Skip to content
Post Views: 918
கவிதை 3
நீண்ட தூர பயணம்…
கொஞ்சமும் சாப்பிடாமல் துபாய்க்கு வந்து இறங்கி விட்டேன்…
இனி சென்னைக்கு அடுத்த விமானத்தை எடுத்து கிளம்பியாக வேண்டும்…
Advertisement
நேரம் இருந்தது…
செக் இன் எல்லாம் முடித்து விட்டு, விமானத்தில் ஏற காத்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன்…
சலிப்பாக இருந்தது…
Advertisement
சாப்பிடாததால் சோர்வாகவும் இருந்தது.
Advertisement
அலைபேசியில் ரீல்ஸ் பார்த்து களைத்தும் விட்டேன்…
எனது கைப்பையை திறந்தேன்…
அதற்குள் ஒரு நாவல்…
Advertisement
அவன் எனக்காக முதல் தடவை வாங்கி தந்த நாவல்…
நானோ எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் ரசிகை…
விழுந்து விழுந்து நாவல்கள் படிப்பேன்…
அதில் அவன் தனது, “ஹாப்பி பேர்த் டே மை லவ்” என்று எழுதி, தனது கையெழுத்தை ஆங்கிலத்தில் இட்டு இருந்தான்…
முத்து முத்தான எழுத்துக்கள் அவனுக்கு…
அவன் வாங்கி தந்த நாவலில் பெயர், “விடியலை தேடும் பூபாளம்”.
அவன் வாங்கி கொடுத்த பிறகு எத்தனை தடவை வாசித்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது…
இப்போது எல்லாம் வாசிப்பது இல்லை, வாசிக்க நேரமும் இருப்பது இல்லை என்றாலும் என்னுடனேயே அந்த நாவலை வைத்துக் கொள்வேன்…
அவன் கையெழுத்தை மெதுவாக வருடிக் கொண்டேன்…
நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன…
காதலிக்க தொடங்கிய பின்னர் அதிகமாக அலைபேசியில் தான் பேசிக் கொள்வோம்…
இரவிரவாக பேசி, காலையில் லெக்சர் ஹாலில் தூங்கி வழிந்த சரித்திரங்களும் உண்டு…
காதலை எங்களுக்குள் தான் வைத்துக் கொண்டோம்…
அடிக்கடி சண்டையும் வரும்… உடனே சமாதானமாகிக் கொள்வோம்…
இருவருமே எமது காதலை இப்போது வெளியிட விரும்பவில்லை…
கல்லூரிக்கு தெரிந்தால் வீட்டுக்கு விஷயம் வர நாள் ஆகாது…
எங்கள் வீட்டில் பெரிதாக பிரச்சனை இருக்காது…
எனது அம்மாவும் அப்பாவும் காதல் திருமணம் தான்…
அதுவும் வேறு வேறு மதம்…
எனக்கு ஒரு தம்பி…
எனது அப்பா ராபர்ட் நான் சின்ன வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார்…
அப்போது என் தம்பியை என் அம்மா சுமந்து கொண்டு இருந்த தருணம் அது…
அம்மா பள்ளி ஆசிரியை என்பதால் என்னை தனியாக தான் வளர்த்தார்…
தம்பியும் பிறந்தான்…
அவனுக்கு ஜேம்ஸ் என்று தந்தையின் அடையாளத்தில் பெயரும் வைத்து இருந்தார் என் அம்மா…
அப்போதே என் அப்பா மீது அம்மா கொண்ட காதலை பார்த்து பிரமித்து இருக்கின்றேன்…
அதனாலேயே பிரபஞ்சன் மீதும் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு…
பிரபஞ்சனுக்கு தாய் மீனாட்சி மட்டும் தான்…
தந்தை இறந்து விட்டார்…
கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம்…
சொத்துக்களை விற்று தான் அவனை அவனது தாய் படிக்க வைக்கின்றார்…
அதனாலேயே அவனுக்கும் பொறுப்பு அதிகம்…
தாயை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கடமையும் இருந்தது…
வேலை எடுத்த பின்னர் காதலை வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தோம்…
கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் ரகசிய காதல் தான்…
கல்லூரி முடியும் தருவாய் அது…
அன்று எனது பிறந்த நாள்…
இரவு பன்னிரண்டு மணி வரை என்னுடன் பேசிக் கொண்டு தான் இருந்தான்.
