Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம்: 2

.

இன்று:



Advertisement

“என்ன விக்கி சார், ரெண்டு வாரம் நீங்க வரலியா? இல்ல நான் உங்கள மிஸ் பண்ணிட்டேனா?” நண்பனைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்த விக்ரமை பார்த்த நர்ஸ் அனிதா புன்னகை முகமாகக் கேட்டாள்.

“சென்னைல இல்ல அனி. எப்படி இருக்கான் என் நண்பன்? ஒழுங்கா பார்த்துகிறியா அவன? எனி இம்ப்ரூவ்மென்ட்?” கேட்டுக்கொண்டே தனி அறைக்குள் இருந்த கௌதமனை பார்த்தான்.

ஆறடிக்கு நீண்டு நிமிர்ந்து படுத்திருந்தான். மருத்துவ உபகரணங்களை எடுத்துவிட்டால், நித்திரையில் இருப்பவன் போல் தெரிவான். மருத்துவ உபகரணங்களை எடுத்துவிட்டால், மீளமுடியா ஆழ்ந்த நித்திரைக்குள் சென்று விடுவான் என்பதால் அதை அந்த அந்த இடத்தில் விட்டுவிடுவதே நல்லது.

Advertisement

“ஆமா விக்கி சார்… பெட்டர் ஆகிட்டனால காலையில் ஐசியூ-ல இருந்து தனி ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாங்க” என்றவள் கௌதமனையும் மூடி இருந்த அறைக் கதவையும் பார்த்தாள். என்ன நினைத்தாளோ, கிசுகிசுப்பான குரலில், “இனி தேறி வர மாட்டார்ன்னு பேசிக்கிறாங்க. என்னன்னு கேட்டுக்கோங்க” என்றவள், “நான் வெளியே இருக்கேன் விக்கி சார்…” என அறைக்கு வெளியே சென்றாள்.

Advertisement

‘ஊர் அறிந்த ரகசியம் இன்று தான் இவளுக்குத் தெரிந்த தாமா? இதுல இவ நர்ஸ்!’ கௌதமனின் படுக்கைக்கு அருகே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் விக்ரம்.

தீ காயத்தின் தழும்புகளில் இடையே இருந்த நரம்பின் வழி உடலுக்கு மருந்து இறங்கிக் கொண்டிருந்தது. பார்த்திருந்தவன் கண்கள் தன்னையும் மீறி நீரை உதிர்த்தன. மனம் ஆறவே இல்லை. கடந்த ஆறு மாதங்களில் இது மூன்றாவது முறை இப்படி இவன் தீவிரச் சிகிச்சைப் பிரிவிற்கு வந்து செல்வது.  

இம்முறை என்னவாம்? “அக்யூட் நிமோனியா விக்கி சார்” என்றிருந்தாள் செவிலி.

Advertisement

சற்று நேரம் அமைதியாகத் தோழன் கரம் பற்றி அமந்திருந்தவன் வெளியே வந்தான். மனம் ஆறவே இல்லை. கௌதமனோடு பேசாது எங்கும் செல்லப் பிடிக்கவில்லை என்பதால் வெளியே இருந்த நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தான்.

“வா விக்கி… எப்படி இருக்க?” வாசுதேவன் கேட்டுக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தார்.

“நல்லா இருக்கேன் பா” என்றவன் நா தழுதழுத்தது.

“போன இடத்துல நீ தேடின அமைதி கிடைச்சுதா?”

‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தான்.

சற்று நேர அமைதிக்குப் பின், “மாலதி எப்படி இருக்கா?” என அவன் முகம் பார்த்தார்.

“ஆங்… நல்லா இருக்கா ப்பா. ஃபால்ஸ் பெயினாம். ரெண்டு வாரத்துகுள்ள எப்போ வேணா குழந்த பிறக்கும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. மாப்பிள்ளையும் அம்மா வீட்டுல தான் இருக்கார்.”

“ஒடனே நீ கிளம்பி வந்துட்டியா?”

