36 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,959
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 36
.
“எங்கையா போச்சு?” நடக்கும் நிகழ்வின் தீவிரம் புரியாது சுபாஷினி சாவகாசமாக செந்திலிடம் கேட்க,
Advertisement
“என்னைக் கொலைகாரன் ஆக்காம விடமாட்ட போல. போ அந்தப் பக்கம்… பிள்ளைய பாத்துக்க வந்த ஆளும் மூஞ்சியும்…” எனக் கடுகடுத்தவன், அழுகுரல் வந்த திசையை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
நிலவு வெளிச்சத்தில் குட்டி உருவம் ஓடுவது தெரிந்தது. “என்னய்யா இந்த ஓட்டம் ஓடுது?” என சுபாஷினி அரண்டு போக, “குழந்தைங்க ஓடி நீ பார்த்ததே இல்லையா? முதல்ல பாப்பாவ பிடிக்கிற வழிய பாரு. அந்தப் பக்கம் பீச் இருக்கு.” என்றவன் இருளில் மறைந்த யாழியைத் தேடி ஓடினான்.
Advertisement
Advertisement
சின்ன குடிலும் அதைச் சுற்றி பாட்டிலும் கையுமாக ஒன்றிரண்டு குடிமகன்கள் தங்களின் பணியைச் செய்து கொண்டிருந்தனர். கடற்கரை மணலில் போட்டிருந்த சாய்வு நாற்காலி பலதும் காலியாகி இருந்தாலும் சிலது குடிமக்களைத் தாங்கியிருந்தன. ஆர்வ கோளாறோ… வயது கோளாறோ ஏதோ ஒன்றின் காரணமாக அந்த இருட்டிலும் ஓரிரு இளம் ஜோடிகள் தங்களை மறந்து கரையிலும் நீரிலுமாக குதித்துக் கொண்டிருந்தனர்.
குடிலின் வெளிச்சத்தில் குழந்தைக்குக் கடல் தெரிந்தது. ஆர்ப்பரிக்கும் அலையின் பயங்கரம் எல்லாம் குழந்தைக்குத் தெரியவில்லை. அப்பாவோடு அங்குதானே விளையாடுவாள். அப்பா அங்கு இருப்பார் என எண்ணினாள் போலும், அங்குத் தெரிந்த உருவத்தை நோக்கிக் குட்டி கால்கள் இன்னும் வேகமெடுத்தன.
Advertisement
தாக்ஷா தோழர்களோடும் கவினோடு ஐக்கியமாகி இருக்க, ஏனோ கௌதமனால் அமர்ந்திருக்கவே முடியவில்லை. செந்திலும் அழைப்பை எடுப்பதாக இல்லை. வேறு தேசத்தில் இருந்த விக்ரமிடம் இருந்து அழைப்பு வந்தது. “கால் வருது… டூ மினிட்ஸ்” என தாக்ஷாயினியிடம் கூறியவன், கைப்பேசியோடு ஓரம் சென்றான்.
மனம் ஏதோ செய்தது. அழுத்திப் பிடித்த இதயத் தசைகளை நீவிக் கொண்டான். சம்பந்தமே இல்லாது இரண்டு மூன்று நாள்களாக அவனைப் படுத்தி எடுக்கும் கனவு நினைவில் வந்தது.
