Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 5

தன் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து வீடு திரும்பிய ரகுவின் அப்பா டாக்டர் ராமநாதன், வீட்டில் புதிதாக ஒரு நல்ல வைப்ஸ் இருப்பதை உணர்ந்தார்!

உள்ளே நுழைந்தவுடன் ஒரு புதிய நறுமணம்!

புதிதாக என்றும் சொல்லிவிட முடியாது, ஏற்கனவே அவர் மனைவி விஜி இருக்கும் போது இது மாதிரி மாலை நேரத்தில் வீட்டில் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும் ஒரு நல்ல பரிச்சயமான சுகந்தம் தான்!



Advertisement

அது  பூஜையறையில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது!

அவர் மெல்ல பூஜை அறையை பார்த்தால், அங்கு அவருக்கு ஒரே ஆச்சர்யம்!

அங்கு அவரின் ஆசைப் பேத்திகள் தாம் விளக்கேற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர்!

Advertisement

“ஏய் போதும்டி, நாளைக்கு மிச்ச கோனை ஏத்திக்கலாம்!” என்று இன்னும் ஒரு குட்டி தாம்பாளத்தில் தசாங்க பவுடரை அத்துடன் கொடுக்கப்பட்டிருந்த சின்ன பிளாஸ்டிக் கோனில் அடைத்து  கோன் அச்சு வைத்துக் கொண்டிருந்த தன்வியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தாள் தாரிகா!

Advertisement

ஆம் அவர்கள் இருவரும் தான் மது சொல்லிக் கொடுத்தபடி, சாமி  விளக்கேற்றி விட்டு, வாசலிலும் இரண்டு அகல் விளக்கேற்றி வைத்து விட்டு, இங்கு தசாங்கமும் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள்!

தன்விக்கு அந்த தசாங்க பவுடரை குட்டி பிளாஸ்டிக் கோனில் அடைத்து மோல்ட் செய்வது ரொம்ப பிடித்து விட்டது!

அவள் பாட்டுக்கு அச்சு வைத்துக் கொண்டே போனாள்!

Advertisement

வைஷு தான்,  காண்டீனில்  சாமி படம் அருகே மது ஏற்றி வைத்து இருந்த தசாங்கத்தைப் பார்த்து, என்னெவென்று அறிந்து, மதுவை தன் வீட்டிற்கும் வாங்கிவர சொல்லி, இதோ வாண்டுகள் இரண்டும் இப்போது அதை பூஜையறையில் ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள்!

“இந்த ஸ்மெல் தான் மது,  அத்தை இருக்கும் போது பூஜை ரூமில் வரும்! நானும் மார்கெட்டில் உள்ள எல்லா ஊதுபத்தி, சாம்பிராணி எல்லாம் ட்ரை பண்ணி விட்டு, பின் விட்டுட்டேன்!

இது பேரே இப்ப தான் எனக்கு தெரியும்! எங்க வீட்டுக்கும் அடுத்த முறை வாங்க போகும் போது வாங்கி வா” என்று சொல்லியிருந்தாள்!

தாத்தாவைப் பார்த்தவுடன் இரண்டு பேத்திகளும் ஓடி வந்தார்கள்!

“ஹாய் ராமு தாத்தா!”

“ஹாய் குட்டீஸ்! வாங்க வாங்க” இருவரையும் அணைத்துக் கொண்டு கொஞ்சினார் அவர்!

கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு , “ஓகே தாத்தா போய் ரெப்ரெஷ் ஆகிட்டு , பெரிய தாத்தாவைப் பார்த்துட்டு வரேன்!”

“பெரிய தாத்தாவே இங்கு வருவார், நான் போய் கூட்டிட்டு வரேன் தாரிகா கிளம்ப, நோ நோ குட்டிமா அவர டிஸ்டர்ப் செய்ய கூடாது, நானே போறேன்!”

“அதெல்லாம் ஒரு டிஸ்டர்பும் இல்ல!” என்ற படியே உற்சாகமாய் ஹாலுக்கு வந்தார் பெரிய தாத்தா ரெங்கநாதன்!

“நான் இப்ப தான் சூப்பர் பில்ட்டர் காபி குடிச்சு, எனர்ஜெட்டிக்கா இருக்கேன்!”

