Skip to content
Post Views: 6,011
“என் ஹஸ்பண்டை பார்க்கனும்னு சொன்னயில்ல? வந்துருக்கார், வா” என்றார்.
“என்னால இப்போ வர முடியாதுங்க மேடம்”
“சர்டிஃபிகேட்ஸ் வேணாமா?”
“சென்னை வரும்போது வாங்கிக்கிறேன்”
Advertisement
“எப்போ சென்னை வர?”
“அஞ்சு வருசம் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்கேன், எனக்கு தோணும்போது வருவேன்”
“எப்போ தோணும்?”
Advertisement
இவர் பேச்சை வளர்க்க நினைக்கிறார் என்றுணர்ந்து, “எனக்கு தோணுறது இருக்கட்டும், உங்க புருஷனை கவனிங்க” என்று இணைப்பை துண்டித்து வெளியே வர, திடுக்கிட்டு பார்த்தார் செல்லம்மாள்.
Advertisement
இத்தனை நேரம் நாம் பேசியதை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கோபம் வந்தபோதும், ஏதும் சொல்லாமல் தந்தையிடம் சென்றவன் “சாப்பிட்டிங்களாப்பா?” என்றான்.
“நீ சாப்பிடுப்பா முதல்ல” என்றார்.
“அப்பாக்கு சாப்பாடு ரெடி பண்ணிட்டிங்களாம்மா?”
Advertisement
“நீ மாடில போன் பேசிட்டிருக்கும்போதே செய்துட்டேன், அவர் சாப்பிட லேட்டாகும், நீ சாப்பிடு” என்று பரிமாற ஆயத்தமாக, “நானே போட்டு சாப்பிட்டுப்பேன்ம்மா, நீங்க போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க” என்று கை கழுவி வந்தமர்ந்தான்.
“நான் பரிமாறினா சாப்பிடமாட்டியா?”
“ம்ப்ச், என்னம்மா உங்க பிரச்சனை? ஹாஸ்பிட்டல்லயிருந்து வந்ததுலயிருந்து வேலை செய்துட்டே இருக்கிங்கனுதான் ரெஸ்ட் எடுக்க சொன்னேன்”
“உனக்கு பரிமாறி ஒன்னும் டையர்ட் ஆகிடாது” என்று மகனுக்கு பரிமாற, “ம்மா எதுக்கு இவ்வளோ போடுற? வேஸ்ட் ஆகும்” என்று அன்னையை தடுத்தவன், பாதியை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தான்.
செல்லம்மாள் முறைப்போடு நின்றிருக்க, “மணி எட்டாகுது, சாப்பிடும் முன்ன மாத்திரை இருந்தா அப்பாக்கு எடுத்து கொடுங்க” என்றான்.
“ம் போய் எடுத்துக் கொடுக்குறேன், பொறுமையா சாப்பிடு, சாப்பிட்டதும் ரூம்க்கு போய்டாத, உன்கிட்ட பேசனும்” என்று கணவனை கவனிக்க சென்றார் செல்லம்மாள்.
அனைவரும் உண்டு முடித்த பின்னே, “அந்த பொண்ணு இப்படி பொய் சொல்லுவானு நான் நினைச்சே பார்க்கல திருனேசு” என்றார் வேதனையோடு.
“அதை விடுங்கம்மா, கொஞ்ச நாள் முன்ன உங்களை பார்க்க வந்த சத்யப்ரகாஷ் உள்ளூர்காரனா?”
“அவன் அப்பா இப்போ கவுன்சிலர் திருனேசு, அந்த பையனோட மாமனார் எம்.எல்.ஏவாம், அவனவன் செய்த தப்புக்கு அவனவன் அனுபவிப்பான். நீ எதோ வேலைக்கு பேசிட்டிருந்த போல, அதைப் பத்தி சொல்லேன்” என பேச்சை மாற்றினார் செல்லம்மாள்.
அன்னையின் பேச்சினில் அவன் மீதான பயம் அப்பட்டமாக தெரியவே, “இத்தனை நாள் கழிச்சு அவனுக்கென்ன என்ன திடீர் ஞானோதையம்? வீடு தேடி வந்து உண்மையை ஒத்துக்க வேண்டிய அவசியமென்ன? இது பின்னாடி என்னவோ இருக்கும்மா, அப்படிலாம் சுலபமா விட முடியாது.