பால் மணம் மாறாத சிறுவனிடம், ‘அப்பாக்கு டாடா சொல்லு’ என்றார் முதியவர் ஒருவர். கண்களில் நீரும் முகத்தில் சோகமும் தாங்கிய சிறுவனின் தகப்பன் மனமே இல்லாது ‘பாத்துக்கோங்க மா’ எனக் கூறி காரில் ஏறிச் சென்றார். தன்னை விட்டுச் செல்லும் வாகனத்தின் பின் குட்டி கால்கள் இரண்டு வேகமாக ஓடின. திறந்திருந்த பெரிய கேட்டை பிடித்து நின்ற சின்னவன் கண்முன்னே வாகனம் புழுதியை வாரியிறைத்துக் கொண்டே சென்றது. புழுதி பறந்து மறைந்த பின்னும் வாகனம் சென்ற பாதையை விசும்பலோடு பார்த்து நின்றிருந்தான் குட்டி மகன். இவ்வளவு தான் கனவு. ஆனால் அதன் தாக்கம் பெரிது. நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால், அந்தத் தகப்பன் இடத்தில் தானும், அந்தக் குட்டி மகன் இடத்தில் யாழியும் நன்கு பொருந்தினர். மூச்சு முட்டியது கௌதமனுக்கு.
கைப்பேசியின் கதறலைக் காதில் வாங்காது யோசனையோடே நடந்தான் கௌதமன். பார்ட்டிக்காக ஏற்பாடு செய்திருந்த இடத்தைத் தாண்டி, அரட்டை கச்சேரியின் சத்தம் கேட்காதவாறு தள்ளிப் போனவனின் கவனம் கடற்கரையில் எதையோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த கூட்டம் பக்கம் சென்றது. சிலர் எதையோ ஆர்வமாகத் தங்களின் கைப்பேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். சாகக் கிடப்பவனையும்… அவனது துடிக்கும் உடலையும் கூட, கைநடுங்காது விடியோ எடுத்து, அதை உலகிற்குக் காட்டுவதில் நம்மை மிஞ்ச யாரேனும் இருக்கிறார்களா என்ன? அப்படி இருக்க, யாருக்கோ பயந்து கடலை நோக்கி அழுது கொண்டே ஓடும் சின்ன குழந்தை எம்மாத்திரம்?
“அத்தனோண்டு இருந்துகிட்டு என்னமா ஆட்டம் காட்டுது பாரேன்” சாய்வு நாற்காலியில் படுத்திருந்த ஒருவர் கூற, “குட்டி பசங்களுக்கு மட்டும் எங்க இருந்து தான் இவ்வளவு எனர்ஜி கிடைக்குதோ போ… என் பேரனும் இப்படித் தான். என் மருமக ஒரு நாளும் அவன துரத்தி பிடிச்சதே இல்ல. அவனுக்கா தோணினா மலை இறங்குவான்” மற்றொருவர் அவர் பேரனின் பெருமையை கடை பரப்பிக் கொண்டிருந்தார்.
பெரியவர்களின் பார்வை சென்ற பக்கம் பார்த்தவனின் கண்கள் சுறுங்கின. அது… அவன் மகள். கடலை நோக்கி “அப்பாஆஆஆ…” என அழுது கொண்டே ஓடும் குழந்தையைப் பிடிக்க இருவர் போராடிக் கொண்டிருக்க, அதைக் கைப்பேசியில் படம் பிடிக்கும் அந்த ஜனங்களின் சீழ் பிடித்த மனநிலை உண்மையிலுமே அவனைப் பயமுறுத்தியது.
அவசரமாக மகளை நோக்கி ஓடியவன், மகளின் நிலை கண்டு நின்றுவிட்டான். பித்து பிடித்தது போல் “அப்பா” என அழுத்துக் கொண்டே கடலை நோக்கி ஓடுகிறாள் அவன் குட்டி மகள். “பேபி” என்றவன் குரல் கரகரத்தது. ‘பேபி’ என எங்கிருந்தோ வந்த தந்தையின் சத்தத்திற்கு பிரேக் அடித்தார் போன்று நின்ற குழந்தை தந்தையைத் தேட, “யாழி பேபி” என்ற சத்தம் வந்த பக்கம் பார்த்தாள்.
