20 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,117
ஷோபா குமரனின் உன் பாதியும்
என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 20
Advertisement
.
Advertisement
“நீ என் பாய் ஃபிரெண்ட் தான். உன்ன என் லவர்ன்னு சொல்லிக்க பெருமையா இருந்தது நிஜம் தான். இப்பவும் சொல்லுவேன், நான் பார்த்த ஆம்பளைங்களுலேயே நீ தான் என் மனசைக் கவர்ந்தவன். உன் பொறுப்பான குணம், நீ எனக்கு கொடுக்கிற மரியாதை, டஸ்கி கலர், உன் லுக், உன்னோட மனசு… உன்னோட எல்லாமே பெஸ்ட் தான். நான் இல்லன்னு சொல்லல, அதுக்காக என்னால வீட்ட எதிர்த்து உன்ன கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது. சண்டை போட்டு உன்னைக் கல்யாணம் பண்ற அளவுக்கு நீ வொர்த் இல்ல. சாரி… தயவு செய்து பிரச்சனை பண்ணாத. லெட்ஸ் பிரேக் அப். என்னை விட்டுடு”
Advertisement
ஷவரின் அடியில் நின்றிருந்தவன் தலையில் குளிர்ந்த நீர் கொட்டிக் கொண்டிருக்க, ராஜீவனின் தலைக்குள் பல வருடங்கள் முன் நடந்த காட்சிகள் எழுந்து அமர்ந்தன. கல்லூரிக் காலக் கண்மூடித்தனமான காதல் அது. அவளைப் பற்றி எதுவும் தெரியாது, அவள் பெயர் மற்றும் படிப்பை தவிர. நண்பனின் தோழியாக அறிமுகமானவள். பெண்களிடம் மரியாதையாக மட்டுமே பழகத் தெரிந்தவன் தள்ளியே நின்றான். எது அவளை அவன் பக்கம் இழுத்தது எனத் தெரியவில்லை. அமைதியான தென்றலாக இருந்தவனுள் சுனாமியாக இறங்கினாள்.
Advertisement
சின்ன சின்ன சில்மிஷங்கள், ஆசை முத்தங்கள் என அவள் தான்… “ஜீவ்… ஜீவ் டார்லிங்,” என அவனையே சுற்றி வந்தாள். அவள் பேச்சு… சிரிப்பு என அவனைக் கிறங்கடிக்க, அவனும் அவளுள் கிறங்கித் தான் போனான். அவனோடு பின்னிப் பிணைந்தே சுற்றினாள். இரண்டு வருடங்களில் அவன் ஊனாய்… உயிராய் மாறிப்போனாள். அவளைப் போல் ஒருவராலும் தன்னை நேசிக்கவே முடியாது என்பதில் அத்தனை பெருமிதம் கொண்டான் ஜீவன். அவனையே சுற்றிச் சுற்றி வந்து தாராளமாய் காதலித்தவள், அவனையும் காதலிக்க வைத்தாள். தன்னை முற்றிலும் அவளிடம் இழந்த ராஜீவனை, கல்லூரிக் காலம் முடியும் முன்பே கொல்லாமல் கொன்று புதைத்துச் சென்றாள்.
தன் சேனையின் முன்பு, நிராயுதபாணியாக நிற்கும் அரசனின் அவல நிலையில் நின்றான் ராஜீவன். அவள் பிரிவு கொடுத்த வலியை விட, கல்லூரியில் அவன் பட்ட அவமானத்திலிருந்து வெளிவர ராஜீவன் பட்டபாடு அவன் மட்டுமே அறிவான்.
இன்று அவைகள் எல்லாம் பழங்கதைகள். மறக்க வேண்டிய பழங்கதைகள். அவளை மறந்தபின்னும், அவள் கொடுத்த ரணம் மட்டும் அவ்வப்போது எழுந்து அடங்குவது உண்டு. ‘உன்னைக் கல்யாணம் பண்ற அளவுக்கு நீ வொர்த் இல்ல’ என எதை அவள் கூறினாள் என்பதை முன்பே கேட்டிருந்தால் கூட மனம் நிம்மதி அடைந்திருக்கும். “ஏன் டா உன் காதல் மாதிரி என்னுது இல்லாம போச்சு? எங்கடா தப்பு பண்ணினேன்? என்னை ஏன் டா வேண்டாம்ன்னு சொன்னா?” எனப் பல முறை வீரின் தோள் சாய்ந்து கதறி இருக்கிறான்.
