Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழாக் காணுமே வானம்

விழாக் காணுமே வானம் 03

விழாக் காணுமே வானம் 03

வத்சலா ராகவன் – மது ஹனி

“பாராமுகம் வீசிய ஓரப் பார்வைகள்”

 இன்றும் காருக்கு வெளியே ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தது மழை. மார்கழி மாதத்தில் மழை வருவது சற்றே வியப்புதான்.



Advertisement

“எங்கள் இருவரையும் மறுபடியும் இணைத்து வைப்பதற்கான அது செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம்..” மழையை பார்த்து மெலிதாக சிரித்துக்கொண்டான் அர்ஜுன்

”என் குஷ்பூவிடம் உனது சாகசங்கள் எல்லாம் பலிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு மழையே” காரின் ஜன்னலின் வழியே கை நீட்டி சாரலோடு கை கோர்த்து விளையாடினான் அவன்.

இருவரும் ஒரே கோப்பையை உயர்த்தி பிடித்தற்கு மட்டுமா இந்த மழை சாட்சியாக இருந்திருக்கிறது. எத்தனையோ நாட்கள் ஒரு கோப்பை காபியை இருவரும் பகிர்ந்து குடித்திருக்கிறார்கள். அதற்குக் கூடத்தான் சாட்சியாக தூவியிருக்கிறது இந்த மழை.

Advertisement

“தோசையை பார்த்தா போதுமே. ஒரு நேரத்தில் இருபது முழுங்கிடுவான். எனக்கு கொஞ்சம் மிச்சம் வை எருமை” அவன் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தட்டை அவள் பிடுங்கிக்கொண்டு சாப்பிட்ட காலங்கள் எத்தனை? அதை எல்லாம் கூட பார்த்திருக்கிறது இந்த மழை.

Advertisement

குளிரவைக்கும் மழை மட்டுமா அவர்கள் நட்புக்கு சாட்சி? ஏன் நாற்பத்தியோரு டிகிரியில் கொதிக்கும் சூட்டில் நடக்கும் பிக்ரம் யோகா செய்த காலங்கள் இவர்களின் நட்புக்கு சாட்சியாக இருந்தது இல்லையா என்ன?

விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை ஸ்டாமினா எனப்படும் களைப்படையாத ஆற்றல் மிக முக்கியம். அதை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளில் முக்கிய இடம் யோகாவுக்கு உண்டு. அதில் ஒரு வகையான யோகாதான் பிக்ரம் யோகா. கை, கால் தசைகளுக்கும் தொடைகளுக்கும் பலம் கொடுக்கும் பயிற்சி இது.

நாற்பத்தியோரு டிகிரி அளவு சூட்டில் தகித்து கொண்டிருக்கும் அறையில் இந்தப் பயிற்சிகள் நடக்கும். இது எதற்கும் சளைத்து போகும் பெண்ணில்லை ஸ்வாதி.

Advertisement

“உடம்பு முடியலையா அர்ஜுன் உனக்கு? அப்பாகிட்டே சொல்லவா. வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வேணும்னா வா?” அவனுக்கு உடல் நலமில்லா நாட்களில் முகம் படித்து கேட்பாள் தோழி.

“வீட்டுக்கு போய் என்ன செய்ய? இங்கே நீ கூட இருப்பேதானே. அதிலேயே எனக்கு எல்லாம் சரியாகிடும். வா” அவளருகே நின்றே யோகாவில் ஈடுபடுவான்.

“இன்னைக்கு பீரியட்ஸ் எனக்கு. உடம்பெல்லாம் வலிக்குது அர்ஜுன்”

“அப்பாகிட்டே சொல்லிட்டு வீட்டுக்கு போக வேண்டியது தானே குஷ்பூ. எதுக்கு கஷ்டப்படறே”

“அவர்கிட்டே சொல்ல என்னமோ மாதிரி இருக்கு. நீதான் பக்கத்திலே இருக்கே இல்ல அது போதும் வா மேனேஜ் பண்ணிடலாம்”

இப்போது நினைத்தாலும் அர்ஜுனின் உடல் கொஞ்சம் சிலிர்த்துதான் போகும். எந்த இடத்தில்? எந்த இடத்தில் அவனை வைத்திருத்தாள் அவனது தோழி. எந்த ஸ்தானத்தை அவனுக்கு கொடுத்திருந்தாள் அவனது தோழி?

