19-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,974
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 19-2
.
Advertisement
மாலை ஆரம்பித்து இரவு வரையுமே இருவரும் அருகருகே மணிக் கணக்காகக் கால் கடுக்க நின்றது, அவள் அவ்வப்போது இவனைப் பார்த்தது, இவன் பார்க்கும் வேளை தலையைத் திருப்பிக் கொள்வது என அவள் பேசிய மௌனப் பாஷை என அனைத்தையும் நினைத்துக் கொண்டிருந்தவனின் எண்ண அலைகளைக் கலைத்தான் விவான்.
“மச்சான், குளிச்சிட்டு கிளம்புவியாம். தேவையான சோப், டவல், ஷேம்பூன்னு எல்லாம் அத்த டேபில்ல இருக்க பேக்ல வச்சிருக்காங்களாம். ஏதாவது வேணுமான்னு பாத்து சொல்லு.” என அவசர அவசரமாக, தான் வந்த காரணத்தை உரைத்தான் மான்வியின் மச்சினன்.
“ஹலோ மாப்பிள்ளை சார்… இது உங்க கல்யாண நாள். இன்னைக்கு எல்லாமே புதுசா யூஸ் பண்ணனுமாக்கும். சரி… நீ சட்டுன்னு பாத்து சொல்லு. என் ஃப்ரெண்ட்ஸ் வர நேரம் ஆச்சு நான் கீழ போகணும்.” எனப் பரபரத்தான் விவான்.
Advertisement
“நீங்க போங்க டாக்டர்… நான் பாத்துக்கிறேன்” என்றவன் கண்கள் மீண்டும் ஒரு முறை எதிர் அறையை நோட்டமிட்டன. அவளை ஒரு முறையேனும் பாக்க கிடைக்காதா என்ற ஆசை நிராசையானது. கீழே பார்த்தான், வேலைகள் துரிதகதியில் நடந்தேறிக் கொண்டிருந்தன.
நேற்று இரவு மின்விளக்குகளும், வண்ண பலூன்களும், வண்ணக் கற்கள் மின்னும் திரைச்சீலைகளுமாகத் தேவ லோகம் போல் இருந்த இடம் முற்றிலுமாக மாறி புதுப் பொலிவைப் பெற்றிருந்தது. வாசனை மலர்கள், வாசனையற்ற பளீர் நிற மலர்க் கொத்துக்களோடு மண்டபம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுப் பார்க்கவே இடம் மங்களகரமாக இருந்தது.
‘நாங்களும் செய்தே ஆவோம்’ என இரவு முழுவதும் அலங்கார வேலைகளில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்ட ரித்விக்கின் கால்பந்து அணியினர் ஒவ்வொருவராக பட்டு வேட்டி சட்டையில் கிளம்பி வர ஆரம்பித்திருக்க, இடம் அமர்க்களப் பட ஆரம்பித்தது. விவானின் நட்பு வட்டம் படை எடுக்க, சற்று நேரத்திற்கெல்லாம் மண்டபம், பட்டு வேட்டி சட்டைகளாலும் பட்டுப் புடவைகளாலும் நிரம்ப ஆரபித்தது.
பாடலில் இருக்கும் உற்சாகமா இல்லை அந்த நாளுக்கே உறிய உற்சாகமா தெரியவில்லை, கடைசி நிமிட சிறு சிறு வேலைகள், மேடை அலங்காரங்கள், சமையல் என ஈடுபட்டிருந்த இருவீட்டினரின் உறவினர்களும் நண்பர்களும் என அங்குத் தெரிந்த அனைவர் முகங்களிலும் மலர்ச்சி அதிகமாகவே குடிகொண்டிருந்தது. அதுவும் விக்ரம் முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மூன்று வருடங்களுக்குப் பின் ராஜீவன், விக்ரமுடன் பேசுகிறான் என்றால் மகிழ்ச்சி இருக்கத் தானே செய்யும். வீர்… இருவரையும் இணைத்த பாலம் இல்லாது போனதும் அவர்கள் நட்பும் காணாதே போனது. “கடைசியில அவன் முகத்தைப் பாக்கக் கூட முடியாத படி பண்ணிட்டியே. ஒரு வார்த்த சொல்ல தோணல இல்ல? நீ எல்லாம் ஒரு ஃப்ரெண்டு… ச்சீ போடா” எனக் கடைசியாக விக்ரமின் சட்டையைப் பிடித்தது… அதன்பின் ராஜீவன் இவன் முகத்தில் விழிக்க விருப்பப்படவே இல்லை.