அவ்வளோ பெரிய தப்பை செய்ததுமில்லாம அந்த பொண்ணை மிரட்டி பொய் சொல்ல வச்சு, என்னை ஜெயிலுக்கு அனுப்பி, நான்தான் தப்பு செய்தேன்னு உங்ககிட்டயே சொல்லி, அவன் இமேஜை டேமேஜ் பண்ணாம இருக்க பணத்தை வாங்கிக்கோங்கனு சொல்லுவான்?” என்றான் உள்ளடக்கிய கோபத்தோடு.
“அந்த புள்ளையும் பொய் சொல்லிட்டேனு இத்தனை வருசம் கழிச்சுத்தான் வெண்பாகிட்ட சொல்லியிருக்கா, அஞ்சு வருசமா ஊர்பக்கமே வரலன்னதும் எல்லாம் நம்ம மகனாலனு எத்தனை வேதனை பட்டிருக்கோம் தெரியுமா?
ஒரு பொய்யை சொல்லி மொத்த குடும்பத்து நிம்மதியையும் கெடுத்துட்டா, இப்போ உண்மையை சொன்னா நீ பட்ட அவமானம்லாம் இல்லைனு ஆகிடுமா?”
“அந்த பொண்ணை மிரட்டி சொல்ல வச்சிருக்காங்கம்மா, அப்போ அவ ரொம்ப சின்ன பொண்ணு, பாவம் என்ன பண்ணுவா? ஆனாலும் இப்போ வருந்துறால்ல?” என கோபமில்லாமல் சொன்னவன்,
“தப்பு செய்தவன் பணபலத்தோட சேர்த்து அதிகார பலமும் இருக்குதுன்றதால அவன்மேல பயம் வருது. அதனால அவனை தண்டிக்கிற பொறுப்பை கடவுள்கிட்ட விட்டுடுவிங்க, இந்த பொண்ணுக்கு அப்படி ஏதும் இல்லைன்றதால அவமேல மட்டும் கோபம் வருதாம்மா?”
மகன் சொல்வது உண்மைதான், சத்யப்ரகாஷ் எதையும் செய்துவிட்டு தப்பித்து விடும் வல்லமையுடையவன், அவனிடம் மோதினால் நமக்குத்தான் பிரச்சனை என்ற பயம் இருக்கிறது.
சத்யப்ரகாஷ் மீதான பயத்தோடு மகனை நான் தவறாக நினைத்தது பொன்மணி சொன்ன பொய்யால்தான் என்பதை மகனுக்கு உணர்த்த தவிக்கிறார் செல்லம்மாள்.
“அந்த பிள்ளையை அவன் தொல்லை பண்ணினான்றது அவங்களுக்குள்ள. ஆனா உனக்கு தண்டனை கிடைச்சது அவ சொன்ன பொய்யாலதான?”
“ஆமாம்மா, யார் இல்லைன்னு சொன்னது? அப்போ பொய் சொன்னாலும் இப்போ அதை நினைச்சு வருந்துறவளை விடாம பிடிக்கிறிங்க. தப்பும் செய்துட்டு பாதிக்கபட்டவனோட வீட்டுக்கு வந்து பணம் வாங்கிக்க சொல்றவனை விட்டுட சொல்றிங்க.
அப்போவே இவன்தான் குற்றவாளினு தெரிஞ்சிருந்தா உண்டுயில்லைனு செய்திருப்பேன். என் பேட் டைம் அப்போ இவனை தெரியல. இப்போ அவனே வந்து சிக்கியிருக்கான். சும்மாலாம் விட முடியாது. இதனால எவ்வளோ பெரிய பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்”
இருவரின் முகமும் பேரதிர்வை காட்ட, “சும்மாலாம் இத்தனை வருசம் கழிச்சு உண்மையை ஒத்துருக்கமாட்டான், வேற எதோ விசயம் இருக்கு. நாம உஷாராகலைனா இன்னும் பத்து வருசம் என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல”
“என்ன திருனேஷ் சொல்ற?” என்ற செல்லம்மாள் முகம் அப்பட்டமான பயத்தை காண்பிக்க, “நல்லவனை போல வந்து உண்மையை ஒத்துக்கிட்டா அவன் நல்லவனாகிடுவானு நினைக்கிறிங்களா? வாய்ப்பே இல்லை, இதுல எதோ வில்லங்கம் இருக்கு.
