Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 19

விஜயதேவியின் போட்டோவிற்கு பூ வைத்து விட்டு, அதன் முன் நின்று கண் மூடி வேண்டிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.

“விஜி தீதி, நீங்க தான் நான் செஞ்சுட்டு இருக்கிற வேலைகளுக்கு துணையா இருக்கணும்.

நான் நம்ம பொண்ணு ஜான்வியோட நல்லதுக்காக, அவளோட சந்தோசத்துக்காக தான் இந்த வேலையெல்லாம் செய்றேன்.

அவள் அந்த பரணி பையனை ரொம்ப விரும்புறா, அவனைக் கல்யாணம் செய்துட்டா தான் அவ சந்தோசமா இருப்பா, ஆனா அவ கல்யாணத்துக்கு கண்டிப்பா அவளோட பப்பா சம்மதிக்கவே மாட்டார்.



Advertisement

நிகிலோட தான் அவள் கல்யாணம் என்பதில் அவர் ரொம்ப தீர்மானமா இருக்கார்.

ஜான்வி யாரை வேணுமின்னாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும். ஆனா உங்க வாழ்க்கையைக் கெடுத்த என் அண்ணன் சந்தீப்பின் பையனை மட்டும் கல்யாணம் செய்யவேக் கூடாது.

அந்த பேராசைப் பிடிச்ச குடும்பத்திற்கு என்ன ஆனாலும் சரி ஜான்வி மருமகளா போகக் கூடாது!

Advertisement

ஜான்வி பப்பா, அவளைத் தன்னோட வச்சுக்க நினைக்கிறது கூட தப்பில்ல, தனக்கு பிறகு ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தை அவள் நடத்தனும்ங்கிற வரை கூட சரி தான்!

Advertisement

ஆனால் நிகிலைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்வது மட்டும் என்றைக்குமே  சரியில்லை!

என்னை வைத்துப் பிடிக்க நினைத்த இந்த  சொத்துக்களை, இப்போது அவர் பையன் மூலம் அடைய நினைக்கிறார் என் அண்ணன்!

இல்லையென்றால், அந்த மதறாசி பெற்ற பெண்ணின் மேல் இவருக்கு இவ்வளவு அக்கறையா?

Advertisement

என்றைக்கோ அவளை இந்த வீட்டிற்கே வர விடாமல் செய்திருப்பார் அவர்!

விஜி தீதி, என் மேல் எவ்வளவு பிரியமா இருந்தாங்க.

அவங்க வாழ்க்கையைப் போய் என்னையை விட்டே கெடுக்க வச்சுட்டாங்களே!”

ஊர்மிளாவுக்குள் இன்றும் கூட குற்றஉணர்ச்சி உண்டு!

அது விஜியே அவளை சமாதானம் செய்து ஜகதீஸ் கூட வாழ சொன்ன பிறகும் கூட!

கண் மூடி வேண்டிக் கொண்டவள், போனை எடுத்துக் கையில் கால் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நம்ம கனகுவின் போன் காலை!

காத்திருக்கும் நேரம், அவளின் மனம் கடந்த காலத்தை எண்ணி அசைப் போட்டது!

ஜகதீஸ் விஜியை அதிரடியாய் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்ட சமயம் அது!

சொந்தக்காரர்கள் அனைவருக்கும் விசயம் தெரிந்து, ஜகதீஸ் வீட்டுக்கு வந்து விட்டனர்.

அவன் திருமணம் செய்து கொண்டு கூட்டி வந்திருக்கும் டாக்டர் மணமகளைக் காண!

அவர்களுள் விஜியை விட வயதில் சிறியப் பெண்ணான ஊர்மிளாவும்!

அவளுக்கு விஜியைப் பார்த்தவுடன் ரொம்பவும் பிடித்து விட்டது!

அவள் படிக்கவில்லை. பள்ளி இறுதிக் கூட தாண்ட வில்லை! நிறுத்தி விட்டார்கள்!

அதனால் அவளுக்கு படித்தவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும்.

