46 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 46
.
பட்டு வேட்டி சட்டையில் சப்பளங்கால் போட்டு அமர்ந்திருந்தான் கௌதமன். மடியில் அமர்ந்து தன் பால் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தாள், அடர் பச்சை பட்டுச் சட்டையும், அதே நிறத்தை பார்டராக கொண்ட மாம்பழ நிறப் பட்டுப் பாவாடையில் இருந்த யாழினியாள். எச்சில் பளபளக்கும் பஞ்சுமிட்டாய் உதடுகள் மறைக்காத எட்டுப் பால் பற்களால் பார்ப்பவரை கபளீகரம் செய்வது போதாதென தன் மருதாணியிட்ட குட்டி இளஞ்சிவப்பு உள்ளங்கைகள் இரண்டையும் விரித்துக் காட்டிக் கொண்டிருக்கும் குட்டி யாழிக்கு ஒரு வயதிருக்கும்.
Advertisement
எச்சில் ஒழுக ஸ்ட்ராபெர்ரியை சுவைத்துக் கொண்டு, தன் பிக்கி மாமாவோடு கார் முகட்டின் மீது அமர்ந்திருந்த முயல் குட்டி, பூமிக்கு வந்து எட்டு மாதங்கள் இருக்குமா? இருக்கும் என்றது தொங்கும் கன்னங்களும், ஸ்ட்ராபெர்ரியை கடித்துக் கொண்டிருந்த முன்பக்கக் கூர் பற்கள் நான்கும்.
கடற்கரை மணலில் அமர்ந்திருந்த யசோவின் மடியில் படுத்து உறங்கியிருந்த குழந்தைக்கு என்ன வயதிருக்கும்? கைப்பேசியின் திரையிலிருந்து பார்வையை எடுக்காதே மனம் கணக்கு போட்டது. தன்னை அன்னை என நினைத்து தன் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் கேசம் வருடியது யசோவின் விரல்.
Advertisement
Advertisement
காலை எட்டு மணியிலிருந்து அரவிந்தனுக்கு எக்கோ, இசிஜி, சீ.ட்டி. கார்டியாக் ஸ்கோரிங், என மாற்றி மாற்றி ஏதேதோ இதயச் சம்பந்தமான டெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க, நேரத்தை நெட்டி தள்ள முடியாது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்த புகைப்படங்களில் கவனத்தைப் பதித்திருந்தாள் யசோ.
தன் பத்து விரல்களையும் விரித்து, “அம்மா பேத்கூலுக்கு வம்மாட்டீங்களா?” எனக் காலையில் தலையைத் தொங்கப் போட்டு நின்ற யாழியை நினைக்க நினைக்க அள்ளி கன்னம் அழுந்த முத்தம் கொடுக்கும் ஆசை உள்ளுக்குள் இருந்து பீறிட்டு வந்தது யசோதராவிற்கு. ‘டிராமா க்வீன்’ எனச் செல்லமாகச் சலித்தவளின் விரல் அடுத்த புகைப்படத்திற்குத் தாவியது.
Advertisement
மகாபலிபுரத்தில் பாறையோடு பாறையாக ஒட்டியிருந்த யானை சிற்பம் அருகில் அப்பாவின் தோளில் அமர்ந்திருந்த குட்டி அழகிக்கு இரண்டு வயதிருக்கலாம். அப்பாவும் மகளும் இரு கரங்களையும் வானை நோக்கித் தூக்கிக் கொண்டு சிரித்திருந்தனர். சிற்பத்தின் அழகை ரசிக்க வேண்டுமென்றால் பார்வை அதில் பதிய வேண்டுமே. அடர் சிகப்பு நிறத்தில் உடையணிந்திருந்த அப்பாவும் மகளும் யசோவை ஈர்த்தனர்.