“நீ கொஞ்ச முன்னாடி வந்து இருந்தா, உனக்கும் கிடைச்சு இருக்கும்!”

“ஆமா தாத்தா, கொஞ்ச முன்னாடி தான் மது கிளம்பி போனா!” என்றாள் தன்விக் குட்டி!

தன் அண்ணனை ரொம்ப நாள் கழித்து இப்படி உற்சாகமாய் பார்த்த ராமநாதனுக்கு ஒரே சந்தோஷம்!

பின் தன்விக் குட்டியைக்  கேட்டார், “ஆமா மதுவா யார் அது?”

பெரிய தாத்தாவும் வாண்டுகளும் மது பற்றிய விபரம் சொன்னார்கள்!

“ஓ! ஸ்..ஸ்.. அப்பாடி! ஒரு வழியா அந்த பார்த்தி இங்க இருந்து கிளம்பினானே அவர் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது!

விஜி எவ்வளவோ ட்ரை பண்ணியும் கூட ரகுவோட இந்த பார்த்தி பிரெண்ட்ஷிப்ப மட்டும் கட் பண்ணவே முடியல கடைசி வரைக்கும்! அவரிடம் ஒரு சின்ன பெரு மூச்சு!

அவர் ரெப்ரெஷ் ஆகி வந்ததும், பேத்திகள் இருவரும் அவருக்கு ஸ்நாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

கருப்பு கவுணி அரிசி லட்டு, குதிரைவாலி அரிசி முறுக்கு!

“இரண்டும் ரொம்ப நல்லாயிருக்கும் தாத்தா! மது கொடுத்தா!” என்றது தன்வி!

“என்னம்மா, ரெண்டு பேருக்கும் பயங்கர பக்தி வந்துட்டுது போல!”

“மது தான், தாத்தா சொன்னா, டெய்லி ஈவனிங் சாமி விளக்கேத்தனும்னு!

அதுவும் குட்டியா இப்படி சுடரா எரியணும், திடு திடுன்னு எரியக் கூடாது!” தாரிகா தாத்தாவுக்கு  விளக்கேற்றும் முறைப் பற்றி விளக்கினாள்!

விஜி இப்படி தான் சொல்வாள்! எதிலும் ஒரு திருத்தம் ஒழுங்கு வேணும் அவளுக்கு!

அவர் மனம் விஜிம்மாவோடு தன்னையறியாமல் மதுவை ஒப்பிட்டது!

யார் அந்த மது என்று அவர் நினைத்துக் கொண்டு இருக்கும் போது சரியாக அவர் மகள் ராகினி போன் செய்தாள்!

பயண சவுகரியம்,  மற்ற விவரம் எல்லாம் பேசி முடித்த பின் ராகினியிடம் கேட்டார் அவர்.

‘யாரும்மா மது! இங்க ஒரே மது புராணாம இருக்கு!”

ராகினியும் மதுவைப் பற்றி தான் அறிந்ததை சொன்னாள்.

கூடவே தன்வி  சொன்ன நம்ம சித்தாவுக்கு மது தான் நல்ல மேட்சிங் என்பதையும் மறக்காமல் சொன்னாள்!

“எனக்கும் நம்ம ரகுவிற்கு வைஷு மாதிரி டாக்டர் பொண்ண பார்க்கவெல்லாம் ப்ளான் இல்லை! அவனுக்கு அவன் அம்மா விஜி மாதிரி ரொம்ப கேர் எடுத்து, அவன நல்லா பார்த்துக்கற மாதிரி பொண்ணு தான் சரியா வரும்!

இங்க இவங்க சொல்றத எல்லாம் பார்த்தா, அந்த மது நம்ம ரகுவிற்கு பொருத்தமா தான் இருப்பா போல, பாமிலி பேக்க்ரவுண்ட் நல்லா இருந்தா, அவளையே நம்ம ரகுவிற்கு முடித்து விடலாம்!”

“அவசரப் பட வேணாம்ப்பா, நான் அங்க வரேன், பர்த்டே பார்ட்டிக்கு!

அந்த மது தான் கேட்டரிங் பண்ணப் போறாளாம்! நாம் நேரில் அவளை பார்த்த பின் டிசைட் பண்ணலாம்!”

