Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

36.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 36.2

.

“சண்டையா? நீங்க தயவு செய்து எங்கிட்ட பேசாதீங்க மா. வர கோவத்துக்கு அம்மான்னு பாக்காம ஏதாவது சொல்லிட போறேன்.” என ஆரம்பித்தவன்,  “ப்ச்… அப்பன் நான் உயிரோட இருக்கும் போதே என் பொண்ணுக்கு ஏன்மா இந்த நிலை?” என்றான் வலியோடே.



Advertisement

“ஏன் டா… சாப்பிட்டு, நிம்மதியா தூங்கறா. என்ன ஆகிடுச்சுன்னு இந்த குதி குதிக்கிற?” வைஷாலி ஒரு பக்கம் பேச,

“அப்பனா? யாருக்கு? யாழினிய நீங்களா பெத்தீங்க? எங்க இருந்தோ தூக்கிட்டு வந்து, உங்க பொண்ணுன்னு சொன்னா ஆச்சா?” என அங்கு வந்து சேர்ந்த பிரியதர்ஷனி அவர் பங்கிற்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் நெய் வார்த்தார்.

Advertisement

Advertisement

அம்மாவை திரும்பி அவன் பார்க்க, “குழந்தையோட நிக்கிறவனுக்கு எப்படி கௌதமா பொண்ணு தருவாங்க? அதுதான்… உண்மைய சொல்ல வேண்டியதா போச்சு” என்றார்.

“என்ன உண்ம?  யாழினியாள் என் மக. அது தான் உண்மை” என்றவன் சத்தம் உயர்ந்திருந்தது.

Advertisement

“ஏற்கனவே ஒரு குழந்தைக்கு அப்பாவானவனுக்கு பொண்ணு தர யாராவது ஒத்துப்பாங்களா? நீ ஆச பட்ட பொண்ண உனக்கு முடிக்கணும்ன்னு தான்  உண்மைய சொன்னேன். நிதானமா யோசி… இது கல்யாணம். உண்மைய மறைக்க முடியாது. அவங்களுக்குத் தெரிய வேண்டாமா?”

“சொல்ல வேண்டியவளுக்கு நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே. அப்பறம் எதுக்கு ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? யாழி என் பொண்ணுங்கற உன்மையோட சேர்ந்து என் கூட வாழ முடியாதுன்னு இவ உங்கட்ட சொன்னாளா? அத எடுத்து சொல்லி புரிய வைக்க ஊரெல்லாம் நீங்க சொல்ல வேண்டியதா போச்சா?” என அம்மாவிடம் கேட்டவன், “நீ சொன்னியா?” என தாக்ஷாவின் பக்கம் திரும்பினான்.

“என்ன மாப்பிள்ளை எங்க முன்னாலயே என் பொண்ணுகிட்ட சண்டைக்கு போறீங்க?” தாக்ஷாவின் அம்மா ஒரு புறம் ஆரம்பிக்க, உஷ்ணம் அதிகமானது. பேச்சின் வீரியமும் திசையும் மாற ஆரம்பித்தது. புகைய ஆரம்பித்த அடுப்பில் காற்றை வீச, எரி கட்டை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

“நீ சொல்லு. உன்னால என் மகள, என் மகளா பாக்க முடியலியா?” என்றவனிடம், “நீ சொல்லு கௌதம், ஒரு கணவனா உன்னால என்னை மட்டுமே உன் உலகமா பாக்க முடியுமா?” என எதிர்க் கேள்வியை வைத்தாள்.

இது என்ன கேள்வி என அவன் பார்க்க, “நான் தான் முன்னமே சொன்னேனே… இதெல்லாம் சரி வராதுன்னு. கேட்டியா? பாரு நீ முக்கியம் இல்லன்னு சொல்லாம சொல்லிட்டார்” என பிரியதர்ஷினி கொதித்தார்.

அந்த நொடி தாக்ஷாயினின் மனம் துவண்டது. “முடியும்ன்னு உன்னால ஒரு பொய் கூடச் சொல்ல முடியல இல்ல கௌதம்?”

“என்ன பேசற நீ தாக்ஷா? குழந்தைய மறைச்சோ பொய் சொல்லியோ நான் என் காதல உன் கிட்ட சொல்லலியே. நீ என்னை விரும்பும் போதே நான் யாழியோட தகப்பன்னு தெரியும் தானே. அப்போ சொன்ன அதயே தான் நான் இப்பவும் சொல்றேன். என் மனசுல் உனக்கான இடமும் இருக்கு, என் மகளுக்கான இடமும் இருக்கு. இதுல யார் முக்கியம் யார் முக்கியமில்லன்ற கேள்வியே இல்ல. எனக்கு மனைவியும் வேணும்… மகளும் வேணும்” என்றான் தாக்ஷாவோடு அவள் தாய்க்கும் புரியும் விதமாக.

