Meendum Orumurai -16
அன்று குரு வீட்டிற்கு திரும்பும் போது வேலினி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள். வீட்டின் முன் விளக்குகள் கூட எரியாமல் இருட்டாக இருக்க, அனைத்து விளக்குகளையும் எரியவிட்டவன்.
“எதுக்கு இப்படி இருட்டில் உட்கார்ந்து இருக்க?”, என்று கூறியவாறு அவள் அருகே அமர்ந்து கொண்டே, தன் உடைகளை தளர்த்தினான். அவளோ அவனை கோபமாக முறைத்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
“என்ன ஆச்சு இப்ப எதுக்கு என் வேதாள குட்டி முருங்கை மரம் ஏறி இருக்கு”, என்று அவன் செல்லமாக கேட்க இவளுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. “என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல?”
“நான் இப்ப ஏதாவது சொன்னா நீ இன்னும் கோபமாயிருவ பரவாயில்லையா?” என்றதும், இவள் அமைதியாக அவனை பார்த்து நிற்க இவன் உடனே, “சரி என்ன சொல்லு?” என்று நிதானமாக கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
“சத்யாவோட அப்பாக்கும் உனக்கும் என்ன பிரச்சனை குரு” என்று கேட்க, “சத்யாவோட அப்பாவா?”, என்று ஒரு நிமிடம் யோசித்தான். அடுத்த நொடி அது யார் என்று தெரிந்துவிட அவன் முகத்தில் இப்போது வெறுப்பு குடியிருந்தது.
Advertisement
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை எதற்காக ஒருவர் மீது இத்தனை வெறுப்பை சுமந்து கொண்டிருக்கிறான் தன் கணவன் என்று அவளுக்கு யோசனையாக இருந்தது.
“என்ன ஆச்சு எதுக்கு இவ்வளவு வெறுப்பு உனக்கு. ஏன் அவர்கிட்ட இப்படி நீ நடந்துகிற”,
“இப்ப எதுக்கு அவர பத்தி பேசிகிட்டு இருக்க, அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்”
Advertisement
“நான் இன்னைக்கு சத்யாவை பார்த்தேன்” என்றதும் இவனுக்கு பதற்றம் ஆகிவிட்டது.
Advertisement
“அவ அப்பா கூட வந்திருந்தானா?”
“இல்ல சத்யா மட்டும்தான் வந்தா. டென்த் படிக்கிறா போல. இன்னைக்கு கிளாஸ் முடிச்சிட்டு லேட் ஆகிடிச்சாம். அவ போற ஆட்டோவும் வரல போல. அவளை நான் பஸ் ஸ்டாண்டில பாத்தேன். அதான் அவளை வீட்டில் விட்டிட்டு வந்தேன்”
“உன்னை யாரு அங்க போக சொன்னது”
Advertisement
“இது தான் ஏன்னு கேட்கிறேன். அவங்க அப்பா என்ன பாக்குறதுக்கு நிறைய தடவை முயற்சி பண்ணி இருக்காரு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே.
ஆனா நீ அவருக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவே இல்ல. சத்யா கூட என்ன கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் பார்க்கணும் நினைச்சு இருக்கா ஆனா நீ அந்த வாய்ப்பே தரல”
“அவங்கள பாத்து நீ என்ன பண்ண போற”.
“நான் எதுவும் பண்ண போறதில்ல தான். ஆனா அவங்க என்ன பாத்து எனக்கு நன்றி சொல்லணும் நினைச்சு இருக்காங்க. அவங்க நன்றிய நான் எதிர்பார்க்கலை.
ஆனா எதுக்கு அவங்க பாக்குறதுக்கு கூட நீ அனுமதிக்காம இருந்த. அதை தான் ஏன்னு கேட்கிறேன். அப்படி என்ன பண்ணிட்டாங்க. அவங்க கிட்ட நீ ஏன் இவ்ளோ வெறுப்பா நடந்துக்கிற.
சத்யாவோட அம்மா என்கிட்ட சொல்றாங்க. அவர் போலீஸ்காரர் ஏதாவது உன் மேல கேஸ் போட்டு ஏதாவது பண்ணி இருந்தா நான் என்ன பண்ணி இருக்கிறது”
“அப்படியெல்லாம் அவனால பண்ண முடியாது”.
“முதல் மரியாதை பேசு குரு. அவரு உன்ன விட வயசுல மூத்தவர். அவர பத்தி நீ இப்படி தான் பேசுவியா.
பதவியில் இருக்கிறவரு முன்னாடியாவது சப் இன்ஸ்பெக்டர் இப்போ இன்ஸ்பெக்டர் வேற. ஏன் நீ அவங்ககிட்ட இப்படி நடந்திக்கிற?”
