Skip to content
Post Views: 984
விழிகள் 3
திருமணப்பட்டு, நிச்சயப்பட்டு என மற்ற அனைத்து சடங்கு புடவைகளும் எடுத்து முடித்தாகி விட்டது.. லட்சுமி சகோதரிகளும் மனபெண்ணின் திருமண புடவைக்கு சற்றும் குறையாது தங்களுக்கும் எடுத்து கொண்டனர்..
Advertisement
இருபக்கமும் பெண் மற்றும் மாப்பிள்ளையின் உடன் பிறந்தோர்களுக்கு உடை எடுத்து தர வேண்டும்.
லட்சுமி சகோதரிகளுக்கு, மலரின் சித்தி மகள் மற்றும் பெரியப்பா மகன்கள் இருவருக்கும் உடை எடுத்தாகி விட்டது..
Advertisement
Advertisement
“ஹ்ம்ம் அப்பொறம் ஏதோ வரவேற்பு இருக்குன்னு சொன்னீங்களே.. அதுக்கும் சேர்த்து புடவை எடுத்துடுங்க.” என சொன்னார் சுந்தராம்பாள்..
“அண்ணி.. ரிஷப்ஷன்க்கு மலர் லெஹங்கா கேட்டா” என தயக்கமாகவே கூறினார் அமிர்தம்.. மலரின் பெரியம்மா..
Advertisement
அதில் தான்யாவைத் தவிர மற்ற அனைவரின் முகமும் மாறியது.. அதெல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லைங்க அண்ணி.. ரிஷப்ஷனுக்கு நல்லபடியா ஒரு புடவை எடுங்க என கராராக கூறினார்.. அதில் மலரின் முகம் வாடியது.. தனஞ்ஜெயனுக்கு அவள் முகம் கண்டு வருத்தமாக இருந்தாலும், தாயின் குரலே அவர் முடிவை மாத்திக்க மாட்டார் என சொன்னதால் அமைதியாக இருந்தான்..
************************************
சந்தான லட்சுமி “அந்த பொண்ணு புடவைய மாத்தி எடுத்ததுக்கு மூஞ்சிய தூக்கிக்கும்னு நினச்சேன்.. அமைதியா இருந்துச்சு.. ஆனா ரிஷப்ஷன்க்கு புடவை எடுக்க சொன்னதும் கொஞ்சம் முகம் வாடிடுச்சு..”
விஜயலட்சுமி “ஹ்ம்ம் ஆமாக்கா.. நான்கூட கவனிச்சேன்.. அந்த புள்ள ஏதாவது முறைக்குதான்னு.. ஆனால் அந்த பிள்ள சாதாரணமாத்தான் இருந்துச்சு..”
சுந்தராம்பாள் “ஹ்ம்ம் நம்ம குடும்பத்துக்கு இந்த மாதிரி பொண்ணு தான் வேணும்டி.. ஒத்த ஆம்பளைபுள்ள அவன்தான் உங்களுக்கு கடைசி வரைக்கும் எல்லா முறையும் செய்யனும்.. அதுக்கு அவனுக்கு வரப்போற பொண்டாட்டி நம்மளுக்கு அடங்கினவளா குணவதியா இருக்கணும்… அப்போதான் நம்ம பையன் கடைசி வரைக்கும் நம்மக்கூட இருப்பான்.. விஜயா உனக்கு உன் நாத்தனாவை தனாக்கு கல்யாணம் செய்யாதது வருத்தம்ன்னு எனக்கு தெரியும்.. ஆனா அப்படி நடந்தா என்ன நடக்கும்ன்னு உனக்குத்தான் தெரியலை.. அவளுக்கு நம்ம அந்தஸ்து மேல ஒரு கண்ணு.. அதுக்காகத்தான் உன் காலப்பிடிச்சுக்கிட்டு இருக்கா.. கல்யாணம் ஆனதும் உன் காலை வாரிவிடவும் அவ தயங்கமாட்டா.. புரிஞ்சுக்க..
தாயப்போல பிள்ளை நூலப்போல சேலைம்பாங்க.. அதான் முதல்ல மலரோட அம்மாக்காரிய பத்தி அக்கம் பக்கத்துல விசாரிச்சேன்… ஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டாளாம்.. அதான் இன்னைக்கு என் மனசரிஞ்சு அவளே நம்மள புடவைய எடுக்க சொன்னா” என அவர் கற்பகத்தை பற்றி கூறியதும்.. லட்சுமி சகோதரிகள் அதனை ஆமோதித்தனர்… விஜயாவும் தன் மடத்தனத்தை புரிந்து கொண்டாள்..
