Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 3.1

“மது.. அன்னிக்கு நீ ஜாயின் பண்ணின முதல் நாள், அதான் அத்தை பர்த்டே அன்னிக்கு, எல்லோருக்கும் ஒரு பாயாசம் கொடுத்தியே, அது என்ன பாயாசம்? டேஸ்ட் கொஞ்சம் டிப்பரண்ட்டா இருந்தாலும் நல்லா இருந்துச்சு! அது இன்னொரு வாட்டி செய்றியா மது?” காபி குடித்தவாறே கேட்டாள் வைஷு

ஓபி முடிந்து வீட்டுக்கு கிளம்புமுன் ஒரு காபி குடிக்க தோன்றியது அவளுக்கு.

நேரே காண்டீனுக்கு சென்ற போது , அங்கே அவளுக்கு தான் காபி எடுத்து செல்லும்படி தன் உதவியாளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மது சரியாக!

“தம்பி, இன்னிக்கு வைஷு மேடம் ஓபி ரொம்ப பிசி! அவங்களுக்கு கொஞ்சம் டயர்ட் ஆகி இருக்கும்!



Advertisement

இந்த கிளைமேட்டுக்கு ஜூஸ் குடிச்சா நல்லா இருக்காது , நீ போய் காபியை அவங்களுக்கு கொடுத்துட்டு வா!”

இது தான் மது!

அந்த ஹாஸ்பிட்டலில் டுட்டியில் இருக்கும் டாக்டர்கள், ஒபியில் கூட்டம் ஜாஸ்தியாக இருந்தால், உணவு நேரம் கடந்தும் எழ முடியாது!

Advertisement

அப்போதெல்லாம் அவர்களுக்கு இப்படி குடிக்க ஏதேனும் ஜூஸ், சூப், பழங்கள் நட்ஸ் சேர்த்த ஸ்மூத்தி அல்லது கஞ்சி,  இல்லண்ணா இப்படி சில சமயம் காபி கூட அவர்கள் மனதில் நினைக்கும் முன், அவர்கள் முன் வந்து விடும்!

Advertisement

“அட , நாம இப்ப தான் கொண்டு வர சொல்லலாம்னு நினைச்சோம், அதுக்குள்ள அனுப்பிட்டாளே!” என்று அவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!

டாக்டர்கள் என்றுதான் இல்லை, அனைத்து ஊழியர்களுக்கும் அப்படி தான் பாரபட்சம் காட்ட மாட்டாள் மது!

தொடர்ந்து பனியில் நைட் டூட்டி பார்த்த செக்யுரிட்டிக்கும் சுக்கு காபியோ சூப்போ அனுப்ப தான் செய்வாள் மது!

Advertisement

ஸ்டாப்களுக்கு இப்படி என்றால், பேசன்ட்கள் டயட் பற்றி கேட்கவே வேண்டாம்!

பார்த்து பார்த்து ரொம்ப கேர் எடுத்து தயாரிப்பாள்!

அவர்களின் மெனுவில் கட்டாயம் ஏதேனும் ஒரு கீரை இருக்கும்.

பெரும்பாலான பெண்கள் சமைக்க சோம்பல்படும் வாழைத்தண்டு, வாழைப்பூவும் அடிக்கடி உண்டு அவள் மெனுவில்!

காய்கறி அல்லது மூலிகை சூப், கொத்தமல்லி, பிரண்டை துவையல் போல ஏதேனும் ஒன்று ஊறுகாய்க்கு பதில்!

அப்புறம் கறிவேப்பிலை பொடி, முருங்கைகீரைப் பொடி போல பொடி வகைகளும் இருந்தன அவர்கள் மெனுவில்!

காலை உணவில் கட்டாயம் சிறுதானியம் சேர்த்து பண்ணிய டிபன் ஐட்டம் ஒன்று உண்டு!

மாலை ஸ்நாக்ஸிலும் கூட சிறுதானிய தின்பண்டங்கள்!

அல்லது சுண்டல்!  அதில் சேர்க்கப்பட்டிருக்கும் அவளின் பிரத்யேக தயாரிப்பான மசாலாவுடன்!

அவளுக்கு நான் வெஜ் சமைக்கத் தெரியாது என்பதால், அது நன்றாக சமைக்க தேர்ந்த ஒரு நம்பிக்கையான பெண்ணை வேலைக்கு சேர்த்துக் கொண்டு, டயடிசியன் சொல்லியிருக்கும் நான்வெஜ் உணவையும் தரத்துடன் செய்து கொடுத்தாள்!

பேசன்ட் அட்டன்டர்கள் சாப்பிட அனைத்து உணவுகளும் சுவை மற்றும் சுகாதாரத்துடன் கிடைத்தன!

