44 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,564
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 44
.
“அப்பா லெசர்ட் தெலியுமா? லெசர்ட் போலிக்கமா?”
புருவம் உயர்த்தி மகளைப் பார்த்தான் கௌதமன். ‘லெசர்ட்’ என்றால்? மகள் அவனது யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
Advertisement
“அங்க பெய்ய பெய்ய கேமல் இக்காம்” எனக் குட்டி கைகளை வானை நோக்கி உயர்த்த, வார்த்தை பிடிபட்டது கௌதமனுக்கு. ‘டெசர்ட்!’ மகள் இன்று பாலைவனத்தை பற்றிக் கேட்கப் போகிறாள் என அதற்கான கேள்விகளுக்குத் தயாரானான் தகப்பன்.
திருச்சிக்கு வந்ததிலிருந்து மகளின் கேள்விகளும், மழலை மாறா பேச்சும் மிகமிக சுவாரசியமாக இருக்கிறது. வீட்டில் வைத்து நடத்தும் இந்த மழலையர் பள்ளி செய்யும் மாற்றமா? இல்லை அரவிந்தன் செய்யும் மாற்றமா? இரண்டும் தான் என எண்ணிக் கொண்டான். யசோவை எப்படி மறந்தான் இவன்?
ஏதோ பாலைவனத்திற்குச் சென்று வந்தவள் போல், மீன் குஞ்சு வாய் திறந்து, “அங்க லொம்ப சுடும். தெலியுமா?” எனக் கோலிக் குண்டு விழிகளை உருட்டும் மகளை வாரி எடுத்து மடியில் இருத்திக் கொண்டான் கௌதமன். “ஆமா பேபி, சில டெசர்ட் ரொம்ப ஹாட். சில டெசர்ட் ஃபுல்லா ஐஸ் கட்டியா இருக்குமா… அங்க ரொம்ப கோல்டா இருக்கும்” என்றவனை விழி விரித்துப் பார்த்த மகளை அவனும் பார்க்க,
Advertisement
“பிஞ் மாடியே குளுதுமா?” என்றதும், ‘அடுத்து ஃபிரிட்ஜா?’ எனப் பார்த்தான் தகப்பன்.
Advertisement
“பிஞ் குளுதும். கோல்ட் வாத்தர் சளி தலும்.” குளிர்சாதனப் பெட்டியைப் பற்றி பாடம் நடத்தி, “அப்பா, ஆலி பேபி மூக்கு வலிக்கி” என அடைத்த மூக்கைக் குழந்தை கசக்க, “வா சலைன் ஸ்ப்ரே பண்ணுவோம். மூக்கு கிளியர் ஆகும்” என மகளைக் குளியலறைக்குத் தூக்கிச் சென்றான் தகப்பன்.
மெத்தையில் படுக்க வைக்க, மகளின் மூக்கு இன்னும் அடைத்துக் கொள்ள, “மூக்கு வலிக்கு” என யாழி அனத்த ஆரம்பித்தாள்.
இரு நாள்களாகவே இந்தச் சளி மகளைப் பாடாய்ப் படுத்தி எடுக்கிறது. தூங்க முடியாது அவஸ்தை படும் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு கௌதமன் மாடிக்குச் சென்றான்.
Advertisement
தோளில் உறங்க முயலும் மகளின் முதுகைத் தட்டிக் கொண்டே சோம்பலாக நடக்க ஆரம்பித்தான். இன்று வானம் தெளிந்து காணப்பட்டது. நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் பூமியைக் காணும் ஆசை வந்திருக்கும் போலும். பூமியைப் பார்க்கும் பொருட்டு மேகத்தைத் துடைத்து தங்களில் சாளரங்களைத் திறந்து வைத்துக் கொண்டதோ? விண்மீன்களை மட்டுமே ஏந்தியிருக்கும் வானம் நம் கண்களுக்கு இவ்வளவு ரம்மியமாகத் தெரிந்தால்… நீல ஆறு, பச்சை மரங்கள், வெண்ணெய் பனி, வண்ண மலர்கள் எனப் பல அழகை ஏந்தியிருக்கும் பூமியை வானிலிருந்து பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும்?