இவன்தான் குற்றவாளினு யாருக்கோ தெரிஞ்சிருக்கு. அந்த ஒருத்தர் இவனை பயமுறுத்தியிருக்காங்க, அதனாலதான் மன்னிப்பு கேட்டதோட சேர்த்து பணமும் கொடுத்து நம்மளை காம்பன்ஸேட் பண்ணப் பார்க்குறான்” என உறுதியாக சொன்னவன்,
“ஆனா நமக்கு இந்தளவுக்கு நல்லது பண்ண நினைக்கிற அந்த நல்ல உள்ளம்தான் யாருன்னு தெரியல” என்றான் யோசித்தபடி.
எத்தனை யோசித்தும் யார் என தெரியாமல் போக, தங்கையிடம் பொன்மணி வருந்தி பேசினதும், தன்னிடம் அவளை சபிக்க வேண்டிக் கொண்டதையும் நினைத்தவன் ‘அந்த பொன்மணியைப் பார்த்தா இவனை பயமுறுத்துற அளவுக்கு தைரியமானவள் மாதிரி தெரியல, ஆனா வேற யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டு அவனை ஆட்டி வைக்க நினைப்பாளோ என பொன்மணி மீது லேசான சந்தேகம் வந்தது.
“என்ன யோசனை திருனேசு?”
“ஒன்னுமில்லைம்மா, அப்பாக்கு மாத்திரை கொடுத்துட்டு படுங்க, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்று அறைக்குள் செல்ல முற்பட்டவன், “என் லேப்டாப்லாம் எங்கம்மா இருக்கு?” என்றான்.
“அதெல்லாம் நீ வச்ச இடத்துலயேதான் இருக்கு, நீ ஏன் இப்போ உள்ள போற? எனக்கு உன்கிட்ட பேசனும்டா” என்றார் ஏக்கமாக.
“என்னம்மா பேசனும்?”
மற்றவள் பேச்சை கேட்டு பெற்ற மகனை தவறாக நினைத்துவிட்டோமே என்று உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார் செல்லம்மாள்.
மகனிடம் மன்னிப்பு கேட்க மனம் தவியாய் தவிக்கிறது. ஆனால் இதைப்பற்றி பேசினால் வீட்டை விட்டு வெளியேறிடுவானோ என்ற பயம் இருக்க, செய்வதறியாது இருந்தார்.
ஆனால் வில்வராஜிற்கு தாள முடியவில்லை. மகன் பேசுகிறான், ஆனால் அதில் பழைய இயல்பில்லை. உண்கிறான், ஆனால் இத்தனை வருடம் கழித்து அன்னையின் சமையலை உண்கிறோமே என்ற பூரிப்பில்லை.
பூரிப்பில்லை என்றபோதும், பிடித்த அசைவ உணவையும், தட்டில் என்ன இருக்கிறது என்று கூட அறியாதவன் போல உண்டுவிட்டு எழுந்துவிட்டான்.
பெற்றோரோடு பல வருடம் கழித்து இணைந்திருக்கிறோம் என்ற மகிழ்வில்லை, மாறாக எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக வேறு வழியில்லாமல் தங்களோடு இருப்பதை சகித்துக்கொண்டிருக்கிறான்.
சகித்துக்கொண்டிருக்கிறான் என்பதை விட முள்மீது இருப்பதுபோல் இருக்கிறான் என்பதே பொருத்தமாயிருக்கும் என்று மகனை கணித்து, வேதனையோடு மெல்ல எழுந்து மகனிடம் வந்தார் வில்வராஜ்.
தந்தையின் முகம் மன்னிப்பு கோரும் பாவனையை காட்ட, “அப்பா ப்ளீஸ்… ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க” என கட்டளைபோல சொல்லி, “எதோ பேசனும்னிங்க? என்னனு சொல்லுங்கம்மா, எனக்கு வேலையிருக்கு” என்றான்.
சாப்பிடும் முன்னே யாரிடமோ புதிய தொழில் ஆரம்பிப்பதுபோல் பேசிக்கொண்டிருந்தது புரிந்ததுதான். தப்பு செய்யவில்லை என்றபோதும் சிறை தண்டனை அனுபவித்தவனுக்கு வெளியில் வேலை கிடைப்பது அத்தனை சுலபமில்லை என்பதும் புரிந்தது.
