Post Views: 1,944
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 38.3
.
“குட் மார்னிங் யாழி பேபி” என மகளை அள்ளி வாரிக் கொண்டவன் பார்வையும் ஜென்னலுக்கு வெளியே சென்றது.
Advertisement
நேற்றைப் போலவே இன்றும், ஒரு செட் பெண்களுக்கான துணிகளும் ஒரு செட் ஆண்களின் ஆடைகளும் துவைத்து கொடியில் உலர்த்தப்பட்டிருந்தன. நேரத்தைப் பார்க்க, நேரம் காலை ஏழு என்றது கடிகாரம்.
‘யாரு மா நீ? உனக்குத் தூக்கம் எல்லாம் வராதோ?’ என நினைத்துக் கொண்டான்.
Advertisement
Advertisement
“என்ன பார்க்கிறீர்கள் பேபி?” என்றவனைத் திரும்பிப் பார்க்காது, “லெட் பூ மேல யெல்லோ பத்தர்பிளை அப்பா” என்றாள் செம்பருத்தியின் மீது அமர்ந்திருந்த வண்ணத்துப் பூச்சியைக் காட்டி.
“அது எல்லோ இல்ல பேபி. ஆரன்ஞ் பட்டர்பிளை” என்ற தகப்பனைப் பார்த்தவள், “பத்தர்பிளை நானுக்கு நேணும் அப்பா. பிச்சுகவா?” என உற்சாகம் ததும்பக் கேட்டாள்.
Advertisement
வண்ணத்துப் பூச்சியைத் தவறான முறையில் பிடித்தால், அதன் சிறகு காயப்படலாம்… அதற்கு நிறம் கொடுக்கும் மென் ரோமப் படலங்கள் நம் கையோடு வந்துவிடலாம்… அதால் பறக்க முடியாது போகலாம்… என மகளிடம் கதை கூறினால், அவளுக்குப் புரியுமா? அதனால், ஒரே வரியில், “நீ அத பிடிச்சுட்டு வந்துட்டா அது அம்மா அத தேடுமே” என்றான் கௌதமன்.
“ஓஹ்ஹ்” எனத் தகப்பனைப் பார்த்த மகளின் பார்வை மீண்டும் சிகப்பு செம்பருத்தியின் மீது விழுந்தது.
“வா பாத்ரூம் போலாம்” என மகளைக் கன்னத்தில் முத்தமிட்டவாறே கழிவறையை நோக்கி நடந்தவனை அந்தக் கேள்வி அப்படியே நிறுத்தியது.
“யச்சோ அம்மா பேபிய தேடுனியா அப்பா?” என்ற கேள்விக்கு என்ன கூறுவான் கௌதமன்?
“பட்டாம்பூச்சி அம்மாவும் யசோவும் ஒண்ணா?” எனச் சலித்தவன், “யசோக்கு வேற வேலை இருக்காம். உன்ன தேட நேரம் இல்ல. சோ… சும்மா சும்மா யசோவ கேக்காத” என்றான் சலித்தவனாக.
யசோ… யசோ… யசோ… மகள் அந்தப் பெயரை மறக்கவே மாட்டாளா? தலையை யசோ என்ற நாமம் பலமாகத் தாக்கியது. இப்பொழுதே இப்படி என்றால், பள்ளிக்குப் போக ஆரம்பித்த பின்? என்ன கூறி மகளுக்குப் புரிய வைப்பான்? உண்மை தெரியும் வேளை மகள் தன்னை என்ன நினைப்பாள்? கேள்விகள் முதல் முறையாகக் கௌதமனை பலமாகத் தாக்கியது. ‘அம்மாவ ஏன் தேடல?’ என்ற கேள்வியை மகள் எழுப்பினால் என்ன பதில் கூறுவது? மனம் பிசைந்தது.
எந்த யசோதராவை தேட வேண்டும்? பெற்றவளையா இல்லை பெற்றவள் என மகள் நினைக்கும் யசோவையா? பெற்றவளைத் தேடும் மகளுக்காக ஒரே ஒரு முயற்சியாவது எடுக்க வேண்டுமோ? அப்படித் தேட சென்று… அந்த யசோதரா கிடைத்துவிட்டால்? என் மகளை என்னை விட்டுப் பிரித்துவிட்டால்? கௌதமனின் இதயம் ஒரு முறை நின்று துடித்தது. வேண்டாம் என இவன் கண்முன் தானே தூக்கிப் போட்டுச் சென்றாள். யாழியின் அன்னையாக இருக்கும் தகுதியில்லாத அவளை எல்லாம் நினைப்பதே தவறு. அவளே மகளைத் தேடி வந்தால்…
“அப்பா… அப்பா” என மகள் உலுகினாள்.
