35.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,626
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 35.2
.
உள்ளுக்குள் எழுந்த நிம்மதி நிமிட நேரம் நீடித்தது. கைப்பேசி திரையில் மகன் அவன் செல்ல மகளோடு சிரித்துக் கொண்டிருந்தான். ‘இதெல்லாம் அவனுக்குத் தெரிந்தால்…’ யோசனையோடே நெற்றியைத் தேய்த்துக் கொண்ட வைஷாலிக்கு இதெல்லாம் தேவை தானா என்ற கேள்வி எழாது இல்லை. மகன் விரும்பும் பெண்ணோடான அவன் எதிர்கால வாழ்விற்காக… கணவனின் தொழிலுக்காக, தவறில்லை என்றே தோன்றியது. குழந்தையின் தூக்கம் கலையும் முன் வந்துவிடலாம். குழந்தைக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது. எந்தப் பாதகமும் இல்லை என நினைத்தார். உண்மையிலுமே அப்படித்தான் நினைத்தார் வைஷாலி.
Advertisement
குழந்தையின் குண்டு கன்னத்தை மென்மையாக வருடிய வைஷாலி மென்மையான முத்தம் ஒன்றைக் குழந்தையின் நெற்றியில் பதித்தார். கைப்பேசியில் பிரியதர்ஷினிக்கு அழைத்திருக்க, இவர்களது காரின் அருகில் வந்து நின்றாள் சுபாஷினி.
நேரம் பார்த்தவர், “ஃபங்கஷன் ஸ்டார் ஆர நேரம் ஆச்சு. நீ கார்ல இருக்க சாமான எல்லாம் எடுத்துட்டு சார் ரூமுக்கு போ. நான் பின்னாலயே வரேன்” என ஓட்டுநருக்குப் பணித்தவர், வந்த பெண்ணிடம் தன் கவனத்தைத் திருப்பினார். கைப்பேசியில் பார்த்த அதே பெண் தானா என இருமுறை அவளை ஏற இறங்கப் பார்த்தார்.
“சுபாஷினி தான?”
Advertisement
“ஆமாங்க மா”
Advertisement
“குழந்தைய ஒழுங்கா பாத்துப்பியா?”
“பார்த்துப்பேன் மேம்” என்றாள் சுபாஷினி.
“எந்த ரூம்ன்னு தெரியுமில்ல?”
Advertisement
“அங்க தான் மேடம் இருந்தேன். கார்ட் கொடுத்திருக்காங்க மேடம்” என்றவள் பார்க்க நேர்த்தியாக இருந்தாள்.
இன்னும் சில கேள்விகளைக் கேட்டவர் திருப்தி அடைந்தவராய், “குழந்த பத்திரம். தூங்கிட்டு இருக்கா. எழுந்தா அழாம பாத்துக்கோ. அழுதா விளையாட்டு காட்டி சமாதானம் பண்ணு. பசில அழுதா இதுல இருக்க ரெண்டு இட்டுலிய ஊட்டி விடு. சாப்பிட மாட்டேன்னு அடம் பண்ணினா டிவி இல்ல செல்ஃபோன்ல கார்ட்டூன் போட்டு விடு. ஃபங்கஷன் முடியவும் நானே கூப்பிடுறேன். குழந்தைய வெளியில விடாத, அவ ஓடினா நீ பிடிச்சுக்க மாட்ட. புரியுதா? பக்கத்திலேயே பீச் இருக்கு… வெளியில விட்டுடாத. கவனம்.”
“புரியுது மேடம்” என்றபின்னரே, “குழந்த பத்திரம். அவ தூக்கம் கலையாம, கதகதப்பான தண்ணி வச்சு முகத்தையும் கையையும் துடைச்சு விடு. அழுக்கா இருந்தா அவளுக்கு பிடிக்காது. குழந்தை ரொம்ப ரொம்ப பத்திரம். எதுனாலும் எனக்குக் கூப்பிடு. ஏதோ காரணத்தாலக் குழந்தை பாதியில எழுந்து… அழுதா எனக்குக் கூப்பிடு. குழந்தைய அழ விடாத. புரியுதா?” என ஏகப்பட்டக் கட்டளைகளோடு குழந்தையைத் தூக்கிக் கொள்ள அனுமதித்தவர் உண்மையிலுமே குழந்தை பத்திரமாக இருக்கும் என்றே நம்பினார்.
