Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

22 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 22

.

“அம்மாடி… நைட்டுக்கு இட்டிலியும் கோழி கொழம்பும் கொடுத்து அனுப்பறேன். அம்மாட்ட சமைக்க வேணாம்ன்னு சொல்லு” எனக் கூறிக்கொண்டே எழுந்த விஜயா பாட்டியின் சத்தம் வாயில் வரை கேட்டது.



Advertisement

“எஎனக்கு இட்டிலி வேணாம். த்தோச வேணும். நெய் தோச” என்றாள் பெண்.

Advertisement

“ஒரே வேலையா முடிக்க விடுறியா நீ? வா ஃபிரிட்ஜ்ல மாவு இருக்கான்னு பார்ப்போம். இருந்தா உனக்கு மட்டும் இங்கயே தோச ஊத்திக்கோ.”

Advertisement

“அ..அம்மா நாக்கு நீளம்ன்னு திட்டுவாங்க. நீநீங்களே ஊத்தி அனுப்புங்க பாட்டி”

Advertisement

“உனக்கு நாக்கு நீளந்தாண்டி அதுல என்ன சந்தேகம்? உன் வயசுக்கு, வீட்டு வேலை எல்லாம் நீ தான் பாக்கணும்… ஆனா நீ? வேலைக்கு போயிட்டு வரவளையும், இந்தக் கிழவியையும் வேல வாங்குற. என் பொண்ணு வரட்டும் உன் தோல உரிக்க சொல்றேன்…”

“ப்போட்டு குடுக்கிறதுலயே குறியா இருக்காத பாட்டி… ந்நீ எனக்கு செய்யாம யாருக்குச் செய்ய போற? என் செல்லம் இல்ல… இனிமேல அப்படி எல்லாம் பேசக் கூடாது சரியா?”

செல்லச் சிணுங்கலும் சண்டையுமாகப் பாட்டியிடம் வாதிடுபவளை ரசனையோடு பார்த்திருந்தான் ரகு. மனதிற்கு இதமாக இருந்தது. இந்தச் சூழல்… இந்த அன்பு… அக்கறையை எல்லாம் இழந்து தவித்தவனுக்குச் சண்டையும் சிணுங்கலும் நாதமாகவே ஒலித்தது.

“உனக்குச் சுட சுட வேணும். நான் ஊத்தி அனுப்பி அத நீ சாப்பிடறதுகுள்ள சூடு ஆறிடும். தைய தக்கன்னு குதிப்ப. நீயே ஊத்தி சாப்பிடு”

“உஉனக்கு என் மேல பாசமே இல்ல பாட்டி. உஉன் பேரன் வந்ததும் நான் வேண்டாதவளாகிட்டேன்னு உண்மைய ஒத்துக்கோ”

“ஆ ஊன்னா இத ஒண்ண சொல்லிடு. வா, மொதல்ல மாவு இருக்கான்னு பாப்போம்” பாட்டியும் பேத்தியும் பேசிக்கொண்டே அடுக்களைக்குள் நுழையவும்,

“தாரா… பாட்டிய ஏன் படுத்திற?” எனக் கேட்டுக் கொண்டே சாற்றியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார் சந்திரிகா.

அவர் உள்ளே நுழையவும் ரகுவின் பார்வை வாயிலை நோக்கித் திரும்ப, சந்திரிகாவை பார்த்தவன், பார்வையை இம்மி மாற்றாது அவரை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்.

ஓர் ஆண் மகனை, அதுவும் வாலிபனை நடுக்கூடத்தில் எதிர்பார்க்காத சந்திரிகா சட்டென நின்றுவிட்டார். புன்னகை முகமாக கையில் மகளின் புத்தகத்தோடு அமர்ந்திருக்கும் வாலிபனைப் பார்த்தவருக்கு ‘யார் இது’ என்ற எண்ணமே முதலில் வந்தது.

புத்தகத்தைத் தேநீர் மேசையில் போட்டவன் எழுந்து சந்திரிகாவின் அருகில் வரவுமே சந்திரிகாவின் கண்கள் பனித்தன. கண்களை உயர்த்தி தன் எதிரே நிற்பவனைப் பார்த்தவருக்குத் தன் கண்களை நம்பமுடியவில்லை. சந்திரிகாவின் கரத்தை பற்றி, “மா” என்றான்.

