Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

22.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 22.2

.

அன்றே இருவருமாக மலைக் கோவிலுக்குச் சென்றவர்களைச் சற்று நேரத்தில் இணைந்து கொண்டார் அவரின் ஐயா. மேல் இருந்து கீழே தெரியும் காட்சிகள் ரகுவின் கண்களுக்கு மிக மிக ரம்மியமாகத் தோன்றியது.



Advertisement

“ம்ம்மேல இருந்து கீழ்ப் பாக்க அழகா இருக்கு இல்ல? எத்தன தரம் பார்த்தாலும் சலிக்கவே மாட்டேங்குது லகு” என்றவளிடம்,   

Advertisement

“ம்ம்ம்…” என்றவன், “எல்லா மலை மேலயும் ஒரு கோவில் கட்டி இருக்கலாம்… மனசாட்சியே இல்லாம மலைய எல்லாம் தரை மட்டம் ஆக்க மாட்டாங்க” எனப் பெருமூச்சொன்றை விட்டான்.  

Advertisement

கண்குளிரச் சொந்த மண்ணை ரசித்துக் கொண்டிருந்தவனிடம், “நீ ஏன் பின்லாந்து போகல ரகு?” எனப் பேச்சை ஆரம்பித்தார் அவனின் ஐயா. அவன் குடும்பத்தை விட்டு தனியே இருப்பது அவருக்கு வருத்தமாக இருக்கவே இந்தக் கேள்வி.

Advertisement

“திருச்சிக்கு வந்திடலாம்ன்னு ஆசபட்டுத் தான் போகல. ஆனா அதுவும் நடக்கல. பாட்டி இல்லாம ராம் தாத்தா தனியா நிக்கவும் என்னால எப்படியோ போங்கன்னு விட முடியல. எந்த வாயசுலயும் தனிமை கொடுமை… அத என்னை விட யாரால அவ்வளவு நல்லா புரிஞ்சுக்க முடியும் சொல்லுங்க?” கேட்டு நின்றவனைத் தோளோடு அணைத்தார் அவன் ஐயா. அந்த அணைப்பில் ‘நாங்க இருக்கோம் டா உனக்கு’ என்ற அர்த்தம் பொதிந்திருந்ததை அவனும் அறிவான்.

ரகு வெகு நேரம் பேசினான். அவரிடம் பகிராத ரகசியம் என ரகுவிடம் எதுவும் இல்லை. அவரும் அப்படித் தான்…. இருவருக்குள்ளும் புரிதல் இருந்தது. அவனிடம் மனதைத் திறக்க அவரும் யோசிப்பதில்லை.

“உன் அளவுக்கு எல்லாம் எனக்கு என் வயசுல பக்குவும் இருக்கல ரகு. கண்டதே வாழ்க்கைன்னு வாழ்ந்தேன். என் நல்ல நேரம்… எனக்கு சந்திரிகா மனைவியா கிடைச்சா. அவ காட்டின இந்த உலகம் ரொம்ப அழகானது.” என அவரும் தன் இளமைக் காலத்தை அவனோடு அசைபோட்டார்.

சூரியன் மறைந்தான். திருச்சி என்றும் போல் அன்றும் மின்னாம் பூச்சியாய் மினுமினுத்தது. வானம் துடைத்து வைத்த பாத்திரம் போல் இருக்க, நிலா பளிச்சென சிரித்தாள். ‘நீ கொஞ்சம் முழுசா இருந்து இருக்கலாம்’ என நினைத்தவன், “பேபி… நல்லா பாத்துக்கோ…என் கணக்குல கால் நிலா தான் பாக்கி” எனச் சிரித்தான்.

சிரித்தவனை திட்டவும் மனம் இல்லாது, முறைக்கவும் மனம் இல்லாது, “போ.. லகு, உனக்கு என் ஆசை மேல அக்கறையே இல்ல” என முடித்து கொண்டாள்.

“என்ன பேபி இப்பிடி சொல்லிட்ட? கண்டிப்பா…” என ஆரம்பித்து மிண்டுமாகச் சத்தியங்களை வாரி இறைத்து, பெண்ணை சமாதான படுத்தி, உச்சி பிள்ளையாரை தரிசித்து, இங்கும் அங்கும் நின்று… அமர்ந்து என அடுத்த ஒரு வருடத்திற்கும் சேர்த்தே பேசி ஓய்ந்தனர் இருவரும்.