இவர்களின் கார் அங்கு வந்து நிற்கவுமே மரியாதையின் நிமித்தம் அங்கு வந்து நின்ற செந்திலுக்கு ஏன் அந்த புதியவள் குழந்தையைத் தூக்கிச் செல்ல நிற்கிறாள் எனப் புரியவில்லை. குழந்தை தூங்குவதால் இருக்கலாம் எனத் தோன்றவும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. கேட்கத் தோன்றினாலும் அப்படி எல்லாம் கேட்டுவிட முடியாதே.
அனைத்தையும் மௌனமாகப் பார்த்திருந்த கௌதமனின் ஓட்டுநரிடம், “செந்தில், பாப்பா பைய கொண்டு போய் கொடுத்துட்டு, வா” எனவும், அவனும் பையோடு இருள் விழுங்க ஆரம்பித்த பகுதியை நோக்கிக் கிளம்பினான்.
இருள், தன் போர்வைக்குள் ஒட்டுமொத்தக் கடற்கரைப் பகுதியையும் இழுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கிருக்க, அலங்கார மின்விளக்குகள் அந்தத் தனியார் கடற்கரையின் இருளை விழுங்கியிருந்தன. இரு வீட்டுப் பக்கம் இருந்தும் அளவான ஆட்களை மட்டுமே அழைத்திருந்தாலும் அந்த ரெசார்ட்டை ஒட்டிய கடற்கரை கூட்டமாகவே தென்பட்டது. கரையைத் தழுவி, அதைப் பிரிய மனமே இல்லாது… ‘வந்துவிடேன் என்னோடு’ என மணலைத் தன்னோடு இழுத்துச் செல்லும் அலையின் மெல்லிய காதல் இரைச்சலோடு அங்குப் பாடிக் கொண்டிருந்த இன்னிசை குழுவின் இசையும் அந்த இடத்தை இனிமையாக நிறைத்தன.
பலவகைப் பண்டங்கள், பலகாரங்கள், பானங்கள் என வந்தவர்களுக்குச் சீருடைப் பணியாளர்கள் கொடுத்த வண்ணம் இருக்க, பேச்சினோடே உணவும் அரைபட்டுக் கொண்டிருந்தது.
பேஸ்டல் வண்ண மெலிதான துணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில் அன்றைய நாளின் நாயகனும் நாயகியும் கண்களை நிறைத்தனர். கௌதமன் அருகில் அதிரூப சுந்தரியாக தாக்ஷாயினி நின்றிருந்தாள். இருவர் முகங்களிலும் அன்றைய நாளுக்கான தனிப் பரவசம் நிரம்பி வழிந்தது. அவர்களைச் சுற்றி இருந்த இளமை கூட்டமும் அவர்களைச் சும்மா விடாது வம்பு பேச, ஆசை பார்வையும் வெட்க சிரிப்புமாக அந்த ரசனையான நிமிடங்கள் இருவரையும் வேறு ஏதோ உலகிற்குள் கூட்டிச் சென்றிருந்தது.
இன்னும் சில நிமிடங்களில் மோதிரம் மாற்றி திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிடும். தாக்ஷாயினி நிறைவோடும், இனிமையான மனநிலையோடும் அந்த நிமிடத்திற்குக் காத்திருக்க… கௌதமனின் இனிமையான நிமிடத்தை நிறைவு செய்ய அவன் கண்களும் மனமும் மகளைத் தேடின.
மகள் எங்கே? என்ற கேள்வி அவனுக்குள் எழ, அதை அவன் அடக்கி எல்லாம் வைக்கவில்லை. வைஷாலியை பார்க்கும் போதெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான்.
