41 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,781
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 41.1
.
“நோ… நேனுக்கு லெட் கலல் லாகெட் வேணும். இது நேனா” என அடம் பிடிக்கும் குழந்தையைப் பார்ப்பதா இல்லை தொழிலைப் பார்ப்பதா? விழி பிதுங்கி நின்றான் கௌதமன்.
“வெளியில குளிர் காத்து அடிக்குது. இப்போதைக்கு இந்த ஜாக்கெட்ட போடு… ரெட் ஜாக்கெட்டல சாக்லேட் கரை.” கௌதமன் தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தான்.
Advertisement
“நோ… இதுல ஹூடி இல்ல. இது நேனா” சின்னவள் அடமாய் நிற்க, பட்டென ஒன்று விழுந்தது அவள் குட்டி கரத்தில். அவ்வளவு தான்… பெருங்குரல் எடுத்து அவள் அழ, வெளியே புடவை முந்தியின் நுனியைக் கசக்கிக் கொண்டிருந்த மலர் ஓட்டமாகப் பின் வீட்டை நோக்கி ஓடினாள்.
மலர் வந்த அன்றிலிருந்தே கௌதமன் திருச்சிக்கும் தஞ்சைக்குமாக ஓடுகிறதைப் பார்க்கிறாள். இந்த நேரம் முதல் இந்த நேரம் வரை என அவன் வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை. முன்பின் ஆகும் நேரங்களில் மலரைப் பார்த்துக்கொள்ளக் கூறுவான். அந்த நாள்களில், அடுத்த வீதியில் இருக்கும் விளையாட்டு கூடத்திற்கு அழைத்துச் செல்வதும், கூட்டி வருவதும் அவள் வேலையாகிப் போகும். அவன் வரும் வரை குழந்தையின் பொறுப்பு மலர். மற்ற தினங்களில் மகளும் அவனும் பொறுமையாகக் கிளம்பிச் செல்வர், அவனே அழைத்துக் கொண்டு வந்துவிடுவான். அவன் இருக்கும் நேரம் முழுவதையும் மகளோடே கழிப்பான். இது வழமை.
ஆனால் இன்று என்னவோ கௌதமனிடம் ஓர் அவசரம், அது குழந்தைக்குப் புரியுமா என்ன? இன்று, அவளும் ஒரு முடிவில் இருக்கிறாள் போல, தகப்பனை ஒரு வழி செய்து கொண்டிருக்கிறாள். ‘இப்பொழுதே குழந்தையைக் கிளப்ப வேண்டுமா?’ எனக் கேட்க நினைத்தாள் தான்… ஆனால் மகள் விடயத்தில் யாரேனும் மூக்கை நுழைத்தால் அவனுக்குப் பிடிப்பதில்லையே, பெரியவரைத் தவிர.
Advertisement
‘நல்லா இருந்த மனுஷனுக்கு இன்னைக்கு என்ன வந்துது? இந்தப் பாப்பாவும் இன்னைக்குன்னு அவர் பொறுமைய சோதிக்குது…’ என மலரின் வாய் முணுமுணுத்தாலும் கால்கள் அதன் வேலையை செவ்வன செய்தன.
Advertisement
முதல் கட்ட படத்திற்கான சோழ சாம்ராஜ்ஜியம் தயாராகி இருக்க, இன்று முதல் நாள் படப்பிடிப்பு. மகளைக் கிளப்பி விளையாட்டு கூடம் அனுப்பிவிட்டு இவன் செல்ல வேண்டும். இன்று பார்த்து மணித்துளிகள் கதிரவன் கைப்பட்ட பனியாய் கரைய வேண்டுமா?
“சீக்கிரம் முழுங்கு பேபி. அப்பாக்கு லேட் ஆகுது” உணவை வாயில் வைத்துக் கொண்டு கண்ணீரோடு அமர்ந்திருந்த மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் கௌதமன்.