தாரிகாவின் பிறந்த நாள்!

மாலை ஒரு சின்ன பார்ட்டி ரொம்ப க்ளோஸ் சர்க்கிளில் உள்ளவர்களுக்கு மட்டும்!

அழைக்கப் பட்ட்டிருந்தவர்கள் பெரும்பாலும் டாக்டர்கள் தான்! உறவினர்கள் கொஞ்சம் தான் !

மது தான் கேட்டரிங் பொறுப்பு ஏற்றிருந்தாள்.

பொதுவான டிஷ்களை குறைத்து, சிறுதானியங்கள் கலந்த உணவு வகைகளை வைஷுவோடு சேர்ந்து ப்ளான் பண்ணியிருந்தாள்!

முடக்கத்தான் சூப், வாழைத்தண்டு சூப்பில் ஆரம்பித்து, ஸ்டார்ட்ஸ் ஆக கம்பு பக்கோடா, மில்லெட் கட்லெட் என்று தொடர்ந்து , ராகி சப்பாத்தி, மிக்சட் மில்லெட் பணியாரம், இட்லி, ஊத்தப்பம் ,வரகு வாங்கி பாத்(கத்திரிக்காய் சாதம்), சிறு தானியங்கள் சேர்த்த பெசரட் தோசை, அசைவ பிரியர்களுக்கு சாமை அரிசியில் சிக்கன் பிரியாணி, மில்லெட் பாயாசம்  கடைசியில் பினிஷிங் ஆக குதிரைவாலி தயிர்சாதம் உள்ளிட்ட உணவு வகைகளோடு, குழுந்தைகளுக்கு கலர் கலராக ராகி மால்ட், ஆப்பிள் மால்ட், பீட்ரூட் மால்ட் என்று பானங்களும் இருந்தன அந்த மெனுவில்!

வந்தவர்கள் பெரும்பாலும் ஹெல்த் கான்சியஸ் மருத்துவத் துறையினர் என்பதால் அவர்களும் எல்லா உணவுகளையும் விரும்பி சாப்பிட்டனர்!

ரகு பாடு ஒரே ஜாலி தான் இன்று!

அவன் ரொம்ப நேரம் மதுவை சைட் அடிக்க வாய்ப்பு!

பார்ட்டிக்கு பார்த்தியும் வந்திருந்தான்.

ரகுவிற்காக என்று வைஷு அவனையும் அழைக்க வேண்டியிருந்தது!

வந்தவன் கேக் கட் பண்ணி முடித்தவுடன் கிப்ட் கொடுத்து விட்டு, அவசர வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விட்டான்!

இருந்த அந்த கொஞ்ச நேரத்திலும், அவன் ரகுவும் அவன் வீட்டினரும் மதுவிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து கொஞ்சம் அதிர்ந்து தான் போய் விட்டான்!

என்ன இது, கொஞ்ச நாளில் ரகுவே இந்த மதுவை எதாச்சும் காரணம் சொல்லி அனுப்பி விடுவான் , பின் நாமே மறுபடியும் இங்கு வந்து விடலாம் என்று தான் அவன் நம்பிக் கொண்டு இருந்தான்!

ரகுவின் ஈகோ மேல் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை!

சும்மாவா, ஸ்கூல் படிக்கும்  காலத்தில் இருந்து ரகுவுக்குள் தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டிருக்கும் விசயம் இல்லையா?

ஆனால் இப்போது இந்த ரகு மதுவை பார்க்கும் அந்த காதல் பார்வை!

இது அவன் நம்பிக்கையை ஆட்டம் காண வைத்தது!

இவன் வீட்டில் உள்ளதுங்களோ இவனுக்கும் ஒரு படி மேலே!

அதிலும் அந்த பெரிய கிழவன்! அது எதுக்குமே வெளியே வராது! ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்கும்!

இப்போ என்னவென்றால் மது.. மது என்று அவளை ஒரேடியாக தலையில் வைத்துக் கொண்டு இருக்கு!

இந்த குட்டி சாத்தான்கள் அதுக்கும் மேலே! வைஷு சனியன் அது பங்குக்கு அது வேறே!