“பேபி எங்கமா?” எனக் கேட்டவனிடம், “தாக்ஷா வீட்டு பிள்ளைங்களோட விளையாடிட்டு இருக்கா கௌதமா” என்றார்.
“மா… குழந்தைக்குப் பசிக்கும் மா. எங்க ம்மா அவ? கூட்டிட்டு வாங்க” என்றதிற்கு, “நானே சாப்பாடு கொடுத்துட்டேன். இதோ தூக்கிட்டு வர சொல்றேன்” என்றார்.
புரிகிறது கௌதமனுக்கு. யாழினியாளை தன் மகள் என அம்மா வெளி உலகிற்குக் காட்ட விரும்பவில்லை எனப் புரிகிறது. ஆனாலும் யாழி அவன் மகள். யாருக்குப் பிடித்தாலும் பிடிக்காது போனாலும் அதை அவன் மறைக்க விரும்பவில்லை. யாழி அவன் மகள் என கூறுவதில் அவனுக்கு பெருமையே.
“மா பேபி எங்கமா? வெளி இடத்துல இவ்வளவு நேரம் நான் இல்லாம அவ இருக்க மாட்டாளே? அழ போறாமா”, தவிப்பை மறையாது கேட்டவனிடம், “தூங்கிட்டா கௌதமா.” என்றார் எழுந்த குற்ற உணர்வை ஒதுக்கி.
“மா… யாழி என் பொண்ணு மா. அத இன்னைக்கு மறைக்கலாம் நீங்க. ஆனா கல்யாணம் அன்னைக்கு என் மக என் மடியில தான் இருப்பா. அப்போ என்ன பண்ணுவீங்க? போங்க மா… தயவு செய்து என் பேபி அழ ஆரம்பிக்கிறதுக்கு முன்ன தூக்கிட்டு வாங்க. இல்ல நான் போறேன் என் மகட்ட” என்றான் அடமாய்.
“சத்தியமா தூங்கிட்டா கௌதமா. முழிச்சிருந்தா கண்டிப்பா தூக்கிட்டு வரேன்” என்றவர், “செந்தில்…” எனக் கைப்பேசியில் ஓட்டுநருக்கு அழைத்துக் கொண்டே கௌதமன் இருந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.
ஆனால் அவனால் தான் தாள முடியவில்லை. அவன் மகள் எப்படி அவனைப் பார்க்காது இத்தனை மணி நேரம் இருக்கிறாள் என அவனால் எண்ணாது இருக்க முடியவில்லை. மேடையை விட்டு கீழே இறங்க முடிந்தால் சென்றிருப்பான் மகளைத் தேடி.
“எல்லார் கண்ணும் உங்க மேல தான் இருக்கும் கௌதமா. இப்போ கீழ எல்லாம் இறங்கக் கூடாது. உன்ன வளர்த்த உன் அம்மாக்கு உன் பொண்ண பார்த்துக்க தெரியாதா? நீ வீட்டுல இல்லாத போது அவ அமைதியா விளையாடிட்டு இருக்கது இல்லையா? நீ முகத்த ஒழுங்க வை” என வாசுதேவனும் கூறிவிட என்ன செய்ய முடியும் அவனால்?
குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டால், மகள் அங்கு இருக்கிறாளா என விழியை அங்குச் செலுத்த மட்டுமே முடிகிறது. ஏதோ ஒரு தவிப்பு அவனுள். அவன் விரும்பும் பெண்ணோடு ஒரு விழா, அதில் பங்கேற்க அப்பாவும் மகளும் எத்தனை ஆர்ப்பாட்டமாகக் கிளம்பினர். ஆனால்… அவன் அங்கிருக்க, அவன் ஜீவன் எங்குச் சென்றது? இப்படியாகும் என அனுமானம் இருந்திருந்தால், மகளை ஒருவர் கரத்திலும் கொடுத்திருக்க மாட்டானே. ப்ச்!
மோதிரத்தைப் பார்த்தவன் பார்வை அம்மாவைத் தொட்டது. அவருக்கும் மகனின் தவிப்பு புரியாது இல்லை. ஆனாலும்… இந்த தவிப்பு தானே பெண் வீட்டாருக்கு பிடித்தமில்லை.