வீருக்கு நடந்த எதுவும் ராஜீவனுக்குத் தெரியாது. தெரியப் படுத்தவும் இல்லை. கௌதமன் இருந்த அதே மருத்தமனையில் வீர் இருந்த காரணத்தால், வீருக்கும் கௌதமனுக்கும் நடந்த அனைத்திற்கும் விக்ரம் சாட்சியாகவும் காரணமாகவும் இருந்திருக்க, அதை எப்படி ஜீவனிடம் கூறுவான் கௌதமனின் தோழன்?
அனைத்துக் கோபத்தையும் விடுத்து திருமணத்திற்கு அழைத்தவனோடு நேற்று இரவு வெகு நேரம் பேசினான். “இருந்து இருக்கலாம் டா அவன். வீர் என்னை மறந்திருந்தாலும் அவன் பின்னாடியே போய் ஃப்ரெண்ட் ஆகி இருப்பேன் டா. இன்னைக்கு நினைச்சாலும் வலிக்குது டா. எவன நம்பி அட்மிட் ஆகிறது சொல்லு? சின்ன சரிஜரி தானே… பிரெயின் டெத் வரைக்கும் எப்படி டா போச்சு? அவன் இடத்த நிரப்பவே முடியல டா. ரொம்ப மிஸ் பண்றேன் என் ஃப்ரெண்ட” இருவரும் பேசிய சில மணி நேரமும் ராஜீவன் வீரின் நினைவுகளில் உழல, மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் மறைப்பது குற்றம் என்றே தோன்றியது விக்ரமிற்கு. ஆனால் அது கௌதமனின் அனுமதி இன்றி கூறமுடியாதே. பல்லைக் கடித்து மௌனம் காத்தான்.
எப்படியாவது ஜீவனையும் கௌதமனையும் பேச வைக்க வேண்டும் என்ற நினைப்போடு வீடு திரும்பியவனை விடியும் முன்னமே கௌதமன் அழைத்து, “உன் ஃப்ரெண்ட் ஜீவன் கல்யாணத்துக்கு நானும் வரேன். வெயிட் பண்ணு, ஒண்ணா போகலாம்.” எனக் கூறினால், இவனுக்கு எப்படி இருக்கும்? அகமும் முகமும் மலர்ந்தவனாக உலா வருகிறான் விக்ரம்.
“கௌதமா… இது நல்லா இருக்கு, டேஸ்ட் பண்ணு” என விக்ரம் நீட்டிய பண்டத்தில் இருந்த பளபளப்பைப் பார்த்த கௌதமன், “ஒரே நெய்யும்… இனிப்புமா தெரியுது” என முகம் சுளித்தான். ஆரம்பக் காலத்தில், அதாவது இரண்டு வருடங்கள் முன்பு, “எனக்குப் பொண்டாட்டி பிள்ளை இருக்கா?” எனக் கேட்ட கௌதமனை, ‘யாரு டா நீ’ என ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்திருந்த விக்ரம் இப்பொழுது அப்படி பார்ப்பதில்லை. இவன் மாற்றங்கள் எல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறதே!
“இத தான் சொல்லுவன்னு நினைச்சேன்” எனப் பலகாரத்தைத் தன் வாயில் திணித்த விக்ரம், “முழு சந்திரமுகியாகவே மாறிட்டு வர டா” என்றான், வீரை மனதில் எண்ணியவாறே. கௌதமன் கிழக்கென்றால்… வீர், தெற்கு. இரண்டும் ஒன்று சேராது என நினைத்தான். நன்றாகப் புளிக்கும் மாங்காய் முற்றிடும் வேளையில் அதில் மெலிதான இனிப்பு எட்டிப் பார்க்கும். சுவைப்பதற்கு மிகவும் அருமையான பக்குவம் அது. கௌதமன் வீரின் கலவையும் அப்படி தானோ?
