Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே அத்தியாயம் -1

“சுக்லாம் பரதரம் விஷ்ணும்..” ஆடியோவில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த நகரின் புறநகர் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்த குடியிருப்பு பகுதியின் ஒரு வீட்டிலிருந்து!

நேரம் அதிகாலை நாலரை மணி!

அந்த  நேரத்திலேயே குளித்துவிட்டு தலையில் ஈரத்துண்டுடன், முகத்தில் கஸ்தூரி மஞ்சள் மினுமினுக்க நெற்றியில் சின்ன கோபி பொட்டும் விபூதி கீற்றும் வைத்துக்கொண்டு வந்து சுவாமி விளக்கேற்றினாள் மது!

வாய் ஸ்லோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.



Advertisement

கைகளோ வீட்டில் பூத்த செம்பருத்தி, அடுக்குமல்லி மற்றும் சங்கு புஷ்பங்களை சாமிப்படங்களுக்கு வைத்து கொண்டிருந்தன!

சாமிப் படங்களுக்கு வைத்து முடித்த பின், தன் அம்மா லீலா, அப்பா ரவீந்திரன் மற்றும் அந்த வீட்டின் ஆணி வேராக இருந்த அவளது மாமா ராமச்சந்திரன் மற்றும் அத்தை வேதவதி  படத்திற்கும் பூக்களை வைத்தவள், அந்த படங்களின் முன்பு நின்று மனதார வேண்டினாள்.

“அம்மா, அப்பா, மாமா அத்தை, நான் இன்னிக்கு தான் முதன் முதலா நான் எடுத்து இருக்கும் கான்டீன் காண்ட்ராக்ட்  வேலைய ஆரம்பிக்கப் போறேன்.

Advertisement

நீங்க தான் தெய்வமா இருந்து வழி நடத்தனும்! எந்த சிக்கலும் வராம நல்ல படியா நடத்தி, மேற்கொண்டு அடுத்தடுத்த லெவல் போகணும். அப்படியே சிக்கல் வந்தாலும் சமாளிக்கிற தைரியத்தை நீங்க தான் கொடுக்கணும்!

Advertisement

என் சாப்பாட்டை சாப்பிடறவங்க வயிறு மட்டுமில்ல,மனசும் நிறையனும்!” கண் மூடி வேண்டிக் கொண்டாள் மது!

“டேய் ரவி.. நாம என்னமோ சாப்பாடு போடுறத தொழிலா தான் வச்சுருக்கோம்!

நம்ம கிட்ட சாப்பிடறவங்க  காசு கொடுத்து தான் சாப்பிடறாங்க, அதனால நல்ல சாப்பாடு போட்டதுக்கு அவங்க வாழ்த்து எல்லாம் வாயால சொல்ல மாட்டாங்க தான்!

Advertisement

ஆனா நல்ல சாப்பாடு சாப்பிட்டு முடிச்சவுடன் அவங்க வயிறு வாழ்த்தும்டா நம்மள! அது வெளியே தெரியாது!

அதனால் நாம எப்போதும் அந்த வயித்துக்கு கேடு செய்யாத நல்ல சாப்பாடு தான் போடணும்.

வியாபார தந்திரம் அது இதுன்னு எந்த காரணத்திற்காகவும், இதில் மட்டும் காம்ப்ரமைஸ் ஆகவே கூடாது!” என்பார் மாமா அடிக்கடி அப்பாவிடம்!

அதைக் கேட்டு வளர்ந்தவள் இந்த மது!

அது தான் இவளது கொள்கையும்!

இதையே தான் அவள் தற்போது கேண்டீன்  காண்ட்ராக்ட் எடுத்து இருக்கும் ஹாஸ்பிட்டல் ஓனர் கம் சீப் டாக்டர் ராகவனிடமும்  சொன்னாள் மது!

அதுவே அவளது தனித்துவத்தை அவர்க்கு உணர்த்தி, காண்ட்ராக்டை முழு திருப்தியுடன் அவளுக்கு கொடுக்க வைத்தது!

