13-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,762
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 13-2
.
என்றும் போல், மகளைத் தள்ளு வண்டியில் அமர்த்தி அன்றும் விளையாட்டு மைதானம் அழைத்துச் சென்றான். நடைபாதையில் அப்பாவும் மகளும் சுற்றி நடந்தனர். இது கௌதமனுக்கான உடற்பயிற்சி மற்றும் மகளுக்கான பொழுது போக்கு. ஒரு மணி நேரம் நடையில் கடந்தது.
Advertisement
மடியில் அமராது இறங்கி ஓட முற்படும் மகளை அமர்த்தி, மற்ற பிள்ளைகள் விளையாடுவதைக் காட்டினான் தந்தை. அதிகம் பேசினான். மகளுக்கு என்ன புரிந்ததோ… கைகொட்டி சிரித்தாள்.
முதல் இரு வருடங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாதவை எனப் படித்திருந்த கௌதமன், மகளிடம் அதிகம் பேசுவான். வெளியே அழைத்துச் செல்லுவான். மரம், மலர், நிறம், நாய், பூனை, கடல், மணல்… என மகளின் பார்வை வட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்தான்.
முன்பெல்லாம், “இந்த வயசுல அதுக்கு என்ன புரியும்ன்னு நியூஸ் பேப்பர் படிச்சு காட்டுற? ஊர் பூரா சுத்தி காட்டுற?” என வைஷாலி சிரிப்பார்.
Advertisement
“ம்மா குழந்தையோட வளர்ச்சிக்கு முதல் சில வருஷங்க ரொம்ப முக்கியமானது. உடம்பு மட்டும் இல்ல மூளையும் சுறுசுறுப்பா வளர்றது இந்த கால கட்டத்துல தான். அதிகமான எக்ஸ்போஷர் மில்லியன் கணக்குல நியூரல் கனெக்ஷன்ன உருவாக்கும். அது இந்த ஸ்டேஜ்ல மட்டும் தான் உருவாகும்.
Advertisement
இப்படி படிச்சுக் காட்டினா எதிர்காலத்தில புக் மேல ஒரு விருப்பம் வரும்… புக்ஸ்ச அதிகம் விரும்பி படிப்பா” என மகளின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டும் மகனின் விளக்கம் கேட்டபின் வைஷாலி அவன் வளர்ப்பு முறையைக் கண்டு சிரிப்பதில்லை.
மகள் மட்டுமே அவன் உலகமாக மாறி இருக்க, அதில் கௌதமனுக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் தகப்பனாக இருக்க முடிவெடுத்தபின் இப்படியான வாழ்க்கை இருவருக்குமே சரி வராது. மகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக… வழிகாட்டியாக இருக்க வேண்டுமே. என்ன செய்வது என மனம் அதிலேயே உழன்று கொண்டிருக்க, அருகே அமர்ந்த உருவத்தைக் கவனித்தான் இல்லை.
கன்னங்கள் தொங்க, கண்களை உருட்டி, எட்டிப் பார்க்க ஆரம்பித்த குட்டி பற்களை காட்டி சிரிக்கும் யாழினியாளை ஒரு முறைக்கு மேல் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியுமா… இல்லை கொஞ்சாமல் நகரத் தான் முடியுமா? “ஹாய் குட்டீஸ்” என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் கௌதமன்.
Advertisement
“ஹாய் கௌதம்” என்றாள் தாக்ஷாயினி, கௌதமனின் முகம் பார்த்து.
“ஹேய் தாக்ஷா. ஹவ் ஆர் யூ?” என அவனும் புன்னகைத்தான்.
நான் நலம்… நீ நலமா… என்ற பேச்சு முடிந்து, அவள் பார்வை அவன் மடி மீது அமர்ந்து கண்களை உருட்டி இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து அமர்ந்திருந்த குட்டி அழகியின் மீது பதிந்தது.
“இந்தக் குட்டி அழகி யாரு?” என மகளின் கன்னம் வருடிக் கேட்டவளைப் பார்த்து புன்னகைத்தவன், “இந்தக் குட்டி அழகி பேரு யாழினியாள். என் மக” என்றவன் முகத்தில் அத்தனை பெருமை.
“மகளா? யூ மீன்… உன் பொண்ணு?” என்றவளுக்கு, உள்ளுக்குள் ஏதோ உடைந்து சிதறியது.