சந்திரிகாவின் கண்கள் அதற்குமேல் கண்ணீரை அணைகாக்க முடியாது தோற்றுப் போக, கோடாகக் கன்னம் இறக்கியது உவர் நீர். “ரகு” என்றார் நா தழுதழுக்க. எத்தனை நாள்கள் இடுப்பில் தூக்கிக் கொண்டே அடுக்களை வேலைகளைப் பார்த்திருப்பார். பத்து வயது வரையிலுமே இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு, “எனக்குத் தான் அம்மா” எனச் சின்னவளை வெறுப்பேற்றி இருக்கிறான்.

அம்மாவும் மகனுமாக இருந்தவர்கள்… பார்த்துப் பேசி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

கன்னம் வருடியவர், “நல்லாயிருக்கியா?” என்றார் பாசத்தைக் குரலில் தேக்கி.

உள்ளங்கையைக் கன்னத்தோடு அழுத்திக் கொண்டவன் கண்கள் மூடி அந்த நொடியை உள்வாங்கினான். “மிஸ்ட் யூ மா” என்றான் கண்கள் பளபளக்க.

நா தழுதழுக்க, “அம்மாவ இத்தன வருஷம் காக்க வச்சுட்டியே” என்றவரை அப்படியே அணைத்துக் கொண்டான் ரகு. சென்ற முறை வரை அவர் மார்பில் அவனை அணைத்திருக்கிறார். இன்று மகன் வளர்ந்து நிற்கிறான்… அவன் மார்பில் அவரின் முகம் புதைய அணைத்து நிற்கிறான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக அந்தத் தருணத்தை உள்வாங்கிக் கொண்டனர். அவர்களது மாசில்லா அன்பிற்குத் தொப்புள் கொடி தேவை இல்லை என்றது அந்த நொடி.

“வளந்துட்ட ரகு. உன் ஐயாவ விட உயரம் ஆகிட்ட டா” என்றார் மகனின் உயரம் பார்த்து. மெல்லச் சிரித்தான்.

“ப்பபாச மழை பொழியுது பாட்டி” என பெண்ணவளின் சிரிப்பு சத்தத்திற்கு நிமிர்ந்தவர், “எப்படி டா இருக்க? முழுசா மறந்து போயிட்டன்னு நினைச்சேன்” என்றார் குற்றச் சாட்டாய்.

சந்திரிகாவின் கண்ணீரைத் துடைத்தவன், “அது எப்படி மறப்பேன்? உங்களால என்னை மறக்க முடியாதப்போ நான் மட்டும் எப்படி மறப்பேன்? கூட்டி வர யாரும் இல்ல மா” என்றவன், “இனி மேல் யார் தயவும் இல்லாம நானே லீவுக்கு வந்துடுவேன்.” என வாக்களித்தான்.

“ரொம்ப சந்தோஷம் டா ரகு. உக்காரு, குடிக்க ஏதாவது கொடுத்தாளா? பசிக்குதா? என்ன சாப்பிடுற?” என அன்னையாய் அவர் மகனின் வயிற்றைப் பற்றிப் பேச, “பேபி டீ போட்டு கொடுத்தா. ரொம்ப கஷ்டப் பட்டு குடிச்சேன்” என நமட்டுச் சிரிப்பு சிரித்தவனை முறைத்து நின்றாள் பெண்.

“மா அவ முறைக்கிறா” என வம்பிழுத்தான்.

“ஏன் டி?” என அன்னையும் அவனுக்காகப் பேச, “பாட்டி… உன் பேரன வால சுருட்டிட்டி இருக்க சொல்லு. இல்ல… ஒழுங்கா ஊர் போய் சேர மாட்டான்” என அவள் காளி அவதாரம் எடுக்க, “தள்ளி நின்னு சொற்பொழிவாற்று. நான் அம்மாக்கு காபி போடணும்” என அவளைத் தள்ளி நிறுத்தியவன் அடுக்களைக்குள் நுழைந்தான்.

“ரெண்டும் மாறவே இல்ல பாரேன்” என்றார் பாட்டி நொந்தவராய்.

சந்திரிகா முகம் கழுவி உடை மாற்றி வரவும், “சூடா காபி கம்மிங்” என சந்திரிகாவிடம் காபி கோப்பையை நீட்டினான் ரகு. அவர் சோஃபாவில் அமர்வதற்காகவே காத்திருந்தவன் போல், அவர் அமர்ந்ததும் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான் ரகு.

மகனின் தலையை வருடிக் கொண்டே அவர் காரியங்களைப் பேச, ‘அன்னைக்கான அவன் தாகம் இன்னுமா தணியவில்லை?’ எனப் பார்த்திருந்தவள் மனம் கனிந்தது.

