Skip to content
Post Views: 6,852
அத்தியாயம் 25:
ஆதியின் பங்காளி குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் குலதெய்வம் கோயிலுக்கு வந்து விட்டனர். அதுபோக உள்ளூரை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று நூறு பேர் கூடிவிட்டனர்.
சந்தியாவின் அம்மா அப்பா, ஈஸ்வரன், சுந்தரம், சிவகாமி, சித்ரா, வசந்தனின் அம்மா வள்ளி அனைவரும் சேர்ந்து கோயிலுக்கு வந்துவிட்டனர். அன்னபூரணி தன் மகளை ஆதிக்கு கட்டவில்லை என்று கோபமாக இருந்தாலும், ஈஸ்வர மூர்த்தி, சிவகாமியின் தயவு தங்களுக்கு தேவைப்படும் என்று கல்யாணத்தில் கலந்து கொண்டு இங்கும் வந்திருந்தார். அது போக மாரிமுத்துவும் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். மாரிமுத்துவும் வந்திருந்தார்.
அது போக வசந்தன், முரளி, அருண், கௌரி , ஆதி ,சந்தியா மட்டும் அவர்கள் இன்னோவா காரில் வந்து இறங்கினார்கள்.
Advertisement
கரு நீலத்தில் பிங்க் பார்டர் வைத்த பட்டு புடவையில், காது கழுத்து கைகளில் எல்லாம் ரூபி நகை அணிந்து பளீரென வந்த சந்தியாவை பார்த்து பெருசுகள் எல்லாம் வாயை பிளந்து விட்டனர்.
அதுவும் பட்டு வேட்டி மற்றும் சந்தியாவின் புடவையின் நீலத்திலேயே சட்டை அணிந்து பக்கத்திலேயே ஆதியும் வந்தான். இருவரும் ஜோடியாக நடந்து வந்ததை பார்த்த சில பாட்டிகள் சிவகாமியிடம் “என்ன செவகாமி . பையனுக்கு சினிமாக்காரியாட்டம் ஒரு புள்ளைய கட்டி வச்சி போட்ட. என்ன அம்சமான ஜோடி பொருத்தம். பாக்க ஒருத்தருக்கொருத்தர் ராசா ராணியாட்டமில்ல இருக்குதுங்க” என்றனர்.
சந்தோசமாக அவர்களை பார்த்து கொண்டிருந்த சிவகாமியும் வீட்டிற்கு போய் அவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட வேண்டுமென்று நினைத்து கொண்டார்.
Advertisement
ஆதித்யனின் குலதெய்வம் செல்லி அம்மன்தான். அவருக்கு பொங்கல் வைத்து படைத்தாலும் சுற்றியுள்ள காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டி பூஜை செய்வார்கள். அதனால் இன்று இங்கேயே கறி விருந்தும் செய்ய போகிறார்கள்.
Advertisement
புதுப்பெண் கையால் பொங்கல் வைக்க செய்பவர்கள், பெண்ணின் கையாலேயே வந்திருக்கும் அனைவருக்கும் பரிமாற சொல்வார்கள். இதை எல்லாம் சந்தியா எப்படி சமாளிக்க போகிறாள் என்று ஆதிக்குப் கவலையாக இருந்தது.
ஆதியும் சந்தியாவும் சென்று அம்மனை வணங்கினார்கள். பூசாரி இருவரையும் மாலை மாற்றி கொள்ள சொல்லிவிட்டு, பிரகாரத்தை சுற்றி வர சொன்னார். அப்படி வரும்போது ஆதி “பொம்மு உனக்கு சமைக்க தெரியுமா” என்று கேட்டான்.
“ஒ. தெரியுமே. டி காபி போட தெரியும். இட்லி தோசை செய்ய தெரியும். குக்கர்ல சாதம் வச்சிடுவேன்”
Advertisement
“அதுசரி.பெரிய செப்தான். இங்க பொங்கல் வைக்கணும். எல்லாருக்கும் பரிமாறனும். எல்லாத்தையும் சமாளிச்சிருவியா பொம்முக்குட்டி”
“ம் கௌரி சொன்னா பாஸ். இதெல்லாம் ஒரு மேட்டரா. அத்தை கௌரில்லாம் இருக்காங்கல்ல. பாத்துக்குவேன்”
“சரி முடியலைன்னா. என்ன திரும்பி பாரு. மத்தத நா பாத்துக்குவேன்”
“ஓகே பாஸ் டன்” என்று விட்டு வெளி பிரகாரத்திற்கு பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்றாள்.