விக்ரம், ராஜீவன் அழைத்து வந்திருக்க, கௌதமன் வருவதற்குக் காரணம் ரித்விக். “கண்டிப்பா வரணும் கௌதமா” என ரித்விக் அழைத்திருக்க, அவர்கள் கல்லூரியில் ஒரு வருடமாகப் பயிலும் கௌதமனால் எப்படித் தன் ஃபுட் பால் கோச்சிடம் மறுக்க முடியும்?
தலையைக் காட்டிவிட்டு ஓட நினைத்த கௌதமனை பிடித்துக் கொண்டது கல்லூரி தோழர் பட்டாளம். சிரிப்பும், பட்டின் சரசரப்போடும் குட்டி வாண்டுகள் மேடைக்கு ஓடுவதும் இறங்குவதுமாக இடம் குதூகலத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.
வாலிபர்கள் இடையே கேலி கிண்டல்கள் இல்லாமலா? அதுவும் பஞ்சமே இல்லாமல் இருந்தது. வாசலில் போட்டிருந்த மேசை மேல் சாய்வாய் அமர்ந்து ஒற்றைக் காலை தரையில் ஊன்றியிருந்த கௌதமனை சுற்றி ஒரு கூட்டம். கௌதமனின் வாயில் கற்கண்டு அரைபட்டுக் கொண்டிருக்க… அவனைச் சுற்றி இருந்த கூட்டத்தின் வாயில், மண்டபத்தில் வலம் வந்து கொண்டிருந்த அழகிய பெண்கள்.
“இதுக்கு மூணு கொடுக்கலாம் டா,” என்றது யாருக்கு என்று தெரியவில்லை என்றாலும் ‘நேரம் ஆகிட்டே போகுது இந்த அப்பா எங்கப் போனார்?’ என வாயிலுக்கு வெளியே அவ்வப்போது பார்த்து நின்றிருந்தவளின் காதில் அந்த ரகசிய வார்த்தைகள் துல்லியமாக விழுந்தன.
புதுச் செருப்பின் வார் இம்சிக்க, அதை விரல் கொண்டு தளர்த்திக் கொண்டிருந்தவள் பிடரியின் கீழ் ஏதோ சுறுக்கென்று விழ, இவள் நிமிரவும் அது ரவிக்கையின் ஜன்னல் வழியே உள்ளே நுழைந்து மாட்டி நின்றது. நுழைந்தது கண்டிப்பாகக் கல் போன்ற ஏதோ ஒன்று என்றது அது ஏற்படுத்திய குத்தலும் குடைச்சலும்.
திரும்பிப் பார்த்தாள். வரவேற்பு மேசையைச் சுற்றி கூட்டமாக இருந்தவர் அனைவர் வாயும் மேசை மேலிருந்த கற்கண்டை மென்று கொண்டிருந்தாலும், மேசை மேல் அமர்ந்திருந்தவன் கையில் மட்டுமே அந்த வெண் சர்க்கரை கட்டிகள் இருந்தன.
‘இதுங்க தான் மார்க் போடற மூஞ்சிங்களா?’ என நினைத்தவள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள். அதில் அவன் மட்டும் தனியே தெரிந்தான். காரணம் அவன் செய்து கொண்டிருந்த அலும்பல் அப்படி. ஒரு வருடக் கல்லூரி வாழ்க்கை கௌதமனின் வயதை அவனுக்கு நினைவு படுத்தியிருக்க, இப்பொழுதெல்லாம் கௌதமனை சுற்றி எப்பொழுதுமே ஒரு கூட்டம் இருந்தது.
