Skip to content
Post Views: 7,107
அவர்.. அந்த பெரியவர்..
ராகவன் மற்றும் ரகுவின் பெரியப்பா ரெங்கநாதன்!
அவரும் ஒரு டாக்டர் தான் ! பீடியாட்ரிசியன்(குழந்தைகள் நல மருத்துவர்)!
Advertisement
ஆனால் இப்போது அவர் கொஞ்சம் முதுமை காரணாமாக ப்ராக்டிஸ் செய்வதில்லை!
குறிப்பாக லாக் டவுனுக்கு அப்புறம் சுத்தமாக வீட்டோடு ஒடுங்கி விட்டார்!
திருமணம் செய்து கொள்ளாத அவருக்கு, தன் தம்பியின் குடும்பம் தான் எல்லாம்!
Advertisement
அவர்களும் அதே போல் பாசத்துடன் மரியாதையாக இருப்பார்கள்!
Advertisement
அண்ணனிடம் கேட்காமல் குடும்பத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார் ரகுவின் தந்தை ராமநாதன்!
அதே போல் தான், விஜய பார்வதியும்.
அவர் மேல் மிகுந்த பாசமும் மரியாதையும் உண்டு!
Advertisement
“மஹாலட்சுமி இல்ல சார்! மதுமிதா! நம்ம புது ஹாஸ்பிட்டல் கான்டீன் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தறவங்க!” அவருக்கு பதில் சொன்னார் மேகலா!
“அந்த பார்த்தி பய என்ன ஆனான்?“
“அவர்கிட்ட இருந்ததை தான் இப்ப இவங்க புதுசா எடுத்து பண்ணிட்டு இருக்காங்க சார்!”
“வணக்கம் சார்” என்றாள் மது அவரைப் பார்த்து!
“வணக்கம்மா! நீ எங்கம்மா இங்க?”
மது தான் ஸ்நாக்ஸ் கொடுக்க வந்த விவரம் சொன்னாள்!
தான் எடுத்து வந்தததை அவர்களுக்கு கொடுத்தாள்!
தாரிகாவுக்கும் தன்விக்கும் அது ரொம்ப பிடித்து போய் உடனே காலி செய்து விட்டனர்!
பெரியவர், தனக்கு அவற்றை வேண்டாம் என்று சொல்லி விட்டு, “மேகலா ஒரு காபி மட்டும் சூடா கொண்டு வாம்மா” என்றார்!
குட்டி பாப்பா தன்விக்கு மது கொண்டு வந்த ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்ட பிறகும் ஒரே பசி!
காரணம்.. அவள் இன்று அடம்பிடித்து, ஸ்கூலுக்கு கொண்டு போன லஞ்ச் – சான்ட்விச் தான்!
அது கிட்டதட்ட எல்லாமே ஷேரிங்கில் போய் விட்டது!
மிஸ்க்கு தெரியாமல் இது நடக்கும்!
LKG வகுப்பில் படிக்கும் தன்வி, இந்த வயதிலேயே எப்போது தான் கொண்டு வந்த எதையும் தனியே சாப்பிடவே மாட்டாள்!
அடுத்தவர்க்கு கொடுத்து சாப்பிடும் பழக்கம் அவளிடம் இயல்பாக இருந்தது!
இன்றும் சான்ட்விச் ஷேர் செய்யப்பட்டதால், அதுக்கு ஒரே பசி! அழத் தொடங்கி விட்டாள்!
பெரியவர்க்கு காபி போட போன மேகலா, கையில் வெந்நீரைக் கொட்டி கொண்டு விட்டார் இந்த பதட்டத்தில்!
அவர் கை லேசாக கொப்பளித்து போய் விட்டது!
அவருக்கு பர்னால் கொண்டு வர சொல்லி போட்டு விட்டாள் மது!
பெரியவர் காபிக்கு தவித்துக்கொண்டு இருக்க, தன்வி பசியால் வேகமாக அழத் தொடங்கி விட்டது!
வேறு வழியில்லாமல் மது அவர்கள் வீட்டு கிச்சனுக்குள் நுழைந்து ப்ரிட்ஜில் என்ன இருக்கிறது என்று பார்த்தாள்!
காலையில் இருந்து கரண்ட் இல்லாத காரணமாக பால் திரிந்து போய் இருந்தது!
மாவு கொஞ்சம் புளித்துப் போய் இருந்தது!