இதோ கிளம்பி விட்டாள். இப்போது சென்றால் தான் காலை பால் காபி, டீ மற்றும் காலை உணவைத் தயாரிக்க சரியாக இருக்கும்!

இவள் வீடு இருக்கும் புறநகர் குடியிருப்பு பகுதியை விட்டு கொஞ்சம் வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு வந்தால் சென்னை நாலு வழி புறநகர் நெடுஞ்சாலை வந்துவிடும்.

அந்த நாலு வழி சாலையை கிராஸ் செய்து அந்த பக்கம் சென்றால், அங்கு தான் இருக்கிறது அந்த நகரின் பிரம்மாண்டமாக  சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அந்த மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ்பிட்டல்!

ஐந்தே நிமிட ஸ்கூட்டி பயணம்!

அவள் சாமி கும்பிட்டு முடித்தவுடன் அவளிடம் காபி டம்ளரை நீட்டினார் அவள் அம்மாச்சி பட்டு!

அவரிடம் “நீ ஏன் அதுக்குள்ள எழுந்த? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாமே, காபி நான் போட்டுக்க மாட்டேனா?” என்று சைகையில் கேட்டாள் மது!

ஆம் பட்டுப் பாட்டிக்கு காது கேட்காது!

காதில் ஏற்பட்ட சிறிய வலிக்கு அவர் மருமகள் மகேஸ்வரியும் அவள் அம்மா நாகாவும், ஏதோ நாட்டு வைத்தியம் செய்கிறேன் பேர்வழி என்று காதில் ஏதோ சூடான எண்ணையை காய்ச்சி  ஊற்றி அரைகுறை வைத்தியம் பார்த்ததால் நேர்ந்த பரிதாபம்!

மற்றபடி பேசுவதெல்லாம் நல்லா பேசுவார்!

“நீ கிளம்பும்மா. இதோ மாதுவும் எழுந்துட்டான்! பல் தேய்ச்சுட்டு இருக்கான்! நீ இவ்வளவு காலையில் தனியே போக வேண்டாம்!”

அதற்குள் இரண்டாம் வருடம் நேச்சுரோபதி டாக்டருக்கு படிக்கும் அவள் தங்கை மானு என்கிற மானஸா  எழுந்து வந்து அவள் அக்காவிற்கு வாழ்த்து சொல்லி விட்டு தந்து வழக்கமான யோகாவை செய்ய ஆரம்பித்து விட்டாள்!

பத்து நிமிடத்தில் சட்டென தயாராகி வந்த மது, தன் பாட்டியை நிற்க வைத்து அவள் காலிலும் விழுந்து நமஸ்கரித்து அவள் ஆசியையும் பெற்றுக் கொண்ட பின்,

அக்கா மதுவை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி ஓட்டினான் அவள் தம்பி மாது.. மாதவ்.. பிரகன் மாதவ்! நான்காம் ஆண்டு பொறியியல் மாணவன்!

வழியில் எதிரே வந்து விட்டான் அவர்கள் நண்பன் ராஜு!

ராஜு அந்த ஊரின் எக்ஸ் எம் எல் ஏ பையன்! சமீபத்தில் தான் சட்டம் படித்து விட்டு ஒரு சீனியரிடம் சேர்ந்து இருக்கிறான்!

எக்ஸ் எம் எல் ஏ பையன் என்கிற கர்வம் சிறிதும் இல்லாதவன்!

எல்லோரிடமும் ரொம்ப மரியாதையாக பழகுபவன். அவன் அப்பா எம் எல் ஏ ஆக இருந்த போதும், இல்லாத போதும் ஒரே மாதிரி தான் இருப்பான், அவன் நண்பர்கள் வட்டாரத்தில்!

முக்கியமாக படித்தவர்களை மிகவும் மதிப்பான்!

அவன் குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாது!

ஆரம்பத்தில் இவனுக்குமே படிப்பு சரியாக வரவில்லை! பர்ஸ்ட் ஸ்டான்டர்டு மட்டுமே மூன்று பள்ளியில் மூன்று வருடம் படித்து இருக்கிறான்!

வீட்டிலும் ரொம்ப செல்லம்!

