12-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,428
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 12-2
.
விடுப்பிற்கு திருச்சி வந்திறங்கிய ரகு குச்சியாகத் தெரிந்தான் வீட்டினர் கண்களுக்கு. சரியான உணவு, நேரத்திற்குத் தூக்கம் என்ற பழக்கங்கள் எல்லாம் மாறிவிட்டிருக்க, பாட்டிக்கு மனம் ஆறவே இல்லை.
Advertisement
“எப்படி இருந்த பிள்ள… எப்படி வந்து நிக்கிறான். இதுக்கு தான் கூட்டிட்டு போனாங்களா?” எனத் தாத்தாவிடம் அழுது புலம்பினார். பேரன் செல்லும் முன் அவனை ஒரு சுற்று ஏற்றி அனுப்புவது என ஒரு முடிவில் இருந்தார் பாட்டி. அதனால் ரகுவிற்கு பிடித்த உணவு வகைகள், மேசையையும் ரகுவின் மனதையும் நன்றாகவே நிரப்பின.
Advertisement
ரகுவிற்கு சுகமான நாட்கள் அவை. பழைய தோழர்களோடு தெருவில் சைக்கிள் ஓட்டுவதில் ஆரம்பித்து, மதிய வெயிலைப் பொருட்படுத்தாது மட்டையும் பந்துமாக வெட்டவெளி மைதானமே கதி எனக் கிடப்பது, அம்மா கையால் உணவருந்துவது, ஐயாவோடு தெருக் கடைகளை வலம் வருவது என மிக மிக அழகாக நாள்கள் பறந்தன.
Advertisement
இம்முறை ரகு ஊருக்குச் செல்லும் முன் அவனோடு பேச நேரம் பார்த்திருந்தார் சந்திரிகா. அவன் படிப்பிலும், தன் நலத்திலும் அக்கறை கொள்வதே இல்லை எனப் பாட்டி அழுது புலபுவதற்கு, தன்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நேரம் பார்த்திருந்தவருக்கு அந்த நேரமும் கிடைத்தது.
Advertisement
மாடியில் சந்திரிகா கரத்தால் நிலாச் சோறு உண்ண அமர்ந்தனர் பிள்ளைகள் இருவரும்.
“ரகு, வாழ்க்கைல எப்பவும் நாங்க உன்னோடவே வர முடியாது. நாங்கன்னு இல்ல… யாருமே வாழ்க்கையில நிரந்தரம் கிடையாது. ரெண்டு விஷயம் நம்ம கூடவே வரும். ஒண்ணு இந்த உடம்பு. எந்த காரணத்துக்காகவும் பட்டினி இருந்தோ, கண்டத சாப்பிட்டோ உடம்ப கெடுத்துக்க கூடாது. உடம்பு நல்லா இருக்க வரைக்கும் தான் நீ நினைச்சத உன்னால செய்ய முடியும். உலகத்துல இருக்க எந்த வலியும் பெரிசாவே தெரியாது, உடம்பு நோய்வாய் பட்டா! புரியுதா? ஆரோகியம் ரொம்ப ரொம்ப முக்கியம். அதுக்கு மனசு அமைதியா இருக்கணும். ஆரோக்கியமான சாப்பாட சாப்பிடணும். நேரத்துக்கு தூங்கணும்.
அடுத்தது படிப்பு. அது அறிவ மட்டும் இல்ல தன்நம்பிக்கை, தைரியம், நல்லது கெட்டது, சுயமா முடிவெடுக்கிற திறன் இப்படி பலத கொடுக்கும். நல்லா படிச்சா தான் பெருசானதும் நீ ஒருத்தர் கையையும் எதிர்பார்த்து வாழ வேண்டி வராது. படிப்புங்கிறது இன்னுமே பலருக்கு கிடைக்காத பொக்கிஷம். உனக்கு பெரிய ஸ்கூல்ல இடம் கிடைச்சிருக்கு. உனக்கு நல்ல திறமையை வளர்க்க அங்க எல்லா வசதியும் இருக்கு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழை… கத்துக்க முடிஞ்சத எல்லாம் பிழை இல்லாம கத்துக்கோ.