மது, வரும் வழியில் அன்று தான், புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த ஒரு பால் மற்றும் தயிர் விற்கும் கடையில் கறவைப் பால் இருந்ததைப் பார்த்து விட்டு, சாம்பிள்க்கு ஒரு லிட்டர் வாங்கி விட்டு, அவர்கள் விசிடிங் கார்ட் வாங்கிஇருந்தாள் காண்ட்டீன்க்கு சப்ளை பண்ணக் கேட்கவென்று!
இப்போது அந்த பாலை அவள் ஸ்கூட்டியில் தான் வைத்து இருந்தாள்!
அதை எடுத்து வந்தாள் மது!
காபி பொடி இருக்காவென்று பார்த்தால், நல்ல காபி பொடி தான் வாங்கி வைத்து இருந்தார்கள்!
மது அதை எடுத்து புதிதாக டிகாக்ஷன் போட்டாள்!
தோசைக் கல்லைப் போட்டு, வெங்காயம் கட் செய்து போட்டு இட்லி பொடி தூவி விட்டு நெய் விட்டு, நல்ல நெய்ப் பொடி தோசை போட்டுக் கொடுத்தாள் மது தன்வி, தாரிகா இருவருக்கும்!
அவர்கள் பசியில் ஒரு கட்டு கட்டினார்கள்!
மது அவர்களைப் பிரியத்துடன் பார்த்தாள்!
இப்படி வளர்கிற வயதில், நல்லா சாப்பிடுகிற வயதில், காசு பணம் இருந்தும் இந்த குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கலையேன்னு அவள் மனம் அவர்களுக்காக வருத்தப்பட்டது!
வைஷாலியின் கவலையும் புரிந்தது!
அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்த பெரியவர், தனக்கும் ரெண்டு தோசை வேண்டும் என்று கேட்டு விட்டார்!
இதைக் கண்ட மேகலாவுக்கே மிகுந்த ஆச்சர்யம்!
வேலைக்கு சேர்ந்த இத்தனை நாளில் அவர் ஒரு நாள் கூட இப்படி கேட்டதேயில்லை!
அதுவும் இந்த நேரத்தில்!
“தோசை சாப்ட்டுட்டு அப்புறம் காபி குடிச்சுக்குறேன்” என்றார் அவர் ஆசையாக!
அவருக்கும் மது தோசை ஊற்றிக் கொடுத்தாள் மது!
அவர் சாப்பிட்டபின், பில்டர் காபியையும் தந்தாள்!
காபியைக் குடித்த அவருக்கு கண்கள் கலங்கி விட்டது!
“ஏன் சார்? காபி நல்லா இல்லையா?” பதறினாள் மது!
“திவ்யமா இருக்கும்மா! அப்படியே விஜி போட்ட மாதிரி! அவள் ரொம்ப நல்லா காபி போடுவாள்!
காபி போடுவது , அதுவும் நல்லா பில்டர் காபி போடுவது ஒரு கலை!
அது எல்லார்க்கும் வந்துடாது!
உன் காபி அப்படியே விஜி போட்ட காபியை நினைவுப் படுத்திடுச்சும்மா!” என்றார் உணர்ச்சிவசப்பட்டு!
“நீ எனக்கு ஒரு உதவி செய்றியாம்மா!”
“என்ன சார் சொல்லுங்க!”
“நீ இங்க இப்படி தினமும் வருவேன்னா, எனக்கு நீயே காபி போட்டு தர்றியா ப்ளீஸ்?” கெஞ்சலுடன் கேட்டார் அந்த பெரியவர்!
அப்படியே உருகிப்போய் விட்டாள் மது!
“அய்யோ சார்! ப்ளீஸ் எல்லாம் எதுக்கு, நான் போட்டு தர்றேன் சார்! ஷ்யூர்!” என்றாள் மது!
பார்ப்பதற்கு அப்படியே அவள் மாமா ராமச்சந்திரன் மாதிரி தான் இருந்தார் அவரும்!
அவரைப் போல தனிக்கட்டை!
அவர் தன் மச்சான் குடும்பத்த தான் தன் குடும்பமா நினைச்சார்,
இவர் தன் தம்பி குடும்பத்த தன் குடும்பமா நினைக்கிறார்!
அன்று இரவு எல்லோரும் ஒன்றாக டின்னர் சாப்பிடும் போது ரகு கேட்டான் “எங்க பெரியப்பா வரல?”