இதழ் விரிய புன்னகைத்தான் விக்ரம்.

“உன தங்கைக்கு நல்ல படியா குழந்த பிறக்கும். கவல படாத” என்றவரிடம், “ம்ம்ம்” என தரைப் பார்த்து அமர்ந்திருந்த வாகில் தலை ஆட்டினான்.

“உன் ஃப்ரெண்ட் எப்படி இருக்கான்? இப்போ தல வலி பரவாலியா?”

ஏன் இவர் இப்படி எல்லாம் விசாரிக்கிறார் என விக்ரமிற்குத் தோன்றவில்லை. ‘அப்பாவ மாதிரியே தான் என் கௌதமனும்’ என்ற எண்ணம் மட்டுமே. வாசுதேவனுக்கு, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. தன்னைச் சார்ந்து… தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும்.

இல்லை என்ற தலை அசைபோடு, “டிரிப் போயிட்டு வர வழிலயே மாலதிக்கு வலி வந்துடுக்சுன்னு சொல்லவும், சென்னை வந்ததும், நான் நேரா அவள பாக்க டெல்லி ஃபிளைட் பிடிச்சு கிளம்பிட்டேன். உடனே திரும்பி வரவும் முடியல. மாப்பிள்ளை அங்க வரவும், இன்னைக்குத் தான் சென்னைக்கு வந்தேன்.

வீருக்கு அன்னைக்கே தல வலி முன்ன விட மோசம் ஆகிடுச்சு போல. இங்க தான்… இந்த ஹாஸ்பிட்டல்ல ‘ஏ’ பிளாக்ல இருக்கதா அவன் அப்பா சொன்னாங்க. அப்பரேஷன் ஆகிடுச்சாம். நினைவு திரும்ப வெயிட்டிங். இன்னும் நான் போய் பாக்கல.”

“பிரெயின் இல்லையா… அது தான் நினைவு தப்பி இருக்கும். சின்ன பிரொசியூஜர் தான? சரி ஆகிடுவான்” என்பதைத் தவிர வேற என்ன கூறிட முடியும்? நீண்ட பெருமூச்சு வாசுதேவனிடம். இருவரிடமும் அமைதி.

 மருத்துவமனை என்ற ஒன்றில் கால் வைத்தபின்பு தானே இத்தனை வருட வாழ்க்கை, எவ்வளவு நிம்மதியாகவும் மகிழ்வாகவும் சென்றது என்பது தெரிகிறது. ‘ஃப்ரெண்சோட ஒன் வீக் டிரிப் பா’ என்ற வேளை மகனிடம் இருந்த உற்சாகத்தை இனி பார்க்கவே முடியாதா? அவன் சிரித்து மகிழ்ந்த வேளைகளை நினைக்க நினைக்க மனம் கசங்கியது.

21 வருடங்கள் முன்பு, இப்படியான ஒரு மருத்துவமனையில்… இப்படியான ஒரு இருக்கையில் அமர முடியாது தவித்து நின்றது ஏதோ நெற்று நடந்து போல் தோன்றியது. தவமாய் தவமிருந்து ஒன்பது மாத காத்திருப்பின் பயனாக, இப்படியான இடத்தில் தான் முதல் முதலாக மகனைக் கையில் வாங்கியது. குட்டியாக அவர் கைக்குள் அடங்கிய குட்டி புதையலைக் கண்ட அன்று அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்று? மருத்துவ மனையின் வாசமும் காத்திருப்பும் அப்படி ஒன்றும் உவப்பாக இல்லை. கௌதமா… என் மகனே…. உயிர் கதறியது.

வாசுதேவன் அமைதியானதும், விக்ரமின் குற்ற உணர்ச்சி தலை விரித்தாடியது. எல்லாம் தன்னால்! ஆறு மாதமாகச் செய்யும் அதையே மீண்டும் செய்தான்.