நேரம் சென்றிருக்க, வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவனோடு நடந்தவள் நடையில் புதிதாக ஒரு துள்ளல் எட்டிப்பார்த்திருந்தது. கடைத் தெருவைச் சுற்றி வந்தனர். மூவரோடும் சேர்ந்துக் கொண்டார் சந்திரிகா.

“வரும் போது அம்மாட்ட வெளியில சாப்பிடுறதா சொல்லிட்டேன் ரகு. சாப்பிட்டுட்டு போவோம்” என சந்திரிகா கூற நால்வருமாக உணவகம் நோக்கிச் சென்றனர்.

“ஏன் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங்? உன் அம்மா மாதிரி சிவில் சர்வீஸ் பக்கம் போக விருப்பம் இல்லையா?” என்ற ஐயாவின் கேள்விக்கு, “அம்மாவா?” என விழித்தவன், “ஓஹ்… சின்னமாவா? இல்லங்க ஐயா. அதுல இன்ட்ரெஸ்ட் இல்ல” என்றான்.

“அ..அவங்கள இன்னும் சின்னமான்னு தான் கூப்பிடுறியா நீ?” என்றவர் கேள்வியில் அதிர்வு எட்டிப்பார்த்தது.

“சின்னமாவ வேற எப்படி கூப்பிடறதாம்?” என்பவனிடம் அதன்பின் அதைப் பற்றி என்ன பேசிட முடியும்? ஐந்து வயதிலேயே அத்தனை அழுத்தமும் பிடிவாதமும் கொண்டு நின்றவன் ஆகிற்றே, பேசி மாற்ற முடியுமா என்ன?

“நாங்க படிக்கும் போது… இத படின்னு சொல்லுவாங்க. நாங்க படிச்சோம். இப்போ எல்லாம் பிள்ளைங்களுக்கு பொது அறிவு நிறைய இருக்கு. உங்க வாழ்க்கைய இப்படி வாழணும்ன்னு ஒரு தொலை நோக்கு பார்வை இருக்கு. உன்னை பார்க்கவே அவ்வளவு பெருமையா இருக்கு ரகு. சரியா யோசிக்கிற… யோசனையோட நிறுத்தாம அதுக்காக உழைக்கிற. நல்ல எதிர்காலம் இருக்கு ரகு உனக்கு” என சந்திரிகா கூறியதில் ரகு உச்சி குளிர்ந்து போனானோ இல்லையோ பெண் உள்ளுக்குள் குளிர்ந்து போனாள். உச்சி குளிர்ந்தது மட்டுமா? ரகு எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்ற எண்ணமும் உள்ளுக்குள் பதிந்து போனது.   

“அப்போ வடக்கு பக்கமே இருந்துட போறியா?” சந்திரிகா கேட்க, “இல்ல மா… அங்க தாத்தாவ தனியா விட முயல. தெம்பா இருந்தாலும் வயசாகிடுச்சா… அது தான்…”

“அ..அ..அப்போ, உன் தாத்தாவ விட்டுட்டு வர மாட்ட? அப்படி தான?” எனக் கேட்ட சின்னவள் பார்வையில் அத்தனை வருத்தம்.

“இன்னும் மூணு வருஷம் அங்க தான் பேபி. வேலைய சவுத்ல தான் பாக்கணும். அப்போ அவரையும் கூடவே கூட்டிட்டு வந்திடுவேன். இங்கயும் தாத்தா பாட்டிய பாக்கணும் இல்லையா?” என அவன் பதில் கொடுத்து அவள் வருத்தத்தைத் துடைத்தான்.

நேரம் நீரில் கலந்த சர்க்கரையாகக் கரைந்தது. பேசிக் கொண்டே வீடு வந்தவர்களை இருட்டான தெரு வரவேற்றது.

“கரென்ட் இல்ல… தாத்தா பாட்டி என்ன பண்றாங்களோ?” என இவர்களிடம் விடை பெற்றவன் அவசர அவசரமாகப் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தான்.

