35.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,912
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 35.1
.
“தாசா ஆண்டி அம்மாவா?” குட்டி காலில் நீல வண்ண ஷூவை அணிவித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் தன் குழப்பத்தை மீண்டுமாகத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தாள் கௌதமனின் செல்ல மகள்.
“ஆமா பேபி” என்றவன், ஆடிக் கொண்டிருந்த அடுத்த காலிலும் காலணியை அணிவித்து விட்டான்.
Advertisement
“அச்சோ அம்மா எங்க?” காலை ஆட்டிக் கொண்டே அதில் மினுங்கும் பட்டாம் பூச்சியைப் பார்த்த மகளின் கவனம் அதில் இல்லை.
“அவங்க தூரமா போயிட்டாங்க” என்றவன், பட்டாம் பூச்சி மின்னிக் கொண்டிருந்த குட்டி ஹேர் பேண்டை மகளின் தலையில் ஏற்றினான்.
“எனக்கு டூ அம்மாவா?” எனக் கேட்ட மகளின் குழப்பத்தை இன்றே நிவிர்த்தி செய்திட நினைத்தவன் நிதானமாகவே பதிலளித்தான்.
Advertisement
“ரெண்டு அம்மா இல்ல பேபி. தாக்ஷா மட்டும் தான் உன் அம்மா” என மகளுக்குத் தெளிவுபடுத்தியவன், மகளை ஒப்பனை மேசையிலிருந்து இறக்கி, மகள் போட்டிருந்த கௌனை ஒழுங்கே இழுத்துவிட்டான்.
Advertisement
“தாக்ஷா இஷ் ஆண்டி. பேபி அம்மா இஷ் அச்சோ” எனத் தகப்பனுக்குத் தன் அன்னையின் பெயரை நினைவு படுத்தினாள் மகள்.
மகளை, தன் திருமண நிச்சயத்திற்குக் கிளப்பிக் கொண்டிருந்த கௌதமனுக்கு மகளுக்கு எப்படி இதை எல்லாம் புரியவைப்பது எனத் தெரியவில்லை. யசோதரா என்ற ஒருத்தியைப் பார்த்தே இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிற்று. யாழியின் நினைவாற்றலைப் பற்றி நன்கு அறிந்திருந்த கௌதமனுக்கு, மகள் இன்னும் யசோவை நினைவில் வைத்திருப்பது ஒன்றும் அதிசயமாக இல்லை. என்றாலும்… மகளின் சிந்தனை பலகையில், யசோவை அம்மா பதவியிலிருந்து இறக்கி, தாக்ஷாவை அந்த இடத்தில் எப்படி ஏற்றுவது என்பது தான் கௌதமனின் மில்லியன் டாலர் கேள்வி.
‘சொந்த ஊர்ல போய் இருக்கலாம்ன்னு அப்பா விரும்பறார். இங்க எங்களுக்குன்னு ஒன்னும் இல்ல. சொந்த ஊருக்கு கிளம்பறோம். டேக் கேர் அண்ட் அட்வான்ஸ் விஷ்சஸ் ஃபார் அ ஹேப்பி மேரிட் லைப்’ என இவனைத் தேடி வந்து அறிவிக்கவில்லை என்றாலும், மருந்தகத்தில் பார்த்த அன்று கடைசியாக உரைத்துச் சென்றாள் யசோ.
Advertisement
“தேங்க்ஸ் யசோதரா” என்ற இவன் பதிலில், தலையைத் தகப்பன் தோளிலிருந்து எடுத்த யாழி பேபி, “அச்சோ அம்மா” என அந்தக் காய்ச்சலிலும் தன் யசோ அம்மாவிடம் பாய்ந்து சென்றாள்.
இம்முறை எந்த யோசனையும் இன்றி கதகதப்பாக இருந்த யாழியைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் யசோ. அன்னையிடம் ஒட்டிக் கொள்ளும் குரங்குக் குட்டியைப் போல் யசோவோடு பசை என யாழி புதைந்து கொண்டாள். இது என்ன விதமான அன்பு என யசோவிற்கு புரியவும் இல்லை, புரிய முற்படவும் இல்லை.