யார் மேலயோ இருக்க வருத்தத்தால உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்காத. புரியுதா? நான் வளர்த்த பிள்ளை நீ. நீ இப்படி செய்யலாமா? நீ நல்லா இருந்தா தானே நானும் ஐயாவும் இங்க நிம்மதியா இருக்க முடியும்? உன்ன, பேபி இப்போ மாதிரியே பாக்கணுமா? இல்ல மக்கு பையன்னு பாக்கணுமா? சொல்லு?
நீ நடந்து வந்த பாதையில தப்பு செஞ்சா… கூனி குறுகாத. அத தாண்டி அத ஒரு படிப்பா எடுத்து முன்ன நட. எப்பவும் தேங்கி போகாத கண்ணா. பழச ஒதுக்கிட்டு, வாழ்க்கைய வாழு.” எனச் சந்திரிகா சின்னவனுக்கு உணவோடு அறிவுரைகளையும் சேர்த்தே ஊட்டினார்.
“எஎ…என் ல்லலகு நல்லா படிப்பான். அஅஅவன ஒண்ணும் சொல்லாதீங்க” என நான்காம் வகுப்பை ஒரு வழியாக முடித்திருந்த குட்டிப் பெண் அவனை இழுத்துச் சென்றாள்.
விடுப்பு முடியும் நாளும் நெருங்க, பிள்ளைகளும் பிரிவுக்கு தங்களை தயார் செய்து கொண்டிருந்தனர். அடுக்கி வைத்திருந்த துணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவன் மேல் பெண்ணிற்கு கோபம் அளவில்லாமல் வந்தது. விட்டுச் செல்லப் போவதாலா? இல்லை அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாது பெட்டியை இரு தினங்கள் முன்பே அடுக்க ஆரம்பித்ததாலா?
ரகுவின் படுக்கை அறை வாசலில் நின்று அவனைப் பார்த்து நின்றிருந்தவளின் பொறுமை கரைந்தது. வந்த அன்றிலிருந்து அவன் கண்களுக்குத் தான் தெரிவதாகவே தெரியவில்லை. அவளும் எவ்வளவு தான் பொறுப்பாளாம்?
உள்ளே சென்ற வேகத்தில் பெட்டியைக் கட்டிலில் இருந்து இழுத்து கீழே போட்டவள், அதே வேகத்தில் வெளியே செல்லவும் அவனுக்கும் சுள்ளென கோபம் தலைக்கேறியது.
இதோ… இந்த வேலையை முடித்துவிட்டால், மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானம் சென்றுவிடலாம். இன்று, அரை இறுதி போட்டி. நாளை இறுதிப் போட்டி. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், கோப்பை கிடைக்கும். கேப்டன், மோகன் அண்ணா அனைவருக்கும் ஒரு குட்டி கோப்பை வாங்கி தருவதாக்க கூறி இருக்கிறார். நேரத்திற்கு மைதானம் சென்று இவன் ஸ்பின் பந்து வீச்சை மெருகேற்ற வேண்டும்.
மோகன் அண்ணா அவர்களது டீமிடம், “சின்ன பையன பாத்து கத்துக்கோங்க டா… என்னமா ஸ்பின் பண்றான்.” என கூறியவன், தன்னிடமும் கூறினானே, “பின்றடா நீ. நல்லா பிராக்டீஸ் பண்ணு. உன் ஸ்பின்னால… விக்கெட்ட குவிக்கலாம்” என்று.
இப்போது இவள் செய்து வைத்திருக்கும் வேலைக்கு… ஆஆ! குப்புற கிடந்த பெட்டியை விட்டவன், வெளியே ஓடி கொண்டிருந்தவளை இழுத்துப் பிடிக்க, அவள் இவனைத் தள்ள… அவன் அவளோடு கீழே விழ, அவன் மேல் அமர்ந்தவள் சரமாரியாக அவனை அடிக்க… அவளைப் புரட்டி போட்டவன் அவளை அடிக்க… தலை முடிகள் சில இவன் கையிலும் அவள் கையிலுமாக மாட்டிக்கொள்ள… குத்துச் சண்டை அங்கு சூடு பிடித்தது.