“நீ படிச்சு இருக்கியா, உன் புருஷன் படிச்சு இருக்கானா? உன் பரம்பரையில் எட்டாவது பத்தாவது தாண்டியவர்கள் உண்டா? காசு இருந்துட்டா மட்டும் போதுமா, சரஸ்வதி அம்சம் எல்லாம் எல்லார்கிட்டயும் வந்துடாது!” என்று அவன் படிக்க வில்லை என்று அவன் அம்மா கவலைப்பட்டால், உறவுகள் இப்படி தான் கிண்டல் செய்யும்!

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த அவன், இந்த மாதவ் நட்பு கிடைத்தவுடன் அவன் அம்மா லீலா பொறுமையாக பாடம் சொல்லித் தந்த பின் ஒருவாறு படிப்பில்  தேறி, இதோ இப்போது அவன் ஒரு லாயர்!

உண்மையில் அவனும் மதுவும் ஒரே வயது தான் என்றாலும், அவன் க்ளாஸ்மேட் என்னவோ மாதவ் தான்!

இந்த கேண்டீன் காண்ட்ராக்ட் எடுப்பதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவனும் அவன் தான்!

போன வருடம் அவன் அம்மா சொர்ணம், அந்த ஹாஸ்பிட்டலில் தான் குடல் சம்பந்தமான பிரச்சினைக்காக அட்மிட் ஆகியிருந்தாள்.

 மெடிக்கல் ட்ரீட்மென்ட் என்னவோ நன்றாக தான் இருந்தது!

ஆனால் டயட்!

அது ரொம்ப மோசம்!

மதுவும் ராஜுவும் கேண்டீன் போய் காபி குடிக்கப் போனால், அங்கே சுகாதாரமும் சரியாக இல்லை!

இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல், அதுவும் ஆரம்பித்து ஆறு மாதம் கூட ஆகவில்லை, எல்லாம் நன்றாக இருக்க இதில் மட்டும் திருஷ்டி வைத்தது போல் சொதப்பல்!

ராஜுவின் அம்மா ரொம்ப சுத்தம் பார்ப்பவர், அவர் அந்த பேசன்ட்டுக்கு  ஹெல்தி டயட் என்று ஹாஸ்பிட்டலில் கொடுக்கப்பட்ட உணவைத் தொடக்கூட மறுத்தார்!

 “டேய் இந்த பிளேட்டை பாருடா, இதில் கொடுத்தல் மனுஷன் சாப்பிடுவானா?”

உண்மை தான்!

மஞ்சள் நிற அந்த பைபர் ப்ளேட், அவ்வளவு கறையுடன், தேய்ந்து போயும்  இருந்தது!

அதனால் மது, அவள் வீட்டில் இருந்து உணவு எடுத்துக்கொண்டு நடந்து வந்த போது எதிரே வந்தாள் ஒரு ஹவுஸ் கீபிங் பெண்  தொழிலாளி.

“பாப்பா நீ வேத விலாஸ் ஹோட்டல்காரங்க வீட்டுப் பொண்ணு தானே!?” என்று கேட்டாள்.

“ஆமா நீங்க?”

“நான் முன்னாடி அங்க தான் பாப்பா, இலை எடுத்து சுத்தம் செய்ற வேலைப் பார்த்தேன்! இப்போ இங்கயும்   ஹவுஸ் கீபிங்  வேலைதான்   பார்க்குறேன்! மாமா நல்லா இருக்காங்களா?”

“இல்ல அவர் தவறிட்டார்”

“அடக்கடவுளே அப்பா தான் பார்த்துக்குறாரா ஹோட்டல?”

“இல்ல அவரும் இப்ப இல்லை!”

“அய்யோ அவருமா? உங்க அம்மா ஒரு அப்புராணி பொம்பள, அது எப்படி உங்க மூணு பேத்தையும் பாத்துக்கும்?” உண்மையாகவே கவலைப்பட்டார் அந்த பெண்மணி!

“இல்ல இப்ப அவங்களும் இல்ல! ரெண்டு வருஷம் முன்னாடி அவங்களும் தவறிட்டாங்க!”

