Skip to content
Post Views: 7,461
அத்தியாயம் 7
அறியாத வயதில் யாருக்கோ பயந்து பொய்யுரைத்திருக்கிறாள் என்று திருனேஷ்வரன் அறிவான். ஆனால் இத்தனை வருடம் கழித்து விபரம் அறிந்த பின்னே தேவையில்லாமல் பழையதை நினைக்கிறாள்.
இதனால் தனது குடும்பத்தின் கோபத்தையும், உண்மை குற்றவாளியின் தாக்குதலையும் அல்லவா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? எது நடப்பினும் நடந்ததை மாற்ற முடியாது என்று தற்போது புரியும்தானே இவளுக்கு என்று கோபம் வந்தது திருனேஷ்வரனுக்கு.
Advertisement
கோபமாக பொன்மணியை எதிர் கொண்டவனுக்கு பொன்மணி தன்னை பார்த்திருந்த விதம் சற்று அசைத்தது. “எதுக்கு இப்படி பார்க்குற? இப்படி வா” என்று முன்னே நடந்தான்.
வளாகத்தின் கடைசியில் இருக்கும் ஓய்வறைக்கு செல்ல, பின்னோடே பொன்மணியும் வந்தாள். “இங்க எதுக்கு வந்த?” என்றான் கோபம் இல்லாமல்.
“நான்… நான்… உங்கப்பாவை பார்க்க வந்தேன், என்னாலதான் இப்படி ஆகிடுச்சு, நீங்க விடுதலை ஆன பின்னயும் வீட்டுக்கு வரலைனு சொன்னாங்க” என புலம்புவது போல பேச, கை நீட்டி அவளின் பேச்சை நிறுத்தியவன், “உன்னைப் பார்த்தா இன்னும் கோபப்படுவாங்க, இனி இப்படிலாம் வரக்கூடாது. உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, புரியுதா? கிளம்பு” என்றான் தன்மையாகவே.
Advertisement
“என்னாலதான் எல்லாம்”
Advertisement
“ஆமாம், உன்னாலதான், அதுக்கு என்ன பண்ணப்போற?”
“என்ன பண்ணப்போறேன்? ஒன்னும் பண்ண முடியாது” என மீண்டும் புலம்பியவள், “என்னை திட்டினாலும் பரவாயில்லை, எனக்கு அவரை பார்க்கனும், நல்லாயிருக்காரானு தெரிஞ்சுக்கனும்” என்றாள்.
“அவர் நல்லாயிருக்கார்”
Advertisement
“நீங்க தப்பானவர் இல்லைனு உங்கப்பாம்மா புரிஞ்சிக்கிட்டாங்களா?” என்றாள் ஆர்வமாக.
இனி தன்னைப் பற்றிய குற்றவுணர்வு இவளிற்கு வேண்டாம், இன்றோடு இதனை முடித்துவிட வேண்டுமென, “ம் புரிஞ்சிக்கிட்டாங்க” என்றான்.
வேற என்ன பேசவென்று புரியவில்லை பொன்மணிக்கு, மன்னிப்பு கேட்கவெல்லாம் நினைக்கவில்லை, ஆனால் திருனேஷ்வரனின் காலைப் பிடித்துக்கொண்டு கதறியழ வேண்டும் போல் இருக்க, மிகுந்த சிரமப்பட்டு அழுகையை உள்ளடக்கினாள்.
இவள் கிளம்புவாள் என திருனேஷ்வரன் பார்த்திருக்க, பொன்மணியோ அந்த எண்ணமில்லாமல் அவனையே பார்த்திருந்தாள்.
“கிளம்பு” என்றான் அதட்டலாக.
பொன்மணி நின்றேயிருக்க, “மன்னிப்பு கேட்கனுமா?” என்றான்.
இல்லை என்பதாய் தலையசைத்தவள், “மன்னிப்பு கேட்டா சரியாகுற விசயமில்லையே, நான் மன்னிப்பு கேட்கமாட்டேன், என்னை திட்டுங்க, அடிங்க, நான் நல்லா இருக்கக் கூடாதுனு சாபம் கொடுங்க” என்றவளுக்கு கரகரவென இறங்கியது கண்ணீர்.