“பாத்தியா பாட்டி அவங்கள? நீயும் இருக்கியே… என்னைக்காது என்னை இப்படி மடியில போட்டு தாலாட்டி இருப்பியா?” எனப் பாட்டியை வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

“கட்டி கொடுத்தா… அடுத்த வருஷம் நீயே ஒண்ண மடியில போட்டு தாலாட்டற வயசாகிடுச்சு. வந்துட்டா… தாலாட்டு பாலூட்டுன்னு” என சின்னவளின் தாடையில் இடித்தவர், “ரெண்டு பேரும் அஞ்சு வருஷ கதைய முடிச்சு வரதுக்குள்ள விடிஞ்சுடும். நைட்டுக்கு என்னன்னு பார்ப்போம் வா” எனப் பாட்டி அடுக்களைக்குள் நுழைந்தார்.

“மாவு இல்ல… நீ அங்க வந்துடு” எனப் பேத்தியிடம் கூறியவர், ஏதோ யோசித்தவராய் “சந்திரிகா… ஏழு மணிக்கா வீட்டுக்கு வந்திடு. ஒண்ணா சாப்பிட்டுவோம்” என கிளம்பினார்.

அன்று இரவு பாட்டியின் வீட்டில் இரவு உணவு பரிமாறப்படக் குடும்பமாக அனைவரும் உண்டனர். விட்டுப் போன பல வருடப் பேச்சு நடு இரவு வரை நீண்டது. அனைவரும் கிளம்பும் வரை ரகு பிடித்திருந்த அவனது ஐயாவின் கரத்தை விடவே இல்லை. ஐந்து வயதில் அந்தக் குடும்பத்தில் எப்படி இருந்தானோ… அப்படியே மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டான் ரகு.

நடப்பதை எல்லாம் பார்த்து அமர்ந்திருந்த நகுலனுக்கு எப்படி உணரவேண்டும் என்று தெரியவில்லை. இது தான் தன் மகன்… இப்படித்தான் அவன் இருப்பான், என அவர் மகனைப் பற்றிக் கட்டி இருந்த கோட்டை, அவர் கண் முன் உடைந்து கொண்டிருந்தது. மற்றவர் கையில் மின்னும் போது தானே தான் தவறவிட்டதின் மதிப்பு தெரிகிறது. நகுலனுக்கும் தெரிகிறது, ஆனால் மகனை எப்படி நெருங்குவது… எப்படி அரவணைத்துக் கொள்வது, எனத் தகப்பனுக்குத் தெரியவில்லை.

வாய் ஓயாது பேசிக்கொண்டே குடும்பமாக அமர்ந்து உணவை உண்ணும் மகன் அவருக்குப் புதிது. எண்ணி எண்ணிப் பேசும் ரகு இவ்வளவு பேசுவானா? கடுவன் பூனை ரகு, இப்படி அடி வயிற்றிலிருந்து சிரிப்பானா? வார்த்தைக்கு ஒரு முறை ‘ம்மா’ என சந்திரிகாவை அழைக்கும் மகன், அக்ஷராவை ‘அம்மா’ என ஒரு முறையேனும் அழைத்திருக்கிறானா என்றால், ‘இல்லை’ என்பதே பதில். “சின்னமா” என்பான். அதுவும் மிக மிக அவசியப்பட்டால் மட்டுமே.

‘என் தாத்தா’ எனச் சலுகையாகத் தாத்தாவைத் தோள் அணைக்கிறான். ‘என் ஐயா’ எனப் பக்கத்து வீட்டு ஆளின் கரம் பற்றி அமர்ந்து கதைக்கிறான். ‘என் செல்லப் பாட்டி’ எனப் பாட்டியிடம் குழந்தையாய் செல்லம் கொஞ்சுகிறான். “பேபி… இந்தா உனக்கு பிடிச்ச லெக் பீஸ்” அவன் தட்டில் இருக்கும் அவனுக்குப் பிடித்த உணவை எப்படி அந்தப் பெண்ணிடம் கொடுக்கிறான்? இவ்வளவு அன்பை எங்குத் தேக்கி வைத்திருந்தான் மகன்?