தேவதை என வீட்டிலிருந்து கிளப்பி அழைத்து வந்திருந்த அவன் குட்டி மகள், வெறும் ஜட்டியோடு, தெருவில் கேட்பார் இல்லாது சுற்றும் ஆதரவற்ற அழுக்கு குழந்தையாக நின்றிருந்தாள். தந்தையாகக் கௌதமனின் மனம் உடைந்தே போனது. தேம்பித் தேம்பி அழுது கொண்டே “அப்பா… அப்பா” எனத் தலையை நாலா பக்கமும் திருப்பிய குழந்தையின் பார்வை வட்டத்தில், அவள் தகப்பன் விழவும் அழுகை இன்னும் அதிகமானது. உதடு பிதுங்க, ஓடிவரும் தந்தையைப் பார்த்து நின்றிருந்தாள் குழந்தை.
ஏன்? எப்படி? யாரால்? என் குழந்தைக்கு என்ன ஆனது? ஒரு தந்தை கனவிலும் காண விரும்பாத காட்சியைப் பார்த்தவன் அடைந்த துயரத்தை எப்படி வார்த்தையால் வடிப்பது? மண்டியிட்டு மகளை அணைத்து… அள்ளி வாரி தனக்குள் புதைத்துக் கொண்டான்.
“அப்பா… அப்பா… அப்பா” என மூச்சு வாங்கத் தேம்பி அழும் குழந்தைக்கு ஆறுதல் வார்த்தை கூறத் தான் எண்ணுகிறான். ஆனாலும் “பேபி” என்ற வார்த்தையைத் தாண்டிய வார்த்தைகள் எதுவும் நினைவில் வரவில்லை கௌதமனுக்கு.
எந்த நிலை யாழிக்கு வரக் கூடாது என நினைத்து தனது மகளாக கையில் ஏந்தினானோ… அதே நிலையில் தன் மகளைப் பார்க்கிறான். தகப்பனாகத் தோற்றுப் போனேனே… நான் வராது போயிருந்தால்… சுக்கு நூறாக உடைந்த கௌதமன், தன் சோகத்தை அடக்க இயலாதவனாய் மகளின் முகம் முழுவதும் முத்தம் வைத்தான். அந்தச் சத்தமில்லாத மௌன முத்தங்கள் மகளுக்கு மட்டுமா ஆறுதல்… அவனுக்கும் தானே.
அப்பாவின் கன்னம் வழிந்த நீரைப் பார்த்த குழந்தை, தேம்பிக் கொண்டே, “அப்பா வலிதா?” எனக் கண்களைத் துடைத்து, “நலைய வலிதா அப்பா?” என கன்னத்தில் அந்த பிஞ்சு இதழ்களை பதிக்க, கௌதமன் அந்த நொடி நொறுங்கிப் போனான்.
‘ஆம்’ எனத் தலையசைத்தவன் மகளை மார்போடு அணைத்துக் கொண்டான். தாறுமாறாகத் துடிக்கும் அவன் இதயத்திற்கு மகளின் அரவணைப்பு தேவைப்பட்டது.
அழும் மகளின் சிவந்த பட்டு கன்னம் துடைத்து, “அப்பா வந்துட்டேன் டா பேபி” என மகளின் முதுகை வருடியவன் பார்வையில் கன்னத்தில் பதிந்திருந்த நான்கு விரல்களின் தடம் நன்றாகவே விழுந்தது.
‘ஆஆஆ…’ என மனம் கோபத்திலும் இயலாமையிலும் அலறியது. யார்… யார்.. தன் மகளை வதைத்தது? கண்களை அழுந்த மூடி திறந்தவனிடம், “ஆலி பேபிக்கும் வல்சுது. பேபி அலுவிச்சு… அப்பா எங்க போன?” என மகள் தேம்பிக் கொண்டே கேட்டாள்.
மகளின் கேள்விகளுக்கு உண்மையான பதிலை மட்டுமே கொடுக்கும் தகப்பன் என்ன கூறுவான்? நம்பி மோசம் போனேன் என்றா? “சாரி பேபி… அப்பா… சாரி பேபி… இனிமேல் இது மாதிரி நடக்காது” என மகளுக்கு வாக்கு கொடுத்தான்.