ஒரு பக்க அழகை இருளுக்குள் மறைத்து, ஒரு பக்க அழகை மறைக்காது வெளிச்சமிட்டுக் காட்டும் இந்தப் பூமிப் பந்து இன்னும் எத்தனை விந்தைகளைச் சுமந்து நிற்கிறது? நேற்று இருட்டியிருந்த வானம் இன்று பளிச்சென தெரிகிறது. நம் வாழ்வும் அப்படித் தானே? மொட்டு மலர்வது போல் நம் வாழ்வும் ஏதோ ஒரு தருணத்தில் மலர்கிறது தானே. தன் சிந்தனைகளின் போக்கை எண்ணி கௌதமன் மெல்லச் சிரித்தான்.
புன்னகையோடே நடந்தவன் பார்வையில் சிற்பம் ஒன்று தெரிந்தது. உளியால் செதுக்கப்படாத பெண் சிற்பம். பழைய புத்தகங்களின் முகப்புப் பக்கத்தில் இப்படியான படங்களைப் பார்க்கலாம். இரவு வான், பிறை நிலவு, மின்னும் நட்சத்திரங்கள், நிழலாகத் தெரியும் மரங்கள், இதற்கு இடையே தன் பின்னழகோடு இடை அழகைக் காட்டி நிற்கும் பெண் ஓவியம். என்ன ஆனது இன்றைக்கு எனக்கு? கௌதமன் மிண்டுமாகச் சிரித்துக் கொண்டான்.
இவன் பார்வை வட்டத்தில் இருந்த பெண் சிற்பம் நடந்தது. மஞ்சள் குண்டு பல்பின் வெளிச்சத்தின் கீழ் வந்து நின்ற யசோ, கௌதமனை பார்த்துப் புன்னகைத்தாள். சந்திரனை கண்ட அல்லி போல் யசோவை கண்ட கௌதமன் மலர்ந்தான்.
மொட்டு வெடித்து தாமரை மலர்ந்தது. கூம்பிய விரல் விரித்து, ‘என்ன இந்த நேரம் மாடியில?’ என இவள் வினவ, என்ன அதிசயம்? இவனுக்குப் புரிகிறதே அவளின் மௌன மொழி.
‘பேபி தூங்க மாட்டேன்றா’ என இவனுக்குத் தெரிந்த விதத்தில் பதில் உரைக்க, அந்தோ பரிதாபம்… அவளுக்குப் புரியவில்லை.
‘என்ன?’
‘பேபி… தூங்க… மாட்டேன்றா’ என இவன் பொறுமையாக டம்ஷரட்ஸ் விளையாடினான்.
மௌனமாகப் படிக்க வேண்டிய அபிநயங்களை இவன் கிசுகிசுப்பாகக் கூற, “என்ன அப்பா?” என்ற கேள்வியோடு மகள் பட்டென எழுந்து தகப்பன் முகம் பார்த்தாள். மகளில் உலந்த உதடுகள் சிரிக்க, தகப்பனின் ஈர விழிகள் அழத் தயார் ஆனது.
ஒரு மணி நேரமாக நடை பழகியது இதற்கு தான? கௌதமன் விழிகளில் சிகப்பாக ஏதோ வழிந்தது. பக்கத்து வீட்டு மாடியில் சோழி வெடித்துச் சிதறியது.
“சுப்… சிரிக்காத” என இவன் விரல் நீட்டி எச்சரிக்கவும், மகளின் பார்வை திசை மாறியது. தாயைப் பார்த்த கன்று என்ன செய்யும்? “அம்மா” என மகள் பாய்ந்தாள். மகள் கீழே விழுந்துவிடும் அபாயம் இருப்பதால், மகளை இறுக்கிப் பிடித்த கௌதமனுக்கு சட்டென கோபம் மூண்டது.
“பேபி…” என்றவன் அதட்டலில், மகள் அழ ஆரம்பித்தாள். “நேனுக்கு அம்மா நேணும்” என அடைத்த மூக்கைப் புறங்கையால் அழுத்தி தேய்த்துக் கொண்டே அழ, இவன் பயந்து போனான். அழுகை, சளியை அதிகம் செய்தால்? இதுதான் தருணம் எனச் சளி, கையோடு காய்ச்சலை அழைத்து வந்தால்? இவன் நிலை என்னாகும்? இப்பொழுதே கண்ணைக் கட்டுகிறதே… “இரு இரு… அழாத. கூட்டிட்டு போறேன்” எனச் சமாதானம் செய்து, “அங்க வரட்டா?” என மீண்டும் மௌன மொழி பேசினான்.