“பிள்ளைங்களா… திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா? வர வர உங்க ரெண்டு பேரையும்…” எனப் பாட்டி ஓடிவரவும், அவன் கவனம் சிதறியது. கிடைத்த இடைவெளியில் பிடித்திருந்த ரகுவின் கையை நறுக்கென கடித்துவிட்டு ஓடிப் போனாள் பெண்.
அதன் பின் என்ன? கடி வாங்கிய வலது கைக்கு ஊசி போட்டு… மருந்திட்டு… வீட்டில் அமர்த்தப்பட்டான்.
“மட்டைய தூக்கிட்டு வெளில போன… மண்டைல ஒண்ணு வைப்பேன்” எனத் தாத்தா கூறிவிட்டார். அந்தோ… பரிதாபமாகக் கலைந்தது அவன் கோப்பையோடு வருண், நிவேதாவை வெறுப்பேற்றும் கனவு!
“பொம்பள பிள்ளை மேல கைய வைச்சா இதுத்தான் கதின்னு தெரிஞ்சுக்கோ” என எரியும் நெருப்பில் நெய் வார்த்தார் பாட்டி.
“அவ செய்த தப்ப சரின்னு சொல்லாதீங்க மா.” என ஐயா இவனை மடியில் அமர்த்திக் கொண்டார்.
“அவ முடிய புடுங்கி எடுத்திருக்கான். கடிச்சது எல்லாம் போதாது. அவன் கையிலயே ஒண்ணு போடு” எனப் பாட்டி கரண்டியோடு வந்தார்.
“அவ வலியில அழுதத பார்த்தான் தானே… இனி அப்படி அடிக்க மாட்டான்” எனப் பாட்டியிடம் இருந்து ரகுவை அவன் ஐயா காத்தார்.
“இப்படித் தான் பிள்ளைய கடிச்சு வைப்பியா நீ?” இடியென இரு அடிகளை அம்மாவிடம் வாங்கியும் பெண் அசையவில்லை.
“விடு விடு… தெரியாம செஞ்சுட்டா. அவன் கைய அசைக்க முடியாம இருக்கத பார்க்கிறா தானே… இனி இப்படிச் செய்ய மாட்டா” என அப்பா மகளைக் காத்தார்.
அன்றைய தினம் ரகு பூட்டிய அறைக்குள்ளேயே கழிக்க, இவளுக்கு வலித்தது. இதோ… ரகுவின் அப்பாவும் வந்துவிட்டார். நாளை ஒரு நாள் இருப்பான். மறுதினம் மாலை கிளம்பிவிடுவான். அந்த நாளும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
அன்று காலையிலேயே பாட்டியின் வீடு பரபரப்பாக இருந்தது. தோப்பில் இருந்து பழங்கள் வந்து இறங்கின. கொட்டை நீக்கப்பட்ட புளி பார்சல் ஆனது. மாடியில் பல நாள்களாகக் காய்ந்த மாங்கா, எலும்பிச்சை, நார்த்தங்கா, நெல்லி எனப் பலதும் ஊறுகாயாய் புட்டிகளில் அடங்கியிருந்தன. கருவேப்பிலைப் பொடி, முருங்கை இலைப் பொடி, இட்டிலி பொடி எனச் சில பொடி வகைகள் பாட்டில்களை நிரப்பி இருந்தன. வீடு பண்டங்களின் வாசத்தால் நிறைந்தது. கார் கிளம்பும் வரை அவரும் ஓயமாட்டார் தாத்தாவையும் அமர விடமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர் வேலையில் ஒருவரும் தலையிடுவதில்லை.
மெல்ல மெல்ல ரகுவின் அறைக்குள் புகுந்தாள் பெண். அவன் இல்லை. மாடிக்குச் சென்றால் மரத்தடி கட்டிலில் படுத்திருந்தான். கால் மேல் கால் போட்டு அட்டிக் கொண்டிருந்தவன் இவளைக் கண்டதும் எழுந்தமர்ந்தான். அருகே சென்று அமர்ந்து கொண்டாள் சிறுமி.
‘அப்படி கடிச்சுட்டு சாரி கூட கேக்கல’ எனத் தனக்குள் கொதித்துக் கொண்டிருந்த ரகு எழுந்து சுவர் பக்கம் போய் நின்று கொண்டான்.