“என்ன கௌதம்?” கேட்ட தாக்ஷாவின் முகம் பார்த்தவன், வரவைத்த புன்னகைக்குள் ஏமாற்றத்தை மறைத்து, ‘ஒன்றுமில்லை’ என்பது போல் கண்மூடி திறந்தான்.
கொட்டும் ரோஜா இதழ்களுக்கு மத்தியில் மோதிரம் மாற்றி, ஆறு மாதங்களில் திருமணம் என அனைவர் முன்னிலும் திருமண நாள் அறிவித்து, ஷாம்பெயின் பீய்ச்சியடிக்கத் திருமண நிச்சயம் ஆர்ப்பாட்டமாக அரங்கேறியது. மகள் மோதிரம் எடுத்துக் கொடுக்க, தாக்ஷாயினியின் விரலில் போட வேண்டும் என்ற ஆசை நூலறுந்த முத்தாகச் சிதறியிருக்க, மனம் சிறிதாய் சுணங்கியது கௌதமனுக்கு.
ஒவ்வொருவராக மேடையேற, கௌதமனால் அன்னையின் பக்கம் திரும்பவும் முடியவில்லை. மகள் வேண்டும் என அடம்பிடிக்கவும் முடியவில்லை. எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், சிரிப்பும், நிறைவும், ஆசையும், வெட்கமும் எனப் பல உணர்வுகளோடு நேரம் கரைந்தது. ஒருவாறு மேடைக்கு ஆட்கள் வருவது நின்று போனது. மேடையை விட்டு கீழே இறங்கினர் கௌதமனும் தாக்ஷாயினியும். அவர்களிடம் வந்த சிலரிடம் பேசி… சம்பிரதாயத்திற்குச் சிரித்து என நேரம் பறந்தது. உணவருந்தச் செல்லுமாறு சொல்லவும், அவனால் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது, நேரே அன்னையே தேடிச் சென்றான்.
“பேபி எங்க தூங்குறா? எனக்கு ஒரு தரம் பார்க்கணும், அப்போ தான் சாப்பாடு தொண்டையில இறங்கும்” என நிற்பவனிடம் என்ன கூறுவார்?
“வர கெஸ்ட்டுக்கு தேவைபட்டா, அவங்க இருக்கதுக்காக ஒரு ரூம் புக் பண்ணியிருக்கோம்… அதுல இருக்கா. நீ போனா சரியா இருக்காது. நான் போய் தூக்கிட்டு வரேன்” எனக் கிளம்ப எத்தனித்தவரை தடுத்தவன்,
“வந்த நேரத்துல இருந்து என் மகள நான் பார்க்கல. இங்க அத்தன குழந்தைங்க விளையாடுறாங்க, ஆனா என் பொண்ண மட்டும் காணம். நான் கேக்கும் போதெல்லாம் ஏதேதோ சொல்லிட்டு இருக்கீங்க. இது வரைக்கும் உங்க உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து நீங்க சொன்ன கதைய எல்லாம் நானும் கேட்டுட்டு அமைதியா நின்னுட்டு இருந்தேன். அமைதியா நின்னதுக்கு உங்க கதைய நம்பினதா அர்த்தம் இல்ல…” அன்னையின் முகம் மாற்றத்தைப் பார்த்தவன், “ப்ச்” என அலுத்துக் கொண்டவனாய், நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
“உன் பொண்ண இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மறந்துட்டு ஃப்ங்ஷன கவனி கௌதம்”
“நிச்சயமும் முடிஞ்சிடுச்சு. கூட்டமும் குறைய ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் என்ன மா? என் பேபி எந்த ரூம்ல தூங்கிட்டு இருக்கா சொல்லுங்க. நான் போறேன்” என்றவனை சமாதானம் செய்ய முடியாதவராய் தாக்ஷாவிற்கு கண்காட்டினார்.