“ஹேய்” என இரண்டடி முன்னே வந்தவன், “நீ வேணும்னு எந்த தப்பும் செய்யல, அப்போ நீ ரொம்ப சின்னப்பொண்ணு, ஆனாலும் இப்போ அனலைஸ் பண்ணிட்டல்ல? அதுக்கே உன்னை அப்ரிஸியேட் பண்ணனும்” என்றான்.
பெற்றவர்கள் ஐந்து வருடங்களாக தேற்றியே தன்னை தேற்றிக்கொள்ள முடியவில்லை. தன்னால் பாதிக்கப்பட்டவன் சொல்லியா தேற்றிக்கொள்ள முடியும்? திருனேஷ்வரனின் பேச்சு இன்னும்தான் வலித்தது பொன்மணிக்கு.
பொன்மணி முகத்தில் வலியைப் பார்த்தவனுக்கு, இவளை தேற்றினால் தேறமாட்டாள் என்று புரிய, “இங்க பாரு, நடந்து முடிஞ்ச விசயத்தை சரி பண்ண நினைச்சு என் தங்கைகிட்ட பேசுறது, என் அப்பாவை பார்க்க வரதுனு இனிமே எதாவது கிறுக்குத்தனம் செய்தனு வை… கொன்னுடுவேன்” என்றான் கோபத்தோடு.
ஏதும் சொல்லாமல் நின்றிருந்தவளிடம் “கிளம்பு… இனி என் கண்லயே படக்கூடாது” என்றான் கட்டளையாக.
பெரும் தோல்வியடைந்த முகத்தோடு பொன்மணி திரும்ப, “என் கண்ல மட்டுமில்ல, என் அப்பாம்மா, தங்கை கண்லயும்தான்” என்றான்.
சரி என்பதாய் தலையசைத்து பொன்மணி கிளம்பிட, ம்… இந்த காலத்துலயும் இப்படி பொண்ணு. குற்றவுணர்ச்சி தாங்க முடியாம என்ன ஆனாலும் பரவாயில்லைனு அப்பாவை பார்க்க வந்துருக்கா என நினைத்தபோதும், ஆனாலும் இது முட்டாள்தனம் இல்லையா என நினைத்தபடி தந்தை அறைக்குள் சென்றான்.
ஒருமணி நேரம் கழித்து வந்த மருத்துவர், பொதுவான அறிவுரைகளை வழங்கி வில்வராஜை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவே, மருத்துவமணையிலிருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்.
ரூபலஷ்மியிடமிருந்து அழைப்பு வரவே, ஏற்காமல் மொபைலை சைலண்ட்டில் போட்டான். மீண்டும் மீண்டும் அழைப்பு வர, “யாருப்பா அது? ரூபலஷ்மி மேடம்னு வருது, அட்டன் பண்ண மாட்டேங்குற?” என்றார் செல்லம்மாள்.
“அப்புறம் பேசிக்கிறேன்ம்மா” என்க, மீண்டும் அழைப்பு வந்தது.
தற்போதும் திருனேஷ்வரன் அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் மகனின் முகத்தில் தெரிந்த கோபம், எதோ வேண்டாதவர் போல தோன்ற, “போலீஸா திருனேசு?” என்றார் பதட்டமாக.
“ஆமாம்மா”
“இன்னும் எதுக்கு கால் பண்றாங்க? எதாவது பிரச்சனையா?”
“பிரச்சனைதான், ஆனா நான் பார்த்துக்குவேன், நீங்க நம்ம திங்க்ஸெல்லாம் பேக் பண்ணுங்க” என்று, “அப்பா வேற டிரஸ் போட்டுக்கிறிங்களா?” என்றான்.
“வேணாம்ப்பா, வீட்டுக்கு போய் குளிச்சிட்டு மாத்திக்கிறேன்” என்றவருக்கும் மகனின் முகவாட்டம், மகன் சிறையிலிருந்து வெளி வந்தும் பிரச்சனை ஓயவில்லையா என்று பயத்தை உண்டாக்கியது.