கௌதமனால் ஓர் உறவில் நுழைய முடியும் என்பதே செய்தியாக இருக்க… அவன் கரத்தில் ஒரு குழந்தை. அதுவும் அவன் குழந்தை! காய்ந்த விதையில் மழை நீர் பட்டுத் துளிர்க்கும் முன்பே அது செத்து போக வேண்டுமா? தன் விருப்பம் இல்லாதே உடலில் இது என்ன மாற்றம்? இதயம் அதி வேகமாகத் துடித்தது. தொண்டை வரண்டது. கண்கள் ஈரமாவதை நிறுத்த முடியாதா? அவன் பார்த்துவிட்டால்… தயவு செய்து அழாதே எனக் கண்களிடம் கெஞ்சினாள் தாக்ஷா.
மடியில் இருந்த மகள் இறங்க முயற்சிக்க, கௌதமனின் கவனம் மகளின் பக்கம் சென்றது. அவசர அவசரமா கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவளுக்கு அங்கிருந்து எங்கேனும் தூரமாக ஓடத் தோன்றியது.
“என்ன பண்ற நீ?” என்ற கௌதமனின் கேள்விக்கு என்ன பதில் கூறவேண்டும்? உள்ளுக்குள் உடைந்து கதறுகிறேன் என்றா?
“தெரியல… அண்ணன், ரெஸ்டாரண்ட்… கேட்டரிங் கான்ட்ராக்ட் எல்லாம் என்னை பார்த்துக்க சொல்றான். இங்க இருக்கிறதா இல்ல ஸ்விசுக்கே போறதான்னு குழப்பமா இருக்கு.” என்றாள், தன்னை ஒருமுகப்படுத்தி.
“ம்ம்ம்”, ஒருவாரு தன்னை திடப்படுத்தியவள், “எப்போ மேரேஜ் ஆச்சு?” என இதயம் படபடக்கக் கேட்டாள். புன்னகையாக ஆரம்பித்து சத்தமாக அவன் சிரித்தான்.
இது என்ன பதில் எனச் சிரிப்பவனைப் பார்த்தாள். அவன் மடியில் அமர்ந்து அவளையே குறுகுறு எனப் பார்த்திருக்கும் குட்டி அழகியைப் பார்த்தாள். ஏழு அல்லது எட்டு மாதக் குழந்தையாக இருக்கும் என வளர்ந்து வரும் பற்களும் குண்டு கன்னமும் காட்டிக் கொடுத்தது. இருக்காது… இவ்வளவு குறுகிய காலத்தில், இவனுக்குத் திருமணம்… குழந்தை… சாத்தியமே இல்லை என மனம் அடித்துக் கூறியது.
“நிஜமாவே உன் மகளா?” என்றவள் நெற்றி சுருங்கியதின் காரணம் கௌதமனுக்கு புரியாது இல்லை. கல்லூரியின் கடைசி வருடம் இவர்கள் இருவரும் தானே ஒன்றாகச் சுற்றியது.
பிறர் கண்களுக்குக் கௌதமன் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம்… ஆனால் இவள் உண்மையான கௌதமனை அறிந்திருந்தாள். இவள் தான் அவனின் முதல் கேள்ஃபிரெண்ட். இவளோடு தான் இவன் கட்டுப்பாட்டை முதல் முறையாக இழந்தான். இவளோடு இருந்த காலங்களில் கண்டிப்பாக கௌதமன் வேறு பெண்ணோடு உறவு வைத்திருக்கவே மாட்டான் எனச் சத்தியம் வேண்டும் என்றாலும் செய்வாள்.
“நம்ம ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் தான். ஆனாலும் இருக்க வரைக்கும் நான் உனக்கு உண்மையா இருப்பேன். அதையே எதிர்பார்க்கிறேன் உங்கிட்ட. உன்னால என்னை டாலரேட் பண்ண முடியாம போகும் போது ஜஸ்ட் பிரேக் அப் அண்ட் கோ அஹெட். ஆனா கூட இருந்துட்டே வேற ரூட் போடாத” எனக் கூறியவன் இவன். இப்படி இருக்க, ‘என் மகள்’ என்றால் என்ன அர்த்தம்?
“நீ தான கேட்ட…” எனச் சிரித்தவனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் யாழி பேபி.
மகளையும் தகப்பனையும் மாறி மாறி பார்த்த தாக்ஷாவால் அவர்களிடம் ஏழு அல்ல ஒரே ஒரு ஒற்றுமையைத் தேடித் தோற்றதில் பெரும் திருப்தி. இருந்தாலும்… மகள் அல்லாது வேறு குழந்தையை வளர்க்கக் கௌதமனுக்கு என்ன பைத்தியமா? அதுவும்… தான் அறிந்த கௌதமனால் முடியவே முடியாதே! அவன் குழந்தை தானா? மனம் ஓய்ந்து போனது.