“ஓஹ் அதுனால தான் என் பொண்ண அம்போன்னு விட்டுட்டு உங்க பொண்ண தேடி வந்தீங்களோ?” என தர்ஷினி தன் ஆதங்கத்தைக் கொட்ட, ‘நீ சொல்லு’ என்பது போல் கௌதமனின் பார்வை முழுவதும் தாக்ஷாயினின் மீது மட்டுமே.

“நானா உங்க பொண்ணா?” என்ற கேள்வியோடு நின்றவள், ‘நீ தான்… நீ மட்டும் தான்னு பொய்யாவது சொல்லு கௌதம்’ என அவனைப் பார்த்தாள்.

“ஹார்ட்டா பிரெயினான்னு யாராவது கேப்பாங்களா? அப்படித் தான் இருக்கு உன் கேள்வி தாக்ஷா. அப்பறம்… என்னவோ பாதிக்கப்பட்டவ நீங்கற மாதிரியே பேசிட்டு நிக்காத. என் மக தான் இங்க பாதிக்கப்பட்டவ.” என்றான் பொங்கிவந்த எரிச்சலை மறையாது.

“உன்னால ஒரு நாள்… ஒரே ஒரு நாள் அவள மறந்துட்டு என் கூட இருக்க முடியல இல்ல? இன்னைக்கு ஏதோ ஒரு நாள் இல்ல… நம்ம எங்கேஜ்மென்ட். இன்னைக்கும் உன்னால ஒரு நாலு மணி நேரம் என்னை மட்டுமே நினைக்க முடியல இல்ல?”

குடும்பமாகப் பேசுகிறார்கள் எனப் பார்த்திருந்த தகப்பன்மார், சத்தம் அதிகமாகவே ஏதோ பிரச்சனை எனப் பிள்ளைகளை நோக்கி வந்தனர். அவர்கள் வரும் முன்னே தாக்ஷாவும், கௌதமனும் அவர்களின் அறுநிலையை அடைந்திருந்தனர்.

“என்ன மா?” என மனைவியின் முன் வந்து நின்ற வாசுதேவனை ஒருவரும் கவனிக்கும் நிலையில் இல்லை.

“உனக்கு என்ன பிரச்சனை இப்போ? ஃபங்ஷன் முடியற வரைக்கும் உன் கூடவே தானே இருந்தேன். ஒழுங்கா பேசக் கூட வராத மகள விட்டுட்டு… அவ என்னை தேடி அழுவான்னு தெரிஞ்சும் உன் கூடவே தானே இருந்தேன். உனக்கு அது போதலியா? இன்னும் என்ன தான் டி வேணும் உனக்கு? நானும் கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி திரும்பத் திரும்ப சொல்றேன்… உனக்கு ஏன் புரியல? என் மக எனக்கு முக்கியம். ரொம்ப ரொம்ப முக்கியம். அப்பன் நான் உயிரோட நிக்கிறேன்… என் மக அனாத மாதிரி…” அவன் முடிக்கும் முன்,

“மக மக மக… ஸ்டாப் இட் கௌதம். அவ உங்க மக இல்ல. நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் அவ அனாதை தான்!”

கண்களை இறுக மூடி திறந்தவன், போதும் என்பது போல் தாக்ஷாவின் முன் கை காட்டினான். அவன் கோபத்தை அடக்க வெகுவாகப் பாடுபடுவது வாசுதேவனுக்கு புரிந்தது. இந்தப் பேச்சு ஏன் ஆரம்பித்தது எனத் தெரியாது. ஆனாலும் தன் பேத்தியைப் பற்றிய இந்தப் பேச்சு அவருக்கு உவப்பாக இல்லை.

“என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? கோவமா இருக்கும் போது வார்த்தையை மிச்சம் வைங்க.”

மிச்சம் வேண்டாம் என நினைத்துவிட்டார்கள் போலும்… “எங்க அம்மா சொன்ன போது எனக்கு புரியல. ஆனா இப்போ புரியுது. நான் தான் தப்பு பண்ணிட்டேன். இப்போ கூட நான் உஷார் ஆகலைனா என் எதிர்காலம்…” என அவள் தொடர,

“ஏன் மா பேச்ச வளக்கிற? ரெண்டு பேருக்கும் கோபம் குறைஞ்சபறம் தனியா உக்காந்து பேசுங்க” என மகளின் வாய்க்கும் தந்தை பூட்டுப் போட நினைத்தார்.