“கௌதம்… பசிக்குது வா” எனக் கௌதமன் கையை பற்றிக் கொள்ள, “வாங்க மாப்பிள்ளை… உக்காருங்க” எனப் பெண் வீட்டினரும் அவனை கை பிடித்து இழுக்காத குறையாக அவனைச் சுற்றிக் கொண்டனர். கௌதமன் அன்னையைப் பார்க்க, “நான் பாத்துகிறேன் கௌதமா…” என்றார் வைஷாலி.
“தூங்கிட்டு இருந்தாலும்… என்ன பண்ணிட்டு இருந்தாலும் தூக்கிட்டு வாங்க மா. பத்து நிமிஷம் தான். என் மக வரல நான் இங்க இருந்து கிளம்பிடுவேன்.” என்றவன் குரலில் கோபமும் கடினமும் சம அளவில் இருந்தன.
“கூட்டிட்டு வரேன் டா” என வைஷாலி நகரவும், “என் பேபி வந்த பிறகு தான் எனக்குச் சாப்பாடு” என தாக்ஷாயினியோடு இவன் நகர்ந்தான்.
“என்ன தர்ஷினி, மாப்பிள்ளை ஏதோ… என் பொண்ணுன்னு பேசிட்டு இருந்தாரே? என்ன விஷயம்? உன் பொண்ணு ரெண்டாம் தாரமாவா போகுது?” என தாக்ஷாவின் உறவினரிடமிருந்து கேள்வி எழும்பவும்,
“என் பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா போக என்ன அவசியம் வந்துது? சம்பந்திக்கு எளகின மனசு. அவங்க சொந்தக்காரக் குழந்தை, பொண்ணா போச்சு… அனாத இல்லத்துல விட மனசில்லாம அவங்களே வளக்கறாங்க. அந்தக் குட்டி, மாப்பிள்ளைய அப்பான்னு கூப்பிடுது. நம்ம மாப்பிள்ளை அந்த பொண்ணுக்குச் சித்தப்பா முறை வேணும்…” என அவர் பதில் கூறிக் கொண்டிருந்தார்.
முதுகின் பின் கேட்ட வருங்கால மாமியாரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கௌதமனின் காதுகளில் ஈயமாக இறங்கிக் கொண்டிருக்க, இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியும் அவனிடம் இருந்து பறி போனது. தாக்ஷாவை பார்த்தான். ‘நம்மோடு மட்டுமே’ என இவன் அவளிடம் கூறிய ரகசியத்திற்குக் கண்ணு… மூக்கு என அலங்காரமிட்டு மேடை ஏற்றிவிட்டாளா எனப் பார்த்தான்.
நேரம் கடந்தது. மகளையும் காணவில்லை… அவளை அழைத்து வருவதாகக் கூறிய அம்மாவையும் காணவில்லை.
அமைதியாக இருந்தாலும் பெயரளவிற்குக் கூட புன்னகைக்காத கௌதமன் மேல் தாக்ஷாவிற்கு மனவருத்தம். ‘ஏன்… ஒரு நாள் தங்களை மட்டுமே முதன்மையாக வைக்க முடியாதா இவனால்?’ என்ற கோபம் உள்ளுக்குள் புகைய ஆரம்பித்து மணி நேரம் ஆகியிருக்க, இப்பொழுது உண்ண முடியாதவனாக மகளுக்காகக் காத்திருப்பவனை என்ன செய்வாள்?
“ரொம்ப பண்ற கௌதம். இது நம்ம ஈவன்ட்… இப்போவும் உனக்கு யாழி தான் நினைவுல இருக்காளா? நான் உன் கண்ணுல படுறேனா இல்லையா? இன்னைக்கு ஒரு நாளாவது நமக்கானதா இருக்கட்டுமே. அத்தை தான் அவள பார்த்துகிறாங்களே… அப்பறம் என்ன கௌதம்? உன் பொண்ண ஒரு மணி நேரம் மறந்துட்டு, இந்த நேரத்த என்னோட என்ஜாய் பண்ணு கௌதம். எனக்கு பசிக்குது சாப்பிடுவோம்” எனக் கடுகடுத்தாள் வருங்கால மனையாள்.
