Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ.. EPI 08

விழி கொல்லும் விஷமா நீ.. 

Episode 08

 



Advertisement

அன்றிரவு முழுக்க இன்று அந்த புதியவன் பேசியதையே நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் நிஹாரிகா.

 

ஆரவ்வை  காதலித்த நாளிலிருந்து இப்போது வரைக்கும் அவள் விருப்பத்திற்கு இருந்ததே இல்லை.

Advertisement

 

Advertisement

சிறு கட்டுப்பாட்டிலிருந்து ஆரம்பித்தவன் இப்போது அவன் விருப்பத்திற்கேற்ப அவளை முழுதாக மாற்றியிருக்க, அவனை எதிர்த்து பேசவும் தைரியமில்லை அவளுக்கு.

 

இன்னும் சொல்லப்போனால், அவனை பார்க்கும் போது காதல் பெருக்கெடுக்கிறதோ இல்லையோ வெறும் பயம் மட்டுமே அவளுக்குள் ஊடுருவ ஆரம்பிக்கிறது.

Advertisement

 

தன்னிலையை எண்ணி யோசித்தபடி அவள் நின்றுக்கொண்டிருக்க, அவளின் புலம்பலுக்கு காரணமானவோ சரியாக அவளுக்கு அழைத்தான்.

 

திரையைப் பார்த்த நிஹாரிகா, உடனே அழைப்பையேற்று காதில் வைத்து, “ஹெலோ ஆரவ்…” என்று வேகமாக சொல்ல, “நானேதான் கூப்பிடணுமா, ஏன் உனக்கு கால் பண்ண முடியாதா? மேடம் அவ்வளவு பிஸியா இருக்கீங்களோ?” என்று கேட்டான் அடக்கப்பட்ட கோபத்தோடு.

 

‘எடுத்ததுமே சண்டையா?’ என்றுதான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.

 

“அய்யோ ஆரவ் அப்படி இல்ல, காலேஜ் அஸ்ஸைன்மென்ட் வர்க். கொஞ்சம் பிஸியா இருந்தேன் அவ்வளவுதான். சாரி!” என்று அவள் பாவமாகச் சொல்ல, “அப்போ என் நியாபகமே இல்ல உனக்கு அப்படிதானே! இப்போ எல்லா நீ ரொம்ப மாறிட்ட நீஹா” என்றவனின் வார்த்தைகளில் அவளுக்கு எரிச்சல்தான் வந்தது.

 

விழிகளை சுழற்றியவள், “அப்படி இல்ல ஆரவ், ப்ளீஸ்!” என்று கெஞ்சாத குறையாக சொல்ல, சில கணங்கள் அமைதியாக இருந்தான் அவன்.

 

“நீஹா…” இப்போது அவனுடைய குரல் மென்மையாக ஒலிக்க, அந்நியன் போல் அவன் மாறி மாறி நடந்துக்கொள்வதை ஏற்கனவே அறிந்தவள் போல ‘ஊஃப்ப்…’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள்  பெண்ணவள்.

 

“எனக்கு நீ ரொம்ப முக்கியம் நீஹா, இப்போ வரைக்கும் நான் உனக்கு உண்மையாதான் இருக்கேன். அதே உண்மைய நான் உன்கிட்ட எதிர்பார்க்குறதுல தப்பில்லையே! நான் ஒன்னு வேணாம்னு சொல்றது கூட உன்னோட நல்லதுக்காகதான். ஆனா நீதான் அதை புரிஞ்சுக்காம இப்போ எல்லா என்கூட சரியா பேச மாட்டேங்குற”

 

அவன் பேசிக்கொண்டே போக, நிஹாரிகாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

 

“சாரி ஆரவ், நான் வேணும்னு எதுவும் பண்ணல. ஐ அம் ரியலி சாரி!” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, “வெயிட் நீஹா…” என்ற ஆரவ் அவளை அழைப்பில் வைத்துவிட்டு அவனுடைய வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டான்.

 

அலைப்பேசியை காதில் வைத்தபடி அப்படியே படுக்கையில் நிஹாரிகா சாய்ந்துக்கொள்ள, அவனும் அவள் இருப்பதையே மறந்துவிட்டான் போலும்!

 

இறுதியில் அன்றிரவு அவனுக்காக காத்திருந்து அழைப்பிலேயே அவள் உறங்கிப் போனதுதான் மிச்சம்.