ஆதி ஆண்கள் அமர்ந்திருந்த மரத்தடிக்கு சென்றான்.
சந்தியா வருவதற்கு முன்னரே சித்ரா கல்கூட்டி, பொங்கல் பானையை ஏத்துவதற்கு எல்லாம் தயாராக வைத்திருந்தார்.
சந்தியா வந்ததும் பொங்கல் பானையை தூக்கி வைக்க சொன்னார்கள். கௌரி சந்தியாவின் புடவை முந்தியை எடுத்து சொருகிவிட்டாள்.
அடுப்பை கற்பூரம் ஏற்றி சந்தியா பற்ற வைத்தாள். பிறகு சிவகாமி களைந்து கொடுத்த அரிசியை பானையில் போட்டாள். அதற்கு பிறகு அடுப்பு எரிவதை கௌரி பார்த்து கொண்டாள்.
அன்னபூரணிதான் “என்னங் அண்ணி. மருமகள பொங்கல் வைக்க சொன்னாக்கா குடும்பம் ஓட்டுக்கா சேந்து பொங்கல் வைக்கிறீங்கோ. உங்க மருமகளுக்கு ஒரு பொங்கல் கூட வைக்க தெரியாதுங்களா” என்றார்.
அவர் அப்படி சொன்னதும் சித்ரா “என்ன அண்ணி இப்படி பேசறீங்க. வாழ்க்கை பூரா அவதான் செய்ய போறா. இப்பதான் புது பொண்ணு. அவள என்னத்துக்கு கஷ்டப்படுத்தனும். நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம். அப்புறம் எங்கண்ணன் என்ன வெளிலயா பொண்ணு கொடுத்திருக்கு. என் மருமக தனியா கஷ்ட்டப்பட” என்று பொரிந்தவரை ஒரு கிழவிதான்
“அட விடு புள்ள. அவ ஏதோ தெரியாம கேட்டுபுட்டாலாட்டருக்கு . ஏன் அன்னம். சிவகாமின்னு நினைச்சி பேசி போட்டியோ. சித்ராகிட்ட எதுக்கு வாய விட்ட. அவ அண்ணன் பொண்ணு வேறல்லோ . சும்மா விடுவாளா” என்றது.
இப்படியாக பொங்கல் ரெடியாகிவிட்டது. வேறொரு பக்கத்தில் பிரியாணியும் ரெடியாகிவிட்டது.
எல்லாவற்றையும் சாமிக்கு வைத்து பூஜை போட்டுவிட்டு சாப்பிட அமர்ந்தார்கள். ஒரு பக்கம் பெண்கள் பந்தியும் அடுத்த பக்கம் ஆண்கள் பந்தியும் நடந்தது. எல்லோரும் கீழே வேறு அமர்ந்திருந்தார்கள். முதலில் சந்தியாதான் சக்கரை பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அங்கு ஆரம்பித்தது சந்தியாவிற்கு பிரச்சனை. குனிந்து குனிந்து முப்பது பேருக்கு பரிமாறுவதற்குள்ளாகவே சந்தியாவிற்கு இடுப்பு கலண்டுவிட்டது. வியர்த்து விறுவிறுத்து போனாள்.
சரி ஆதி எங்கே என்று பார்க்கலாம் என்று அவள் திரும்புவதற்குள், அருகில் வந்து வேட்டியை மடித்து கட்டிய ஆதி அவள் கையிலிருந்த வாளியை வாங்கி கொண்டு “எல்லாரும் எவ்ளோ நேரம் பசியோடு இருப்பாங்க. நீ வைக்கிறதுக்குள்ள அம்முச்சிங்க எல்லாம் மயக்கத்துக்கே போய்டுவாங்க போல. தள்ளு நீ ” என்று அவளை திட்டிவிட்டு அவன் பரிமாற ஆரம்பித்தான்.
அதற்குள் ஒரு பாட்டி “என்ன கண்ணு. புது பொண்டாட்டிய இப்படி பேசற. அது பட்டணத்துல வளந்த புள்ளையல்லோ. இதெல்லாம் பழக்கமிருக்காதாட்டருக்கு”
அதற்குள் இன்னொரு பாட்டி “புது பொண்ணு கைலதேன் பொங்கல பரிமாறனும் சாமி” என்றது.
“அதுக்கென்ன அம்முச்சி. நானும் புது மாப்பிள்ளைதானே. நானும் பரிமாறலாம்” என்றுவிட்டான்.
