37.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,837
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 37
.
“காதல் வந்தா பசிக்காதாம், தூக்கம் கெடுமாம்… மனசு, போதையடிச்ச மாதிரி ஹேப்பியாவே இருக்குமாம்…” பள்ளி மரத்தடியில் இரு பெண்கள் காதலுக்கான அறிகுறிகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
Advertisement
அதுவரை அவசர அவசரமாகச் சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்த தாரா, ஒட்டுக்கேட்பதற்காகச் சைக்கிளை நிறுத்துவதில் தாமதம் காட்டினாள். என்ன பசிக்காதா? இப்பொழுது தானே மூக்கு முட்ட உண்டாள்? இதில் தூக்கம் வேறு வராதா? ஐயகோ… நேற்று இரவு ஒன்பதுக்கு விட ஆரம்பித்த குறட்டை இன்று ஆறு மணிக்கு அம்மாவின் உலுக்கல் வரை நீடித்ததே. இதில் மகிழ்ச்சிக்கு எங்குப் போவது? எந்த நேரமும், இந்த டியூஷனா? அந்த டியூஷனா? என மனம் குழம்பி ஒப்பாரி வைக்கிறதே! இதில் ‘ஹேப்பி’ போதையை எங்குத் தேட…? பார்க்கும் திரைப்படங்களும் இதையே கூறுவதால், இந்தப் பெண்கள் பிதற்றுவதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆக, தனக்குள் காதல் இல்லை.
ரகு மீது தனக்குக் காதல் இல்லையா? மனம் வாடிப் போனது சின்னவளுக்கு. வாடியே கிடக்க நேரம் ஏது? ரகுவின் மீது தனக்கு அப்படி ஓர் அபிப்பிராயம் இல்லை எனத் தன்னையே ஆறுதல் படுத்திக் கொண்டவள், எப்போதும் போல் பள்ளி, டியூஷன், கூடைப்பந்து, புல்லாங்குழல், பேச்சு பயிற்சி என நாள்களை அவசர கதியில், அவ்வப்போது எழும் ரகுவின் எண்ணங்களோடு கடத்தினாள்.
Advertisement
Advertisement
திருச்சியின் வானிலையிலிருந்து மாறுபட்டிருந்தது கான்பூர். ரகுவின் நாள்கள் மிகமிக அமைதியாகச் சென்றன. திருச்சி, அவன் ஊனோடும் உயிரோடும் கலந்திருக்க, அதற்குக் காரணமானவளை அதிகம் சிந்தித்தான். ‘எனக்காகன்னு இங்க வராத’ என அவள் கூறியிருந்தாலும், அது… அந்த நேரத்தில் யோசிக்காது குழப்பத்தில் உதிர்த்த வார்த்தைகள் என்றே ரகு நம்பினான்.
மனம் திருச்சியைச் சுற்றி வர, பாட்டியிடம் எப்பொழுதையும் விட அதிகம் பேசினான். பாட்டியிடம் “ஐயாவும் அம்மாவும் எப்படி இருக்காங்க?” என்ற இவனின் ஒற்றை கேள்விக்குப் பக்கத்து வீட்டின் சரித்திரம் பூகோளம் வரைக்கும் பாட்டி இவனிடம் ஒப்பித்துவிடுவார். ஆனால், அதில் இப்பொழுதெல்லாம் பேபியின் புராணம் வருவதில்லை என்பது சற்று ஏமாற்றத்தைத் தந்தது.
Advertisement
“கண்ணு வளந்துட்டா, முன்ன மாதிரி பாட்டி பாட்டின்னு இங்க அதிகம் வரதில்ல. ஏதேதோ கிளாசுக்கு எல்லாம் போறனால நேரம் இல்லியாம். என்னவோ… போ கண்ணு… நீயும் படிப்பு படிப்புன்னு அதிகம் வரதில்ல, அவளும் உன்ன மாதிரி ஆகிட்டு வரா. உன் ஐயாவும் அம்மாவும் எப்பவும் போல பாக்கும் போது உன்ன விசாரிச்சுடுவாங்க” எனக் கூறுபவரிடம் தாராவைப் பற்றி என்னவென கேட்பது?
