Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

வெந்து தணிந்தது காதல் – 12

 

தலையைப் பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்திருந்தவள் கூறிய வார்த்தைகளில் சற்று திகைத்துத் தான் போனான் சூர்யவர்மன்.

“என்ன சொல்லறீங்க? இங்க எப்படி ஷிவ் வந்திருக்க முடியும்?” என்று கேட்டவனின் மனதுக்குள், நேற்றிரவு இதே வீட்டின் தெரு வழியே ஷிவ் சென்றது நினைவு வந்தது.

ஒருவேளை நிஜமாகவே வந்திருப்பனோ? என்ற எண்ணமே அவனது உடல் பற்றி எரியும் அளவுக்கு ஆத்திரம் கொடுத்தது.



Advertisement

தனக்குள் உழன்றிருந்த நவிராவோ..

“இல்ல சூர்யவர்மன், இந்த ரூம்ல ஷிவ் யூஸ் பண்ற பெர்ஃபியூம் வாசம் வருது.” என்று நடுங்கும் உதடுகளுடன் கூற, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்று அவன் கண்கூடாகப் பார்த்திருக்கிறான்.

Advertisement

ஆனால் அதே சமயம், இருவரும் தனித்திருந்த முந்தைய இரவில் இருவரின் முகத்திலும் தென்பட்ட பாவத்தில் கோபமில்லை.. ஆத்திரமில்லை.. ரௌத்தரமுமில்லை!

Advertisement

இப்பொழுது பார்த்தால், இங்கே.. இந்த அறைக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் ஷிவ் வந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?

அவன் வந்திருப்பானோ என்ற சந்தேகத்திலேயே இப்படி அடி வெட்டப்பட்டு முறியும் மரமாக கீழே விழுந்திருக்கிறாளே நவிரா.. இவளது மனநிலை தான் என்ன? என்று பெரும் குழப்பமாக இருந்தது அவனுக்கு.

அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவனது மொபைலுக்கு அழைப்பு வர, யாரென்று எடுத்துப் பார்த்தால்.. அழைத்தது தயாளன்.

Advertisement

யோசனையுடன் போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க, மறுமுனையில் அவரோ கத்தத் துவங்கினார்.

“உனக்கும், உன்னோட தலைவிக்கும் அறிவு இருக்கா இல்லையா? பெருசா நான் தான் இந்தக் கட்சியையே காப்பாத்தப் போறேன்னு அந்தக் குதி குதிச்சா அவ.. இப்போ இன்னைக்கு ப்ரெஸ் மீட்டுக்கு வரதுக்கு கூட முடியாம தூங்கி வழிஞ்சுட்டு இருக்காளா?” என்று அவர் கண்டபடி கத்த, அவர் கத்திய சத்தம் போனைத் தாண்டி வெளியே கேட்டது.

புருவச் சுளிப்புடன் தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்திருந்த நவிராவோ, அவர் கத்திய சத்தத்தில் தலையை உலுக்கிக் கொண்டவள், “கிளம்பலாம் சூர்யவர்மன்.” என்று கூறி எழ முயற்சித்தாள்.

அவள் எழுகையில் கைகளும், கால்களும் நடுங்கித் தடுமாறுவதைக் கண்ட சூர்யாவோ, அவளுக்கு உதவியாகத் தன் கையை நீட்ட, அதை ஒற்றைக் கையசைவில் தடுத்து தானே மெதுவே மேலெழுந்து நின்றாள்.

“இந்த விஷயத்தை நாம அப்பறம் பார்த்துக்கலாம் சூர்யவர்மன். இப்போ.. இப்போ நமக்கு வேற வேலை இருக்கு!’ என்று கூறி தள்ளாட்டமான நடையுடன் அவள் முன்னே செல்ல, பின்னால் நின்றிருந்த சூர்யவர்மனோ சற்று தேங்கி, நவிரா வெளியேறியதும் அந்த அறையின் ஜன்னல் திரைச்சீலைகளிடம் சென்றான்.

மனதில் ஏதோ உந்த.. சற்றே குனிந்து அந்தத் திரைச்சீலைகளை வாசம் பிடித்தவனின் கண்கள், அதிர்ந்து விரிந்தன!