பன்னிரண்டு மணிக்கு எனக்கு வாழ்த்தி விட்டு வைத்து இருந்தான்.
அவன் குரலில் வானத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டேன்…
“ஐ லவ் யூ டி” என்று மெசேஜ் வேறு…
அதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்…
இரு வருடங்கள் கடந்தும் அவன் மீதான காதல் கொஞ்சமும் குறையவே இல்லையே…
இன்னும் கூடியது தான் மிச்சம்…
ஆச்சரியமாக இருந்தது.
“ஐ டூ லவ் யூ” என்று பதில் அனுப்பி விட்டு, அவன் நினைவுடனேயே தூங்கிப் போனேன்.
அடுத்த நாள் காலையில் நீல நிற புது சுடிதார் அணிந்து நேரத்துக்கே தயாராகி விட்டேன்…
அலைபேசி அலறியது…
பிரபஞ்சன் தான் எடுத்து இருந்தான்.
அலைபேசியில் அவன் பெயரைப் பார்த்ததுமே இதழ்களில் மெல்லிய புன்னகை தோன்ற, அலைபேசியை எடுத்து காதில் வைத்தேன்…
“ரெடி ஆயிட்டியா?” என்று கேட்டான்…
“ம்ம் கோவிலுக்கு போயிட்டு அப்படியே சர்ச்சுக்கு போயிட்டு காலேஜ் வர தான்” என்றேன்…
“ஓகே” என்றான்.
அவ்வளவு தான்…
அதற்கு மேல் எதுவும் பேசவில்லை…
யோசனையுடன் ஆயத்தமான நானும், வெளியே வந்தேன்…
அங்கே ஜேம்ஸ் எனக்காக காத்துக் கொண்டு இருந்து இருப்பான் போலும்…
இப்போது ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருக்கின்றான்…
“ஹாப்பி பேர்த் டே அக்கா” என்று சொல்லி, கையை நீட்டினான்.
“தேங்க்ஸ் டா” என்று நான் சொல்ல, கையை குலுக்கி விட்டு, அவன் எனக்கு ஒரு பரிசு தந்தான்…
அம்மாவிடம் பணம் வாங்கி எனக்காக வாங்கி இருக்கின்றான் என்று யூகித்துக் கொண்டே பிரித்துப் பார்த்தேன்…
அழகான கைக்கடிகாரம்…
“ரொம்ப அழகா இருக்கு” என்று சொன்னபடி கையில் கட்டிக் கொண்டேன்.
என் அம்மா தேவகியும் வந்தவர், என்னை அணைத்து நெற்றியில் முத்தம் பதித்துக் கொண்டே, “ஹாப்பி பேர்த் டே ம்மா” என்றார்.