தன் பால் குடித்து, தன் மடியில் வளர்ந்த ஆத்விக் தன்னை ‘அத்தை மா’ என அழைக்க, இவள் தன்னை அன்னையாக நினைப்பதும், அழைப்பதும் யசோவை நெகிழச் செய்தது. அவளால் மட்டும் குழந்தையைத் தள்ளி நிறுத்த முடிகிறதா என்ன? தன்னவன் சாயலில் இருக்கும் குழந்தையிடம் தன்னை தொலைக்கத் தானே செய்கிறாள்? இப்படியே குழந்தையைத் தன்னோடு தூக்கிக் கொண்டு போய்விட முடியாதா என்ற விபரீத ஆசை முளைத்தது உண்மை.
“சாரி” என்றான் கௌதமன். மகள் மறக்கவே மாட்டாளா என்றிருந்தது அவனுக்கு. கண்களை மூடி மகளை உணர்ந்து கொண்டிருந்தவள் விழிகளை உயர்த்த, “அவளுக்கு அம்மா இல்ல. இது வரைக்கும் யார் கிட்டயும் இப்படி என் மக போனதே இல்ல. உங்க பேரும் யசோதராவா இருக்கவே இப்படி பண்றா. தப்பா எடுத்துக்காதீங்க” என மகளின் நிலையை அவன் விளக்க, அன்னையில்லா யசோவிற்கு, அன்னையில்லா குழந்தையின் தவிப்பை உணர முடிந்தது.
மகளைத் தன்னோடு கட்டிக் கொண்ட யசோதராவிற்கும் அன்று யாழியை பிரிவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. துக்கம் முட்டிக் கொண்டு வந்தது. ஆசை தீரும் என நினைத்து அளித்த முத்தங்கள் ஏராளம். ஆசையும் அடங்கவில்லை… பொங்கி வந்த உணர்வும் அடங்கவில்லை. நினைத்த நேரம் பார்க்கலாம் எனத் தெரியும் வேளை பிரிவது சுலபம். இனி யாழியைப் பார்ப்பது நடக்குமா தெரியாது.
அப்படியே பார்த்தாலும், குழந்தை இப்படி ‘அம்மா’ என வாஞ்சையோடே தன்னை கட்டிக்கொள்ளும் நிலையில் இருக்க மாட்டாள் என்ற நிதர்சனம் முகத்தில் அறைய, அந்த உண்மையை உள்ளிறக்குவது சற்று கடினமாகவே இருந்தது யசோவிற்கு.
எச்சிலை உள்ளிறக்கியவளின் தொண்டையிலிருந்து ஏதோ சத்தம் வந்து அடங்கியது. வலியில் அழுவதாக எண்ணினாள் குழந்தை.
“அம்மா ஏன் அலுற? வலிதா?” எனத் தொண்டையை வருடி, துக்கம் படிந்திருந்த முகம் வருடி, கன்னத்தில் சூடான இதழ்களால் ஒத்தடம் கொடுத்தாள் குட்டி மகள். கன்னத்தின் முத்தம் இதமாக நெஞ்சில் இறங்கியது. என் மகள் இருந்திருதால்… என்ற எண்ணம் அலையாய் கொந்தளித்தது. இந்த முத்தம், இந்த அழைப்பு, இந்த அன்பு ஆயுசுக்கும் வேண்டும் என மனம் ஏக்கம் கொண்டது. எழும் ஏக்கம் தவறென்று தெரியும். எழுந்த நியாயமற்ற ஆசையை, அவள் குரலைப் போலவே அடைத்த தொண்டைக்குள் போட்டுப் புதைத்தாள்.
“ஐத்கீம் சாப்பியா? கல்து வலிதா? அப்பா… அம்மாக்கு மந்து வாங்கு… விச் பூசு அப்பா” என்ற மகளை நெஞ்சோடு கட்டிக் கொண்டவள் தன்னையும் மீறி விக்கினாள். ‘சாரி சாரி பேபி. நான்… நான் உன் அம்மா இல்ல. ஆனா உன் அம்மாவா இருந்து இருந்திருக்கலாம்’ என ஏங்கியவளுக்கு, ஒரு வார்த்தை… ‘யாழி’ என ஒரே ஒரு வார்த்தையாவது உரைக்க முடியாதா என ஏக்கம் பிறந்தது. முதல் முதலாகச் சத்தம் எழுப்ப ஆசை கொண்டு… முயன்று தோற்றும் போனாள் யாசோதரா.