“இருங்க மாமா… அரம்பிச்சத முடிக்கட்டும்” என்றான் கௌதமன்.

“நேத்து வரை எப்படியோ… ஆனா யாரோ வேண்டா வெறுப்பா பெத்து வேண்டாம்ன்னு தூக்கிப் போட்ட குழந்தைக்கு நீ என்னை விட இம்பார்ட்டென்ஸ் கொடுக்கிறத இனி மேல் என்னால டைஜஸ்ட் பண்ணிக்க முடியாது கௌதம். நீ முடிவு பண்ணிக்கோ நானா இல்ல யாழியான்னு” எனக் கூர் முனையை அவனுள் இறக்கினாள்.

சற்று நேரம் கௌதமனிடம் அமைதி. முதல் முதலாக அவன் கன்னம் தொட்ட குட்டி குட்டி ரோஜா இதழ் பாதங்கள் நினைவில் வந்தன. ஏன் வாழ்கிறேன் என்ற கேள்வியோடு அலைந்து திரிந்தவனின் கேள்விகளை எல்லாம் எச்சில் முத்தங்களால் துடைத்துப் போட்ட அவன் யாழி பேபி அவனைப் பார்த்து பொக்கை வாய் திறந்து சிரித்தாள். ‘அப்பா’ எனக் கொஞ்சும் மழலையில் அழைத்தாள். ‘நான் வாழ எனக்கு என் மக வேணும் பா’ என இவன் அப்பாவிடம் கூறிய அன்று இருந்த அவன் நிலையும் இன்றைய அவன் நிலையும் அவன் கண் முன் வந்தது. ‘யாழினியாள்’, மகளை நினைத்த மாத்திரத்தில் அடங்காத அவன் மனம் அடங்கி அமைதியுற்றது. இவர்கள் கூறினால் யாழி என் மகள் இல்லை என ஆகிவிடுமா?

இவன் அமைதியும், அம்மாவின் ஏளனப் பார்வையும் தாக்ஷாவை ஏகத்திற்கும் உசுப்பேற்றி விட, “நானா இல்ல யாழியா கௌதம்?” என்றாள் உதடுகள் துடிக்க.

“அப்படினா?” எனக் கேட்டவன் கோபம் எல்லாம் வடிந்திருந்தது.

“கொண்டு போய் அனாத இல்லத்துல விடுன்னு சொல்லல. நல்ல போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விடுவோம். என்ன வசதி வேணும்னாலும் செய்து தரலாம். எவ்வளவு வேணும்னாலும் படிக்கட்டும். ஆனா நீ எனக்கு முதல் உரிமை தர புருஷனாவும், நமக்கு பிறக்க போற குழந்தைகளுக்கு மட்டும் நீ அப்பாவா இருக்கணும்ன்னு சொல்றேன்”

“அதாவது என் மகளுக்கு நீ சித்தியா இருப்பன்னு சொல்ற. ம்ம்ம்…. போதுமா?” எனக் கேட்டவனுக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

“கௌதம். ஐ ஆம் சீரியஸ்”

“ஓஹ்… யோசிச்சு தான் பேசறியா தாக்ஷா?”

“ம்ம் நல்லாவே”

அடுத்து என்ன நடக்கும் என வாசுதேவனுக்கு விளங்கவும் அவர் இருவரையும் சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கினார்.

“இப்போ இத பத்தி பேசியே ஆகணுமா? ரெண்டு பேர் கோபமும் தணியட்டும். பொறுமையா பேசுங்க” என்றவரை ஒட்டியே தாக்ஷாவின் தந்தையும் பேச, அவளின் அன்னையால் அதைப் புரிந்து கொள்ள முடியாது போனது.

“இப்போவே பேசி முடிவெடுத்தா தான சரியா இருக்கும்” என்றார்.

கௌதமன் தாக்ஷாவையே பார்த்து நிற்க, அவனை கார்னர் செய்வதாக நினைத்தாளா… இல்லை அவனால் இவளின்றி இருக்க முடியாது என நினைத்தாளா தெரியவில்லை, கையில் இருந்த மோதிரத்தைப் பிடித்தவள், “சொல்லு கௌதம். நானா இல்ல யாழினியா?” என்றாள்.

“வேண்டாம் தாக்ஷாயினி” என்றவன் குரலில் எச்சரிக்கையும் எரிச்சலும் எட்டிப்பார்த்தது.

அவன் தயங்குவதைக் காணப் பிடிக்காதவளாய், “நீ தான் தாக்ஷான்னு சொல்லு கௌதம். இல்லனா… ஐ ஆம் காலிங் ஆஃப் திஸ் வெட்டிங்” என்றாள் அனைவர் முன்னும்.