“ஆமா பெரிய பதவி. பதவிக்கு போயிட்டா அவங்க எல்லாம் ரொம்ப பெரியவங்க ஆயிடுவாங்களா. பதவி எதுவும் ஒருத்தரோட மரியாதைக்கு காரணம் கிடையாது. செயல்தான் ஒருத்தவங்களோட மரியாதைய தீர்மானிக்கும்”,
“அப்படி என்ன அவர் செஞ்சிட்டாரு”
“போதும் வேலினி என்னை விடு”, என்று அவன் நகர போக, சரியாக அவன் அலைபேசி அழைத்தது.
“குரு முதல்ல எனக்கு பதில் சொல்லிட்டு போ”, என்று அவனை திருப்பி அவனிடம் அவள் பேச முயற்சிக்க, “என் மாமா தான் கூப்பிடறாரு. பேசிட்டு பதில் சொல்லட்டுமா இல்ல பதில் சொன்னதுக்கு அப்புறம் தான் பேசணுமா”, என்று அவன் கோபமாக கேட்க, இவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
அவன் ‘என் மாமா’ என்று கூறியது தன் தந்தை என்று தெளிவாக விளங்கியது அவளுக்கு.
“என்ன சொல்றீங்க மாமா??????? இதோ…. இதோ…… இப்ப நான் ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன்…..”, என்று பதட்டமாக அவன் கிளம்ப போக, வேலினி அவனை வேகமாக பிடித்து
“குரு என்ன ஆச்சு? அம்மாக்கு எதாவது ஆகிடிச்சா. அவங்க நல்லாதான இருக்காங்க. போனவாரம் கூட ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். டாக்டர் கேன்சர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தடுத்தாச்சு. பிரச்சனை இல்லை. நல்லா தான் இருக்காங்கன்னு சொன்னாங்க இப்ப எதுவும் பிரச்சனயா?” என்றதும்.
இவன் அவள் பதட்டம் கண்டு, “அத்தைக்கு எதுவும் இல்லை, வேலினி. அம்..அம்மாக்கு” என்று அவன் சொல்ல முடியாமல் திணறினான்.
“ஒன்னும் இல்ல குரு.. ஒன்னும் இல்ல… அமைதியா இரு …ஒன்னும் இல்ல …” என்று அவனை அப்போது அவள் சமாதானப்படுத்த வேண்டியதாகும். பின்னர் அவளே வேகமாக மகிழுந்தை இயக்கி, அவனை அழைத்துச் சென்றாள்.
ஏறியதும், என்னாச்சு என்று அவள் விசாரிக்க, “அத்தை, மாமா இரண்டு பேரும் அம்மாவை பார்க்க வீட்டுக்கு போயிருக்காங்க. அப்ப அம்மா கீழ வாங்கி விழுந்து கிடந்தாங்களாம். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்கிறதா மாமா சொன்னாரு” என்று சற்று திணறலாக பதில் உரைத்து விட்டு, கண்களை மூடி சாய்ந்து கொண்டான்.
15 நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் வேலினி. அவள் முழுதாக நிறுத்தும் முன்பே, வேகமாக இறங்கி மருத்துவமனையில் தாயின் பெயரை கூறி விசாரித்துக் கொண்டு அந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு முன்பாக நின்றிருந்தான் குரு.
வேலினி மகிழ்ந்தை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே நுழையும் போது அவள் கேட்டது குருவின் அலறல் குரலை மட்டும்தான்.
அளவு சத்தம் கேட்ட திசை நோக்கி வேகமாக செல்ல, அங்கு குரு படுக்கையில் இருந்த தாயின் உடலைக் கண்டு கதறி அழுது கொண்டிருந்தான். அவள் தாயும் அது தந்தையும் அவனை சமாதனம் செய்ய முயற்சிக்க, அவள் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அலறிக் கொண்டிருக்கும் தன் குரு மட்டும் தெரிய, வேகமாக அவன் அருகே நெருங்கி அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
அவனை சமாதானப்படுத்தும் எந்த வார்த்தையும் அவள் கூறவில்லை. மாறாக “நான் உனக்கு இருக்கிறேன்” என்று அந்த இறுகிய அணைப்பில் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவனும் அமைதியாக அவள் அணைப்பில் அடங்கி கிடந்தான். கதறல் நீங்கி கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருந்தது.