மருத்துவர் கூறிய ஆலோசானையை கேட்டிருந்தால், தொண்டைக்கான சிகிச்சையை செய்திருந்தால் ஆசை தீர யாழியைக் கொஞ்சி இருக்கலாமே என மனம் அடித்துக் கொண்டது.
மகளின் கன்னம் வருடி ஆசை பொங்க முத்தம் கொடுப்பவளைப் பார்த்து நிற்பவனுக்குள் மீண்டுமாக அதே ஆசை எழுந்து ஓலமிட்டது. இவளிடம் மகள் ஒட்டிக் கொள்வது போல் தாக்ஷாவிடம் இருக்கலாமே… அவளும் யசோவை போல் யாழியின் மீது அன்பு கொள்ளலாமே… இரண்டுமே நடக்கப் போவதில்லை என உணர்ந்தாலும் ஆசை கொள்வதில் தவறில்லையே?
“என்ன திடீர்ன்னு?” என்று இவன் கேட்க நினைக்கவில்லை என்றாலும் மகளைத் தவிப்போடே அணைத்து நிற்பவளிடம் கேட்காது இருக்க முடியவில்லை கௌதமனால்.
‘அப்பாக்கு அம்மாவோட இழப்புனால பிரோக்கன் ஹார்ட் சின்றோம் வந்து கஷ்டப்பட்டார். அப்பறமும் தொடர்ந்த வருத்தங்கள் எல்லாம சேர்த்து ஹார்ட் அட்டாக்ல கொண்டு விட்டுச்சு. மெடிசின்ல இருந்தாலும், அப்பாக்கு இங்க நிம்மதி இல்ல, மே பி அம்மா வாழ்ந்த இடத்துல அவருக்கு நிம்மதி கிடைக்கலாம். சோ… போறோம்’ என்றவளிடம் சொந்த ஊர் எது… எப்பொழுது செல்கிறாய்? எப்பொழுது மீண்டும் வருவாய்… என்ன சிகிச்சை… என் உதவி ஏதேனும் வேண்டுமா…. எனக் கேட்கக் கேள்விகள் இருந்தாலும், “ஓஹ்” என நிறுத்திக் கொண்டான்.
‘யாழியோட ஃபோட்டோஸ் அப்பப்போ அனுப்புங்க’ எனக் கேட்க ஆசை கொண்டாலும், அவளின் விருப்பங்களை விரலுக்கோ கைப்பேசிக்கோ கடத்தவில்லை, அதனால் அவள் எண்ணங்களும் எண்களும் கௌதமனுக்கு கடத்தப்படவில்லை.
இருவரும் அதன்பின் பார்த்துக் கொள்ளவும் இல்லை, கௌதமனின் சிந்தையில் இன்றுவரை யசோ வரவுமில்லை. இன்று தான் மகள் மீண்டும் ‘அச்சோ அம்மா’ புராணம் பாடுகிறாள்.
கருநீலச் சூட்டில் கௌதமன் இருக்க, மகளுக்குக் கணுக்கால் நீளத்திற்குப் புசுபுசுவென கற்கள் மின்னும் கருநீல ஃபிராக் அணிவித்திருந்தான். அப்பாவின் கரம் பிடித்து படிகளில் குதித்துக் கொண்டே வந்த குழந்தைக்கும் கௌதமனுக்கும் இரத்த சம்பந்தம் இல்லை என்றால் பார்வையற்றவன் மட்டுமே நம்புவான், அப்படி இருந்தது அவர்கள் இருவரின் தோற்றமும்.
இருவரையும் பார்த்து நின்றிருந்த வைஷாலிக்குத் தான் அடிவயிறு கலக்கியது. மகனிடம் பேத்தியை விழாவிற்கு அழைத்து வர வேண்டாம் என ஆயிரம் முறை கூறிவிட்டார். ஆனால் அவன் காதிலும் கருத்திலும் அது ஏன் பதியவில்லை என அன்னைக்குப் புரியவில்லை. பெண் வீட்டாருக்குக் கொடுத்த வாக்கை எப்படிக் காப்பது என வைஷாலிக்கு சத்தியமாகத் தெரியவில்லை. எந்த குழந்தை கௌதமனின் முகத்தில் புன்னகையைப் பூக்கச் செய்தாளோ, அவளே அதை அழித்துவிடக் கூடாதே என்றிருந்தது கௌதமனை பெற்றவளுக்கு.
