Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

24.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 24.2

.

“என்ன டி பார்வ இது? இதுக்கே உன்ன கதற விடல” என அவள் முகம் நோக்கி நரநரக்க, பெண்னின் கண்கள் மேலும் விரிந்து உடல் பின்னோக்கிச் சென்றது.



Advertisement

“டேய் கௌத்தமா… வேணான் டா… தேவ இல்லாம பிரச்சனைய இழுத்துவிட்டுட்டு இருக்க” என அவன் கையை பிடித்துப் பின்னோக்கி தோழன் இழுக்கக் காரணம் இருந்தது. புகார் என்று வந்துவிட்டால், இப்படியான நடத்தைக்குத் தயவு தாட்சணியமின்றி அவன் சீட்டு கிழிந்துவிடும் அங்கு.

கேன்டீன் விஷயமாகக் கல்லூரிக்குள் நுழைந்த தாக்ஷாயினியின் விழிகள் கௌதமனை தேடியது. அவர்கள் பட்டாளம் வழக்கமாக இருக்கும் இடம் நோக்கி வந்தவளின் கண்களில் விழுந்ததை நம்பமுடியாது என்னவென விசாரிக்க, விழிகள் விரிந்தன.

Advertisement

Advertisement

நடப்பதைப் பார்த்துக்கொண்டே அவனை நோக்கி ஓடி வந்த தாக்ஷா, “கௌதம் வேண்டாம் பிளீஸ்” என அவனைத் தன்னோடு இழுக்க, “விட்றி, இவட்ட எனக்கு ஒரு கணக்கு இருக்கு. அத சரி செய்யாம விடுறதா இல்ல!” என்றான்.

“கௌதம்… திஸ் இஸ் நாட் யூ” என கௌதமனை தன் பக்கம் இழுத்தாள் தாக்ஷா. உண்மை தானே, தன் நிலையை அவள் முன் இழந்து கொண்டு தானே இருக்கிறேன் என உணர்ந்தவன் தன்னை நிலைப்படுத்தி, “ஒண்ணும் இல்ல… சின்ன கணக்கு. டேலி பண்ணிட்டு வரேன்” எனப் புன்னகைத்த வண்ணம் யசோவின் பக்கம் சென்றான்.

Advertisement

“சொல்லுங்க மேடம்… எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு பார்த்த ஒரே காரணத்துக்காக எல்லார் முன்னாலையும் அசிங்க படுத்தினிங்களே… இப்போ என் டர்ன். நீங்க ரெடியா?” என மீண்டும் பெண்ணை நெருங்கினான். இம்முறை சீற்றமெல்லாம் இல்லை… நக்கல் தொனி மட்டுமே. அவன் புன்னகை முகமும், அழுத்தமான குரலும் யசோவுக்குள் சற்று பயத்தை உண்டு பண்ணியது. அவனுக்கும் அவளுக்கும் இடையே சென்டிமீட்டர் தூரம் மட்டுமே இருக்க,  ‘அன்று போல் இன்றும் ஏதேனும் செய்துவிடுவானோ?’ நினைத்த மாத்திரத்தில் கால்கள் பலம் இழக்க ஆரம்பித்தன.

இம்முறை, “என்ன பேபி? ரெடியா?” என்றான், அவள் காதருகில், நிதானமான, சத்தமில்லா ஆழமான அழுத்தமான குரலில். காலின் நடுக்கம் உடல் முழுவதும் பரவுவதை யசோவால் உணர முடிந்தது. உடல் முழுவதும் உஷ்ணமும் வியர்வையும் துளிர்க்க ஆரம்பித்தது.