பக்கத்தில் இருந்த சித்ராவும் “அத்தை என் பையன் கையால பரிமாறுன சாப்பாட சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும். சாப்புடுங்க” என்றதும் வேறொரு பாட்டியும் “அது சரிதானாத்தா. பொண்டாட்டி வச்ச பொங்கலை புருஷன் பரிமாறுறதும் நல்லாத்தான்ருக்கு” என்றது.
வசந்தன் முரளி அருண் எல்லாம் நான் வெஜ் உணவுகளை பாத்திரங்களில் எடுத்து வந்து பரிமாற ஆரம்பித்தனர்.
சிவகாமி, சித்ரா , கௌரி அனைவரும் ஆளுக்கொரு வேளையில் பிஸியாக இருந்தார்கள்.
சந்தியாதான் மிகவும் களைத்துவிட்டாள். நேற்று திருமண அலைச்சல். இன்று பெரிய வேலையில்லை என்றாலும் வெயில், அடுப்பு புகையில் நின்றது, எல்லாம் சேர்ந்து சோர்வாக அமர்ந்து இருந்தாள் . பக்கத்தில் அவள் அம்மா பத்மா , வள்ளி, அன்னபூரணி, இன்னும் சில பெண்களும் அமர்ந்து இருந்தனர்.
அவளை கவனித்த வள்ளி சிவகாமியை அழைத்து “அண்ணி. புள்ள களைப்பா இருக்கு பாருங். ஆதியை வர சொல்லி ரெண்டு பேரையும் சாப்பிட சொல்லுங்கங்” என்றார்.
அதற்கு சிவகாமி பதில் சொல்வதற்குள் அன்னம் “இப்பதேன் மொத பந்தியே நடந்துட்டிருக்கு. இன்னும் பாதி பேத்துக்கு மேல சாப்பிடல. அதுக்குள்ள எப்படி இவங்கள சாப்பிட சொல்வ நீயி” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கு ஈஸ்வரமூர்த்தி வந்தவர் , சந்தியாவை கவனித்துவிட்டு
“என்ன சிவகாமி. புள்ள சோர்வா இருக்கு. அதுக்கு மொதல்ல சாப்புட போடாம இங்க நின்னு வெட்டி நாயம் பேசிக்கிட்ருக்க” என்றார்.
“இல்லங், இன்னும் பாதி பேரு சாப்பிடல. ஆதி வேற என்ன சொல்வான்னு தெரியலீங்”
“அட, நீ என்ன கூறுகெட்டத்தனமா பேசிக்கிட்ருக்க” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் ஆதி.
அவனிடம் ஈஸ்வரமூர்த்தி “தம்பி, புள்ளைய கூட்டிட்டு போயி மொதல்ல சாப்புடுங்” என்றதும் சந்தியாவை பார்த்தவன், வா என்று அவளை அழைத்துக்கொண்டு போய் பந்தி நடக்கும் இடத்துக்கு அருகிலேயே தனியாக அமரவைத்து அவனும் அமர்ந்தான்.
எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் எல்லோரும் சாப்பிட்ட பிறகு இறுதியில்தான் சாப்பிடுவான். இன்று சந்தியாவிற்காக முதலிலேயே அமர்ந்தான்.
அவர்களுக்கு பரிமாற வந்த முரளி “ஏண்ணோவ் எப்ப விருந்து நடந்தாலும், உங்களோட சேந்து நா கடைசியாத்தேன் சாப்பிடுவேன் . ஒரு விருந்துலயாவது எனக்கு பீஸ் கிடைச்சிருக்கா. கடைசியா குஸ்கா மட்டுந்தேன் கிடைக்கும். இன்னிக்கு என்னங்ண்ணா உங்க விருந்துல நீங்களே முன்னாடி வந்து உக்காந்துருக்கீங்” என்றான்.
அதற்கு வசந்தன் “இனிமேட்டுக்கு அப்படிதான் தம்பி. ரூல்செல்லாம் நம்மளுக்கு மட்டும்தேன். பொண்டாட்டிகிட்ட அதெல்லாம் செல்லுபடியாகதல்லோ” என்றான்.
ஆதி “டேய் . ஒருநாள் முன்னாடி சாப்பிட வந்ததுக்கு இந்த அக்கப்போர் பண்ணிட்டு இருக்கீங்க. போங்கடா அந்த பக்கம்” என்றான்.