“தாக்ஷா” என அவளின் அப்பாவின் சத்தமோ… கௌதமனின் அதட்டலோ அவள் காதுகளில் விழவே இல்லை. மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டவளுக்கு அனைவர் முன்னிலையிலும் ‘நீ தான் எனக்கு முக்கியம்’ எனக் கௌதமன் கூற வேண்டும் என்றிருந்தது.

வெளியே சத்தம் கேட்டு எழுந்த குழந்தை பயத்தில் மலங்க மலங்க விழித்து அழத் தயாரானாள். எழுந்து அமர்ந்தவளின் கண்களில் திறந்திருந்த வாயில் தெரிய, எழுந்து வெளியே வந்தாள்.

“இது விளையாட்டு இல்ல தாக்ஷா, டோன்ட் டூ திஸ்…” எனும் அப்பாவின் சத்தம் கேட்ட மகள், ஓடிவந்து “அப்பா” எனக் கௌதமன் காலை கட்டிக் கொண்டாள்.

வைஷாலி, “இதுல கேக்க என்னமா இருக்கு? நீ தான் அவனோட வாழ போற. யாழினிய நான் வளத்துட்டு போறேன். உங்களுக்கு நடுவுல அவ வராம நான் பாத்துகிறேன். யாழி பாட்டிட்ட வா” எனவும் கௌதமன் நொந்தே போனான். ஆக… இந்தத் திருமணம் எனக்கும் என் மகளுக்கும் சோகத்தையும் வாழ்நாள் பிரிவையும் தான் தாங்கி நிற்கிறதா… பெருமூச்சு விட்டான் கௌதமன்.

“சொல்லு கௌதம்… நானா அவளா?”

“ஒளறாத தாக்ஷா” என்றவன் பற்கள் அரைபட்டது.

“எனக்குத் தெரியாது. ஒரு முடிவ எடு இப்போவே”

தன்னையே உலகம் என நம்பி நிற்கும் அவன் செல்ல மகளைப் பார்த்தான். “அப்பா” எனக் கண்களைக் கசக்கினாள். மகளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

“இவ, யாழினியாள் கௌதமன். என் பொண்ணு. என் யாழி பேபி. உன்னால இந்த உண்மைய ஏத்துக்க முடிஞ்சா என் கூட வா. கடைசி வரைக்கும் உன்னையும் விட மாட்டேன். முடியாதுன்னா… உன் இஷடம்.” என்றான் தீர்மானமாக.

“ஓ…” என்ற தாக்ஷாயினி மோதிரத்தை கழட்டி “ஐ ஆம் டன் வித் யூ” எனக் கொடுத்துவிட்டு அவனை விட்டுச் சென்றவளின் முதுகைப் பார்த்து நின்றவனுக்கு எப்படி உணரவேண்டும் என்று தெரியவில்லை.

“நான் என் பொண்ணுட்ட பேசறேன் மாப்பிள்ளை… ஊர கூட்டி இப்போ தான் நிச்சயம் முடிஞ்சுது… அவ ஏதோ அறிவில்லாம சொல்லிட்டு போறா” எனப் பெண்ணின் தகப்பன் அவசர அவசரமாக விரிசலைப் பூச முற்பட்டார்.

“என்ன பேசறீங்க நீங்க? இவங்க அந்த குழந்த நம்ம பொண்ணு வாழ்க்கைக்குத் தடையா இருக்காதுன்னு சொன்னாங்க தான. இப்போ இவர் இப்படி பேசினா… என் பொண்ணு பொறுத்து போகணுமா? ரெண்டு பெரிய ரெசார்ட், லக்ஷுரி கார் ஷோ ரூம், இவங்க அடுத்த படத்துக்கு ஃபைனான்ஸ்ன்னு இவ்வளவும் எதுக்கு கொடுக்கறோம்? யாரோ ஒரு அனாத பொண்ணு அனுபவிக்கவா? எங்க பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தை மட்டுமே உங்கள அப்பான்னு உரிமையா     கூப்பிடவும், உரிமையா அனுபவிக்கவும்” எனக் கணவனிடம் பேச ஆரம்பித்து கௌதமன் முகம் பார்த்து முடித்தார் தாக்ஷாவின் அம்மா.

அதுவரை அமைதியாக இருந்தவனால் அதற்கு மேல் அப்படி இருக்க முடியவில்லை. இது… இந்தக் காதல்… இந்தத் திருமணம் சரி வராது என முடிவெடுத்தான். விரலில் இருந்த நிச்சய மோதிரத்தைக் கழட்டியவன், “ஐ ஆம் நாட் ஃபார் சேல்.” என அதை தர்ஷனியின் கரத்தில் வைத்துவிட்டு, காரை நோக்கி மகளோடு நடக்க ஆரம்பித்தான்.