முன்பு ஜகதீசை, இப்போது அவனுடன் சேர்ந்து விஜியையும்.

ஊர்மிக்கு நன்றாகவே தமிழ் தெரியும்!

அவள் குடியிருந்த காம்பவுண்டில் ஒரு தஞ்சாவூர் தமிழ் பிராமணக் குடும்பமும் இருந்தது!

ஊர்மிக்கு மட்டுமல்ல, அவள் அண்ணன் சந்தீப்பிற்கும் கூட.

அவள் அவர்களிடம் இருந்து தமிழ் சமையலையும் நன்குக் கற்று இருந்தாள்!

குறிப்பாக மசால் தோசையும், சாம்பாரும்!

அதனால், அவளுடன் ஹிந்தியில் பேச முற்பட்ட விஜியிடம் தனக்கு தமிழ் நன்றாகவே பேச வரும் என்று சொல்லி ஆசையாக பேசினாள்!

அவளுக்கும் விஜியை மாதிரி நிறையப் படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதையும், அது முடியாமல் போனதையும் சொன்னாள்.

அவளுடன் பேசிய விஜி, ஏற்கனவே படிப்பதற்கு என்று உதவி கேட்டால் எவருக்கும் தாங்காமல் உதவும் குணம் கொண்ட விஜி, ஊர்மிளாவை ஒரு ஓப்பன் யுனிவர்சிட்டியில் சேர்த்து அவள் ஆசைக்கு ஒரு டிகிரி வாங்க வைத்தது யாருமே அறியாத செய்தி!

 இன்று வரை ஜகதீஸ் கூட!

அப்படிப்பட்ட விஜியின் வாழ்க்கையையே தன்னைக் கொண்டே அவளின் அண்ணன் கெடுத்து விட்டது இன்று வரை அவளுக்கு ஆறாத காயம் தான்!

அப்போது ஜான்வி சிறு பெண்!

விஜிக்கு அவள் பிறந்த வீட்டு சொத்து கிடைத்து இருந்த சமயம்!

அதை அவள் ஜக்தீசை கலந்து ஆலோசிக்காமல் அவள் இஷ்டத்திற்கு முதலீடு செய்தது,  தொழில் பார்ட்னரை சேர்த்தது உள்ளிட்ட சிறு சிறு உரசல்கள் விஜிக்கும் ஜகதீஸ்க்கும் இடையில் ஏற்பட்ட சமயம்!

அவ்வளவு ஒன்று பெரிதானவை அல்ல!

ஓரிரு வாரத்தில் தானாக சரியாகி விட்டிருக்க வேண்டிய ஒன்று தான்!

ஏன் என்றால், அவள் செய்தது சரியானது தான் என்றே ஜகதீஸ் உணர்ந்தும் விட்டிருந்தான். சொல்லி விட்டு செய்ய வில்லை என்ற கோபம் மட்டுமே!

ஆனால் தன் சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம், ஏதோ ஒரு மன நிலையில் தன் வயதையொத்த இளைஞன் என்ற முறையில் சந்தீப்பிடம் இதைப் பற்றி கொஞ்சம் வாயை விட்டு விட, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டான் சந்தீப்.

அதற்கப்புறம், அவன் தனியே ஊருக்கு  அவன் பெற்றோரைப் பார்க்க விஜி இல்லாது தனியே வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம், சந்தீப் ஜக்தீசை சென்று சந்திப்பான்.

கூடவே ஊர்மிளாவையும் வற்புறுத்தி அழைத்து சென்று விடுவான்!

ஜகதீஸ்,  ஏதோ பூமிக்கு தவறுதலாக வந்து விட்ட தேவ தூதனைப் போல கவனித்துக் கொள்ள வைப்பான், ஊர்மிளாவை விட்டு!

தரையில் கால் பட்டால் கூட அவனுக்கு நொந்து விடும் என்பது போல இருக்கும் அந்த கவனிப்பு!

ஊர்மிளாவுக்கு அண்ணனின் எண்ணம் புரிய தான் செய்தது.

