேற்றியிருந்தான்.

சிந்துவும் விக்ரமும் வீடு வந்து சேர்ந்த போது, அனைவரும் வீட்டில்தான் இருந்தனர். யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அமைதியாய் இருந்தான் விக்ரம்.

சற்று நேரம் பார்த்தும், அம்மா, அண்ணா யாரும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. வாசலருகே, சித்துவிற்கு, மாலினி உணவு ஊட்டிக்கொண்டிருப்பது தெரிய, “ அண்ணிகிட்ட சரண்டராகிடுவோம்” என்று எண்ணி, அருகே சென்றான்.

அவனைப் பார்த்ததும்,” என்ன விக்ரம் ?” என்றாள் மாலினி.

“இல்லண்ணி, கோவில்ல பூஜை எல்லாம் நல்லா முடிஞ்சுதா…?”, என்று முகம் பார்க்க, மாலினி அவனைத்தான் பார்த்திருந்தாள்.

“ஆச்சு. வேதா மட்டும் வரலை, அவங்க அம்மா, அப்பா, அண்ணா வந்திருந்தாங்க.  ஜாதகம் பரிமாறிக்கிட்டோம். ”

“சரியண்ணி…எப்போ…எப்போ ஜோசியர பார்க்க போறாங்க ?”, என்று தயங்கியவாறே கேட்டான்.

“நாளைக்கு சாயந்திரம். ம்ம்…விக்ரம், அவங்க வீட்ல ஜோசியர் சொல்றதுதான் இறுதி முடிவாம். வேதாவுக்குமே, ஜாதகம் எடுக்கறதை சொல்லலையாம். நீ மனசுல ஒண்ணும் நெனச்சிக்காதே என்ன ? ” என்று சொன்னாள் மாலினி.

அழ்ந்து மூச்செடுத்து, “எனக்காக வேண்டிக்கோங்க அண்ணி, பொருந்தி வரணும்னு..” என்று சொல்லி மாலினியின் மூச்சடைத்துச் சென்றான்.

“நாளைக்கு ஒரு Googly ball போடப்போறேன், எப்படி ஆடரீங்கன்னு பாக்கறேன்..”, என்று ஒரு தெய்வீகச் சிரிப்பொன்றை உதிர்த்தது விதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!