Skip to content
Post Views: 1,288
நிழல் கரம் பத்திரிகையின் அட்டை பக்கத்தில் கண்ணனின் புகைப்படத்தோடு…
ஆள் மாறாட்ட வழக்கு…
Advertisement
போலீஸின் தில்லு முல்லு!!!!
என்ற வாசகத்தோடு கண்ணன் மீதான தொடர் குற்றங்கள் எழுதப்பட்டதோடு ராபர்ட் தன் மனைவியிடம் இன்னும் ஒரு வாரத்தில் சென்னை வந்து உன்னை பார்ப்பதாக பேசிய ஆடியோவும் வைரலாக பரவ ஆரம்பித்திருந்தது.
Advertisement
Advertisement
கமிஷனரின் முன் நின்றிருந்த கண்ணனை , “என்ன மிஸ்டர் ஆழிக் கண்ணன். இங்க நடக்கறதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நிக்கிறீங்க. மீடியோக்காரங்க என்னென்ன கேள்வி கேட்கிறாங்கன்னு பாருங்கள். ஆறு மாசமா ஒரு ரவுடியை பிடிக்க முடியாம இருந்துட்டு இப்போ திடீர்னு அவன் செத்துப் போயிட்டான்னு சொல்றீங்க. என்ன இதெல்லாம்..?”
“சார்…! ராபர்ட் கேஸ் அ விசாரிச்சுட்டு தான் இருந்தோம். அதுக்கு நடுவுல தான் இந்த டெட் பாடி ராபர்ட் னு உறுதியாகி இருக்கு. இனிமேதான் இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்கணும். “
Advertisement
“இனிமேதான் நடவடிக்கை எடுக்கணும்’னா என்ன அர்த்தம் ஆழிக் கண்ணன். இறந்தது அவன் இல்லன்னு அவன் பொண்டாட்டியே சொல்றாங்க. அதுமட்டுமில்லாம அவன் பேசின ஆடியோ தான் இப்போ வைரல் தெரியுமா தெரியாதா!.”
“எனக்கும் இதே குழப்பம் தான் சார். ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் ராபர்ட் தான் னு உறுதியாகி இருக்கு.”
“இங்க பாருங்க ஆழிக் கண்ணன்.. உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதே நேரம்… உண்மையை நிரூபிக்காம மீடியா வாய மூட முடியாது. உடனடியா பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க. இன்னும் பத்து நாள்ல ராபர்ட் பத்தின கேஸ் முடிக்கணும். அவன் பொண்டாட்டி ஒரு பக்கம் அது என் புருஷன் இல்ல நான் பாடிய வாங்கமாட்டன்னு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க.. சீக்கிரமா முடிக்கப் பாருங்கள்.” என்ற கமிஷனருக்கு சம்மதமாக தலையை ஆட்டிவிட்டு பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தான் கண்ணன்.
கணவனின் உடலை வாங்க மறுத்த ராபர்ட்டின் மனைவி… நேற்று இரவு முதல் மருத்துவமனை வாசலிலேயே போராட்டம் நடத்த ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி சரிந்தார். அவருக்கு முதலுதவி அளிக்க தனி வார்டில் சேர்க்கப்பட்டிருக்க,
மருத்துவமனையில் வேலை பார்க்கும் துப்புறவு பணியாளர் போல் வந்த ஒருவன் ராபர்ட் மனைவி அனுமதித்திருக்கும் அறைக்குள் நுழைந்து …. , தூங்கிக் கொண்டிருக்கும் அவரை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்க, அந்த நேரம் ராபர்ட்டின் மகன் உள்ளே வந்தான். வந்தவன் அவனைக் கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட…
“தம்பி!! நான் உங்க அப்பா ராபர்ட் அனுப்புன ஆள் தான். உங்க அம்மா கிட்ட ஒரு தகவல் சொல்லச் சொல்லி அனுப்பினாரு. உங்க அம்மாவை எழுப்பி விடு.” என்று கூற சிறிது நேரத்திலேயே ராபர்ட்டின் மனைவியும் எழுந்து கொண்டார்.
ராபர்ட்டின் மனைவியிடம் தன்னுடைய தொலைபேசியை கொடுத்தவன்.. “உங்க புருஷன் தான் லைன்ல இருக்காரு பேசுங்க.” என்றதும் தான் தாமதம்… அவரோ தன் கணவனிடம் அழுது புலம்ப ஆரம்பித்தார்.