மௌனமான நிமிடங்களின் கனம் தாள முடியாது அவளே மௌனத்தை உடைத்தாள்.
“உன் கூட இருந்த வரை, நான் உனக்கு உண்மையா இருந்தேன் கௌதம். ஆனா நீ… எப்படி கௌதம்? என்னால சத்தியமா நம்ப முடியல. பொய் தான சொல்ற? இவ உன் பொண்ணு இல்ல தான?” என்றவளை ஆழப் பார்த்தான்.
“உனக்கும் எனக்கு காலேஜ் டேஸ்ல ஒரு நல்ல உறவு இருந்துது. அவர் ஃபிளிங் காட் எக்ஸ்பையர்ட் லாங் பேக் தாக்ஷா. அதுக்கு அப்பறம் நான் யாரோட வேணும்னாலும் இருந்து இருக்கலாம் இல்லையா? அத நான் உங்கிட்ட ஏன் சொல்லணும். சொல்லு?” என்றவன், “ஏன் தேவ இல்லாம நீ டென்ஷன் ஆகற?” என அவள் பக்கம் கேள்வியை மாற்றினான்.
“அது… அப்போவே உனக்கு கேள் ஃபிரெண்ட்…?” என முடிக்க முடியாது எச்சில் விழுங்கியவளைப் பார்த்து புன்னகைத்தவன், “நீ என் வாழ்க்கைய விட்டு போன பிறகு என வாழ்க்கையில நம்ப முடியாத பல தரமான சம்பவம் நடந்து முடிஞ்சிடுச்சு. அதுல ரொம்ப அழகான ஒண்ணும் நடந்துது” என மகளை உச்சி முகர்ந்தவன், “நேரம் ஆகுது. பாப்போம்” என எழுந்துக் கொண்டான்.
“இப்போ அவங்க அதுதான்… யாழினியோட அம்மா?” என அவசர அவசரமாக கேட்டாள்.
உதடு பிதுக்கியவன், “இப்போ இல்ல. பை” என மகளோடு பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். கௌதமன் சென்றபின்னும் அவன் சென்ற திசையைப் பார்த்து அமர்ந்திருந்தாள் பெண். மானங்கெட்ட மனது அவன் பின்னோடு சென்றது. எது எப்படியோ… இன்று, கௌதமன் வாழ்வில் வேறு பெண் இல்லை என்பது மனதிற்கு இதமாக இருந்தது.
அந்தத் தினத்திற்குப் பின் கௌதமன் பாதையில் தாக்ஷாயினி என்னும் வேகத்தடை அதிகம் எட்டிப்பார்த்தது. அதுவாக நடந்ததா இல்லை அவளாக ஏற்படுத்திக் கொண்டாளா என்றால்… இரண்டாவதே சரி.
தினமும் இல்லை என்றாலும் அவ்வப்போது அதே பூங்காவில் தாக்ஷாயினி கௌதமனை பார்க்க ஆரம்பித்தாள். அதன்பின் அதுவே, தினமும் மாலை என்றானது. மீண்டுமாக இருவரின் கைப்பேசி எண்களும் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டது.
யாழினியாள், ஒரு மகிழ்ச்சியான குழந்தை. அதிகம் அழ மாட்டாள். பிறரிடம் எளிதில் பழகிவிடுவாள். அப்பா அருகில் இருந்தால் போதும்… யார் என்ன என்றில்லை அனைவரிடமும் போவாள். குழந்தை என்றாலே அழகு தானே. அதுவும் தொங்கும் கன்னமும், நட்சத்திரக் கண்களும், பவள உதடுகளுமாக, நான்கு பற்களையும் காட்டி சிரித்தால்… யாருக்குத் தான் தவம் கலையாது?
அப்படித் தான் தாக்ஷாவும் கௌதமனின் மகளான யாழினியின் அழகில் மயங்கிப் போனாள். அடிக்கடி பார்ப்பதால் குழந்தையும் தாக்ஷாவோடு ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.
எதற்கும் அப்பாவைத் தேடும் மகள். நிமிடமேனும் மகள் மேல் இருந்து பார்வையை அகற்றாத தந்தை. மிக மிக அழகான பந்தம் இருவருக்குள்ளும். இந்தக் கௌதமன் தாக்ஷாயினியிக்கு புதிதாக தெரிந்தான். அழகிகள், பப், பீர், சிகரெட், வேண்டாத நட்பு என எதுவும் இல்லாத இந்தக் கௌதமன் புதிது தாக்ஷாயினிக்கு.
