47 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,643
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 47
.
“வர வர நீ கொஞ்சம் ஓவரா போர ரகு. இப்படியே சிடுசிடுன்னு இருந்த நேர்ல வந்து உன் வாயில நாலு வைப்பேன் பார்த்துக்கோ” எனக் கூறிய தாராவிற்குக் கோபம் இருந்தாலும், அவள் தொனியின் இல்லை. ஆனால் கேட்டுக் கொண்டிருந்த ரகுவிற்கு சுள்ளெனக் கோபம் வந்தது.
Advertisement
“என் கை என்ன பூ பறிக்கப் போயிருக்குமா என்ன? போடி” என இவன் பங்கிற்கு நெருப்பில் டீசலை ஊற்றிவிட்டிருக்க, அவளால் அதற்கு மேல் கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை.
“நிச்சயம் ஆகி ரெண்டு வாரம் முழுசா முடியல, அதுக்குள்ள மூணு தரம் என் மேல எரிஞ்சு விழுந்துட்ட. போடா, இனி நானா உன்ட்ட பேசினா கேளு” எனக் கைப்பேசியை வைத்துவிட்டாள். நாள்கள் இரண்டு கடந்துவிட்டன, இவனும் அழைக்கவில்லை அவளும் அழைக்கவில்லை. அவள் விளையாட்டாகத் தானே ஆரம்பித்தாள்… ஏன் ரகு அவ்வளவு கோபம் கொண்டான்? அவனுக்கே அது புதிர் தான்.
இப்பொழுதெல்லாம் கோபம், சோகம், மகிழ்ச்சி எனச் சட்டென அவன் மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது. எதுவும் அவன் வசம் இல்லை.
Advertisement
“புள்ளத்தாச்சி மாதிரி நீயும் உன் மூட் ஸ்விங்கும்!” என உடன் வேலை செய்யும் தோழி அலுத்துக் கொண்டாள். “போ வீர்… போய் ஹார்மோன் செக் பண்ணு. ஏதாவது ஹார்மோன் பிராப்ளமா இருக்கும்” என இலவச அறிவுரை கொடுத்தாள்.
Advertisement
இனி இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது என முடிவு செய்து கொண்டவனுக்குக் காலையிலிருந்து அவள் சத்தம் கேட்க மனம் துடியாய் துடிக்க, ‘யசோ பேபி… பேசுடி’ என வேண்டிக் கொண்டே பல முறை அழைத்தான்.
அவள் அழைப்பை எடுப்பதாக இல்லை என்றதும் சந்திரிகாவிற்கு அழைத்தான். அழைப்பை எடுத்தவரிடம் பொதுவான விஷயங்கள் பேசியாயிற்று. ஆனால் ஏனோ அவரிடம் தாராவைப் பற்றிக் கேட்கத் தோன்றவில்லை.
அவன் கைப்பேசியை அணைக்காது காத்திருக்க, “என்ன டா பிரச்சன உங்க ரெண்டு பேருக்கும்? சும்மா சும்மா கிண்டர்கார்டன் பசங்க மாதிரி சண்டை போட்டுகிட்டு?” எனக் காய்ந்தார்.
Advertisement
“சாரி கேக்கலாம்ன்னு போன் போட்டா அவ எடுக்க மாட்டேன்றா மா” எனச் சோக கீதம் வாசித்தான்.
“பேஸ்கெட் பால் காம்படிஷனுக்காக பாண்டிச்சேரி போயிருக்கா… டையர்டா தூங்கி இருப்பா. ஃபிரியானதும் அவளே கால் போடுவா” என அவன் புண்ணான மனதிற்கு மருந்திட்டார்.
“வீட்டுக்கு வந்துட்டேன் மா…லிப்ட்ல கால் கட் ஆகிடும். வைக்கவா?” எனக் கேட்டு, கைப்பேசியை அணைத்து வைத்தவனுக்கு வீட்டினுள் நுழைய விருப்பமே இல்லை. தனிமை அவனை வரவேற்கத் தயாராகக் காத்திருக்கும்.