“அய்யோ என்னம்மா சொல்ற? இப்படி அடுக்கடுக்கா குண்டா போட்டுட்டே போறே!”

“அப்போ ஹோட்டல பொம்பள புள்ள நீயா நடத்துற? முடியுதா உன்னால?”

“இல்ல ஹோட்டல் வீடு ரெண்டையும் மாமா இறந்தவுடன் அவர் தம்பிங்க வந்து கேஸ் போட்டுட்டாங்க அவங்க தான் அவருக்கு வாரிசுன்னு! கேஸ் போயிட்டு இருக்கு!”

“ஹா” என்ற சத்தத்துடன் ரொம்பவே அதிர்ந்து தான் போனார் அந்த பெண்!

“அப்ப உங்க கூட யார் பாப்பா இருக்குறா? காலம் கெட்டு கிடக்கு, வயசு புள்ளைங்க எப்படி.. இப்ப சின்ன பாப்பா கூட பெரிய பொண்ணா இருக்குமே  யார் துணைக்கு இருக்கா?  இப்ப எங்க இருக்கீங்க?“

“அம்மாச்சி இருக்காங்க எங்களோட! இந்த ரோட்டுக்கு அந்த புறம் இருக்கும் சாய் நகரில் தான் வீடு! அப்பா ஆசையாய் கட்டின் வீடு! ஆனால் அவர் ஒரு நாள் கூட அந்த வீட்டில இருக்கல!”

“என்னமோ பாப்பா, கேட்டவுடனே மனசே பாரமா ஆகிடுச்சு! இப்போ இங்க எங்க? யாருக்கு உடம்பு சரியில்ல?”

“என் பிரெண்ட்டோட அம்மாக்கு! அவங்களுக்கு இங்க தர சாப்பாடு புடிக்கல, அதான் வீட்டுல இருந்து கொண்டு வந்திருக்கேன்!”

“அய்யோ பாப்பா, இங்க வெளி சாப்பாடு கொண்டு போக முடியாது! செக்யூரிட்டி விட மாட்டான்!”

“அவங்களும் நல்லா தர மாட்டாங்க, நாமளும் கொண்டு போகக் கூடாதுன்னா எப்படி?”

“அப்படி தான் இங்க! நீ ஒண்ணு பண்ணு! இத உன் ஹான்ட் பாகுல மறைச்சு எடுத்துட்டு போ! வெளியே தெரியற மாதிரி எடுத்துட்டு போகாதே! இங்க கிட்டத்தட்ட எல்லாருமே அப்படி தான் செய்றாங்க!” சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.

மதுவுக்கு கோபமாக வந்தது!

உணவைக் கொண்டு போய் கொடுத்து விட்டு , நேரே அந்த ஹாஸ்பிட்டலின் டயட்டீசியனை பார்க்க சென்றாள்!

அங்கு சென்றவளுக்கு மேலும் ஒரு ஆச்சர்யம்! அங்கே அவளின் கல்லூரி சீனியர் தர்ஷினி தான் இருந்தாள்!

மது பி எஸ்சி பூட் அண்ட் நியூட்ரிசியன் படித்து இருக்கிறாள்!

அவளின் சீனியர் தான் இங்கே டயட்டீசியன்!

அவளிடம் கொஞ்சம் நேர  நல விசாரிப்புக்கு பின், தான் கொண்டு வந்த கம்பளைண்டை சொன்னாள்!

“அது எனக்கும் தெரியும் மது! என்னால ஒண்ணும் செய்ய முடியல! ஏன் ஏஓ(அட்மின் ஆபீசர்) மேடம் கூட கடுப்பில் தான் இருக்காங்க வெளியே சொல்லமுடியாம! நான் உனக்கு அப்புறம்  கால் பண்றேன் விபரமா சொல்றேன் இங்கே CCTV கேமரா இருக்கு! உன் நம்பர் கொடு!” வாங்கி கொண்டாள் அவள்!

பின் தர்ஷினி அவள் டூட்டி முடிந்து வீட்டுக்கு சென்று மறக்காமல் போன் செய்தாள் மதுவுக்கு!