கண்களை மூடினாள். “என்ன பேபி? ரெடியா?” அழுத்தமான ஆழமான அந்தக் குரல் உள்ளுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தியது. அவளுக்குள் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கும் அதே குரல். தனக்குள் பிரளயத்தை ஏற்படுத்தியவனை யசோ பார்த்தாள். யசோவின் பார்வை அவன் மீது இருந்தாலும் அவள் கவனம் அங்கில்லை. அழுத்தமான, ஆழமான ஆண்மை ததும்பும் குரலில்… தன்னவனும் காதுக்குள் பேசினான். சற்று முன் கேட்டதற்கும் இதற்கும் அவ்வளவாக வித்தியாசம் இருக்கவில்லை. அருகில் நிற்பவனை முதல் முறையாகக் கவனித்தாள். அதே உயரம். முகச் சாயலில் ஒற்றுமை இல்லை. தன் முன் நீளும் நீள நீள விரல்கள், நிறம், உடல் வாகு என அனைத்தையும் கவனித்தவளுக்கு உடல் நடுங்கியது.

கௌதமன் ஏதேதோ பேசினான். இவளுக்கு கேட்டும் கேட்காத நிலை. விழிகள் அவனையே பார்த்தபடி இருந்தன. காதுக்குள் ரகசியம் பேசிய கௌதமனின் தலை முடி கன்னத்தில் உரசியும் நின்ற இடத்தில் வேர் பிடித்து நின்றிருந்தாள் யசோ. யசோதரா, கௌதமனின் அழுத்தமான குரலில் கட்டுண்டு நின்றிருக்க, அவளின் வலி தாங்கிய பார்வையும் அவளின் கூந்தலில் சொருகியிருந்த பன்னீர்ப் பூவின் மணமும் அவனை ஏதோ செய்தது. என்ன செய்கிறது? அதுவும் புரியவில்லை. அதனால் எரிச்சல் மேலோங்கியது.

“யார் டி நீ? எதுக்கு இப்படி பாக்குற?” என்றவன் இதயம் அதி வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. மகளை நினைவு படுத்துவதாகப் பார்க்க ஆரம்பித்தவனுக்கு இப்பொழுது மனதில் ஏதோ நெருடல். அவள் மீதிருந்து வரும் வாசமும், அவள் நெற்றியில் பூக்க ஆரம்பித்த வியர்வை துளிகளும், வலி நிறைந்த அந்த விழிகளும் கௌதமனை சுழலுக்குள் இழுத்தது. புரியாத புதிராய்… தொண்டையில் மாட்டிக் கொண்ட மீன் முள்ளாய் நெருடுகிறாள்.

அவள் கண்களில் அச்சத்தையும் அவமானத்தையும் பார்க்க நினைத்தது உண்மை. அதைக் காணவே வரம்பு மீறிய பேச்சு. ஆனால் இந்தப் பார்வை? கணத்தின் கனத்தைக் கையாள முடியவில்லை கௌதமனால். எதையோ நினைத்து ஆரம்பித்து, அவனையும் மீறி எதையோ செய்வது புரிகிறது. ஆனால் வெளி வரத் தெரியவில்லை கௌதமனுக்கு.

அவள் பார்வை அவனுக்குள் ஒரு தவிப்பை ஏன் உண்டுபண்ண வேண்டும்? “ஏய்…. யார் நீ? என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்படி என்னை பாக்கிற?” கரம் அவள் கன்னம் பற்ற வரவும், இதற்கு மேல் இவனை விட்டால் நிச்சயம் பிரச்சினை தான் எனப் புரிந்து, கன்னம் பற்றச் சென்ற கரத்தை இழுத்துக் கொண்டு நகர ஆரம்பித்தாள் தாக்ஷா.

திரும்பிப் பார்த்துக் கொண்டே போகும் அவனோடு அவள் பார்வையும் சென்றது.  

“இந்த வயசுல இது என்ன சின்ன பையன் மாதிரி ரேகிங் எல்லாம்? இது நீ இல்லியே… ஏன் கௌதம் உன் தரத்த மறந்துட்டு இந்த மாதிரி ஒரு பொண்ணுட்ட மல்லுக்கு நிக்கிற? உன் ரேஞ்சுக்கு உன் பக்கம் கூட வர முடியாதவ, தேவ இல்லாத டிராமா எல்லாம் போட்டு உன் அட்டென்ஷன அவ பக்கம் இழுக்கிறது தெரியலியா? அவள ஃபிரியா விடு கௌதம்.” எனப் பேசிக் கொண்டிருந்தவளின் கரம் கௌதமனை தன்னோடு இழுத்துச் சென்றது.