அவன் அழுகை அடங்கவும் வேலினி தந்தையிடம் திரும்பி, “அப்பா பார்த்துக்கோங்க”, என்று கூறிவிட்டு அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். குருவின் அழுகை குறைந்ததும் அவன் கண்ணீரை நன்றாக துடைத்து விட்டவள், “அவங்க எங்கேயும் போல குரூ நம்ம கூட தான் இருக்காங்க”, என்று தன்னுள் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு அவனுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தாள்.
வேலினியால் உயிரற்று உடல் மட்டுமாக கிடக்கும் பவானியை கண்கொண்டு காண முடியவில்லை. அப்படி ஒரு அழகிய முகம் அவருடையது தெய்வீக கலை என்பார்களே, அது நிச்சயம் நிறைந்திருக்கும். கூடவே ஆளுமையும்.
ஆனால் அமைதியை தத்தெடுத்து முகத்துடன் தான் எப்போதும் இருப்பார். மகனை ஒரு காலம் வரை வழிநடத்தியவர் அதன் பின் அவனின் பாதையில் சென்று கொண்டிருந்தார். அவரின் வாழ்வு என்பது எப்படிப்பட்டது என்று வார்த்தைகளால் யாராலும் சொல்லிட முடியாது.
அப்படிப்பட்ட ஒரு மனுஷி உத்தமன் ஒருவனை கணவனை தனக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருந்து இருக்கலாம்.
இப்படி மகனை ஒரேடியாக பரிதவிக்க விட்டு சென்றிருக்க வேண்டாம் இவர் என்று எண்ணிக் கொண்டு தன் தோளில் சாய்ந்த கணவனை ஏந்திக் கொண்டாள்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு புறப்பட வேண்டிய வேலைகளை எல்லாம் வேலினியின் தந்தை பார்த்துக் கொள்ள, அவர்கள் வீடு கிளம்புவதற்கு முன்பாகவே குருவின் பெரியப்பா வந்திருந்தார்.
அதன்பின் அவரின் வழிநடத்தலில் அங்கு அனைத்தும் தொடங்கியது. வீட்டிற்கு சென்று சடங்குகள் தொடங்கிய பின் வேலினியால் கணவனின் அருகில் இருக்க முடியவில்லை. அவளிற்கும் கடமை இருக்கிறதே, மருமகளாக அனைத்தையும் செய்து முடித்து கணவனை திரும்பி பார்க்க, அவனை கடைசி காரியத்திற்கு தயார் படுத்தி இருந்தனர் பெரியப்பா குடும்பத்தினர்.
தன் கடமை அனைத்தையும் முடித்துக் கொண்டு தன் இறுதி யாத்திரையை தொடங்கி இருந்தார் பவானி. கொள்ளி வைத்துவிட்டு அனைவரைம் வீடு திரும்பி இருந்தனர். குருவை எண்ணி வேலினிக்கு ஒருமாதிரி பயமாக இருந்தது.
மருத்துவமனையில் இருந்து கிளம்பியதில் இருந்து தாய்க்கு கொள்ளி வைத்து வீடு திரும்பும் வரை அவன் அசைவற்று தான் இருக்கிறான். முதல் நாள் அழுது கரைந்ததோடு சரி, ஒரு சொட்டு கண்ணீர் வராமல் அமைதியாகவே இருந்து கொண்டான்.
பெரியப்பாவும் அவன் அண்ணனும் எத்தனையோ சொல்லிப் பார்த்தும் அவன் அசைவதாக இல்லை. வீட்டிற்கு வந்த சொந்தங்கள் மூன்று நாட்களில் இருந்து சடங்குகள் முடிந்ததும் கிளம்பினர். பெரியப்பா குடும்பம் ஒரு வாரம் அவனுடைய இருந்திருந்தது. அவர்கள் இருந்ததால் மூன்றாவது நாளே வேலினி வீட்டார் கிளம்பி இருந்தனர்.
அடுத்த ஒரு வாரத்திலேயே வீட்டில் அமைதி சூழ்ந்து இருந்தது. வேலினியும் குருவும் மட்டும் இருந்தனர். வேலினி சமையலை செய்து முடித்துவிட்டு குருவின் அருகே வந்த அமர்ந்தவள், அவன் தோள் தொட்டு, “குரு வீட்டுக்கு போகணும்” என்று கூறினாள்.
குரு, “ஆமா வீட்டுக்கு போகணும். இரண்டு நாளைக்கு அப்புறம் போலாமா?” என்று அவன் கேட்க,
“குரு வீட்டுக்கு போய் திங்ஸ் எல்லாம் காலி பண்ணனும். அட்வான்ஸ் திருப்பி வாங்கியாச்சு. அப்பா கிட்ட சொல்லி வச்சிருந்தேன். அப்பா எல்லாமே ரெடியா இருக்கு வீட்டு பொருள் எல்லாம் பேக் பண்ணிட்டோம்னு சொன்னாரு. நம்ம ரூம்ல இருக்க திங்ஸ் மட்டும் பேக் பண்ணனும்.