“என் பொண்ணு சந்தோஷத்துல உங்க ‘வளர்ப்பு’ பேத்தி நடுவில வரக்கூடாது” என்றிருந்தார் பிரியதர்ஷினி. எந்த உண்மை வெளி உலகிற்குத் தெரியவே கூடாது எனக் கௌதமன் தாக்ஷாவிடம் ரகசியம் காக்கக் கூறியிருந்தானோ, அது… அந்த ரகசியத்தை இன்று தாக்ஷாவின் ஒட்டு மொத்தக் குடும்பமும் அறிந்திருப்பதைக் கௌதமன் அறியவில்லை.
“இப்போ இந்தக் குட்டி வந்தே ஆகணுமா?” மனம் பொறுக்காது வைஷாலியின் வாய் முணுமுணுத்தது.
எத்தனை எத்தனை கேள்விகள் அவர்கள் மீது ஏவப்படும்? கௌதமன் எளிதில் கூறிவிடுவான் அது அவன் பெற்ற குழந்தை என. தன் சொந்த மகள் என்றே பார்ப்பவரிடம் எல்லாம் கூறியிருப்பவன் முன்பு ‘அனாதை குழந்தை’ எனக் கூறிட முடியுமா? மகன் கூறும் பொய்யால் இவர்களுக்கு ஏற்படப் போகும் அவமானம்? மானம் மரியாதை என அனைத்தையும் இழந்து நிற்கப் போவது ஏன் மகனுக்குப் புரிய மறுக்கிறது என நினைக்க நினைக்க வைஷாலிக்கு விண்விண்னெனத் தலை வலித்தது. எல்லாவற்றிற்கும் காரணமாகப் போகும் யாழினியாளை எப்படி மகனிடம் இருந்து தள்ளி நிறுத்துவது? அவர் போட்டிருந்த கணக்கை எல்லாம் மகன் அழிப்பான் இல்லாதே அழித்துவிட்டான். மேடையிலும் மகன் கரம் பற்றி இந்த யாழி குட்டியும் நிற்பாளோ?
ம்ம்கூம்…. விடமுடியாதே. இப்பொழுது தான், சில வருடங்களாக இவர்கள் பிரொடக்ஷன் மண்ணை கவ்வியுள்ளது என்ற பேச்சும், கௌதமனை பற்றிய பேச்சும் ஓய்ந்தன. இவர்கள் குடும்பம் மீண்டும் பேச்சு பொருள் ஆவதை வைஷாலியால் சம்மதிக்கவே முடியாது. விபத்தின் முன்பு கௌதமனின் பெயர் நல்ல விதமாக வலம் வரவில்லை. நித்தம் ஒரு தலைவலியை இழுத்து வைப்பான் மகன். மது… மாது… உல்லாசம் என வலைத்தளங்களில் உலா வந்தவனைப் பார்த்து, “என்னத்த பிள்ளைய வளத்து வச்சிருக்காளோ… எவளையாவது இழுத்துட்டு வந்து நிக்க போறான்” என வைஷாலியின் காதுபடவே சொந்தங்கள் பேசி இருக்க, இன்று மகன் இந்தக் குட்டி மகளோடு நிச்சயத்திற்கு வந்தால்…. யோசிக்கவே முடியவில்லை வைஷாலியால். இந்த நான்கு வருடங்களாக யார் கண்களையும் கவராது… யார் வாயிலும் அவலாக அரைபடாததிற்குச் சேர்த்து வைத்துப் பேசுவார்களே. அப்படி ஒன்று நடக்கலாமா? நடக்க விடுவாரா வைஷாலி?
“இன்னைக்கு உனக்கு கல்யாண நிச்சயம். உனக்கும் தாக்ஷாயினிக்குமான நாள். உன் பொண்ண நான் பார்த்துகிறேன். என்ஜாய் த மொமெட்” என பேத்தியின் கரத்தை தனக்குள் எடுத்துக் கொண்டார் வைஷாலி.