இவர்களோடு தானும் இருந்தால் நன்றாகவா இருக்கும்? ஏனோ அந்தக் கேள்வி நெஞ்சைக் கவ்விப் படித்தது. ஏன் தனக்குள் இந்தக் கேள்வி? சில தினங்களாகவே வீட்டில் அதிகமாகிப் போன அரவிந்தனின் திருமணப் பேச்சும்… அன்று யாழியின் கோரிக்கையுமே கேள்விக்கான காரணம் எனப் புரிகிறது. கேள்வியும் பிடிக்கவில்லை… அதற்கான பதிலை யோசிக்கவும் பிடிக்கவில்லை யசோதராவிற்கு.
இவனோடு சுற்றிக் கொண்டிருந்த அந்த பார்பி அழகி… தாக்ஷா என்ன ஆனாள்? இவனுக்கு அவள் சுத்தமாகப் பொருத்தமே இல்லை என மனம் அப்பட்டமாகப் பொய் உரைத்தது. ஒரு காலம் குடும்பமாக அவர்கள் மூவரையும் கோவிலில் பார்த்து, ‘அழகிய குடும்பம்’ என நினைத்த அதே மனம் இன்று மனசாட்சியே இல்லாது ‘பொருத்தமே இல்லை’ என நினைப்பது என்ன விந்தையோ?
அவள் பொருத்தம் இல்லை என்றால், ‘நீ பொருத்தமா?’ என மனம் கேட்டது. ப்ச்… என்ன இது மீண்டும் மீண்டும் அதே கேள்வி? சலிப்பாக இருந்தது. ‘யாழிக்கு தாயாக இருக்க தாக்ஷா பொருத்தம் இல்லை’ என முடித்தாள். ‘யாழியின் தாயாக இருக்க நீ மட்டும் பொருத்தமோ?’ எனக் கேள்வியை மாற்றி போட்டுக் கேட்டது மனம். இம்முறை எந்த யோசனையின்றி ‘ஆம்’ என்றாள் யசோதரா.
இப்படியே யாழி குட்டியின் அன்னையாக இருக்கும் வரம் கிடைத்தால் வேண்டாம் என்றா கூறப் போகிறாள்? ஆனால்… யாழி கேட்பது? அப்பாவும் அம்மாவும் ஒரே வீட்டில் இருக்க வேண்டுமாமே? மூன்று வயதுக் குழந்தைக்குள் இன்னும் என்னென்ன புதைந்து இருக்கிறது? நீரில் போட்ட பஞ்சியைப் போல் எப்படிச் சுற்றி நடப்பதைத் தனக்குள் இறக்கிக் கொள்கிறாள் இந்தக் குட்டி அழகி?
குழந்தையின் முகத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்திருந்தவளின் எண்ணங்கள் யாழினியாளை சுற்றிப் பயணித்தது. படத்தை சிறிதுபடுத்த, பார்வை வட்டத்தில் யாழியை தன் தோளில் சுமந்து நின்றவன் விழுந்தான். முதல் முறை கோவிலில் பார்த்தது முதல் அவனைப் பார்த்த ஒவ்வொரு தருணமும் நினைவில் வந்து போனது. அவள் ஒத்துக் கொண்டாலும் இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் கௌதமன் அவள் மீது ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது நிஜம்.
ஏதோ ஓர் ஈர்ப்புவிசை அவனிடம் இருப்பதை உணர்ந்தாள். இந்த நான்கு வருடங்களில் எந்த ஆண்மகனையும் இவ்வளவு நெருங்க விட்டதில்லை. அவள் மனம், ஒருவரையும் நெருக்கமாக உணர்ந்ததும் இல்லை. இவனை உணர்கிறாள். ஏன் என்று தெரியாது. ஆனால், யாரால் எனத் தெரியும். யாழி என்னும் பனி சாரலால் மட்டுமே. இப்படி ஒரு குழந்தை இவன் கைகளில் தவழாது போயிருந்தால், இவள் கௌதமனோடும், அவன் இவளோடும் நட்பு பாராட்டக் காரணம் இருந்திருக்காது என்பது அவளுக்குத் தெரியாதா என்ன?