“தேங்க்ஸ் மா” என்று நானும் அவர் காலில் விழுந்து எழுந்து விட்டு, என் அப்பாவின் புகைப்படம் முன்னே நின்று அவரையும் வணங்கி விட்டு எனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்…
நேரே கோவிலுக்கு வந்தேன்…
அங்கே தனது பைக்கில் சாய்ந்து நின்று இருந்தான் பிரபஞ்சன்…
மனம் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது…
இதற்கு தான் என்னிடம் விசாரித்து இருக்கின்றான் என்று புரிந்தது…
இதழ்கள் மெலிதாக விரிய, “குட் மார்னிங்” என்றேன்…
“ஹாப்பி பேர்த் டே” என்று கண் சிமிட்டி சொன்னான்…
அலைபேசியில் கிடைத்த வாழ்த்தை விட, நேரில் கிடைத்த வாழ்த்தில் ஒரு போதை இருக்கிறது தானே…
“தேங்க்ஸ்” என்றேன் நெகிழ்ந்த குரலில்…
என்னிடம் ஒரு பரிசு பொருளை நீட்டினான்…
வாங்கிக் கொண்ட எனக்கு பிரிக்க ஆர்வமாக இருந்தது…
“என்னடி அவசரம்?” என்று அதட்டினான்…
“பிரிச்சு பார்க்க வேணாமா?” என்று கேட்டேன்…
“கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு, அப்புறம் சேர்ச்சுக்கு போயிட்டு, அப்புறம் பிரிக்கலாம்” என்றான்…
நானும் மென் சிரிப்புடன் அதனை பையில் வைத்தபடி, அவனுடன் நடந்தேன்…
இருவரும் சென்று கால்களை கழுவிக் கொண்டே அருகருகே நடந்தோம்…
இந்த இரு வருட காதலில் அத்து மீறி அவன் எனக்கு ஒரு முத்தம் கூட கொடுத்தது இல்லை…
என் மனதுக்குள் ஆயிரம் ஆசைகள் இருந்தன…
ஆனால் அவன் கண்ணியம் என்னை பிரமிக்க வைத்தது தான் மிச்சம்…
அருகே வந்தவனை ஏறிட்டுப் பார்த்தேன்…
தாடி மீசை வழக்கம் போல வளர்த்து இருந்தான்…
அவன் ஷேவ் செய்வது அரிது தான்…
எப்போதாவது ட்ரிம் செய்வான்…
நானும் தாடி மீசை ரசிகை ஆயிற்றே…
ரசித்துக் கொள்வேன்…
பச்சை நிற கட்டம் போட்ட சட்டை மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து இருந்தான்…
அடிக்கடி முடியை கையால் கோதி விட்டுக் கொண்டே நடந்தான்…
அவனை பார்க்கும் போதெல்லாம் என் விழிகளில் ஒரு பரவசம்…
அவனும் சட்டென திரும்பி என்னை பார்க்க, நான் பார்வையை முன்னே திருப்பிக் கொண்டேன்…
இதழ்களுக்குள் சிரித்தவனோ, “அழகா இருக்க” என்றான்…
அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்த நானும், “தேங்க்ஸ், நீங்களும் தான்” என்றேன்…
மெலிதாக சிரித்து விட்டு, ஒன்றாக கோயில் கருவறை முன்னே சென்று நின்று கொண்டோம்…
கண்களை மூடி இறைவனையும் வேண்டிக் கொண்டோம்…
திருநீறை அவன் எடுத்து நீட்ட, நானோ, அதனை எடுத்து, அவனுக்கு வைக்க சென்றேன்…
சட்டென பின்னால் சென்று சுற்றும் முற்றும் பார்த்தான்…
எனக்கோ மெலிதான கோபமும் எட்டி பார்த்தது…
எத்தனை நாட்கள் தான் இந்த சைவ காதலையே செய்வது?
“திருநீறு தானே” என்றேன் கடுப்பாக…
என் கோபம் அவனுக்கும் புரிந்து இருக்க, அவனே தலையை தாழ்த்தி என் உயரத்துக்கு தன்னை இறக்கிக் கொள்ள, நானும் எனது பெருவிரலில் எம்பி நின்று, அவனுக்கு திருநீறை அணிவித்தேன்…
அவன் எனக்கு திருநீறு வைத்து விட மாட்டானா? என்கின்ற ஏக்கமும் இருந்தது…
“எனக்கு வச்சு விட மாட்டிங்களா?” என்று வெட்கத்தை விட்டு கேட்டும் பார்த்தேன்…
அவனோ, மெலிதாக சிரித்துக் கொண்டே, “கல்யாணத்துக்கு அப்புறம் குங்குமமே வச்சு விடுறேன்” என்றான்…
சட்டென கண்கள் சிவந்து போக, “இப்படி பேசி தான் என்னை மயக்கி வச்சு இருக்கீங்க” என்று சொல்லிக் கொண்டே நானே நெற்றியில் திருநீறை வைத்துக் கொண்டேன்.
அதனை தொடர்ந்து இருவரும் சேர்ச்சுக்கு சென்றோம்…
நான் ஸ்கூட்டியில் செல்ல, அவன் என்னை பைக்கில் பின் தொடர்ந்தான்…
இருவரும் ஒரு வழியாக தேவாலயத்துக்கு வந்து விட்டோம்…
அங்கேயும் வணங்கி விட்டு வெளியே வந்த சமயம், “இத எனக்கு பிரிச்சு பார்க்கணும் போலவே இருக்கு” என்றேன் நான்.
