Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

35.3 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 35.3

.

“அழாத பாப்பா… இந்தா மிட்டாய்… டிவி பாக்கிறியா? ஐஸ் கிரீம் வேணுமா?” என என்னென்னவோ கேட்டுப் பார்த்தும் எதற்கும் செவி மடுக்காது அழுவதையே தலையாய கடமையாக யாழி செய்து கொண்டிருக்க, சுபாஷினிக்கு பயம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது. மணி நேரம் முன் வந்த வைஷாலி, பேத்தியின் முகத்திலும் கைகளிலும் இருந்த அழுக்கைப் பார்த்தவர், “உன்ன என்ன செய்யச் சொன்னேன்? குழந்தைய பாத்துக்க தான வந்த? சாக்லேட்ட துடைக்கவே உனக்கு வலிக்குதா?” என ஆரம்பித்துப் பிடி பிடியெனப் பிடித்துவிட்டார்.



Advertisement

“பாப்பா எழுந்து அழ ஆரம்பிச்சுட்டா என்ன பண்றதுன்னு பயந்து தான் துடைக்கல மா. பாப்பா எழுந்ததும் கிளீன் பண்ணிடுறேன் மா” எனக் காலில் விழாத குறையாக மலை இறக்கினாள். “குழந்தை பத்திரம். எழுந்ததும் என்னை கூப்பிடு. அழ விடாத.” என்று கூறிச் சென்றவர் இந்நேரம் வந்தால்? இவ்வளவு நேரம் விளையாடியதில் கைப்பேசி உயிர் இழந்திருக்க, எப்படி அவரை தொடர்பு கொள்வது எனச் சுபாவிற்கு தெரியவில்லை. 

“ஐயோ அழாத பாப்பா. அந்தமா வந்தா என்னை ஒரு வழி ஆக்கிடும். பிளீஸ் அழாத” எனத் தூக்கி நடக்க முனைய, யாழியோ நெளிந்து வளைந்து கீழே விழுந்தவள் அழுகையை நிறுத்துவதாக இல்லை.

“பசிக்குதா? இட்டிலி சாப்பிடுறியா?” என நீட்டிய இட்லியும் தரையில் விழுந்தது.

Advertisement

அழுது கொண்டிருக்கும் குழந்தைக்கு அந்த குளிரூட்டப் பட்ட அறையிலும் வியர்க்க, “டிரெஸ் கசகசன்னு இருக்கா… அதுதான் எரிச்சலா இருக்கியா? இத கழட்டிட்டு வேற போடலாமா” எனப் பாடுபட்டு அந்த பார்ட்டி கௌனிலில் இருந்து யாழிக்கு விடுதலை கொடுத்த பின்னும் அழுகை நிற்கவில்லை.

Advertisement

“அழுக்கா இருக்கப் பாப்பா… உடம்பக் கழுவி புது டிரெஸ் போடலாமா?” எனத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைய அங்கும் உருண்டு புரளும் குழந்தையின் மேல் எரிச்சலாக வந்தது.

வேறு என்ன செய்வதென யோசித்தவள் கண்களில் பட்டது குழந்தையின் பையிலிருந்து எடுத்து வெளியே வைத்திருந்த இருமல் மருந்து. ஒன்றரை மணி நேரம் முன்பு “எங்க பாப்பா என்ன பண்ணுது?” எனக் கேட்டுக்கொண்டு குழந்தையைப் பார்க்க வந்த ஓட்டுநர், ‘சளி மருந்த குடிச்சதும் தூங்க ஆரம்பிச்சுது… இன்னுமா தூங்குது?’ என வாய்க்குள் முணுமுணுத்துச் சென்றது நினைவில் வர, இருமல் மருந்தை மூடியில் ஊற்றி எடுத்துக் கொண்டாள்.

குழந்தையை இறுகப் பிடித்து வாயில் மருந்தை ஊற்ற வரவும் அதன் கசப்பு சுவையை அறிந்த யாழி முகத்தைத் திருப்ப, மருந்து பெண்ணின் கரத்திலும் குழந்தையின் மோவாயிலும் மேனியிலுமாக சிந்தியது. 