உன்னோட ஹெல்ப் வேணும். அதுக்கு தான் உன்ன கூப்பிடுறேன் வரியா?” என்று அவள் கேட்க இவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளை இறுக்கி கட்டி கொண்டான்.
“அம்மா இங்கே இருக்காங்க இவங்கள விட்டு போக கூடாது நினைச்சுட்டு இருந்தேன். நீ கூப்பிட்டதும் தான் நம்ம ரெண்டு பேரும் அங்கதானே இருக்கோம். நம்ம அங்க தான் போகனும். உனக்கு இங்க இருக்க பிடிக்குமோ என்னவோ? அதான் ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்னு சொன்னேன். ஆனா நீ மொத்தமா இங்கேயே வர பிளான் பண்ணி இருக்கேன்னு எனக்கு தெரியல”, என்று கூறியவனுக்கு கண்ணீர் வழிந்தது.
அத்தை கூட மருமகளா நான் இந்த வீட்டில் இருந்ததே இல்ல. ஒன்னு ரெண்டு நாள் அப்புறம் கொஞ்சம் சில மணி நேரங்கள் அவ்வளவுதான் இந்த வீட்டில நான் அவங்க மருமகளா இருந்த நாட்களே.
அவங்க நம்மள தனியா போக சொல்லும் போது நம்ம போயிருக்க கூடாதுன்னு இப்ப தோனுது. மருமக என்னைவே எப்படி பார்த்துக்கிட்டே அத்தையோட இழப்பை என்னாலையே தாங்க முடியலங்கபோது, நீ எப்படி உணர்வன்னு என்னால உணர முடியுது.
ஆனால் இந்த நிமிஷம் அவங்க நம்ம கூட தான் இருப்பாங்க. அந்த விஷயத்தை மட்டும் முழுசா நம்ப குரு. அன்னைக்கு நம்ம கூட எவ்வளவு சந்தோஷமா சிரிச்சிட்டு இருந்தாங்க. உன் முகத்தில் இருக்கிற சிரிப்பை பார்த்து அவங்க அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க.
அதே மாதிரி எப்பவும் சிரிச்சு சந்தோஷமா நீ இருந்தா தான் அவங்க எப்பவும் சந்தோஷமா இருப்பாங்க. உனக்கு அழுக வந்தால் மொத்தமாக அழுது முடிச்சிடு குரு. இதுக்கப்புறம் எப்பவும் அழுகாத என்னாலையும் நீ அழுறதை பார்க்க முடியாது”, என்று கூறியவளுக்கு தானாக கண்ணீர் கண்களில் வழிய ஆரம்பித்தது.
அவளின் அணைப்பில் இருந்த குரு அவளை இன்னும் இறுக்கி அணைத்து கொண்டான்.
இருவரும் வேலினி சமைத்த உணவை உண்டு விட்டு அங்கிருந்த புறப்பட்டு தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சென்றனர். உள்ளே செல்லும்போதே தெய்வானையும் ஆறுமுகம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது இருவருக்கும்.
இருவரும் உள்ளே வரும் அரவத்தை உணராமல் தெய்வானை ஏதோ பேசிக்கொண்டிருந்தார். “இருந்தாலும் அண்ணி இப்படி திடீர்னு போவாங்கனு, நான் எதிர்பார்க்கவே இல்லைங்க. எனக்கு என் சொல்லலன்னு தெரில. இதுல வேலினிக்கு இருக்த மரணகண்டத்தால தான் இவங்களுக்கு ஏதாவது இந்த மாதிரி ஆயிடுச்சு எல்லாம் யோசிக்க தோணுச்சு”, என்று
அவர் கூறியதும் ஆறுமுகம் அதட்டலாக, “என்ன பேசுற தெய்வானை?” என்றார். வேலினி ஒரு நிமிடம் ஸதம்பித்து நின்று விட்டாள்.
குரு தான் அவள் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு, “எதை பத்தியும் யோசிக்காத. அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்று கூறி, வேகமாக உள்ளே சென்று “அத்தை மாமா” என்று குரல் கொடுத்தான்.