சிறிதுநேரம் அதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் ….”இங்க பாரு அஞ்சல அழுறதை முதல்ல நிறுத்து. என்னால ரொம்ப நேரம் உன்கிட்ட பேசிட்டு இருக்க முடியாது. நான் சாகல உயிரோடதான் இருக்கேன் போதுமா. போலீஸ்காரங்க தான் தேவை இல்லாம என்ன கொன்னுட்டதா கேச முடிக்க பார்க்கிறாங்க. ஆனாலும் இது நமக்கு நல்லது தான். அவங்க பார்வைக்கு நான் செத்ததாவே இருக்கட்டும். அப்போதான் என்னால நிம்மதியா வாழ முடியும். இல்ல’ன்னா அரெஸ்ட் பண்ணி வாழ்க்கை முழுக்க ஜெயில்ல இருக்க வைச்சிடுவாங்க. இப்போ செத்தது நான் இல்லைன்னு சொன்னா… நான் எங்க இருக்கன்னு தேட ஆரம்பிப்பாங்க அஞ்சல. இத்தனை நாள் நான் எங்க இருக்கேன்னு அவங்களுக்கு தெரியாது… ஆனா இந்நேரம் உன்னோட போன் நம்பர் ல இருந்து நான் பேசின ஆதாரத்தை எடுத்து இருப்பாங்க. இப்படியே போனா பிரச்சனை அவங்களுக்கு இல்ல நமக்கு தான். நான் தப்பிக்க நல்ல வாய்ப்பு இது… தயவு செஞ்சி அழுது கெடுத்து விட்றாத.” என்றவனின் வார்த்தையில் சற்று தெளிந்த ராபர்ட்டின் மனைவி அஞ்சலை மேரியோ,
“இப்ப நான் என்னங்க பண்ணட்டும்….”
“ஒன்னும் பண்ண வேணாம் அஞ்சல. இறந்தது என் புருஷன்தான்னு சொல்லி டெட்பாடிய வாங்கிக்க. ஏதோ என் புருஷன் மேல இருந்த பாசத்துல நம்ப முடியல… ஆனா இப்போ யோசிச்சுப் பார்த்தா என் புருஷன்தான்னு தோணுது. அதனால நான் என் புருஷன வாங்கிக்க சம்மதிக்கிறேன்னு போலீஸ்காரங்க கிட்ட சொல்லு.”
“என்னங்க நீங்க இப்படி சொல்றீங்க. நீங்க உயிரோட இருக்கும் போது நான் எப்படி இத செய்ய முடியும்.”
“சரி அப்போ பண்ணாத அவங்க என்னை தேடி வந்து பிடித்து ஜெயில போடட்டும்.”என்று கோபமாக ராபர்ட் குரல் ஒலிக்க,
அஞ்சலை மேரி தான், “கோபப்படாதீங்க. இப்போ நீங்க இறந்துட்டதா சொல்லிட்டா… நாளைக்கு உங்கள பாக்குறதுக்கு பிரச்சினை வராதா.”
“அதெல்லாம் வராது அஞ்சலை. கொஞ்ச நாள்ல என்னை முழுசா மறந்துடுவாங்க. அப்புறம் நீயும் நம்ம மகனும் கொல்கத்தாக்கு வந்துடுங்க.”என்று அஞ்சலை மேரியை சமாதானப்படுத்திய ராபர்ட்…. தொலைபேசியை அணைக்க,
துப்புரவுத் தொழிலாளி போல் வேடமிட்டு வந்தவன், “நான் இங்க வந்து பேசுனதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.” என்றுவிட்டு அவனும் அங்கிருந்து சென்றான்.
அதன்பின்… அஞ்சலை அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் தகவலைச் சொல்ல, அவர்களும் கண்ணனிடம் தெரிவித்துவிட்டு உடலை அஞ்சலை மேரியிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னான நடைமுறைகளும் ஒவ்வொன்றாக நடைபெற அஞ்சலையின் இந்த திடீர் மாற்றத்தால் நேற்று முதல் செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த… மொத்த மீடியாவும் அதிர்ந்தது. ஒருபுறம் போலீஸ்காரர்கள் மிரட்டலில் இது நடந்தது என்றும், இறந்தது ராபர்ட் தான் என்றால் அவரைக் கொன்றது யார் என்ற கேள்வியும் அடுத்த கட்டமாக கண்ணனை சுற்ற… காவல் துறையின் சார்பாக அறிக்கை ஒன்று ராபர்ட் இறப்பு சம்பந்தமாக வெளியிட அதன்பின் தான் மீடியாக்கள் சற்று அடங்கியது.