அதிர்ந்து விரிந்த சூர்யவர்மனின் கண்களோ மறுநிமிடமே அந்தி வானமென செக்கச் செவேல் என்று ஆயின!

கடுப்பான வேக நடையுடன் வெளியேறிய சூர்யவர்மனையும், அவனுக்கு முன்பாக வீட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த நவிராவையும் கண்களில் ஒரு கசப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரணவன்.

அவனது பார்வையை சூர்யவர்மன் கவனித்தாலும், அவன் தயாளனின் நஞ்சினால் விளைந்த நெல்மணி என்று உணர்ந்தவன், தலையை சலிப்பாக அசைத்துக் கொண்டு, நவிராவுடன் கிளம்பிவிட்டான்.

கட்சி அலுவலகத்துக்குச் சென்று பார்த்தால், அங்கு அப்பொழுது தான் ஊடக நிருபர்கள் வந்து மைக்குகளையும், காமிராக்களையும், ப்ரெஸ் மீட் நடைபெறும் இடத்தில் பொருத்திக் கொண்டிருந்தனர்.

அதைக் கண்ட சூர்யவர்மனுக்கு எரிச்சல் மூண்டது.

என்னவோ அப்பொழுதே பிரெஸ் மீட் துவங்கிவிட்டது போலவும்.. அதை தயாளன் தனியாக சமாளித்துக் கொண்டிருப்பது போலவும்.. சூர்யவர்மனும், நவிராவும் அதைக் கண்டுகொள்ளாது ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை போலவும் அந்தக் கத்துக் கத்தினார் அவர்.

ஆனால் இங்கேயோ.. இப்பொழுது தான் முன் தயாரிப்புப் பணிகளே நடந்து கொண்டிருப்பதைக் காணவும் விறுவிறுவென அவரிடம் விரைந்தான் சூர்யவர்மன்.

“என்ன சார்.. ப்ரெஸ் பீப்பிள் எல்லாம் இப்போ தான் வந்துட்டு இருக்காங்க. நீங்க எதுக்கு அவ்வளவு அவசரமா எங்களை இங்க வரச் சொல்லி கத்தினீங்க?” என்றான் குரலில் மறைக்காத கடுப்பைக் காட்டி.

அவனை நிதானமாக நிமிர்ந்து பார்த்த தயாளனோ..

“நீயும், அவளும் அங்க கூத்தடிச்சுட்டு இருக்க.. நான் இங்க வந்து உங்களுக்காக வேலை செய்யணுமா?” என்று கேவலமான வார்த்தைகளைக் கொட்டினார்.

அவரை ஏற இறங்கப் பார்த்தவனின் விழிகளில் ஏளனம் தெறித்தது!

“உங்க வாயில இருந்து இப்படியான வார்த்தைகள் தான் வரும்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்.” என்றான் சற்றும் அலட்டிக் கொள்ளாமலே.

அதையும் விழிகளில் வெறுப்புடன் பார்த்த தயாளனோ..

“நீ எதுக்கும் துணிஞ்சவன்னு எனக்குத் தெரியும் சூர்யா. ஆனா.. முன்னாடி உன் கால்ல இருந்த இந்தக் கட்சி, இப்போ அந்த நவிராவோட கைக்கு போய்டுச்சு.

ஆனா பாரேன்.. நீ, அந்த நவிரா காலடில கிடக்கற.” என்று அவனுக்கு கொம்பு சீவிவிட முயன்றார்.

ஆனால் அதைக் கேட்டு இடுப்பில் இரு கைகளையும் வைத்து சத்தமாக சிரித்த சூர்யவர்மனோ..

“என் காலடில இருந்து இந்த பூமியே நழுவிப் போனாலும், அதைக் கயிறு கட்டி இழுத்து, மறுபடியும் என் காலடில போட வைக்கற வித்தை எனக்கு நல்லாவே தெரியும் சார்.” என்றுவிட்டு அகல, தயாளனின் விழிகளில் பளிச்சிடல்!

நவிரா அவளது அறையில் தான் அமர்ந்திருந்தாள். லேப்டாப்பில் எதையோ அவள் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவளது சிந்தனை அடிக்கடி கலைந்து கொண்டிருப்பது தெளிவாகவே தெரிந்தது சூர்யவர்மனுக்கு.