அவர்கள் பாஷையில் 0 மிகச் சுமார் என்றால்… 10 பேரழகு என்றால் அவனுக்குக் கண்டிப்பாக பத்து மிகக் குறைவு என்றனர் அவனைச் சுற்றியிருந்த கல்லூரி நட்புகள். ஆனால் அது அவள் கவனத்தில் பதியவில்லை. அவனை மட்டுமே… அவன் உடல் மொழியை மட்டுமே பார்த்தாள். இடது கை தலையைக் கோத, வலது கை அங்கிருந்த கற்கண்டை மேலே தூக்கிப் போட, அதை ஒருவன் தட்டி விட எத்தனிக்க, தடைகளை மீறி கற்கண்டை லாவகமாக வாய், தாவிப் பிடித்து மென்றுகொண்டு இருந்தது. முதுகைக் குத்துவது என்னவாக இருக்கும் எனக் கண்டுபிடிக்க அதிக ஆராய்ச்சி தேவைப்படவில்லை பெண்ணவளுக்கு.
அவள் சட்டென்று திரும்பிப் பார்த்த அதே நேரம் அவன் பார்வையும் அவள் மேல் விழுந்தது. அவன் பார்வையில் அலட்சியம் கொட்டிக் கிடக்க இதழில் சிரிப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை. ‘மூஞ்சியை பாரு’ என நினைத்ததை முகத்தில் காட்டி திரும்பிக் கொண்டாள்.
‘இவளுக்கு என்னவாம்?’ என அவள் முதுகை வெறித்தவன் கவனத்தைக் கலைத்தான் ரித்விக். வேகமாக வந்தவன், “கௌதமா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” எனப் பரபரக்க, “சொல்லுங்க கோச்” எனத் திரும்பினான் கௌதமன்.
“முகூர்த்ததுக்குள்ள வீடு வரைக்கும் போயிட்டு வரணும் கௌதமா…” கூறிக்கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “இருக்க வேலைக்கு நடுவுல” எனச் சலித்தும் கொண்டான்.
“நீங்க இங்க வேலையை பாருங்க… நான் போயிட்டு வரேன்” என எழுந்தான் கௌதமன்.
எதையோ யோசித்தவனாக, “வீடு தெரியுமில்ல? இருந்தாலும் லொக்கேஷன் அனுப்பறேன். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வீடு வரைக்கும் போயிட்டு வா கௌதமா. இந்த சாவிய வச்சுக்கோ. அங்க சங்கரன் காட்டுற ரூம்ல இருக்க அலமாரியில ஒரு லேப்டாப் பேக் இருக்கும். அதுல ரெண்டு நக டப்பா இருக்கும். அத அப்பிடியே எடுத்துட்டு வரணும்” என்றவனிடம், சாவியை வாங்கிக் கொண்டு, “ஓகே கோச்” எனத் தலையசைத்தான்.
செல்லும் ரித்திவிக்கின் முதுகைப் பார்த்து நின்றிருந்தவன் பார்வையில் அவள் மீண்டும் விழுந்தாள். யாரையோ தேடிக் கொண்டிருந்தாளே… அந்த பாவப்பட்ட மனுஷன் இவர் தானோ?
பெரியவர் மகளிடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருக்க இவள் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு எதையோ முறைத்து நின்றிருந்தாள். அவர் இப்படியும் அப்படியுமாக நகர்ந்து அவள் முன் வர, அவளும் சலிக்காது முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். தன் இரண்டு வயது மகளுக்கும் இவரின் இருபது வயது மகளுக்கும் என்ன வித்தியாசம் எனப் பார்த்தவனுக்கு சுவாரசியமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
அதன் பின்னும் கௌதமன் பார்வையில் யசோ விழ ஆரம்பித்தாள். ரசனையாக இல்லை என்றாலும் அவளைப் பார்த்தான். எங்கோ பார்த்திருக்கிறாள் இவளை. தொண்டை வரை வந்த பாட்டு நாவுக்கு வரும் முன் மறந்து போகுமே, அப்படித் தான் தொண்டைக் குழியில் மாட்டி நின்றாள் பெண்.
ரசனையாக இல்லை என்றாலும், அவளை நினைவில் கொண்டு வரும் பொருட்டு அவ்வப்போது கௌதமனின் பார்வை அவளைத் தழுவிச் சென்றது. முன் காலத்தில் அவனோடு சுற்றித் திரிந்தவளில் ஒருத்தியோ? பெண்ணை அளவிட்டான். கடலின் நீலப் பச்சை நிறமோடு பவள நிறம் சேர்ந்த பட்டுப் புடவைக்குத் தோதாகக் கழுத்திலும் கையிலும் பவளமும் முத்தும் கலந்த அணிகலன்கள் அவளுக்கு எடுப்பாகவே இருந்தாலும்… ம்கூம்… வாய்ப்பே இல்லை. இவனோடு சுற்றிய பெண்கள் இவ்வளவு செழிப்பைக் கனவில் கண்டாலும் பட்டினிகிடப்பார்கள்.