“பே ஸ்கூல் பேபிக்கு நேணா” என அடமாக அமர்ந்திருக்கும் குழந்தைக்கு என்ன கூறி தன் நிலையைப் புரியவைப்பான்?
Advertisement
“அப்பாக்கு வேலை இருக்கு டா பேபி. நீ பத்திரமா பிளே ஸ்கூல்ல இருந்தா தானே அப்பாவால நிம்மதியா வேலைய பாக்க முடியும்?”
“பே ஸ்கூல்ல சூலியா அச்சான். ஆலி பேபிக்கு வல்சுது” என மகள் உதட்டைப் பிதுக்கி, அன்று வலித்த கரத்தை இன்று தந்தையின் முன் நீட்டினாள். “அச்சோ… வலிச்சுதா?” என்றவன் அந்தக் குட்டி கரத்தை நீவி விட்டு, அதற்குக் குட்டி முத்தம் ஒன்றைக் கொடுத்து, “நான் மிஸ்ட்ட சொல்றேன். இனி யாரும் பேபிய அடிக்க மாட்டாங்க” என்றான்.
“ஆலி பேபி கண்ணு வலிது” என மகள் கண்களைக் கசக்க, தகப்பனுக்கு மகளின் நிலையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. விடிந்தும் விடியா காலை வேளையில் இந்தக் கொடுமை மகளுக்குத் தேவை தானா? எவளோ ஒருத்தி தன்னை காயப்படுத்தினால், இப்படி ஓடி ஒளிய வேண்டுமா? தன் இயலாமைக்குத் தன் மகள் பலியாக வேண்டுமா… என்றிருந்தது கௌதமனுக்கு. நன்றாக பொருந்தியிருந்த இடத்திலிருந்து இங்கு இழுத்து வந்து மகளை என்ன செய்து கொண்டிருக்கிறேன்?
கௌதமனின் யோசனையைக் கலைத்தது கைப்பேசி. எடுத்துப் பார்த்தான். நீண்ட பெருமூச்சோடு எடுத்தான். அப்பா பேசினார். அவனுக்கு முன்பாகவே இயக்குநர் ஸ்பாடிற்கு சென்றுவிட்டாராம்.
“உழைக்க யோசிக்கக் கூடாது கௌதமா. இந்த வயசுல உழைக்காம எப்போ உழைக்க போற? இன்னைக்கு நீ எடுத்து வைக்கிற செங்கல் தான் நாளைக்குக் கட்டிடமா மாறும். களத்துல இறங்கின பின்னாடி நேரம் காலம் பார்த்து வேலை செய்யக் கூடாது. முழு மனசோட உழைப்பைப் போடு… அது கொடுக்கிற வெற்றி, அடியாழம் வரைக்கும் இனிக்கும்” என வாழ்க்கை பாடம் எடுத்தார் தகப்பன்.
மதில்சுவரில் இருந்த மகனின் மனதை வெற்றியின் பக்கம் திருப்பியதின் காரணமோ… இல்லை, அவர் வாயை மூட வழி தெரியாததாலோ, ‘ஒரு மணி நேரத்தில் அங்கிருப்பேன்’ எனக் கைப்பேசியை வைத்தான். இப்பொழுது கிளம்பினால் சரியாக இருக்கும். ஆனால்… மகள் இன்னும் உண்டு முடிக்கவில்லையே. இவன் கெஞ்சலும் அவசரமும் அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைக்குப் புரியவில்லை.
இவனும் கெஞ்சி, கொஞ்சி, கதை கூறி எனக் குரங்கு வித்தை எல்லாம் காட்டிவிட்டான். ம்கூம்… ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என்றதும், “பேபி… வாயில இருக்கத முழுங்கு” என இவன் போட்ட சத்தத்திற்குக் குழந்தை மீண்டும் அழ ஆரம்பிக்க வாயில் இருந்த உணவு குழந்தை உடுத்தியிருந்த உடுப்பின் சுத்தத்தைப் பதம் பார்த்தது.
