Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3..2..1 Episode 3. பட்டிக்காடா? பட்டணமா?

கட்டுவிரியன் பாம்பைப் போல ஊர்ந்து, சோம்பலோடு ஒருவழியாக சென்னையை வந்தடைந்தது அந்த விரைவு ரயில். ரயிலிலிருந்து பதற்றத்தோடு, கணேசனும், காமாட்சியும், வியப்போடு கார்த்திகேயினியும் கீழே இறங்கினார்கள். சென்னையின் முதல் ஸ்பரிசமே, கணேசனுக்கு மூச்சை முட்டியது. தனது கிராமத்தையும், இந்த நகரத்தையும் காலத்தால் இணைக்க முடியாதபடி, புலப்படாத ஒரு இடைவெளி, இதயத்தில் ஒரு இனம்புரியாத பயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

“டீ சாப்பிட்டுட்டுப் போகலாம் வாங்க. அந்த கடையில கூட்டம் அதிகமாக இருக்கிறதைப் பார்த்தால், டீ ரொம்ப நல்லா இருக்கும் போலத் தெரியுது. அந்த கடைக்கே போகலாம்.” கணேசன், மனைவியையும், மகளையும் அழைத்துக்கொண்டு கூட்டமாக மக்கள் மொய்த்துக்கொண்டிருந்த ஒரு கடையை நோக்கிச் சென்றார்.

கடைக்கு அருகில் வந்ததும்தான் தெரிந்தது அது டீக்கடையல்ல பிரியாணிக்கடை என்று. இளைஞர்களும், இளைஞிகளும், வயதானவர்கள் சிலரும் மசாலா வாசனை மணந்த தட்டு பிரியாணியைத் தவிப்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

”தம்பி, இப்படிக் காலையிலயே பிரியாணி சாப்பிட்டால், உடம்பு என்ன ஆகுறது?”, கடைசி வாய் பிரியாணியைக் களிப்போடு ருசித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் கணேசன் பரிதவிப்போடு கேட்க, அந்த இளைஞன், சிரித்தபடியே கணேசனை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு, ‘ஊருக்குப் புதுசா? இந்த அதிகாலை பிரியாணிக்கே இப்படி அசந்திட்டா எப்படி? மிட்நைட் பிரியாணியைப் பார்த்தால் மாரடைப்பே வந்துடும் போல”, கூறிவிட்டு மீண்டும் கூட்டத்தில் தொலைந்து போனான்.



Advertisement

“கட்டையில போறவன் ! காலையில போய் எவ்வளவு அபசகுணமா பேசுறான்! இந்த டீ, காபிலாம் வேணாம்ங்க. முதல்ல ஒரு ஆட்டோ பிடிங்க. ரொம்ப களைப்பாக இருக்குது. போய்க் கொஞ்சம் கண்ணயரணும் போல இருக்குது!”, காமாட்சி தவிப்போடு கூற மூவரும் ஆட்டோ ஸ்டான்டை நோக்கிச் சென்றார்கள்.

அதிகாலை கூட அமைதியாக இல்லாமல் ஆரவாரத்தோடு அலறிக் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. கண்ணுக்குத் தெரிந்த தூரமெங்கிலும் திசையெங்கிலும், மனிதர்கள் வேகமாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருந்தார்கள். அந்த விநோதமான பரபரப்பு மூவருக்குமே வியப்பையும் ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்தியது. மூவரது நடை, உடை, பாவனைகளும் அவர்கள் ஊருக்குப் புதிது என்பதை அப்பட்டமாகக் காட்டிக்கொண்டிருந்தது.

“தம்பி, அண்ணாநகர் போகணும். எவ்வளவாகும்?”, கணேசன் முதலில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவைக் கேட்க, “ஆயிரம் ரூவா”, அவன் கால் மேல் கால் போட்டபடி முன் சீட்டில் சாய்ந்தவாறே, ஒரு காகிதத் துண்டைக் கொண்டு காதைக் குடைந்துகொண்டே கூறினான்.

Advertisement

“தம்பி! அண்ணாநகர் போகக்கேட்டேன். அமெரிக்கா போக இல்லை”, கணேசன் எரிச்சலாகக் கூற, அந்த ஆட்டோ டிரைவர் சட்டென எழுந்தான். கணேசனை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, “ஊருக்குப் புதுசுதானே! நீ எப்படி அண்ணாநகர் போறேன்னு பாத்துடுறேன்!”, அவன் முறைத்தபடியே கூற, அது கணேசனை மேலும் எரிச்சலூட்டியது.

Advertisement

எந்த ஆட்டோவும் அவர்களை ஏற்றாதபடி குறுக்கிட்டுக் கொண்டிருந்தான்.

“என்ன மனுஷங்க? என்ன ஊரு இது. புதுசா ஊருக்கு வந்தவங்கள நல்லபடியா கவனிச்சு அனுப்புவாங்களா? அதவிட்டுட்டு நம்மக்கிட்ட வீம்புக்கு வந்து  நிக்கிறானுங்க. எவ்வளவு பெரிசு பெரிசா கட்டிடங்களும், காசு பணமும் கொட்டிக் கிடந்து என்ன பிரயோசனம்? சக மனுசனுக்கு மரியாதைத் தரணுங்கிற ஒரு அடிப்படை நாகரிகம் கூட இங்க இருக்கிற ஒரு பயலுக்கும் இல்லையே! என்ன ஆனாலும் சரிங்க. நம்ம கார்த்திக்கு இந்த ஊரில மட்டும் மாப்பிள்ளைப் பார்க்கக்கூடாது. இந்த ஊரில கொஞ்ச நாள் தங்கியிருந்தாக் கூட அந்த மாப்பிள்ளை நமக்கு வேணாம்!”, அங்கலாய்ப்போடு காமாட்சி கூறினாள்.

“தேவையில்லாம விசனப்படாத காமாட்சி. இரண்டே இரண்டு வருஷம் தான். அது முடிஞ்சதும் நமக்கும் இந்த ஊருக்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது!”, கணேசன் காமாட்சியை சமாதானப்படுத்தும் விதமாகக் கூறினார்.

Advertisement

ஒருவாறாக, அந்த ஆட்டோ டிரைவருக்கு வேறு சவாரியொன்று  கிடைக்க, அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.

வேறொரு ஆட்டோவை நிறுத்தி, கணேசனும் தன் மனைவி மகளுடன் பதிவு செய்திருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று, குளித்துக் கிளம்பி, புவி ஐ.ஏ.எஸ். அகாடெமிக்கு மூவருமாய்ச் சென்றார்கள்.

சம்பந்தங்களை முடிவு செய்வது சாதாரண மனிதர்களால் முடியுமா?

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!