அவன் மட்டும் ஆணாக இல்லாமல் பெண்ணாக பிறந்து இருந்தால், எப்படியாவது ஜக்தீசை வளைத்துப் போட்டு கல்யாணம் செய்துருப்பான் என்றே தோன்றும் அவளுக்கு!

ஜக்தீசின் சொத்துக்கள் மீது அவ்வளவு ஆசை அவனுக்கு!

சந்தீப் ஜகதீஸ் இருவரின் குடும்பமும் ஒரே மாதிரி ஸ்டேட்டஸில் இருந்தவர்கள் தாம்!

ஆனால் இவர்கள் குடும்பம் சோம்பேறியாய், ஊதாரியாய் இருந்து இருந்ததையும் அழித்து விட்டு, இப்போது ஒன்றுமில்லாமல் இருக்க, ஜகதீஸ் குடும்பம் கடும் உழைப்பாளிகள் மற்றும் அடுத்த அடுத்த தலைமுறையைப் படிக்க வைத்தும் இருந்தததால் அவர்கள் சொத்து ஏறிக் கொண்டே போயிருந்தது.

ஜக்தீசுக்கு, எப்படியாவது அவன் தங்கை ஊர்மிளாவைக் கட்டி வைத்து, அவள் மூலம் உள்ளே நுழைய அவன் குறுக்கு வழியில் யோசித்துக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாரா வண்ணம், ஜகதீஸ் ஒரு மதராசியை கல்யாணம் செய்துக் கொண்டு வந்து விட்டான்!

அப்படி வந்தவளும்  ஒரு டாக்டர், கூடவே அவளுக்கும் சொத்து பத்துக்கள் நிறையவே இருக்க, சந்தீப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஆரம்பத்தில்!

ஆனால், ஜகதீஸ் கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து, அதுக்கு ஆறு வயது ஆகி விட்ட நிலையில், மீண்டும் தனக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுத்து இருப்பதாகவே எண்ணினான் சந்தீப்!

அவன் சொல்வதை செய்ய மறுத்த ஊர்மிளாவை,  செய்யாவிட்டால் அவர்களின் அம்மாவை கொன்று விடுவேன் என்று பயமுறுத்தி செய்ய வைத்தான்!

கடும் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பம் அது!

பெண்களை காலுக்கு கீழே போட்டு மிதிப்பவர்கள்!

செய்தாலும் செய்வான், அம்மா என்றும் பாராமல்!

எனவே வேறு வழியில்லாமல் அவன் சொல்லுக்கு அவளும் ஆட வேண்டியிருந்தது!

பெண்களின் சாபத்தினாலே தான் அவர்கள் குடும்பம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது என்பதும் அவள் எண்ணம்!

சந்தீப், ஜகதீஸ் அங்கு வரும் போதெல்லாம் ஊர்மிளா அவன் மீது உயிரையே வைத்து இருப்பதாகவும், அதனால் தான் இப்படி கவனிக்கிறாள் என்றும் சொல்லுவான்!

அப்போது ஜக்தீசிடம் இருந்து ஒரு சின்ன புன்னகை மட்டுமே வந்து அவனுக்கு எரிச்சல் உண்டாக்கும்!

அப்போதும் அவன் முயற்சியை மட்டும் கை விடவே இல்லை!

ஊர்மிளா, “அடுத்தவர் புருஷன் மேல் ஆசை வைக்க மாட்டேன்” என்று பிடிவாதமாய் மறுத்து சொல்லியும், கதற கதற அவளை இழுத்து சென்று அவள் கையில் ஜக்தீசின் பெயரைப் பச்சைக் குத்தி அழைத்து வந்து ஜக்தீசிடம் காட்டினான்.

ஜகதீஸ் அவளைத் திட்டி விட்டு, அவளின் காய்ச்சலுக்கு ஊசிப் போட்டு விட்டான்!