“என் கூடவே இருக்கட்டுமே மா” என்றவன் பார்வை, அப்பாவின் கரம் பற்றி தன் கௌனை ஆட்டி ஆட்டி அதில் இருக்கும் கற்கள் மின்னுவதைப் பார்க்கும் அவன் குட்டி மகள் மீதே இருந்தது.
“உனக்கு சொன்னா புரியவே புரியாதா கௌதமா? அந்த பொண்ணுக்கும் அவங்க குடும்பத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்காதா? அவ உனக்கு பிறக்கலனாலும் உன்ன மாதிரியே எல்லாம் செய்யறத பார்த்தா, உன்னையே உரிச்சு வச்சிருக்கோன்னு தோணுது. இன்னைக்கு மட்டுமாது கொஞ்சம் தள்ளி இருங்க ரெண்டு பேரும். என் கூட இருக்கட்டும்.”
“என் மக என்னை மாதிரி இல்லாம வேற எப்படி மா இருப்பா? இன்னைக்கு என் வாழ்க்கையோட மிக முக்கியமான நாள்… என் பொண்ணு எங்க கூட மேடையில வேணும் மா.”
“புரிஞ்சுக்கோ கௌதமா. உனக்கு மட்டும் இல்ல, தாக்ஷாக்கும் இது முக்கியமான நாள். முழு நேரமும் யாழி உன் கூடவே வேண்டாம்ன்னு சொல்றேன் அவ்வளவு தான். நான் அழைச்சுட்டு வரேன்” என்று முடித்துவிட்டார் அன்னை.
இன்று அன்னை அவன் பேச்சைக் கேட்கும் நிலையில் இல்லை எனப் புரிகிறது. மகளைத் தூக்கி கன்னத்தில் அழுந்த முத்தம் ஒன்றைப் பதித்தவன், “அப்பாக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அப்பாவால பேபி கூடவே இருக்க முடியாது. நீ பாட்டி கூட குட் கேர்லா இருக்கணும். சரியா?” எனவும், குழந்தை மண்டையை மண்டை ஆட்ட, மனமே இல்லாது அன்னையின் அருகில் இறக்கி விட்டான். அப்பொழுதும், மகள் அவள் பாட்டியோடு வலம் வருவாள் என்றே நம்பினான் யாழியின் தகப்பன்.
“நீங்க அவனோட கிளம்புங்க. நான் சில திங்க்ச எடுத்துட்டு பின்னாலயே இவளோட வரேன்” என மகனுக்குத் துணையாகக் கணவனை அனுப்பி வைத்தார் வைஷாலி.
கௌதமனின் கார் கிளம்பும் வரை விளையாட்டாக நின்றிருந்த குழந்தை அப்பா தன்னை விட்டுச் செல்வதைப் பார்க்கவும் முகம் வாடி விட்டது. “அப்பா நேணும் பாட்டி. நானுக்கு அப்பா கூட டாடா நேணும்” என்ற பேத்தியின் கோரிக்கையைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை வைஷாலி.
“பாட்டி கூட இருந்தா சாக்கி வாங்கி தரேன்” என மூன்று வயது முடியாத குழந்தைக்கு ஆசை காட்டினார்.
“டூ சாக்கி” என மூன்று விரல்களை மகள் காட்ட, “ஓகே. ரெண்டு சாக்லேட்” எனக் குழந்தையை அவரோடு அழைத்துக் கொண்டார்.
‘இதை எடுத்து வை’ ‘அதை ஏற்று’ எனச் சிலவற்றை காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பத் தயார் ஆனார் வைஷாலி. சின்னவளை வீட்டில் விட்டுச் சென்றால் என்ன… என்ற எண்ணம் வராது இல்லை. ஆனால் மகனுக்குத் தெரிந்தால் பாதியில் கிளம்பி வந்தாலும் வந்துவிடுவான் என்ற அபாயம் இருந்தது அதில்.