 “சாரி பா” என வாசுதேவன் கரம் பற்றி ஒரு மூச்சு அழுதான். அவனை ஆறுதல் படுத்தும் நிலையில் அவர் இல்லை என்பதால் கல்போல் அமர்ந்திருந்தார். திருமணமாகிப் பல வருடங்கள் காத்திருந்து, பணத்தை வாரி இறைத்து… தவமாய் தவமிருந்து இரட்டையரை வயிற்றில் சுமந்தார் வைஷாலி. ஒரு குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இதய கோளாரால் மண்ணுலகை விட்டுச் சென்றுவிட, கௌதமனைக் கண்ணுக்குள் வைத்துக் காத்தனர்.

மிக மிகச் செல்லமாக வளர்க்கப் பட்டான் கௌதமன். “மாம்… யூ ஆர் தி பெஸ்ட். ஐ லவ் யூ தி மோஸ்ட்…” எனத் தாயை அணைத்து செல்லம் கொஞ்சியே காரியம் சாதித்து கொள்வான் கௌதமன். ஆனால் அவன் வார்த்தைகள் உண்மையே… வைஷாலிக்கு மகன் என்றால் உயிர்.

அவனுக்கும் அப்படியே. “தாயிற் சிறந்த கோவில் இல்லை” என்பான். அதற்காக அவர் சொல் கேட்டு நடக்கவெல்லாம் மாட்டான். அவன் பேச்சை அம்மா கேட்டு நடந்து கொள்வார்.

அவன் எதையேனும் ஆசையாகப் பார்த்தாலே அது அவன் கையில் வந்து விழுந்துவிடும். அப்பொழுதெல்லாம் வாசுதேவன் பேச்சை மனைவியும் கேட்கவில்லை மகனும் கேட்கவில்லை. சென்னையில் இருந்த சர்வதேச பள்ளியில் படித்தான்.

அவனோடு படித்த பிள்ளைகளில் 90 சதவீதம் அவனைப் போலச் செல்வச் செழிப்பில் திளைத்தவர்களே. பார்த்தோம்… எடுத்தோம்; நினைத்தோம்… அடைந்தோம் என்ற பிள்ளைகளோடு நன்கு பொருந்திக் கொண்டான் கௌதமன்.

சில நூறு கோடிகள் ஒரு சிறுவனை என்ன செய்ய முடியும்? கண்டிப்பில்லாத பாசம் ஒரு சிறுவனை என்ன செய்திட முடியும்? அழகும் பணமும் பாராட்டு வார்த்தைகளும் ஒரு சிறுவனை என்ன செய்திட முடியும்? அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை வரியில் பதில் கொடுக்கலாம். கௌதமனைப் போல் ஒருவனை உருவாக்க முடியும், என்பதே பதில்.

பதின்மூன்று வயதில் “தம் அடிச்சிருக்கியா?” என்ற கேள்விக்கு எந்தத் தயக்கமும் இல்லாது “ஓ எஸ்” என்றான் கௌதமன்.

கல்லூரி காலம் கௌதமனின் மற்றுமொரு வசந்த காலம். அவனுக்குத் தோன்றியபடி எல்லாம் அனுபவித்து வாழ்ந்தான். அதிகப் பணமும், பணக்கார சகவாசமும் கௌதமனின் இளமையைச் சற்று சோதித்துத் தான் பார்த்துவிட்டது.

சிகரெட்டில் ஆரம்பித்து, ‘பீர் தானே… உடம்புக்கு நல்லது’ எனத் தொடர்ந்து… இருபது வயதில் தினமும் ஒரு பப் என்று சுற்ற ஆரம்பித்தான்.

பிரொடியூசரின் மகன்… ஆண்மைக்கு இலக்கணமாகத் திகழுபவனோடு கிசுகிசுப்பு வந்தால் பல இயக்குநர்களின் கண்களில் பட வாய்ப்புகள் இருக்க, பல அழகிகள் அவன் பின் சென்றனர்.