“எவ்வளவு பொறுப்பா இருக்கிறான் இல்ல?” சந்திரிகா கேட்க, “அவன் அப்போவே அப்படி தானே” என ரகுவிற்குச் சூட்டப் பட்ட மகுடம் தன் தலைக்கு வைத்ததாகவே உணர்ந்தாள் சந்திரிகாவின் மகள்.

அன்று இரவு வெகு நேரம் சென்றும் தடைப்பட்ட மின்சாரம் வரவில்லை. புழுக்கம் அதிகமாகவும் குடும்பமாக மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டனர். இவர்களைப் பாட்டி வீட்டின் மாடியிலிருந்து பார்த்தவன், “நானும் வந்துட்டேன்” என அவர்கள் ஜோதியில் ஐக்கியமானான்.

அம்மா அப்பாவிற்கு நடுவே படுத்திருந்தவள், “அஅப்பா அம்மா தூங்கிட்டாங்க லலகு. நீ வ்வா லகு… படுத்து தூங்கு” என்றாள் குதூகலத்தோடு. தன் ஐயாவின் அருகில் படுத்துக் கொண்டவனுக்கு தென்றல் கருணை காட்டினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

கரு நீல வானமும், அதில் மிதக்கும் மேகமும், மேகம் பின் ஒளிந்து விளையாடும் நிலவும் மனதை ஈர்த்தன. இருள் கவ்வியிருக்க, வானம் பிரகாசமாகத் தெரிந்தது. நிலவைக் காட்டிலும் நட்சத்திரக் கூட்டம் அவனை வெகுவாய் ஈர்த்தது. மின்னும் நட்சத்திரங்களை எல்லாம் ரசிப்பான் எனக் கனவு கூட கண்டதில்லை. காணாத கனவை எல்லாம் காண்பது சரி தானா? மனம் குழம்பித் தவித்தது.

மரங்கள் எல்லாம் கற்சிலைகளாக மாறியிருந்தன. வெக்கையில் பெண்ணிற்குத் தூக்கம் வருவேனா என்றது.

“ல்லகு? தூங்கிட்டியா?” என மெல்லக் கேட்டாள்.

அறையும் குறையுமாக உறக்கத்தினுள் மூழ்கி இருந்தவன், “உன்ன வச்சுகிட்டு தூங்கிட்டாலும். சொல்லு?” என்றான்.

“உன் சின்னமா என்ன பண்றாங்க?”

“தூங்கறவன எழுப்பி இத கேட்டே ஆகணுமா?”

“எஎனக்கு தூக்கம் வரலியே. ச்சொல்லு ரகு”

“ஃபின்லான்ட்ல இருக்க இண்டியன் எம்பசில வேல பாக்குறாங்க”

“ஓஹ்… அதுக்கு என்ன படிக்கணும்? ஈசியா அந்த வேல கிடைக்குறது?”

“ஐஃப்எஸ்! ஐஏஎஸ், ஐபிஎஸ் மாதிரி தான் ஐஃப்எஸ்-சும். நிறைய படிக்கணும்… நிறைய பொது அறிவ வளர்த்துக்கணும். அவங்க ஒரு வருஷம் இதுக்காக மட்டுமே சாப்பாடு, ரெஸ்ட், குடும்பம், தூக்கம்ன்னு எல்லாத்தையும் மறந்து அப்படி படிச்சாங்க. முதல் அட்டெம்ன்ட்-ல சிவில் சர்விஸ் எக்ஸாம்ல நல்ல ஸ்கோர்ல பாஸ் ஆனாங்க. ஈசி எல்லாம் இல்ல.”

“ஐஃப்எஸ்-னா?”

“இண்டியன் அட்மெனிஸ்ட்ரேட்டிவ் சர்விஸ், இண்டியன் போலீஸ் சர்விஸ் மாதிரி இண்டியன் ஃபாரின் சர்விஸ்”

“ந்நீ ஏன் லகு அந்த மாதிரி படிக்காம, எ..எஞ்சினியரிங் படிக்கிற? நீயும் வெளி நாடு எல்லாம் போயிருக்கலாமே”

“படிச்சிருக்கலாம். விருப்பம் இருந்திருந்தா கண்டிப்பா படிச்சிருப்பேன். ஆனா விருப்பம் இல்லியே. ஒரு இடத்துல படிப்பு… வேற ஒரு இடத்துல டிரெயினிங், அப்பறம் ஊர் ஊரா பிளேஸ்மென்ட். அது எனக்கு செட் ஆகாது பேபி. ஊர் ஊரா அலைஞ்சது வரைக்குமே போதும்.