 

அன்றிரவு நடந்ததை இன்று நினைத்துப் பார்த்த நிஹாரிகாவுக்கு தன் முட்டாள்தனத்தை எண்ணி எரிச்சல் மண்டியது.

 

‘யாதவ் மட்டும் என் வாழ்க்கையில முன்னாடியே வந்திருந்தா…’ ஒருகணம் அவ்வாறு நினைத்துப் பார்த்தவளுக்கு அந்த உணர்வே தித்திக்க, மூளை நடப்பை அவளின் நெற்றிப்பொட்டில் அடித்தது போல உணர்த்தியது.

 

அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியேற, அடுத்தநாள் காலை அலைப்பேசி விடாமல் ஒலித்தது.

 

அரைத் தூக்கத்தில் அதையேற்று காதில் வைத்தவள், “ஹெலோ…” என்று விழிகளைக் கூட திறக்காது சொல்ல, “இதுதான் நீ வேலை பார்க்குற லட்சணமா?” என்ற கணீர் குரல் மறுமுனையில் ஒலித்தது.

 

அதில் பட்டென்று விழிகளைத் திறந்த நிஹாரிகா, “சார்…” என்றுக்கொண்டே அடித்துப் பிடித்து எழுந்தமர, யாதவ்வோ கோபத்தின் உச்சஸ்தானியில் இருந்தான்.

 

“இன்னும் டென் மினிட்ஸ்ல நீ ஹோட்டலுக்கு வரணும், இல்லன்னா…” என்று பற்களைக் கடித்துக்கொண்டு சொல்லிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்திருக்க, அதற்குமேல் படுக்கையில் இருப்பாளா என்ன!

 

“ஆத்தாடி ஆத்தா…” என்று அரக்க பறக்க தயாராகியவள், கையில் தன் வண்டி சாவியோடு தயாராகி நின்றுக்கொண்டிருந்த ஆதிராவின் கையிலிருந்த சாவியை பிடுங்கி வெளியில் ஓடினாள்.

 

“அடிப்பாவி! என் வண்டி சாவிய கொடுடீ!” ஆதிரா கத்த, “டென் மினிட்ஸ்ல போகலன்னா என் கதி அதோகதி தான். என் செல்லம்ல, ஆட்டோ புடிச்சு போயிரு. ஈவினிங் நானே உன்ன வந்து பிக்கப் பண்ணிக்குறேன்” என்று மூச்சு விடாமல் சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடினாள்.

 

ஆனாலும் என்ன செய்து என்ன பயன்!

 

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்தே ஹோட்டலை அடைந்த நிஹாரிகா, ஓடி வந்ததில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவனின் எதிரே நின்றுக்கொண்டிருக்க, தன்னிருக்கையில் அமர்ந்திருந்தவனோ அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

 

“சார், வெளியில ரொம்ப ட்ராஃபிக் அதான்.. சாரி சார்! நீங்.. நீங்க எப்போ வந்தீங்க, என்ட் ஃபர்ஸ்ட் மேட்ச் நல்லாவே விளையாடினீங்க. கங்கிராட்ஸ் சார்” அவளுக்கு பேசக் கூட முடியவில்லை. இருந்தும் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவனை சமாளிக்கவென பேச முயன்றாள்.

 

“ஜஸ்ட் ஷட் அப்! இதுக்கப்பறம் வேலைய  ஒழுங்கா பார்க்கலன்னா சேலரிலதான் கை வைப்பேன்” என்று கத்திவிட்டு தன்னை நிதானப்படுத்தியவன், “எமெர்ஜென்சி, அதான் ஹோட்டலுக்கு வந்தேன். ரொம்பலாம் எனக்கு நேரமில்ல. மேட்ச் ப்ராக்டிஸ் இருக்கு. மிஸ்டர் மஹாதேவன் கூட இம்மீடியட்டா ஒரு மீட்டிங்கு அர்ரேன்ஞ் பண்ணு” என்றான் வேகமாக.

 

“ஓகே சார், யார் கூடன்னு அகைன் சொன்னீங்கன்னா…” காதில் சரியாக விழாததில் அவள் மீண்டும் கேள்வியாக இழுக்க, “மிஸ்டர் மஹாதேவன். தேவன் க்ரூப் ஆஃப் கம்பனீஸ்ஸோட எம்.டீ” என்ற யாதவ்வின் பார்வை அவளுடைய முகபாவனைகளில் நிலைக்குத்தி நின்றிருந்தது.