‘ம்ம்ம்’ எனத் தலை அசைத்தவள் கரத்தினுள் அடுத்த சில நிமிடங்களில் மகள் பாய்ந்து கொண்டு, “அம்மா மூக்கு வலிக்கி” என அன்னையின் தோளில் பேபி விக்ஸ் பூசப்பட்ட மூக்கை தேய்த்தாள். மகளைத் தோளில் சாய்த்து, மெல்ல முதுகைத் தட்டிக் கொடுத்தாள் யசோ.
“த்தூ..ங்..கு, ச்சரி ஆகி..டும்” என ஈனச் சுவரத்தில் திக்கித் திணறி மகளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசிய யசோவை இவன் விழி விரித்துப் பார்த்தான்.
“அச்சோ அம்மாக்கு கல்து வலி போச்சு” என மகள் அன்று கூறியதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொண்டை வலியை ஊரெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் வைரஸ், யசோவை விட்டுச் சென்றுவிட்டது என்றே எண்ணினான். ஆனால் ‘கல்து வலி போச்சு’ என்றதின் அர்த்தம் இன்று தானே புரிகிறது. இவள் பேசினால், இவனுக்கு என்ன வந்ததாம்? தெரியவில்லை. ஆனால் உள்ளம் மகிழ்ந்தது. துள்ளிக் குதிக்கத் தோன்றியது.
‘எப்பொழுதிலிருந்து பேசுகிறாய்… எத்தனை வருடங்கள் முன் பேச்சு போனது? என்ன செய்து மீண்டும் உன் குரலைப் பெற்றாய்?’ எனக் கேட்கக் கேள்விகள் பல இருந்தாலும், அதை எல்லாம் கேட்கும் அளவிற்கு இருவருக்குள்ளும் நெருக்கம் இல்லையே.
“பேச முடிவெடுத்துட்ட போல. குட் டிசிஷன்” என அவன் புன்னகைக்க, கூச்சமாக இருந்தாலும், அவளும் புன்னகைத்தாள்.
“ஊருக்கு முன்ன எழுந்திடுற. அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கிற நீ, இந்நேரம் தூங்கி இருக்க வேண்டாமா? மாடியில என்ன பண்ணிட்டு இருக்க?” ஏதோ உரிமைபட்டவன் போல் அவன் பேச, யசோவும் பழக்கப்பட்டவனிடம் பேசுவது போல் பதில் உரைத்தாள்.
‘வேர்க்குது. தூங்க முடியல’ என்றாள் செய்கையில்.
“இன்னும் ஏசிய ரிப்பேர் பார்க்க ஆள் வரலியா? சம்மர்னாலே ஏசி ரிப்பேர் ஆகிடுது. ரெண்டு நாள் வெதர் நல்லா இருந்துது. இன்னைக்கு அதுக்கு சேர்த்து வச்சு புழுங்குது. இவளுக்கு மூக்கு அடைச்சிருக்கா, ஃபேனும் போட முடியல” என அவன் சங்கதியையும் சேர்த்தே கூறினான்.
“வழக்கமா எப்போ படுப்ப?”
அவள் கையசைக்க, இவன், “பேசு யசோ. பேசப் பேச தான் பேச்சு நல்லா வரும். முதல்ல கொஞ்சம் கூச்சமா தான் இருக்கும். வீட்டாட்கள் கிட்டப் பேசி பழகினா தான் அந்த அசௌகரியம் போகும். வாய்விட்டு பேப்பர் வாசி. கண்ணாடி முன்ன உட்கார்ந்து பேசு. சீக்கிரமே முன்ன மாதிரி பேச ஆரம்பிச்சுடுவ.” என இவன் கூற, அவனைக் கண்சிமிட்டாது பார்த்த யசோவினுள் பேரிரைச்சல்.