“வேலை ஆகரதுக்காக பின்னாடி வர பொண்ணுங்க சகவாசம் நமக்கு வேண்டாம் டா” என நண்பன் கூறியது அவனை எட்டவே இல்லை.

‘பொங்கலுக்கு வெளிவர இருக்கும் படத்தின் நடிகையோடு பிரபல பிரொடியூசரின் மகன் சல்லாபம்’ என்பது போன்ற பல கிசுகிசுப்புகள் அவ்வப்போது சமுக வலைத் தளத்தில் வலம் வர ஆரம்பித்தது. பண்டிகைகளின் பெயர் மாறியது, அழகிகளின் பெயர் மாறியது, ஆனால் ‘பிரொடியூசரின் மகன்’ என்ற வார்த்தை மட்டும் அச்சு பிசகாமல் சினிமா கிசுகிசுப்பில் வலம் வந்தது.

“மானம் போகுது… என் நிம்மதியே போச்சு. இனி மேல் இப்படியான நீயூச பார்த்தேன் மனுஷனா இருக்க மாட்டேன்” என வாசுதேவன் வீட்டை இரண்டாக்கிய நாள்கள் பல. இன்றி, மகனின் பெயர் எங்கும் பேசப்படவில்லை. ஆனாலும் அவர் நிம்மதியாக இல்லை. யாரைப் பற்றியும் கவலை இல்லை. மகன் முன்போல் அவர் கண்முன் நடமாடினால் போதும் எனத் தகப்பன் மனம் தவித்தது.

மருத்துவர் வாசுதேவன் அருகில் வந்தார். “வைஷாலி எங்க வாசு?” என அவர் தன் தோழியைத் தேட, “கீழ இருக்க பிள்ளையாரட்ட அழப் போயிருக்கா அருண்” என்றார் வாசுதேவன்.

“கௌதமன் ஸ்டேபிள். ஃபீவரும் நல்லா குறைஞ்சிடுச்சு. ஆக்சிஜன் இல்லாம அவனே பிரீத் பண்றான்.” என்றவர் முகமும் சரியில்லை. அதைக் கேட்ட தகப்பனும் குதூகலிக்கவில்லை.

“எப்படி இருக்க விக்ரம்?” என அருகே தலைக்கு கைக் கொடுத்து அமர்ந்திருந்தவனைப் பார்த்தார். “அவன் கண் விழிச்சுட்டான். போய் பாரு” என விக்ரமை உள்ளே அனுப்பியவர் வாசுதேவனோடு பேசிக் கொண்டே அவர் அலுவலக அறையை நோக்கி நடந்தார்.

இவன் ஆற அமர எழுந்து… சென்று சேரும் முன் கௌதமன் மீண்டும் உறங்கியிருந்தான். “தூங்கிட்டியா?” எனத் தோழன் நெற்றி வருடி அருகில் அமர்ந்தான்.

ஒட்டிய கன்னமும், உள்ளே போன கண்களும், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையமுமாகக் கௌதமனை காணச் சகிக்கவில்லை தோழனுக்கு. எப்படி இருந்த தோழன்? கண்கள் மின்ன, தாடை பளபளக்க, காற்றில் கேசம் அசைய, டியோர் சவாஜ் வாசம் கமழ, டுகாட்டியில் அவன் அமர்ந்து கை அசைத்துக் கதை பேசும் அழகைக் காண திகட்டாதே. இன்று இப்படிப் போட்ட இடத்தில் போட்ட படி கிடப்பவனைக் காணச் சகிக்கவில்லையே.

இப்படி எல்லாச் சிந்தனைகளையும் மூளை செய்ய, இதயம் ஏன் என்றே தெரியாது வலித்தது. மெல்ல நெஞ்சை நீவிக் கொண்டான் விக்ரம்.

நெற்றியில் ஆரம்பித்து காது வரை நீண்டிருந்த ஆழமான காயம் நன்கு ஆறியிருந்தாலும் அது பூரான் போல் தழும்பை விட்டுச் சென்றிருந்தது. தழும்பில் வருடிய விரலின் ஸ்பரிசம் கௌதமனை எழுப்பியிருக்க, கண் திறந்தான் கௌதமன்.