மாலை ஐந்து மணிபோல் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டிற்கு வந்து ஒருமணி நேரம் ஆகிறது, ஆனால் மகனிடம் ஏதும் பேச முடியவில்லை பெற்றோருக்கு. மாடிக்கு சென்றவன் எதேதோ யோசனையில் வானத்தை வெறித்து பார்த்திருந்தான்.
“திருனேசு” என்றபடி செல்லம்மாள் மேலே வர, “என்னம்மா?” என்றான் சிறு கோபத்தோடு.
“டீ குடிக்க வாடா”
“வேணாம்மா, அப்பாக்கு கொடுங்க, எனக்கு ஒருத்தர்கிட்ட பேசனும், பேசி முடிச்சதும் நானே வரேன்” என்றான்.
மகனின் பேச்சு இனி என்னை தேடி மாடிக்கு வரவேண்டாம் என்பதாய் இருக்க, வாடிய முகத்தோடு கீழிறங்கினார்.
மனைவியின் முகத்தை பார்த்ததும், “என்ன செல்லம்? டீ வேணாம்னுட்டானா?” என்றார்.
ஆமாம் என்பதாய் தலையைசைத்தவர், “டீயை மட்டும் அவன் வேணாம்னு சொல்லலைங்க, அவன் விசயத்துலயும் நாம தலையிடக்கூடாதுனு நினைக்கிறான்” என்றார் கமறிய குரலோடு.
“நிறைய வேதனைகளை அனுபவிச்சிருக்கான், கொஞ்சம் கொஞ்சமாத்தான் சரியாகுவான், நாம கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கனும் செல்லம்”
“அவன் வேதனையை குறைக்கத்தான் நினைக்கிறேன், ஆனா அதுக்கு வாய்ப்பே கொடுக்கமாட்டேங்குறான். நம்மகிட்ட இரண்டு நிமிஷம் சேர்ந்தாப்பில பேசமாட்டேங்குறான்.
அஞ்சு வருசம் கழிச்சி வந்திருக்கான். எப்படிபட்ட கொடுமையான விசயங்கள் நடந்துருக்கு, பெத்தவளுக்கு பேச எத்தனையிருக்கும்னு தெரிய வேணாமா?” என்றார் ஆற்றாமையோடு.
“நைட் பேசலாம், இப்போ போய் அவனுக்கு எதாவது சமையல் செய்”
“இன்னைக்கு செவ்வாய்க் கிழமைங்க, எப்படி கறி செய்யுறது?”
“இத்தனை வருசம் நாள் கிழமைனு பார்த்து என்னத்தை சாதிச்சோம்? போய் வாங்கிட்டு வந்து செய் செல்லம், பையன் உன் கையால சாப்பிட்டு எத்தனை வருசமாச்சு?” என்றார்.
செல்லம்மாள் அசைவம் வாங்கி வந்து செய்து முடித்தபோதுதான் திருனேஷ்வரன் கீழே வந்தான். “கை கழுவிட்டு சாப்பிட வா திருனேஷ்” என்றார்.
“எனக்கு பசியில்லம்மா, நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்”
“நான் இன்னைக்கு கறி சாப்பிடமாட்டேன், உன் அப்பாக்கும் இன்னும் ஒரு மாசத்துக்கு நான்வெஜ் கொடுக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க, செய்ததே உனக்காகத்தான். கை கழுவிட்டு வா” என்றார் கட்டளை போல.
“மணி ஏழுதான் ஆகுது, எனக்கு பசிக்கும்போது சாப்பிட்டுக்கிறேன்ம்மா” என்றவனுக்கு அன்னையின் ஓய்ந்த தோற்றத்தில் பரிதாபமாகிட, “எனக்காக சிரமம் எடுக்காதம்மா, அப்பாக்கு என்ன கொடுக்கனுமோ அதையே சாப்பிட்டுக்கிறேன்” என்றான்.