இவர்களுக்குள் எப்படி இந்த நெருக்கம்? ஐந்து வருடப் பிரிவு இவர்களை ஒன்றுமே செய்யவில்லையா? இதே ஐந்து வருடப் பிரிவில் நான் எப்படி என் மகனை இழந்தேன்? ஒரு தகப்பனாகத் தோற்றுப் போனதை நகுலனால் ஒத்துக் கொள்ளாது இருக்க முடியவில்லை. மகன் வளர்ந்து நிற்கிறான்… அவர் பாசத்தை வேண்டி நின்ற மகன் இல்லை இவன் எனத் தெரிகிறது நகுலனுக்கு. என்ன செய்வார்? அமைதியாக… தவிக்கும் மனதோடு மகனையே பார்த்து அமர்ந்திருந்தார் பெற்றவர்.

‘என் எல்லாமே அங்க தான் இருக்கு’ என மகன் கூறியதின் அர்த்தம் இன்று விளங்கியது. ஏனோ அதற்கு மேல் நகுலனால் அங்கு இருக்க முடியவில்லை. அடுத்த நாள் விடிந்ததுமே புதுச்சேரியை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டார்.

அடுத்து வந்த நாள்களில் ரகுவிற்கும் அவனின் பேபிக்கும் பேசி ஆசை தீரவில்லை. தாத்தாவோடு இருவரும் வாழைத் தோப்பிற்குச் சென்றனர். கடைத் தெருவில் உலா வந்தனர். இருட்டும் வரையும் வீட்டின் பின் இருந்த இடத்தில் கூடைப் பந்து விளையாடினர். பழைய தோழமைகளோடு காலி மனையில் நேரம் கழித்தனர். அந்த வாரம் முழுவதும், பெற்றவர்கள் வேலைக்குச் சென்றதும் பாட்டி வீட்டிற்கு வருபவளின் நேரம் முழுவதும் அவனோடே சென்றது. மாலையில் வேலை முடித்து சந்திரிகா வந்ததும், சந்திரிகாவின் கரம் பற்றிப் பின் வீட்டிற்கு வந்துவிடுவான் ரகு.

தேநீர் போட்டு அவரோடு அமர்ந்து கொள்பவன், இரவு உணவை அவர் தயார் செய்யும் போது அடுக்களை மேடையில் அமர்ந்தே இருப்பான். இருவருக்கும் பேச ஆயிரம் விடயங்கள் இருந்தன. பல வருட ஏக்கம் இது. அது என்னவோ நாள்கள் செல்ல செல்ல ஏக்கமும் ஆசையும் கூடியதே தவிரக் குறையவே இல்லை.

ரகுவின் நாள்கள் மிகமிக அழகானவையாக மாறியிருந்தது. அவனோடு அவனைச் சேர்ந்தவர் நாள்களும் இனிமையாகவே சென்றன.

அரை நாள் வகுப்பு ஆரம்பமானது தாராவிற்கு. கூறியது போலவே தாத்தாவின் ஸ்கூட்டியில் அவளுக்கு ஓட்டுநர் வேலை பார்த்தான் ரகு.

கல்லூரி திறக்கும் நாளும் நெருங்க, ரகு பயணப்பட வேண்டிய நாளும் நெருங்கியது. இந்த ஒரு மாதக் காலத்தின் நினைவுகளோடு அடுத்த ஒரு வருடத்தைக் கழிக்கவேண்டுமே. நேரத்தைப் பத்திரப் படுத்தினான். பொக்கிஷங்களாக நினைவுகளைச் சேகரித்தான்.

சந்திரிகா கையால் நிலாச் சோறு உண்டான். ஐயாவோடு கதைத்தான். குடும்பமாகச் சீட்டு விளையாடினார்கள். அந்த நிமிடம் அந்தக் குடும்பம் பூரண நிறைவோடு இருந்தது என்றால் அது மிகை இல்லை.

இருதினங்களே இருந்தது ரகு கிளம்ப. மனம் சோர்வாக உணர மதியம் போல் உறங்கி எழுந்தவன் மனம் அப்படியே தான் இருந்தது. பாட்டி பின் வாசலில் மலரோடு பேசிக் கொண்டிருந்தார். தாத்தா, மாலை காபியை அருந்தியதும் தோப்புக்குக் கிளம்பிவிட்டிருந்தார். வீட்டிற்குள் சுற்றியவன் தன் அறையின் ஜன்னல் வழிப் பின் வீட்டைப் பார்த்தான்.