மாதங்கள் கடந்த பின் அவள் அணிந்திருந்த பிங்க் நிற, மூன்று கேரட் வைர மோதிரம் கூறியது அவள் கூறிய ‘வொர்த்’தின் அர்த்தத்தை. “அவளுக்குத் தான் டா உனக்கு மனைவியா இருக்க வொர்த் இல்ல. குணத்தை விடப் பணம் தான் முக்கியம்னு போனவள நினைச்சு உன்னையே கீழ இறக்கிக்காத ஜீவா. மூவ் ஆன் டா மச்சான்.” என உயிர்த் தோழன் தோள் கொடுத்தான்.
“போறா. இவட்ட மாட்டாம போனேனே” எனத் தேறியும் கொண்டான். தோழனோடு ஒன்றாய் ஊர் சுற்றி, “சர்ஜரிக்கு டேட் ஃபிக்ஸ் ஆனதும் சொல்லு டா மச்சான். நீ கண் விழிக்கிற வரை தங்கச்சிக்குத் துணையா நிப்பேன்” எனக் கூறிச் சென்றவன் அதன் பின் அவன் இறப்புச் செய்தியைத் தான் கேட்டான்.
“என்ன டா விக்கி… வீர் ஃபோனே எடுக்க மாட்டேன்றான். அதே டேட்ல தானே சர்ஜரி? ரெண்டு நாள்ல சென்னை வரேன்.” என இவனாக விக்ரமை அழைத்த பின் விக்ரம் வாய் திறந்தான். இவன் விடயம் கேள்விப்பட்ட போதே எல்லாம் முடிந்திருந்தது. கடைசியாகப் பார்த்தது, சட்டத்திற்குள், காண்போரை கபளீகரம் செய்யும் வசீகர சிரிப்போடு வீரும், சட்டத்திற்கு வெளியே பன்னீர் பூ மாலையும் தான்.
சில வருடத் தோழர்கள் தான்… ஆனாலும் உயிர் தோழர்கள். உடலுக்குள் கையை விட்டு உயிரை எடுத்தால் எப்படி வலிக்கும் என அன்று உணர்ந்தான் ராஜீவன். காதலியைப் பறி கொடுத்த அன்று வலித்ததெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தெரிந்து கொண்டதும் அன்று தான்.
குளித்து முடித்து தலை துவட்டி கண்ணாடியின் முன் நின்று தலை வாரினான். தோழனின் பிம்பம் சிரித்தது. “அவள மிஸ் பண்ணிட்டேன்னு இப்போ எல்லாம் தோன்றதே இல்ல டா வீர். பொண்ணுங்களுக்கு என் வாழ்க்கையில இடமே இல்லன்னு நினைச்ச எனக்கு இன்னைக்குக் கல்யாணம். ஐ மூவ்ட் ஆன் பாரேன்” என சிரித்தவன், “என்னவோ மனசு நிம்மதியா ஹேப்பியா இருக்கு டா. இன்னையில இருந்து நான் சிங்கிள் இல்ல. நீ என் கூட இல்லங்கற குறைய தவிர வேறக் குறையே இல்ல டா மச்சான்.” எனக் கண்ணாடியோடு பேசினான்.
கைப்பேசியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டுக் கொண்டே பட்டு வேட்டி சட்டையில் கிளம்பினான். நேரம் பார்த்தவன் பாடலை அணைத்து, அறைக் கதவைத் திறக்க, நடு மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த சத்தம் காதை வந்தடைந்தது. கீழே பார்த்தான். கூட்டம் கூடியிருந்தது. கூச்சலும் குழப்பங்களுக்கும் இடையே மான்வியின் சத்தம் தனியே கேட்டது. ‘ஏன்… என்னானது அக்காவிற்கு?’ என எண்ணியவன் அவசர அவசரமாக படி இறங்கி கீழே வந்தான். இவனைப் பார்த்த மாத்திரத்தில் ஊசி விழுந்தாலும் கேட்கும் அமைதி பரவியது.