“அம்மா கூட ஒலே லூம்ல தூணலாம் அப்பா. போவ நேணா” என யாழி கத்தி ஆர்ப்பாட்டம் செய்த வேளை அவன் முகம் காட்டிய அதிர்வும், அதை மறைக்க அவன் பட்டபாடு?
“தூங்கலாம்… தூங்கலாம். சீக்கிரம் ஒண்ணா தூங்கலாம். இப்போ இருக்க பெட்ல மூணு பேர் படுக்க முடியாது, பெருசு வாங்கிட்டு அம்மாவ கூட்டிட்டு போவோம் சரியா?” என உளறிக் கொட்டி, இவளைப் பாவமாகப் பார்த்தவனைக் காப்பாற்ற, இவளும் உளறிக் கொட்டினாளே. இப்பொழுது நினைத்தவள் முகத்தில் புன்னகையை அரும்பியது.
“அம்மா… நாளைக்கு அப்பா, அம்மா, பேபி ஒலே லூம்ல தூணலாம். அலாம தூணு” எனத் தன்னை ஆறுதல் படுத்திச் சென்ற யாழியின் மீது தனக்கு, எப்படி… ஏன் இவ்வளவு அன்பு? மறுத்தேதும் பேசாது, பொய்யே என்றாலும், “அம்மா அழல. நீயும் அழாம அப்பா கூட இப்போ போ. நாளைக்குச் சேர்ந்து ஒரே ரூம்ல இருக்கலாம்” எனக் கூறும் அளவிற்கு எப்படி யாழியைத் தனக்குப் பிடிக்கிறது?
கைப்பேசியில் தெரிந்த கௌதமனை பார்த்தாள். இவனோடு யாழிக்காக ஒரே வீட்டில் இருக்க முடியுமா? ஒரே வீட்டில் என்றால்? வாழ்க்கைத் துணையாகவா? இவனை இதுவரை அந்தக் கோணத்தில் பார்த்ததில்லை. அந்தக் கோணத்தில் எந்த ஆணையுமே பார்க்க முடியாதே.
“மா…” என்ற சத்தம் கேட்டு தலையை உயர்த்த, அப்பா நின்றிருந்தார். யசோவின் எண்ண அலைகள் அடங்கி உள்ளுக்குள் இழுத்து மூடிக் கொண்டன.
“மு..டிஞ்சுதா ப்பா?” எனக் கேட்டு நின்ற மகளிடம், “ஆச்சு மா. அடுத்த வாரம் வந்து டாக்டர பாக்க சொன்னாங்க.” என்றார் அரவிந்தன்.
“ரி..ப்போர்ட் கையோட கி..டைச்சிடும்ன்னு சொன்னாங்க?”
“டாக்டர பாக்க அப்பாயிண்ட்மென்ட் டைம் கிடைக்கணும் இல்ல? அதுக்கு தான். ரிப்போர்ட்ட டாக்டர் பார்த்துட்டு அவசரம் ஏதும்ன்னா சீக்கிரமே கூப்பிடுவாங்க” என மகளிடம் பேசிக் கொண்டே அரவிந்தன் மருத்துவமனையின் வாயிலைக் கடந்து நடந்தார்.
காலை ஏழு மணிக்குப் பூட்டிய வீட்டின் பூட்டைத் திறக்கும் வேளை, நேரம் மதியம் ஒன்றைத் தொட்டுவிட்டது என்றது கைக்கடிகாரம். காலையில் சமைத்து வைத்திருந்ததை எடுத்து வைக்க, “நீயும் உக்காரு மா” என மகளைத் தன்னோடு உண்ண அழைத்தார் தகப்பன்.