ஏசி வேலை செய்யவில்லை. தூக்கம் வந்தாலும், தூங்க முடியாது புரண்டவளின் உறக்கதை, அரவிந்தன் அறையிலிருந்து வந்த பாடல், முற்றிலுமாக விரட்டி விட்டிருந்தது.
வெள்ளைப் புடவையில் கே.ஆர்.விஜயா ‘கண்ணை விட்டுப் போனாலும், கருத்தை விட்டுப் போகவில்லை; மண்ணை விட்டுப் போனாலும், உன்னை விட்டுப் போகவில்லை’ என மேகம் மீது மிதந்து கொண்டே பாடிக் கொண்டிருந்தார்.
இந்தப் பாடல், மகளில் காதுகளில் விழுந்தால் அவள் தூக்கம் கெடும் என அரவிந்தனுக்கு தெரியாதே. பாடல் வரிகள் செவ்வனே அதன் வேலையை ஆரம்பித்தன.
“இதோ பக்கத்துல இருக்கு பெங்களூரு… அப்பப்போ வந்து போரத் தூரம் தானே?” என்றவனின் சத்தம் காதுக்குள் எதிரொலிக்க, தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்தாள் யசோ.
“உன்ன காதலிச்ச குத்ததுக்கு, என்னை ஆவியா மாத்தினது மட்டும் இல்லாம… வேற ஒருத்தனோட உன்ன சேர்த்து வச்சு பாடணுமா? தேவைத்தான் டி” அவளுள் இருந்தவன் சிரித்தான். யசோவின் மனநிலை முற்றிலும் மாறியது.
“நெருப்புன்னு சொல்றதுக்கு எல்லாம் வாய் சுடாது டி” என அவன் கூறினானே. இன்று நெருப்பு சுட்டுவிட்டது என அவனிடம் எப்படிக் கூறுவேன் நான்? கேட்ட மனம் வலித்தது.
இன்றைய இரவு, தூங்கா இரவு என யசோதராவிற்குத் தெரிந்தது. உடல் புழுக்கத்தைத் தாங்கியவளால் மன புழுக்கத்தைத் தாளமுடியாது போனதின் விளைவாக மாடிக்கு வந்தவளின் பார்வையில் அவள் சிந்தனைக்கு சொந்தக்காரன் விழுந்தான்.
‘கனவா இல்லை நினைவா?’ எனக் கண்களைக் கசக்கிப் பார்த்தாள் யசோ. அவன் தான்… அவனே தான். தனக்கு முதுகைக் காட்டி நிற்பவனின் இரண்டு எழுத்து பெயரை உச்சரிக்கத் தொண்டை திறக்கும் முன்பே அவன் திரும்பினான். இவன்… அவன் இல்லை. குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு வானை அண்ணாந்து பார்த்து நடக்கும் இவன் கௌதமன்.
காதுகளை மூடியபின்னும் வரிகள் துல்லியமாகக் கேட்டது. மனம் தடுமாறியது. கௌதமனை பார்க்கப் பார்க்க, அப்படியும் இருக்குமோ என ஒரு நொடி நினைக்கத்தான் செய்தாள். சொன்னது போலவே செய்துவிட்டானா? வந்துவிட்டானா? உருவம், குரல், அவன் பழக்கவழக்கம் என அனைத்தும் ஏன் தன்னவனை நினைவு படுத்துகிறது?
இப்படியான சிந்தனையில் மூழ்கி இருந்தவளிடம், “கண்ணாடியைப் பார்த்துப் பேசு… பேப்பர் படி” என அவன் கூறிய அதே அறிவுரைகளை, அதே ஆழமான குரலில் கூறினால்… அவளும் என்னத்தான் செய்வாள்? மௌனமாகிப் போனாள்.
“இவனுக்கு எப்படி என் கஷ்டம் தெரியும்ன்னு பார்க்கறியா? நாலு வருஷம் முன்ன ஒரு சர்ஜரில எனக்கு பேச்சு போயிடுச்சு. அப்பறம் தொண்டையில சர்ஜரி செய்து, கொஞ்ச நாள் பேச முடியாம இருந்து… அப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டுப் பேச ஆரம்பிச்சபோது இப்படித் தான் உன்ன மாதிரி திணறினேன். வலி ஒரு பக்கம், இப்படித் திக்கித் திக்கி பேசியே ஆகணுமான்னு விரக்தி ஒரு பக்கம்ன்னு… நினைச்சா, எப்படி டா அந்தக் கஷ்டத்தை எல்லாம் தாண்டி வந்தேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு”, என்றவனும் அந்த நாள்களில் மூழ்கி மௌனமாகிப் போனான்.