விக்ரம் முகம் மலர்ந்தான். “வீட்டுல இருக்க முடியல போல. யார பாக்க டா சும்மா சும்மா இங்க வர? அனிதா நல்லா இருந்தாலும், அவள எல்லாம் நீ பாக்க மாட்டியே…” எனத் தன் போக்கில் விக்கி பேச, கடை இதழ் ஓரப் புன்னகை கௌதமனை உயிருள்ளவனாகக் காட்டியது.

“வந்துட்டியா? வேற வேல இல்லியா உனக்கு?” என்றதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை விக்ரம்.

“ஷேவ் பண்ணினா என்ன டா பரதேசி” எனக் கடிந்தவன், “வீட்டுக்கு போனதும் முடிய வெட்டி, ஷேவ் பண்ணும் டா” என்றான்.

“இந்த வீர் பையனும் உன்ன மாதிரி தான் முடி வெட்டாம, ஷேவ் பண்ணாம சுத்தினான். இப்போ முழுசா வழிச்சிருப்பாங்க” என வீர் மற்றும் ஜீவன் பற்றிக் கூறினான்.

“சொல்லி இருக்கேனே… அவன பின்னால இருந்து பார்த்தா, அப்படியே நீ தான் டா. ஹயிட், வெயிட், அவன் ஷேப்… எல்லாமே நீ தான் தெரியுமா? முதல் தரம் அவன நீன்னு நினைச்சு ஏமாந்து… அப்படி ஃப்ரெண்ட் ஆனது தான். இப்போ எதுக்கு சொல்றேன்னா… அவனுக்கும் உடம்பு முடியல. ஆனாலும் பாக்க உன்ன விட ஹேன்சம்மா இருக்கான். அவன் கலரும் கூடி நாளுக்கு நாள் மின்றான் தெரியுமா?”

அவர்களோடு செலவிட்ட மலைப் பிரதேச விடுப்பைப் பற்றிக் கூறினான். தோழனின் சோக கீதத்தை அவனை விட மோசமான நிலையில் இருப்பவனிடம் வாசித்தான்.

“அவனும் இப்போ இங்க தான் டா இருக்கான். அவன பத்து நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. அவனுக்கு ஆன்டிரியர் டெம்போரல் லோப்ல (anterior temporal lobe) கட்டி… சோ, மெம்மரி லாஸ் ஆகி இருக்கும். இனி அவனுக்கு நான் யாருனே தெரியாது. போன வாரம் என் கூட இருந்தவனுக்கு, அடுத்த வாரம் நான் யாருன்னே தெரியாது.

என்ன கொடுமை இல்ல? வாழ்க்கை நமக்கு இன்னும் என்னெல்லாம் வச்சிருக்கோ தெரியல போ!” எனக் கூறிக்கொண்டே கௌதமனைப் பார்க்க, மருந்தோ இல்லை விக்கியின் தாலாட்டோ ஏதோ ஒன்றால் ஆழ்ந்து உறங்கியிருந்தான் கௌதமன்.

“என் தூக்கத்த முழுசா ஏப்பம் விட்டுட்டு நீ மட்டும் நல்லா தூங்கு” என்றவன் குரலோடு, மனமும் ஓய்ந்து போனது.

“எல்லாம் என்னால. ப்ச்! சாரி டா மச்சான்” என்றவனால் இன்னும் அந்த விபத்தில் இருந்து வெளி வர முடியவில்லை.