முன்பே அவன் மீது நேசம் கொண்டிருந்தவளுக்கு, அம்மா, அப்பா, மகள் எனக் குடும்பஸ்தனாக இருப்பவனோடு தானும் இணைந்தால் எப்படி இருக்கும் என்ற கனவு, மாம்பழ ஈயாக மூளையை மொய்த்தது. எப்பொழுதும் அவன் தோள் மீதே தொங்கிக் கொண்டிருந்த தாக்ஷாயினிக்கு, இந்த… ஓர் அடி தள்ளி நின்று பேசும் கௌதமனை அள்ளி விழுங்க ஆசை வந்தது.
ஆண்களின் மனதிற்குச் செல்ல வழி வயிறாமே. அது இப்பொழுது சாத்தியமில்லை எனப் பெண்ணிற்குத் தெளிவாகத் தெரியும் என்பதால் வேற்று பாதையை தேடினாள். பாதையைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமில்லை என்பதால், யாழினி என்னும் வழியாக இவன் இதயத்தில் நுழைய முடிவெடுத்தாள் தாக்ஷாயினி.
பூங்காவில் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்தவனிடம், “தனியா எப்படி மேனேஜ் பண்ணுவ கௌதம்? நானும் வரேனே” என மகளோடு வாரம் ஒரு நாள் மால், பீச் என வெளியே செல்லும் வழக்கம் கொண்டிருந்தவனோடு தாக்ஷாயினி ஒட்டிக் கொண்டாள்.
கங்காருவும் குட்டியும் போல் இருக்கும் கௌதமன் யாழினியோடு இணைந்து கொண்டாள் தாக்ஷா. தந்தையில் மார்பில் இருக்கும் தொட்டில் போன்ற பையில் தொங்கிச் செல்லும் குழந்தையைக் கொஞ்ச வேண்டும் என்றால், தந்தையை நெருங்கித் தானே ஆகவேண்டும். அதனால் மட்டும் தான் கௌதமனை நெருங்கி நடக்கிறாளா என்றால்… கண்டிப்பாக இல்லை.
முன்பே கௌதமனுக்கு தாக்ஷாவைப் பிடிக்கும். அவனைக் கண்டாலே உருகி நின்றவள். அன்பானவள். ஒட்டு மொத்த அன்பையும் அவன் மீது அள்ளி தெளித்தவள். அழகில் சிறந்த ரம்பை… ஊர்வசியை எல்லாம் தெரியாது. ஆனால்… தாக்ஷாவை தெரியும். அவன் உடல் அளவில் நெருங்கிய ஓரே பெண்ணும் அவள் மட்டுமே. மூளையின் ஓரத்தை எடுத்துக் கொண்டவள் அவள். காதல் என்று இல்லை என்றாலும் அப்பொழுதே அவளைப் பிடிக்கும். இப்பொழுது? இன்னும் பிடிக்கிறது.
தன் மகளையும் தன்னையும் நேசிக்கும் தாக்ஷாயினியை கௌதமனுக்கு பிடிக்கிறது. இவன் பின்னோடே சுற்றிக் கொண்டிருந்த விக்ரமும் தொழில் என அவன் அப்பாவிடம் மாட்டிக் கொண்டபின், கௌதமனுக்கு அவன் வயது நட்புக்குப் பஞ்சமாகிப் போனது. இதோ… இப்பொழுது அந்தக் குறையை தாக்ஷா தீர்த்துவிட்டாள்.
தோழியாகப் பிடிக்கிறது. அதற்கு மேலும் பிடிக்கிறது. பிடித்ததின் அளவு என்ன? அது தெரியவில்லை. ஆனால், “ஷாப்பிங் வரியா?” எனக் கேட்கும் அளவிற்கு…
“தூக்கம் வரல… என்ன பண்ற?” என நிலாவை பார்த்துக் கொண்டே வெட்டிப் பேச்சு பேசும் அளவிற்கு…
“என் பொண்ணுக்கு உன்ன பாக்கணுமாம்” என பொய் கூறும் அளவிற்கு கௌதமனுக்குத் தாக்ஷாவை பிடிக்கிறது.
பிடித்தத்தை இருவருமே வாய் வழி பரிமாறவில்லை. பார்வைகள் உணர்த்துவது போதும் என்றால்… போதும். ஆனால் அது போதவில்லை இருவருக்குமே.