தாராவைப் பற்றித் தெரிந்து கொள்ளாது ரகுவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. அவளைப் பார்க்க திருச்சி செல்லலாம் தான்… நான்கு நாள்களுக்குக் கோபத்தைப் பிடித்து வைக்கத் தெரியாத பேபி, தன்னை நேரில் கண்ட பின் எப்படிக் கோபிப்பாள்? காதலோடு தன் கரம் பிடிப்பாள். அவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிடும் என ரகு நம்பினான். ஆனாலும் திருச்சிக்குச் செல்லவில்லை. அவள் மறந்தும் ‘நீ வேண்டாம் எனக்கு’ எனக் கூறிவிடக் கூடாது என்பதால், காய் தானே கனியட்டும் எனக் காதல் கனியக் காலம் கொடுக்க முடிவெடுத்த ரகு, தன் உணர்வுகளுக்குக் கடிவாளமிட்டான்.
திங்கள் ஒன்று முடிந்தது. இரவு வானில் முழு மதி கண்களைப் பறித்தது. தாராவின் கால்கள் தன்போக்கில் பாட்டியின் வீட்டு மாடிக்குச் சென்றன. பெருநிலவு என்பதால் இன்றைய முழு நிலவு வழக்கத்தை விடப் பெரிதாகவும் பிரகாசமாகவும் தெரிந்தது. மனம் ரகுவின் பக்கமும், கண்கள் மலைக் கோட்டை பக்கமும் திரும்பியது.
அவன் இருந்திருந்தால், பௌர்ணமி நிலவு இன்னும் அழகாகத் தோன்றியிருக்கும். பசிக்கிறது, தூக்கம் வருகிறது, மனம் மகிழ்ந்து களிக்கவில்லை, பகல் கனவுகள் வருவதில்லை. ஆனாலும்… ப்ச்!
வானில் தெரிந்த மேகங்களை வெறித்தவாறு மொட்டை மாடிக் கட்டிலில் படுத்தவள் எண்ணம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தான் அவளின் லகு. காதல் இல்லாத மனம் ஒருவனை இவ்வளவு தேடுமா? பிரிவுத் துயரை அனுபவிக்குமா? அது ரகுவாகும் பட்சத்தில்… தேடும் என்றே மனம் கூறியது. காதலோ என்னவோ… ரகுவை பார்க்க மனம் ஆசை கொண்டது. ஆடிக்குப் பின் ஆவணி வருவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் ரகு விடுப்பிற்குத் தன்னை காண வருவது எனத் தாரா நம்பினாள்.
ஆனால் இடை இடையே வந்த விடுப்புகளைத் தாத்தா வீட்டின் மொட்டை மாடி கட்டிலில் தனியே கழித்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ரகு மட்டுமா திருச்சி பக்கம் வரவில்லை… அவனைப் பற்றிய செய்திகளும் தான். படிக்க நிறைய இருக்கிறதோ என்னவோ… எனத் தன்னையே தேற்றிக் கொண்டாள் ரகுவின் பேபி.
‘என்னை பாக்காம இருந்துடுவானாக்கும்? எங்க போக போறான்… வருவான்’ என்ற தளராத நம்பிக்கை, தாத்தாவும் பாட்டியும், “அவன் வர முடியாதுன்னு சொல்றான்… அவன மாதிரி இருக்க முடியுமா நம்மால? ரெண்டு வாரம் பேரனோடு இருந்துட்டு வரோம்” எனக் கிளம்பிச் செல்லவும், அந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்து போனது.
விடுப்புக்கு ரகு வந்திருந்தால் சண்டை சமாதானம் என நாள்கள் நகர்ந்திருக்கும். ஆனால் அவன் வராது போனதால் நாள்கள் அதன் இனிமையை இழந்திருந்தன. தன்னை பார்க்காது, ரகு சோகக் கடலில் மூழ்கி இருப்பான் என எண்ணியவளின் எண்ணமும் அடுத்த இருவாரங்களில் பொய்த்துப் போனது. பேரனோடு ஊர் சுற்றி வந்த பாட்டி சும்மா இருக்காது தாராவின் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அளவை ஏற்றிவிட்டார்.