அப்பாவையும் தாண்டி அவரிடம் கூட சொல்லத் தயங்கும் ரகசியத்திலும் ரகசியமான விஷயங்களை கூட மனம் விட்டு பகிர்ந்து கொள்ளும் மிக உயர்ந்த ஸ்தானம். அதற்கு அவன் நியாயம் செய்தானா?

மழை இன்னமும் அவனுடன் கைகோர்த்து விளையாடிக் கொண்டுதான் இருந்தது. கைக்கெட்டும் தூரத்தில் மலைப் பாறைகளில் மழை நீர் அருவியாய் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ கேட்டது மெலிதான இடி சத்தம். சில்லென்ற குளிர் காற்று அவன் கேசம் கலைத்தது

அவனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறிய நட்சத்திர வடிவ  பென்டன்ட்டுடன் கூடிய மெல்லிய தங்கச் சங்கிலியை பற்றிக் கொண்டது அவனது கரம். அந்த நட்சத்திர வடிவ பென்டன்ட் அவனது கரத்தின் மீது இருந்த வைரங்கள் பதித்த அந்த கடிகாரத்தின் மீது உரசியது.

இரண்டையுமே விழி அகற்றாது சில நொடிகள் பார்த்தான் அர்ஜுன்.

“மின்னலும் இடியும் என இருவரோடும் மகிழ்ந்து அளவளாவிக் கொண்டிருக்கிறாயே இந்த இரண்டில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் ஒரு சூழல் என்றாவது உனக்கு வாய்த்திருக்கிறதா மழையே?”

“என்ன அர்ஜுன் ஒரே யோசனை?’ அவனை கலைத்தார் அத்தை.

“யோசனை எல்லாம் ஒண்ணுமில்ல அத்தை.” சிறு புன்னகையுடன் இயல்புக்கு வந்திறங்கினான் அவன்.

“யோசனை எப்படி இல்லாம இருக்கும்.? எல்லாம் நடந்து முடிஞ்சு ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இப்பவாவது இந்தப் பொண்ணு உன்கிட்டே கொஞ்சமாவது பேசி இருக்கலாம். முறைச்சிட்டு அலையுது”

“என் குஷ்பு பாவம் அத்தை. நான் செஞ்சதுக்கெல்லாம் அது என்னை மொத்தமா தூக்கி எறிஞ்சிருக்கணும். இதோ ஹெட் லைட் வெளிச்சத்திலே நான் தெரியறேனா நான் தெரியறேனான்னு நிமிஷத்துக்கு மூணு தடவை திரும்பி திரும்பி பார்த்திட்டு இருக்கு. அது சந்தோஷமா இருக்க ஏதாவது செய்யணும். செய்வோம்” அவன் நெகிழ் குரலில் சொல்ல அத்தை அவனை வியப்புடன் பார்த்தார்.

“சரி உனக்கு பசிக்குதா? வண்டியிலே சூடா பால் இருக்கு. ப்ரூ காபி இருக்கு. போட்டு குடிப்போமா? இரு” அவனை அந்த புள்ளியிலிருந்து திசைத் திருப்பி இரண்டே நிமிடங்களில் காபி தயாரித்தார் அத்தை.

“இந்த குஷ்புக்கு ப்ரூ காபி பிடிக்காது தெரியுமா அத்தை?. எப்பவும் சூடான திக்கான ஃபில்டர் காபிதான்”

“டேய் என்கிட்டேயே சொல்றியா நீ? அவளை பத்தி எனக்கு இன்ச் இன்சா தெரியும்டா” மஹாலக்ஷ்மி கலகலவென சிரிக்க அவருடன் சிரிப்பில் இணைந்துக் கொண்டான் அர்ஜுன்.

சில கேள்விகளுக்கு இயற்கையால்  கூட விடை காண முடிவதில்லை போலும். அவன் கேள்வி கேட்டதிலிருந்தே சற்றே வேகம் குறைந்து தணிந்திருந்தது மழை.

“கிளம்புவோம் அர்ஜுன்” அத்தை சொல்ல சீட் பெல்ட்டை மாட்டிக்கொண்டு காரை கிளப்பினான் அர்ஜுன். முன்னால் நின்ற காரை மெதுவாக கடந்தது இவனது ஸ்கோடா.

மழை மட்டும் அல்ல இவனது ஸ்கோடாவும் ஹோண்டா சிட்டியும்  இவர்களது பல உயர்வுகளுக்கும் இப்போதைய வருத்தங்களுக்கும் சாட்சியாக நின்றிருக்கிறது.

சில அடிகள் கடந்த பிறகு அர்ஜுன் சொன்னான் அத்தையிடம் “அவங்க கார் ஸ்டார்ட் ஆகலை போலிருக்கு அத்தை.”