நடந்து கொண்டே மூச்சை வாய் வழியே வெளியேற்றியவன், “இருக்கும் இருக்கும்! லூசா இருப்பா போல… டென்ஷன் பண்ணிட்டா மனுஷன!” எனத் தலையைச் சிலுப்பி தன்னை சமன்செய்தான்.  

 கௌதமனோடு கூட்டமும் கலைந்தது. சென்று கொண்டிருக்கும் கௌதமனை பார்த்த யசோவின் மாய கட்டு அவிழ்க்கப்பட, அவன் அமர்ந்திருந்த இடத்தில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். ‘என்ன பைத்தியக்கார நினைப்பிது? குரல்… நிறம்… உயரம்… விரல்கள்… உடல்வாகு ஒன்றுபோல் இருந்தால் என்ன? இப்படித் தான் உன்னை மறப்பாயா?’ தன்னையே சாடினாள்.

‘மனசுக்கு மாறுதலா இருக்கும் போயிட்டு வாமா’ என அப்பா கூறாது இருந்திருந்தால், இந்தப் பக்கம் வந்திருக்கவே வேண்டாம். மனம் தவியாய் தவித்தது. மீண்டும் மீண்டும் அவன் குரல் காதுக்குள் ஒலித்தது. அவனில்லா உலகம் கசந்தது. நீ இருக்கும் இடத்திற்கு என்னையும் கூட்டிச் செல் எனக் கத்தி கதற வேண்டும் போல் மனம் வலித்துக் கொன்றது.

“யசோ மா… என்ன ஆச்சு? என்ன டா பண்ணுது?” என ரித்விக் அருகில் அமரவும், நடுங்கும் கரங்களை இணைத்து கொண்டு, ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தாள். எப்படியோ ஆரம்பித்த விடியல் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மன நிலைக்குத் தள்ளியிருந்தது.

“இங்க இப்போ என்ன டா நடந்துது?”

“அந்த பொண்ணு கல்லு மாதிரி அசையாம நின்னத பாத்தியா?” நண்பர்கள் பேசிக்கொண்டே வகுப்பை நோக்கி தங்களின் நடையைப் போட்டனர்.

“லைப்ல இப்படி ஒரு ரேகிங்க பார்த்ததே இல்ல டா”

“கௌதமனுக்கு என்ன டா ஆச்சு திடீர்ன்னு?”  

“எந்தப் பேய் பூந்துச்சோ… அவன் ஒரு பக்கம் ஆடி தீத்துட்டான்! சத்தியமா பிரின்சி முன்னாடி நிக்க விடாம நகர மாட்டான்னு அரண்டுட்டேன் டா” என்ற சுரேஷிடம், “கவனிச்சியா… நம்ம கோச் அவ பக்கத்துல உக்காந்திருந்தத? அவருக்கு தெரிஞ்ச பொண்ணு போல. மாட்டி விட்டான்னு வை…” மற்றவன் புலம்ப, “எல்லாம் இந்த வெண்ணையால” என மைக்கேலின் முதுகில் ஒன்று வைத்தான் சுரேஷ்.

 “சும்மா அவள கொஞ்ச பயமுறுத்த நினைச்சேன். அதுக்கு ஏன் டா இப்டி தொட நடுங்கற?” என்றான் மைக்கேல்.

“அவள நீ பயமுறுத்தினதும்…. அவ பயந்து நடுங்கினதையும் தான் பார்த்தேனே” என வாய்விட்டு சுரேஷ் சிரிக்க, “காலேஜே பார்த்துச்சே” என கோரஸ் பாடினர் மற்றவர்.