மீண்டுமா? என்றிருந்தது கௌதமனுக்கு. “ஸ்டாப் இட் யாழி” எனக் கையை ஓங்க, குழந்தையின் மிரண்ட பார்வை கௌதமனை அசைத்தது.
“சரி சரி… அழாத… பிப் போடாம ஊட்டினது என் தப்பு தான்” என நெற்றியைத் தேய்த்து நின்றான். தனியாகக் குழந்தையை வளர்ப்பது எப்படி? ‘படப்பிடிப்பாவது மண்ணாவது எனத் தூக்கிப் போட்டு, குழந்தையோடு வீட்டை நோக்கிச் சென்றால் என்ன?’ என நினைக்கவும் முடியவில்லை, நினைக்காது இருக்கவும் முடியவில்லை.
மலரோடு வந்த அரவிந்தனுக்கு வாயில் வரை கேட்டது உள்ளே நடக்கும் களேபரம். அப்பா மகளோடு ஒரு பந்தம் அவருக்கு. அவரின் பேத்தி இருந்திருந்தால்… என்ற கேள்விக்கான விடை யாழினியாள். கௌதமனோடும் அவருக்கு நல்ல உறவிருக்கிறது. அவர் பேசினால், காது கொடுத்துக் கேட்பான். அதனால் தானே பேப்பரும் கையுமாக அமர்ந்திருந்தவரை இழுத்துக் கொண்டு வந்தாள் மலர்.
கடைசியா இந்த வீட்டின் வாயிலில் கால் வைத்து சுமார் நான்கு வருடங்களிருக்குமா? நீண்ட நான்கு வருடங்கள். அன்று, மகனாய் தோளில் தூக்கி அவர் வளர்த்த குழந்தை, ஆறடியை அடைத்துக் கொண்டு இங்கு தான்… இந்த வராந்தாவில் தான்… குளிர் பெட்டியில் படுத்திருந்தான். நெஞ்சம் அடைத்துக் கொண்டு வந்தது.
‘ஐயா.. வாங்க ஐயா… அம்மம்மா பேபியோட அப்பா… என்னோட ஐயா வந்திருக்காங்க’ எனத் தன் ஒற்றை விரலை அந்தப் பிஞ்சு கரம் பற்றி இழுத்துக் கொண்டு வந்த தினம் அழியாது கண் முன் ஓட, கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது அரவிந்தனுக்கு.
“பே ஸ்கூல் நேனா. அச்சோ அம்மாட்ட போலேன்” என அழும் சத்தம், பெரியவரின் தயக்கத்தைத் துடைத்துப் போட, வேகமாக வீட்டினுள் நுழைந்தார் அரவிந்தன்.
“தாத்தா” என அடித்துப் பிடித்து ஓடி வந்த குழந்தை அவரின் கால்களைக் கட்டிக் கொண்டு, “நானுக்கு பே ஸ்கூல் நேனா” என உதட்டைப் பிதுக்கினாள்.
கீழே சிந்தியிருந்த உணவும், காலி ஆகாத உணவுத் தட்டும் பார்வையில் விழுந்தது. மகளின் ஷூவோடு நின்றிருந்தவனையும் நேரத்தையும் பார்த்தவர், “மணி ஏழரை தானே ஆகுது. இப்போ அங்க கூட்டிட்டு போனா… குழந்தையும் ஆயாவும் மட்டும் தான் இருப்பாங்க. ஒன்பதுக்குத் தானே போகணும்? நானே கூட்டிட்டு போறேன். சின்ன குழந்தைக்குத் தூக்கம் கெட்டனால அழறா” எனக் குழந்தையைத் தூக்கிக் கொள்ள, அதற்குத் தான் காத்திருந்தது போல் “அச்சோ அம்மாட்ட போணும்” என அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் யாழி.