அவள் முன்பாக அவன் சென்று நிற்க, அதைக் கூட கண்டுகொள்ளாது கணினியில் எதையோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குரலைச் செருமி, அவளது கவனத்தைத் தன் புறமாக சூர்யவர்மன் திருப்ப, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், சற்று தெளிவான முகத்துடனே..

“என்ன சூர்யவர்மன், ப்ரெஸ் மீட்டுக்கு எல்லாம் ரெடியாகிடுச்சா? நான் வரலாமா?” என்று கம்பீரமாகக் கேட்க, சற்று முன்னர் அப்படி இடி தாக்கியதைப் போல விழுந்து கிடந்தவள் இந்தப் பெண் தானா என்ற ஐயம் உண்டானது அவனுக்கு.

அந்த சிறு வியப்பு முகத்தில் வெளிப்பட்டுவிட்டாலும், உடனே முகத்தை மாற்றிக் கொண்டவன், “இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல தயாராகிடுவாங்க மேடம். நீங்க அப்போ வரலாம்.” என்றிட, நவிராவும்.. “ஹ்ம்ம்..” என்றுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு கீழே இருவரும் வர, பத்திரிக்கையாளர்களும் அவர்களுக்காகத் தயாராக இருந்தனர்.

அவர்களுக்கு இன்முகமாக வணக்கம் கூறிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தவளை முதல் கேள்வியிலேயே சாய்க்கத் தயாராய் இருந்தனர் அவர்கள்.

“வணக்கம் மேடம்!” என்று முதலில் சாதாரணமாகவே ஆரம்பித்தாலும்.. தன் முதல் கேள்வியைக் கேட்ட அந்த அனுபவம் வாய்ந்த பெண் பத்திரிகையாளரோ..

“தமிழக மக்கள் கழகத்துக்கு புதிய தலைவரா பதவியேத்திருக்கற உங்களுக்கு என் வாழ்த்துகள்.

ஆனா.. அது தான் என் முதல் கேள்வியே..

இங்க நம்ம தமிழ்நாட்டுல மட்டுமில்லாம, மொத்த இந்தியாவிலேயே பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படறது இந்த, “வாரிசு அரசியல்.” இப்போ உங்க கட்சியோட வாரிசா நீங்க அரியணை ஏறியிருக்கறீங்க.

நீங்க பிறந்தது கூட அமெரிக்கால தான். உங்களுக்கு குடியுரிமையும் அமெரிக்கால தான் இருக்கு.

உங்களுக்கு நம்ம தமிழ்நாட்டைப் பத்தி, அதோட அரசியல் பத்தி என்ன தெரியும்னு இந்தக் கட்சிக்கு நீங்க தலைவராகியிருக்கீங்க?” என்று அவர் கேட்க, இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்திருந்த நவிராவோ, சற்று சிரித்தபடி தனக்கு முன்னே இருந்த மைக்கை நோக்கி குனிந்தாள்.

“இந்தியாவோட அரசியல் வரலாறுகள் என்னை விட அனுபவத்திலும், வயசுலயும் மூத்த உங்களுக்குத் தெரியாம இருக்காது. இந்தியால இதே மாதிரி நிறைய அரசியல் தலைவர்கள், இந்தியக் குடியுரிமை இல்லாம இருந்திருக்காங்க. ஆனா ஒரு கட்சியோட தலைவரா இருக்கறதுக்கு மக்கள் மேல இருக்கற அக்கறை போதும்ன்றது என்னோட கருத்து.

நான் நேரடியா முதலமைச்சர் வேட்பாளரா நிற்பேனா, அதுக்கான சாத்தியக் கூறுகள் எல்லாம் என்னென்னன்னு அப்போ பார்த்துப்போம்.

அதே மாதிரி நம்ம ஊர் அரசியல் பத்தி எனக்கு என்ன தெரியும்னு கேட்டிருக்கீங்க.. ஹ்ம்ம்.. நான் இந்தக் கட்சிக்குத் தலைவரா பதவியேத்து இன்னும் இருபத்து நாலு மணிநேரம் கூட முடியல.