அவள் எதிரில் இருந்த நபரைப் பார்த்துப் புன்னகைத்தாள். மிகவும் பிரசித்தமாய் தோன்றினாலும் நினைவில் வர மறுத்தாள். ‘யாரு டி நீ?’ மண்டை ஏகமாக குடைந்தது. ‘தெரிந்துகொள்ளச் சும்மா தான் பார்க்கிறேன்’ என ஆரம்பித்தவன் கவனத்தை அவளின் மையிட்ட நயனங்கள் கவர்ந்தன. மகளின் விழிகளையும் இப்படித்தான் அம்மா அலங்கரிப்பார்.
குட்டி குட்டி விழிகளும், அதில் வந்து போகும் முறைப்பும் அடமும் என மகள் கண் முன் வந்தாள். ‘சேட்ட என்ன செய்யறாளோ?’ புன்னகை முகமோடு யசோவை பார்த்திருந்தவன் அகம் முழுவதையும் மகள் ஆக்கிரமித்திருக்க அவன் கவனம் சுத்தமாக யசோவிடம் இல்லை.
தன்னையே தொடரும் பார்வையைக் கண்டுகொண்டாள் யசொ. ‘தூங்கி இருப்பா’ என எண்ணியவன் ஒட்ட வெட்டியிருந்த கேசத்தை கோதிக்கொண்டே காலையில் மகள் செய்த அட்டகாசங்களை நினைத்துச் சிரித்தான்.
‘எதற்கு இவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்?’ அவன் செயலில் யசோவிற்குள் எரிச்சல் மட்டில்லாமல் வந்தாலும்… என்ன செய்ய முடியும்? கண்டு கொள்ளாது செல்வதைத் தவிரத் திருமண வீட்டில் வேறு என்ன செய்திட முடியும்? அதையே அவள் பாணியில் செய்தாள்.
கௌதமனின் கைப்பேசி சிணுங்க, ‘நான் இன்னும் தூங்கவில்லை’ என்ற அறிவிப்போடே மகள் வந்தாள். கைப்பேசியில் சண்டைக்கு வந்த மகள் அவன் கவனத்தை முழுவதுமாக இழுத்துக் கொண்டாள். குளித்துக் கிளம்பி இருந்த மகள் “நானு பா” என கைகளை உயர்த்தித் தூக்கக் கேட்டுக் கொண்டிருக்க, “ஃபோன் வழியா தூக்க முடியாது பேபி.” என மகளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“டேய் உன் கோச் கிளம்ப சொல்றாங்க பாரு… கிளம்பி போயிட்டு வா டா” என விக்ரம் கூற, தலையசைத்தவன், மகளோடு பேசிக்கொண்டே வெளியே நடக்க ஆரம்பித்தான். “பேபி அடம் பிடிக்காத. என் செல்லமில்ல சமத்தா சாப்பிடு போ…” என மகளோடு பேசி சென்றவனை வெறித்த பார்வை பார்த்தவளைக் கௌதமன் கவனித்ததாகத் தெரியவில்லை.
வாகனம் இருக்கும் இடம் நோக்கி நடந்தவன், மணமகளின் அன்னையின், “ரெண்டு மணி நேரத்துல கல்யாணத்த வச்சுகிட்டு எங்க டி ரசி போன? குடும்ப மானத்த வாங்காம வந்து தொல ரசிகா. நீ சரின்னு சொல்லி தானே டி ஏற்பாடு பண்ணினோம்? ஓடுகாலிய பெத்தவங்கன்ற பேர வாங்கி கொடுத்திடாத ரசிமா” அழும் குரலில், ஸ்தம்பித்து நின்றான். இவனைப் பார்த்த ரசிகாவின் அன்னையும் கையை பிசைந்து நின்றார்.