நீண்ட பெருமூச்சோடே உள்ளே நுழைந்தவன் முகம் கழுவி தேநீரோடு மேல்மாடம் பக்கம் சென்றான். மனம் ‘பேபி’ என அவளையே உருபோட்டுக் கொண்டிருக்க, அவன் நாசியில் பன்னீர் மலரின் வாசம்.
அவன் திரும்பும் முன், “லகு” எனப் பின்னோடு அணைத்தாள் அவன் பேபி.
“பேபி?” என்றவனை முகம் கொள்ளா புன்னகையும் ஆச்சரியமும் ஒன்று சேர்ந்து தாக்கின.
“இப்போ தான வீட்டுல பேசினேன். நீ பாண்டி போகலியா?”
“அங்க இருந்து நான் எஸ்கேப் ஆகி இங்க வந்துட்டேன்” எனச் சிரித்தாள்.
“ஓ” என்றவன் குழம்பினாலும், அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் குழப்பம் பின் சென்றது.
“ஏன் ஒரு மாதிரி இருக்க லகு?”
“தலய வலிக்குது”
“ஏன்?”
“எல்லாம் உன்னால தான் டி. மனுஷன நிம்மதியா வேல பாக்க விடுறியா?”
“மாத்திர ஏதாவது போடறியா?”
“ஊர்ல பார்த்தோமே… இன்பா டாக்டர் கொடுத்த மாத்திர கேக்குது. அத போட்டுட்டு, ஒரு சேன்ட்விச் சாப்பிட்ட பின்ன தான் ட்டீ போட்டேன். உனக்கு காபி போடவா?”
“எல்லாம் வழியில முடிச்சுட்டேன்” என்றவள் அவன் அணைப்பிலிருந்து விலக மனமில்லாது நின்றிருந்தாள். வார்த்தைக்கு வார்த்தை “பேபி” எனக் கொஞ்சினான். மடி சாய்ந்து தலை கோதக் கொடுத்து சுகம் கண்டான்.
“நிஜமா? உனக்கு இந்த வேலை… உன் லைப் ஸ்டைல் ரொம்ப பிடிக்சிருக்கனால, மனசு மாறி… அங்க வர ஒத்துக்க மாட்டன்னு நினைச்சேன்”
“பிடிக்குது தான். இந்த பிஸி லைஃப்… எறும்பு மாதிரி சுறுசுறுப்பான கலீக்ஸ். மூளை துருப்பிடிக்காம இருக்க நிறைய யோசிக்க வைக்கிற இந்த வேலை. நினைச்சதும் பசங்களோட சுத்தற ஃபிரிடம். எல்லாமே ரொம்பவே பிடிச்சிருக்கு. ஆனா அத விட அதிகமா எனக்கு உங்கள எல்லாம் பிடிக்குமே. தனியாவே வாழ்ந்தாச்சு பேபி… போதும் தனிமை. எனக்கே எனக்குன்னு நீ, அம்மா அப்பா ஸ்தானத்துல அம்மாவும் ஐயாவும், தாத்தா பாட்டி… அப்புறம் லட்டு மாதிரி நாலு குழந்தைங்க… போதும் டி… அப்படி ஒரு நிம்மதியான, அமைதியான ஒரு வாழ்க்கை” என்றான் கண்களில் ஆயிரம் கனவுகளோடு.
நேரம் சென்றது, பால்கனி முத்தங்கள் எப்பொழுது கட்டில் வரை சென்றது? அவனுக்குத் தெரியவில்லை. முத்தங்கள்… சின்ன அத்துமீறல்களாக மாறியது. அவள் தீண்டாதே எனச் சிணுங்கவும், தீண்டாமை பாவச் செயல் என்ற வார்த்தைகள் இனிதே உதிர்க்பட்டது.
இதற்கு மேல் தனிமையின் துயரைத் தூக்கிச் சுமக்க வேண்டாம் என நினைத்தான் போலும். அவன் இசைத்தான். அவள் இசைந்தாள். ரகு தளர்ந்தான். அந்தக் குளிரிலும் ரகுவின் மேனி வியர்த்து வழிந்தது. இருந்தும் விலகாது அந்த இரவை “பேபி” என அனத்தலோடு அவள் மார்பில் கழித்தான்.