“என்னவோ போ கண்ணு… அந்த பொண்ணு அவனையே சுத்தி சுத்தி வருது. அவனும் அவ கூடவே தான் போரான், வரான். கேட்டா… ஃப்ரெண்டாம். ஃபிரெண்டுனா… வந்தோமா பேசினோமா… அது வீட்டுக்கு போனோமான்னு இருக்க வேணாம்? அந்த ஆரோகி பொண்ணு அவன் கூடவே அவன் வீட்டுலயே இருக்கு.” எனப் பாட்டி சந்திரிகாவிடம் கூறியதைக் கேட்டு பேச்சற்று நின்றிருந்தவள் அடுத்து அவர் கூறியதில் மயக்கம் மட்டும் தான் போடவில்லை.
“என் பேரன் சந்தோஷமா இருக்கான். அந்த பொண்ணு தான் அவன் சந்தோஷம்னா நான் வேணாம்னா சொல்ல போறேன்? என்ன… தமிழ் பொண்ணா இருந்திருந்தா நானும் பேசி பழகியிருப்பேன்.” என அவர் சந்திரிகாவிடம் பேரனின் காதலியைப் பற்றிப் பேசிக்கொண்டே போக… கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதிர்ச்சி, வருத்தம், கோபம், ஏமாற்றம் என்ற வரிசையில் அவ்வப்போது அழுகையும் சேர்ந்து கொண்டது. அவன் என் லகு என மனம் சண்டைக்குத் தயார் ஆனது. ஆனாலும் யாரிடம் சண்டையிடுவாள்? ‘லீவுக்கு வரட்டும் அவன்’ என ரகுவோடு சண்டை போடக் காத்திருந்ததும் பயனற்று போனது.
பதினொன்றாம் வகுப்பு முடிந்து விடுப்பு ஆரம்பித்திருக்க, வீட்டில் இருந்த நாள்கள் எல்லாம் கொடுமையாகவே நகர்ந்தன. இன்று வருவான், நாளை வருவான் என்ற எதிர்பார்ப்பு, பாட்டியின் “ரகு அவன் ஃப்ரெண்சோட கஷ்மீர சுத்தி பாக்க போயிருக்கான்” என்ற பெருமை பேச்சில், சித்திரவதையை அனுபவித்து மாண்டுபோனது.
தனக்கென ஒரு காதலி, தனக்கென ஒரு வாழ்க்கை என என்னை முற்றிலுமாக தன் வாழ்விலிருந்து ஒதுக்கியவனை நினைக்கவே கூடாது என எண்ணியவள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேறும் முயற்சியில் இறங்கினாள். முட்டி மோதி இவள் இங்குப் படித்துக் கொண்டிருக்க, ரகு, அவன் இரு அறைத் தோழர்களோடு டிரக்கிங், ஹைக்கிங் என வார இறுதிகளையும் விடுப்புகளையும் மனம் போல் கழித்தான்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பிக்க வாரங்கள் இருந்தன தாராவிற்கு. கல்லூரி விடுமுறைக்கு ரகு கண்டிப்பாகத் தன்னை காண வருவான் என திருச்சியில் ஒருத்தி கனவில் மிதந்தாள். ஆனால் சில மாதங்களாக உடல் நிலை குன்றியிருந்த ரகுவின் தாத்தா, ரகுராம் உலக வாழ்க்கை போதும் என நினைத்தார் போலும், அந்தக் கல்வி ஆண்டு முடியும் வேளை அவர் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது.
பொதுத் தேர்வு என்பதால் மகளோடு சந்திரிகா திருச்சியில் தங்கிவிட்டார். பாட்டிக்கு மூட்டுவலி அதிகமாகிவிடவே அவரும் வரவில்லை. ஆண்கள் இருவரும் இறுதி காரியத்திற்கு வந்து சேர்ந்தனர். ரகுராமின் உடல் நிலை மோசமாகவுமே, தந்தையைக் காணக் குடும்பமாக வந்து இறங்கியிருந்தார் நகுலன். கடைசி நிமிடங்களைத் தன் மூன்று பேரப்பிள்ளைகளோடு கழித்து, நிம்மதியாகவே தன் இறுதி மூச்சை விட்டிருந்தார் பெரியவர்.