தயங்கினாலும் அவன் அருகே சென்றாள் பெண். கடித்த காயம் அப்பட்டமாகத் தெரிந்த கையை தொடவும் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, சிறுமிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இரண்டு நாள்கள் ஆகியும் அவள் கடித்த பல் தடம் மாறவே இல்லை. சிவந்த மேனியில் கரும்பச்சையாகத் தெரிந்தது காயம்.
“நீ இப்படி அவன கடிச்சு வைச்சது அவன் அப்பாட்ட சொல்ல போறான். அப்பாக்கு தெரிஞ்சா என்ன செய்வார்ன்னு நினைக்கிற? இனி மேல் இந்தப் பக்கமே அனுப்ப மாட்டார் பார்த்துக்கோ.” என அம்மா கூறியிருக்க, இப்பொழுது அவளுக்குள் பயம் பிடித்துக் கொண்டது.
அவன் வாய் திறந்து சொல்லவே வேண்டாமே… நாய் போல் கடித்து வைத்திருக்கிறாள். கண் இருப்பவருக்குத் தெரியாதா? அது அவள் தான் கடித்தது என ரகுவின் அப்பாவிற்குத் தெரியப் போகிறது! அவள் ரகுவை இனி பார்க்கவே முடியாது எனத் தெளிவாக தெரியவும் கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தது. இல்லை… இல்லை ஏதேனும் செய்து ரகுவை அடுத்த வருடம் வர வைத்தே ஆகவேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.
அவன் வாய்க்கு நேராகக் கையை நீட்டியவள், “க்க்க்கடிச்சுக்கோ ல்ல்லலகு” என எக்கசக்கமாகத் திக்கினாள். அவனுக்கு ஒரு நொடி அவள் என்ன கூறினாள் எனப் புரியவில்லை. திரும்பிப் பார்க்க, கண்ணீர் வழிந்த கண்களை இறுக மூடியிருப்பவளின் கரம் அவன் வாய் அருகே நீண்டிருந்தது. பழிக்குப் பழியாம்.
“போடி அந்தப் பக்கம். இருக்க கடுப்புல கைய கடிச்சு காக்காக்கு துப்பிட போறேன்” எனக் கடுகடுத்தான்.
நடுங்கும் அவள் கையை எடுப்பதாக இல்லை எனவும் கோபத்தை அடக்கியவன், “போடி” என கையை கீழே இறக்கி விடவும், கண்களைத் திறந்தவள், “ச்ச்சசசசாரி ல்ல்லலகு” என்றாள். இப்படி இவள் திக்கித் திணறியதை அவன் கேட்டதே இல்லை. ஏன் அவளுக்கே இது புதிது.
“வ்வ்வ்வலிக்குதா ல்ல்லலகு?” என்றாள் அழுகையோடே.
தன்னை விட மூன்று வயது சிறியவள். வளரவே மாட்டேன் என அடமாய் அவன் தோள் அளவிற்குக் கூட இல்லாதவளை பார்த்தான். குட்டி பிசாசு நீர் வழியத் தன் பெரிய விழிகளால் அவனை உருக்கிக் கொண்டிருந்தாள்.
கண்களைத் துடைத்துவிட்டவன், “பேபி… அழாத. எனக்கு வலிக்கவே இல்ல. அப்போ கொஞ்சம் வலிச்சுது. இப்போ பார் சுத்தமா வலி இல்ல.” என அவளைச் சமாதானம் செய்ய, அவள் அழுகையை நிறுத்துவதாகவே இல்லை.
“இஇஇனி ம்ம்மேல் இங்க வரவே மாட்டியா?” என் மூக்கை உறிந்தாள்.
“இங்க வரமா எங்க போவேன் பேபி? பாட்டி தாத்தா இங்கத் தானே இருக்காங்க. கண்டிப்பா எல்லா லீவுக்கும் வருவேன். உன்ன, அம்மாவ, ஐயாவ பாக்காம எப்படி இருப்பேன் நான்?” என்றான்.
“பிபிராமிஸ்?”
“பிராமிஸ்!” என்றான் நீட்டிய அவள் கைக்குள் அவன் உள்ளங்கையைப் பதித்து.