மூச்சுவாங்க, “கதவ திறந்ததும் பாப்பா ஓடிடுச்சுங்க” என மகளைத் துரத்தி வந்த பெண்ணோடு செந்திலை பார்த்தவனுக்கு ஏதோ புரிந்தது. “சார்… பாப்பா” என செந்தில் ஆரம்பிக்கும் முன், கால்கள் தடுமாற நான்கடி தள்ளிச் சென்று தள்ளாடி விழப் போனவன் தென்னை மரத்தில் இடித்து, கன்னம் பிடித்து நின்றான். ஒட்டுமொத்த முகமும் உடைந்து போனது போல் வலியில் தெறிக்க, நெருப்பை வாரி இறைத்தது போல் கன்னம் எரிந்தது. எதிர்பார்த்தது தான்… ஆனாலும் செந்திலால் தாடை எலும்பு கொடுத்த வலியைத் தாள முடியவில்லை.
கௌதமனை நெருங்கியிருந்தவள் சட்டென இரண்டடி தள்ளிச் சென்றாள். அறை கொடுத்தது என்னவோ செந்திலுக்கு தான்… ஆனால் அவன் ரௌத்திரப் பார்வை சுபாஷினியை விட்டு அகலவில்லை. பயத்தில் பெண்ணுக்குத் தொண்டை வறண்டு, கால்கள் தள்ளாடின.
விழுந்த அறையின் சத்தத்தில், குழந்தை “அப்பா” எனப் பயத்தில் தேம்பியது.
“ஒண்ணும் இல்ல டா பேபி” என மகளின் தலை கோதினாலும், கலைந்த கேசமும், சிராய்ப்பும் இரத்தமுமாகப் புடைத்த நெற்றியும், அழுக்கும் கண்ணீருமாகச் சோர்ந்த முகமும், அதில் நான்கு விரல்களின் தடமும் பார்த்தபின்னும் ‘ஒற்றும் இல்லை’ எனக் கௌதமனால் நினைக்க முடியுமா?
மகளுக்கு ஏன் இந்த நிலை? யார் காரணம்? யார் என்பதைப் பின்பு ஆராயலாம். அதற்கு முன், வியர்வையில் குளித்து சிறுநீர் நாற்றத்தோடு தன் கையில் அமர்ந்திருக்கும் மகளைக் கவனிக்க மனம் கூறியது.
“ச…ச…சாரி… பாப்…” எனக் குழற, ஒற்றை விரலைக் காட்டி வாயை மூடு என்ற செய்கையிலேயே அவனின் கோபத்தின் அளவு தெரிய, பயத்தில் அவள் பார்வை நிலத்தை நோக்கி சென்றது.
செந்திலை அவன் பார்த்த பார்வையில், “ரூம் அந்த பக்கம் சார்” என்றான், வலியில் முகம் சுளித்து. செந்தில் காட்டிய திசையில் கௌதமன் நடக்க ஆரம்பிக்க, ஓட்டமும் நடையுமாக செந்தில் கௌதமனை தொடர்ந்தான்.
மகனைத் தேடிக் கொண்டே அறையை நோக்கி வந்த வைஷாலி, கௌதமன் அறையை அடையும் முன்பே கண்டு கொண்டார். “கௌதமா” எனத் தன்னை கடந்து சென்ற மகனை அழைத்தார். சத்தம் கேட்டு நின்றவன் அன்னையைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். அந்தப் பார்வையில் என்ன? அன்னையை விட்டு பார்வையை மாற்றியவன் எதுவும் கூறாது, எதைப் பற்றியும் கேட்காது நடக்க ஆரம்பித்தான். அவர்கள் பின்னோடு நடந்து வந்த பாட்டியை, கலங்கிய குட்டி விழிகள் இரண்டு பார்த்துக் கொண்டே இருந்தன.