நாலு வருஷம் ஹேப்பியா படிக்கணும். அஞ்சு வருஷம் ஜாலியா வேலைக்கு போகணும், நல்லா சம்பாரிக்கணும்… நல்லா லைஃப ஃப்ரெண்ஸ்சோட எஞ்சாய் பண்ணனும். அப்பறம்… இங்க ஒரேயடியா வந்துடணும்.”

“வ்வேலைய விட்டுட்டுட்டா?”

“ம்ம்ம்… காலா காலத்துக்கு கல்யாணம் பண்ணனும். தாத்தாக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு தோட்டத்த இன்னும் நாலு மடங்கா விரிவு படுத்தணும். குடும்பத்த பிரியாம இதே வீட்டுல ஆச தீர வாழணும். இவ்வளவு தான் பேபி என்னோட ஆசை. இந்த வீடு… நீங்க எல்லாரும்… செய்ய ஒரு தொழில்… அதுல நல்ல வருமானம். நிம்மதியான… சந்தோஷமான… நிறைவான ஒரு வாழ்க்கை. இவ்வளவு தான் எனக்கு வேணும் பேபி”

“எஎன்ன லகு இது தான் எல்லாரும் செய்யறாங்களே… அத போய் பெரிய விஷயமா பேசற?”

“நமக்கு எது எட்டாக் கனியா இருக்கோ… அது மேல தானே நம்ம கண்ணு நிலைக்கும்? இதுவும் அப்படி தான். நீ… தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, ஒரே ஃப்ரெண்ட்ஸ், ஒரே ஸ்கூல்ன்னு வாழற பேபி. அதனால உனக்கு அதோட மதிப்பு தெரியல. எனக்கு அது எட்டா கனவு. அதுனால தான் இந்த வீட்டுலயே வாழணும்ன்னு தீரா ஆசை.” என்றான் கண்கள் மூடி அந்த காட்சிகளில் மூழ்கி.

காட்சி மிகவும் அழகாக இருந்தது. அதில் அவன் தாத்தா பாட்டி மரத்தடி ஈசி சேரில் சாய்ந்து அமர்ந்திருக்க, வீட்டு வரண்டாவில் அவன் ஐயாவும் அம்மாவும் இவன் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். இவன் நிறைவான வாழ்க்கையை மனைவியோடு அனுபவித்துக் கொண்டிருந்தான்.

“ந்நல்லா கனவு காணற லகு”

“ம்ம்ம்… கண்டிப்பா நிறைவாகும் என் கனவு. நீயும் கலெக்டர் ஆகணும்ன்னு பெரிய கனவெல்லாம் வச்சிருக்கியே… எனக்கு அவ்வளவு பெருமையா இருக்கு” என்றான் பெருமை பொங்க.

“இஇரு இரு… ந்நீ பாட்டுக்கு பேசிட்டே போகாத. எஎன்னால எல்லாம் சோறு தண்ணி இல்லாம படிக்க முடியாது. நான் சிவில் சர்வீஸ் எல்லாம் எழுத மாட்டேன் பா! ஒஒரு டிகிரி தான் என்னால முடியும்” என பின் வாங்கினாள் பெண்.

“நீயும் உன் கனவும்! சரி படிப்பு வேண்டாம். வேற என்ன பண்ண போற?”

“நல்லா சம்பாதிக்கிறவன கல்யாணம் பண்ணிட்டு ஹாப்பியா இருப்பேன்”

“உன் கனவு என்னுதவிட இன்னும் நல்லா இருக்கே.” என வாய்விட்டு சிரித்தான் ரகு.

“இது ஒரு ஆசையா டி? தூங்காம என்ன கதை… அப்பா எழும்பிட போறார். தூங்குங்க” என்றார் இவர்கள் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டு படுத்திருந்த சந்திரிகா.