ஸ்கூல் நாட்களிலேயே அவளையும் ரகுவையும் பிரிக்க எவ்வளவோ முயற்சி செய்தான் தான் அவனும்!

ஆனால் அவள் ரகு அவளை எவ்வளவு திட்டினாலும், சண்டைப் போட்டாலும் அவன் மேல் நட்பாய் பாசமாய் இருந்து, கடைசியில் அவனுக்கே அண்ணியாகவும் வந்து தொலைத்து விட்டாள்!

அவளும் அந்த செத்து போன கிழவியும் சேர்ந்து கொண்டு ரகுவை அவனிடம் இருந்து பிரித்து வைக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார்கள் தான்!

என் கிட்ட முடியுமா?

என்னைப் பொறுத்தவரை இந்த ரகு போன் முட்டையிடும் வாத்து, அதை நம் கண்ட்ரோல்ல வச்சுக்கணும்!

ஆனா இந்த மது வந்து எல்லாத்தையும் கெடுத்து விடுவா போல இருக்கே!

ஏதோ கேண்டீன் காண்ட்ராக்ட் தான் என்று பார்த்தால், இப்போது முதலுக்கே மோசம் போல, இந்த ரகு அவளிடம் காதல் கீதலில் விழுந்து அது கல்யாணம் வரை போய் விட்டால்…, அது மட்டும் நடக்கவே கூடாது!

அவன் ஈகோவை தூண்டி விட்டு, அவனை விட்டே அந்த மதுவை விரட்டணும்!

அதுவும் சீக்கிரமே! உள்ளுக்குள் பிளான் செய்தபடி தான் அவன் பார்ட்டியிலிருந்து கிளம்பியதே!

பார்த்தியைப் போலவே இன்னொரு ஆளும் ரகுவை, அவன் வீட்டு ஆட்களை , மதுவை  வாட்ச் செய்துக் கொண்டிருந்தாள்!

அவள் ரகுவின் அக்கா ராகினி!

அவளுக்கு மது நடந்து கொண்ட விதம் திருப்தியே!

அறிமுகப்படுத்தி வைத்தவுடன்  ரொம்ப ஒதுங்கி போகாமலும் அதே சமயம் மேலே விழுந்து உபசரிக்காமலும் சின்ன புன்னகையுடன்  நிதானமாக நடந்து கொண்ட மதுவை அவளுக்கு பிடித்து தான் விட்டது

அவள் அம்மா விஜியைப் போன்ற சுபாவம்!

வைஷுவும் குழந்தைகளும் அவளிடம் பிரியமாய் நடந்து கொள்வதில் அவளுக்கு ஆச்சர்யம் ஒன்று இல்லை!

ஆனால் இந்த பெரியப்பா!

அவர் அறைக்குள் முடங்கி வருசங்கள் ஆகி விட்ட நிலையில், இப்போது அவரும் இந்த பார்ட்டியில்!

புதிய ஹாஸ்பிடல் இனாகுரேசனுக்கு கூட கெஞ்சி தான் அழைத்து வந்தார்கள்!

அவருக்கே மதுவைப் பிடித்து இருக்கு என்றால், நிச்சயம் அவள் நல்ல பொண்ணா தான் இருக்கணும்!

ஆனால் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் அவர்களுக்கு பிடிக்க வேண்டுமே!

அவள் ரகுவை கவனித்தாள்! அவன் மதுவிடம் பிளாட்  ஆகி விட்டான் என்பது பார்த்தவுடனே தெரிந்து விட்டது, அவன் ஓரமாய் நின்று கொண்டிருந்தாலும் அவளிடம் நேரே போய் பேசிக் கொண்டிருக்க வில்லையென்றாலுமே கூட!

மது..

அவளிடமும் ரகுவைப் பார்க்க நேரிடும் போது அவளிடம் ஒரு சின்ன தடுமாற்றம்! கண்ணிலும் கொஞ்சம் ஒரு காதல் தெரிந்தது!

மற்றவர்களிடம் ஆண் பெண் பேதமில்லாது தயக்கம் இல்லாமல் டைமிங் ஜோக் சொல்லி பேச்சுக்கு பேச்சு கவுண்டர் கொடுத்து இயல்பாக பேசும் அவள், இவனைக் கண்டால் மட்டும் தடுமாறுவது ஏன்! நிச்சயம் அது பயம் இல்லை!