“செந்தில் அந்தச் சுபா பொண்ணு எங்க? குழந்த எப்படி இங்க வந்தா? குழந்தை அழுதா என்னை கூப்பிடச் சொன்னேனே… ஏன் அவள கோட்டுக்குள்ள சுத்தி வச்சிருக்கான்? யாழிக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே” என செந்திலை கேள்விகளால் துளைத்தவர், “கௌதமா… தாக்ஷா வீட்டுல உனக்காக சாப்பிடாம காத்திருக்காங்க. ஒரு பத்து நிமிஷம் பொறுக்கக் கூடாதா? இங்க என்ன பண்ற? உன்ன கேக்கிறவங்களுக்கு என்ன சொல்ல? உன்ன தான் கௌதமா… நில்லு. யாழிய செந்தில்ட்ட கொடுத்துட்டு வா” என மகனிடம் பேசிக்கொண்டே வந்த அன்னையிடம் நின்று பேசக் கூட தோன்றாமல் கௌதமன் தன் நடையின் வேகத்தைக் கூட்டினான்.
எங்கே அப்பா தன்னை செந்திலிடம் கொடுத்திடுவாரோ என அஞ்சிய குழந்தை அப்பாவின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டு, “ஆலி பேபி போமாட்டன். பேபிக்கு அப்பா நேணும்” என மிண்டுமாகத் தேம்பலோடு அழுகையை ஆரம்பித்தாள்.
புன்னகையோடே, “அப்பா பேபிய யார்ட்டையும் கொடுக்க மாட்டேன். என் யாழி பேபிய விட்டு அப்பா எங்கயும் போகவே மாட்டேன். என் பேபி தைரியமா இருக்கணும். ஓக்கேவா?” என்றவன் மகளின் கன்னம் அழுந்த முத்தம் கொடுக்க, தகப்பனின் புன்னகை சின்னவளின் பயத்தைச் சற்று நீக்கியது.
குழந்தைக்கு என்ன புரிந்ததோ… அப்பா தன்னை விட்டுச் செல்ல மாட்டார் என்பது வரை புரிய, “ஓக்கே அப்பா” எனத் தகப்பனுள் தஞ்சமடைந்தாள்.
“ரூம் எங்க?” என்றவன் முன் அவசர அவசரமாக நடந்த செந்தில், “இந்தப் பக்கம் சார்” என வழி காட்டினான்.
“எங்க மானத்த வாங்கன்னு முடிவு பண்ணிட்ட… என்னவாது பண்ணு போ” என வைஷாலி சென்றுவிட, அறைக்கு வந்தவன் மகளைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழையும் முன், “ரெண்டு இட்டிலி, காரம் கம்மியா சட்டினி, ஒரு கப் ஹார்லிக்ஸ்” என செந்திலை பார்த்துக் கூறிவிட்டுச் சென்றான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் குளித்து, ஓர் இட்டிலியும் அரை கப் பாலும் குழந்தையின் வயிற்றை நிரப்பி இருக்க, அப்பாவின் கைக்குள் பாதுகாப்பாக உறங்கி இருந்தாள் கௌதமனின் குட்டி மகள். கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடத்தை மெல்ல வருடிவிட்டுக் கொண்டிருந்தவனுக்குள் கனன்றது.
அறைக்கு வெளியே அமர்ந்திருந்த சுபாஷினியை அழைத்தான். அந்த ஒரு மணி நேரத்தில் அழுது, தேம்பி, சிணுங்கி, சிரித்து, அப்பா அப்பா என மூச்சுக்கு ஒரு முறை தகப்பனை அழைத்துக் கொண்டிருந்த சின்னவளின் சத்தத்தைக் கேட்டே அமர்ந்திருந்தாள் பெண். அந்தச் சின்ன குழந்தையின் உலகம் எத்தனை சின்னது? குழந்தையை வேறு மாதிரி கையாண்டிருக்க வேண்டும், அடித்திருக்கக் கூடாது என மனம் நடந்த நிகழ்வில் தன் தவற்றை எடுத்துக் காட்டியது.