சிரித்துக் கொண்டே, “எல்லாத்துக்கும் உனக்கு அவசரம் டி” என்று சொன்னவன், அருகே இருந்த பூங்காவுக்கு செல்ல, நானும் பின் தொடர்ந்தேன்…
அங்கே இருந்த பெஞ்சில் அருகருகே அமர்ந்து கொண்டே, அவன் தந்த பார்சலை பிரித்தேன்…
எழுத்தாளர் ரமணிச்சந்திரனின் நாவல்.
“விடியலை தேடும் பூபாளம்” என்று இருந்தது…
எனக்கோ எல்லை இல்லாத மகிழ்ச்சி…
விழிகளில் அப்படி ஒரு பூரிப்பு…
என்னையே ரசனையாக பார்த்தான் அவன்…
“பிரபஞ்சன், செம்ம கிஃப்ட், எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று சொல்லிக் கொண்டே, புத்தகத்தை திறந்து அதன் வாசனையை நுகர்ந்தேன்…
“உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்” என்றான்.
“தேங்க்ஸ் பிரபஞ்சன்” என்று சொன்ன எனக்கு, அவனை அணைத்து முத்தமிட தான் கைகள் பரபரத்தன…
ஆனால் அந்தளவு எனக்கு தைரியம் இருக்கவில்லையே…
அவனது மென் புன்னகையை ரசித்துக் கொண்டேன்…
அவனோ, “இன்னும் ரெண்டு மாசத்துல காலேஜ் முடிஞ்ச அப்புறம் வேலை எடுத்துட்டு வீட்ல நம்ம விஷயத்தை சொல்லலாம்” என்றான்.
நானுமே, “ம்ம், கண்டிப்பா” என்றேன்…
பெரிதாக எங்களுக்கு எதிர்ப்பு வரும் என்று தோன்றவில்லை…
அதனை தொடர்ந்து காலேஜ்ஜூக்கு கிளம்பி விட்டோம்…
அன்று தான் எங்கள் காதல் மொத்த கல்லூரிக்கும் தெரிந்தது…
அதுவும் என்னால் தான்…
அவன் கொடுத்த பரிசினால் தான்…
லெக்ஸர்ஸ் முடிந்து மதிய நேரம் போல கேன்டீனில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம்…
நர்மதாவோ, “இன்னைக்கு நோட்ஸ கொடுடி, நான் சரியா எழுதவே இல்லை” என்று கேட்க, “பேக் ல இருக்கு எடு” என்று சொல்லி விட்டு, நான் சாப்பிட ஆரம்பித்து விட்டேன்…
பையை திறந்தவளுக்கு பட்டது என்னவோ நாவல் புத்தகம் தான்…
‘அட ரமணிச்சந்திரன் நாவல்’ என்றபடி அதனை எடுத்து விரித்து இருந்தாள்.
எனக்கோ நெஞ்சில் நீர் வற்றி விட்டது…
“நர்மதா” என்று அழைக்க முதலே, அதன் முகப்பில் பிரபஞ்சன் எழுதி இருந்த வரியையும் அவன் கையெழுத்தையும் பார்த்து விட்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்களா என்ன?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று எனக்கும் தெரியும்…
தடுமாறி விட்டேன்…
“யாரு டி?” என்று கேட்டுக் கொண்டே, ஏனைய நண்பிகளும் அங்கே குழுமி விட, விஷயம் மின்னல் வேகத்தில் எல்லா இடமும் பரவியது…
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை…
பிரபஞ்சனுக்கு தெரிந்தால் என்னை தப்பாக நினைத்து விடுவானோ என்று பயம் வேறு…
“ரெண்டு வருஷமா தான்” என்று தயங்கி சொன்னேன்…
“என்னது? ரெண்டு வருஷமாவா?” என்று எல்லாருக்குமே அதிர்ச்சி…
இதற்கு மேல் எப்படி மறைப்பது?