இதே மாதிரி பல நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி, ஒரு கட்டத்தில் நம்ம விஜி, இந்த ஊர்மிளாவைப் போல் நம்மை கவனித்துக் கொண்டால் நல்லாயிருக்கும் என்பது போல நினைப்புகள் ஜகதீஸ் மனதில் ஏற்படத் தொடங்கியே விட்டன!

க்ளைமேக்ஸ் சீன் போல, ஒரு நாள் கிராமத் திருவிழாவிற்கு ஜான்வியை மட்டும் தூக்கிக்கொண்டு ஜகதீஸ் அவன் சொந்த ஊருக்கு சென்றிருக்க, அங்கே சென்னையில் விஜிக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலை!

அவள் ஜகதீஸ் கூட வர வில்லை, இரண்டு நாட்கள் கழித்து வருகிறேன் என்று சொல்லி விட்டாள்.

ஊர்மிளாவுக்கு இந்த திருவிழாவில் வைத்து அண்ணன் ஏதோ சதி செய்து அவளுக்கும் ஜகதீஸ்க்கும் கல்யாணமே செய்து வைக்க இருப்பது தெரிய வந்தது!

அவள் அவனிடம் அதற்கு ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்லி வம்பு பண்ண, ஒத்துக் கொள்ளாவிட்டால், அந்த ஜான்வியைத் திருவிழாவில் வைத்து கடத்திக் கொண்டு போய் எங்காவது ரெட்லைட் ஏரியாவில் விட்டு விட்டு வந்து விடுவேன், இல்லை கழுத்தை நெறித்துக் கொன்றுப் போட்டு விடுவேன் என்று மிரட்டினான்.

ஜான்வியின் முகத்தைப் பார்த்தாள் ஊர்மிளா, பால் மனம் மாறாத முகம்! ஆறு வயது சிறுமி!

“ச்சே அவளைப் போய்!”

இதற்கு அவன் மனைவியும் கூட்டு!

அவளும் பெண்ணாக இருந்து கொண்டு!

சந்தீப்பின் மகன் நிகிலும் அப்படியே! அந்த சின்ன வயதில் கூட அவனுக்கு ஆணாதிக்க புத்தி தான்! அத்தை என்றும் பார்க்க மாட்டான்!

தான் உயிருடன் இருந்தால் தானே, இவன் ஆட்டம் எல்லாம்! என்று நினைத்தவள் எலி பாஷாணத்தை குடித்து விட்டாள்!

ஆனால் அவள் கெட்ட நேரம், அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விட்டான் சந்தீப்!

அவளுக்கு, தான் வேறு மாப்பிள்ளை பார்த்ததாகவும், அவளுக்கு அது பிடிக்காமல் இப்படி செய்து விட்டாள்!

அவள் மனதில் ஜகதீஸ் மட்டுமே இன்னமும் இருக்கிறான் என்றும் சொல்லி அழுதான்!

மேலும் ஊர்க்காரர்களை வைத்து, “அவளை பேருக்கு ஒரு கல்யாணம்னு ஒண்ணு செஞ்சிட்டு நீங்க உங்க மனைவி குழந்தையோடவே போய்டுங்க, அது மட்டும் போதும்” என்றும் சொல்ல வைத்து, அவனை நெருக்கினான்!

ஜகதீஸ் வேறு வழியில்லாமல் ஊர்மிளாவின் கல்யாணம் செய்து தீயை வலம் வந்து கொண்டிருந்த போது சரியாக வந்து சேர்ந்தாள் விஜி!

அதிர்ச்சியுடன் அவள் நிற்பதைக் கண்டு ஓடி வந்து அவள் காலில் விழுந்து கதறி விட்டாள் ஊர்மிளா!

நடந்ததுக்கு சாரி கேட்டு நின்ற ஜக்தீசிடம் ஒன்றே ஒன்று தான் கேட்டாள் விஜி!

“உங்க மனசுல ஒரு கணமாவது எனக்கு பதில் இந்த ஊர்மிளாவைக் கட்டி இருக்கலாம்னு தோணியிருக்கா?”

ஜகதீஸ் தயங்க, “ம்ம்.. சொல்லுங்க” என்றாள் விஜி!