“உங்களுக்கு எதுக்கு சிரமம்?” எனத் தயங்கி நின்றவனிடம், “சிரமம்ன்னு நினைச்சா வந்திருக்கவே மாட்டேனே. யாழி கூட இருந்தா மனசு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கு… உனக்காக இல்ல, என் சந்தோஷத்துக்காக கூட்டிட்டு போறேன்னு நினைச்சுக்கோயேன். ஒரு குழந்தைய பார்த்துக்க மூணு பேரு இருக்கோம். நீ நிம்மதியா ஷூட்டிங் போயிட்டு வா பா கௌதமா” என அவன் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, யாழியைத் தூக்கிச் சென்றார் அரவிந்தன்.
‘ஒரு நாள் தானே… போகட்டும்’ என அவன் நினைத்திருக்க, அதுவே தொடர்கதையாகும் என அவன் கண்டானா என்ன?
அவன் வீட்டில், அம்மாவின் மேற்பார்வையில் சங்கீதா குழந்தையைக் கவனிப்பது போல் மலர் மகளின் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள் எனக் கௌதமன் நினைத்துக் கொண்டான்.
ஆனால் தன்னையே அம்மா எனச் சுற்றி வரும் குழந்தையை மலரிடம் கொடுப்பாளா யசோ? மகளின் உடை மாற்றி, அவளோடு விளையாடி, பசித்த பின் உணவூட்டி, சத்தம் வர ஆரம்பித்திருந்த தொண்டையிலிருந்து மென்மையான ‘ம்ம்ம்’ ‘ம்ம்கூம்’ என்பது போன்ற மென் சத்தங்களோடு குழந்தையைத் தானே அழைத்துக் கொண்டு விளையாட்டு கூடம் சென்றாள்.
அங்கு முதல் நாள் படப்பிடிப்பு கௌதமனை இழுத்துக் கொண்டது. அவன் கற்றது பல இடங்களில் கை கொடுத்தாலும், சில இடங்களில் திணறவும் செய்தான். கற்றுக் கொள்ள அந்த வளர்ந்த இயக்குநரிடம் நிறைய இருந்தன. அரண்மனை காட்சிப் படமாகிக் கொண்டிருந்தது. இயக்குநரின் எதிர்பார்ப்பைத் துல்லியமாக உணர்ந்த ஒளிப்பதிவாளர், இயக்குநரின் கற்பனையை கேமராவினுள் படமாக்கிக் கொண்டிருந்தான்.
“ராஜீவன்… இவ்வளவு நாளா எங்கப்பா இருந்த?” எனப் பலமுறை இயக்குநர், அவர் தேடிப் பிடித்த மாணிக்கத்தை அவ்வப்போது புகழ்ந்து தள்ளினார்.
‘ஃபேரிட்டேல் வெட்டிங் ஸ்டியோ’வை, ஒற்றை ஆளாக ஆரம்பித்து, குறுகிய காலத்தில் இந்தியாவில் நானூற்றி இருபத்தைந்து இடங்களில் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் ராஜீவன் எத்தனை விதமான ஆட்களைப் பார்த்திருக்கிறான்? அவர்களின் திருமணக் கனவை நிறைவேற்றி வைப்பவனுக்கு இயக்குநரின் நாடியைப் பிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லையே. கப்பல் மேல்… நீருக்கு அடியில்… தனித் தீவில்… இப்படிப் பல வகையான திருமணங்களைப் பார்த்துவிட்டவனுக்கு இது புது செட் அவ்வளவே. இது ராஜீவனின் கனவு என்பதால் ரசனையோடு செய்தவனிடம் அதிக ஈடுபாடு இருந்தது.
“உன் கிட்டத் திறமை இருக்குன்னு தெரியும்… ஆனா இது அபாரம்” என எடுத்த காட்சியைப் பார்த்தவர் ராஜீவனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க, அதையும் மென் புன்னகையோடே தலை அசைத்து ஏற்றவன் மீது கௌதமனின் பார்வை விழாது இல்லை.