இருவரும் மௌனமாகிப் போக, மௌனத்தின் கரம் பற்றி இருவருமாகச் சேர்ந்தே மாடியை அளந்தனர். இன்று தான் முதல் முறையாக யசோவின் மாடிக்கு வருகிறான். காற்றோடு சரசம் பேசும் தென்னை கீற்று அவன் கேசம் வருடியது. கசப்பு மணத்தைக் காற்றில் கலக்கவிடும் வேப்பம் பூ கொட்டிக் கிடக்கும் இந்த மாடி அவனுக்கு பரிட்சியமாகவே தோன்றியது. இவன் தோள் சாய்ந்து நின்றவளிடம் காதல் வார்த்தை பேசியது இங்குதானே? மனம் ஒரு நொடி தாளம் தப்பி மீண்டது. அந்தக் கனவில் வந்தவளும் இவள் தானோ? மீண்டுமாக மனம் ஐயம் கொண்டது. ம்ப்ச்… என்ன சித்திரவதை இது? இவளோடு தனக்குப் பூர்வ ஜென்மப் பந்தம் இருக்குமோ? இருக்காது… இது வேறு எதுவோ… மனம் ஏதேதோ எண்ணியது.
மாடியின் ஓர் ஓரத்தில் இருந்த திண்டு பல கதைகளைக் கூற முற்பட, கௌதமன் பார்வை அங்கு நிலைத்து நின்றது. கௌதமன் பார்வை சென்ற திசையின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள் யசோ.
‘சின்னதில அங்கக் குடும்பமா படுப்போம்.’ என இவள் கையசை, அவன் செல்லமாக முறைத்து, “பேசு யசோ” என்றான்.
“வ்வத்தல், வ்வட…கம், ஊஊரு..க்காய்க்கும் அது தான் இடம்” என ஒருவழியாகச் சொல்லி முடித்தாள்.
மலரிடம் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. எப்பொழுதாவது அப்பாவிடம், முடிந்தவரை மகளிடம் என இருவரிடம் மட்டுமே பேசும் யசோ, எந்தத் தயக்கமும் இல்லாது கௌதமனிடம் பேசினாள். ஏனாம்? அந்த ஆழமான அழுத்தமான குரலின் கட்டளையை யசோவால் என்றுமே மீற முடியாதென்பதாலா? இருக்கலாம்.
அன்றைய இரவில் ஆரம்பித்த நடைப் பழக்கம் தினமும் இல்லை என்றாலும் அவ்வப்போது தொடர்ந்தது. மாடியிலோ, வீதியிலோ நிலாவின் துணையோடு இருவரும் ஊர்வலம் சென்றனர். இருவரின் கரம் பற்றி நடக்க ஆரம்பிக்கும் மகள், அவர்கள் வீட்டிற்கு வந்து சேரும் வேளை தந்தையின் தோளில் உறங்கி இருப்பாள்.
“குட் நைட் யசோ” என அவள் வீட்டின் வாயிலில் அவர்களது பேச்சு முடிவுக்கு வரும். இருவருக்குமே அந்த நடையும் பிடித்த து, கூட நடப்பவரையும் பிடித்தது. ‘அதுக்குள்ள வீடு வந்திடுச்சா’ என எண்ணிய தினங்களும் உண்டு.
‘குடி நைட்’டோடு அவரவர் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிடுவர் என்பதைக் குழந்தையும் பார்த்திருக்கிறாள். அப்பா ஒரு வீட்டில், அம்மா ஒரு வீட்டில் என்றிருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கத் தெரியாத குட்டி யாழினியின் வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது, அந்த ஒரு நாள் வரும் வரை. அன்று, அதே தெருவில் வசிக்கும் நரேனின் ஒரு வயதுக் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு யாழி பேபி அழைக்கப்பட்டிருந்தாள்.