“கொஞ்ச நேரம் போகட்டும் பா” எனப் பொறுமையாகத் திக்கித் திக்கி பேசிய மகள் பரிமாறிய உணவை அமைதியாக உண்டுவிட்டுப் படுக்கச் சென்ற அரவிந்தனின் மனம் ஒரு நிலையில் இல்லை. படி ஏற முடிவதில்லை. அதிகம் மூச்சு வாங்குகிறது. ஒரு வருடம் முன்பு எடுத்த இசிஜி, இரத்தப் பரிசோதனை அவரை நன்றாக இருப்பதாகவே கூறின. ஆனால் அப்படி இல்லையோ என்ற சந்தேகம் அரவிந்தனுக்கு. தனக்கு ஏதேனும் ஆகிவிட்டால், மகளின் நிலை? அதனாலேயே மருத்துவர் கூறிய அனைத்துப் பரிசோதனைக்கும் தலையைக் கொடுத்தார்.
‘பயமா இருக்கு சந்துமா. நானும் உன் கூடவே வந்துட்டா… நம்ம மக நிலைய நினைச்சு ரொம்ப பயமா இருக்கு’ என மனைவியோடு பேசிக் கொண்டிருந்தவரால் படுக்க முடியவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்தது.
“ப்ப்ப்பா ம்மா..மாத்திர ப்போ..ட்டீ..ங்களா?” என வந்த மகளைப் பார்த்தவர், “மறந்துட்டேன். எடுமா…” என்றதோடு நிறுத்தாது, என்றுமில்லா திருநாளாக மகள் கொடுத்த இரண்டு மாத்திரைகளையும் கர்மசிரத்தையாக வாங்கி விழுங்கினார் அரவிந்தன்.
“டை..யர்டா த்தெரியறீங்க. ப்படுங்க ப்பா” என்ற மகளை, “கொஞ்சம் உக்காரு மா” எனத் தன் அருகில் அமர்த்திக் கொண்டார். மகளுக்கு உள்ளுக்குள் பதறியது. சென்னையிலிருந்து வந்தது முதலே அப்பாவின் முகம் சரியில்லை, இன்று மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு, அவரின் எதையோ பறிகொடுத்த முகத்தோற்றம் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?
“எ..என்..னப்பா?”
மகளின் கலங்கிய முகம் பார்த்தவருக்கு நெஞ்சம் காந்தியது. எப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டிய மகள்? இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறாள். அவளுக்கென இருக்கும் தானும் சென்றுவிட்டால்? அளவில் பெரிதாகிக் கொண்டே சென்ற துக்கப் பந்து, அரவிந்தனின் தொண்டையை முழுவதுமாக அடைத்துக் கொண்டது.
“ப்பா?” என்றவளை பார்த்தவரின் பார்வை அவளுக்கு பரிச்சயம். இப்படியான ஒரு பார்வையை அம்மா உதிர்த்த சில நிமிடங்களில் அவர் இல்லாதே போனார்.
“ப்பா?” என்றவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது, அதனால் குரல் நடுங்கியது.
“அப்பா சொல்றத ரொம்ப கவனமா கேளு மா,” என்றதுமே யசோதராவிற்குப் பயத்தில் உள்ளங்கை இரண்டும் வியர்க்க ஆரம்பித்தன.
“அப்பாக்கு உடம்பு முடியல மா. ரொம்ப நாள் இருப்பேன்னு தோணல மா யசோ” என நிமிடம் நிறுத்தியவர் பார்வை மகளைப் பாவமாகப் பார்த்தது.
“ப்பா… ப்பா… ஒ..ஒண்..ணும் ஆ..காது ப்பா” என்றவளுக்குப் பயத்தில் வார்த்தைகள் தொண்டையை வலிக்க வலிக்கக் கிழித்துக் கொண்டு வந்து விழுந்தன.
“ஆகாம இருக்கணும்ன்னு எனக்கு ஆசை தான்மா. உன் அம்மாவும் ரகுவும் இருந்திருக்கணும்ன்னும் ஆசை தான். எல்லா ஆசையும் நிறைவேறாதுன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.