ஒரு பக்கம் எனக்கு சந்தோஷமாக இருந்தது என்பது உண்மை தான்…
அவன் என்னவன் என்று உரிமை கொண்டாடலாமே…
ஆளாளுக்கு அவனை ரசிக்கும் போதெல்லாம் வயிறு எரிய உட்கார்ந்து இருந்தேன் அல்லவா?
இனி அந்த தொல்லை இல்லை என்று சந்தோஷமாக இருந்தாலும், பிரபஞ்சனை நினைத்து பயமாகவும் இருந்தது…
அந்நேரம் பார்த்து அவனும் நண்பர்களுடன் கேன்டீனுக்கு வந்து சேர, “லவ் பண்ணுறதுக்கு ட்ரீட் பிரபா” என்று என் நண்பிகள் அவனிடம் கேட்க, என்னை ஒரு கணம் பார்த்தான்…
தவிப்பாக இல்லை என்று தலையாட்டிக் கொண்டே, நர்மதா கையில் இருந்த புத்தகத்தை காட்டினேன்…
அவனும் அதனை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டவன், “சரி கொடுத்துட்டா போச்சு” என்றான்…
அவனிடம் பிடித்ததே இது தான்…
எதற்கும் பதறி திணற மாட்டான்…
லாவகமாக எல்லா சந்தர்ப்பத்தையும் கையாளும் திறமை உண்டு…
அவனை இன்னும் இன்னும் காதலிக்க தொடங்கிய எனது இதழ்களில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது…
இந்த நினைவுகளில் இருந்து மீட்டது என்னவோ எனது அலைபேசி அலறிய சத்தம் தான்…
ஜேம்ஸ் தான் அழைத்து இருந்தான்…
எடுத்து காதில் வைத்தேன்…
“அக்கா, அடுத்த ஃபிளைட் ஏறியாச்சா??” என்று கேட்டான்…
“இல்லடா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன், கொஞ்ச நேரத்துல ஏறிடுவேன்” என்று சொன்னேன்…
சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது…
“போர்டிங் கால் பண்ணிட்டாங்க ஜேம்ஸ்” என்று நான் சொல்ல, “ஓகே, ஹாவ் எ சேஃப் ஃபிளைட்” என்றான்.
“தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு வைத்து விட்டேன்…
அவனுக்கு என் வாழ்க்கையை பற்றி எப்போதுமே கவலை தான்…
இன்னும் திருமணம் செய்யவில்லை அவன்…
எனது வாழ்க்கையை சீர் செய்ய போகின்றானாம்…
நானும் சொல்லி பார்த்து விட்டேன்…
கேட்பதாக தெரியவில்லை…
இம்முறை ஒரு பெண்ணை பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்ற முனைப்புடன் தான் செல்கின்றேன்…
எனது வாழ்க்கையை இனி சீர் செய்வது எல்லாம் நடக்காத விஷயம்…
நான் கூட என் பிரபஞ்சனை இப்போது ஒரு தடவை பார்த்து விட்டு செல்ல தான் வருகின்றேன் தவிர, எனது வாழ்க்கையை சீர் செய்வதற்காக அல்ல…
எனக்கு என்னுடைய வாழ்க்கை சீராக தான் இருக்கிறது…
ஆனால் அடுத்தவர்களுக்கு அலங்கோலமாக தெரிகின்றது…
அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
கல்யாணம், குழந்தை என்று இருந்தால் தான் சீரான வாழ்க்கை என்று இந்த சமூகம் விதித்து இருக்க, அதனை என் மீதும் திணிக்க பார்க்கின்றார்கள்…
அந்த எண்ணம் இருந்து இருந்தால் நான் இப்போது என் பிரபஞ்சனுடனேயே இருந்து இருப்பேனே…
அவனுடன் குழந்தைகளும் பெற்று இருப்பேன்…
பத்தோடு பதினொன்றாக வாழ்ந்து கொண்டு இருந்து இருப்பேன்…
எனது உயிரான பிரபஞ்சனையே விட்டு வந்து இருக்கின்றேன்…
எனக்கு பிடித்ததை செய்து கொண்டு இருக்கின்றேன்…
மீண்டும் மீண்டும் அந்த திருமணம் என்னும் வட்டத்துக்குள் என்னை அடைக்க நினைத்தால் நானும் என்ன சொல்வது?