விஷயம் இது தான்!

அங்கே காண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து இருப்பவன் இந்த ஹாஸ்பிட்டல் ஜே எம் டி(JMD) யின் பால்ய நண்பன்! பார்த்திபன்.

அதனால் காண்டீன் உணவு தரம் பற்றி அவனைப் பற்றி யாராலும் கம்பளைண்ட் செய்ய முடியவில்லை!

பேசண்ட்கள் தரும் ஸ்டார் ரேட்டிங்ஸ் எல்லாம் அவன் பேக்(fake) ஆக செய்து கொண்டு மானேஜ்மென்ட்டையும் ஏமாற்றி வருகிறான்.

மேலும் “JMD ஏ என் பிரண்ட் தான் உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது என்று ஒப்பனாவே ஏ ஓ கமலா மேடம் கிட்ட சொல்றான்! இன்னும் பத்து நாளில் அவனைத் காண்ட்ராக்ட் முடியப் போகுதுன்னு சொன்னாங்க கமலா மேடம்,உனக்கு தெரிந்த யாரையாவது அப்ளை பண்ணி சொல்லுன்னு என்கிட்ட கூட சொன்னாங்க மது! நீ வேணா டிரை பண்றியா?”

“அய்யோ நானா?”

“முடியாதா? சரி உனக்கு தெரிந்த யார்கிட்டயாச்சும் சொல்லு! பேப்பர்ல கூட ஆட் வரும்!”

“ஓகே சீனியர்” போன் வைத்த பின் அங்கே வந்த மாதுவிடமும் ராஜுவிடமும் இதை சொன்னாள் மது.

“நீ அப்ளை பண்ணு மது, நான் சப்போர்ட் பண்றேன்!” என்றான் ராஜுவும் உற்சாகமாய்!

மது கொஞ்சம் யோசித்தாள்! இன்வெஸ்ட்மென்ட் ஒண்ணும் தேவைப்படாது!

மாமா இருக்கும்போதே, வேத விலாசின் இன்னொரு பிரான்ச் ஆரம்பிக்கவென்று கொஞ்சம் பாத்திரம், ஸ்டவ் உள்ளிட்ட கமர்சியல் கிச்சனுக்கு உண்டான பொருட்கள் கிட்டத்தட்ட  எல்லாமே ஒரு செட் வாங்கி,   அப்போது கட்டி முடித்து குடி வராமல் இருந்த இந்த வீட்டில் வைத்து இருந்தார்!

அவர் இறந்து, அவர் உடன் பிறப்புகள் வந்து கேஸ் போட்டு, இப்போது ஹோட்டல் வீடு, என்று எல்லாமே ஸ்டே ஆர்டரில் இருக்கும் போது இவை மட்டும் இந்த வீட்டில் வைத்து இருந்ததால் தப்பித்து விட்டன!

மானு, மாது மற்றும் ராஜு கொடுத்த ஊக்கத்தின் பேரில் மது துணிந்து அந்த காண்ட்டீன் காண்ட்ராக்ட்க்கு அப்ளை செய்தாள்!

அதில் ஒரு இடத்தில் மட்டும் உண்மை விளம்பியாக தவறு செய்து இருந்தாள்!

தனக்கு நான் வெஜ் சமைக்க வராது என்று குறிப்பிட்டு விட்டாள்!

அந்த காண்ட்ராக்ட்க்கு அப்ளை செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்த பார்த்திபனின் ஆட்களே! அவர்கள் வேண்டுமென்றே சொதப்பலாக அப்ளை பண்ணி யிருந்தார்கள்!

எல்லோரையும் பில்ட்டர்(Filter) பண்ணிய பிறகு கடைசியாக வந்தவர்கள் மதுவும் பார்த்திபனும் மட்டுமே!

அதில் நான் வெஜ் சமைக்க வராது என்று குறிப்பிட்டதை சொல்லி அவளை ரிஜெக்ட் செய்து விட்டு மீண்டும் பார்த்திபனுக்கே காண்ட்ராக்ட் அளிக்கப் பட்டுவிட்டது!