இவள் இந்த வாழைப்பூ வடையை எண்ணெயில் பொறித்தாளா, இல்லை தண்ணியில் பொறித்தாளா என்பது போல் இருக்கும் அங்கு கிடைக்கும் அனைத்து வகை பொறித்த பண்டங்களும் ஆயில் ப்ரீயாக!

டிஸ்சார்ஜ் ஆகிப் போகும் போது கூட சிலர் பார்சல் வாங்கிக்கொண்டும் போனார்கள்!

இப்படி ,   தான் ஏற்றுக் கொண்ட காண்டீன் காண்ட்ராக்ட்டை எந்த ஒரு தவறும் நிகழாமல், நேர்மையாக உண்மையாக, தன்னை நம்பி காண்ட்ராக்ட் கொடுத்த மானேஜ்மென்டுக்கு உண்மையாகவும் செயல்பட்டாள் மது!

எல்லா செயல்களிலும் ரொம்ப கேர் மற்றும் மெனக்கிடல் இருந்தது அவளிடம்!

அதுவே எல்லோர் மனதிலும் சீக்கிரம் அவளை இடம் பெறவும் வைத்துக் கொண்டிருந்தது!

தன்னிடம் “அது என்ன பாயாசம்?’ என்று ஆசையுடன் கேட்ட வைஷுவிடம்

“அது தினை பாயாசம் டாக்டர்! தினைக்கு நேச்சுரலாவே ஒரு இனிப்பு டேஸ்ட் இருக்கும்! அதில் வெல்லம் போட்டு பாயாசம் இல்லை அதிரசம் செஞ்சா சூப்பரா இருக்கும்! ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது!”

“நீ இன்னொருவாட்டி அதை செய்யேன்!”

“ஓ செய்யலாமே! நாளைக்கு கிருத்திகை வேற! முருகனுக்கு பிடித்தது தினை!

“நாளைக்கே வைஷு டாக்டருக்கு ஒரு பாயசத்தைப் போட்டுற வேண்டியது தான்!” என்றாள் மது குறும்பாக விவேக் காமெடியில் வரும் பாட்டியை போல!

“ஏய்..நக்கல் உனக்கு!..” மதுவின் காதை திருகிய வைஷு,  சட்டென ஒரு சின்ன வருத்தத்துடன்,

“இல்ல மது, நான் மட்டும் இங்க டூட்டி பார்க்கும் போது வகை வகையா ஹெல்தியா சாப்பிடறேன்! ஆனா அங்க வீட்டுல என் குழந்தைங்களுக்கு தான் வீட்டுல  அவ்வளவு நியூட்ரிசியஸான புட் எதுவும் கொடுக்க முடியல!” என்றாள் சின்ன குற்ற உணர்ச்சியுடன்!

“அது தான் எனக்கு கொஞ்சம் வருத்தம்!”

“ஏன் உங்க வீட்டுல தான் குக் இருப்பாங்களே?”

“இருக்காங்க தான்! ஒரு நம்பிக்கையான கேர் டேக்கர். ஆனா அவங்க வீட்டை  சுத்தாம வச்சுப்பாங்க, கையும் ரொம்ப சுத்தம்!”

“பசங்களையும்  நல்லாதான் பார்த்துப்பாங்க! பெரிய மாமாவையும் தான்!

ஆனா அவங்களுக்கு இப்படியெல்லாம் சமைக்க வராது.  ரொம்ப சாதாரண தினப்படி சமையல் தான் அவங்களுக்கு தெரியும்! அது பசங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது.”

“ஒண்ணு ஆன்லைனில் ஏதாச்சும் ஆர்டர் பண்ணிடுதுங்க, இல்லன்னா நூடுல்ஸ் கேட்டு அடம் பண்ணுதுங்க!”

“என்ன சொல்றீங்க டாக்டர்? உங்க வீட்டுப் பிள்ளைங்களே நூடுல்ஸ் தான் சாப்பிடுறாங்களா?”

“ஆமாம் அவங்க சித்தாவுக்கு(ரகு சித்தப்பாவுக்கு) தெரியாம தான்!”

ஆம், அவன் தான் ஊரில் உள்ள குழந்தைகளை எல்லாம் நூடுல்ஸ் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கானே!

“மது, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“என் பசங்க, காலையில் கூட சத்து மாவு கஞ்சி குடிச்சுட்டு போறாங்க, இல்ல ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டுட்டு போயிடறாங்க. நான் எப்படியாவது கொஞ்சம் ஊட்டி விட்டு விடுவேன்!”

“மதியம் நாம என்ன கொடுத்தாலும் அது கீழே பாதி மேல பாதி, ஷேரிங் பாதின்னு ஒழுங்கா சாப்பிட மாட்டாங்க!