நேற்று முதல் உறக்கமின்றி உணவின்றி தவித்த கண்ணன் கடுங்கோபத்தில் சுற்றிக் கொண்டிருக்க அன்னையின் அழைப்பில் வீட்டுக்கு சென்றான்.
அங்கே ஆரதியை கண்டவன்… எதுவும் பேசாமல் தன் அறைக்கு செல்ல… அவன் கோபம் புரிந்து சமாதானப் படுத்துவதற்காக காத்துக் கொண்டிருந்தால் ஆரதி.
சிறிது நேரத்தில் கீழே வந்த கண்ணனை ஆரதி வழி மறைக்க,
“இங்க பாரு ஆதி ஏற்கனவே நான் செம கோவத்துல இருக்கேன். தயவு செஞ்சு உன் மூஞ்சிய காட்டாத. கோவத்துல ஏதாச்சும் பண்ணிட்ட போறேன். பேசாம ஒரு ரெண்டு நாள் அமைதியா இரு…” என்றவனின் உணர்வை புரிந்து கொள்ளாமல் மீண்டும் அவன் கையை பிடித்து தடுக்க,
அவளிடம் தன் கோபத்தைக் காட்ட விரும்பாத கண்ணன் ஆரதி கையை தட்டிவிட்டு சென்றான்.
இதை கவனித்துக் கொண்டிருந்த மஹாலட்சுமி இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்க அதை கண்டுகொள்ளவில்லை இருவரும்.
“கண்ணா… நான் என்னோட வேலைய தான் பார்த்தேன். இதுல நீ கோபப்பட வேண்டிய அவசியம் என்ன…இருக்கு. உங்க சைடு இருக்க தப்ப சொன்னா உனக்கு கோவம் வருமா?” எனக் கேட்ட ஆரதியின் வார்த்தையில் அடக்கி வைத்திருந்த கோபம்.. கொப்பளிக்க,
“எது தப்பு..! ஆஹான்! சொல்லுடி எது தப்பு…. எத தப்புன்னு சொல்ற. நாங்க பண்ற வேலையை தப்புன்னு சொல்ல நீ யாரு. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நானு.. ஆஹான்! சொல்லுடி…”என்றவன் கோபத்தில் ஆரதியின் கன்னத்தை பற்றி கைத் தடம் பதித்து கொண்டே மீண்டும் , “இறந்தது ராபர்ட் தான்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது அது தப்பா! எங்களுக்கு என்னடி அவசியம் இருக்கு எவனோ ஒருத்தன ராபர்ட் னு சொல்ல. நாங்க தினமும் பாக்குற பத்து பேருல அவனும் ஒரு குற்றவாளி. நீங்க சொல்ற மாதிரி தில்லுமுல்லு பண்ணி… கேச முடிகிற அளவுக்கு நான் அவ்ளோ மட்டமானவனா சொல்லு டி. இப்போ அவன் பொண்டாட்டியே செத்தது என் புருஷன் தான்னு சொல்லிட்டாங்க. அப்போ அவங்க சொல்றது தப்பா . சொல்லுடி தப்பா …..” எனக் கேட்டுக் கொண்டே மீண்டும் அவள் கண்ணத்தை சிதைக்க,
வலி பொறுக்காமல் அவன் கையை தட்டி விட்ட ஆரதி, “சும்மா கத்தாத… நேத்துல இருந்து இல்ல இல்லை’ன்னு சொல்லிட்டு இருந்தவங்க திடீர்னு எப்படி அது என் புருஷன்னு ஒத்துக்கிட்டாங்க. அதிலிருந்தே தெரியல …. நீங்க தான் அவங்களை மிரட்டி இருக்கீங்கன்னு. போலீஸ்காரங்க புத்தி எப்படி’ன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க வேலைய முடிக்க என்ன வேணா பண்ணுவீங்க. ஆறு மாசமா கிடைக்காத ஒருத்தன் இப்ப எப்படி கிடைச்சான். அதுவும் அவன் பொண்டாட்டி கிட்ட ரெண்டு நாள் முன்னாடி பேசி வேற இருக்கான் . செத்துப் போனவன் எப்படி பேச முடியும்? எங்கள மாதிரி ஆளுங்க உங்கள தட்டி கேக்காம இருந்தா… உங்களோட தப்ப இந்த உலகம் திரும்பிப் பார்க்காதே . உண்மைய சொன்னா இவ்வளவு கோபம் வருமா… இந்த கோபத்தை ஆறு மாசமா கேஸ்ல காட்டியிருந்தா நீங்க இறந்ததா சொல்றீங்களே அந்த ராபர்ட் இன்னைக்கு செத்துப் போயிருக்க மாட்டான். செய்யிற வேலைக்கு உண்மையா இல்லாத நீ எல்லாம் எதுக்கு கோபப்படுற கண்ணா “என்று அவளும் கோபத்தில் வார்த்தையை விட,
நேற்றிலிருந்து… சக்கரமாய் ஓடிக் கொண்டிருந்த கண்ணனின் நெஞ்சில் அமிலத்தை ஊற்றுவது போல் இருக்க.. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு… நின்றான்.