இப்போது ராகினி ஒரு முடிவுக்கு வந்து, மதுவை ஓகே செய்து,  தன் அப்பாவிடம் கிரீன் சிக்னல் தந்து விட்டாள்!

மறுநாள்..

ரகுவைப் பார்க்க பார்த்தி வந்திருந்தான்!

“சாரிடா மச்சான், நேத்து புல்லா இருக்க முடியல. ஒரு அவசர வேலை! அதான் இன்னிக்கு உன்னை பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன்! நீ ப்ரீயா?” போனில் கேட்டிருந்தான் பார்த்தி!

“இன்னும் ஒரு பேசன்ட் தான் முடிச்சுட்டு வர்றேன், நீ என் ரூமில் வெயிட் பண்ணு”

ஓபி முடிந்து ரகு அவன் ரூமுக்கு சென்ற போது, பார்த்தி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்!

“இல்லடா, அந்த பொண்ணு இங்க உள்ளவங்க கிட்ட எல்லாம் ஏதேதோ பேசி காண்ட்ராக்ட் வாங்கிடுச்சு! ரகுவுக்கு இஷ்டமே இல்ல தான்! அவன் அண்ணன் சொன்னதால, வேற வழியில்லாம கொடுத்துட்டான்!”

“ம்ம். நீ பார்த்தியா!.. அது இந்த வைஷு ஒரு லூசு, அது பண்ண வேலை தான் அது!”

“இந்த பொண்ணும் அத சாக்கா வச்சுட்டு ஏதேதோ ட்ரை பண்ணுது போல!”

“பெரியவர்க்கு காபி போட்டு கொடுத்து, பொடிசுங்களுக்கு ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்து இப்படி,, “

‘ஏய்,, அதெல்லாம் நம்ம ஆள் கிட்ட நடக்குமா? அவன் யாரு, இதோட பெரிய பெரிய அழகிங்க கிட்ட கூட நோ சொன்னவன்! அதெல்லாம் அவன் கிட்ட பருப்பு வேகாது!

என்ன? என்னைய வளைச்சுப் போட்டு, என்னைக் கல்யாணம் செய்துக்க ட்ரை பண்றியான்னு மூஞ்சிக்கு நேரா போய் கேட்டு காறி துப்பிட்டு வந்துடுவான்!

ம்ம்.. அத நானும் கேள்விப்பட்டேன்! அந்த மதுவோட அத்தையே அந்த காலத்துல வேலைக்குப் போன இடத்துல ஓனர உஷார் பண்ணி கல்யாணம் செஞ்சு, தன் தம்பியையும் கூடவே கூட்டிட்டு போயிடுச்சாம்!

ஆனா அந்த பொம்பள செத்து போய்,  அந்த ஆளோட சொத்த இவங்கப்பன் ஆட்டய போட நெனச்சான் போல, விடுவாங்களா, அந்த ஆளோட சொந்த காரங்க, வந்து கேஸ் போட்டு எல்லாத்தையும் பிடுங்கிட்டு உட்டுட்டாங்க!

இப்ப இது வேற சோர்ஸ் இல்ல, அது தான் இங்க வந்து அதால முடிஞ்ச வர ட்ரை பண்ணிட்டு இருக்கு!  அதான் சொன்னேனே. அதெல்லாம் நம் ரகு கிட்ட பலிக்காது!”

போனை வைத்தான்.

ரகு வருவது தெரிந்து தான் இத்தனையையும் அவன் பேசியதே! ரகுவின் முகத்தில் குழப்ப ரேகையை கண்ட திருப்தியோடு கொஞ்ச நேரம் அவனிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு கிளம்பினான்!

போடுற பிட்ட ஸ்ட்ராங் கா போட்டாச்சு, இனி அது வேலை செய்யட்டும்!

அடுத்த நாள்.

தன்வி குட்டி சாட் கேட்டாள் என்று பேல் பூரி செய்ய பொரி வாங்கி வந்து இருந்தாள் மது!

பொரி பாக்கெட்டை பிரிக்கும் போது அவளுக்கு பழைய நினைவு ஒன்று வந்து சிரிப்பு வந்தது!

அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் , “என்ன மது தானா சிரிச்சுட்டு இருக்க? சொன்னா நானும் சிரிப்பேனே!”

“அதுவா, நாங்க சின்ன பிள்ளைங்களா இருந்தப்ப ஒரு பாட்டி பொரி, அவல் கடலை விற்க வரும். அது கிட்ட நாள் தவறாமல் பொரி வாங்கி டூயுசன் பிள்ளைங்க எல்லோர்க்கும் தருவான் எங்க பிரண்ட் ராஜு!”

அதனால அந்த பாட்டிக்கு அவன ரொம்ப பிடிக்கும். உனக்கு கே ஆர் விஜயா மாதிரி பொண்ணு பார்த்து வைக்கிறேன்னு சொல்லும் அந்த பாட்டி! அந்த காலத்துல ஹோம்லியான பொண்ணுன்னா அவங்கள மாதிரின்னு சொல்வாங்களாம்!”

“ஆனா எங்கப்பாவுக்கு அவங்க மாடர்ன் ட்ரெஸ் போட்டு நடிச்ச ஊட்டி வரை உறவு படம் தான் ரொம்ப பிடிக்கும்!”

“அதில் வரும் தேடினேன் வந்தது பாட்டு அவருக்கு ரொம்ப பிடிக்கும்! அதனால அந்த பாட்ட எங்கப்பா பாட்டுன்னு சொல்லி கிண்டல் அடிப்போம் நாங்க!” சொல்லி சிரித்தாள் மது!

“ஆமா மது அந்த பாட்டு எனக்கும் பிடிக்கும்! எங்க நீ பாடு பார்ப்போம்!”

அன்று மதுவுக்கு நேரம் சரியில்லை போல!

இல்லையென்றால் இன்றைக்கு பார்த்து அவள் இந்த பாட்டைப் பற்றியா பேச வேண்டும்!

பார்த்தியின் துர்போதனை தலைக்கு ஏறி , குழப்பத்துடன் உள்ளே வந்த ரகுவின் காதில் மது பாடிக் கொண்டிருந்த வரிகள் நாராசமாக கேட்டது!

தேடினேன் வந்தது..

அவள் தொடர்ந்து பாடினாள்..

என் மனதில் ஒன்றைப் பற்றி, நான் நினைத்து எல்லாம் வெற்றி!

……

பெண் என்றால் தேவ மாளிகை திறந்து கொள்ளாதோ..ஓ..

அவ்வளவு தான்!

ரகுவிற்கு ஈகோவோடு சேர்ந்து பார்த்தி பேயும் பிடித்து கொண்டுவிட்டது!

அவள் கிளம்புமுன் அவளை வாசலில் வழி மறித்த ரகு, அவள் கண்ணைப் பார்த்தால் பேச முடியாது என்று, தன் போனை நோண்டிக் கொண்டே கேட்டான்!

“சோ.. “உன் அடுத்த ப்ளான் என்ன மது? என் வீட்டில் எல்லோரும் இப்போ உன் பக்கம்! அடுத்து என்னையும் வளைச்சுப் போட்டு, என்னைக் கல்யாணம் செய்துக்கிறதா?”

விஷத்தைக் கக்குவது போல கேட்டே விட்டான்!

கேட்ட கணம் மதுவின் இதயத்தை யாரோ கிழித்தது போன்ற உணர்வு! அது கொடுத்த ஆழமான வலி அவள் கண்ணில் தெரிந்தது! ரகு போனை  பார்த்து கொண்டு பேசியதால் அவன் கவனிக்கவில்லை அதை!

எல்லாம் சில கணங்கள் தான்!

உடனே தன்னை சரி செய்து கொண்டு, முகத்தில் வலிந்து வரவழைத்துக் கொண்ட குறும்பு சிரிப்புடன், அவனை சற்று மேலும் கீழும் பார்த்து விட்டு, உதட்டை பிதுக்கி, “ நீங்க அதுக்கெல்லாம்  சரிப் பட்டு வர மாட்டீங்க டாக்டர்! என்றாள் வடிவேலுவை பார்த்து சிங்கமுத்துவும் மனோபாலாவும் சொல்வது போல!

வ் வாட் அதிர்ந்தான் ரகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!