“அது பாப்பா அழுத்துட்டே இருக்கவும்… என்னையும் அறியாம அடிச்சுட்டேன். சாரி சார்” என்றவள் அவன் பார்த்த பார்வையில் சட்டென வாயை மூடினாள்.
“சொல்லு” என்பது அவன் முதல் கேள்வியாக இருக்க, “என்ன சொல்லணும்?” என்ற கேள்வி எல்லாம் வரவில்லை. செந்திலின் வீங்கிய தாடையைப் பார்த்தபின் எதிர்க்கேள்வி எல்லாம் எழவில்லை. அவள் வந்த நிமிடம் முதல் கடற்கரையில் கௌதமன் பார்த்து நின்ற வரை, நடந்த அனைத்தையும் அச்சு பிசகாமல் ஒப்பித்தாள்.
“என்ன மருந்து?” என்றவனிடம், மேசை மேல் இருந்த மருந்தைக் கொடுத்தாள். மருந்து பாட்டிலைப் பார்த்தான். இரவு நேர இருமலைக் கட்டுக்குள் கொண்டுவந்து தூக்கத்தைத் தரும் மருந்து. ஏழு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்றிருந்தது.
“இத கொடுக்க கூடாதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?”
“அந்த டிரைவர் கொடுத்ததா சொல்லவும் தான்…” என முடிக்காது முடித்தாள்.
மிகவும் அமைதியாகவும் அழுத்தமாகவும் சுபாஷினியை பார்த்தவன், அதே அழுத்தத்தோடு, “என் மகள அடிச்சு ஓட்டவிட்ட உன் கையையும் காலையும் உடைச்சு ஒரு ஓரமா வாழ்நாள் பூரா உக்கார வைக்கிற அளவுக்கு எனக்குள்ள கோபம் இருக்கு.” என்றவன் சற்று நேர அமைதிக்குப் பின்,
“நீ என்ன தொழில் வேணும்னாலும் செஞ்சு பொழச்சுக்கோ. ஆனா குழந்தைங்க பக்கம் மட்டும் போனன்னு தெரிஞ்சுது…” என்றவன் பார்வை சுபாஷினியின் அடி ஆழம் வரை மிரட்டியது. முடிக்காத வாக்கியத்தோடு ‘போ’ என்பதாகக் கௌதமன் கையசைக்க, அந்த இடத்தைவிட்டு மௌனமாக நகர்ந்தாள். பார்த்துக்கொள்ளுவதாக வாக்கு கொடுத்து குழந்தையை மிரட்டி, அடித்து… மருந்து கொடுத்து… ப்ச்! நின்று, திரும்பிப் பார்த்து, “சாரி சார்” என்றவளைக் கௌதமன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
விழா முடிந்து மக்களும் சென்றிருக்க, அறையை நோக்கி இரு குடும்பத்தினரும் ஆனந்தப் பூரிப்போடே பேசிக் கொண்டே வருவது தெரிந்தது.
“நல்லபடியா… மனசுக்கு திருப்தியா முடிஞ்சுது சம்பந்தி. எனக்கு ரொம்ப சந்தோஷம். என்ன… எல்லாத்தையும் முன்ன நின்னு செஞ்ச தர்ஷனால இன்னைக்கு வரமுடியல. ரொம்ப முக்கியமான வேலைன்னு டெல்லி வரைக்கும் போக வேண்டியதா போச்சு. இவ கல்யாணத்த முடிச்ச கையோட பையன் கல்யாணத்த முடிக்கணும்.” எனப் பேசிக்கொண்டே வந்த இரு தகப்பன்மார்களும் சற்று தள்ளி இருந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்தனர்.