அதுக்குள்ளே அண்டர் எஸ்டிமேட் செய்யாதீங்க மிஸஸ்.சகுந்தலா..” என்று அவரது ஐடி கார்டில் இருந்த அவரது பெயரை கூர்ந்து பார்த்துவிட்டு, சற்று நட்பான கேலியுடன் அவள் கூறி முடிக்க, அந்த நிருபருக்கும் சற்று சிரிப்பு வந்துவிட்டது.

ஆனாலும் அவரைத் தொடர்ந்து..

“அது இருக்கட்டும் மேடம்.. உங்களுக்கு நம்ம ஊரு அரசியல் பத்தி தெரியலைன்னா கூட பரவாயில்ல.. அதைக் கத்துக்கலாம். ஆனா, நம்ம ஊர் கலாச்சாரம், பண்பாடுன்னு என்ன தெரியும் உங்களுக்கு?” என்று சற்று காட்டமாக ஒரு வயதான ஆண் நிருபர் கேட்க, அவரை ஆழ்ந்து பார்த்தபடியே நிமிர்ந்து அமர்ந்தாள் நவிரா.

“நம்ம ஊர் கலாச்சாரம்னா என்ன சொல்லறீங்க? இல்ல.. மற்ற நாடுகள்ல அப்படி என்ன இல்லைனு சொல்லறீங்க?

அந்தந்த நாடுகளுக்கு உண்டான கலாச்சாரம் இருக்கவே செய்யுது. சில படங்கள் மேற்கத்திய நாடுகளைப் பத்தி, அந்த நாடுகள்ல இருக்கற பெண்களைப் பத்தி தப்பா காட்டறாங்க.. ஏன், மற்ற ஊர்கள்ல இந்தியாவைப் பத்தி எப்படிக் காட்டறாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா?

அதெல்லாம் தான் உண்மையா என்ன?

மற்ற நாட்டுப் படங்களை விடுங்க.. இங்க தமிழ்நாட்டுக்குள்ள எடுக்கற படங்களிலேயே எவ்வளவு முரண் இருக்கு?

அதெல்லாம் பார்த்துட்டு நாம இந்த ஊர் மக்களே இப்படித் தான்னு சொல்ல முடியுமா?

அதே சமயம் எல்லா இடங்கள்லயும் சில விதிமீறல்கள் இருக்கு.. அதுக்காக ஒட்டு மொத்தமா எல்லாரையும் தப்பு சொல்லக் கூடாது.

இந்தியர்களோட கலாச்சாரம் நிச்சயம் உலகப்புகழ் பெற்றது தான். அதுல எனக்கு மாற்றுக் கருத்தே இல்ல.. ஆனா, இங்க நாம நினைக்கற மாதிரி மற்ற நாடுகள்ல இருக்கறவங்க எல்லாரும் ஒழுக்கம்னா என்னன்னே தெரியாம இருப்பாங்கனும் நாம ஜட்ஜ் செய்யக் கூடாது.

அதனால தான் சொல்லறேன்.. நான் எந்த நாட்டுல வளர்ந்திருந்தாலும் சரி, என் ஒழுக்கத்திலிருந்து நான் மீறியது கிடையாது.

அதுக்கு பேர் இந்தியக் கலாச்சாரம்னு நீங்க சொன்னா, அதையும் நான் மனப்பூர்வமான ஒத்துப்பேன்.” என்று சிரித்த முகமாகவே பதிலுரைத்தவளைப் பார்த்துப் பிரம்மித்துப் போனான் சூர்யவர்மன்.

பிரம்மிப்பு, வியப்பு என்று எல்லாமே..

கலாச்சாரம் என்று அந்த நிருபர் குறிப்பிட்டதே, பெண்ணின் ஒழுக்கம் தானே? அதைக் கேட்டு கொஞ்சம் கூட கோபப்படாமல், அதே சமயம் அந்த நிருபரின் தலையில் நறுக்கென்று வலிக்கக் குட்டினாலும் அதையும் இன்முகமாகவே செய்ததில் உண்டான பிரம்மிப்பு அது.