இவன் கரம் பற்றி, “தனியா இருக்காத…” எனக் கடைசியாகக் கூறிய தாத்தாவின் உடலை வெறித்து அமர்ந்திருந்தாலும் ரகு அழவில்லை. அழுகை வரவில்லை என்றாலும் மனம் ரணமாய் வலித்தது. மூன்று வருடங்களாகத் தன்னை மட்டுமே பிடிமானமாகப் பிடித்திருந்த உயிர்… இன்றில்லை. தனக்கும் உறவுகளுக்கும் சேர்ந்திருக்கும் பிராப்தம் இல்லையோ என்ற எண்ணம் ரகுவை மிக மிகப் பலமாகத் தாக்கியது. ‘நண்பன் டா’ எனத் தோள் கொடுக்கும் தோழர்களும் இல்லாது ரகு மிகவும் ஓய்ந்து போனான்.
நகுலன் கண்ணீர் வடிக்க, அவரை அவன் பார்த்த பார்வைக்கான அர்த்தம் மற்றவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, பெற்றவருக்கு நன்றாகவே புரிந்தது. “இருக்கும் போது திரும்பி பாக்காம, இப்போ எதுக்கு அழறீங்க?” எனத் தொண்டை கிழியக் கத்தத் தோன்றினாலும் தந்தையிடம் வாய் திறக்கவில்லை ரகு.
அவர் பெற்ற தனக்கு மட்டுமல்லாது, அவரை பெற்றவருக்கும் தன் தகப்பன் நியாயம் செய்யவில்லை என்று தோன்றியதாலோ என்னவோ, ரகு தன் தகப்பனோடு அதிகம் பேசிக் கொள்ளவில்லை. நகுலனுக்கு மகனின் மனநிலை புரிந்தது, ஆனால்… எதைக் கூறி இருவருக்கும் இடையே உருவாகி இருக்கும் பிளவை நிரப்புவது என அவருக்குத் தெரியவில்லை.
பாட்டி கைப்பேசியில் அழைத்து பேரனோடு பேசினார். சந்திரிகா ஆறுதல் வார்த்தை மொழிந்தார். துபாயில் இருந்த தோழனும், தில்லியில் இருந்த தோழனும் அழைத்துப் பேசினர். அந்த வாரமே வந்துவிடுவதாய் கூறினான் ஜீவன். இன்னும் இன்னும் பலர் வந்தனர்… ஆறுதல் கூறினர். ஆனால் அவன் கேட்க ஆசைப்பட்ட ஒலி அவன் செவியைத் தீண்டவில்லை.
“மூட்டு வலி கண்ணு… அம்மம்மாவால வர முடியல. நல்லா வாழ்ந்து… படுக்கையில விழுந்து அவஸ்தை படாம போனவர நினைச்சு உன்னையே வருத்திக்காத கண்ணு.” என்ற பாட்டி, “அவளுக்கு என்ன… நேத்து தாத்தா கிளம்பினதும் வந்தவ, படிக்கிறேன்னு சொல்லிட்டு ரூமுக்குள்ள போனாவ, நிம்மதியா தல வர இழுத்து போத்திட்டு கொறட்ட விட்டுட்டு இருக்கா” எனக் கூறியது ரகுவை அதிகம் பாதித்தது.
ஓர் இழப்பைத் தாங்கி நிற்கும் அவனுக்கு ஆறுதல் வார்த்தை கூறக் கூட பிடிக்காது போனதோ அவளுக்கு? ‘எனக்காகன்னு இனிமேல் வரவேண்டாம் ரகு’ என்ற வார்த்தைகள் மீண்டுமாகச் செவிப்பறையில் ஒலித்தது. இம்முறை அந்த வார்த்தைகள் சம்மட்டியாக மனதைத் தாக்கியது. ஒன்றரை வருடப் பிரிவு அவளைப் பாதிக்கவே இல்லை என்பதை நம்பமுடியவில்லை என்றாலும், அதுதானே உண்மை. குடும்ப வாழ்வு தனக்கு விதிக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையை விழுங்கினான் ரகு.