பட்டு வேட்டி சட்டையில் முழுக் கம்பீரத்தோடு வந்து நிற்கும் தம்பியைப் பார்த்தவள் கண்கள் கலங்க, “ராஜீவா…” என ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
பதட்டமாக இருந்தாலும், அக்காவின் தலை வருடி நிதானத்தைத் தவற விடாது, “என்ன கா? என்ன ஆச்சு? ஏன் அழற? யார் உன்ன என்ன சொன்னாங்க?” எனக் கேட்டு நிற்பவனை ‘வேண்டாம்’ எனக் கூற அந்தப் பெண்ணிற்கு எப்படி மனம் வந்தது? மான்வியால் தம்பியை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
“நல்லா விசாரிச்சுடேன் டா ராஜீவா. ரொம்ப நல்ல பொண்ணு டா. எல்லாவளும் ஒரே மாதிரி இருக்கணும்ன்னு இல்ல டா. அக்காக்காக ஒரு தரம் யோசியேன்” என தான் கூறாது இருந்திருந்தால் தம்பி தப்பித்து இருப்பானே. மான்விக்கு அழுகை முட்டிக் கொண்டுவந்தது. ஏன் இவனுக்கு மீண்டும் மீண்டும் இப்படி ஆக வேண்டும்? நினைத்த தமக்கைக்கு அழுகை பீரிட்டது.
“சாரி டா தம்பி” என அக்கா தலை நிமிர்த்தாது கூற, ராஜீவன் அக்காவைப் புரியாது பார்த்தான்.
“பையன் பாக்க நல்லா தான் இருக்கான்.” எனக் கூட்டத்தில் நின்றிருந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். ராஜீவனின் முகம் மாறுபட்டது. இந்தப் பார்வை… இந்தக் கேவலமான பார்வை எதை எதையோ நினைவு படுத்தியது.
“அது எப்படி உனக்குத் தெரியும்? ரிஷப்ஷன் வரைக்கும் அமைதியா இருந்தவ, இவனுக்குக் குறை இல்லாமலா கல்யாணத்துக்கு ரெண்டு மணி நேரம் முன்ன கூடபடிக்கிறவனோட ஓடி போவா?” என்ற சத்தம் ராஜீவனைப் பலமாகத் தாக்கியது.
“என்ன க்கா?” எனத் தொண்டையில் சிக்கிய வார்த்தையோடு அக்காவைப் பிரித்து எடுக்க, “அவள விரும்பினவன் செத்துடுவேன்னு சொன்னானாம். அவனோட போறேன்னு எழுதி வச்சுட்டு, ஓடி போயிட்டா டா” எனத் தம்பியைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே உரைத்தாள். தம்பியின் கடந்த காலம் அனைத்தும் மான்விக்குத் தெரிந்திருக்க, அவளாலும் இந்த அதிர்ச்சியைத் தாள முடியவில்லை.
“ஓஹ்” என்றான். தொண்டையைத் துக்கம் அடைக்க, சத்தம் தொண்டையைத் தாண்டி வெளியே வருவேனா என அடம்பிடித்தது. ஒருவரின் முகமும் பார்க்க இயலாதவனாக நின்றிருந்தவனைக் கனத்த மனதோடே பார்த்து நின்றிருந்தவர்களில் கௌதமனும் யசோவும் அடக்கம். ராஜீவனின் ஒவ்வொரு முகபாவமும் கௌதமனையும் பலமாகத் தாக்கியது. வீரின் உயிர் சினேகிதன் எனத் தெரிந்தாலும் கௌதமனுக்கு ராஜீவனை தனிப்பட்ட முறையில் தெரியாது. ரித்விக் அழைத்திருக்க வந்திருக்கிறான், அவ்வளவே. அப்படி இருக்க, ஏன் ராஜீவனின் வலி தன்னை பலமாகத் தாக்குகிறது எனக் கௌதமனுக்கு புரிந்தும் புரியாத நிலை.
‘டேய் மச்சான்… ஜீவா…’ என ராஜீவனைத் தோள் சாய்த்துக்கொள்ளத் துடிக்கும் மனதை அடக்க வழி தெரியவில்லை கௌதமனுக்கு. மனம் பதறியது. உடல் தவித்தது. இதயத்தில் பாரம் ஏறி வலித்தது. மார்பை மெல்ல நீவி விட்டுக் கொண்டான் கௌதமன்.