ஆனாலும் மகனின் கொடுமையான சிறை வாழ்க்கையை தனது அன்பால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வைக்க வேண்டும் என்ற தவிப்பிருக்க, “தொழில்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், முதல்ல நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்தனும், குறைஞ்சது ஒரு வருசத்துக்காவது எங்களோட இரு” என்றார்.
“அப்படிலாம் இருக்க முடியாதும்மா, நாம நினைச்ச நேரம் தொழில் அமையாது, வாய்ப்பு கிடைக்கும்போதே தக்க வச்சிக்கனும், நாளைக்கு சென்னை போயே ஆகனும்” என்று அறைக்குள் செல்ல திரும்ப,
“திருனேசு” என்றார் கரகரப்பான குரலில்.
தந்தையின் குரலுக்கு நின்றானே தவிர, திரும்பவில்லை.
“யார் என்ன சொல்லியிருந்தாலும் நீ தப்பு செய்திருக்கமாட்டனு நாங்க நம்பியிருக்கனும். தப்பு பண்ணிட்டோம், பெரிய தப்பு பண்ணிட்டோம். அதுக்காக எங்ககிட்டயிருந்து ரொம்ப விலகாதடா, உனக்கும் எங்களுக்கும் இப்போ இருக்க தூரத்தையே எங்களால கடக்க முடியல” என்றார் உடைந்த குரலில்.
விலகாதே என்று எத்தனை சுலபமாக சொல்லிவிட்டார். விலகியிருந்தால்தான் இவர்களை பொறுக்கும் திறனை பெற முடியும் என்பதை எப்படி சொல்வேன்? உடன் இருந்தால் என்றேனும் ஓர்நாளாவது வார்த்தையால் காயப்படுத்தி விடுவேனோ என்ற எண்ணம்தான் மனம் முழுவதும் இருக்கிறது என்று எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது?
பொன்மணி சொன்ன பொய்யால் ஐந்து வருட தண்டனைதான். ஆனால் காவலர்கள் அழைத்து சென்ற பின்னே, நீதி மன்றத்தில் வைத்து தந்தை பார்த்த பார்வையும், சிறையில் தன்னை பார்க்க வந்தபோது இதற்காகவா உன்னை பெற்றேன் என்பதாக அன்னை பார்த்த பார்வையும் அன்றே தன்னை வதைத்துவிட்டதே.
இனி இவர்களுள் எப்படி துளிர்ப்பது என்பதை நானே அறியாத போது, தந்தைக்கு எப்படி நம்பிக்கை கொடுப்பது?
அவள் சொன்ன பொய்யால்தான் தனக்கிந்த அவப்பெயர் என்றபோதும், விபரம் வந்த பிறகு தனது பெற்றோர் தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறாள். அதனால்தான் தங்கையிடம் தன்னை தவறாக நினைக்க வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறாள்.
பொய்யுரைத்தவள் என்று சாடுவார்கள் என்று தெரிந்தே தங்கையிடம் பேசியிருக்கிறாள். அவள் சொன்னதால்தான் தன்னை புரிந்திருக்கிறார்கள் இவர்கள். இல்லையேல் உயிருள்ள வரை என்னை தவறாகத்தான் நினைத்திருப்பார்கள்.
பெற்றோரின் சுபாவத்தில் தன்போல் மனம் இறுக, கல்போல் நின்றிருந்தான் திருனேஷ்வரன்.
“வெண்பாகிட்ட மன்னிப்பு கேட்டதை வச்சு அந்த பிள்ளை மேல இவ்வளோ கரிசனம் காட்டுற” என்றார் செல்லம்மாள்.
“அது மட்டும் காரணமில்லம்மா, அவளை ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன். என் முன்னாடி அவ நின்னப்போ, அவ உயிர் என்னைச் சுத்தியிருகிறதை போல எனக்கு தோணுச்சு. அந்த பார்வை பொய்யில்ல. அவ குற்றவுணர்வு பொய்யில்ல. நாம அவளை மறந்தாலும் அவ என்னை மறக்கமாட்டா போல. இப்போனு இல்ல… அவ உடம்புல உயிர் இருக்கும் வரை” என்றான் உள்ளார்ந்து.
error: Content is protected !!