அம்மாவும் மகளுமாக ஒரே நிறத்தில் உடையணிந்து, கையில் பரிசோடு, கைகால் முளைத்த குட்டி மேகக் குவியலின் பிறந்த நாளை கொண்டாடச் சென்றனர்.
“அம்மா, ஆலி பேபிக்கு ஆப்பி பர்த் டே பார்ட்டி ஏன் இல்ல?” எனக் கேட்கும் மகளிடம் என்ன கூறுவாள்? அவள் பிறந்த நாளுக்கு அவள் தான் இங்கில்லையே.
“பாட்டி வீட்டுக்கு போயினே இல்ல… அங்க பலூன் இந்துச்சு. பெய்ய கேக் இந்துச்சு.” என அவளே தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நினைவு கூர்ந்தவளாகக் கதைத்தாள்.
யாழியைப் பார்த்த நரேனின் நான்கு வயது மகன் சர்வேஷ், “வா யாலி… எங்க குட்டி பாப்பா பாக்கிலியா?” என யாழியின் கரம் பற்றி வீட்டினுள் இழுத்துச் சென்றான்.
“வாங்க வாங்க…” என அழைத்து, “அரவிந்தன் வரலியாமா?” எனக் கேட்டு நின்றார் கோபாலன்.
“சென்..னை போயி…ருக்கார் மாமா” எனச் சிரமப்பட்டுப் பதிலளித்தவளிடம் அதற்கு மேல் கேட்க மனமில்லாது, “சரி மா… நீங்க உள்ள வாங்க” என வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
யாழிக்கு எல்லாம் நன்றாகவே சென்றது சர்வேஷின் அம்மாவும் அப்பாவும் ஒரே வீட்டில்… ஒரே அறையில் வசிக்கிறார்கள் எனத் தெரியும் வரை. ‘இது என் அறை, உன் அறை எப்படி இருக்கும்’ என்ற பேச்சு ஆரபித்தது. “நான் பாட்டி தாத்தா ரூம்ல தூங்குவேன். பாப்பா, அம்மா அப்பா கூட தூங்குவா” என்பதையே பல விதமாகப் பல பிள்ளைகள் கூறினர்.
யாழினியாளுக்குப் புரியவில்லை. தன் அம்மா ஒரு வீட்டிலும், தன் அப்பா ஒரு வீட்டிலுமாக இருப்பது ஏன் எனப் புரியவில்லை. குழந்தையின் குழப்பம் தெளியும் முன்பதாகவே, “பிள்ளைங்களா வாங்க வாங்க கேக் வெட்டுவோம்” என நரேன் பிள்ளைகளை நடுக் கூடத்திற்கு அழைத்துச் செல்ல, ‘ஒரு வீடு, ஓர் அறை’ யாழியின் சிந்தனையிலிருந்து விடுபட்டது.
விழாவிற்கு வந்த லாவண்யாவைப் பார்த்த யசோதராவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “ல்..லாவ்” என வாய் திறந்து அழைத்த யசோவை அணைத்து நின்றவளுக்கும் அதே நிலை.
இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு அனைவரும் கிளம்பத் தயார் ஆகினர்.
“இது… இந்தப் பாப்பா? ஏன் உன்ன அம்மான்னு கூப்பிடுறா?” எனக் கேட்ட லாவண்யாவிடம், யாழி தன் மகள் இல்லை எனக் கூறவே பிடிக்கவில்லை. “இப்போ வேணும்ன்னா நல்லா இருக்கும் யசோ, ஆனா நாளைக்கு பின்ன உனக்குன்னு ஒரு குடும்பம் வரும் போது, இது உனக்கே வினையா மாறும்” என்றாள் லாவண்யா.
“டாடா அங்கிள், பை பை பேபி, டாடா சல்வேஷ்” என அனைவருக்கும் கையசைத்து வந்த யாழியின் கரத்தை பிடித்துக் கொண்டு யசோ கிளம்ப, கூடவே லாவண்யாவும் கிளம்பினாள்.
“அ..அஷ்..வின க்கூட்டி..ட்டு வ்வந்தி..ருக்கலாமே” என யசோ கேட்க, “கூட்டிட்டு வந்திருக்கலாம் தான். ஆனா அதுக்கு அவன் இங்க இருக்கணுமே” என லாவண்யாவின் விரக்தியான பேச்சில் யசோவின் நெற்றிச் சுருக்கியது.