Advertisement

“கொழுப்பு டி உனக்கு” எனச் சட்டென எழுந்த கோபத்தில் குழந்தையின் குட்டி கன்னத்தில் பட்டென ஓர் அடி வைக்க, குழந்தை வாயிலும் மூக்கிலுமாக நீர்வழியப் பெருங்குரல் எடுத்து வீறிட ஆரம்பித்தாள்.

சசுபாஷிசியின் பொறுமை முற்றிலும் சென்றிருக்க, “எதுக்கு சும்மா அழுவணும்? இப்போ அழு” என முதுகில் ஓங்கி அடிக்கவும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என உணரவும் சுபாஷினிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.

சுளீர் என அடி பலமாகவே முதுகில் விழுந்திருந்தது. அடிவாங்கி பழகியிராத குழந்தை பயத்தில் மூச்சை உள்ளுக்குள் இழுத்தவள் அதை விடாது நிற்கவும் சுபாஷினிக்குப் பயம் கவ்விக் கொண்டது.

“பாப்பா… பாப்பா… மூச்சு விடு பாப்பா. சத்தியமா வேணும்ன்னு அடிக்கல… யோசிக்காம செஞ்சுட்டேன். பாப்பா மூச்சு விடு பாப்பா” என முதுகைத் தட்டப் போனவளைப் பார்த்த குழந்தைக்குப் பயம் இன்னும் அதிகமாக, அது முகத்தில் அப்படியே தெரிந்தது. கதவும் விடாது தட்டப்பட, யாரேனும் குழந்தையை மூச்சு விட வைத்தால் போதும் என் தோன்றவும் கதவைத் திறந்தாள்.

குழந்தையின் தோன்றத்தை பார்த்த செந்தில் நொடி நேரம் ஸ்தம்பித்து நின்றான். சில மணி நேரம் முன் பார்த்த குட்டி இளவரசியா இது? “ஐயோ குழந்தைய என்ன பண்ணி வச்சிருக்க? குழந்த முகம் இப்படி செவந்து போயிருக்கு… எங்க பாப்பாவ அடிச்சியா நீ? மனுஷியா நீ? நான் வராட்டா இன்னும் என்னென்ன பண்ணியிருப்ப? சின்னைய்யா பார்த்தா என்ன ஆகும் தெரியுமா?” என அவன் முன் நின்றிருந்தவளைத் தள்ளிவிட்டு விரைந்தவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு காற்றோட்டமாக வெளியே கொண்டுவந்தான்.

“ஒண்ணும் இல்ல டா தங்க பாப்பா… செந்தில் மாமா வந்துட்டேன் டா… அழாத அழாத செல்லம்….” எனத் தலையில் ஊதி, முதுகில் தட்டி என குழந்தையின் மூச்சை சீராக்க, மீண்டுமாக யாழி, “செந்தி மாமா… செந்தி மாமா… அப்பா…நேணும்…. ஆலி பேபி அப்பா நேணும்” என விக்கி விக்கி அழுகையைத் தொடர்ந்தாள்.

கௌதமன் எனும் தாய்க்கோழி அதன் கோழிக் குஞ்சை இந்த நிலையில் பார்த்தால்? ‘பக்’ என்று உள்ளுக்குள் இழுத்துப் பிடித்தது செந்திலுக்கு. செந்தில் சுபாவைப் பார்த்து முறைக்கவும், “நான் ஒண்ணும் பண்ணலையா… அதுதான் அர மணி நேரமா அழுதுட்டே இருக்கு…” எனத் தன்னிலை விளக்கம் தர முற்பட்டாள்.

“என்ன…? ஒண்ணும் பண்ணலியா? எங்க பாப்பாவ அடிச்சிருக்க நீ. எங்க பாப்பா அழுது அழுது முகம் எப்படி இருக்கு பாரு. மூக்கு செவந்து ஒழுகுது! முகத்துல நாலு விரலுக்கு செவந்து இருக்கு! உடம்பு பூரா வேர்வ, போதா குறைக்கு மருந்து மாதிரி அது மேல வாசம் வருது. ஒரே பிசுபிசுன்னு இருக்கு பாப்பா. சட்டுன்னு ரெண்டு மக்கு தண்ணிய ஊத்தி உடம்ப துடைச்சு, டிரெஸ் போட்டு கொடு. குழந்தைய சின்ன ஐயா இப்படி பாத்தா சரியா வராது. இது அவரோட குலசாமி” என்றான் உடல பதற.