முதல் நாள் ஹோட்டலில் வைத்துப் பார்த்துக் கொண்ட இருவருக்குள்ளும் ஏதோ சொல்லொன்னா உணர்வு. தோளில் குழந்தையோடு நின்றிருந்த கௌதமன் பின்னால் “டேய் மச்சான்” என்ற பரவச குரலைக் கேட்டுத் திரும்பிய கௌதமன் எப்படி உணர்ந்தானோ…. ராஜீவனின் சின்ன இதயம் மீண்டும் ஒரு முறை சுக்குநூறாக நொறுங்கியது.
தோழன் தன்னை விட்டுச் சென்று நான்கு வருடங்கள் ஆகப்போகிறது என்ற உண்மை முகத்தில் அறைய, “சாரி… நா… நான்… எதோ நினைப்புல… சாரி” என்றான் ராஜீவன்.
“ஹே ஜீவன்… வாட் அ பிளசன்ட் சர்ப்ரைஸ்” என இவன் கரம் நீட்ட, அந்த ஆழமான குரலை உள்ளிறக்கி அந்தக் கரத்தை பிடித்தவன் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.
“ஹெலோ கௌதமன்” என ஒருவாறு கூறியவனின் உணர்வுகள் கௌதமனுக்கு ஓரளவு புரியத்தான் செய்தது, “மச்சான் கூட நல்லா தான் இருக்கு ஜீவன்” என ஆரம்பித்து, ஏதேதோ பேசி ராஜீவனைச் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தான்.
அன்றிலிருந்தே இருவருக்குள்ளும் இதமாக ஒரு தோழமை இருந்தாலும், அது இன்னும் வேர் பிடிக்கவில்லை. ஏனோ இவனைப் பார்த்தாலே ராஜீவனுக்குத் தன் உயிர்த் தோழனைப் பார்ப்பது போலவே தோன்றுவதின் காரணம் பிடிபடவில்லை.
படப்பிடிப்பு ஆரம்பித்து வாரங்கள் ஓடிவிட்டன. இருவரும் தினமும் இதே இடத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பேசிக் கொள்வது வழமை ஆகிவிட்டது. ஆனாலும் ராஜீவனின் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. அசரடிக்கும் தோற்றமா? பளிங்கும் சந்தனமும் கலந்த நிறமா? வசீகரிக்கும் அவன் தோரணையா? காந்தமாய் இழுக்கும் அவன் ஆழமான குரலா? பிடரி வரை நீண்டிருக்கும் அவன் தலை கொள்ளா கேசமா? இல்லை அனைத்துமா? ஆழியின் சுழலில் மாட்டிக் கொண்டவனுக்கு உண்மையிலுமே புரியவில்லை ஏன் கௌதமன் வீரை நினைவூட்டுகிறான் என்று.
அன்று, படத்தின் நாயகன் குறித்த நேரத்தில் வந்திருக்கவில்லை. அனைவரும் அவன் வரவிற்காகக் காத்திருந்தனர். கௌதமனும் வேலையாக இருக்க, எனக்கும் இந்த கேமராவிற்கும் லைட்டிங்கிற்கும் மட்டுமே உறவு என்பது போல் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தான் ராஜீவன்.
“ஹலோ ராஜீவன் சார்… இங்க உக்காரலாமா?” எனக் கேட்டு நின்றாள் நிஹிரா.
“பிளீஸ் டு” என எழுந்து இருக்கையைக் காட்டியவனை ரசனையோடு பார்த்து அமர்ந்தாள் இயக்குநரின் மகள்.
நீடித்த மௌனத்திற்கு நிஹிரா முற்றுப்புள்ளி வைக்க விரும்பி, “எனக்கு யூசிஎல்ஏ ஸ்கூல் ஆஃப் தியேட்டர்ல சீட் கிடைச்சிருக்கு” என ஆரம்பிக்க, “கங்கிராட்ஸ்” என வாழ்த்தினான்.