“ஆனந்தனுக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கு யசோ. ஏதோ ஒரு ஜென்மத்துல, சின்ன தடுமாற்றத்துல, மனசுக்கு பிடிச்சுதுன்னு நினைச்ச ஒருத்தன நான் கட்டிப்பிடிச்சேன்னு தெரிஞ்சதும் என்னை ஒரு கேவலப் பிராணியா பார்த்து… அவர் வீட்டாட்கள் கிட்ட என்னை விட்டுக்கொடுத்து என் வாழ்க்கைய நரகமா மாத்தினவர், இப்போ ஒருத்தியோட ரகசியமா குடும்பம் நடத்திட்டு இருக்கார். இது எந்த விதத்துல நியாயம்ன்னு கேட்டா, அவருக்குத் தேவை இருக்கும், அதைக் கேட்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லன்னு சொல்லிட்டார்.
அப்போ… அந்த வீட்டுல அவன் கூட படுக்கவும், அவங்க வீட்டாட்களுக்குச் சேவை செய்யவும் தான் நானான்னு வெறுத்து போச்சு. இப்படித்தான் தொடரும்னா நான் கிளம்பறேன்னு சொன்னா, போன்னு சொல்லிட்டார். அஷ்வின் அவங்க வாரிசாம். அனுப்ப முடியாதாம்.” கூறிய லாவண்யாவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“அம்மா… காலு வலிது… கண்ணு வலிது” என்ற குழந்தையை யசோ தூக்கிக் கொள்ள, மகள் அன்னையின் கழுத்தில் முகம் புதைத்தாள்.
“கல்யாணம் ஆன புதுசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் தெரியுமா? அஷ்வின் பிறந்த போது, அவங்க அம்மா அவர்ட்ட, ‘உனக்குத் தூங்க வசதிபடாது’ன்னு அவர வேற ரூம்ல இருக்க சொன்னதுக்கு அவர் மாட்டேன்னு சொல்லி, அஷ்வின் அப்பா என்னோட ஒரே ரூம்ல தான் இருந்தார்.”
அம்மாவின் தோளில் அரைகுறை தூக்கத்தோடு படுத்திருந்த குழந்தை பட்டென எழுந்து தன் தலையை உயர்த்தி லாவண்யாவை பார்த்தாள். குழந்தைக்கு என்ன புரிந்ததோ, தன் அச்சோ அம்மாவைப் பார்த்தாள். அவள் பேசும் முன், “தூ..க்கம் வருதுன்னு சொ..ன்ன. தூங்கு” என மிண்டுமாகத் தோளில் படுக்கச் செய்து முதுகை வருடிவிட ஆரம்பித்தாள்.
லாவண்யாவின் வீடு வந்திருக்க, இருவரும் அவள் வீட்டு மதில் சுவர் வாயிலில் நின்றனர்.
“ஒண்ணா சந்தோஷமா இருந்த குடும்பம் பிரிஞ்சுடுச்சு யசோ. நான் ஒரு வீட்டுல, இப்போ என் மகன் அவனோட அப்பா கூடன்னு தனி தனியாகிட்டோம். டிவோர்ஸ் பண்ணிட்டு ஒரேயடியா பிரிஞ்சுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அவருக்கு அவர் மகன் வேணும்னா அவரே அவர் மகன வளர்கட்டும். நான் தனியா இருந்துட்டு போறேன்” என்றாள் முகத்தைத் தன் துப்பட்டாவில் துடைத்துக் கொண்டே.
“யசோ…” என்ற கௌதமனின் சத்தம் கேட்டு, யசோ திரும்பிப் பார்க்கும் முன்னமே, “அப்பா…” எனக் குழந்தை தகப்பன் கைக்குப் பாய்ந்தாள். அப்பாவின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்ட குழந்தைக்குள் பயம் சூழ்ந்து கொண்டது. குடும்பம், வீடு, அறை… என்றதெல்லாம் புரியவில்லை என்றாலும், பிரிவு… அதனால் தனித் தனி வீடு என்பது புரிந்தது.