இவர்கள் இங்கு பேசிகொண்டிருந்த அதேநேரம்….
“மூதேவிங்க, என் மக ஆசைப்பட்ட புடவைய எடுக்க விட்டாளுங்களா.. கல்யாணத்துக்கு சிகப்புல தான் எடுக்கணுமோ.. வேற நிறத்துல எடுத்துட்டா அவளுக பகுமானம் குறைஞ்சுடுமோ, சரி அதுதான் போகுதுன்னு விட்டா, ரிஷப்ஷனுக்கும் அவளுக்கு ஆசைப்பட்ட துணிய எடுக்க விடல, பீத்தர சிறுக்கிங்க **** என வாயிலுள்ள வெத்தலை பாற்க்கோடு சுந்தராம்பாளையும் அவள் மகள்களையும் சேர்த்து.. மென்று துப்பிக்கொண்டிருந்தார்.. கற்பகம்..
“அட ஆமா அக்கா அவ எடுத்த புடவைய பார்த்து எனக்கே செம்ம கடுப்பாகிடுச்சு..” என்ற கற்பகத்தின் தங்கை சுசீலாவின் கரங்கள் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிக்கொடுக்க.. அமிர்தம் அதனை வாயில் போட்டு மென்றார்.. அதில் சுந்தராம்பாள் மற்றும் அவர் மகள்களும் அரைப்பட்டுக் கொண்டிருந்தனர்..
“ஹ்ம்ம் அந்த தாய்கிழவி ரொம்ப ஓவரா போயிட்டுருக்கு ம்மா.. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தாங்கன்னா என் பொருமைய எருமை மேஞ்சுரும்.. அடுத்து அதுகள நான் அக்கு வேற ஆணி வேறா கிழி கிழின்னு கிழிச்சுருவேன்..” என பொறிந்து தள்ளிகொண்டிருந்த அல்லியின் செம்பவள இதழ், வெற்றிலை பாற்க்கின் புண்ணியத்தில் மேலும் சிவந்திருக்க… அதற்கு போட்டியாக அவளின் முகமும் கோபத்தில் சிவந்திருந்தது…
“ஆத்தாலும் மகளும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்கள, அக்கம் பக்கம் நீங்க பேசுறது கேட்டுச்சு காரியம் கெட்டுச்சு.. இவ்வளவு நாள் நாம அடக்கி வாசிச்சதுக்கு பயன்னில்லாம செஞ்சுராதீங்க சொல்லிப்புட்டேன்.. அம்மா அல்லி” என ராமநாதான் எதோ கூற வர…
“ப்பா.. இப்படி கூப்பிடாதீங்கனு எத்தனை தடவை சொல்றேன்.. கேட்க மாட்டிங்களா” என அவள் கடுப்படித்தாள்..
ராமநாதான்.. உன்னைய புள்ளையா பெத்ததுக்கு என மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டவர்.. “ராணியம்மா, இதுக்கு முன்னாடி நாம இருந்த ஊர்ல உனக்கும் உங்கொண்ணனுங்களுக்கு ம் இருந்த பேரைப் பார்த்து.. உனக்கு எப்படிடா கல்யாணம் பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.. இப்போதான் ஒரு இளிச்சவாயன் மாட்டியிருக்கான்.. இவ்வளவு நாளா நாம அமைதியான குடும்பமா நல்ல குடும்பமா வெளில காமிச்சுட்டு இருந்ததுக்கு இப்போதான் நமக்கு கைமேல பலன் கிடைச்சுருக்கு.. அத இப்படி கோபப்பட்டு கெடுத்துக்காதீங்க.. போனது போகட்டும் இன்னும் ஒரு மாசம் பல்லக்கடிச்சு பொறுத்துக்கட்டின்னா போதும்.. அடுத்து உன் விளையாட்டை நேரடியா அங்கேயே வச்சுக்கலாம்.. உன்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது” என்றார். தாய்க்கும் மகளுக்கும் அவர் கூற்று சரியென்றே பட அவர்களின் கோபம் சிறிது மட்டுப்பட்டது..
“அட என்னத்தம்பி இப்படி சொல்லிட்டீங்க.. நம்ம ராணியம்மா அருமை பெருமை தெரியாதவங்க தான் ஏதோ சொல்லிருப்பாங்க.. அதை நீங்க பெருசு படுத்தலாமா..” என்று அமிர்தம் தன் மகளுக்கு வக்காலத்து வாங்கினார்..