“ரெண்டு பேரும் ரெண்டு பக்கம் படுத்துட்டு என் காது வாழியா பேசிக்கிறாங்க. நான் எங்க இருந்து தூங்க?” எனச் சிரித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தார் ரகுவின் ஐயா.

“தண்ணி எடு சந்திரிகா” எனவும், அவர் அருகே இருந்த நீரைக் கணவனிடம் நீட்டியவர் சுவரில் சாய்ந்து அமர்ந்தார்.

மெல்ல மரக் கிளைகள் அசைந்தன. “இப்பவாது காத்துக்கு நம்ம மேல கரிசனை வந்துதே” என ரகுவும் எழுந்து அமர்ந்தான். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் வீசிய தென்றலின் இதத்தில் ஒவ்வொருவராகக் கண்ணயர ஆரம்பித்தனர்.

காற்று நன்கு வீச ஆரம்பித்தது. சந்திரிகாவின் கண்கள் தூக்கத்தில் மூட ஆரம்பித்தன. கணவனும் மகளும் தூங்கியிருக்க ரகு அமர்ந்த இடத்தில் அமர்ந்தே இருந்தான்.

கால் நீட்டி, கைகள் இரண்டையும் பின்னுக்கு ஊன்றி நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “என்ன டா தூக்கம் வரலியா…?” என்றார் சந்திரிகா.

யோசனையில் இருந்தவன் அன்னையைப் பார்த்தான். பெற்றவள் இவள் இல்லை என்றாலும் அன்னை என்றால், அது சந்திரிகா மட்டுமே. இவரை விட்டுக் கொடுக்க முடியுமா? இவரின் நம்பிக்கையை உடைக்க முடியுமா தன்னால்? முடியாதே! “இல்ல மா” என்ற ரகுவிற்குள் சின்ன தடுமாற்றம். அவன் ஆசை இவர்களைப் பிரித்துவிட்டால்…? மனம் பாரம் கொண்டது.

எழுந்து ரகுவின் அருகில் அமர்ந்தவர், “பாடவா?” என்றார்.

அன்னை மடியில் படுத்தவன் சிகையை அவர் கோத, “என் மேலான உங்க அன்போட எல்லை என்ன மா?” என்றது அவருக்கு உண்மையிலுமே புரியவில்லை.

“என்ன ரகு? எனக்கு புரியல” என்றவரிடம், அவனுக்கே விளங்காத ஒன்றை என்னவென்று விளக்குவான்?

“ஒரு வேள நான் செய்யற ஏதாவது உங்களுக்கு பிடிக்கலன்னா… என்னை போடான்னு விட்டுடுவீங்களா?”

“என்ன கேள்வி இது? எனக்கு நீயும் தாராவும் வேற வேற இல்ல ரகு. அவள எப்படி என்னால விட முடியாதோ அதே போல தான் உன்னையும் விட முடியாது. நான் உன் மேல வச்சிருக்க அன்புக்கு எல்லை கோடு எல்லாம் இல்ல டா” என்றார்.

எழுந்து அமர்ந்தவனுக்குள் யோசனை. “எனக்குத் தாத்தா பாட்டி நீங்க ஐயா பேபி எப்பவும் என் வாழ்க்கைல வேணும் மா.” என்றவன் அதற்கு மேல் எதுவும் கூறவில்லை.

“எங்க டா போக போறோம்? நல்லபடியா படிச்சு முடிச்சுட்டு வா… இங்கயே தான் இருப்போம்” என்றார்.

“தூக்கம் வருது தூங்கு டா” என்றவரை மடி சாய்த்தான்.

“தூங்குங்க” என்றவன்,

“வாழும் காலம் யாவுமே; தாயின் பாதம் சொர்கமே

வேதம் நான்கும் சொன்னதே; அதை நான் அறிவேனே

அம்மா என்னும் மந்திரமே, அகிலம் யாவும் ஆழ்கிறதே…

ஆராரிராரோ.. நான் இங்கு பாட,

தாயே நீ கண் உறங்கு

என்னோட மடி சாய்ந்து” என அன்னைக்குத் தாலாட்டு பாடினான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!