பாட்டி வீட்டில் இருந்து பிரிந்து வந்து தானே இங்கு இருக்கிறோம் என்ற மகளுக்கு, பிரிவு என்றால் என்ன என்று புரிந்தது. அதே பிரிவு தான் யசோ அம்மாவை தங்களிடம் இருந்து வேறு வீட்டில் இருக்க வைத்திருக்கிறதோ என அந்தச் சின்ன மூளை யோசித்தது.
“வ..ரேன் லாவ்” என்றவள், லாவண்யாவிடம் கௌதமனை அறிமுகப்படுத்தவில்லை. அழுது கொண்டிருப்பவளிடம் என்னவென கூறுவது என விட்டுவிட்டாள்.
“ரொம்ப நேரம் ஆகிடுச்சே, பேபி தூங்கிட்டான்னா, நீ எப்படி தூக்கிட்டு வருவேன்னு வந்தேன்” எனத் தன் வருகைக்கான காரணத்தைக் கௌதமன் கூறினான்.
“அ..அப்..போவே பேபி கண்ண கசக்கினா. லாவண்யா, அவ புருஷன் பிள்ளைய பிரிஞ்சு வந்துட்டா. அத சொல்லி அவ அழவும், என்னால அவள விட்டுட்டு வர முடியல.” என நேரத் தாமதத்தின் காரணத்தை ஒரு வழியாகச் சொல்லி முடித்தாள் யசோ.
சின்ன குட்டியின் கை கழுத்தை இறுக்கிப் பிடிக்க, “பேபி, ஏன் இவ்வளவு டைட்டா பிடிக்கிற?” என மகளின் கரத்தை கழுத்திலிருந்து விடுவித்தான் கௌதமன்.
எல்லா விஷயங்களையும் எல்லார் முன்பு பேசிவிட முடியாது எனத் தெரிந்த பெரியவர்களுக்கு, அந்த ‘எல்லார்’ லிஸ்டில் குழந்தைகளும் அடக்கம் என ஏன் தெரிவதில்லை? குழந்தைகள் முன் உடை மாற்றுவது, குழந்தைகள் இருக்கும் அறையில் அந்தரங்கம் பேசுவது, பிள்ளைகள் உறங்குவதாக எண்ணி அதே அறையில் தாம்பத்தியத்தில் இறங்குவது, தகாத வார்த்தை கொண்டு சண்டையிடுவது போன்ற இவை எல்லாம் அந்தச் சின்ன மனதில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது எனப் புரிந்தால் சரி தான்.
“சாப்டீங்களா ரெண்டு பேரும்?”
“ம்ம்ம்”
“இன்னைக்கு ஹீரொயினோட ஒரே காமெடி…” என ஆரம்பித்து அவனின் அன்றைய நாளை விவரித்து… பேச்சு இங்கு அங்கு என எங்கெல்லாமோ சென்றது. பேச்சு முடிவுக்கு வரும் முன் யசோவின் வீட்டின் வாயிலை அடைந்திருந்தனர்.
“தனியா இருந்துடுவியா?” எனக் கேட்டான், கதவைத் திறக்கும் யசோவிடம்.
“அவளுக்கு நான் வேணுமே… என்ன பண்ணலாம்?” என அவன் சிரித்தான்.
வாடா புன்னகையோடே, “குட் நைட் யசோ” எனக் கௌதமன் யசோவிடம் விடை பெற, பட்டெனத் தோளில் இருந்து எழுந்த யாழி, “நோ… பிலிய நேணா. அம்மா, அப்பா, பேபி ஓலே ஹௌஸ்ல தான் இக்கணும்” என உதட்டைப் பிதுக்கத் தயாரானாள்.
கௌதமன் எனும் மிதக்கும் தீவு ஒன்று இருந்தது. யசோதரா என வேறு ஒரு மிதக்கும் தீவு இருந்தது. இரு தீவுகளையும் சேர்த்துப் பிடிக்க யாழினியாள் என்ற பாலம் இருக்கிறது. இரு தீவுகளும் நகராது இருந்தால் மட்டுமே பாலம் பலமாக இருக்கும். இது குழந்தைக்கு புரிகிறது. குழந்தை உணர்ந்தால் போதுமா?