ஆனால் சூர்யவர்மன் இப்படி பிரம்மித்துப் போய் இருக்கையிலேயே, அடுத்து ஒரு நிருபர் தன் பேச்சை ஆரம்பித்தான். அவன் ஷிவ் கட்சியைச் சேர்ந்த பத்திரிக்கை நிருபன்.

எதிர்கட்சிகளிடம் வேண்டுமென்றே எடக்கு மடக்காக கேள்வி கேட்டு கண்ட்ரோவெர்சி உண்டாக்குவதில் வல்லவன்.

அவன் இங்கே வந்ததைப் பார்க்கவும் சூர்யவர்மனுக்கு சற்று கடுத்தது தான். ஆனால் இது போன்ற சூழ்நிலைகளையும் நவிரா சமாளித்தாக வேண்டுமே?

எல்லா இடங்களிலும் அவனே நவிராவுக்குக் கேடயமாக இருந்தால், அவள் எப்படி சோபிப்பது?

அது மட்டுமல்லாது இந்தக் கட்சியின் தலைவி அவள் என்றால், இது போன்றவர்களையும் சமாளித்துக் காலடியில் நசுக்கத் தெரியத் தானே வேண்டும்? அதுவும் அதை அவளே தானே செய்ய வேண்டும்? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், அந்த நிருபனின் கேள்விக்காக அவன் முகத்தைப் பார்த்தான்.

அவன் எழுந்ததுமே..

“வாழ்த்துகள் மேடம்!” என்று கூறவும், நகைமுகமாகவே நவிரா நன்றி தெரிவித்தாள்.

“நன்றி சொல்லறது இருக்கட்டும் மேடம், ஆனா என் வாழ்த்துகள் எதுக்காகன்னு நீங்க இன்னும் கேட்கலயே?” என்று இடக்காகக் கூற, புருவம் சுருக்கி அவனை நேராகப் பார்த்தவள்.. அவனது விழிகளின் பளபளப்பிலேயே அவனது குறிக்கோளைப் புரிந்து கொண்டு, இதழின் ஓரத்தில் துளிர்த்த அலட்சியச் சிரிப்புடன்..

“வாழ்த்து சொன்ன நீங்க தானே எதுக்காக வாழ்த்துனீங்கன்னு சொல்லணும்?” என்றாள் நிமிர்வாகவே.

அதில் அந்த நிருபரின் கண்கள் சற்று இடுங்கினவோ என்னவோ..

“சொல்லறேன் மேடம்.. சொல்லத் தான போறேன்.. என்னோட வாழ்த்துகள் எதுக்காகன்னா.. அங்க அமெரிக்கால கண்டபடி கூத்தடிச்சுட்டு.. அதுவும் நம்ம தமிழ்நாட்டோட துணை முதல்வரோட ரகசியமா குடும்பமே நடத்திட்டு இங்க வந்து இப்படி, ‘நான் என் ஒழுக்கத்துல இருந்து மீறவே இல்ல..’ அப்படி இப்படின்னு என்னென்னமோ சொல்லி, என்னவோ இந்தியக் கலாச்சாரத்தையே காப்பாத்தினது நீங்க மட்டும் தான்ற மாதிரி பேசி.. இதோ இந்த மொத்தக் கூட்டத்தையும் சொடக்கிடற நேரத்துல உங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டீங்களே.. அதுக்கு தான் நான் வாழ்த்துகள் சொன்னேன்.” என்று கண்களில் வக்கிரத்துடன் அவன் பேசி முடித்து, சீண்டலாக நவிராவைப் பார்க்க, அவன் தன்னைத் தூண்டிவிட்டு வார்தையைப் பிடிங்கி கண்டபடி கதைகட்டப் பார்க்கிறான் என்று அப்பொழுது தெளிவாகவே புரிந்து கொண்டாள் அவள்!

அது புரிந்ததாலேயே, இன்னும் நேராக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்..

“ஓஹ்.. அப்படியா? அப்போ எனக்குப் பேச்சுத் திறமை இருக்குன்னு நீங்களே ஒத்துக்கறீங்க அப்படித் தானே?

ஏன்னா, இந்த தமிழ்நாட்டை இப்படி பேசிப் பேசித் தானே மயக்கி வச்சிருக்காங்க, இது வரைக்கும் இருந்த அரசியல்வாதிங்க எல்லாரும்?