“அவர் ஈவனிங் தான் தோசை சாப்பிட்டார், அதுனால பால் மட்டும் போதும்னு” சொல்லிட்டார் என்றார் மேகலா
“ஈவனிங் தான் தோசை சாப்பிட்டாரா? அவர் அப்படியெல்லாம் சாப்பிட மாட்டாரே?”
“இல்ல மதும்மா, குழந்தைகளுக்கு ஊற்றிக் கொடுத்த போது அவரும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்!”
ரகுவுக்கு ஒரே ஆச்சர்யம்! மது இங்க வந்தாளா?
“மதுவா? எந்த மது? யார் மது?” என்றான்!
“ரொம்ப நடிக்காதடா” என்ற மனசாட்சியை அடக்கியபடி!
வைஷுவும் மேகலாவும் விவரம் சொன்னார்கள்!
ஆக.. இனி மது இங்க டெய்லி வரப் போறா! அவன் மனம் ஏனோ உள்ளுக்குள் குதியாட்டம் போட்டது!
அவளைப் பார்க்கவே கூடாது என்று மனதிற்கு கடிவாளம் போட்டுக் கொண்டு தான், எல்லோர்க்கும் கொடுத்து அனுப்புவது போல அவனுக்கும் மது கொடுத்தனுப்பிய எதையும் அவன் தொடக்கூட இல்லை!
அப்படியே திருப்பி அனுப்பி விட்டான்!
இல்லை ஆற வைத்து வேஸ்ட் ஆக்கினான்!
ரெண்டு மூணு நாள் பார்த்த மது கொடுப்பதை நிறுத்தி விட்டாள்!
அவள் எந்த தப்பையும் கூட மன்னிப்பாள்! புட் வேஸ்ட் பண்ணினால் மன்னிக்கவே மாட்டாள்!
மது தினமும் அவன் வீட்டிற்கே வந்து போகிறாள் என்பது ஒரு பக்கம் அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது.
இங்கே என்றால், அவளறியாமல் அவளைப் பார்த்துக் கொள்ளலாம்!
ஹாஸ்பிட்டலில் என்ன காரணம் சொல்லி அவளைப் பார்க்க முடியும்!
அப்படியே பார்த்தாலும் அவளின் அந்த பார்வையில் அவன் என்ன ஆவானோ?
எனவே அவன் காசுவலாக வீட்டிற்கு வருவது போல் மது அங்கு இருக்கும் நேரம் வந்தான்!
அங்கே மதுவும் அவன் பெரியப்பாவும் பாட்டுக்கு பாட்டு நடத்திக் கொண்டு இருந்தார்கள்!
அவன் பெரியப்பாவிற்கு பழைய பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவன் அம்மாவை, அக்காவை கூட பாட சொல்லிக் கேட்பார்.
அவருக்கு ஆடியோவில் கேட்பதை விட இப்படி பாட சொல்லிக் கேட்பது ரொம்ப பிடிக்கும்!
மதுவின் மாமாவுக்கும் கூட பழைய பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்!!
அதிலும் அந்த கால பீம்சிங் “ப” வரிசைப் படங்கள் அத்தனை சிடிக்கள் அவரிடம் இருந்தன! ரொம்ப தீவிர சிவாஜியின் ரசிகர்!
சிவாஜியை யாராவது, ஏதாவது.. இந்த கால குழந்தைகள் கிண்டல் பண்ணினால், அவ்வளவு தான் ராமச்சந்திரன் “ரவுத்திர சந்திரன்” ஆகி விடுவார்!
அது மதுவே என்றாலும் கூட அவருக்குக் கோபம் வந்து விடும்!
இப்போது ரகுவின் பெரியப்பபாவிற்கும் அப்படி பழையப் பாடல்கள் தான் பிடிக்கும் என்றவுடன் அவளுக்கு தன் மாமாவின் நினைவுதான் வந்தது!
“ஐய்! எங்க மாமாவும் உங்கள மாதிரி தான் சார்! என்னைய, எங்க அம்மாவ பழைய பாடல்கள் எதாச்சும் பாட சொல்லிக் கேட்பார்!”
“நான் ஸ்கூல் படிக்கும் போது, எப்பவாவது பவர் கட் ஆகி விட்டால், எங்களின் என்டேர்டேயின்மென்டே இது தான்!”