“ம்ம்ம்… என்ன பேபி?”
“உச்சா வலுது.” என நெளிந்த மகளை இறக்கி விட்டான். பெற்றவள் வந்தால் என்ன… என் உயிர் உள்ளவரை அப்படி எல்லாம் என் மகளை ஒருவரும் சொந்தம் கொண்டாடிட முடியாது என அலையும் மனதைக் கட்டுக்குள் அடக்கினான்.
மகளின் தேவைகளைக் கவனித்தவன், மகளோடு வாசலில் கிடந்த பால் பேக்கட்டோடு அடுக்களைக்குள் நுழைந்தான். முதல் நாள் இவன் வீட்டினுள் நுழையும் முன்னமே வீடு இவனுக்காகத் தயார் நிலையில் இருந்தாலும், வந்த நாள் முதலே மூன்று வேளையும் வெளி உணவே உண்டிருக்க, முதல் முறையாக பாலை காச்ச வந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“உக்காரு பேபி” என அடுக்களை மேடையில் மகளை அமரவைத்தவன் கைப்பேசியில் எதையோ துழாவினான். இங்குத் தடவி அங்குத் தடவி, அடுப்பைப் பற்ற வைத்து பாலை அடுப்பில் வைத்தவன் பார்வை பாலின் மீதே இருந்தது. அது பொங்கிக் கொட்டி விடுமாமே. அதனால் கண்ணைப் பாலின் மீதே பதித்து நின்றிருந்தான் கௌதமன். திக் திக் நிமிடங்கள் கௌதமனுக்கு.
“அப்பா பேபிக்கு பசிது” என்ற மகளை பார்க்காது, “இரு டா இரு… தோ டூ மினிட்ஸ் பால் ரெடி ஆகிடும்” என்றான்.
இன்னும் எவ்வளவு நேரம் எனப் பெருமூச்சு விட்டவன் கண்களில் குட்டி குட்டி நுரை தெரிய ஆரம்பித்தது. ‘டமார்’ என்ற சத்தம் கௌதமனை உலுக்க, தலையை நிமிர்த்தினான். டீ தூள் டப்பாவோடு சில டப்பாக்களும் அதில் இருந்த சாமான்களும் அடுக்களை முழுவதும் சிதறி அதன் உயிரை விட்டிருந்தன.
மகள் அடுக்களை மேடை மீது நின்று ஷெல்பில் இருந்த சாதனங்களை மேடை மீது கடை பரப்பி இருந்தாள். அதிலிருந்த டப்பாக்கள் கீழே விழுந்திருந்தன. கெட்டதிலும் நல்லதாக அனைத்தும் பிளாஸ்டிக் டப்பாக்கள் என்பதால் பிரச்சனை இல்லை என்றே நினைத்தான்.
பயத்தில் மகள் கீழே விழுந்து விடுவாளோ என்ற நினைத்தவன் கால்கள் மகளை நோக்கி வேக நடை போட்டன. “என்ன பேபி” எனக் கேட்டுக் கொண்டே மகளைத் தூக்கிக் கொண்டவன் காதில் ‘ஹிஸ்’ என்ற சத்தம் கேட்டது. திரும்பிப் பார்க்க, பால் பொங்கி வழிய ஆரம்பித்திருந்தது. ஓடிச் சென்று இவன் அடுப்பை அணைக்க, மகள் கை தட்டி, “பொங்கோ பொங்க” என சிரித்தாள்.
அழுவதா… சிரிப்பதா? என மகளைப் பார்த்தவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. அடுக்களையைப் பார்த்தான். யாழி புயலால் தாக்கப்பட்டிருக்க, தலையை உலுக்கி, மகளின் பசிக்கு வழி செய்வதில் இறங்கினான்.
“டம்பர் நேணா ப்பா. சிப்பி கப் நானுக்கு நேணும்” எனச் சண்டை போட்டு பாலை வாயில் வாங்கிய மகள், “இது நேணா” எனச் சிணுங்க ஆரம்பித்தாள். அப்பொழுதுதான் அம்மா கொடுத்தனுப்பின சத்து மாவு நினைவில் வந்தது.