‘இந்த சங்கீதா கழுதைக்கு லீவ் போட வேற நாளே கிடைக்கல. அறிவு கெட்டவ!’ பேத்தியைப் பார்த்துக்கொள்ளும் சங்கீதாவை வாய்க்குள் தாளித்தவர், ‘அதிக பிரசங்கி’ என மகனையும் விடவில்லை.
“இன்னைக்கு என்னை பொண்ணு பாக்க வராங்க மா. சாயங்காலம் சீக்கிரம் வர சொன்னாங்க வீட்டுல” என மதியமே கிளம்பிவிட்ட சங்கீதாவின் மேல் கொலை வெறியே வந்தது வைஷாலிக்கு. இவர் எண்ணம் புரியாத கௌதமனோ, “நீ இப்போவே கிளம்பு. இன்னைக்கு பூரா என் கூடத் தான் பேபி இருப்பா. நான் பார்த்துக்கிறேன்” என இவரிடம் கேட்காதே அவளுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டான்.
குழந்தையைப் பார்த்தார். கீழே கிடந்த பலூனோடு விளையாடிக் கொண்டிருந்தாள். வைஷாலிக்கு சின்னவளைப் பிடிக்கும்… ஆனால் இன்று யாழியை, மகனின் குழந்தையென அவரால் ஒருவருக்கும் அறிமுகப்படுத்தவே முடியாது. ‘இந்தக் குட்டிய யாரு சமாளிப்பா’ என வீட்டில் இருக்கும் ஒவ்வொரு வேலையாளையும் அளவிட்டார். குழந்தையைக் கவனிப்பதில் ஏதேனும் குறையிருந்தால் கௌதமனிடம் யார் வாங்கிக் கட்டிக் கொள்வது? அதனாலேயே யாழி என்றால், காத தூரம் ஓடிவிடுவர் வீட்டில் வேலை செய்பவர்.
தாக்ஷாயினியின் அன்னை பிரியதர்ஷினியின் சிரித்த முகம் திரையில் மின்னியது. ‘இவ வேற… இப்போ என்னத்த கேட்டு வைக்க போறாளோ… என் பையன் இப்படி ஒரு குழந்தையோட நிக்காட்டா இவ பேச்ச எல்லாம் கேட்க வேண்டி வருமா எனக்கு?’ எனச் சலிப்பாக நினைத்தாலும், “சொல்லுங்க அண்ணி” என இனிமையாகவே ஆரம்பித்தார் வைஷாலி.
“நீங்க சொன்னத எல்லாம் தாக்ஷாவோட அனுப்பிட்டேன். தாக்ஷா அவ ஃப்ரெண்சோட ரெசார்ட்டுக்கு கிளம்பிட்டா. நானும் கிளம்பறேன். நீங்க எல்லாம் கிளம்பியாச்சா?” என்றவரிடம், “சின்ன பிரச்சன” என்றவர், “இந்த சங்கீதா இன்னைக்குன்னு பாத்து லீவ் எடுத்திடுச்சு. யாழிய பாத்துக்க ஆள் இல்ல.” என இவரின் தலையான பிரச்சினையைக் கூற, “ரெண்டு நிமிஷம் தாங்க, இவள பாத்துகிற லீலா பொண்ணு ரெசார்ட்ல இருக்கான்னு கேட்டு பாக்கிறேன்.” என்ற பிரியதர்ஷினி அடுத்த ஐந்தாவது நிமிடம் மீண்டும் அழைத்தார்.
“லீலா பொண்ணுக்கு ஏகப்பட்ட வேல இருக்கு போல. நீங்க சின்னகுட்டிய கூட்டிட்டு வாங்க. ரெசார்ட் வந்துட்டு, பார்க்கிங்ல இருந்து ஃபோன் போடுங்க. என் அக்கா பேத்திங்கள பாத்துகிட்ட விஜி பொண்ண வர சொல்லி இருக்கேன். அவ யாழினிய பாத்துப்பா.” என பிரியதர்ஷனி கூறவும் “சரி” என்றவருக்குத் தோளிலிருந்து பெரிய பாறாங்கல்லை இறக்கிய நிம்மதி. பலூனோடு விளையாடிக் கொண்டிருந்த பேத்தியை காரில் ஏற்றினார்.