 

அவன் எதிர்பார்த்தது போல அந்த பெயரைக் கேட்டதுமே நிஹாரிகாவின் முகம் இறுக, தனக்குள் எழும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயன்றாள்.

 

விழிகளில் வலியோடு அவனைப் பார்த்தவளின் பார்வை, ‘தெரிந்துதான் செய்கிறாயா?’ என்ற கேள்வியை தாங்கி நிற்க, கொஞ்சமும் சலனமின்றி அவளுடைய பார்வையை எதிர்கொண்டான் யாதவ் அர்ஜூனா.

 

தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கி வலி நிறைந்த புன்னகை சிந்தியவள், “அர்ரேன்ஞ் பண்றேன் சார்” என்றுவிட்டு தன் வேலையை செவ்வெனச் செய்ய, இப்போது இறுகிப் போனது என்னவோ யாதவ்தான்.

 

அவனுடைய நினைவுகள் அந்த ஒரு நாளை அசைப்போட்டு பார்த்தது. 

 

ரெஸ்டாரென்ட்டில் இருவரும் சந்தித்து ஒரு வாரம் கழிந்த நிலையில், வழக்கம் போல் தன் நண்பர்களோடு சிரித்துப் பேசிக்கொண்டு வந்த யாதவ்வின் விழிகளுக்கு சிக்கியது அந்த காட்சி.

 

கிட்டத்தட்ட ஐம்பது வயதை தொட்டிருந்த ஒருவர் தன் காரில் சாய்ந்த வண்ணம் சிகரெட் புகையை ஊதித் தள்ளியபடி ஏதோ கோபமாக கத்திக்கொண்டிருக்க, அவர் முன் கீழுதட்டை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள் நிஹாரிகா.

 

அவளைக் கண்டதுமே ஆடவனின் கால்கள் சட்டென நிற்க, ஏனோ அந்த தருணத்தை அவனால் சாதாரணமாகக் கடக்க முடியவில்லை.

 

நண்பர்கள் அழைப்பதைக் கூட காதில் வாங்காமல் அவளைப் பார்த்தபடியே நின்றுக்கொண்டிருந்தவனுக்கு ஏனோ அழுகையை அடக்கிக்கொண்டு நின்றிருந்த நிஹாரிகாவின் முகத்தைப் பார்க்க தனக்குள் ஏதோ பிசைவது போல இருந்தது.

 

அந்த பெரியவர் பேசி முடித்து தன் காரிலேறி சென்றதும் போகும் வாகனத்தை வெறித்துப் பார்த்திருந்தவள், விழியோரம் கசிந்த விழிநீரை துடைத்துவிட்டு திரும்ப அவளெதிரே நின்றிருந்தான் யாதவ்.

 

அவனைப் பார்த்ததும் சற்று அதிர்ந்தவள் உடனே வராத புன்னகையை வரவழைத்து, “ஹாய்… நீங்க எப்போ வந்தீங்க? உங்க பேரு கூட ஆங்… யாதவ் ரைட்?” என எதுவுமே நடக்காதது போல சாதாரணமாகப் பேசினாள்.

 

ஆனால், லேசாக கலங்கியிருந்த விழிகளும் சிவந்த மூக்கும் அவளின் வலியை அப்பட்டமாகக் காட்ட, இமை வெட்டாமல் அவளையே அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான் யாதவ்.

 

“யார் அது? உன்கிட்ட கோபமா பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. பிடிக்கலன்னா சொல்ல வேணாம், ஷெயார் பண்ணா ரிலேக்ஸ்ஸா இருக்கும்னு தோனுச்சுன்னா ஐ அம் ஹியர்”

 

அவன் சொல்லிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்க, யோசனையோடு தரையை வெறித்திருந்தவள், “அது என் அப்பா. பேரு மஹாதேவன்”என்று சொல்ல, யாதவ்விற்கு திகைப்பாக இருந்தது.

 

அந்த பெரியவர் அணிந்திருந்த உயர்ரக ஆடையிலிருந்து அவர் வந்து சென்று  கார் வரை அத்தனை விலையுயர்ந்த ஆடம்பரத்தோடு இருக்க, நிஹாரிகாவின் சாதாரண தோற்றத்தை புரியாமல் பார்த்தான்.