“ராகிய மொளைகட்டி எடுத்து, ஏலக்கா, குங்கும பூ, பாதம், மக்கானா, பூசனி விதை எல்லாம் போட்டு அரைச்சது. ஒரு கிளாஸ் பாலுக்கு அரை ஸ்பூன் போதும். இனிப்புக்கு அரை ஸ்பூன் டேட்ஸ் சிரப் சேர்த்துக்கோ. தினமும் கொடுக்கணும்” என அன்னை கூறியதை எப்படி மறந்தேன்?
“இன்னைக்கு குடி பேபி. நாளைக்கு வேற தரேன்” என்றதெல்லாம் செல்லுபடி ஆகவில்லை. மீண்டும் அடுப்பைப் பற்ற வைத்து, ஆற வைத்த பாலை மீண்டும் மிதமான சூட்டிற்குக் கொண்டுவந்து… எனக் கௌதமனின் பொறுமையைச் சோதித்தது அன்றைய காலைப் பொழுது.
ஒரு கோப்பை சத்துமாவு பாலை காச்சி மகளின் வயிற்றை நிரப்புவதற்குள் கௌதமனுக்கு நெற்றி வியர்வை பூத்திருந்தது.
தனக்கென ஒரு கப் தேநீரைப் போட அடுத்த கவர் பாலை எடுத்துக் காய்ச்ச ஆரம்பித்தவன் கண்களில் கீழே ஓர் ஓரமாகப் ஒதுக்கி போடப்பட்டிருந்த தேயிலைத் தூள் பட, அடுப்பை அணைத்து வெளியே வந்தான்.
“இப்போதைக்கு இது போதும். டிஃபன வெளியில சாப்டுட்டு, மதியத்துக்குச் சமைப்போம். இப்போ கிளம்பலாம்” என மகளும் அவனும் குளித்துக் கிளம்பினர்.
“ஆமா… இன்னைக்குத் தானப் பால் காய்ச்சினோம். நெய்பர்ஸ்கு பால் கொடுத்து ஃப்ரெண்டு பிடிப்போம். ஃப்ரெண்ட் ஆனதும் அந்தமாட்ட காலங்காத்தால மிக்சிய காதுக்குள்ள விட்டு குடையாதீங்கன்னு சொல்லணும்.” என மகளோடு அடுக்களைக்குள் நுழைந்தவன், ஒரு சொம்பில் பாலை ஊற்றிக் கொண்டு பின் வீட்டை நோக்கி மகளோடு நடந்தான்.
“அப்பா லெட் பூ” எனக் கேட்ட மகளுக்கு, சிகப்பு செம்பருத்தியைப் பிய்த்து காதுக்கு மேல் இருந்த குடுமியில் சொருகி விட்டான்.
குட்டி குடுமி ஆட, அப்பாவின் விரல் பற்றி துள்ளலும் நடையுமாகப் பின் வீட்டை நோக்கி நடந்த மகளுக்குப் பேசவும் கேட்கவும் ஆயிரம் கேள்விகள் இருந்து கொண்டே இருந்தன.
‘பத்தர்பிளை அம்மா கூட்டு போச்சா? அலு வீடு எங்க? அச்சோ அம்மா பேபிய ஏன் தேட்ல? பேபிக்கு டூ அம்மாவா? டூ அம்மாவும் எங்க போச்சு? அச்சோ அம்மா நேனுக்கு எப்போ பாக்கும்?’ என அம்மாவை நோக்கிச் சென்ற கேள்விகள், தன் எதிரிதே தெரிந்த வீட்டைப் பார்த்ததும் அதன் திசையை மாற்றின.
‘ஆலு வீடு அடு? அடு அப்பா பெண்டு வீடா? அங்க பேபி இக்கா? பேபிக்கு பசிதா? பேபிக்கு பால் தலோமா?’ எனக் கேள்விகளை மகள் அடுக்கிக்கொண்டே போக, சலிப்பில்லாது மகளின் கேள்விகளுக்கு எல்லாம் பதிலைக் கொடுத்துக் கொண்டிருந்தான் யாழினியாளின் அன்பு தகப்பன்.