பாண்டிச்சேரியில்:
இரவு உணவை முடித்து பாண்டி கடல் கரையைக் கூடைப்பந்து போட்டிக்கு வந்திருந்த பெண்கள் முற்றுகை இட்டனர்.
“ரெண்டு நாள் இருந்து ஊரச் சுத்தி பார்த்துட்டு போலாம்ன்னா… இந்த கோச் இருக்காரே…” என ஒருத்தி அலுத்துக் கொண்டாள்.
“இது என்ன இன்னும் இங்க இவ்வளவு கூட்டம்?” என ஆளாளுக்கு ஏதோ பேசிக் கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.
“உன்னால அவன் இல்லாம இருக்க முடியாதுன்னா ஏன் டி பிரேக் அப் பண்ணின?” கேட்டவளிடம், “கல்யாண பேச்சு போயிட்டு இருக்கு, அவன் வேற ஒருத்தி கூட சுத்திட்டு இருக்கான். அவன பிடிச்சு வச்சு என் வாழ்க்கைய நானே நரகம் ஆக்கிக்கவா? எப்படி ஏமாந்து போனேனேன்னு கொஞ்ச வருத்தம்… விடு அத” என்றாள் மற்றவள்.
இதை அனைத்தையும் தோழிகள் கேட்டுக் கொண்டே ஓர் இடத்தில் அமர்ந்தனர். இருள் மெல்ல இடத்தை ஆக்கிரமிக்க நினைக்க, அங்கிருந்த வெளிச்சம் அதற்குத் தடை விதித்தது.
கூட்டம் கூடிக் கொண்டே போனது. கூட்டமாக ஐந்தாறு பேர் கொண்ட இளவட்டம் ஆர்ப்பாட்டமாக அந்த இடத்தை ஆக்கிரமித்தது. ஆண்கள் பெண்கள் என இளம் வயதின் உற்சாகத்தில் கத்திக் கொண்டிருந்தனர்.
“ஏய் சுபி, நிச்சயம் முடிச்ச கையோட கல்யாணம்ன்னு சொன்ன… என்ன டி, இன்னும் பத்திரிக்கை வைக்கல?”
“கல்யாணத்த கூர்க்ல வச்சுக்கலாம்ன்னு பிளான் போட்டா போதுமா? அதுக்கு எல்லாம் சரியா அமைய வேண்டாமா? அக்டோபர் கடைசில டேட் ஃபிக்ஸ் பண்ணி இருக்கு. அதுக்கு தான் நாள் இருக்கே… பொறுமையா வந்து பத்திரிகை வைக்கிறேன். சாக்குப்போக்கு சொல்லாம வந்து சேருங்க”
“யசோக்கு நவம்பர் ஃபர்ஸ்ட் வீக்ல கல்யாணம் டி… அப்போ அவ வர முடியாதே… ஏய் யசோ, உனக்கும் அவளுக்கும் ஒரு வாரம் கேப்ல கல்யாணம் வருதே, நீ வருவியா?” எனக் கவனத்தை எங்கோ பதித்து அமர்ந்திருந்தவளை உலுக்கினாள் தோழி.
அமர்ந்திருந்த தாராவிற்கு எதிலும் கவனம் பதியவில்லை. பேசும் போதெல்லாம் சண்டையில் முடிகிறது பேச்சு. இம்முறை இவளும் கத்திவிட்டாள். ஏன் அவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறது?
‘படிப்பு முடிஞ்சதும் பொண்ணு பாக்க நீ வரணும்’ என்றாள். அவன் வந்தான். ‘மே மிட்ல நிச்சயம் வர மாதிரி பாருடா’ என்றாள். அதன்படியே செய்து முடித்தான். இது வேண்டும்… இப்படி வேண்டும் என அவனைப் பாடாய்ப் படுத்திய போதெல்லாம், மண்டையை ஆட்டியவனுக்கு இப்போது என்னவானது?