அவர்கள் இருவருக்கும் இவர்கள் இருவரையும் கண்டு திக்கென்றது இருந்தது. ஆனால் குரு அவர்களிடம் எதையும் காட்டிக் கொள்ளாதவனாக “மாமா எங்க ரூம நாங்க பேக் பண்ணிட்டு வரோம். நீங்க மத்ததெல்லாம் வெளியில இருக்கவங்க கிட்ட சொல்லி எடுத்து வைக்க சொல்லுங்க”, என்று கூறி வேகமாக மனைவியை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
நுழைந்தவன் அவளை எதையும் யோசிக்க விடாமல் அடுத்தடுத்து வேலையாக கூற, அவளும் அதனை செய்து முடித்து வெளியேறினாள். ஆறுமுகம் தெய்வானை தம்பதியினர், தங்கள் பேச்சுவார்த்தையை இவர்கள் கேட்கவில்லை என்று எண்ணிக்கொண்டனர்.
வீட்டிற்கு திரும்பியதும் வேலினி சமையல் கட்டுக்குள் நுழைந்து காபி போட சென்று விட்டாள். குரு தன் அத்தை மாமாவிடம், “அத்தை மரண கண்டமங்கறது ஜாதகத்துல இருக்கு அவ்வளவுதான். எங்க அம்மாக்கும் எனக்கும் அந்த விஷயத்துல நம்பிக்கை இல்லை.
அப்புறம் வேலினியால, என்னைக்கு யாருக்கும் எந்த கஷ்டமும் வராது. அவன் எப்பவும் மத்தவங்களுக்கு நல்லது மட்டும்தான் நினைப்பா. இனிமேல் தயவு செய்து இப்படி பேசாதீங்க” என்று கண்டனமாக கூறி விட தெய்வானைக்கு ஒரு மாதிரி வருத்தமாக தான் இருந்தது.
இருந்தாலும் மாப்பிள்ளை தன் மகளுக்காக இப்படி பேசும்போது அவருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இருக்க, மகள் கொடுத்த காபியை குடித்துவிட்டு அங்கிருந்து நிம்மதியுடன் புறப்பட்டனர் ஆறுமுகம் தம்பதியினர்.
அவர்கள் சென்றதும் வேலினி அவன் புறமாக திருந்தி, “ஒரு வேளை அந்த மரண கண்டத்தால தான் இப்படி ஆயிடுச்சோ” என்று கேட்க இவன் வேகமாக அவள் கைகளை பிடித்துக் கொண்டு,
“இங்க பாரு ஒரு விஷயம் நான் சொல்றேன் அதை நல்லா கவனிச்சுக்கோ. எங்க அம்மாக்கு ஜாதகத்துல சுத்தமா நம்பிக்கையே கிடையாது. ஏன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்க.
“ஏன்?’.
“எங்க அம்மாக்கு ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, நாலு அஞ்சு இடத்தில ஜாதகம் பார்த்தாங்களாம் அவங்க கல்யாணத்துக்கு. பாத்த எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி, அம்மா ரொம்ப வருஷத்துக்கு தீர்க்க சுமங்கலயா தீர்க்க ஆயுள் உள்ள ஒரு புருஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழ்வாங்கன்னு சொன்னாங்களாம்.
ஆனா எங்க அம்மாக்கு நடந்தது என்ன உனக்கு தெரியும் தானே. இங்க உனக்கு ஒரே ஒரு ஜாதகக்காரர் உனக்கு மரண கண்டம் இருக்கின்னு சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான். இந்த விஷயம் எல்லாம் உண்மையா ஆகாது. சரியா”, என்று கூறவும் சரி என்று ஏற்றுக்கொண்டு அவன் தோள் சாய்ந்து கொண்டாள் வேலினி.
சட்டென்று ஏதோ தோன்ற, அவன் தோளிலிருந்து நிமிர்ந்து அவனை பார்த்தவள், “குரு உனக்கு ஏன் சத்யாவோட அப்பா மேல அவ்வளவு கோபம்”, என்றதும் மீண்டும் அவன் முகம் கோபத்தை தத்து எடுத்துக் கொண்டது.
“ப்ளீஸ் கோவப்படாம சொல்லு”, என்று கேட்க, “இப்ப எதுக்கு அவனை பத்தி பேசுற” என்று அவன் கோபமாக தான் கேட்டான்.
வேலினியின் மனம் இந்த கேள்வியை அவனிடம் கேட்க சொல்லி உந்தி கொண்டே இருந்தது. ஏதோ ஒரு உறுத்தல் அவள் மனதிற்குள் இருக்க, அதனால் தான் அந்த கேள்வியை விடாமல் அவனை நோக்கி எழுப்பிக் கொண்டே இருந்தாள்.
அவனும் கோபத்தில் தான் வெடித்தானே தவிர பதிலை கூறவில்லை.