“இப்படி சொல்லியே அவளை மேலும் கெடுக்குறிங்கண்ணி..” என ராமநாதன் தன் அண்ணியை கடிந்தார்.. அப்பொழுது..
“கற்பகம், கற்பகம்” என அழைத்தவாறு எதிர்வீட்டு பெண்மணி வர.. உடனே அங்கிருந்தவர்களின் முகமும் மாறிவிட்டது.. இவ்வளவு நேரம் ரௌத்திரம் பொங்கிய கற்பகத்தின் முகத்தில் சாந்தம் அருவியாய் கொட்ட.. அல்லி அமைதி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.. அவள் தந்தையோ அமைதியாக பேப்பர் படித்துகொண்டிருந்தார்.. சுசீலா அமிர்தம் காய் வெட்டுவதை போல் அமர்ந்திருந்தனர்..
“வாங்க அக்கா..”
“ஹ்ம்ம் நல்லபடியா புடவை எடுத்தாச்சா? கற்பகம்”
“ஹ்ம்ம் எடுத்தாச்சு அக்கா..”
“ஓ.. சரிம்மா.. திடிர்னு வீட்டுக்கு விருந்தாளி வந்துட்டாங்க இனிப்பு செய்யணும்.. ஆனா பாரு நெய் இல்லாம இருந்திருக்கு.. அதை நான் கவனிக்கல.. கொஞ்சோண்டு நெய் இருந்தா கொடேன்..” என பெரிய சைஸ் டம்ளரை நீட்ட.. கற்பகத்திற்கு உள்ளுக்குள் வண்டை வண்டையாய் வந்தது.. *** சிறுக்கி இது இவளுக்கு கொஞ்சூண்டா.. வாரத்துக்கு மூனு தடவை எதையாவது கேட்டு வந்துடுறா.. இருடி என் மக கல்யாணம் முடியட்டும்.. அப்பொறம் இருக்கு உனக்கு என உள்ளுக்குள் பொறுமியவர் வெளியே வெள்ளந்தியான சிரிப்புடன்.. அவர் கொடுத்த டம்ளரின் அளவிற்கு நெய் கொண்டு வந்தார்..
“ச்சை இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி இருக்கனுமோ” என கற்பகம் புலம்ப.. ராமநாதன் சமாதானம் செய்தார்..
“யக்கா.. இந்த பொம்பள என்ன ஏதாச்சும் கேட்டு வந்துட்டு இருக்கு.. எப்படி சமாளிக்கிற..”
“அதையேண்டி கேட்கிற.. இதோட பெரிய ரோதனையா போச்சு.. எப்போப்பாரு எதையாவது கேட்டு வந்துட்டு இருக்கா.. ஆனா இந்த *** முண்ட டீத்தூள் காபித்தூள் எல்லாம் கேட்க மாட்டாங்க.. பாதாம் பிஸ்தா நெய்ன்னு இப்படி பெரிசாதான் கேட்பா.. வாங்கிட்டு போறதை ஒருநாளும் திருப்பி தந்ததில்லை.. எனக்கு எப்போ அல்லி கல்யாணம் முடியும்னு இருக்கு.. அப்போ காட்டுறேன் இவளுக்கு இந்த கற்பகம் யாருன்னு..” என பொறுமித்தள்ளினார்..
அப்பொழுது அல்லிக்கு போன் வர.. அதில் ஒளிர்ந்த தன் அண்ணனின் பெயரைக் கண்டதும் அல்லியின் முகம் பூவாய் மலர்ந்தது..
“அண்ணே.. எப்படிண்ணே இருக்க.. நல்லா இருக்கியா.. மதனி என் மருமவன் எல்லாம் எப்படி இருக்காங்க..”
“எல்லாம் நல்லா இருக்கோம்த்தா.. நீ எப்படி இருக்க.. எல்லாம் நல்லபடியா நடக்குதா..”
“அதெல்லாம் நல்லாத்தேன் போகுது” என கடுப்பாய் கூறினாள்..
“என்னத்தா ஒருமாதிரியா பேசுத.. என்னாச்சு..”
“எல்லாம் ரொம்ப கடுப்பாக்குறாக.. அந்த தாய்க்கிழவி பெரிய மகாராணி கணக்கா கட்டளை போடுறது என்ன.. மிரட்டுறது என்ன.. ரொம்ப படுத்துது.. என் பொறுமை கொஞ்ச கொஞ்சமா வெல்லமாட்டம் கரைஞ்சுக்கிட்டே போகுது..” என என்னெயில் போட்ட கடுகாய் பொறிய..