வந்த அன்று அவளைக் கண்டது, உள்ளுக்குள் எழுந்த இனம் புரியாத தடுமாற்றம் என அனைத்தையும் அசைபோட்டது மனது. அதன்பின் அப்படி எல்லாம் இருவருமே தடுமாறவில்லை. மனதில் ஒன்றும் இல்லையோ என நினைத்தும் விட்டான். ஆனால்… கிளம்பும் நாள் நெருங்க நெருங்க மனம் ஏன் இந்த பாடுபட வேண்டும் எனப் புரியவில்லை.

தில்லியின் நட்பு தில்லியோடு சென்றிருக்க, கான்பூரில் அப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளும் படி நட்பு இல்லை. தாத்தா ஒருவருக்காகச் செல்ல வேண்டும். தாத்தாவைத் தனித்து விட்ட அப்பாவின் மேல் கோபமாக வந்தது.

மீண்டுமாக மெத்தையில் விழுந்தான். புரண்டான். அமைதியானான். எழுந்தான். அறையைச் சுத்தம் செய்தான். அடுத்து? அமைதியாக அமர்ந்தான். நடக்கப் போவதைத் தடுக்க முடியாது எனும் போது ஏன் இவ்வளவு யோசனையும் குழப்பமும்? ‘செமஸ்டர் முடியட்டும் வரலாம்… போகாதன்னு யார் சொல்ல போறா?’ என ஏதேதோ கூறி மனதைச் சமன் செய்தவன், பெட்டியை அடுக்க ஆரம்பித்தான்.

அறை வாயிலில் நிழலாட அவன் பார்வையில் விழுந்தாள் பெண். கதவோடு கதவாக நின்றிருந்தவள் முகத்தில் கலவரம்.

“ந்ந்நாநாளைக்கே ப்ப்போறியா ல்ல்லகு?” என் கேட்டு நிற்பவளைப் பாவமாகப் பார்த்தான். அவளின் தவிப்பு திக்கலாக வெளிவந்துவிட்டது. அவன் தவிப்பை எப்படி உணர்த்துவான்?

“ரெண்டு நாள் இருப்பேன். சும்மா இருக்கும் போதே எடுத்து வச்சிடலாம்ன்னு…” கூறிக் கொண்டே பெட்டியை மூடி அவளைப் பார்க்க, அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள்.

“வா” என அழைத்து மெத்தையில் அமர வைத்து, தானும் அருகில் அமர்ந்தான்.

அமைதியை அவளே களைந்தாள். “எஏன் இப்படி பண்ற லகு?” என்றவளுக்கு அழுகையை கட்டுப்படுத்தவே பெரும்பாடாய் போனது.

அவன் எதுவும் கூறவில்லை.

“ஒ..ஒவ்வொரு லீவுக்கும் நீ வந்துட மாட்டியான்னு எவ்வளவு எதிர்பார்ப்பேன் தெரியுமா? ந்ந்நீ வரவே இல்ல ரகு. ந்நீ என்னை மறந்திட கூடாதுன்னு சாமி கும்பிடுவேன் தெரியுமா? ப்போன வருஷம் நீ வருவன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். இங்க தான காலேஜ் படிப்பேன்னு சொல்லி இருந்த… ஆனா நீ வரவே இல்ல. நீ என்னை மறந்துட்ட, இனி மேல் வரவே மாட்டன்னு நினைச்ச போது எதிர்ல வந்து நிக்கிற. என் லகு வந்துட்டான்னு சந்தோஷப்பட்டு முடிக்கிறதுக்கு முன்ன, நீ கிளம்பற…” என்றவளால் அதற்கு மேல் எதையும் உரைக்க முடியவில்லை.

தோள் சாய்ந்தவளைத் தோளோடு அணைக்க மட்டுமே அந்த நேரம் முடிந்தது.

“அடுத்த லீவுக்கு சத்தியமா வரேன்” என்றவன் முகம் பார்த்தவள், “ப்பௌர்ணமிக்கு மலக்கோட்ட போலாம்ன்னு சத்தியம் செய்தியே அந்த மாதிரியா?” என முறைத்தாள்.

பெரிதாகச் சிரித்தவன், “இன்னும் அதை நினைச்சுட்டு இருக்கியாக்கும்? இன்னைக்குப் போவோமா? என்றவன் கைப்பேசியை ஆராய்ந்து, “இன்னைக்குப் போனா முக்கால் நிலாவ பாக்கலாம்” எனவும் அவள் இன்னுமே முறைக்க, “முறைக்காத பேபி… அடுத்த விசிட்ல மீதி கால் நிலாவ இன்ஸ்டால்மென்ட்ல  பாப்போம்” எனச் சமாதானம் செய்தான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!