இன்னைக்கு ஏன் அப்பா இவ்வளவு டெஸ்ட் எடுத்தேன் தெரியுமா? சென்னையில இருக்கும் போது, மயக்கம் வந்து ஹாஸ்பிட்டல் போக வேண்டியதா போச்சு. இரத்த அழுத்தம் சீரா இல்லன்னு சொன்னாங்க. மன அழுத்தம் கூடாதுன்னு சொன்னாங்க. நீ சொல்லு மா… ஒரு அப்பாவா, கல்யாண வயசுல பொண்ண வீட்டுல வச்சுட்டு என்னால எப்படி அழுத்தம் இல்லாம இருக்க முடியும்? எனக்கு ஏதாவது ஆனா, உன் நிலம என்ன ஆகும்ன்னு நினைக்கும் போது அழுத்தம் எப்படி வராம போகும் சொல்லு?”
“ப்பா…”
“உன் மனக்கஷ்டம் அப்பாக்கு புரியாம இல்லமா. உன் அம்மா இல்லாம போன போது, கூடவே என் பாதி உயிர் போயிடுச்சு. அப்போகூட கல்லு மாதிரி இருந்துட்டேன். ஆனா என் புள்ளையா வளத்தவன்… ஐயோ… என் கண்ணு முன்ன அவன அந்த கோலத்துல பார்த்துட்டு என் உயிர் போயிடுச்சுன்னே நினைச்சேன்.”
“…”
“எனக்கு உன் வலி புரியாம இல்ல மா. ஆனா… போனவங்களோட நாம போகலியே. உயிரோட நடமாடிட்டு தான் இருக்கோம். பிடிக்குதோ இல்லையோ… இன்னும் பல வருஷம் வாழ்ந்து தான் ஆகணும். போனவங்கள போக விட்டுட்டு, உனக்கான ஒரு வாழ்க்கைய ஏற்படுத்தித் தர வேண்டியது என் பொறுப்பு.
இப்போ உனக்கு என்ன வயசாகுது? இருபதுகள்ல, தனியா அவனோட நினைவுகளோட வாழ்ந்து முடிச்சுடலாம்ன்னு தோணும். வேலை, பொழுதுபோக்கு, ஃப்ரெண்ட்ஸ் அப்படி ஏதாவது உன்ன பிசியா வச்சுக்கும். ஆனா… அது நிரந்தரத் தீர்வா இருக்காது. ஒரு நாள் எல்லாமே மாறி போகும். உன்ன சுத்தி இருக்க எல்லாரும் அவங்க அவங்க வாழ்க்கை பயணத்தோட ஓடும் போது, நீ தனியாகிடுவ.
நானும் போன பிறகு இந்த வீடும்… தனிமையுமே உனக்குச் சிறையா தெரியும். வயசு நாப்பது ஆகும் போது நமக்குன்னு ஒரு ஜீவன் இருக்கலாமேன்னு மனசு ஏங்கித் தவிக்கும்… அப்போ நீ தனி தீவுல இருக்க மாதிரி நின்னுடுவ. அந்த கொடுமைய எல்லாம் நீ அனுபவிக்க வேண்டாம் யசோ மா.
உனக்குன்னு ஒரு துணை வேணும்மா. சந்தோஷமும் நிம்மதியும் நிறைஞ்ச வாழ்க்கைய வாழறது ஒண்ணும் பெரும் குத்தமில்ல மா.”
“யாழி இருக்கா ப்பா” எனக் கூறும் மகள் புரிந்து தான் பேசுகிறாளா என அரவிந்தன் பார்த்தார்.
“அவளுக்குன்னு ஒரு அம்மா வரவரைக்கும் உன்ன அம்மான்னு சுத்தி வருவா. ரெண்டு… ரெண்டரை கோடி மதிப்புள்ள கார டெய்லி யூசுக்கு ஓட்டுற கௌதமன் மகளுக்கு நீ என்னைக்குமே அம்மா ஆக முடியாது யசோமா. மிஞ்சி போனா இன்னும் ஒரு மாசம் இங்க இருப்பாங்க. பட ஷூட்டிங் முடிஞ்சதும் அப்பாவும் பொண்ணும் கிளம்பிடுவாங்க. அதுக்கு அப்பறம் உன்ன சுத்தி வரக் கௌதமன் பொண்ணு இங்க இருக்க மாட்டா.”