“அது வந்து.. நீ இந்த ஊர்மிளா மாதிரி இருந்திருக்க கூடாதான்னு சில சமயம் நினைசுருக்கேன்! இவளை மாதிரி என் கிட்ட கேரிங்கா, எனக்கு ஈக்வலா பேசாம, நடந்துக்காம. இப்படி!”

“ஸோ, உங்க மனசுல கம்பேரிசன் வந்து இருக்கு, என்னை விட அவள் பெட்டர்ன்னு கூட தோணியிருக்கு, மொத்தத்தில் உங்களுக்கு அவளையும் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க? இல்ல?”

“அப்படி இல்லை விஜி, நான் உன்னையும் ரொம்ப லவ் பண்றேன்!”

“இதே மாதிரி என்ன சூழ்நிலை வந்தாலும் நான் உங்களை மட்டுமே லவ் பண்ணுவேன், என் மனசில் வேற யாரும் வந்திட முடியாது, அவர்கள் எவ்வளவு பெட்டரா இருந்தாலும்!

ஆனா நான் உங்களுக்கு சாய்ஸ் ஆகிட்டேன்ல! ஓகே! இனி நாம சேர்ந்து இருப்பது, சாத்தியமேயில்லை! நாம் பிரிஞ்சுடுவோம், அந்த பொண்ணுக்கிட்டயாச்சும் ஜென்யூனா இருங்க!”

“ஏய், என்ன டக்குன்னு இப்படி சொல்லிட்ட? என்னால நம்ம ஜானுவ பிரிஞ்சி எல்லாம் இருக்க முடியாது, உன்னையும் தான்!”

“நான் தான் பிரிஞ்சு போறேன்னு சொன்னேன், ஜானுவ விட்டு போங்கன்னு நான் எப்ப சொன்னேன்? நீங்க பண்ணுன தப்புக்கு அவளுக்கு ஏன் பப்பா இல்லாம போகணும்!”

“அப்ப நீ என்ன சொல்ல வர?”

“அவ கிட்ட நீங்க எப்போதும் போல தான் இருக்கணும்! நான் தான் உங்க லைபில் இருந்து விலகறேன்!”

“தீதி, ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க, இது என் சம்மதத்தோட நடந்தது இல்ல! என்னை மீறி நடந்தது!

நான் ஒரு நாளும் உங்களுக்கு துரோகம் நினைச்சுது இல்ல! என்னை நம்புங்க” என்று கதறிய ஊர்மிளாவை சமாதானம் செய்து ஜகதீஸ் கூட அவள் வாழ்க்கையை ஆரம்பிக்க சொல்லி வாழ்த்தி விட்டு ஒதுங்கி கொண்டாள் விஜி!

ஊர்மிளா அன்று முதல் ஜான்வியை தான் தன் மூத்த மகளாக எண்ணி வருகிறாள்.

லீவுக்கு வரும் அவளை நன்கு சீராட்டி தான் அனுப்புவாள். தன் மகன்களுக்கும் அதையே சொல்லி வளர்த்தும் இருந்தாள்.

பிள்ளைகள் விசயத்தில் அவள் அதிர்ஷ்டசாலி தான்!

இருவரும் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைகள்!

சந்தீப்பை அவள் உள்ளே நுழைய விட வில்லை அவள் ஜகதீஸ் கூட வாழ ஆரம்பித்த பின்!

ஊர்மிளாவை ஜகதீஸ்க்கு கட்டி வைத்தும் புண்ணியமில்லை பாவம் அவன்!

எனவே அவன் இப்போது ரூட்டை மாற்றி, தன்னால் முடியாதது, தன் தங்கையைக் கொண்டும் முடியாததை, இப்போது மகனைக் கொண்டு முடிக்க திட்டமிட்டு, அவன் ஜான்வியை டார்கெட் செய்து, எப்படியாவது நிகில் ஜான்வி கல்யாணம் மூலம் விட்டதைப் பிடிக்க எண்ணியிருந்தான் சந்தீப்.