அடிபட்டவனாக நின்றிருந்தவனின் நிர்க்கதியான நிலையில் மனம் கனத்து போனது யசோவிற்கு. இடியாய் இறங்கிய செய்தியைக் கேட்ட ராஜீவன் முகத்தில் என்ன பாவமோ… அதைக் கண்ட யசோதராவிற்கு மனம் ஆறவே இல்லை. மூன்று நாள்களாக இவனைப் பார்க்கிறாள் என்றாலும் இவனைப் பற்றி மான்வியின் மூலமாக முன்பே தெரியும். பார்க்க, பழக என மிக எளிமையானவனும் உகந்தவனும் கூட . மான்வி ஒரு பக்கம் அழ, ராஜீவனின் அன்னை தலையைப் பிடித்துக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து அழுது கொண்டிருக்க, திருமண மண்டபம், அதன் களையை இழந்து போயிருந்தது.
இப்படியான ஒரு நிகழ்வைச் சற்றும் எதிர்பார்த்திராத ராஜீவன் அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தொப்பென அமர்ந்தான். தலை விண்விண்னென வலித்தது. இதயம் கசங்கிப் பிழிந்து வலித்தது. கண்களை இறுக மூடிக்கொண்டாலும் அங்கு நடப்பது அவன் கவனத்தில் பதியாது இல்லை.
திருமண மண்டபம் வரை வந்த திருமணம், பெருங்கூட்டம் முன் நின்று போனால்… பெண்ணிற்கு மட்டும் தான் மனவுளைச்சலா என்ன? ஆண்மகனுக்கும் கனவுகள் உண்டு, அது நசுங்கும் நேரம் மனம் அடிவாங்கிப் போகும். இனி இவன் நடத்தை… ஆரோக்கியம்… ஆண்மை… தொழில் என அனைத்தும் பொது வெளியில் கடை பரப்பப்படும்.
இப்படி ஊரைக் கூட்டி நிச்சயம் செய்து, திருமண வேலைக்காக அலைந்து திரிந்து, ஊருக்கெல்லாம் பத்திரிக்கை வைத்து, இதோ எல்லாம் நல்ல படியாக முடிந்துவிடும் என எண்ணிய வேளை… திருமணத்திற்குச் சில மணி நேரம் முன் திருமணத்தை நிறுத்துவது என்பது எத்தனை தலைகுனிவு? இரு பக்க பெற்றவர்களுக்கும் மிகுந்த மன உளச்சலை யோசிக்காது கொடுத்துச் சென்றிருந்தாள் ரசிகா.
ஆண் வீட்டார் பெண்ணை பெற்றவர்களைப் பேச, பெண் வீட்டார் அவர்கள் பங்கிற்கு ராஜீவனையும் அவனைச் சார்ந்தவனையும் பேச… அங்கு ஒரு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. எந்தத் தவறும் இழைக்காத ராஜீவனும் அவர்கள் வாயில் அரைபட்டுக் கொண்டிருந்தான். அனைத்திற்கும் ஒரு முடிவு கட்ட நினைத்த விசாகனின் சத்தம் அங்கு ஓங்கி ஒலித்தது.
“மன்னிச்சுடுங்க. சத்தியமா அவ சரின்னு சொல்லித் தான் ஏற்பாடு பண்ணினோம். இப்படிக் கடைசி நிமிஷத்தில தலையில இடிய இறக்குவான்னு தெரியாது. தயவு செய்து மன்னிச்சுடுங்க” என பெண்ணை பெற்றவர்கள் காலில் விழாத குறையாகக் கெஞ்ச, “பிடிக்கலன்னு ஆரம்பத்துலயே சொல்லி இருக்கலாம். இப்படி என் மகன் மனசுல ஆசைய வளர்த்து எங்கள சபையில கேவல படுத்தி இருக்க வேண்டாம்” என்பதை தவிர வேறு எதையும் கூற தோன்றவில்லை மகனைப் பெற்றவர்களுக்கு.
அடுத்த பத்து நிமிடங்களில் பெண் வீட்டார் அங்கிருந்து கிளம்பியிருக்க, “சொந்தத்துல பொண்ணு இருந்தா, இதே முகூர்த்ததுல முடிச்சுடலாமே” என ஒரு பெரியவர் தனக்குத் தோன்றியதைக் கூறினார். சிலர் ஆமோதிக்க, திருமண வயது பெண்ணை பெற்றிருந்த சிலர், “ராஜீவன் நல்ல பையன் தான். இருந்தாலும் அவனுக்கு என்ன பிரச்சினை… ஏன் பொண்ணு இவன வேண்டாம்ன்னு சொன்னான்னு தெரியாம எப்படி எங்க பொண்ண குடுக்கிறது?” எனக் கிசுகிசுத்தனர்.
அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவன் பட்டெனக் கண்களைத் திறந்தான். விழிகள் சிவந்து போயிருக்க, தகப்பனைப் பார்த்தான். அதன்பின் அங்கு என்ன பேசப்பட்டது என ராஜீவனுக்குத் தெரியாது. அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
இது ஒரு வகைத் துரோகம். மிக மிகச் சுலபமாகச் சம்பந்தமே இல்லாத ஒருவரின் நம்பிக்கையை, மரியாதையைச் சிதைத்திருந்தாள் ரசிகா. ஒருவனை மேடை வரை ஏற்றி அனைவர் முன்னிலும் அசிங்கப் படுத்தியிருக்கக் கூடாது. ஒருத்தி, காதல் மேல் இருந்த நம்பிக்கையைக் குழி நோண்டிப் புதைத்திருக்க; மற்றவள், திருமணம் என்றாலே கை கூப்பி ‘ஆள விடு’ எனக் கதறும் அளவிற்கு ராஜீவனைத் தள்ளி இருந்தாள்.
எல்லாம் முடிந்து இரு தினங்கள் மௌனமாகக் கழிந்தன. மான்வியால் தம்பியைப் பிரிந்து இருக்க முடியாது, மகனை அழைத்துக் கொண்டு அன்றே பெற்றவர்களோடு ராஜீவன் தங்கியிருந்த வீட்டிற்குக் கிளம்பியிருந்தாள். மனைவிக்குத் துணையாக ரித்விக்கும் வந்திருக்க, இரு தினங்களாக அங்கிருந்த வேலைகளை எல்லாம் ரித்விக் கவனித்துக் கொண்டான். அனைவரும் மௌனம் காக்க, ஆத்விக் மட்டுமே சளியின் காரணமாக அழுவதும் அடம் பிடிப்பதுமாகச் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தான்.
வாடகைக்கு எடுத்திருந்த வீட்டைக் காலி செய்யும் ஏற்பாடுகளை ரித்விக் முடித்திருந்தான். மாலையில் துபாய்க்குப் பயணப்பட அனைத்தும் தயார் நிலையில் இருக்க, காலையில் இருந்தே ஆத்விக்கின் அழுகுரல் அதிகமானது. சளியோடு காய்ச்சலும் இணைந்து கொள்ள, சிறுவன் யசோவை கேட்டு அனத்தி கொண்டே இருந்தான்.
“வா அத்தைய ஃபோன்ல காட்டறேன்” எனச் சிறுவனை மடியில் அமர்த்தி யசோவை காணொளியில் வரவழைத்தான் ரித்விக். யசோவை பார்த்ததும், “ம்மா வா… அத்தமா டூக்கு” என அழ ஆரம்பித்தான் இரண்டே கால் வயதுக் குழந்தை. இதற்கிடையே மான்வி அழைக்கவும் கைப்பேசியை மகனிடம் கொடுத்து, காதில் ஹெட்செட்டை மாட்டி விட்டுச் சென்றான் ரித்விக். பேச முடியாத யசோவும், பேச தெரியாத ஆத்விக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருந்தனர்.
“மா வா” என வளர்ப்புத் தாயை நோக்கி கரம் நீட்டினான் குழந்தை. தாயாய் ஒன்றரை வருடங்கள் இவனுக்கு தாய்ப்பால் கொடுத்த அன்னையிடம் இவன் மழலையில் அனத்த, அவள் அழாதே என்பது போல் சைகை காட்டிக் கொண்டிருந்தாள். தாய்மாமன் அருகில் வந்து அமரவும், மடியில் படுத்துக் கொண்டு யசோவை பார்ப்பதைத் தொடர்ந்தான் சிறுவன்.
ஆத்விக் யாரிடம் பேசுகிறான் எனக் கைப்பேசியின் திரையைப் பார்த்தான் ராஜீவன். கண்களில் கனிவைத் தேக்கி, தாய்மை ததும்பும் முகபாவத்தோடு கைகள் அசைத்துக் கொண்டிருந்தாள் யசோதரா. கண்கள் கொஞ்சியது. உதடு குவிந்து முத்தம் அனுப்பியது. கைகள் அசைந்து கதை பேசியது. அப்படி என்ன தான் பேசுகிறாள் என ஹெட்போனை வாங்கி காதில் பொருத்தத் தோன்றினாலும் இருவரின் கவனத்தையும் கவராது திரையைப் பார்த்து அமர்ந்திருந்தான் ராஜீவன்.