அதைக்கண்ட மஹாலட்சுமி ஆரதியிடம் திரும்பி, “ஆதி ம்மா எங்கிருந்து போ. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். கோவத்துல ரெண்டு பேரும் வார்த்தை விட்டுட்டு இருக்கீங்க. போமா அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.
“நான் எதுக்கு போகணும். கேள்வி கேட்டா உடனே துரத்த வேண்டியது. இந்த புத்தி மட்டும் உன்னை விட்டு போகவே போகாதா. அன்னைக்கு கூட அனிதா சம்பந்தமா பேச வரும்போது… அந்த போலீஸ்காரனுக்கு தானே நீ சப்போர்ட் பண்ண. நான் கோபப்பட்டது கூட உன் மேல இருக்க அக்கறை னு சொல்லி என் வாயை அடைச்சிட்ட. அப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு உன்னோட வேலை ல நீ எவ்வளவு உண்மையா இருக்கன்னு. நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு… நீ தில்லுமுல்லு தான் பண்ற…… இன்னும் சொல்லணும்னா நீ பண்ற எல்லாமே தில்லுமுல்லு தான்…….. “
ஆரதியின் வார்த்தையில் சினம் ஏறிய கண்ணன் அவளை ஓங்கி அடிக்க, அந்த நேரம் உள்ளே வந்த சித்து அதைப் பார்த்துவிட்டு கோபத்தில் கண்ணனை அடிக்க…, அண்ணன் தம்பி இருவரும் மாற்றி மாற்றி அடித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். கண்ணன் அடித்ததை நம்பமுடியாமல் ஆரதி கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அதிர்ச்சியில் நிற்க,
மஹாலட்சுமி தான் பிள்ளைகள் இருவரையும் தடுத்துக் கொண்டிருந்தார். அவரின் வார்த்தைக்கு இடமளிக்காமல் இருவரும் சண்டையில் இறங்கிக் கொண்டிருக்க பொறுமை இழந்த மஹாலட்சுமி கோபத்தில் கண்ணனை அடித்திருந்தார்.
சித்துவை பலமுறை அடித்திருக்கிறார் மஹாலட்சுமி. ஆனால் கண்ணனை அடித்ததே இல்லை. சிறு வயதில் இருந்தே அடிக்கும்படி ஒரு முறை கூற அவன் நடந்து கொண்டதும் இல்லை. குடும்பத்தில் மூத்த மகனாய் தன் செயலில் கவனமாய் இருக்கும் கண்ணனை எப்பொழுதும் மஹாலட்சுமி பெருமையாகவே பார்ப்பார். அப்படியிருக்க ஆரதியை அடித்ததையே அவரால் நம்ப முடியாமல் இருக்க.. உடன்பிறப்புகள் இருவரும் அடித்துக் கொண்டிருப்பதை கண்டவர் கோபத்தில் சித்துவை அடிக்க கை ஓங்க அது மாறி கண்ணனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
சித்து ஆரதிக்கே இச்செயல் அதிர்ச்சியாக இருக்க கண்ணனுக்கு சொல்லவா வேண்டும். எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டாமல் தன் தாயையே பார்த்திருந்தான்.