அவர்கள் இருவரின் நட்புக்கும் அன்பிற்கும் எப்போதும் சாட்சியாய் நிற்கும் அந்த ஹோண்டா சிட்டியும் ஸ்கோடாவும் இன்று இருவரையும் சேர்த்து வைக்க முனைந்ததோ என்னவோ? ஹோண்டா சிட்டி  நின்று போயிருந்தது.

“ம். நானும் பார்த்தேன்.”.

“போய் பார்ப்போமா?”

“எதுக்கு? வம்பா உனக்கு? அப்புறம் அவகிட்டே வாங்கி கட்டிக்கவா? அதான் அவ அப்பா கூட இருக்கார் இல்ல ஏதாவது செய்வார். நீ வா நாம போயிட்டே இருப்போம்” அத்தை சொன்ன போதும் அவன் மனம் ஏனோ ஒப்புக்கொள்ளவே இல்லை.

சில நிமிடங்கள் கடக்க ஸ்வாதியின் கார் இன்னும் கிளம்பாமல் இருக்க அடுத்து என்ன செய்வது எனும் ஆலோசனையுடன்,  இவர்கள் காரின் பானெட்டை திறந்து  பார்த்துக்கொண்டிருக்க  அர்ஜுனும் அத்தையும் நடந்து வந்து அவர்கள் காரின் அருகில் நின்றிருந்தனர்.

திருப்பதியை பொறுத்தவரை மலை ஏறி வருவதற்கு ஒரு பாதை இறங்கி வருவதற்கு ஒரு பாதை. இரண்டுமே ஒற்றை வழி பாதைகள்தான். அதனால் காரை பக்கவாட்டு சுவற்றின் ஓரம் நிறுத்திவிட்டு  அத்தையுடன் நடந்தே வந்திருந்தான் அர்ஜுன். அவர் எத்தனை சொல்லியும் மனம் கேட்கவில்லை அவனுக்கு.

அவன் அவள் முன்னால் வந்து நின்ற  மறுநொடி ஸ்வாதியின் உடல் மொழியில் வெடுக்கென ஒரு இறுக்கம். அதனோடு சேர்த்து ஒற்றை நொடியில் அவனை தலை முதல் கால் வரையாக  ஆராய்ந்து முடிந்திருந்தாள் அவள்.

இந்த உலகத்தில் அவனுக்கென இருக்கும்  முதல் நலம் விரும்பியான அவனது உயிர் தோழியின் அக்கறையான ஆராய்தல் பார்வை அது. ஒரு வருடமாக அவன் முகம் பார்க்காமல் இருக்கும் அவளது தவிப்பு அது.. அவளது இந்த செய்கை அவனது இதழ்களில் சிறு புன்னகையை கொடுக்க,

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவளாக உதடுகளுக்குள் எதையோ முணுமுணுத்தபடியே அங்கிருந்து விலகி சென்று நின்றுகொண்டாள் ஸ்வாதி.

இருந்தாலும் அவனது ஸ்கோடா அவர்களை கடந்து சென்றபோதே அவன் இதை கவனித்து திரும்ப வருவான் என தெரியாமல் இல்லை அவளுக்கு,

ரங்கநாதனும் எதுவும் பேசாமல் இருக்க சட்டென முன்னே வந்தது பாட்டிதான்.

“அர்ஜுன் கார் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமாபா? கொஞ்சம் என்னாச்சுன்னு பாரேன்” என்றார் அவர்.

மழை மேகங்கள் கலைந்து சென்றிருக்க ஆதவன் இவர்களை வேடிக்கை பார்க்கவெனவே மெல்ல மெல்ல மேலுழும்பலானான்.

“ரொம்ப ஒண்ணும் தெரியாது பாட்டி. இருந்தாலும் பார்க்கிறேன்” என அவன் பானெட்டுக்குள் தலையை விட ரங்கநாதன் வேறொரு பக்கம் சென்று நின்றுக்கொள்ள

“பாட்டி நீ சும்மா இருக்க மாட்டியா? என்ன பண்றதுன்னு நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். வேறே யாரும் ஹெல்ப் பண்ண வேண்டாம். போக சொல்லு அவங்களை” பொறிந்தாள் ஸ்வாதி.

“இப்போ அவன் உன் காரை சரி பண்ண போறான். என்ன பண்ணிடுவே நீ? ஆங்?” அவள் முகத்தை நேருக்கு நேராக பார்த்துக் கேட்டார் மகாலக்ஷ்மி.