கால் நனையக் கௌதமனும் தாக்ஷாவும் கடற்கரையில் நின்றிருந்தனர். சிவந்த வானம், காதல் பேசியது. உப்பின் கரிப்பைச் சுமந்து செல்லும் காற்று, காதல் பேசியது. கால்களில் ஒட்டிக்கொண்டிருந்த மணல், காதல் பேசியது. கால்களை முத்தமிட்ட அலைகள், காதல் பேசின. ஏன் இவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள்? மௌனம் பேசினால் போதும் என நினைக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு தயக்கம்.
அவன் அழைத்து அவள் வந்திருந்தாள். பிப்ரவரி பதினாலு அன்று எதற்கு அழைத்திருப்பான்? மனம் படபடத்தது பெண்ணிற்கு. கரத்தில் சிகப்பு ரோஜா இல்லை… அதற்குப் பதிலாக எப்பொழுதும் போல் அவன் மகள் இருந்தாள். இன்றேனும் மகளுக்குப் பதிலாக மலர் இருந்து இருக்கலாம் என எண்ணாது இருக்க, பெரும் பாடுபட்டு வெற்றி பெற்றாள்.
அவன் மகளைக் கொடுத்து… காலம் முழுவதும் பார்த்துக் கொள் என்பானோ? திரும்பிப் பார்த்தாள். கௌதமன் தோளில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாள். கௌதமனுக்காக ஜென்மம் முழுவதும் அவன் மலரை சுமக்க மனம் தயாராக இருப்பதை எப்படி இவனுக்கு உணர்த்துவது?
அவள் பார்வைக்குப் பதிலாக, “என்ன?” எனக் கேள்வி கேட்டான்.
என்ன கூறுவது? “இந்நேரம் தூங்கினா நைட் தூங்குவாளா?” எனக் கேட்டு வைத்தாள்.
“இன்னைக்கு ஒரே ஆட்டம். மதியம் தூங்கல. அதுதான் வழியில தூங்கிட்டா. முழிச்சுடுவா…” என்ற தகப்பனின் சத்தத்திற்கு மகள் எழுந்தாள். தலை உயர்த்தி அப்பாவின் கரம் தானா என முகம் பார்த்தாள் குழந்தை. தூக்கம் கலைந்த கண்கள் அப்பாவைக் கண்டு சிரித்தன. கௌதமன் மகளின் தலை வருடினான். “தூங்கினது போதுமா பேபி?” என உச்சி முகர்ந்தான்.
மகள் “ஆ ஊ” என உயிர் எழுத்துகளால் தகப்பன் உயிரைத் தன் பக்கம் பிடித்திருந்தாள். கௌதமன் கண்கள் மகளை வாஞ்சையோடு பார்த்திருந்தன. கரங்கள் அன்போடு மகளை அணைத்திருந்தன. அவனுக்குத் தன் அருகில் இருக்கும் உலகம் தெரிகிறதா இல்லையா என்ற சந்தேகம் வந்தது தாக்ஷாவிற்கு.
“நான் தூக்கட்டா?” என தாக்ஷாயினி ஆசையோடு கரம் நீட்டினாள்.
அப்பாவின் மார்பில் முகத்தைப் புதைத்து அதில் புதைந்து போவது போல் முகத்தை மார்பில் முட்டி தேய்த்தாள் குழந்தை.
“இல்ல… இப்போ தான் எழுந்தா. அழுவா. இருக்கட்டும்” என அணைப்பைக் கூட்டி மகளைத் தன் மார்போடு அணைத்தான் தந்தை.
அவன் குட்டி மலரை ஒருவரிடமும் கௌதமன் பங்கு போடவே மாட்டான் எனத் தெளிவாகத் தெரிந்தது தாக்ஷாயினிக்கு.
மகள் மௌனமாகத் தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தாள். காற்றுக்குப் பறந்து கொண்டிருந்த மகளின் பட்டு கேசத்தை கவனமாக வருடிக் கொண்டிருந்தான் தந்தை. கீழே இருந்த நீரின் மீது மகளின் கவனம் சென்றது. மகள் நெளிய ஆரம்பித்தாள்.
“என்ன சொல்றா உன் பொண்ணு?” என்ற கேள்வி கௌதமனின் கவனத்தைக் கவர்ந்தது.