விக்கியின் தூக்கத்தை இன்றுமே விழுங்கும் நிகழ்வு அது. “அம்மா கோபமா இருக்காங்க டா. நான் வரல மச்சான்” என்றவனை, “கௌதமா என் பர்த்டே டிரீட் டா. தெரியாம அப்பா தொழில்ல போய் தலை கொடுத்து புண்ணாகி நிக்கிறேன். நானே நம்ம செட் கூட இருக்கணும்ன்னு தான் அப்பா கைல கால்ல விழுந்து அங்க கிளம்பி வரேன். மூணு நாள் சுத்தறோம்… ஹாப்பியா என் ஹேப்பி பர்த்டேவ கொண்டாடுறோம்…” என வம்படியாகத் திருவனந்தபுரம் வரவைத்தான்.

“போலாம் ஆனா வேற எங்கையாது ஹில் ஸ்டேஷன் போவோம் டா” என்றதிற்கும் இவன் தான் முட்டுக்கட்டை இட்டான்.

“எனக்கு நாலே நாள் தான் இருக்கு. தமிழ் மண்ணுல பொறந்துட்டு… இண்டியால இருந்துட்டு, நான் இன்னும் வள்ளுவரையும் பாக்கல, விவேகானந்தரையும் பாக்கல. சோ… அங்க போறோம். தியானம் பண்றோம்.” என இவன்தான் ஏதேதோ உளறினான்.

சமூக வலைதளத்தில் அறிமுகமான அவனின் புது பெண் தோழியை அவனுக்குப் பார்க்க வேண்டும் என்பதாலேயே அவர்கள் வேறு எங்கும் செல்ல மறுத்தான் என்பது இன்று வரை அவனுக்குள்ளாக இருந்து அவனை ரணப்படுத்துவது அவனுக்கு மட்டும் தானே தெரியும்.  

பள்ளிப் பருவம் முழுவதும் ஒன்றாகச் சுற்றிய ஐவர் கூட்டம் திருவனந்தபுரத்து விமான நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்குப் பயணப்பட்டது.

“காலையில் சன் ரைஸ் பாக்கணும் டா. வெயில் வரதுக்குள்ள தண்ணில ஆட்டம் போட்டுட்டு வரலாம்… அதுக்கு அப்பறம்னா கருத்துடுவேன்” என இவன் தான் விடியும் முன்பே தோழர்களை இழுத்துக் கொண்டு சென்றான்.

ஐந்து திடகாத்திரமான ஆண் பிள்ளைகளைக் கட்டுக்குள் வைக்க முடியுமா? நீச்சலும் கூச்சலுமாகக் கடலில் ஆடி களித்தனர்.

அந்தப் பெண்ணும் இவனைக் காண வந்திருக்க, “ரெண்டு நிமிஷம் டா” என இவன் கரைக்கு வந்தான். அடுத்த என்ன நடந்தது என இவனுக்கு இன்றுமே புரியவில்லை. ஒருவரும் ஆழ நீந்திச் செல்லவில்லை. அடித்துப் பிடித்துக் கொண்டு சற்று தொலைவில் தான் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு அலை… யாரும் எதிர்பாரா நேரம் வந்த அந்த பெரும் அலை நால்வரையும் இழுத்துச் சென்றது. இவன் சுதாரிப்பதற்குள் இவன் கண்முன்னே இவன் தோழர்கள் நால்வருமே இழுத்துச் செல்லப்பட்டனர்.

மீட்புக் குழு வந்தது. ஒருவனைச் சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்து உயிரோடு கண்டெடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவன் மீன்பிடிப்பவர்களால் தூத்துக்குடியில் இருந்து மறுநாள் கொண்டுவரப் பட்டான்.

கௌதமன், அருகில் இருந்த இரு பாறைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டிருந்தான். உடலில் ஒரு சில சிராய்ப்புகள். நெற்றியில் ஆழமான காயம். அதனால் பாதிப்பு இருக்காது என்றனர். தாடை இடிபட்டு வீங்கி இருந்தது.

ஒன்றும் இருக்காது என்று தான் முதல் உதவி செய்த மருத்துவர்களும் கூறினர். ஆனால் கௌதமனின் நினைவு சில தினங்கள் கழித்து, அன்னையைக் கதறவிட்டபின்பே திரும்பியது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!