“சரித்தா.. சரித்தா.. விடு நீதானே ஆசைப்பட்ட.. அதுக்கு சிலதெல்லாம் தாங்கித்தான் ஆகணும்” என சமாதானம் செய்ய அல்லியின் முகம் மெல்ல தெளிந்தது..
“அண்ணே நீ எப்போ இங்க வருவ.. நீயில்லாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் நியாபகம் வச்சுக்கோ..”
“அது எனக்கு தெரியாதாத்தா நான் இல்லாம உன் கல்யாணம் நடக்காது.. நீ விசனபடாம இரு.. இரு உன் மதனி பேசணும்ங்கிறா..” என போனை தன் மனைவியிடம் கொடுத்தான்.. அல்லி அவளிடம் பேசிக்கோண்டிருக்க கற்பகம் போனை பறித்தார்..
“யம்மா..”
“எவ்வளவு நேரம்டி பேசுவ.. நாங்கெல்லாம் பேசவேண்டாமா போடி அங்குட்டு..” என மகளை விரட்டியவர்.. தன் மகன் மருமகளிடம் பேச ஆரம்பித்தார்.. அப்படியே சுசீலா அமிர்தம் ராமநாதன் என அனைவரிடமும் போன் கைமாறியது..
ராமநாதன் மற்றும் கற்பகத்திற்கு உண்மையில் இரு பிள்ளைகள்.. மூத்தவன் மணிமாறன்.. அஞ்சனாவை விட பத்து வயது பெரியவன்.. தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கிறான்.. சில பல காரணங்களுக்காக குடும்பமே இவ்விஷயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது.. அவன் மதுரையில் தன் மனைவி மகனுடன் இருக்கிறான்..
“உனக்கு தெரியுமாண்ணே வரவேற்புக்கு நான் என்ன ட்ரெஸ் போடுறதுனு கூட அந்த தாய்கிழவி தான் முடிவு பண்ணுது.. அவுகள்ல லெஹங்கா எல்லாம் போடமாட்டாங்களாம், புடவைத்தேன் உடுத்தணுமா” என இதழ் சுருக்கி தன் தமையனிடம் புகார் படித்துக்கொண்டிருந்தாள்..
“அட இது ஒரு விசயமா, வரவேற்பு அப்போ என் தங்கச்சிக்கு லெஹங்காத்தேன்.. என் ரானியம்மாக்காக அண்ணே சூப்பர் லெஹங்கா வாங்கி வைக்கிறேன்” என மணிமாறன் சமாதானம் செய்தான்..
“கல்யாணம் மட்டும் ஆகட்டும் ராணியம்மா அவைங்களுக்கு நாம யாருன்னு காட்டலாம்” என மணிமாறன் சொன்னான்.
அல்லிமலரும் விஷமச்சிரிப்புடன், சுந்தராம்பாளின் விழிகளுக்குள் விரலை விட்டு சுழற்றும் நாளை மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க,
தனஞ்ஜெயனோ தன்னவளின் மனம் அறியாது, அஞ்சனம் பூசிய தன் காந்த மலர் விழியாளை கைபிடிக்கும் நாளுக்காய் வெகு ஆவலோடு, காதலாக காத்திருந்தான்.. அய்யோ பாவம்..
**********************************
சிவம் இல்லம் சொந்த பந்தங்களால் நிறைந்து வழிந்தது.. இன்னும் மூன்று நாட்களில் திருமணம் எனும் நிலையில் அணைத்து சொந்தங்களும் சிவம் இல்லத்திற்கு வந்திருந்தார்கள்.. வீடே ஜெஜே என்று இருந்தது..
உறவுகள் கூடும் இடத்தில் மகிழ்வுக்கும் பஞ்சமில்லை பிரச்சனைக்கும் பஞ்சமில்லை..
“ஏன் சுந்தராம்பா, நம்ம ஞானம் அண்ணா இன்னும் வரக்காணும்? கல்யாணத்துக்கு வருவாரா இல்லையா?, பாவம் ஒத்த ஆம்பள பையன பறிகொடுத்துட்டு, புருசனும் பொண்டாட்டியும் கோவில் கோவிலா சுத்திகிட்டு திரியிறாங்க.. அவுங்க மகளும் இன்னும் வரக்காணும்..