பேரனுக்குக் கஞ்சியோடும், மகனுக்குக் காபியோடும் வந்தார் விலாசினி. ராஜீவனின் கைப்பேசி மீண்டும் அலறியது. இரு நாள்களாக இது ஒரு தீராத தொல்லை. “நியூஸ் கேள்வி பட்டேன். சாரி ராஜீவ். ஏன் என்ன ஆச்சு?” என்ற அதே பரிதாபக் கேள்விக்கு என்னவென்று கூறுவான் அந்த இளையவன்? கைப்பேசியை வெறித்துப் பார்த்திருந்தவனை நெருங்கவே அம்மா பயந்தார்.
“இனி கல்யாணம் கத்திரக்கான்னு என் முன்ன வந்திடாதிங்க யாரும்” என்ற அவனின் கூற்றுத்தான் அவர் காதில் ஒலித்தது.
‘பையனுக்கு ஏதாவது குறையா இருக்கும். அதை மறைக்கத் தான் சொந்ததுல பொண்ணு எடுக்கல போல’
‘வெளிநாட்டுல வளந்த பையன். கொஞ்சம் இப்படி அப்படி இருந்து இருப்பான். நடத்த சரி இல்லைன்னு கடைசி நிமிஷம் பொண்ணு இவன வேண்டாம்ன்னு ஓடி போச்சாம்’
‘வரதட்சண வேணாம்ன்னு சொல்லும் போதே நினைச்சேன்… ஏதாவது உள்ளுக்குள்ள இருக்கும்ன்னு’…
எவ்வளவு பேச்சுகள்? மகன் முகம் பார்த்தவர், வந்த வழியே மகளைத் தேடிச் சென்றுவிட்டார்.
மண்டபத்தில் இவன் காதில் விழுந்த பேச்சுகள் அவன் மூளையைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்க, சோஃபாவில் தலை சாய்ந்தவன் முகத்தில் அவ்வளவு வேதனையும் வலியும். ரசிகாவை காதலித்து மணக்கக் கேட்கவில்லை என்றால் என்ன… அவள்தான் மணப்பெண் என்றதும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத் தானே செய்தது. எத்தனை முறை அவளிடம் பேசியிருப்பான்… ஒரு முறை, ஒரே ஒரு முறையேனும் கூறி இருக்கலாமே.
‘என் மீது அன்போ மரியாதையோ இல்லாத நீ எனக்கு வேண்டாம் போடி! உன்னைப் போல் ஒரு துரோகியை மணந்தால் என் வாழ்வு நரகம் தான்.’ என நினைத்து அவளைத் தள்ளி வைத்த பின்னும் மனம் ஏனோ அவமானத்தால் வலிக்கிறது. ஒரே நாளில் ரசிகா என்னும் பெண்ணின் புண்ணியத்தால், பெண்ணும் வேண்டாம்… பெண் ரூபத்தில் உலாவும் சுயநலவாதிகளோடு திருமணப் பந்தமும் வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் ராஜீவன்.
ஆத்விக்கின் முகத்திற்குப் பின்னால் தெரிந்த அந்த வேதனை படிந்த முகத்தைக் கண்கொட்டாது பார்த்திருந்த யசோவிற்கு அவன் வலி துல்லியமாகப் புரிந்ததில் ஆச்சரியம் இல்லை. வலியை யார் ஏற்படுத்தினால் என்ன? இதயம், மூளை என இரண்டும் ரணமாகும் வரை காயத்தை தவிர மனம் வேறு எதையுமே நினைப்பதில்லையே.
மீண்டும் சிணுங்கிய தன் கைப்பேசியை வெறித்திருந்தவனின் பார்வை தூங்கி விழுந்த ஆத்விக்கின் பக்கம் சென்றது. குழந்தை கரத்தில் இருந்த கைப்பேசி சரிந்து அவன் வயிற்றில் குப்புற விழுந்தது. அதை கையில் எடுத்தவனைத் திரையில் இருந்த யசோதரா பார்த்தாள். நான்கு விழிகளும் சந்தித்தன.
தயங்கி… புன்னகையைச் சிந்தவிட்டாள் பெண். எப்பொழுதும் போல் சரலாய் யசோதாவின் மென் புன்னகை ராஜீவனை தழுவிச் சென்றது. இரண்டு நாள்களுக்குப் பின் அவனும் புன்னகைத்தான்.