வெடுக்கென பதில் சொல்லி இருக்க முடியும் அவளால். ஆனாலும் சொல்லவில்லை. அவரிடம் எதுவும் சொல்லத்தோன்றவில்லை ஸ்வாதிக்கு.

வெடிக்கத் துடித்த கோபத்தை உதடுகளுக்குள் மறைத்துக்கொண்டு அவர் முகம் பார்க்காமல் அவள் சற்று தள்ளி சென்று நின்று கொள்ள அவளருகில் வந்து நெருக்கமாக நின்று கொண்டார் மகாலக்ஷ்மி.

அத்தனை அருகாமையில் அவர் வந்து நிற்பார் என்று நினைக்கவில்லை ஸ்வாதி. எத்தனையோ நாட்கள் அவளுக்கு நிம்மதியை பரிசளித்த அருகாமை அல்லவா அது. சட்டென அதை விட்டு விலகிவிடவும் தோன்றவில்லை அவளுக்கு. மூச்சை இறுக பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.

“பிறந்தநாளும் அதுவுமா புதுப் புடவை கட்டலையா குஷ்பூ?” அவன் காருக்குள் எதையோ திருகிக் கொண்டிருக்க இவர் அவளை திருகினார். அந்த குஷ்பூவில் அவர் கொடுத்த அழுத்தம் இவளுக்குள் பல கொதிப்பலைகளை கிளப்பியது. அதற்கு மேல் அவர் கேட்ட கேள்வியின் பொருளும்.

“இல்ல உங்க அம்மா புடவையை கட்டி இருக்கியே. உன் புது புடவை ஏதாவது எடுத்து கட்டி இருக்கலாமேன்னு கேட்டேன். குஷ்பூ” அவரது குரலின் ஒவ்வொரு துளியிலும் கேலி இழையோடியது.

“நான் எந்தப் புடவை கட்டினால் இவருக்கு என்னவாம்?” இவளது ஒவ்வொரு அணுவிலும் கோபத் தாண்டவம். ஆனாலும் இப்போது எதுவுமே செய்ய முடியாத நிலை  .அவளுக்கு.

அதற்கு மேல் அந்த குஷ்பூ. அப்படி அவளை அழைக்க அவனைத் தவிர வேறே யாருக்கும் உரிமை கொடுத்ததில்லை அவள். அதை பற்றி நன்றாக அறிந்துதான் அவளை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார் மகாலக்ஷ்மி.

“அங்கிள்,,” அர்ஜுன் அழைத்தான் ரங்கநாதனை “கார் கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணி பார்க்கறீங்களா இப்போ?”

பதில் பேசாமல் அவர் காருக்குள் போக

“நீயும் பாவம்தான்” மகாலக்ஷ்மி இன்னமும் சீண்டிக் கொண்டிருந்தார் அவளை “பிறந்தநாள் அன்னைக்கு உங்க அம்மாகிட்டே உன்னாலே பேசக்கூட முடியாது. அப்படி ஒரு நிலைமை உனக்கு. அவங்க புடவையாவது உன் கூடவே இருக்கட்டுமேன்னு கட்டி இருப்பே”

உடல் மொத்தமும் கொதித்து போனது ஸ்வாதிக்கு. அதற்குள் கார் ஸ்டார்ட் ஆகிவிட அவர்கள் அருகில் வந்திருந்தான் அர்ஜுன்.

அவள் முகம் பார்த்து சூழ்நிலையை புரிந்து கொண்டவனாக

“என்ன அத்தை அவளை வம்புக்கு இழுத்திட்டு இருக்கீங்களா? சும்மா இருக்க முடியாதா உங்களாலே. வாங்க போகலாம்” என பாட்டியிடம் தலையசைத்துவிட்டு அத்தையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அகன்றிருந்தான் அங்கிருந்து.

பாட்டி காருக்குள் ஏறி இருக்க

“ஸ்வாதி..” டிரைவர் சீட்டிலிருந்து குரல் கொடுத்தார் ரங்கநாதன்.

தொட்டால் சுட்டுவிடும் அனல் வடிவமாய் காருக்குள் வந்து அமர்ந்தாள் அவள்.

“நீ இப்போ இருக்கிற மனநிலையிலே கார் ஓட்ட முடியாது. நானே ஓட்டறேன். கொஞ்சமா ரிலாக்ஸ் ஆகுடா கண்ணா” சீட் பெல்ட்டை அணிந்தபடியே காரை இயக்கினார் ரங்கநாதன்.