கோபம் தலைக்கேறியது செல்லம்மாவிற்கு. “உனக்காக நான் சிரமம் எடுக்காம வேற யார்டா எடுப்பா? மொத்தமா எங்களை தலைமுழுக நினைச்சிட்டிருக்கியா?” என சற்று உரக்கவே கேட்டார் ஆற்றாமையோடு.
“இரண்டு நாளா ஹாஸ்பிட்டல்ல இருந்திங்களே, நல்ல தூக்கம், சாப்பாடு இல்லாம டையர்டா இருக்கிங்களேனுதான் சொன்னேன், நீங்களா ஒன்னு நினைச்சிக்கிட்டு தேவையில்லாம ப்ரஸரை ஏத்திக்காதிங்க” என்றான் பொறுமையாக.
தனது கோபம் திருனேஷ்வரனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதாகத்தான் தோன்றியது செல்லம்மாவிற்கு.
ராஜ்குமாரிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்றபடி திருனேஷ்வரன் அறைக்குள் செல்ல முயல, மகனுக்கு முன்னே போய் நின்றவர், “இங்கையே பேசு” என்றார்.
“ம்ப்ச் ம்மா” என முறைத்தபடி அறைக்குள் செல்ல, மகனின் முறைப்பிற்கு பயப்படாமல் பின்னோடே செல்லம்மாவும் சென்றார்.
“எப்போ வருவ?” என்றான் ராஜ்குமார்.
ஒருமையில் பேசியதால் திருனேஷ்வரன் இணைப்பை துண்டிக்க, தான் அருகில் இருப்பதால்தான் மகன் இணைப்பை துண்டித்திருக்கிறான் என்று ஆற்றாமையோடு வெளியேறினார்.
மீண்டும் அழைப்பு வரவே, அதற்கு மேல் விலக முடியவில்லை செல்லமாவால். அறை வாயிலிலேயே நின்றிருந்தார்.
திருனேஷ்வரனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, நான்கைந்து முறை துண்டித்துக்கொண்டே இருந்தான்.
‘ப்ளீஸ் பிக்கப் மை கால், இட்ஸ் அர்ஜன்ட்’ என்று செய்தி வர, அப்பொழுதும் அழைப்பை ஏற்கவில்லை திருனேஷ்வரன்.
ராஜ்குமார் தனது மாமனாரிடம் சொல்லி திருனேஷ்வரனுக்கு அழைக்க சொல்ல, “நீ எதாவது ஏடாகுடமா செய்திருப்ப, அதான் அட்டன் பண்ணல, அவன் ரொம்ப தன்மானம் பார்ப்பான்னு நான் முன்னவே சொல்லியிருக்கேன்தான?” என மருமகனைக் கடிந்து திருனேஷ்வரனுக்கு அழைத்தார் சுந்தரம்.
அழைப்பை ஏற்றதும், “திருனேஷ் எங்க இருக்க?” என்றார்.
“சேலம் சார், என் வீட்டுக்கு வந்திருக்கேன்”
“காட்… இப்படியா இன்ஃபார்ம் பண்ணாம போவ?” என கடிய,
“நெக்ஸ்ட் வீக்லயிருந்து ஆரம்பிக்கலாம்னு காலைலயே உங்களுக்கு கால் பண்ணி சொல்லிட்டேனே சார், எனக்கு கமிட்மண்ட்ஸ் இருக்கிறதாலதான் அப்படி சொன்னேன், நான் சேலம் வர உங்களுக்கு எதுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்?” என்றான் இவனும் கடுப்பாக.
“எவ்வளோ திமிறா பேசுறான்” என்று ராஜ்குமார் பேசுவது திருனேஷ்வரனுக்கும் கேட்க, “எனக்கும் உங்க மருமகனுக்கும் ஒத்து போகாதுங்க சார், நீங்க வேற ஆள் பார்த்துக்கோங்க” என்று இணைப்பை துண்டித்தான்.