திறந்திருந்த கதவைத் தட்டியவனுக்கு என்ன கூறி அழைப்பது எனத் தெரியவில்லை. அந்த வீட்டில் ஒரு பெரியவர் இருப்பது நிச்சயம் என்றது வீட்டின் பக்கவாட்டில் காய்ந்து கொண்டிருந்த கருப்பு வேட்டி.
கதவைத் தட்டி, “ஐயா?” என்றான்.
கையில் அன்றைய நாளிதழோடு அறையில் இருந்தவர் காதுகளில், ‘ஐயா’ நன்றாகவே விழுந்தது. அந்தக் காந்தச் சத்தம் அவரை அடித்து பிடித்து எழுந்து ஓடிவரச் செய்தது. அறையை விட்டு வந்தவர் பார்வையில் அப்பாவின் விரல் பற்றி, ஆடிக் கொண்டே நின்றிருந்த அழகிய யாழி பாப்பா விழுந்தாள்.
ஒற்றை கை தகப்பன் விரல் பற்றி, மற்றது குட்டி சிகப்பு பூடுல் நாய் பொம்மையை பற்றி தன்னை சிரித்த முகமாகப் பார்த்து நின்றிருந்த அந்தக் குழந்தையைப் பார்த்தவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. வருடங்கள் முன் இப்படியான ஓர் அழகிய கவிதை இதே வாயிலில் அரங்கியதை மறக்க முடியுமா?
“ஐயா?” என்றவன் தொனி ஆச்சரியத்தை ஏந்தியிருக்க, பார்த்தவர் முகமும் மலர்ந்து போனது.
“தம்பி… நீங்களா… வாங்க வாங்க. இவங்க யாரு? உங்க மகளா?” என ஆசையாகவும் அவசரமாகவும் வாசலுக்கு வந்தார் அரவிந்தன்.
“என்ன தயக்கம் உங்களுக்கு? தாத்தா வீட்டுக்கு வாங்க” எனக் குழந்தையின் தலையை வருடி அழைத்தார்.
“அப்பா ஆலி பேபிக்கு திடி தாத்தாவா?” என அதிமுக்கியக் கேள்வியை குழந்தை கேட்க, அவன் என்ன கூறுவான், “ஆமா பேபி” என்றான்.
கௌதமனின் குரல்… அவன் உதிர்த்த ‘பேபி’ அரவிந்தனை கட்டிப் போட்டது.
“பால் காச்சினோம்… அதுதான்…” எனக் கௌதமன், அரவிந்தன் என்ற சிலைக்கு உயிர் கொடுத்தான்.
“முன்னாடி இருக்க வீட்டோட புது ஓனர் நீங்க தானா? வாங்க வாங்க” என கரம் பற்றி உள்ளே அழைத்து, “உக்காருங்க” என்றவரிடம் பால் சொம்பை நீட்டினான் கௌதமன். பெரியவரின் பார்வை வாசல் பக்கம் ஒரு நொடி சென்று வந்தது. “வைஃபையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே…” என ஆரம்பித்து, கௌதமன் சங்கடப்படுவானோ என எண்ணி அவன் முகம் மாறும் முன்னமே பேச்சை மாற்றினார்.
“ஒரு செக்கண்ட். பொண்ணு கிணத்தடியில நிக்கிறா” என்றவர், “மா… இங்க ஒரு நிமிஷம் வா மா” எனத் தலையை அடுக்களையின் பக்கம் திருப்பி மகளை அழைத்தார்.
அங்கிருந்த தேநீர் மேசை மீது சொம்பை வைத்தவனை நோக்கி மகள் அடுத்த கட்ட கேள்விக் கணைகளை வீசத் தயார் ஆனாள்.
“தாத்தாக்கு அம்மா இக்கா ப்பா?” என மகள் கௌதமன் முகத்தை வாஞ்சையாகப் பார்க்க, கௌதமனுக்கு என்ன கூறுவது எனத் தெரியவில்லை. இப்பொழுது எதைப் பதிலாகச் சொன்னாலும் மகளின் அச்சோ அம்மாவின் புராணம் ஆரம்பித்துவிடும் என்பதால், கேள்விக்கான பதிலைக் கூறாது, “உன்ன மாதிரி பேபி வரைஞ்ச பிக்ச்சர பாருங்க” என சட்டத்திற்குள் இருந்த குச்சி மனிதர்களின் படத்தை மகளுக்குக் காட்டினான்.