மதுவுக்கு கொஞ்சம் அதிர்ச்சி! அதை விட வருத்தம்!

இந்த மாதிரி ஒரு நல்ல சிகிச்சையளிக்கும் ஒரு ஹாஸ்பிட்டலின் பேர், இந்த காண்டீன் காண்ட்ராக்ட்டால் டாமேஜ் ஆவது குறித்து!

அதிலும் அந்த JMD ஊருக்கே உணவு பற்றி அறிவுரை சொல்லும் அவன், தன் ஹாஸ்பிட்டல் உணவின் தரம் இவ்வளவு மோசமாக இருப்பதை எப்படி கண்டுக்காமல் இருக்கிறான்?

ஆனால் ராஜு அத்தோடு இதை விடுவதாய் இல்லை! அவனுக்கும் கோபம்!

அவன் தன் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி செகன்ட் ஹாண்டில் ஒரு பூட் ட்ரக்  (Food Truck – கிச்சன் வசதியுடன் இருக்கும் ஒரு வேன்) ஒன்றை எடுத்து வந்தான்!

அவன் நண்பன் “இது இங்கே சும்மா தான் நிக்குது! உன் பிரண்டுக்கு வேணுமின்னா எடுத்துட்டு போ, நல்ல ஒர்கவுட் ஆகி பணம் கிடச்ச பின் ஒரு ரேட் போட்டு எடுத்துக்க சொல்லு , இப்போ காசு ஒண்ணும் வேணாம்”  என்று சொல்லி சாவி கொடுத்தான்!

அதில் அந்த ஹாஸ்பிட்டல் அருகே நிறுத்தி மது, தனக்கு உதவியாக ஒரு சின்ன பையன், ஒரு பெண்ணையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான சுத்தமான நோயாளிகளின் வயிற்றுக்கு இதமான , முக்கியமா தனது  சிக்னேச்சர் டிஷ்கள் (அவளின் ஸ்பெஷல் தயாரிப்புகளான)- சிறு தானிய உணவுகளை சுவையாக விற்க தொடங்கினாள்!

உணவு பேக்கிங்கிலும் தனி கவனம் செலுத்தினாள்!

சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்காத அதே சமயம் எடுத்து சென்று சாப்பிட வசதியான வகையில்,( Eco friendly and convenience)  நல்ல தரமான பேக்கிங் மெட்டீரியல்களை சிவகாசியில் இருந்து தருவித்து கொண்டாள்!

பார்த்திபனின் காண்ட்டீனில் உள் நோயாளிகளுக்கான சாப்பாடு மட்டுமே தீர்ந்தது!

அது ஹாஸ்பிட்டல் பில்லில் சேர்க்க பட்டுவிடும்.

ஆனால் பேசன்ட்களின் துணையாக இருப்பவர்கள்(Patient Attenders), புற நோயாளிகள்  (O P) எல்லோருமே மதுவின் புட் ட்ரக்கில்  தான் சாப்பிட்டனர்!

 சாப்பிட்டு விட்டு மது அன்று செய்தது போல நோயாளிகளுக்கும் சாப்பாட்டை மறைத்து எடுத்து சென்றும் வந்தனர்!

ஏன் ஹாஸ்பிட்டல் ஸ்டாப் கூட இங்கே தான் டீ காபி குடித்தார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அங்கே ப்ரீ தான்!

அதாவது ஹாஸ்பிட்டல் நிர்வாகம் பணம் கட்டி விடும்!

இதை கண்ட கோபமான பார்த்திபன், அவளை அங்கே இருந்து கிளப்ப எவ்வளவோ முயன்றான்!

ஆட்களை வைத்து மிரட்டிப் பார்த்தான்! ஒன்றும் முடியவில்லை! அவள் பின்னால் ராஜுவும் அவன் பின்னே அவன்  அப்பா தேவேந்திரனும் இருப்பதால்!