“ரெண்டு வாரத்துல நான் சலிச்சுட்டேன் இல்ல?” இப்படிக் கேட்டு அதற்கும் வாங்கி கட்டிக் கொண்டது தான் மிச்சம். ‘லூசுக்கு மூளையில கோளார்’ எனத் தனக்குள் முணுமுணுத்தாள்.
“அங்க பாரேன் டி அவங்கள…” என வாய் பொத்திச் சிரித்தவள் யசோவின் கவனத்தை மீட்டாள்.
நெடு நெடு உயரம், பரந்த முதுகு, இறுக்கிப் பிடித்த டீஷர்ட், பின்னுக்குத் தள்ளி முடியை ஹேர் பேண்டுக்குள் அடக்கும் அளவிற்கு நீள கேசம் என நின்றிருந்தவன் முதுகு இவளுக்கு நன்கு பரிச்சயமாக இருந்தது.
‘ரகு?’ வாய் தன்போல் முணுமுணுத்தது. அவன் தோளில் பல்லி போல் தொங்கிக் கொண்டு இருப்பவளைத் தெரியவில்லை. இதயம் தடதடக்க ஆரம்பித்தது. இதற்குத் தான் சண்டைகளா? இருக்காது என்றது மனதும் புத்தியும். ஆனால் அந்த உருவம்? கண்ணீர் பார்வையை மறைக்க ஆரம்பித்த பின்னும், பார்த்தவள் பார்த்தே அமர்ந்திருந்தாள்.
கட்டுப்பாடு என்ற ஒன்றைப் பார்த்திராத அந்த இருவரும் யசோவின் இதயத் துடிப்பையும் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அலைகள் கடலில் மட்டும் தான் எழுமா? இல்லை, காதலனை வேறு ஒருத்தியோடு… அதுவும் அவன் அணைப்பில், தன் குதிகாலில் நின்று கொண்டு அவன் கேசத்திற்குள் விரல் விட்டு தன்னை மறந்து நின்றிருக்கும் ஒருத்தியோடு பார்த்தாலும் அலைகள் உள்ளுக்குள் எழும்.
ஏனோ அதற்கு மேல் அவளால் அங்கு அமர்ந்திருக்க முடியாது அவனை நோக்கி நடந்தாள். “தாக்ஷா, ரூம் போலாமா?” என்ற கிசுகிசுப்பான சத்தம் அலையின் இசையோடு ரகசியம் போல் அவளைச் சீண்டியது.
கண்களை இறுக மூடி திறந்தாள். மனதை ஒருமுக படுத்தினாள். தன் ரகுவால் வேறு ஒருத்தியை நினைக்க முடியாது. இதில் வேறு ஏதோ இருக்கிறது என மனம் கூறியது.
ஆம்… கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிக்க வேண்டும் என எண்ணி அவன் அருகில் சென்ற வேளை அவளின் கைப்பேசி அழைத்தது. அம்மாவின் அழைப்பை ஏற்கவில்லை.
தன்னையே மறந்து அந்த ஒல்லிக் குச்சி உடம்புக்காரியை அணைத்திருப்பவன் மீதிருந்த கண்களை எடுக்காது அவனுக்கு அழைத்தாள். கைப்பேசி ஒலித்தது… ஆனால் என்ன விந்தையோ இவன் கைப்பேசி பேண்ட் பாக்கெட்டில் அரவமில்லாது தூங்கிக் கொண்டிருந்தது.
தூக்கக் கலக்கத்தோடே “ஹலோ” என்ற ரகுவின் சத்தம் கரகரக்க… அவன் கண்களைக் கசக்கி திரையைப் பார்த்தான். அவனுக்கு மட்டுமா அதிர்ச்சி… இவளும் கண்களைக் கசக்கி திரையைப் பார்த்தாள்.
“பேபி?” என்றவன் திரையைப் பார்த்தபின் கட்டிலைப் பார்த்தான். அவன் பேபி கட்டிலில் இல்லை.