ஜான்வி லீவுக்கு அவள் பப்பாவை பார்க்க வரும் போதெல்லாம், நிகிலை அங்கே அனுப்பி வைத்து விடுவான்.

படிப்பு சரியாக வராத அவனை, அந்த டுயுஷன் இந்த ட்யுஷன் என்று அனுப்பி, தத்தி தாவி எம்பிபிஎஸ் வரை கூட கொண்டு வந்து விட்டான், சகல முறைகளையும் கையாண்டு!

சந்தீப்பிற்கு எப்படியாவது  ஜெகதீஸ் சொத்துக்கள் வேண்டும்!

நிகிலுக்கு பின் அவனுக்கு  பெண் குழந்தை பிறந்து இருந்தாலும் இந்த ஊர்மிளா தன் பையனுக்கு கட்டியிருப்பாளா என்று சந்தேகம் தான்!

இருக்கவே இருக்கு, ரத்த பந்தத்தில் மணம் முடிக்க கூடாது என்ற மருத்துவ காரணம், ஜக்தீசின் வாயை அடைக்க!

எனவே எப்படி பார்த்தாலும் இப்போது ஜான்வி ஒன்றே அவனுக்கு இருக்கும் துருப்பு சீட்டு!

அவளை நிகிலுக்கு கட்டி வைத்து, ஜான்வியை மருமகளாக கொண்டு வந்து விட வேண்டும்!

பின் அந்த மருமகளை எப்படி அடக்கி, தன் வசம் கொண்டு வர வேண்டும் என்பது அவனுக்கும் அவன் மனைவிக்கும் நன்றாகவே தெரியும்!

இது தெரியாமல், இந்த ஜகதீஸ், என்னமோ நிகில் தான் சரியான சாய்ஸ், வீட்டோடு மாப்பிள்ளை ஆகவும் இருப்பான், ஹாஸ்பிட்டல் நிர்வாகத்தில் ஜான்விக்கு உதவியாய் இருப்பான் என்று தப்பு கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறார்!

ஊர்மிளா பெருமூச்சு விட்டு, “கடவுளே நீ தான் எப்படியோ, ஜான்வியை சரியான இடத்தில் கொண்டு சேர்த்து இருக்க, இப்ப அங்க இருக்கிற பெரியவங்க , அவளுக்கு ஒரு நல்லது செய்ய நினைக்கும் போது, இந்த ஜான்வி பேட்டி, என்னடாவென்றால் அவள் பப்பாவின் சம்மதம் முக்கியம் என்று நினைத்து தடைப் போட்டுக் கொண்டிருக்கிறாள்!”

நல்லவேளையாக, அன்று ஜகதீஸ் கனகுவிடமும் ஜானுவிடமும் ஜான்வி கல்யாணம் விசயமாக பேசிய போது ஊர்மிளா அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஜகதீஸ் அங்கிருந்து போன பின், ஜகது பேசிய நம்பரை எடுத்து குறித்துக் கொண்டவள், பின் கனகுவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசினாள்!

பேசி விபரம் தெரிந்து கொண்டவள், தன் பையன்கள் உதவியுடன் ஒரு நம்பிக்கையான தனியார் துப்பறியும் நிறுவனம் கொண்டு இவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டாள்!

மேலும் அவளுக்குத் தெரிந்த தமிழ்க் குடும்பம் ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருந்தது!

அவர்கள் மூலமும் விசாரித்து அறிந்து கொண்டு மீண்டும் கனகுவைத் தொடர்பு கொண்டு பேசி, அவளுக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதம், அவர்களின் முயற்சிகள் அனைத்திற்கும் அவள் துணையாக இருப்பேன் என்றும் ஆக வேண்டியதைப் பாருங்கள் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாள் ஊர்மிளா!

வந்து விட்டது கனகுவிடமிருந்து போன்! பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் ஊர்மிளா!