இதற்கிடையில் ஒரு நாள் ரவுண்ட்ஸ் வந்த போது பெரும்பாலான  உள் நோயாளிகளின் அறை வாசலிலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு அப்படியே கொஞ்சம் கூட சாப்பிடாமல் முழுவதும் டிஸ்போஸ் பண்ணப் பட்டிருப்பதை அந்த ஹாஸ்பிட்டல் சீப் டாக்டர் ராகவன் கண்ணில் பட்டு விட்டது!

அவர் அதிர்ந்து போய், கமலாவை விசாரித்தார்!

“என்ன இது ஆன்ட்டி? இப்படி கிட்டதட்ட எல்லா ரூமில் பேசன்ட் டயட் எடுத்துக்காம இருக்காங்க? அப்ப எதை சாப்பிடுறாங்க அவங்க!”

“நாம எவ்வளவு சொன்னாலும் கேட்காம வெளிய இருந்து மறைச்சு கொண்டு வந்து சாப்பிடுறாங்க” என்றார் அவர்

“வெளில இருந்து வர புட் எவ்வளவு ஹைஜீனா இருக்கும்? ஹெல்த்தியா இருக்கும்? நீங்க எப்படி இத கண்டிக்காம இருக்கீங்க?”

ஹைஜீன் பற்றி சொல்லவும் கமலாவுக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது!

“நோ டாக்டர் ! நாம கொடுக்கிற புட்ட விட வெளியேயிருந்து அவங்க வாங்கிட்டு வர்றது ரொம்ப ஹெல்த்தியா ஹைஜீனா தான் இருக்கு! அதனால நானும் ஒண்ணும் கண்டிக்க முடியல”!

ராகவன் அவரை அப்படியே பார்த்தான்!

“ஆன்ட்டி, ப்ளீஸ், நீங்க அப்பா காலத்துல இருந்து இங்கே இருக்கீங்க! நீங்களே இப்படி எல்லோரையும் மாதிரி உள்ள ஒண்ண வச்சிட்டு பிராங்கா பேசாம இருந்தா எப்படி!

நாங்க உங்கள அப்படியா  ஒரு சராசரி ஸ்டாப் மாதிரியா  நடத்துறோம்? இங்க என்ன நடக்குதுன்னு ஓப்பனா சொல்லுங்க”

சொல்லிவிட்டார் அனைத்தையுமே! இல்லை கொட்டி தீர்த்து விட்டார்!

“நீங்க அப்பவே இதை ரகு கிட்ட சொல்லியிருக்கலாமே!”

எங்க சொல்ல விட்டான் அந்த பார்த்திபன்?

அவர் சொல்ல முற்படும் போதெல்லாம் ஏதாவது தகடு தத்தம் செய்து சொல்ல முடியாமல் அல்லவா செய்து கொண்டிருந்தான்!

மேலும் ராகவன் அளவு பொறுமை கிடையாது ரகுவிற்கு!

கொஞ்சம் முன் கோபி வேறு!

அதனால இப்படி பொறுமையாக எடுத்து சொல்ல சந்தர்ப்பமே வாய்க்கவில்லை அவர்க்கு!

“அப்ப ஒண்ணு பண்ணுங்க! அந்த மதுவோடு எனக்கு ஒரு மீட்டிங் செட்யூல் செய்து விட்டு எனக்கு சொல்லுங்க! அவளிடம் கன்பார்ம் செய்துடுங்க!”

“அப்ப பார்த்திபன் காண்ட்ராக்ட்?”

“அதை டெர்மினேட் செய்து விடலாம்! காண்ட்ராக்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிசனில் அந்த ஆப்சன் இருக்கு! டோன்ட் ஒர்ரி!”

“ரகு டாக்டர் என்ன சொல்வாரோ? அவர் பிரண்ட் தான் பார்த்திபன்!”

“ம்ம். தெரியும்.. அவனை நான் கன்வின்ஸ் பண்ணிக்கிறேன்!”

பண்ணினான்..

அதன் பின் ரகுவே கமலாவை கூப்பிட்டு மதுவிற்கு காண்ட்ராக்ட் சான்க்சன் செய்யும் பேப்பர்ஸை ரெடி செய்யும்படி சொல்லிவிட்டான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!