“ஏதாச்சும் ஒரு வார்த்தையை வைத்து அது வரும் பாட்டாக பாடுவோம்!”
“உதாரணமா நிலான்னு வர்ற பாட்டு, தூக்கம் என்று வர்ற பாட்டு, இல்லன்னா பார்வைன்னு வர்ற பாட்டு இப்படி.. ரெண்டு ரெண்டு வரி பாடுவோம், முழுசா பெர்பெக்டா எல்லாம் பாட வராதுன்னாலும் அது ஒரு சந்தோசம்!”
மது அப்படியே தன் குழந்தைப்பருவத்திற்கே சென்று மீண்டாள்!
“ஏன் மது, நாமளும் இன்னிக்கு அப்படி பாடினா என்ன?” என்றார் பெரியவர்!
மேகலாவுக்கு மயக்கம் வராத குறை தான் அன்று!
பெரியவரா இப்படி உற்சாகமாய் பேசுகிறார்? சதா தன் ரூமில் இருந்து கொண்டு, காபியைக் கூட அறைக்கே வர வைத்து குடிக்கும் இவரா, இப்படி மதுவிடம் அரட்டை அடிக்கிறார்?
“ம்ம். ஒகே சார்.” மது ரெடியானாள், ஒரு புறம் தான் கொண்டு வந்த சிறுதானிய புட்டை தன்விக்கு ஊட்டிக் கொண்டே!
தினமும் இப்படி ஏதாவது கொண்டு வருகிறாள் மது, புட்டு, கொழுக்கட்டை, சுண்டல், வாழைப்பூ வடை!
இல்லன்னா பல பருப்புகளும் தானியங்களும் சேர்த்த அடை என்று!
கூடவே பெரியவர்க்கு பிடித்த பில்ட்டர் காபி இங்க வந்து போட்டுக் கொடுப்பாள்!
மேகலாவிற்கு சரியாக டிகாக்ஷன் இறக்கத் தெரியவில்லை!
நல்ல காபி பொடியிருந்தும், ஒரேடியா தண்ணி ஊற்றி தடியால் அடித்த மாதிரி இருந்தது அது! அது தான் காபி சரியா வரலை!
மது இப்போதெல்லாம் காலைக்கும் அதை போட்டு வைத்து விட்டே செல்கிறாள்!
இப்போ காபியுடன் கச்சேரியும் ஆரம்பித்து விட்டார் பெரியவர்!
“இன்னைக்கு பார்வை என்ற வார்த்தை தான் கன்டென்ட்! ஆரம்பிக்கலாமா? பார்வை, கண் இப்படி கூட இருக்கலாம்!”
“ம்ம் சரி!” மது பாட ஆரம்பித்தாள்!
“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல”
நீ சொல்லாத சொல்லும் சொல் அல்ல
நீ இல்லாமல் நானும் நான் அல்ல!”
ரொம்ப சரியாக அவள், “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல” என்று பாடும்போது தான் ரகு உள்ளே நுழைந்தான்!
அவள் கண்களில், அவனை கண்டதும் ஒரு மின்னல்.. சின்ன வெட்கம் தோன்றி மறைந்தது!
அவனுக்குள்ளும் தான் ஒரே ஷாக் அடித்த ஏதோ ஒரு உணர்ச்சி!
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் டக்கென்று மாடியேறி தன் ரூமிற்குள் நுழைந்து கொண்டான்!
பின்னால் மது பாடிக்கொண்டிருப்பது கேட்டது!
“என் மேனியில் உன்னை பிள்ளையைப் போலே
நான் வாரியணைப்பேன் ஆசையினாலே”
அவனுக்கும் அங்கே போய் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து அவள் பாடுவதை ரசிக்க வேண்டும் என்று ஆசை வேகமாய் எழுந்தது!
“நானும் பாடட்டா.. உன்னோடு”
“உன்னைப் பார்த்தப் பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே!”
அவன் உள்ளுக்குள் போராடிக் கொண்டிருந்தான் அவன் மனதுடனும் அவன் ஈகோவிடனும்!
ஒரு வழியாக அவன் ஈகோவை அவன் ஆசை வென்று, அவன் மெல்ல கீழே இறங்கி வந்தான்!
டைனிங் ஹாலை நோக்கி!
அங்கே இப்போது திரும்பி நின்று தன்விக்கு பால் ஆற்றிக்கொண்டே பாடிக் கொண்டிருந்தாள்!