எச்சிலோடு உள்ளிறங்கிய உண்மை, தொண்டைக் குழியைத் தாண்டி நெஞ்சாங்கூடு வரை கசந்து வழிந்தது. அப்பா கூறும் நிதர்சனம் புத்திக்குப் புரிகிறது. ஆனால்… யாழி இல்லாது தன் நிலை? தனக்குச் சொந்தமில்லாத பிள்ளையின் மீது அன்பு வைத்தது தவறில்லை. ஆனால், அன்பு காட்டியதற்காகக் குழந்தையை தா என்றால் அவன் தருவானா? தலை வெடித்துவிடுவது போல் வின்வின் என வலித்தது. மகளின் முகம் மாற்றங்களைப் பார்த்து அமர்ந்திருந்த தகப்பனுக்கு மகளின் நிலை புரியாது இல்லை.
“அவனுக்கு இன்னும் இருபத்தி அஞ்சு கூட ஆகலமா… அவன அப்படியே எல்லாம் அவங்க வீட்டுல விட மாட்டாங்க. அவன் வசதிக்கு ஏத்த ஒரு பொண்ணு அவன் வாழ்க்கையில வருவா… அவ யாழிக்கு அம்மா ஆகிடுவா. கொஞ்ச வருஷத்துல அந்த குழந்தையோட நினைவுல நீ இருக்க மாட்ட.”
சரி தானே… நினைத்தவளுக்குக் கோபமும் இயலாமையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.
“நாலு வருஷம் ஆச்சு. காயத்த நக்கி நக்கி, அந்த வலி தர போதையில வாழறத நிறுத்திட்டு, ஆகற வேலைய பார்ப்போம். உனக்கான ஒரு வாழ்க்கை துணைய… உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு, உன்ன உனக்காக நேசிக்கிற ஒருத்தன, அப்பா உனக்கு பாக்கறேன். என் கண்ண மூடுறதுக்குள்ள உனக்குன்னு ஒரு குடும்பத்த அப்பா ஏற்படுத்தி கொடுக்காட்டா என் ஆத்துமா நிம்மதி இல்லாம இங்கயே சுத்திட்டு இருக்கும். அந்த கொடுமைய எனக்கு கொடுத்துடாத மா.”
அமைதியாகிப் போனாள் யசோ. சில வாரங்களாகவே இதே பேச்சென்றாலும், இன்று அப்பாவின் தொனியில் கெஞ்சலோ வேண்டுதலோ இல்லை. அவர் முடிவில் அவர் திண்ணமாக இருக்கிறார். மாப்பிள்ளை பார்த்துவிட்டாரா இல்லை இனி தான் பார்க்கப் போகிறாரா? சென்னைக்குச் சென்று வந்ததின் காரணம் இது தானோ? கண்களை மூடினாள். ஆக… அரிவாள் தயார்! மாலை போட்டு, மஞ்சள் தண்ணீரும் உற்றியாயிற்று. ஆடு தலை ஆட்டினால் அரிவாள் கழுத்தில் இறங்கிவிடும்.
“இதுக்கு மேலயும் கல்யாணம் வேண்டாம்… குடும்பம் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன். இப்போ படுக்க போறேன். எழுந்துக்கும் போது ‘கல்யாணம் பண்ணிக்கறேன்னு நீ சொல்லுவேன்னு நம்பறேன்.” என்றவர் அதற்கு மேல் எதுவும் இல்லை என்பது போல் படுத்துக் கொண்டார்.