இப்போ எனக்கும் அந்த பேச்சுத் திறமை வந்துடுச்சு அப்படினு நீங்க சொல்லறீங்கன்னா.. அப்போ இவ்வளவு நாளா எல்லாரும் எனக்கு அரசியல் செய்ய என்ன திறமை இருக்குன்னு கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சுனு தான அர்த்தம்?

அதனால உங்கள் வாழ்த்துகளை நான் மனப்பூர்வமான ஏத்துக்கறேன்..

அப்பறம் இன்னொன்னு! மத்தவங்க மாதிரி நான் பொய்யா பேசி யாரையும் மயக்கல. நான் உண்மை பேசினாலும், அதை உணர்ந்து தெளியற மக்கள் இருக்காங்க.. அதை நம்பறாங்க. அதனாலயும் உங்க வாழ்த்துக்கு நன்றி!” என்று கூறி அவள் அழகாக சிரிக்க, அந்த சிரிப்பு அவனை அவமானப்படுத்தும் சிரிப்பு என்று புரிந்துகொண்ட அந்த நிருபனுக்கு அவளைக் குதறிவிடும் வெறி உண்டானது.

“அப்போ, துணைமுதல்வர் ஷிவ் ஐயா கூட நீங்க சுத்தினது கண்டிப்பா இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாத்தும் அப்படினு சொல்லறீங்களா மேடம்?

அவர் கூட இல்லாத கூத்தெல்லாம் அடிச்சு, பத்திரிகைல பேர் நாறி, அதுக்காக சிம்பதி டிராமா ஒன்னு போட்டு இங்க ஓடி வந்தீங்களே? அதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?

அப்படி அமெரிக்கால கூத்தடிச்ச ஒருத்தர், அமெரிக்காவுக்கும் கூட கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இருக்குன்னு வக்காலத்து வாங்கறதும்.. அங்க, தான் செய்தது தப்பே இல்லைன்னு பீத்திக்கறதும் ரொம்ப வியப்பா இருக்கு!” என்று போலியாய் ஆச்சர்யப்பட்டு, குரூரமாய் சிரித்தான்.

கூட்டத்தில் சட்டென கனத்த அமைதி நிலவியது!

அதுவரை இலகுவாக சென்று கொண்டிருந்த ப்ரஸ் மீட்டில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டதைப் போல சூடு பரவியது.

மற்ற நிருபர்களெல்லாம் தங்களுக்குள் கிசுகிசுக்கத் துவங்கினர்.

”இது தேவையில்லாத கேள்வி. எல்லாம் ஒரு அளவுக்குத் தான்.” என்று அவர்களுக்குள்ளே சற்று கடிந்து கொண்டிருந்தனர்.

ஆனால் அவனது கேள்வியில் நவிராவுக்கோ.. முகம் சிவந்து கன்றிவிட்டது.

இருந்தாலும், ஒரு நொடி.. ஒரே ஒரு நொடி கண்களை அழுத்த மூடித் திறந்து தன்னைக் கட்டுப்படுத்தியவள்.. மீண்டும் உதட்டில் சிறு கீற்றுப் புன்னகையைத் தருவித்துக் கொண்டு, நாற்காலியின் இருக்கையில் இருந்து முன்னிருந்த மைக்கை நோக்கி சரிந்தாள்.

“இந்த கேள்வியைக் கேட்ட, அதுவும் என்கிட்டே கேட்ட உங்க புத்திசாலித்தனத்துக்கு என் பாராட்டுக்கள்!” என்று அவள் கூற, அந்த நிருபனின் கண்கள் இப்பொழுது நன்றாகவே இடுங்கின.

“புரியலையா மிஸ்டர். பரத்?” என்று மீண்டும் நிமிர்வாக அவனைப் பார்த்துக் கேட்க, இப்பொழுதும் அவள் என்ன சொல்லிவிடப் போகிறாள் என்ற மிதப்பில் அசையாது பார்த்திருந்தான் அந்த பரத்.