பிரபஞ்சனுக்கும் ஜேம்ஸுக்கும் இப்போதும் நல்ல உறவு முறை என்று எனக்கு தெரியும்…
பிரபஞ்சனை பிரிந்து வந்த இத்தனை வருடங்களில் அவனை பற்றி நான் விசாரித்தது இல்லை…
ஜேம்ஸாக சொல்ல வந்தால் கூட தவிர்த்து விடுவேன்…
எனது அம்மாவின் அந்த வாய்ஸ் நோட் என்னை இவ்வளவு தூரம் பயணம் செய்ய வைத்து இருக்கிறது என்றால், அவனை பற்றி அறிந்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் லட்சியத்தை தூக்கி போட்டு விட்டு சென்று இருப்பேனோ என்னவோ…
அதற்காக எனக்கு நானே போட்டுக் கொண்ட வட்டம் இது…
பிரபஞ்சன் மீதும் எனக்கு சில மனக்கசப்புகள் இருந்தன தான்…
நான் இந்த முடிவை எடுக்க, அதுவும் ஒரு முக்கிய காரணம்…
அதெல்லாம் காலப் போக்கில் மறைந்து விட்டது…
ஆனால் என் லட்சியம் என்னை இறுக பிடித்துக் கொண்டது…
நான் செய்வது எனக்கு சரியாக இருந்தாலும் இன்னொருவருக்கு கண்டிப்பாக பிழையாக தோன்றும் எனக்கு நன்றாகவே தெரியும்…
அதற்காக எனக்கு பிடித்ததை என்னால் செய்யாமல் இருக்க முடியாது…
ஒரு வழியாக விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்…
அருகே ஒரு தமிழ் குடும்பம் தான் அமர்ந்து இருந்தார்கள்.
எட்டு வயது பெண் குழந்தை ஒன்று விழிகளை அசைத்து அசைத்து தாயுடன் பேசிக் கொண்டு இருந்தது…
அதனை பார்த்ததுமே எனக்குள் ஒரு வலி ஊடுருவியது…
என் குழந்தை கருவில் கலையாமல் இருந்து இருந்தால் இந்த வயசு இருந்து இருக்கும் தானே என்று ஒரு எண்ணம்…
ச்ச, இதனால் தான் நான் வெளியே வர யோசிப்பதே இல்லை…
அமெரிக்காவில் எனது வட்டத்துக்குள் பிசினஸ், பணம், வேலை என்று ஒரு இயந்திர வாழ்க்கையில் வாழும் எனக்கு, இப்படி வெளியுலகம் மனதை எப்போதுமே அசைத்து ஆட்டி வைத்து எனது பலவீனங்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றதே… குழந்தை, குடும்பம் என்று என்னென்னவோ உணர்வுகள் எனது சமநிலையை குலைத்துக் கொண்டு இருக்கின்றதே…
கண்களை மூடி தலையை உலுக்கிக் கொண்டே, அமர்ந்து இருந்தேன்…
விமானமும் சற்று நேரத்தில் புறப்பட்டது…
என்ன செய்வது என்று தெரியவில்லை…
படம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே, எனக்கு முன்னால் இருக்கும் திரையில் ஆங்கில படம் ஒன்றை ஓட விட்டேன்…
காதல் படமாம் அது…
பிரபஞ்சனின் திருமண விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே, மனதளவில் பலவீனமாக இருக்கின்றேன்…
இந்த காதல் படம் எல்லாம் பார்ப்பதே இல்லை தான்… பிடித்த நாவல்கள் கூட இந்த இடைப்பட்ட வருடங்களில் நான் வாசித்தது இல்லை… காதல் என்றாலே காத தூரம் ஓடியவள் நான்…
இப்போது இந்த காதல் படத்தை பார்க்க தோன்றியது…
அதுவும் முத்த காட்சி…
சட்டென எனக்கும் பிரபஞ்சனுக்குமான முதல் முத்த நினைவுகள்…
மீண்டும் என் நினைவுகள் பின்னோக்கி சென்றன…
error: Content is protected !!