“பலூன் நேணும்” என்றாள் யாழி. “நீ சமத்தா இருந்தா வீட்டுக்கு வந்ததும் டூ பிங்க் பலூன்” என்ற வார்த்தை அழகாக வேலை செய்தது. மகிழுந்தில் அமர்ந்த குட்டி மகள், உடுப்பில் இருந்த பட்டாம் பூச்சிகளையும் அதன் சிறகில் இருந்த வெண்கற்களையும் பிய்த்து விளையாட ஆரம்பித்தாள்.
சின்னவளைப் பார்த்த வைஷாலி மகளின் கைகளை விலக்கவும் இல்லை, ‘அப்படி பிக்காத’ எனக் கூறவும் இல்லை. ஏதாவது செய்துகொள் என விட்டுவிட்டார்.
சற்று நேரம் ஜோராகச் சென்றது சின்னவளுக்கு. கைப்பேசி அழைப்புகளுக்கிடையே, “அப்பா எங்க பாட்டி?” என்ற குழந்தையின் அனத்தல் வைஷாலியின் பொறுமையை சோதித்தது. “அப்பா நேணும்” என்ற அனத்தல் சிணுங்கலாக மாறியது. அழ ஆரம்பித்தால் எப்படி அடக்குவது? வெளியே பார்த்துக் கொண்டே வந்தவருக்குச் சட்டென ஒரு யோசனை.
“டிரைவர் கார அந்த பார்மசி பக்கம் நிறுத்து” என்றார்.
வாகனம் நின்றது. வைஷாலி கூறியவற்றை வாங்கி வந்தான் டிரைவர். இரு மூடி இருமல் மருந்தைக் குழந்தையின் வாயில் ஊற்றியவர், அவள் அழ ஆரம்பிக்கும் முன் “சாக்லேட் சாப்பிடு. அப்பாட்ட போலாம்” என்றார்.
பார்த்த ஓட்டுநர், நான்கு வயதுக் குழந்தையின் தகப்பன் என்பதால், “அம்மா அது பெரியவங்க மருந்து மா. பாப்பாக்குன்னு சொல்லி இருந்தா கேட்டு வாங்கியாந்திருப்பேன்மா” என்றான் தவிப்போடே.
“அது எல்லாம் ஒண்ணும் பண்ணாது. நீ கிளம்பு” என டிரைவரை விரட்ட, அவன் பார்வை அவ்வப்போது பின் இருக்கையில் அமர்ந்து ஒழுக ஆரம்பித்திருந்த அந்த சாக்லேட் பாரை நக்கிக் கொண்டிருந்த குட்டி மகளைத் தழுவி விலகியது. மனம் ஆறவே இல்லை அவனுக்கு. குழந்தைக்குச் சளியோ காச்சலோ இருமலோ இல்லை. பின் எதற்காம் மருந்து? அழகாகக் கிளப்பிக் கூட்டி வந்திருந்த குழந்தையின் முகமும் கையும் மட்டும் அல்லாது உடையிலும் கூட சாக்கிலேட் ஒழுக ஆரம்பித்திருந்தது.
பிசுபிசுப்பான கைகள் சின்னவளுக்குச் சற்றும் பிடிக்காது என்பதால் “பாட்டி சாக்கி நேணா. கை சாக்கி பூசி. கை அலுக்கு நேணா” என கைகளை இரண்டையும் விரித்து பாட்டியை நோக்கி நீட்ட, “தொடச்சுக்கோ. ஹோட்டல் போனதும் வாஷ் பண்ணலாம்” என வெர்ட் வைப்ஸ் எனப்படும் ஈர துடைபான் ஒன்றை நீட்டினார். குழந்தைக்குத் தெரிந்தது போல் துடைத்துக் கொண்டாள். சற்று நேரம் முன் இருந்த குழந்தையா இது எண்ணாது இருக்க முடியவில்லை ஓட்டுநரால். ஆனால் அவனால் என்ன செய்திட முடியும்? அமைதியாக வாகனத்தை ரெசார்ட்டை நோக்கி விரட்டினான்.
ஒன்றரை மணி நேரப் பயணத்தின் பலனாய் ரிசார்ட் முன் வாகனம் நின்றது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் திருப்தியோடு பார்த்தார் வைஷாலி.