கௌதமனின் கடைக்கண் பார்வையை முற்றிலும் தன் பக்கம் திருப்பும் வழியை அறிந்தவள் அவனுக்குப் பிடித்ததாக பேசினாள். அவனும் பேசினான். கடலையும், சுற்றி இருந்த ஜனக் கூட்டத்தையும் கண்கள் உருட்டிப் பார்த்தாள் குட்டி மகள். ஏனோ அது போதவில்லை குழந்தைக்கு. நீரில் கால் நனைக்க வேண்டும் என்ற ஆசை உந்தி தள்ளியது.
“கூப்பிட்டியே… ஏதாவது முக்கியமான விஷயமா?” என எதிர்பார்ப்போடே கேட்டாள் தாக்ஷா.
“நீ என்ன நினைக்கிற?” என அவள் கேள்விக்கு எதிர்க் கேள்வி கேட்டான் கௌதமன். செவ்வானம் மட்டும் அல்ல… நானும் சிவப்பேன் என்றது தாக்ஷாவின் கன்னங்கள்.
“இப்போ தான் தெரியுதா?” என அவள் எதிர்க் கேள்வி கேட்டாள்.
“அப்படித் தான் போல…” என சத்தமாகச் சிரித்தான். அவளும் சிரித்தாள். மனம் ஆனந்த கூத்தாட, இருவரும் தேவையே இல்லாது அனைத்திற்கும் சிரித்தனர்.
“ஏன் கூப்பிட்ட… சொல்லுவியா மாட்டியா?” என்றவளால் என்ன முயன்றும் சிணுங்காது இருக்க முடியவில்லை.
“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா? சொல்லாம புரியாதா உனக்கு?” என்றவன், “எனக்கு உன்ன…” என ஆரம்பித்து, அடுத்த வார்த்தைக்கு இடையே புன்னகைத்து தலை கோதினான்.
தன்னை கீழே இறங்கவும் விடாது… தன்னை கையில் வைத்துக் கொண்டே பல்லைக் காட்டி தாக்ஷாவோடு சிரித்துக் கொண்டிருந்த அப்பாவை பார்த்த குட்டி மகளுக்குக் கோபம் கொப்பளித்தது. அப்பாவின் கவனம் தன் பக்கம் இல்லை என்றதும் முளைத்திருந்த நான்கு பால் பற்களையும் அப்பாவின் மூக்கை நோக்கை எடுத்துச் சென்றாள் மகள்.
சுதாரித்து அவன் விலகும் முன் மூக்கு… கன்னம் என மகள், பற்கள் கொண்டு எச்சில் செய்தாள்.
“சேட்ட சேட்ட்…” என மகளின் மூக்கோடு மூக்கை உரசி, “என் பேபிக்கு கோபம் வந்துடுச்சா?” எனக் கொஞ்சலாகக் கேட்டான்.
“ஆ ஊ ஆ” என மகள் கோபத்தைக் கொட்டி, முகத்தில் கடிக்கச் செல்ல, “இல்ல இல்ல… நீ தான். நீ மட்டும் தான் எனக்கு பேபி. நமக்கு நடுவில யாருமே வர முடியாது” என அந்த மூக்கைப் பிடித்து ஆட்டினான். மகளைத் தூக்கி குட்டி தொப்பையில் குறுகுறுப்பூட்டினான்.
“ப ப” என யாழி தன் பற்கள் தெரிய அப்பாவின் முகத்தில் அடித்துச் சிரித்தாள். கௌதமன், “என் குட்டி பேபிக்கு குட்டி பொறாமையை பாரு” எனச் சத்தமாகச் சிரித்தான்.
மிக மிக அழகான குட்டி உலகம் ஒன்றிருந்தது. அதில் அன்பும் மகிழ்ச்சியும் அளவில்லாது இருந்தது. அந்த உலகில் அப்பாவும் மகளும் இருந்தனர். அந்தக் குட்டி உலகில் அளவில்லாது இடமும் இருந்தது. அதில் நுழையப் பேரன்பு மட்டுமே வேண்டும். சிலருக்கு அது புரிவதில்லை. அந்தச் சிலரில் யார் யார் அடக்கம் என காலம் தான் கூறவேண்டும்.
சிரித்துக் கொண்டிருந்த இருவரையும் மாறி மாறி பார்த்த தாக்ஷாயினிக்கு சிரிப்பு வரவில்லை. என்ன முயன்றும் நடிப்புக்காகக் கூட சிரிப்பு வரவில்லை.
சிவந்த வானம் அதன் வண்ணத்தை இழந்து கருமையைப் பூச ஆரம்பித்தது.