“இங்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு, நீ எப்படியாவது, இதை ஜானு அப்பாவிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்! ஜானுவை அவள் அப்பாவிடம் பேச விட்டுடாதே, விடிஞ்சால் கல்யாணம் என்னும் சமயம் மட்டுமே அவருக்கு செய்தி தெரிய வேண்டும்!

அப்போது தான் அவரால் எதுவும் செய்ய முடியாது!

இது கட்சிக் காரர்கள் நடத்தும் கல்யாணம் வேறு!

அதனால அவரால் ஒண்ணும் செய்ய முடியாது லாஸ்ட் மினிட்டில் வந்தால்!

ஆரம்பத்தில் தெரிந்து விட்டால் அவ்வளவு தான்!”

மீண்டும் இதையே வலியுறுத்தி விட்டு போனை வைத்து விட்டார் நம்ம ஆல்ரவுண்டர் கனகு!

போட்ட ப்ளான்படியே எல்லாம் பக்காவாக நடந்து முடிந்தது!

கூட இப்போது பக்கபலமாக ஜானகியும் சரவணனும் வந்து விட, அவர்களின் பண்ணை வீட்டில் இருந்தே பெண் அழைப்பு நடந்தது!

விஜி கல்யாணத்தின் போது அவர் ஆசைப்பட்ட அனைத்தையும் ஜான்விக்கு செய்து ஆசையை தீர்த்துக் கொண்டார் ஜானகி!

பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும்!

சரவணன் குடும்பத்தினரும் ரொம்ப சந்தோசமாக ஈடுபட்டிருந்தனர்!

சரவணனின் மைத்துனன் ரவியும் அவன் மனைவியும் தான் தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து ஜான்வியை தாரை வார்த்து கொடுக்கப் போவது!

ஜகதீஸ் ஊர்மிளா வரா விட்டால்!

ஆனால் கல்யாணம் அன்று விடிகாலையில் கிடைத்த ப்ளைட்டில் ஏறி அப்புறம் கார் பயணம் என்று மாறி மாறி வந்து எப்படியோ வந்து விட்டார் ஜகதீஸ்!

கனகு & கோ ப்ளான் போட்டது போல அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை! எதையும் தடுக்க முடியவில்லை!

சுற்றிலும் அத்தனை கட்சிக் கொடிகள், பேனர்கள், கரை வேட்டிகள்!

ஜான்வியின் அப்பா என்று தெரிந்தவுடன், “பெண்ணோட அப்பா வந்தாச்சு என்று அவரை அள்ளிக் கொண்டு போய் நேராக மணவறையில் தான் விட்டார்கள்!”

பப்பாவைக் கண்டதும் ஜான்விக்கு ஒரே சந்தோசம்!

அப்பா, எப்படியோ இந்த ஊர்மி சித்தி, அவள் ஜான்வியிடம் சொன்னபடி(?!) அவள் பப்பாவை சரியான நேரத்தில் கூட்டி வந்து விட்டாள்!

ஜானகி, சரவணன், ஜகது,கனகு, ஆனந்த கண்ணீர் விட்டு நின்றுருக்க, அப்பா தினகரன், அம்மா தமிழரசி, சித்தப்பா பாஸ்கரன் சித்தி வத்சலா, தாமரை சித்தி, தெய்வமாய்  கதிர் ஆசிர்வதிக்க, தங்கைகள் பாரதி, பவித்ரா தம்பி பரத், விக்கி, செல்வி மணி உள்ளிட்ட உடன்பிறப்புகள், நண்பர்கள் நலம்விரும்பிகள் வாழ்த்த ரொம்ப சந்தோசமாகவே பரணியின் கையால் தாலிக் கட்டிக்கொண்டாள் ஜான்வி!

தாரை வார்த்துக் கொடுத்த ஊர்மிளாவுக்கோ, பெற்ற தாயைப் போல அப்படி ஒரு சந்தோசம்!

அவள் மனதில் நீண்ட வருடமாக இருந்து வந்த அந்த குற்றவுணர்ச்சி கொஞ்சம் குறைந்து போல இருந்தது அவளுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!