“அதெல்லாம் முடியாதுங்கண்ணோவ். இனிமே எல்லா விருந்துலயும் எனக்கு பீஸ் கிடைச்சே ஆகோணும். அதுக்கு நா முதல் பந்தியிலேயே சாப்பிடோணும். அதுக்கு நீங் உத்தரவாதம் கொடுங்” என்றான் முரளி.
சாப்பிட விடாமல் அலம்பல் செய்து கொண்டிருந்தவர்களை பார்த்து பல்லை கடித்தான் ஆதி. அதை கவனித்த சந்தியா முரளியை பார்த்து “டேய் தம்பி. பத்துநாளா நீ அந்த ஒன்பது மணி பஸ்ல போகலையாமே. என்ன விஷயம்” என்றாள்.
திடுக்கிட்டுபோய் சந்தியாவை பார்த்த முரளி “அண்ணா நீங் சாப்பிடுங். அங்க பெரியப்பாரு பிரியாணி கேக்கிறாரு. நா போறேனுங்” என்றுவிட்டு ஓட்டம் எடுத்தான்.
அவனை வினோதமாக பார்த்த வசந்தனிடம் “அப்புறங்ம்ண்ணா” என்று சந்தியா ஆரம்பித்ததும் “ஒண்ணுமில்ல கண்ணு. நீயும் மச்சானும் சாப்பிடுங்க. முரளி பிரியாணி போட்ட பெரியப்பாருக்கு நா சிக்கன் வைக்கோணும் கண்ணு. வாறேன்” என்றுவிட்டு அவனும் ஓடினான்.
“அப்படி என்ன சொல்லி அவனுங்கள மிரட்டுன டி பொம்மு. இந்த ஓட்டம் ஓட்றானுனங்க” என்று ஆதி கேட்டதும் “அதெல்லாம் யூத் மேட்டர். நீங்க கேக்காதீங்க” என்றாள் சந்தியா.
“ஏண்டி? நா கேக்க கூடாது?”
“உங்களுக்கெல்லாம் வயசாயிட்டு பாஸ்”
“யாருக்குடி வயசாயிட்டுன்னு சொல்ற”
“உங்களுக்குத்தான் பாஸ் . நீங்கதான என்ன விட நீங்க ரொம்ப பெரியவருன்னு சொல்வீங்க”
“ஏண்டி பேசமாட்ட. நைட்டு உன்ன சும்மா தூங்க விட்டேன்ல்ல. அந்த எகத்தாளம். நீ பேசத்தான் செய்வ”
“அதல்லாம் லட்சிய மேட்டர். அதபத்தில்லாம் பேசாதீங்க. எனக்கு டயர்ட். பசிக்குது. நா சாப்பிடணும்”
இவ்வளவு நேரம் அவ்வளவு வாய் பேசிட்டு இப்ப டையர்டா இருக்காம் இவளுக்கு. சரியான கேடி, என்று திட்டி கொண்டே அவனும் சாப்பிட்டான்.
அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆதி பந்தியை பார்க்க சென்றான். சந்தியா திரும்ப வந்ததும் அவளிடம் வசந்தனிடமிருந்த வாளியை வாங்கி கையில் கொடுத்தார் அன்னம்.
வசந்தன் “சித்தி. என்னத்துக்கு இப்ப அங்க வாங்கி கொடுக்கிறீங். நாந்தேன் பரிமாறிட்டு இருக்கேனல்லோ” என்றான்.
அதற்கு அன்னம் “எவ்வளவு நேரந்தேன் நீயே பரிமாறுவ கண்ணு. பாரு களைச்சி போய்ட்டல்லோ. நீ போய் சாப்பிடு கண்ணு” என்றார் பாசமாக.
இத்தினி நா கழிச்சி என்ர சித்திக்கு என்ர மேல வந்த பாசத்த பாரேன் என்று மனதிற்குள் அங்கலாய்த்தபடியே ஆதியை தேடி சென்றான் வசந்த்.
சந்தியா மனதிற்குள், ஐயோ இந்த கொசுத்தொல்லை தாங்கலையே. என்ன பழிவாங்க பாக்குதாம். யாராவது மருந்து அடிச்சு கொல்லுங்கடா என்று கவுண்டர் கொடுத்து கொண்டிருந்தவள் வெளியில் அன்னத்திடம் “நீங்க சாப்டீங்களாம்மா. வாங்க உட்காருங்க. நா பரிமாறுறேன்” என்றாள் அன்பொழுக.
அவளிடம் பதில் சொல்லாமல் திருப்பி கொண்டு போனார் அன்னம்.