அப்பாவின் அறையை விட்டு வெளி வந்தவளுக்கு உடல் மெலிதாக நடுங்கியது. அவ்வளவு தானா? தன்னோடு ஒரு குடும்ப வாழ்விற்காக ஏங்கித் தவித்தவன் நினைவோடே வாழ்ந்து முடித்துவிடலாம் என நினைத்தாளே. ‘ஏன் டா என்னைத் தனியா விட்டுட்டு போன?’ மனம் எப்பொழுதும் போல் இல்லாதவனோடு சண்டை பிடித்தது.
மேசை மீது உணவோடு அவள் வரவிற்காகக் காத்திருந்த உணவுத் தட்டை மூடி குளிர் சாதனப் பெட்டியில் எடுத்து வைத்தவள் மெத்தையில் விழுந்தாள். கனத்த இதயம் அழுது விடேன் எனக் கதறியது. நான்கு வருடங்களாக வர மறுக்கும் கண்ணீர் இன்றா வரப் போகிறது? இமைகள் மூடின. மூடிய விழிகளுக்குள் சிரித்து நிற்பவனை மறந்து, வேறொருவனோடு எப்படி வாழ முடியும்?
‘பேபி வா காத்தாடி விடுவோம்’ எனக் கைபிடித்து அவளோடு ஓடினான் ரகு. அவனோடு அவளும் ஓடினாள். அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். மகிழுந்தின் ஜன்னல் வழியே ‘பேபி… பேபி… என் பேபி வேணும்’ என அழுதான் குட்டி ரகு. ‘ந்…நநானூ… நானும் ப்ப்போணும்… லலலகு ல்ல்லகு’ எனக் குட்டி யசோ அப்பாவின் தோளில் திமிறினாள். ‘இதயம் துடிக்கும் வரை உன்னோடு’ என்றான் ரகு. அவன் மார்பில் தலை சாய்த்தாள் யசோ. “லகு” என்ற முணுமுணுப்போடே விழிப்பும் தூக்கமுமாக மெத்தையில் மதியப் பொழுது கழிந்தது யசோவிற்கு.
“அம்மா… தூங்குனா?” என்ற கேள்வியும், “தூணட்டும்” என்ற மழலையின் சோக கீதமும் எங்கோ தூரத்தில் கேட்டது. பசை போட்டு ஒட்டிக் கொண்ட இமைகள் பிரிய மறுத்தன. உள்ளுக்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வெளியே பேசும் ஒலியும் கேட்கிறது. குழந்தைகளில் பேச்சும் சிரிப்பும் காதை தொட்டு தொட்டு செல்கிறது. ஆனால் இமை திறக்க மறுக்கிறது. யசோ மீண்டும் உறக்கமும் விழிப்புமான நிலைக்குள் நுழைந்தாள்.
‘நிம்மதி இல்லாம என் ஆத்துமாவ அலைய விடாத யசோ’ என்றார் அப்பா. ‘அவன போக விடு’ என்றார் அம்மா. ரகு அவளைப் பாவமாகப் பார்த்தான். ‘போகாத ரகு’ என்றாள் பாவாடை சட்டையில் இருந்த யசோ. ‘ஃப்ரென்சோட கடைசியா ஒரு டிரிப் போய்ட்டு வரேன்.’ எனக் கன்னம் தட்டி இரயில் ஏறினான் ரகு. இரயில் கிளம்பியது. ‘காத்திருக்காத வர மாட்டேன்’ என்றான் ரகு. அவன் இரயில் தண்டவாளத்தில் போகாது வானை நோக்கிப் பறந்தது. ‘லகு…’ எனக் கத்த முயன்றாள். ஆனால் வாய் பசை போட்டு ஒட்டிக் கொண்டது. ‘நானும் லகு’ என பின்னோடு ஓட எத்தனித்தவளின் கையை ஒரு பிஞ்சு கரம் பிடித்திருந்தது. என்ன முயன்றும் அவளால் அந்தக் குட்டி கரத்தை உதற முடியவில்லை. ‘நானுக்கு அம்மா நேணும்’ என்றது அப்பாவின் கரத்தில் இருந்த முகம் தெரியாதா மழலை.