கல்யாணத்துக்கு கூப்பிட்டியா, இல்ல கோபத்துல கூப்புடாம விட்டுட்டியா?” என அவரின் ஒன்றுவிட்ட அக்கா ஒருவர் கேட்க.. சுந்தராம்பாள் முகம் இறுகிப்போனது..
அச்சோ இந்த பெரியம்மா கொஞ்சம் வாயவச்சுக்கிட்டு சும்மா இருக்காம, அம்மாவ கோபப்படுத்திகிட்டு இருக்காங்க என அவர் மகள்கள் நினைக்க, சதாசிவமும் தன் மனைவியை பயத்துடன் பார்த்தார்..
“தேவையில்லாத விசயம் எல்லாம் பேசாத வடிவு, என் கூடபிறந்தவ எனக்கு சொல்லாம எந்தவொரு விசயத்தையும் செய்ய மாட்டா” என சொன்னவாரு வந்தார், ஞானசுந்தரம்.
சுந்தராம்பாளின் உடன்பிறந்த அண்ணன்.. கூடவே அவரின் மனைவி ஈஸ்வரியும் நின்றிருந்தார்.
“அது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தான், இடையில நடந்த பிரச்சனையால கோபமா இருப்பிங்களோன்னு நினச்சேன்” என வடிவு அப்பொழுதும் பழசை பேச, ஞானசுந்தரம் முகத்தை சுழித்தார்..
“கண்ட கருமத்தையெல்லாம் பேசாத, விஷம் கொண்ட அரளிச்செடிய எப்போவே என் தங்கச்சி அறுத்தெரிஞ்சுட்டா.
அதுனால கண்டதையெல்லாம் பேசாம என் மருமவன் கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலைய பாருங்க” என கூறியவாரு சுந்தராம்பாளின் கரத்தைப் பிடிக்க, அவரும் தமையனின் கரத்தினை அழுத்திப் பிடித்துக் கொண்டார்..
“வாங்கண்ணா வாங்கண்ணி” என முறையாக அவர்களை அழைத்த சுந்தராம்பாள், தன் மகள்களையும் மகனையும் பார்க்க, அனைவரும் ஒன்று சேர்ந்து “வாங்க மாமா வாங்க அத்தை” என அவர்களும் வரவேற்றனர்..
“உன்ன பொண்ணுக்கு பூ வைக்கும் போதே வான்னு சொன்னா, நீ கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்து இருக்க,” என சுந்தராம்பாள் கோபித்தார்..
“சுந்தராப்பா அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல மச்சானுக்கும் தங்கச்சிக்கும் சாப்பிட ஏதாவது கொண்டா” என தன் மனைவியை விரட்டினார் சதாசிவம்..
“வாங்க மச்சான் வந்து உட்காருங்க சாமி தரிசனம் எல்லாம் எப்படி இருந்துச்சு, இப்ப எந்தெந்த கோவிலுக்கு போனீங்க” என சதாசிவம் தன் மச்சானிடம் பேச ஆரம்பிக்க, அவரும் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
ஈஸ்வரி தன் நாத்தனாருடன் ஒட்டிக்கொண்டார்..
“எங்க உங்க செல்ல சீமாட்டி, அவளுக்கும் போன் பண்ணி கல்யாணத்துக்கு சொன்னேன், பத்திரிகையும் அனுப்பி வச்சேன், இன்னும் காணும். ஏன் மகராணி கல்யாணத்துக்கு வர மாட்டாங்களாமா” என தன் அண்ணன் மகளை நொடித்தவாரு விசாரித்தார்..
“அதெல்லாம் இல்லங்கண்ணி, மாப்பிள்ளைக்கு லீவு கிடைக்கலையாம்.. முடிஞ்ச அளவு கல்யாணத்துக்கு முதல் நாள் வர பாக்குறேன்னு சொன்னா, இல்லன்னா ரிசப்ஷனுக்கு கண்டிப்பா வரேன்னு சொல்லி இருக்கா அண்ணி” என வெளிநாட்டில் இருக்கும் தன் மகள் குறித்து சொன்னார் ஈஸ்வரி..
“என்னமோ சொல்றீங்க பாக்கலாம் , உங்க சீமாட்டி வராளா இல்லையான்னு” என்ன நொடித்தவாறு சொன்னவர், ஈஸ்வரியின் சோர்ந்த முகம் கண்டு அவருக்கு டீ டிபன் கொண்டு வந்தார். ஈஸ்வரி அனைத்தையும் சாப்பிட்ட பிறகு தான் அங்கிருந்து எழுந்தார்..
error: Content is protected !!