“டேய்… டேய்… மூட்றா பட்டர்” என ஓடிச் சென்று கௌதமனோடு இணைந்து கொண்டான் மைக்கேல். பேச்சும் கலாட்டாவுமாக வகுப்பறைக்குள் புகுந்த கௌதமனுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் “ஹெச்ஓடி ஈஸ்வரி மேம் கூப்பிட்டாங்க கௌதமன்.” என்ற அழைப்பு வந்தது. இடைவேளையில் வந்து பார்க்கக் கூறியிருந்தார்.

அவன் சென்ற நேரம், அறைக்குள் ஈஸ்வரி மட்டும் தான் இருந்தார்.  அவரை பார்த்ததும் பல்லைக் காட்டினான் கௌதமன். “மார்னிங் மேம்” எனச் சிரிப்போடே நுழைந்தவனை அவர் பார்த்த பார்வையில் “என்ன மேம்…” என அவர் முன் நின்றான்.

 ஒரு வருடமாக படிக்கும் கௌதமன், பேராசிரியர் ஈஸ்வரியின் நன்மதிப்பைப் பெற்றவன். அவரின் கணவன் ராஜ்மோகன், யாழினியாளின் குழந்தை மருத்துவர் என்பதால் முன்பே இவனைப் பழக்கம். அந்தப் பழக்கம் கல்லூரியிலும் நீண்டது. தினமும் ஒருமுறையேனும் அவரை பார்த்து ‘ஹலோ’ கூற வருவான். அவரும் யாழியை விசாரிப்பார். இருவரும் குழந்தையைப் பற்றிப் பேசாத நாளில்லை. ஆனால் இன்றுதான் புகாரின் அடிப்படையில் வந்து நிற்கிறான்.

 ஒரு சிறு கறுப்பு காகிதத்தை அவன் முன் தள்ளி வைத்தார். அதில் கௌதமன்-சீனியர் என அவன் பெயர், மினுக்கு பேனாவின் உபயத்தால் தங்க நிறத்தில் மினுமினுத்தது. கேலிகிராஃபி என்பது ஒரு கலை. அது அழகிய நெளிவு சுளிவான எழுத்தைக் குறிக்கும். பார்க்க, வடிவாக… அழகாக… கிரீட்டிங் கார்டில் இருக்கும் எழுத்து போலவே இருக்கும். அப்படியான அழகிய கையெழுத்தில் மினுமினுத்தது அவன் பெயர்.

தாளை கையில் எடுத்து, “அழகா இருக்கு மேம். இத காட்டவா கூப்பிடீங்க?” எனக் கேட்டவனைப் பார்த்து அவர் முறைக்க, “என்ன மேம்?” என்றான் புரியாது. அவன் காதின் ஜவ்வு கிழிந்து இரத்தம் சொட்டுகிறதா என அவன் தொட்டுப் பார்க்கும் வரை அவனுக்குச் சில பல நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை நடைபெற்றது.

“மேம்… என்ன மேம்? எதுக்கு இவ்வளவு கோபம்?” என்றவனுக்கு இவர் ஏன் அமர்ந்தவாக்கில் ருத்திர தாண்டவம் ஆடுகிறார் என்ற சந்தேகம்.

அவரின் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டிருந்த வாய்ஸ் ரெக்கார்டிங்கை ஓடவிட்டு அவன் பக்கமாகத் தள்ளி வைத்தார்.

“பாடச் சொல்லலாம்… இல்ல ஆடச் சொல்லலாம். ஆனா அந்த கன்றாவிய யார் பாக்கிறது?” என்றதை கேட்வனால் ‘அடிப்பாவி’ என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“நீ தான் சொல்லேன். உன்ன என்ன பண்ணினா உன் கொழுப்பு குறையும்ன்னு.” என்றதைக் கேட்டவன் பாவமாக ஈஸ்வரியைப் பார்க்க, “என்ன கௌதமன் இதெல்லாம்? ஒழுக்கமான, படிக்கிற பையன் மட்டுமா? ரெண்டு வயசு குழந்தைக்கு அப்பா நீ. இப்படித் தான் பொம்பள பிள்ளைட்ட பேசுவியா?” எனக் கைப்பேசியை கையில் எடுத்துக் கொண்டே அவர் மீண்டும் அர்ச்சனையை ஆரம்பிக்க, ‘இத்தோடு நிறுத்திக் கொண்டாளே’ என்ற நிம்மதிப் பெருமூச்சும் வந்தது கௌதமனுக்கு.