அதை பார்த்து கொண்டிருந்த சித்ரா புடவை முந்தானையை எடுத்து சொருகி கொண்டு அன்னத்தை ஒரு கை பார்ப்பதற்காக கிளம்பினாள். பக்கத்தில் இருந்த சிவகாமி “அமைதியா இரு புள்ள. நல்லபடியா விசேஷத்தை முடிக்கோணும் . இதையெல்லாம் ஆதி பாத்துக்குவான்” என்றார்.
சந்தியா ஆண்கள் பந்தியில் சிக்கன் குழம்பு கேட்டதால் அங்கு சென்று பரிமாற ஆரம்பித்தாள். நான்கைந்து பேருக்கு பரிமாறுவதற்குள்ளாகவே , சாப்பிட்ட சாப்பாடு எல்லாம் தொண்டை குழிக்கு வந்துவிட்டது. என்னடா இது, ஆதியை தேடலாம் என்று அவள் பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு தாத்தா குழம்பு கேட்டதால் அவருக்கு ஊற்றினாள். அந்த நேரம் சரியாக அங்கு வந்த ஆதி “என்ன. குழம்பு மட்டும் போட்ருக்க அப்புச்சிக்கு. கறி போடலையா. 34 பல்லும் இருக்கு அப்புச்சிக்கு. அவ்வளவு ஸ்ட்ராங்காக்கும். இங்க கொடு. நானே போடறேன். நீ தள்ளு போ” என்று திட்டினான் ஆதி.
அதற்கு மீசையை முறுக்கிய அப்புச்சி “விடு கண்ணு. புள்ள புதுசுல்ல. அதான் அப்புச்சியை பத்தி தெரியலயாட்ருக்கு. அதுக்காக உன்ர புது பொண்டாட்டியை இப்படியா திட்டுவ” என்றார் ஆதியிடம்.
அவருக்கு பரிமாறிவிட்டு சந்தியா எங்கே என்று பார்த்தவன் அவள் பந்தி நடக்கும் இடத்தை விட்டு வெளியே செல்வதை பார்த்து, குழம்பு வாளியை அருணிடம் கொடுத்துவிட்டு அவனும் வெளியில் சென்றான்.
சந்தியா வேகமாக வெளியே ஓடிபோய் அங்கு இருந்த வாய்க்கால் ஓரம் வாந்தி எடுத்தாள். அவள் பின்னோடு வந்த ஆதி, அவசரமாக சென்று அவள் தலையை பிடித்து கொண்டான்.
வாந்தி எடுத்து முடித்ததும் அங்கிருந்த மணல் திண்டில் மெதுவாக வந்தமர்ந்தாள் சந்தியா. பக்கத்தில்தான் அவர்கள் கார் கிடந்ததால் அதிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தந்தான் ஆதி.
அதை வாங்கி வாய் கொப்புளித்து, தண்ணீர் குடித்தாள் சந்தியா. கையிலிருந்த டவலால் அவள் முகத்தை துடைத்துவிட்டவன் “என்ன ஆச்சுடி பொம்மு. இப்ப ஓகேவா” என்றான்.
நன்றாக காலை நீட்டி அமர்ந்தவள் “தெரியல பாஸ். செரிக்கல போல”என்று அவள் டயர்டாக கூறியதும் அவள் கால் பாதங்களை மெதுவாக எடுத்து பிடித்து விட்டான்.
சந்தியா பதறிபோய் “மாமா என்ன பண்றீங்க. விடுங்க. யாராவது பாக்க போறாங்க” என்றதும் அவள் உதட்டை பார்த்தவன் “நீ மாமான்னு கூப்புட்றதுக்காகவே உனக்கு கால பிடிச்சி விடலாம் பொம்மு. பாரு காலெல்லாம் எப்படி சிவந்து போயிருக்குன்னு” என்றான்.
“மாமா கால் நார்மலாவே அந்த கலர்லதான் இருக்கும். எனக்கு காலெல்லாம் வலிக்கல”என்று கூறியும் அவன் காலிலிருந்து கையை எடுக்காததால் “ஐயோ மாமா. இது கோயில், நீங்க ஆதித்யன். யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க” என்றாள் .
அதற்கு ஆதி “யாரு பாத்தா என்ன. நா என் பொம்மு குட்டியோட ஆதி மாமா” என்றதும் காதலாக அவனை பார்த்தவள், எக்கி அவன் தலைமுடியை கோதிவிட்டாள்.
error: Content is protected !!