இரு குச்சி மனிதர்கள் கண்ணாடி போட்டு வராந்தாவில் அமர்ந்திருந்தனர். நீள முடி வயதான பெண் என்றும் குட்டி முடி வயதான ஆண் என்றும் புரிந்தது. அம்மா, குட்டி குழந்தையை மடியில் வைத்துச் சோறூட்ட, அப்பா வேறு குச்சி உருவத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அனைத்து உருவமும் குச்சி மனிதர்கள் என்றாலும் அனைவர் முகத்திலும் இருந்த உதடு மேல் நோக்கிச் சிரித்துக் கொண்டிருந்தது.
இதைவிட சிறந்த குடும்ப படத்தை அவன் பார்த்தில்லை என்றே தோன்றியது.
மகளின் கண்கள் இங்கும் அங்கும் சுற்றின. கையில் இருந்த நாய் பொம்மையை நீளிருக்கையில் போட்டவள் வீட்டை ஆராய ஆரம்பித்தாள். “அப்பா பிக் எலிபன்ட் பேபிய தின்னுச்சு. பேபி பாவம் அப்பா” என உதடு பிதுக்கிய மகளின் கரத்தில் இருந்த குட்டி யானை சிற்பத்தைப் பார்த்தவன் முகத்தில் மென் புன்னகை.
“பிக் எல்ஃபென்ட் பேபிய முழுங்கல டா யாழி. இது அம்மா யானை. அது வயத்துக்குள்ள அதோட பேபி யானை பத்திரமா இருக்கு.”
“எப்போ பேபி வெளில வலும்?”
“அது… அது டாக்டர் வந்து எடுப்பாங்க”
“டாக்தர் அங்கிள் பேபிய அச்சோ அம்மா வயித்துல இந்து எத்தாங்களா?”
குட்டி மகளின் கேள்விகளில் கௌதமன் அரண்டு போய் நிற்க, “முன் வீட்டுக்கு வந்திருக்கத் தம்பியும், அவங்க குட்டி மகளும் வந்திருக்காங்க மா” என்ற அரவிந்தனின் சத்தம் கேட்டு தலையைத் திருப்பியவன் கண்கள் விரிய எழுந்து நின்றான்.
“என் பொண்ணு…” என அரவிந்தன் ஆரம்பிக்க, “யஷோ… யஷோதரா” எனக் கௌதமன் முடித்தான்.
ஷெல்பில் இருந்த யானை சிற்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மகளின் செவிப்பறையில் தகப்பன் கூறிய பெயர் முழுமையாக எட்டும் முன்… அவசர அவசரமாகத் திரும்பினாள் யாழினியாள். அங்கு அவளின் அச்சோ அம்மா கையை துப்பட்டாவின் துடைத்துக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள்.
“அச்சோ அம்மா” எனக் கூவிக் கொண்டே சோஃபாவில் இருந்து இறங்கி, அப்பாவை இடித்துக் கொண்டு பெரியவரின் மகளை நோக்கி ஓடினாள் குழந்தை. ஓடிய குழந்தை யசோவை அடையும் முன் பிரேக் அடித்தது போல் சட்டென நின்றுவிட்டாள். குழந்தையின் உதடு பிதுங்க, அழ தயாரானாள்.
எதிர்பாரா சந்திப்பு யசோவின் மூளையைச் சேரும் முன்… அதைப் பார்த்து மனம் ஆனந்த தாண்டவம் ஆடும் முன்… அம்மா எனத் தன்னை நோக்கி ஓடி வந்த குழந்தையை அள்ளி வாரி முத்தமிடும் முன்… யாழியின் ஈர முத்தங்களால் மோட்சம் அடையும் முன்… என்ன ஆனது?
குழந்தையின் அருகில் யசோ சென்றதும் அவளைக் காண விருப்பம் இல்லாதது போல் கைகளை மார்பிற்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு திரும்பி நின்று கொண்டாள் கௌதமனின் குழந்தை.
யசோவை பார்த்த நொடியே கௌதமனின் இதயம் மத்தளம் வாசிக்க ஆரம்பித்துவிட்டது. இனி என்ன என்ன பார்க்க நேருமோ என அதிர்ந்து நின்றிருந்தவனை உலுக்கியது மகளின் குட்டி கோபம். இன்று வரை மகளின் தவிப்பும் கோபமும் அவனுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க… கண்முன்னே காட்சிகள் மாறிக் கொண்டிருக்கிறது. இவள் இங்கு இருப்பாள் எனத் தெரிந்திருந்தால், இந்தப் பக்கம் தலை வைத்துப் படுத்திருக்க மாட்டானே… கௌதமனின் வயிற்றிற்குள் ஏதோ செய்தது. மகளை அழைத்துக் கொண்டு ஓடிவிடலாமா என்ற யோசனை கௌதமன் மூளையில் உதிக்காது இல்லை. ஆனால்… தன்னையே பார்க்கும் யசோவின் அந்தப் பார்வை அவனை அப்படியே கட்டிப் போட்டது.