“ஓராயிரம் பார்வையிலே..உன் பார்வையை நான் அறிவேன்..
உன் காலடி ஓசையிலே உன் உன் காதலை நான் அறிவேன்…”
அவன் அப்படியே அதிர்ந்து போய், “என்ன இவள் இப்படி டைமிங்கா பாடுறா!!” அவளை அப்படியே வைத்தக் கண் வாங்காமல் பார்த்தான்!
இப்போது பெரியவர் பாடினார்!
“பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமோ..”
“அட.. பெரியப்பா நீங்களுமா?” உள்ளுக்குள் கேட்டபடி,
“ஹாய் சித்தா!” தன்வியின் குரலில் தான் ஒருவாறு நடப்புக்கு வந்தான்!
“ஹாய் குட்டிம்மா, என்ன டார்லிங் சாப்பிட்டுட்டு இருக்க?’
“சித்தா, மது சூப்பர் சூப்பர் ஸ்நாக்ஸ் கொண்டு வர்றா தெரியுமா? அதை தான் ஒரு கட்டு கட்டினோம்!” தன்வி சந்தோசத்துடன் சொன்னாள்!
“பாருங்க சித்தா, மது ஆன்டிய இப்படி கூப்பிடக் கூடாதுன்னா கேட்கவே மாட்டேங்கிறா!” தாரிகா கம்ப்ளைன்ட் செய்தாள்!
“ம்ம்.. போ மாட்டேன்.. அப்படி தான் கூப்பிடுவேன். எனக்கு மதுவ ரொம்ப பிடிச்சுருக்கு, மதுவுக்கும் தான், அவளே ஒண்ணும் சொல்லல, நீ ஏன்?” அவர்களுக்குள் சின்ன செல்ல சண்டை வர,
“சரி.. சரி. உங்க சண்டைய அப்புறம் போடுங்க , மது இப்ப கிளம்பி விடுவா! அதுக்குள்ள இன்னொரு பாட்டு பாடட்டும். ஏன் மது பாட்டை நிறுத்திட்ட.. பாடு! “
“உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்..
என்னைப் பாட சொன்னால் என்ன பாடத் தோன்றும்.
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை…
தாலாட்டுப் பாட.. தாயாக வில்லை..”
அவன் அப்படியே சொக்கி தான் போனான் அவள் குரலிலும், அவளிடத்தும்!
அடுத்த நாள், மது வரும்போது பருப்பு சாதம் கொண்டு வந்து இருந்தாள் பிள்ளைகளுக்கு!
அவர்கள் ஒருவேளை கூட சாதமே சாப்பிடுவது இல்லையென்று அறிந்து!
நல்ல சூடான சாதத்தில், பருப்புடன் நெய் விட்டு, அதன் மேல் நீர்க்க கொஞ்சம் ரசமும் விட்டு, குழைவாக பிசைந்த சாதத்தை ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டு வந்திருந்தாள்!
தாரிகாவுக்கு, ஒரு பவுலில் ஸ்பூன் போட்டு சாதம் போட்டு கொடுத்தாள், தொட்டுக் கொள்ள வெண்டைக்காய் பிரை!
தன்விக்கும் அவளே ஊட்டினாள்!
வழக்கம் போல் அவள் வரும் நேரம் கணித்து வைத்து, இயல்பாக அங்கு வந்ததைப் போல் அங்கு வந்தான் ரகு!
“ஆ.. ஆ.” என்று சொல்லி, விளையாட்டு காட்டி, தன்விக்குப் பிடிக்காத அந்த பருப்பு சாதத்தை வேடிக்கைக்காட்டி ஊட்டிக்கொண்டிருந்த மதுவிடம் போய்.
“அப்படியே எனக்கும் ஒரு வாய். “ என்று ஊட்டிக்கொள்ள அவன் மனம் பரப்பரத்தது!
அவன் அம்மா விஜி இப்படி தான் அவனுக்கு சிறு வயதில் ஊட்டி விடுவாள்!
இப்போது மதுவின் கையால் சாதம் ஊட்டிக்கொள்ள ஆசைப்படும் இந்த வாய் தான் அவளை நோக்கி இன்னும் சில நாட்களில் அமில வார்த்தைகளை, அதன் வீர்யம் புரியாது, சொல்லப்போகிறது என்று அவனுக்கே அப்போது தெரியாது!!
error: Content is protected !!