“பாப்போம் சம்பந்தி… கோபம் ஆறட்டும் பேசுவோம்” என மனைவியை இழுத்துக் கொண்டு கிளம்பினார் தாக்ஷாவின் அப்பா.

மகன் பின்னோடு வந்த வைஷாலிக்கு கோபம் அதன் எல்லையைக் கடந்தது. எவ்வளவு பெரிய இடம்? எவ்வளவு பெரிய வாய்ப்பு மகனுக்கு? விழுந்துகிடக்கும் கணவனின் கனவை எழுப்பி நிறுத்த வேண்டியவனே அதை அழித்து விட்டானே… மனம் ஆறவே இல்லை வைஷாலிக்கு.

வைஷாலி, “என்ன டா பண்ணி வச்சிருக்க?” எனச் சத்தம் போட்டார்.

“ப்ச்… எதுக்குச் சத்தம் போடறீங்க? தப்பு உங்க மேல. யார கேட்டு இப்படியான வாக்கு கொடுத்தீங்க? நான் எப்படி உங்க கூட இருக்கேனோ அப்படித் தான் என் பொண்ணு, என் கூட என் வீட்டுல தான் இருப்பா.”

“அது என் வீடு கௌதமா. நான் அந்த வீட்டுல யாழிய வச்சுக்க மாட்டேன்னு சொன்னா?”

“வைஷாலி… வாய மூடு. வார்த்தைய கொட்டினா அள்ள முடியாதுன்னு உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல” எனத் தன் சத்தத்தை உயர்த்தினார் வாசுதேவன்.

“அப்போ அந்த வீட்டுல எனக்கும் இடம் இல்லன்னு கிளம்பிடுவேன்” என்றான் நொடி தாமதியாமல்.

“எல்லாத்தை நாம ஏன் இழந்தோம் தெரியுமா? உன்னால! நீ ஒழுங்கா இருந்திருந்தா இந்த நிலமை நமக்கு வந்திருக்காது”

“வைஷாலி!”

“நீங்க சும்மா இருங்க.”

“உனக்கு எல்லாம் நாங்க கொடுக்கிறனால தான ஊர்ல இருக்க அனாத பிள்ளைய தூக்கிட்டு வந்து நிக்கிற? சங்கித்தாக்கு சம்பளம் நீயா கொடுக்கிற? பிளே ஸ்கூலுக்கு நீயா பணம் கட்டுற? ஸ்கூலுக்கு போக எடுத்துட்டு போற கார நீ தான் உழைச்சு வாங்கினியா? இல்ல அதுக்கு போடற பெட்ரோளாவது உன் உழைப்பில வந்துதா? எல்லாம் விடு… அந்த குட்டி வயறுல போடற நாலு வாய் சோறாது நீ உழைச்சு கொடுத்தியா? எல்லாமே உன் அப்பா உனக்காக சம்பாரிச்சது.

அப்பான்னு உன்னேயே சொல்லிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? ஒண்ணு அவ உன் ரத்தமா இருக்கணும். இல்ல உன் சம்பாதியத்துல வளக்கணும். ரெண்டுமே இல்லாத போது நீ எப்படி அந்தக் குழந்தைக்கு அப்பா ஆன?

நாலு மாசம் நீ சுயமா அந்த குழந்தைய பார்த்துக்கோ… அப்பறம் பேசு. நாலு மாசம் என்ன நாலு மாசம்… நாலே நாலு வாரம் என் உதவியோ உன் அப்பாவோட சம்பாத்தியமோ இல்லாம தனியா வளத்து பாரு… போதும் டா சாமின்னு நீயே கொண்டு வந்த இடத்துல விட்டுட்டு வந்து நிப்ப. அப்பனாம் அப்பான்!” என்றார் வைஷாலி மூச்சுவாங்க.

“நாலு மாசம் இல்ல, என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி அவ புருஷனோட போற வரைக்கும் என் மக என் மகளா என் கூடத் தான் இருப்பா. அத நான் தனியா தான் செய்யணும்னா… செய்துட்டு போறேன்.”

“அவ்வளவு ரோஷக்காரனா இருந்தா அந்த குட்டியோட என் வீட்டு வாசல்ல கால் வைக்காத!”

“வைஷாலி…வாய மூடு!”

“சரி மா” என்றான், அசைந்த மகளைத் தன்னோடு இறுக அணைத்து.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!