சின்னவளின் செயல் புரியாது யாசோ கௌதமனை பார்க்க, “கோபமாம்.” என்றான், தொண்டையை செருமி.
யசோ, குழந்தையின் தோளை மெல்லத் தொட, குட்டி வாண்டு தோளை ஆட்டிக்கொண்டு தன் வீம்பைத் தொடர்ந்தாள். செல்லச் சண்டையும்… சின்ன சிணுங்கலுமாக நிற்கும் குழந்தையின் முன் மண்டியிட்டு நின்றவளின் தொண்டையிலிருந்து ஏதோ சத்தம் வர, யசோவை குனிந்த வாக்கிலேயே விழி உயர்த்திப் பார்க்க… ‘சாரி’ என்பதாக மூக்கு சுருக்கியவளிடம் இருந்து திரும்பிக் கொண்டாள் குழந்தை. ஏன் கோபமாம்? புரியவில்லை யசோவிற்கு. கௌதமனை பரிதாபமாகப் பார்த்தவளை மனமே இல்லாது காப்பாற்றினான்.
“அவ அம்மான்னு கத்திட்டே ஓடி வரா… ஆனா உங்கட்ட இருந்து அவ எதிர்பார்த்த ரியாக்ஷன் இல்லன்னு ஃபீல் பண்றன்னு நினைக்கிறேன். குழந்தை இங்க வரும் போது கூட உங்கள கேட்டுட்டு இருந்தா…” எனக் கூறிக் கொண்டு இருந்தவனுக்குச் சட்டென மகளின் கோபம் பிடிபட்டது.
யசோவிற்காக பார்த்தானோ… இல்லை அவன் மகளுக்காகப் பார்த்தானோ, “அம்மா பட்டர்ஃபிளை மாதிரியே உன் யசோவும் உன்ன மறக்கலியாம். உன்ன ரொம்ப தேடினாங்களாம் பேபி.” என்றான் மகளைச் சமாதானம் செய்யும் விதமாக.
யாழியின் பார்வை இப்பொழுது, ‘அப்படியா?’ என்ற ஏக்கப் பார்வையாகவே யசோவுக்கு தோன்ற, மகளை அள்ளி வாரி அணைத்து முகம் முழுவதும் ஆசை முத்தங்களால் அபிஷேகம் செய்தாள். சிதறிய முத்துகளாகக் கௌதமனின் குட்டி பேபி சிரித்தாள்.
“என்ன நடக்குது இங்க?” என்ற கேள்விக்கு, “தாத்தா… மை அச்சோ அம்மா” என இவர்களையே புரியாத பார்த்து நின்றிருந்த அரவிந்தனிடம் தன் தாயை அறிமுகப்படுத்தினாள் கௌதமனின் மகள்.
குழந்தை தன் இரு கரங்களையும் குவித்து யஷோவின் கன்னம் பற்றி, குட்டி குடுமி ஆட, தலையை மேலும் கீழும் அசைத்து, “ஆலி பேபிய தேனியா அம்மா?” எனவும், தன்னையே பார்க்கும் குழந்தைக்கு என்ன பதில் கொடுப்பாள் யசோதரா?
“அம்மா” என தேனொழுக மகள் அழைக்கிறாள். “யாழி…” என ஒற்றை வார்த்தை கூடவா தன்னால் உரைக்க முடியாது? அடைத்த தொண்டையிலிருந்து ‘ஹக்’ என ஏதோ சப்தம் வர, “அம்மா கலுத்து வலி இக்கா?” எனத் தொண்டையை நீவி விட்ட குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்ட யசோவின் உணர்வுகள் மட்டும் அல்ல… அங்கு நடப்பதைப் பார்த்து நின்ற இரு ஆண்களின் உணர்வுகளும் காலையில் பொங்கி வழிந்த பாலின் நிலையை அடைந்திருந்தன.
…