“யாழிய நீ பெத்திருந்தா, அப்பவும் இதே மாதிரி தான் பேசுவியா தாக்ஷா?”
“யாழி எனக்கு பிறக்கல கௌதம். அது தான் உண்மை. அவ உனக்கும் பிறக்கல… அத நீயும் மறந்துடாத”
“ஓஹ்… அதனால தான் உன்ன நம்பி என் மகள பத்தி சொன்னத உங்க அம்மா போஸ்டர் போட்டு ஒட்டிட்டு இருக்காங்களா?” என்றான் அடக்கப்பட்டச் சீற்றத்தோடு.
“அவ்வளவு பெரிய ரகசியம்ன்னா… உங்க அம்மாக்கு நீ சொல்லி இருக்கக் கூடாது கௌதம்” என்றாள் தாக்ஷா.
‘அம்மா’ எனப் பற்களைக் கடிக்க மட்டுமே முடிந்தது கௌதமனால். “இவ்வளவு தானா… வேற என்ன எல்லாம் சொல்லி இருக்காங்க?” என்றவன் கோபத்தைக் கிளறாது,
“சரி விடு. கல்யாண மேடையில நம்மோட யாழியும் இருப்பா. யார் கேட்டாலும்… உன் சொந்த மகன்னு நான் சொல்றேன். போதுமா? யாழியோட சின்ன காதுக்குள்ள இந்த விஷயம் போகவே போகாது. இப்போ… இந்த நிமிஷம் நம்மளது. ஸ்பாயில் பண்ண வேண்டாம். குழந்த சாப்பிட்டு தூங்கியாச்சுன்னு அத்த சொல்றாங்க தான… வா நாம சாப்பிடப் போகலாம்” எனக் கௌதமனை அமைதி படுத்தினாள்.
“ஒரு பத்து நிமிஷம் தாக்ஷா. பிளீஸ்.” என்றான், சலிப்பும் அலுப்பும் கலந்த தொனியில்.
“இன்னைக்கும் அவ தானா? என்னவோ நான் தான் இம்பார்ட்டென்ட்ன்னு சொன்ன?” என்றாள் கேலி கொப்பளிக்க.
“கேக்க என்ன இருக்கு? அவள என்ன ரூம்ல தனியாவா அடைச்சு வச்சிருக்காங்க? எப்பவும் பார்த்துகிற சங்கீதாவோட தோட்டத்துல விளையாடிட்டு… சாப்பிட்டு தூங்கறா தான… அப்பறம் என்ன?”
இந்தக் கேள்விக்கு என்ன பதில் எதிர்பார்க்கிறாய் எனப் பெண்ணை பார்த்தான்.
“ஏய் தாக்ஷா… ஈவன்ட் முடிஞ்சிடுச்சா? சாரி மா. ஃபிளைட் லேட் ஆகிடுச்சு. கன்கிராட்ஸ். கன்கிராட்ஸ் கௌதமன் சர்” என தாக்ஷாயினியின் அத்தை மகன் வரவும், அவள் கவனம் கவின் பக்கம் திரும்பியது.
“உன்ன நேத்தே வர சொன்னேனா? மடையா… இப்போவாது வந்தியே. நீ வராம மட்டும் போயிருக்கணும்…” என இவர்கள் இங்குப் பேசிக் கொண்டிருக்க, கௌதமன் மனமும் விழியும் அன்னை சென்ற வழியைப் பார்த்து நின்றிருந்தன.
சின்னவளை அழைத்து வர வைஷாலி செந்திலை பணித்திருக்க, யாழினியை தேடிக் கொண்டு சென்ற செந்தில் அறையின் கதவைத் தட்டினான். உள்ளே களேபரமே நடந்து கொண்டிருந்தது. அரைமணி நேரம் முன்பு அரையும் குறையுமாகத் தூக்கம் கலைய எழுந்த யாழி புது இடத்தில் அப்பாவைக் காணாது, யாரோ ஒரு பெண்ணை பார்த்தவள் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்திருந்தாள்.