அவர் முகத்தில் கோபமோ, ஆதங்கமோ, வருத்தமோ எதுவுமே இல்லை. பூமியே இரண்டாக பிளந்து நின்றாலும் சரிதான் ரங்கநாதன் எப்போதும் இப்படித்தான் அவர் உணர்ச்சி வசப்பட்டு ஸ்வாதி பார்த்ததே இல்லை. அப்பா போல் இருக்க பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கிறாள் மகள்.

சென்னனைக்கு வந்து சேரும் வரை அவள் கோபம் அடங்கவில்லை. வீட்டுக்கு வந்த மறுநிமிடம் அம்மாவின் புடவையை கழற்றி எறிந்துவிட்டு வேறு உடைக்கு மாறிக்கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில் பொத்தென புதைந்தாள் மகள்.

பாட்டிக்கு சிரிப்பை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை.

“அவங்களுக்கு எ…ன்…ன? நான் எந்தப் புடவையை கட்டினா அ…வங்க….ளுக்கு எ..ன்….ன?” கூவலாக வந்தது அவள் குரல்.

“ஸ்வாதி” இது அப்பா “வீட்டிலே சமையல்காரங்க காதிலே விழப்போகுது. மெதுவா பேசு”

“விழுந்தா விழட்டும். இங்கே எது ரகசியமா இருக்கு?” இது ஸ்வாதியின் படீர் வெடிப்பு.

‘இப்போ அவ என்ன தப்பா சொல்லிட்டா? நீ உண்மையிலேயே செண்டிமெண்ட்குதானே உங்கம்மா புடவையை கட்டினே” இது பாட்டியின் நக்கல்

“நீ கொஞ்ச நேரம் சும்மா இரு பாட்டி. இந்த வீட்டிலே நடக்குற பாதி பிரச்சனைக்கு காரணம் நீதான்” பேத்தி கத்த இடையில் வந்தார் ரங்கநாதன்

“அம்மா நீ கொஞ்சம் உள்ளே போம்மா” என அம்மாவை அனுப்பிவிட்டு  மகளின் அருகே அமர்ந்து அவளை தனது தோள் மீது சாய்த்துக்கொண்டார்.

“ரிலாக்ஸ் ஆகுடா கண்ணா”

“இல்லப்பா. ரொம்ப பேசிட்டாங்க. எனக்கு அம்மாவோட பேச முடியாத நிலைமையாம். அங்கேயே அவங்களுக்கு குடு குடுன்னு கொடுத்திட்டு வந்திருப்பேன். என்னமோ இன்னைக்கு அப்படி பண்ண தோணலை. வேணும்னே பண்றாங்கபா. எனக்கு இந்த நிலைமையை கொடுத்தது அவங்கதானே. அந்த குடும்பம் தானே? அவன் இன்னும் அந்த டைமண்ட் வாட்ச் கட்டியிருக்கான் தெரியுமா?’

பதில் பேசாமல் மகளின் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தார் தந்தை.

“அப்பா எனக்கு அம்மா வேணும்பா”

“அதுக்கு நீ அர்ஜுன்கிட்டே பழைய மாதிரி பேசணுமே” அப்பா இதமான குரலில் சொல்ல

சடக்கென விலகி அமர்ந்தாள் அவள் “மாட்டேன். அது மட்டும் இந்த ஜென்மத்திலே பண்ண மாட்டேன்”

அதே நேரத்தில் அர்ஜுனின் அன்புக்காக ஏங்கும் இன்னொரு இதயத்துக்கு சொந்தமான விழிகள் கைப்பேசியில் பதிந்திருந்த அவனது புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தன..

அன்றொரு நாள்

“நீ ஸ்வாதியை அல்லது வேறே யாரையும் லவ் பண்றியா என்ன?”

திடுக்கென திரும்பினான் அர்ஜுன்  முகமெங்கும் கேள்விக் கோடுகள்

“ஏன் திடீர்னு கேட்கிறே?”

“சும்மா தெரிஞ்சுக்கதான்”

“இதுவரைக்கும் அப்படி எல்லாம் எதுவும் தோணலை”

பல மாதங்களுக்கு முன் இவர்களுக்குள் நடந்த உரையாடலும் அன்று அர்ஜுன் தோள்களை அணைத்துக் கொண்ட விதமும் என அன்றைய நிகழ்வுகள் எல்லாம் மனக்கண்ணில் ஊஞ்சலாடிக் கொண்டே இருந்தன.

“ஹாப்பி பர்த்டே அர்ஜுன்” அந்த உதடுகள் உச்சரிக்க அதன் கரம் ஊன்றுகோலை அழுந்தப் பற்றியிருந்தது.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!