டின்னர் பெரும்பாலும் சப்பாத்தி தான்!

ஈவனிங் அவங்க ஸ்கூல் விட்டு வந்தவுடன் ஏதாவது ஹெல்தியா கொடுத்தா தான் உண்டு! நீ உன் காண்டீனில் இருந்து அப்படி ஏதாவது கொடுத்து விட முடியுமா?”

“நான் கொண்டு போனால், சின்னது என்னைய விடாது, நான் தான் ஊட்டி விடணும்னு ஒரே அடம் பண்ணும்! அவங்க சாப்பிட்டப் பிறகு போனா தான் எனக்கு கொஞ்சம் சவுகரியமா இருக்கும்! இல்லன்னா ஈவனிங் ஓபி பார்க்க லேட்டாயிடும்!”

“கண்டிப்பா செய்றேன் டாக்டர்!” என்று ஒத்துக் கொண்டுவிட்டாள் மது!

ஆனால் அதை கொண்டு போய் கொடுக்க தான் தோதான ஆள் இல்லை அவளிடம்!

அந்த நேரம் எல்லோருக்குமே ஏதாவது வேலை இருந்தது அவள் டீமில்!

ப்ரீயாக இருக்கும் கீதாவுக்கோ வண்டி ஓட்டத் தெரியாது!

வேறு வழியில்லாமல் மதுவே அவர்களுக்கு உணவு கொண்டு போனாள் தன் ஸ்கூட்டியில்.

நகரின் முக்கிய மையத்தில் இருந்தது வைஷுவின் வீடு! அல்ல.. பங்களா!

அடுத்த கிராசில் இருந்தது அவர்கள் இதுவரை நடத்தி வந்த மருத்துவமனை!

இன்னமும் அங்கே ஈவனிங் ஓபி மட்டும் உண்டு! உள்ளூர் நோயாளிகள் ஈவனிங் ஒபிக்கு தான் வருவர்.

ரகுவுக்கும் ராகவனுக்கும் அங்கே பேசெண்ட்கள் வருவர்.

எனவே பெரும்பாலும் அவர்கள் மாலை அங்கு தான் இருப்பர்.

மாலை ஓபி தொடங்கும் முன் கொஞ்ச நேரம் ரகு வீட்டிற்கு  வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பான், சில நேரம் புது ஹாஸ்பிட்டலிலேயே அவன் ரூமில் ரெஸ்ட் எடுத்து விட்டு  நேரே பழைய ஹாஸ்பிட்டல் சென்று விடுவான்!

வைஷு சொன்ன அட்ரஸில் உள்ள வீட்டை நெருங்கி, வாட்ச்மேனிடம் தன்னைப் பற்றி சொன்னதும்,

அவர், “அம்மா ஏற்கனவே நீங்க வருவீங்கன்னு சொல்லிவிட்டார்கள், உள்ளே போங்கம்மா” என்று அனுப்பினார்.

உள்ளே சென்றால், தாரிகா, தன்வி மற்றும் கேர் டேக்கர் மேகலா உள்ளிட்ட எல்லோரும் வீட்டு வாயிலை நோக்கி  நின்று கொண்டிருந்தார்கள்!

பவர் கட்!

ஈபி லைனில் ஏதோ பால்ட்!

“ஈ.பி.போஸ்டில் ஏறி சரி பண்ணிக் கொண்டு இருக்காங்க!” என்றார் மேகலா, அவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பின்!

“ஏன் இன்வேர்ட்டர், இல்ல ஜென்செட் ஏதும் இல்லையா?”

“ஜென்செட்டும் போட முடியல!   இன்னிக்குப் பார்த்து பேட்டரி போயிடுச்சாம்! நாளைக்கு தான் பேட்டரி ரீப்ளேஸ் பண்ணி சரியாக்குவாங்களாம்!”

“அதான் பிள்ளைங்க பயங்கர கடுப்புல இருக்காங்க!”

“அவங்க போனிலும் வேற சார்ஜ் இல்லை!”

மேகலாவிடம் “அச்சச்சோ” என்றவள்,  தாரிகா, தன்வியை நோக்கி

“ஹாய் குட்டீஸ்!” என்றபடி, மது அந்த வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைத்த கணம் டக்கென்று மின்சாரம் வந்து விட்டது!

“ஹையா!” என்று சந்தோஷ கூச்சலிட்டனர் குட்டீஸ் இருவரும்!

“யாரும்மா இந்த மஹாலட்சுமி! காலடி எடுத்து வச்ச கணம் இந்த வீட்டுக்கே வெளிச்சம் வந்து விட்டது! என்ற ஒரு வயதான ஆண் குரல் உள்ளேயிருந்து கேட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!