“என்ன சொல்ல போற கௌத்தமா?”

என்ன கூறுவான்? ‘இது வெறும் சேம்பில் மட்டும் தான் மேம். பிக் பிக்சர அந்தப் புண்ணியவதி அனுப்பல மேம்!’ என நினைத்ததையா கூறுவான்?

“டேய்… உன்ன தான். ஏன்டா இது தப்புன்னு தோணல?”

“ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடென்ட்ங்கிறனால சின்ன கலாட்டா மேம்.” என்றவனை அவர் பார்த்த பார்வையில், “என்ன மேம்?” என்றான் கேள்வியாக.

“ஃப்ர்ஸ்ட் இயர்ன்னு அவங்க சொன்னாங்களா? அவங்க ஸ்டாஃப் டா” என்றார் அலுப்போடு.

ஒரு முழு நிமிடம் எடுத்தது அவனுக்கு அடித்த மின் அதிர்விலிருந்து விடுபட. சமாளித்துக் கொண்டவன், “ஒண்ணு ஸ்டாஃப்ன்னு சொல்லி இருக்கணும். இல்ல ஐடி கார்ட்ட கழுத்துல தொங்க விட்டிருக்கணும்! ரெண்டுமே இல்ல. சின்ன பொண்ணா தெரியவும், நான் ஃபர்ஸ்ட் இயர்ன்னு நினைச்சேன் மேம். இதுல என் தப்பு எங்க?” என்றவனுக்குத் தப்பென்று தோன்றவெல்லாம் இல்லை. அவளைப் பார்த்தால் அறைவாளாமா? அவளின் செயலுக்குத் தான் இவ்வளவு கூட திருப்பிச் செய்யவில்லை என்றால், தன்னை எல்லாம் யார் மதிப்பா? என்ற எண்ணமே அவன் மனதை நிறைத்திருந்தது.

“கௌதமன்!”

கண்டிப்போடு அழைத்த பேராசிரியரின் பார்வையை எதிர்கொள்ள இயலாதவனாய்… அவரை சமாதான படுத்தவென, “நான் அவங்கட்ட மன்னிப்பு கேக்கணுமா மேம்?” எனவும், “உன் தப்ப உணர்ந்தா போதுமாம். மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு வந்து நிக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.” என்றார் தகவல் போல்.

‘ஐயோடா என்ன பெரிய மனசு’ மனம் அடங்காமல் பதில் பேசிக்கொண்டே இருந்தது.

“எங்கிட்ட வந்ததுக்கு பதிலா பிரின்ஸிட்ட போயிருந்தா ரெண்டு வாரம் சஸ்பென்ஷன், ஃபைன்னுன்னு உன்ன அவங்க ஒரு வழி ஆக்கியிருப்பாங்க.”

தான் பேசிய பேச்சை மனதினில் ஓட்டி பார்த்தான். கன்னம் பற்றச் சென்ற செயல் கண்முன் தோன்றியது. ‘சஸ்பென்ஷனா? ஹ ஹ ஹா… நீ பேசின பேச்சுக்குச் சீட்டு கிழிஞ்சிருக்கும் ராசா!’ என நினைத்துக் கொண்டான். நல்லவதான் போல என்ற நினைப்பு மனதிற்கு நன்றாகவே இருந்தது.

“யசோதரா மேம், சேர்மேனுக்கு சொந்தம். அவர் மகள மாதிரி. உன் வாலச் சுருட்டிக்கோ. இனி உன் மேல கம்ப்ளெயின் வந்துது… வீட்டுக்கு காள் போடுவேன்.”