வந்த நிமிடத்திலிருந்து ரகுவை விட்டு அகலாது எப்பொழுதும் போல் அமைதியாக அவனோடே நின்று கொண்டார் ரகுவின் ஐயா. தோள் சாய்க்கும் தகப்பனாய்… மடி சாய்க்கும் அன்னையாய் தன்னோடு இருந்த ஐயாவின் துணை தேவைப்பட்ட போதும் ரகு தள்ளியே நின்று கொண்டான். தன்னை விட்டுச் சென்றவர்கள் வரிசையில் இவரும் வர வேண்டாம் என்ற எண்ணம் தோன்றுவதை அவனால் என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.
“எப்போ ஊரு பக்கம் வர?” எனக் கேட்டு நின்ற பெரியவர்களிடம், “இன்டர்ன்ஷிப் பார்த்துட்டு இருக்கேன். நேரம் கிடைக்கும் போது வரேன்” என்ற பதிலைக் கொடுத்தான்.
வீட்டினரோடு பேச்சும் படிப்படியாகக் குறைந்து, ரகுவின் வட்டம் இன்னும் குறுகியது. தன்னோடு வீட்டில் தங்கியிருந்த ஜீவன் மட்டுமே ரகுவிற்கு ஆறுதலும் பிடிப்புமாக இருக்க, ஜீவனுக்கும் அப்படிதான். ஏன்… என்னானது ஜீவனுக்கு என நினைப்பவர்களுக்கு இரண்டே வார்த்தைகளில் அவன் நிலையை விளக்கிவிடலாம்… ‘காதல் தோல்வி’!
செமஸ்டர் விடுப்பு வந்தது. காதல் தோல்வியின் வலியில் எங்கும் செல்லாது இருந்த ஜீவன், ‘வலிய வலியால தான் போக்க முடியும்’ என, ரகுவோடு டேட்டூ பார்லர் சென்றான். காதுக்குப் பின் இருக்கும் கழுத்துப் பகுதியில் பச்சை குத்திக் கொள்ள அமர்ந்தவனைத் தனியே விட மனமின்றி, ரகுவும் அவனோடு பச்சை குத்திக் கொள்ள அமர்ந்தான். ‘உனக்கு நான்… எனக்கு நீ. நம் நட்பு இருவருக்குள்ளும் நங்கூரமாக வாழ்நாள் முழுவதும் இருக்கும்’ எனத் தங்களின் காதல் தோல்வியை வலியில் மூழ்கடித்தனர்.
இருதினங்கள் வலியில் கழிந்தாயிற்று. மீதி விடுப்பை எப்படிக் கழிப்பதாம்? மலை ஏற முடிவெடுத்து களத்தில் இறங்கினர் ரகுவும் ஜீவனும்.
மலை ஏற விருப்பம் கொண்ட கல்லூரி தோழர்கள் ஏழு பேர் சிறு குழுவாக மனாலியை முற்றுகை இட்டிருந்தனர், அந்தக் குழுவில் இவர்களும் அடக்கம். ஹம்ப்ட்டா பாஸ் மலை ஏற்றத்தை ஆரம்பித்துப் பாதி நாள் கடந்திருந்தது. சில மணி நேரத்திலேயே கண்ணைக் கவர்ந்தன காட்சிகள். பச்சை பசேல் எனக் கண் முன்னே விரிந்திருந்த நிலப்பரப்பைச் செம்மறி ஆடுகள் நிறைத்திருந்தன. கண்கவர் நிலப்பரப்பு, மனதைக் கொள்ளை கொள்ளும் பசுமையான பள்ளத்தாக்குகள், பனி மூடிய சிகரங்கள் எனத் தன் வசீகரத்தால் மூச்சை முட்ட வைக்கும் இடங்களில் இதுவும் ஒன்று என்பதால் முதுகில் இருந்த மூட்டையோடு ரகுவும் ஆர்வமாகவே மலை ஏறிக் கொண்டிருந்தான்.