 

அவனின் கேள்வி தாங்கிய விழிகளை வைத்தே அவன் நினைப்பதை உணர்ந்தாள் போலும்!

 

விரக்திப் புன்னகை புரிந்தவள், “என் அம்மா இரண்டாந்தாரம். மொதல் பொண்டாட்டிய ஏமாத்தி எங்கம்மா கூட இருந்திருக்காரு. அதனால கல்யாணம் பண்ணாமலேயே நான் பொறந்துட்டேன். என்மேல பாசம்லாம் இல்ல, எங்கம்மாவுக்காக அப்பப்போ வந்து வீட்டு செலவுக்கு காசு கொடுத்துட்டு போவாரு. அவ்வளவுதான்” என்று சொல்லி முடிக்க, யாதவ்க்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

 

“ஓ…” என்று யோசனையோடு இழுத்தவன் சில கணங்கள் கழித்து, “எங்க அப்பா கூட இரண்டு கல்யாணம்தான். நான் ஸ்கூல் படிக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க, மூனே மாசத்துல அந்த பொம்பளைய கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னாரு. ஆனா.. யாராலயும் என் அம்மாவோட இடத்த நிரப்ப முடியாது. அவங்க கூட நான் நெருங்கி பழக நினைச்சதும் இல்ல, என் பக்கத்துல அவங்கள நெருங்க விட்டதுமில்ல. ஐ ஜஸ்ட் கான்ட் அக்செப்ட் ஹெர்” என்று முடித்தான்.

 

நிஹாரிகாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

 

“இரண்டாந்தாரம யாருதான் ஏத்துப்பா? என்னதான் ஃபர்ஸ்ட் வைஃப ஏமாத்தி அம்மாவோட இருந்திருந்தாலும் அவங்க கூடதான்  இப்போ வரைக்கும் அப்பா இருக்காரு. அவங்க பண்ண தப்பால கரை என்மேல”

 

அவளுடைய வார்த்தைகளில் அத்தனை வலி.

 

“சரி விடு, உனக்கு கிரிக்கெட்னா பிடிக்குமா நீஹா?” என்று அவன் விழிகளில் ஆர்வத்தோடு கேட்க, உதட்டை சுழித்து யோசிப்பது போல் பாவனை செய்துக்கொண்டே இல்லையெனும் விதமாக தலையாட்டினாள் நிஹாரிகா.

 

கிரிக்கெட் என்றாலே உயிரை விடுபவனுக்கு இதைக் கேட்டதும் இதயம் வெடிக்காத குறை!

 

“வாட்! பிடிக்காதா? ஓ காட்… கிரிக்கெட் பிடிக்காதுன்னு சொல்ற மொதல் ஆள் நீதான். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. நான் இந்தியன் டீமுக்காக விளையாடி ஃபேமஸ் ஆனதும் உனக்கு மட்டும் என் ஆட்டோக்ராஃப் தரவே மாட்டேன். ஐ அம் டேம்ன் ஷுவர்” என்று காலைரை தூக்கி விட்டவாறு சொல்ல, பக்கென்று சிரித்துவிட்டாள் அவள்.

 

“பார்க்கலாம் பார்க்கலாம்” அவள் சொல்ல, தன் எண்ணை அவளிடம் நீட்டினான் யாதவ்.

 

“இவ்வளவு ஷேர் பண்ணிட்டோம், நம்பர் ஷேர் பண்ணலன்னா எப்படி? திஸ் இஸ் மை நம்பர். எப்போ வேணா கால் ஆர் மெசேஜ் பண்ணு.. பாய் நீஹா” அவன் சொல்லிவிட்டு தூரமாக நின்றிருந்த தன் நண்பர்களை நோக்கி பாய்ந்து ஓட, போகும் அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் நிஹாரிகா.

 

அவனுடைய குறும்பு விழிகளும் பேச்சும் அவளை தன்னை மீறி ரசிக்க வைக்க, ஓடிச் சென்று திரும்பி அவளைப் பார்த்தவனின் பார்வையிலும் ஏதோ ஒன்று இருந்தது.

 

அவன் அந்த கடந்தகால நினைவுகளில் மூழ்கியிருக்க, “சார்…” என்ற அழைப்பில் நடப்புக்கு வந்தான் யாதவ்.