குடிலின் வாயிலில் இருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்த கௌதமன் அருகில் வந்த தாக்ஷா, “நீ இல்லாமலே சாப்பிட்டேன் தெரியுமா? அப்படியே விட்டுட்டு வந்துட்ட? நீ உன் மனசுல…” தாக்ஷாயினி வாக்கியத்தை முடிக்கும் முன், அவன் பின்னிருந்த அறையைக் காட்டி, “உனக்கு இந்த அரேஞ்மென்ட் எப்போ தெரியும்?” எனக் கேட்டான்.
இந்தக் கேள்வி வரும் எனத் தெரியும். ஆனால் இன்றே வரும் என எதிர்பார்க்கவில்லை. சலிப்பும் எரிச்சலுமாக, “என்கேஞ்மென்ட் டேட் ஃபிக்ஸ் பண்ணின அன்னைக்கே” என்றாள்.
பதிலைக் கேட்டவன் அமைதியாகக் கண்களை மூடி சாய்வாக அமர்ந்தான். திருமண நிச்சயம் ஆன உற்சாகமோ சந்தோஷமோ இல்லை. மனதில் குடைச்சல் அடங்க மாட்டேன் எனத் தலை விரித்தாடியது. கோபத்தில் பேசிவிடக் கூடாதெனத் தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவனை அப்படியே விட தாக்ஷாவிற்கு மனம் இல்லை.
“இப்போ என்ன ஆகிடுச்சுன்னு இந்த சீன் போடற? அத்த சொன்ன மாதிரி சாப்பிட்டு தூங்கிட்டு தான இருக்கா யாழி? என் கூட சேந்து சாப்பிட உன்னால ஒரு பத்து நிமிஷம் ஸ்பேர் பண்ண முடியல இல்ல?” எனக் கடுகடுத்தவள், “பெத்தவன் கூட இப்படித் துடிக்க மாட்டான்…” என வாய்க்குள் முணுமுணுத்தாள்.
அவளின் கடைசி வாக்கியம் உள்ளுக்குள் பிழம்பாய் இறங்கியது. தோளில் இருந்த குழந்தை சிணுங்க, “பே..சா..த” என்றான் ஒவ்வொரு எழுத்தாகக் கடித்துத் துப்பி.
மூண்ட கோபத்தை அடக்கும் எண்ணமில்லாது தாக்ஷா, “ஏன் நான் பேசாம யார் பேசணும்?” எனச் சத்தத்தை உயர்த்தினாள்.
குழந்தையின் காதுகளில் இதெல்லாம் விழ வேண்டுமா என எண்ணியவன் அவளை உள்ளே சென்று கிடத்தினான். தான் பேசுவதைக் கேட்காது அறைக்குள் சென்ற கௌதமன் மேலும், அதற்குக் காரணமாக இருக்கும் சின்னவளின் மேலும் இன்று கோபம் சற்று அதிகமாகவே வந்தது தாக்ஷாயினிக்கு. அவள் கண்களுக்கு வைஷாலி கூறியது போல் உண்டு அமைதியாக உறங்கும் குழந்தை மட்டுமே தெரிய, கௌதமனின் கோபம் அவசியமற்றதாகவே பட்டது.
“இன்றைக்குத் தான் நமக்கு என்கேஜ்மென்ட் முடிஞ்சிருக்கு. ஆனா உன் முகத்த பாரு” என அறையை விட்டு வெளியே வந்தவனைப் பார்த்து சத்தம் போட்டாள்.
“அதே தான். இன்னைக்கு நம் வாழ்க்கையோட ஆரம்ப நாள். என் பொண்ணு ஏன் அங்க இல்ல?” என்றான் அவனும் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடே.
“நானும் அப்போ இருந்து பார்க்கிறேன். என் வாய கிளர்ற கௌதம் நீ”
வைஷாலி, “ஏன் டா நல்ல நாள் அதுவுமா சண்டைய இழுத்துட்டு இருக்க?” என மகனைக் கண்டிக்க முயன்றார்.