நான்கு நாள்களுக்குத் திட்டமிட்டிருந்த மலை ஏற்றத்தின் இரண்டாம் நாள் மலை முகடுகளில் ஒன்றில் நின்றிருந்தனர். அன்றைய இரவை அந்த அழகிய சூழலில் கழித்தனர். எப்பொழுதும் போல் அந்த இருள் பூசிய இரவு ரகுவை கவர்ந்தது. அவசர வேலையாகப் பறந்து கொண்டிருந்த மெலிதான மேகப் போர்வை, அந்த அவசரத்திலும் நிலா மங்கையைக் குளிரிலிருந்து காக்க முயன்று தோற்றுச் சென்றது. மேகமற்ற இரவு வானில் குமிழ்மதி மிளிர்ந்தது. இரவு எத்தனை வசீகரம் கொண்டது? கணக்கில்லா நட்சத்திரங்களின் கண்சிமிட்டலின் அழகில் லயித்துப் போனான் அந்த இயற்கை இரசிகன்.
மின்சார விளக்கின் தலையீடு இல்லாததால், மறைத்து வைக்காது இரவு அதன் அழகை, பாடுபட்டு மலை ஏறியவர் கண்களுக்கு விருந்தளித்தது. ரகுவின் மனம் திருச்சியை நோக்கிப் பறந்தது. கடைசியாக மலைக் கோட்டையில் நின்று கொண்டு தனித்து நின்றிருந்த நிலவைப் பார்த்தவனுக்கு இன்று போல் இனிக்கவில்லை என்பது நினைவில் எழும்ப, அவனையும் அறியாது பெருமூச்சு ஒன்று வெளி வந்தது.
‘பேபி’ என வாய் முனகியது. பாட்டி வீட்டின் மொட்டை மாடியிலிருந்து இவ்வளவு நட்சத்திரங்களைப் பார்க்க முடியாது என்றாலும், கையளவு நட்சத்திரங்களை அவளோடு பார்க்க மனம் விரும்பியது. அது இனி சாத்தியமில்லை என்ற உண்மை அதிகம் வலித்தாலும், கண்களை நிறைத்த நட்சத்திரங்களோடும் மனதை நிறைத்தவளின் நினைவுகளோடும் ரகுவின் அன்றைய இரவு கடந்து சென்றது.
அந்தக் குளிர் பிரதேசத்தில் விடியல் மிக மிக அழகாக விடிந்தது. மூட்டப்பட்ட அடுப்பில் சமைத்து, துரித உணவை முடித்து, படுக்கையைச் சுருட்டி… முதுகில் மற்ற பொருள்களோடு ஏற்றிக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக அந்த இளமை குழு மலை ஏற்றத்தை தொடர்ந்தது. வழி நெடுக இருந்த அழகிய காட்சிகளைக் கண்களால் பருகிக் கொண்டே தங்களின் வழிகாட்டிக் காட்டிய பாதையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது நடந்தனர்.
எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லையே. ஆர்ப்பாட்டமற்ற குழுவில் பேரிரசல்களாக இரு பெண்கள் இருந்தனர். கூண்டிலிருந்து விடுபட்ட பறவைகளுக்குத் தங்களின் சிறகை விரிக்காது இருக்க முடியவில்லை. தங்களின் சிரிப்பால்… துள்ளலால் அனைவர் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்தனர். ஒற்றை கைப்பேசிக்குள் தங்களை விதவிதமாக அடக்கிக்கொள்ள அதிகம் மெனக்கெடுவதைப் பார்க்கச் சிரிப்பு வந்தாலும் புன்னகையோடே கடந்துவிட்டனர் மற்ற மாணவர்கள். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே.
பாறைகளில் படிந்திருந்த பனி, அபாய மணியை அடித்துக் கொண்டிருந்தாலும், ‘ரிஸ்க் எங்களுக்கு ரஸ்கு மாதிரி’ எனத் திரிந்து கொண்டிருந்தனர் அவ்விருவரும். கரடுமுரடான பாறையில் ஏறி, மேல் இருந்து கீழ் நோக்கிப் பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்த காட்சியை நண்பர்கள் ரசித்துக் கொண்டிருக்க, நொடிப் பொழுதில் அந்தக் கோரக் காட்சி நிகழ்ந்தது.