சமாதானம் ஆனவள், சட்டையைத் தூக்கி பாவடைக்கும் வயிற்றுக்கும் இடையில் இருந்த நோட்டு புத்தகத்தை எடுத்தாள். அவளையே சுவாரசியமாகப் பார்த்து நின்றிருந்தவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“என்ன?” என்றவனை இழுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
புத்தகத்தின் நடுப் பக்கத்தில் நடுநாயகமாக வீற்றிருந்த ஒற்றை மயில் இறகை அவனிடம் நீட்டினாள்.
“முழுசாவா?” என்றவன் கண்கள் விரிந்தன. அவ்வப்போது அவளுக்குப் பிடித்ததை அவன் செய்தாலோ வாங்கி கொடுத்தாலோ தருவாள் தான்… ஆனால் இப்படி இல்லை. இறகு தண்டின் அடியில் இருக்கும் ஒற்றை மயிரை பிய்த்துக் கொடுப்பாள். அத்தோடு நிற்காது, அதை எப்படிப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என வழிமுறைகளைப் பட்டியலிடுவாள். இப்படி முழு இறகை நீட்டியதே இல்லை. நீட்டுவது என்ன… கண்ணில் கூட காட்ட மாட்டாள்.
முகம் கொள்ளா புன்னகையோடே மயில் இறகை நீட்டியவளிடமிருந்து அதை வாங்கினான். ஒற்றை இறகில் எத்தனை நிறங்கள் எனப் பார்த்தான். “இது பீகாக் ஐஸ்” என்றான் இறகைத் தன் முகத்தில் வருடிக் கொண்டே.
“ஐஸ்னா… அப்போ அது பாக்குமா நம்மள?” எனக் கண்கள் விரித்தாள் பெண்.
“ச்ச ச்ச… சும்மா அப்படி சொல்லுவாங்க” என்றவன் அவளைப் பார்க்க, அவள் பார்வை முழுவதும் அவன் ஆட்டிக் கொண்டிருந்த இறகின் மேல் இருந்தது. “ரொம்ப ஆட்டாத ரகு…” என்றாள் தவிப்போடே.
இதை இவள் எவ்வளவு ஆசையோடு அடைகாக்கிறாள் என அவனுக்குத் தெரியாதா? ஆட்டுவதை நிறுத்தினான்.
“ட்டெய்லி பென்சில் சீவி போடு லகு. க்கலர் பென்சில் தூள் போட்டா இன்னும் கலர் ஆகும் தெரியுமா? இதோ பாரு… இது புதுசா மொளச்சிருக்கு. க்க்குட்டி போட்டிருக்காக்கும்” என ஆர்வமாக மயில் இறகைப் பார்த்து விளக்கிக் கொண்டிருந்தாள் சிறுமி.
“யார் கிட்ட இருந்தா அந்த பொருளுக்கு மதிப்போ அங்க தான் அது இருக்கணும். இது உனக்குத் தான் பொக்கிஷம் எனக்கு வெறும் ஃபெதர். சோ… நீயே வச்சுக்கோ” என்றான் பதின்ம வயதுக்குள் அடி எடுத்து வைக்கத் தயாராயிருக்கும் பெரிய மனுஷன்.
அவன் திருப்பிக் கொடுத்ததில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. “இஇத வ்வச்சுக்கோ லகு” என வழக்கம் போல் இறகின் அடியில் தளர்வாய் இருந்த மயிர் ஒன்றைப் பிய்த்து அவனுக்கு கொடுத்தாள். ஆசையோடு வாங்கிக் கொண்டான்.
இம்முறை பிள்ளைகள் கண்கள் கலங்கி நீரை இறைத்தாலும், உருண்டு புரண்டு அழவில்லை. “சீக்கிரம் வந்துடுவேன் பேபி. உனக்கு என்ன வேணுமோ பாட்டிட்ட சொல்லு. பாட்டி ஃபோன் பேசும் போது கேட்டுக்கிறேன். அடுத்து வரும் போது வாங்கிட்டு வரேன் என்ன?” எனச் சின்னவளை சமாதானப் படுத்திச் சென்றான் ரகு.