கண்ணன் சித்து இருவரும் சண்டை போடும்போதை வந்துவிட்ட ரதிதேவி ஏதோ பிரச்சனை என்று அமைதியாக வாசலிலேயே நின்றிருந்தாள். அந்நேரம் கண்ணனை மஹாலட்சுமி அடிக்க….., உள்ளே வந்த ரதி தேவி கண்ணனின் அருகில் சென்று கன்னத்தில் வை வைத்தவள் “ரொம்ப வலிக்குதா சார்…” என கேட்டு கொண்டே கன்னத்தை வருட செல்ல ,
அதை உணர்ந்த கண்ணன் முகத்தை பின்னால் இழுத்து கொண்டு “இல்லை” என்ற தலையாட்டலுடன் தன் அறை நோக்கி சென்றான் யாரையும் பார்க்காமல்.
மேலே சென்று பத்து நிமிடத்தில் கீழே இறங்கி வந்த கண்ணன் அங்கிருக்கும் யாரையும் பார்க்காமல் பார்வையை ரதி தேவி மீது வைத்துக் கொண்டு, “நான் ஒரு வேலை விஷயமா கொல்கத்தா வரைக்கும் போறேன். வர ரெண்டு மூணு நாளாகும்.” என்றவன் தன் உடைமை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
நடந்த நிகழ்வில் நிதானத்தைக் கடைப்பிடித்து யோசித்த சித்து அழுது கொண்டிருக்கும் தன் அன்னையிடம் மன்னிப்பை வேண்ட அவரோ கண்ணன் சென்ற திசையைவே பார்த்திருந்தார்.
“அம்மா! சாரி ம்மா… ப்ளீஸ் அழாதீங்க. கண்ணா உங்க மேல நிச்சயமா கோபப்படமாட்டான். நான் அவன் கிட்ட சாரி கேக்குறேன். அழாதீங்க ம்மா .. நான் சொன்னா கேளுங்க ப்ளீஸ்..”
“நான் சொன்னது யாரு கேட்டீங்க இப்போ உன் பேச்சை நான் கேட்க.” என்ற மகாலட்சுமி ஆரதியிடம், “நான் அப்பவே விடுனு சொன்னனா இல்லையா ஆரதி. கோவத்துல வார்த்தையை விடாத ன்னு சொல்லியும் என் பேச்சை நீ கேக்கல. இதோ இங்க நிக்கிறானே பெரிய மனுஷன்.. வந்ததும் என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம அண்ணன்’னு கூட மரியாதை இல்லாம அவனை அடிச்சுட்டான். நீங்க யாரும் என் பேச்சைக் கேட்கல. நேத்து வீட்டை விட்டு போன பையன்… சாப்பிட்டானா இல்லையான்னு கூட தெரியால. அதான் ஒரு வாய் சாப்பிட்டு போபான்னு கூப்பிட்டேன். கடைசில என் பிள்ளை சாப்பிடாமலே போயிட்டான். இப்போ நான் தான் என் மகன கஷ்டப் படுத்திட்டேன். ஒரு வார்த்தை கூட பேசாம போறான். என் மேல ரொம்ப கோவத்துல இருக்கான் போல. திரும்ப வருவானா மாட்டானான்னு கூட தெரியாலை.” என்று மகாலட்சுமி தன் மனதில் இருப்பதை வாய்விட்டுச் சொல்ல,
அத்தையின் பேச்சில் மனம் கசங்க… “சாரி அத்தை என்னால தான் உங்க வீட்டில இந்த பிரச்சனையே… நீங்க சொல்லும் போதே நான் அமைதியா இருந்திருக்கனும். கண்ணனை நான் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன்” என்றவளுக்கு மறுப்பாக தலையசைத்த மகாலட்சுமி ,
“ஒன்னும் வேணாம் ஆரதி. எப்படி போனானோ அப்படியே அவனுக்கு வரவும் தெரியும். நீ சும்மா இருந்தாலே போதும் .” சட்டென கூறியவர் அங்கிருந்து நகரவும் செய்தார்.
ஆதி, ஆதி ம்மா என நினைவு தெரிந்த நாளிலிருந்து ஆரதியை அழைத்துக் கொண்டிருக்கும் மஹாலட்சுமின் ஆரதி என்ற அழைப்பே சொல்லாமல் சொல்லியது அவரின் கோபத்தை.
அம்மு இளையாள்.
error: Content is protected !!