 

தன் முன்னே கையில் ஃபைலோடு நின்றிருந்தவளை அவன் கேள்வியாகப் பார்க்க, “வன் ஹவர்ல மீட்டிங் இருக்கு சார், மிஸ்டர் மஹாதேவன் கூட” என்ற நிஹாரிகா ஓரமாக போடப்பட்டிருந்த தன் மேசையில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

 

நேரமும் காலில் சக்கரத்தை கட்டியது போல ஓட, சரியாக யாதவ்வின் ஆஃபீஸ் அறையின் கதவு திறக்கப்பட்டது.

 

“ஹேய் மை பாய்…” உற்சாகக் குரலில் கத்திக்கொண்டே அறைக்குள் நுழைந்த மஹாதேவன் அவனோடு கைக்குலுக்கி விட்டு அவனெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, யாதவ்வின் பார்வை ஓரமாக நின்றிருந்த நிஹாரிகாவின் மீது பதிந்தது.

 

அவளோ இறுகிப் போய் நின்றுக்கொண்டிருந்தாள்.

 

“இப்போ எல்லா உன் விளையாட்டுக்கு நான் பெரிய ஃபேனாகிட்டேன் யாதவ். வாவ்! கிரிக்கெட் பார்க்காதவங்க கூட உனக்காக பார்ப்பாங்க. என்ட் கேர்ள் ஃபேன்ஸ் கூட அதிகமாமே, லக்கி மேன்! ஹவ் கென் யூ மேனேஜ் போத். ரியலி யூ ஆர் இன்ஸ்ப்ரேஷன்”

 

அவர் புகழ்ந்துத் தள்ள, ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தவனைப் பார்த்து அவருக்கே சப்பென்று இருந்தது.

 

“புதுசா கட்ட போற ஹோட்டல்ல நீங்க என் கூட கொலாப்ரேஷன் பண்றத பத்தி பேசினதோட சரி, அதுக்கப்பறம் எந்த ஸ்டெப்பூம் எடுக்கல. இஃப் யூ டோன்ட் மைன்ட், உங்க ஐடியா என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான் அவன் தீவிர முகபாவனையோடு.

 

“உன் புது ஹோட்டலுக்கு இன்வெஸ்ட் பண்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. பட் ஆல்ரெடி நிறைய ப்ராஜெக்ட்ஸ் பென்டிங்ல இருக்கு. யூ நோ வெல், எனக்கு இந்த ஒரு இன்டஸ்ட்ரி மட்டும் இல்ல. ஐ ஹேவ் டூ ஹேன்டில் எவ்ரிதிங். சோ… நீதான் ஹோட்டலோட கன்ஸ்ட்ரக்ஷன் வர்க்கஸ்ஸ மெனேஜ் பண்ணணும்”

 

அவர் சொல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கினான் யாதவ்.

 

“தட்ஸ் நொட் அ பிக் டீல், மிஸ் நிஹாரிகா, ஹோட்டல் ப்ராஜெக்ட் பத்தி பேச போறத நோட் பண்ணிக்கோங்க என்ட் ப்ராஜெக்ட் பத்தின ஃபைல சார்கிட்ட கொடுக்குறீங்களா ப்ளீஸ்”

 

அவன் வேண்டுமென்று செய்தான். அதை அவளும் அறியாமலில்லை.

 

அந்தப் பெயரைக் கேட்டதுமே மஹாதேவனின் விழிகள் சுருங்க அவள் தன்னருகில் வருவதற்கு முன்னரே திரும்பிப் பார்த்தார்.

 

“நிஹாரிகா…” அவருடைய இதழ்கள் முணுமுணுத்தன.

 

அவள் செய்த காரியம் ஞாபகத்திற்கு வர, பற்களைக் கடித்துக்கொண்டவருக்கு தன் கோபத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவும் முடியவில்லை.

 

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அவர் அமர்ந்திருக்க, அவளோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

 

தலை குனிந்தபடியே ஃபைலை அவரிடம் நீட்டியவள் அமைதியாக சென்று யாதவ்வின் அருகில் நின்றுக்கொள்ள,  தன் சுழலும் நாற்காலியில் சுழன்றபடி இருவரின் முகபாவனைகளையு ம் அமைதியாக வேடிக்கைப் பார்த்திருந்தான் யாதவ் அர்ஜூனா.

 

 

**********

 

 

கதை எப்படி போகுதுன்னு உங்க கருத்துக்கள சொல்லுங்க ஃப்ரென்ட்ஸ்.. 😍😍

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!