“ஏன்னா, நீங்க சொன்ன.. அமெரிக்கால என் கூட கூத்தடிச்சு, இங்க ஆக்சிடெண்ட்டுன்னு டிராமா போட்டு, அந்த சிம்பதியால ஆட்சியைப் பிடிச்சு இப்போ துணை முதல்வரான, உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் உங்க முதலாளி கிட்ட இந்தக் கேள்வியெல்லாம் கேட்காம.. கேட்டாலும் அவரால பதில் சொல்லவே முடியாதுன்னு தெரிஞ்சு, யார்கிட்ட கேட்டா, உண்மையான, நேர்மையான பதில் வருமோ அவங்ககிட்ட கேட்டீங்க இல்ல? அந்த புத்திசாலித் தனத்துக்காகத் தான் நான் உங்களைப் பாராட்டியது.” என்று கூறியதும் அத்தனைப் பேரும் கொல்லென சிரித்துவிட்டனர்.

ஆனால் சூர்யவர்மனோ மூக்கில் விரல் வைத்துவிட்டான்.

மீண்டும் தோன்றியது அவனுக்கு.. “ப்பா.. என்ன பொண்ணுடா இவ..?” என்று!

இது எதையும் கண்டுகொள்ளாமல் தானே தொடர்ந்தான் நவிரா.

“கண்டிப்பா உங்களோட இந்த புத்திசாலித் தனத்துக்காகவே நான் பதில் சொல்லறேன் மிஸ்டர்.பரத்!

நான் அமெரிக்கால கூத்தடிச்சேன் தான்.. அதுவும் உங்க முதலாளி, உங்க துணை முதல்வர், மிஸ்டர். ஷிவ் கூட சேர்ந்து தான் கூத்தடிச்சேன்.

ஆனா.. அவர் கையால தாலி கட்டிக்கிட்டு தான் அத்தனைக் கூத்தையும் அடிச்சேன்.

நான் என்ன தான் அமெரிக்கால பிறந்து வளர்ந்திருந்தாலும்.. நீங்க நினைக்கற அங்கத்தையே நாகரீகமாவோ.. இல்ல.. இப்போ இந்தியாலயும், ஏன் தமிழ்நாட்டிலையுமே வெகுவாப் பரவிட்ட லிவின் ரிலேஷன்ஷிப்லயோ நான் இல்ல.

முறையா கோவில்ல வச்சு தாலிகட்டிக்கிட்டு தான் அவர் கூட மனைவியா குடும்பம் நடத்தினேன்..

அதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. ஆனா அதை கடை பரப்பணும்ன்ற அவசியம் எனக்கு இல்ல!

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி.. என் ஒழுக்கத்துல இருந்து நன் மீறவும் இல்ல..

அதே மாதிரி, நாங்க பிரிஞ்சதுக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.. அதுக்கான விளக்கமும் யாருக்கும் கொடுக்கணும்னு எந்தத் தேவையும் இல்ல எனக்கு.

அதே சமயம், அப்பவும் சரி.. இப்பவும் சரி.. நான் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்னு சொல்ல எந்த தயக்கமும் எனக்கு இருந்தது இல்ல..

உங்க முதலாளியான துணைமுதல்வர், அவங்க குடும்ப முறைப்படி கட்டிய தாலியோட தான் அப்போவே நான் மக்கள் முன்னாடி, மீடியா முன்னாடி வந்துட்டு இருந்தேன்.

அப்பவும், இப்பவும் பயந்து ஒளிஞ்சுட்டு இருந்தது, இருக்கறது.. உங்களோட முதலாளி தான்.

பரவால்ல.. அவர் பாவம்!

இதையெல்லாம் சமாளிக்கத் தெரியாம அப்படி ஒளிஞ்சுட்டு இருக்காரு போல..” என்று அவள் வெளுத்து வாங்க, கேட்டுக் கொண்டிருந்த அந்த பரத்தின் முகம் செங்குரங்காக சிவந்தே போனது.

மறுபுறத்தில் இந்த ப்ரஸ் மீட்டை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஷிவ்வின் கண்களிரண்டும் சிவக்க, அவன் கையிலிருந்த ரிமோட்டை, டிவியின் மீதே வேகமாகத் தூக்கி எறிந்ததில் டிவியோ வெடித்துச் சிதறியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!