சுந்தரத்திடமிருந்து உடனே மீண்டும் அழைப்பு வர, “சார், அஞ்சு வருசம் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்கேன், நிம்மதியா இருக்க விடமாட்டிங்களா? திரும்ப கால் பண்ணுனிங்கனா டைவர்ட் பண்ணிவிட்டுருவேன்” என்றான் மிரட்டலாக.
“அப்படி பண்ணிடாத திருனேஷ், முக்கியமான விசயம் பேசனும், முதல்ல நீ கிளம்பி சென்னை வா” என்றார்.
“போன்லயே சொல்லுங்க சார்”
“ஜெர்மன் ப்ராஜக்ட் ஒன்னு கைக்கு வருது, நாளைக்கு நைட் மீட்டிங் அட்டன் பண்ணனும்” என்றார்.
சில நொடி யோசித்தவன், “லீகலா அக்ரிமண்ட் போடாம எப்படிங்க சார் ஜெர்மன் ப்ராஜக்ட்கு மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணுனிங்க?” என்றான்.
“இது சும்மா ட்ரை பண்ணினேன், நம்ம லக் கிடைச்சிடுச்சு, மீட்டிங் அட்டன் பண்ணிடலாம், நீ சென்னை வந்ததும் லீகலா ஷேர்ஸ் போட்டுக்கலாம்” என்றார்.
அப்படி சும்மா ட்ரை பண்ணியெல்லாம் ஜெர்மன் ப்ராஜக்ட்டை கையகப்படுத்த முடியாது, பல நாள் திட்டமிட்டு, ப்ராஜக்ட்டை வசப்படுத்தியிருப்பார் என்று அறிவான் திருனேஷ்வரன்.
இத்தனை பெரிய வேலையை சுலபமாக செய்பவருக்கு தன்னை ஏமாற்றுவது பெரிய விசயமேயில்லை என்றுணர்ந்து, “நோ சார், பேப்பர்ஸ் ரெடியாகாம நான் மீட்டிங் அட்டன் பண்ணமாட்டேன்” என்றான் உறுதியாக.
திருனேஷ்வரன் தமிழோடு சேர்த்து ஜெர்மன், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திறம்பட பேசும் வல்லமையுடையவன், இவனை விட்டால் நமக்கு வேறு வழியில்லை ஆதலால், “சரி டாக்குமண்ட்ஸ் ரெடி பண்ணிடறேன், உடனே சென்னை கிளம்பி வா, ஃப்ளைட்ல வந்திடு” என்றார்.
“இன்னைக்கு கண்டிப்பா வர முடியாதுங்க சார், என் அப்பாவை இன்னைக்குத்தான் டிஸ்சார்ஜ் செய்திருக்கோம், அங்க வந்தாலும் ஆன்லைன் மீட்டிங்தான அட்டன் பண்ணப்போறேன்?
நீங்க பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு சேலம் வாங்க, நாம இங்கயிருந்து மீட்டிங் அட்டன் பண்ணிக்கலாம், உங்களுக்கு இங்க வரது கஷ்டம்னா இரண்டு நாள் கழிச்சு மீட்டிங் வச்சுக்கலாம்” என்றான்.
“என்ன திருனேஷ்? என்மேல நம்பிக்கை இல்லையா?”
“உங்கமேல மட்டும் இல்லைங்க சார், உலகத்துல யாரையுமே என்னால அவ்வளவு சீக்கிரம் நம்ப முடியாது. அனுபவிச்ச வேதனைகள் அப்படி. என்னோட திறமைக்கான பணம் எனக்கு வந்தாகனும், இதுல நீங்க எப்படி பேசினாலும் காம்பரமைஸ் ஆகமாட்டேன்” என்றான்.
சுந்தரத்திடம் ராஜ்குமார் எதோ கிசுகிசுக்க, “பேப்பர்ஸ் ரெடியானதும் கால் பண்ணுங்க சார்” என்று இணைப்பை துண்டித்தான்.
இவர்களிடம் பேசி முடிப்பதற்குள் ரூபலஷ்மியிடமிருந்து அத்தனை அழைப்புகள் வந்திருக்க, அவருக்கு அழைத்தான்.
error: Content is protected !!