“என்னவோ நான் வேணும்னே இப்படி அழவிடற மாதிரி கத்தற? பாதி தூக்கத்துல எழுந்து புது முகத்த பாத்தா குழந்த வேற என்ன பண்ணும்? பயந்து போச்சு. என்னை குத்தம் சொல்லாத. வரும் போதே மூஞ்சி, டிரெஸ் எல்லாம் சாக்கலேட் பூசிட்டு தான் வந்துது. அது அழுக்கா இருக்கதுக்கு நான் காரணமில்ல சொல்லிட்டேன்… குடு பாப்பாவ” என்றவளுக்குள்ளும் பயம் இருக்கத்தான் செய்தது.

சுபாஷினி குழந்தைக்காகக் கையை நீட்டவும் குழந்தையின் முகம் வெளிறியது. “அப்பா” என நெஞ்சு விம்மக் குழந்தை வீறிட ஆரம்பித்தாள். செந்தில் கையிலிருந்து சுபாஷினியின் கைக்கு மாறும் வேளை நெளிந்து கீழே விழுந்த குழந்தையின் முகம் தரையில் இடிபடவும், “அறிவில்ல… ஒழுங்கா பிடிக்கதுக்கு என்ன? உன்னோட சேத்து எனக்கும் இன்னையோட வேல போக போவுது” எனத் திட்டிக்கொண்டே “தூக்கு பாப்பாவ” என்றவன் கைப்பேசி அலறியது.

கைப்பேசியைப் பார்த்தவனுக்குப் படபடப்பானது. அழைக்கும் முதலாளியிடம் என்ன கூறுவான்? கௌதமனின் அழைப்பை எடுத்தால் ‘குழந்தையை இப்பொழுதே காட்டு’ என்பான். எடுக்கவில்லை என்றால்… எடுக்கும் வரை விடமாட்டானே. இந்த நிலையில் குழந்தையைக் காட்டினாலும் பிரச்சனை… ஐயையோ… குழந்தை கீழே விழுந்தாளே… விழுந்த இடத்தில் குழந்தை இல்லை. எதிரில் இருப்பவளிடமும் இல்லை. குழந்தையை யாரேனும் இந்த நிலையில் பார்த்தால்? செந்திலுக்கு உடல் முழுவதும் சட்டென ஒரு மின்னதிர்வு. வியர்க்க ஆரம்பித்தது.

“ஏய்… பாப்பா… பாப்பா எங்க?” எனப் பதறவும், அதுவரை செந்திலையும் அவன் கரத்தில் இருந்த கைப்பேசியையும் பார்த்திருந்தவளின் தலை நாலா புறமும் சுற்றியது. அருகே கேட்கும் கடல் அலையின் பேரிரைச்சலுக்கும், இருள் சுமந்துவந்த பூச்சிகளின் ரீங்காரத்திற்கும் இடையே தேய்ந்து கொண்டு ஒலித்தது யாழியின் “அப்பா” என்ற அழுகுரல்.

என்ன நடக்கிறது என இருவரும் நடந்ததைக் கிரகிக்கும் முன்பே யாழி கால் போகும் திசையில் ஓட ஆரம்பித்திருந்தாள். தனிமை விரும்பிகளுக்கான கடற்கரைப் பகுதி என்பதால் ஒவ்வொரு குடிலுக்கும் இடையே இடைவெளி அதிகம். இடைவெளியை இருட்டும், ஆங்காங்கே மங்கலான வெளிச்சமும் நிரப்பி இருந்தன.

மூன்று வயதைத் தொட்டிராத குழந்தை. அப்பாவின் அரவணைப்பில் செல்லமாக வளரும் குழந்தைக்கு இது மிகவும் புதிது. குடித்த மருந்து கொடுத்த கிரக்கம் ஒரு பக்கம், விழுந்து அடிபட்ட வலி ஒரு பக்கம், பசி, புதியவளின் மிரட்டலும் அடியும் கொடுத்த பயம், என பலதும் சேர்ந்து கொள்ள, கால் இழுத்துச் சென்ற திசை நோக்கி அழுது கொண்டே ஓட ஆரம்பித்திருந்தாள் கௌதமனின் செல்ல மகள். 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!