‘அட… பேரு நல்லா இருக்கே. நமக்கு தெரிஞ்ச யாருக்கோ கூட இதே பேரு தான? யாரு…யாரு… யாரோட பேரு?’ என மண்டையை உடைத்துக் கொண்டவனுக்குச் சட்டென நினைவில் வந்தது. ‘என் பொண்ண பெத்தவ பேரு இல்ல… ஆமா அதே தான். இந்த பேர வச்சிருக்கதுங்க எல்லாம் கிறுக்குங்களா இருக்கும் போல.’

“ஒழுங்கா மரியாதையா படிக்கிற உனக்கு என்ன ஆச்சு?”

 ‘என்ன ஆச்சு எனக்கு?’ தெரியவில்லையே! இப்பொழுது அவள் மேல் கோபமெல்லாம் இல்லை. கோபம் எங்குச் சென்றது? அதுவும் தெரியவில்லை. வட்ட பொட்டிட்டு பௌர்ணமி நிலவாய் அழகான பவழ நிற உதட்டுச் சாயத்தோடு சிரித்து நின்ற முகம் நினைவில் வந்து போனது. சிரித்த முகமா? இல்லை இல்லை அன்றும் எள்ளும் கொள்ளுமாகத் தானே நின்றிருந்தான். ஏதோ ஒன்று… அந்த அழகிய முகத்தை மனதில் கொண்டுவந்து, தன் மகளைப் போலவே முறைக்கும் அவளின் முகபாவங்களை ரசித்தான்.

“உன்னத்தான் கௌதமா… என்ன நினைச்சுட்டு இப்படி பேசி வச்ச? அதுவும் பேச முடியாத ஸ்டாப்ட்ட?”

கனவில் இருந்து இழுத்து வரப்பட்டவன், “என்ன என்ன மேம்?” என்றான் புரியாது.

“பேச முடியாத பொண்ணுட்ட வம்பு பண்ணிட்டு என்னன்னு என்னை கேளு!” என்றார் சலிப்போடே.

பார்வை அவள் ‘கௌதமன்’ எனக் கிறுக்கியிருந்த தாளின் மேல் விழுந்தது. கையோடு இதழையும் அசைத்து அபிநயம் படித்த பவழ இதழ்காரியால் பேச முடியாதா? ‘இல்லியே கூடகூட மல்லுக்கு நின்னாளே. பேசினா தான…’ என எண்ணியவனுக்கு அப்பொழுது தான் அவள் பேசியது நயன மொழி என மண்டையில் உரைத்தது.

“பேச முடியாதா? ஸ்டாஃப்ன்னு சொன்னீங்க? நான் டீச்சிங்கா?”

“இப்போ அதுதான் ரொம்ப முக்கியம்!” சலித்தவர், “தப்ப உணர்ந்துட்ட தான? இனி இப்படிச் செய்ய மாட்டன்னு நம்பலாமா?” என்றவரிடம், ‘பேச முடியாது ஆனா கை மட்டும் நீளுமோ… மொதல்ல அவ தப்ப உணரட்டும்’ என உள்ளுக்குள் முறுக்கிக் கொண்டான்.

“உனக்கு வக்காலத்து வாங்குற நிலமைக்கு என்னைத் திரும்பவும் தள்ள மாட்டேன்னு நம்பறேன். இப்போ கிளம்பு,” என்றார் ஈஸ்வரி.

அவன் வாயிலை நோக்கி நடக்க ஆரம்பிக்கவும், “அவங்க இருக்க பக்கம் போயிடாத. உன் மேல செம கோவத்துல இருக்காங்க!” என்றவருக்கு புன்னகையையே பதிலாகக் கொடுத்தான்.

அவன் புன்னகைக்குள் அர்த்தம் புதைந்திருக்குமா? ‘ஆமா… அவ எல்லாம் ஒரு ஆளு, இப்போ அவளத் தான் தேடி போறாங்க’ என்பதே அதன் பொருள்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!