இப்படி ஒரு வார்த்தையில் பதில் கொடுப்பவனிடம் எப்படிப் பேசுவது எனப் பெண்ணிற்குப் புரியவில்லை.
“சினிமாட்டோகிராபி எடுக்கலாம்ன்னு ஒரு யோசனை. அப்பாட்ட சொன்னபோது உங்கட்ட பேச சொன்னாங்க” என ஆர்வமாக ராஜீவனின் முகம் பார்த்தாள்.
“அப்பா?” என இவன் கேள்வியாகப் பார்க்க, “டைரக்டர்” என்றவளின் மனமோ, ‘அடப்பாவி இவ்வளவு நாளா இங்க தான டா சுத்திட்டு இருக்கேன்’ எனப் பொங்கியது.
“என்ன தெரியணும்?” என்றவனுக்கு என்ன பதிலைக் கொடுப்பது? அவள் விழிக்க, அவன் மடிக்கணினியில் எதையோ தட்டினான். பின் அதை அவள் மடியில் வைத்தான்.
அவன் எடுத்துக் கொடுத்த திருமணக் காணொளி கதை கூறியது. அன்றைய நாயகன் நாயகியைக் கொண்டு அவர்கள் வாழ்வில் இணைந்த தருணம், அதற்கு அவர்கள் மெனக்கெட்டது, பெற்றவர்களும் உற்றார் உறவினரும் அவர்களுக்காக நின்றது எனப் பல கோணங்களில் குட்டி திரைக்கதையைக் கொண்ட காணொளி ஒன்றையும் மற்ற வழமையான காணொளியோடு கொடுத்தான்.
“ஃபிரேமுக்குள்ள என்ன படம் வரணும், அந்தப் படம் எந்த இடத்துல வரணும்ன்னு கேமராவ கையில வச்சிருக்க நமக்கு தெரியணும்.” என்றான்.
“ஓஹ்?” என்றவளுக்குப் புரிந்ததா இல்லையா என்றே தெரியவில்லை.
அவள் தெளிவில்லா முகம் பார்த்தவன், “ஃபிரேமுக்குள்ள வர சப்ஜெட்டுக்கு நம்ம அட்டென்ஷன் எவ்வளவு இருக்கணுமோ அதுக்கு ஏத்த மாதிரி அதோட லொக்கேஷன் இருக்கணும். அதாவது உங்கள படம் எடுக்கிறேன்னு வச்சுக்கோங்க… நீங்க படத்தோட வலது பக்கமா… இடது பக்கமா… இல்ல நடுவுல இருக்கணுமான்னு உங்களுக்கு அந்த சீன்ல இருக்க முதன்மை முடிவெடுக்கும். அப்பறம், பின்னாடி வர பாக்கிரௌன்ட் பிக்சர்ஸ் எவ்வளவு ஷார்ப்பா இருக்கணும்… எவ்வளவு பிளர்ரியா இருக்கணும்ன்னு கவனிக்கணும். பாக்கிறவங்க கண் எந்த ஆங்கிள்ள பயணபடுமோ அந்த ஆங்கிள்ள படம் நம்மள உள்ள இழுக்கணும்” என்ற பல நுணுக்கங்களை அவளுக்கு விளக்கினான். நுணுக்கங்களைக் கொண்டு எடுத்த படங்களைக் காட்டினான். சாதாரணக் காய் கறி மார்கேட்… மீன் கடை… தெரு ஓர இளநீர் கடை பையன் என அனைத்தும் அவன் கைவண்ணத்தால் அத்தனை அழகாக படமாகியிருந்தது.
“இப்போதைக்குப் போதுமே” என்றவனிடம், நாலா பக்கமும் தலை ஆட்டினாள்.
ஒரு மணி நேரத்தில் அவன் காட்டிய படங்கள் எப்படி அவள் மனதில் பதிந்ததோ, அது போலவே அவன் உருவமும் அவளுக்குள் ஆழப் பதிந்தது.