கைப்பேசியில் இருந்தவனையும் எதிரில் தெரிந்த முதுகையும் மாறி மாறி பார்த்தவள், “ரகு?” என்றாள் திணறலாய்.
“எங்க இருக்க பேபி?” என்றான் குழப்பம் குறையாது.
“பாண்டிச்சேரில லகு” என்றவளுக்குள் வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு நிம்மதி.
“இப்போ தான என் கூட… நீ…” என்றவன் மீண்டுமாக மெத்தையைப் பார்த்தான். பால்கனி சென்று பார்த்தான்.
“என்ன லகு? என்ன தேடுற?”
மெத்தையில் வந்து அமர்ந்தவன் முன் அவன் ‘யசோ பேபி’ நின்றிருந்தாள். ரகுவிற்கு இதயம் தடதடத்தது. கைப்பேசியிலும் அவள் இருந்தாள். பக்கத்தில் அவன் அதுவரை பார்த்திராத யார் யாரோ இருந்தனர்.
“என்ன லகு இந்த முழி முழிக்கிற?” என்றவளை, “யசோ… வா பா போகலாம்” என்றாள் அவள் தோழி.
“சரி… பை… அப்பறம் கால் போடறேன்” எனப் பறக்கும் முத்தங்களோடு கைப்பேசி அணைக்கப்பட்டது.
“என்ன ரகு?” என அவன் முன் இருப்பவளைப் பார்த்தவனுக்கு வியர்வை வழிந்தது. “எங்க போன பேபி?” என இவன் கேட்க, “இங்க தான் இருந்தேன்” என்றாள் தோள் குலுக்கி.
கைப்பேசியை ஆராய்ந்தான். யசோதராவோடு பேசியது நிஜம் என்றது அதில் இருந்த விவரங்கள். ரகுவிற்கு உள்ளுக்குள் உதறியது. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் அருகில் அமர்ந்தாள் யசோதரா.
‘தாரா பேஸ்கெட் பால் காம்படிஷனுக்காக பாண்டிச்சேரி போயிருக்கா’ என்றார் சந்திரிகா. ‘பாண்டிச்சேரில இருக்கேன் லகு’ என்றாள் அவன் பேபி. அருகில் பார்த்தான் ஒருவரும் இல்ல.
பார்ப்பது பிரம்மை என்றால்… தான் உணர்ந்தது? நுகர்ந்தது? ரகு குழம்பித் தவித்தான். ஏதோ சரி இல்லை எனத் தெரிகிறது. ஆனால் என்ன? ‘ஏன் ஹலூசினேட் பண்ற ரகு?’ எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
மாயத் தோற்றம் ஏற்படக் காரணம்? ஒழுங்காக நீர் அருந்தவில்லையா? கையில் இருக்கும் தோலை இழுத்துப் பார்த்தான். நீர் குறைபாடு இல்லை என்றது ஆரோக்கியமான சருமம்.
சில வாரங்களாகவே அவனுக்குள் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் அவன் கண்முன் வரிசையா வந்து போனது. ரகுவின் இதயம் பயத்தில் நடுங்கியது. அறிவாளியின் மூளை விழித்துக் கொண்டது.
அவனை இடித்து கொண்டு அமர்ந்திருந்தவளை அவனால் உணரமுடிந்தது நிஜம். அவள் வாசம் அவன் நாசியை தீண்டியது. மூளையில் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது… அதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது என மனம் ஓலம் எழுப்பியது. உள்ளுக்குள் எழுந்த சந்தேகத்தோடு மடிக்கணினியின் முன் அமர்ந்தான் ரகு. தெரிகிறது தனக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது. மனம் பதறியது. கை நடுங்கியது.
பசியின்மை, வாந்தி, தலை வலி, மறதி, மூட் ஸ்விங், ஹலூசினேஷன் எனத் தனக்குள் நடக்கும் மாற்றம் எதைக் குறிக்கிறது என இவன் வலைத்தளத்தைக் கேட்க, அது கூறிய பதில் ஒன்றும் உவப்பாக இல்லை. பயம் கூடியது. வியர்வை பெருகியது. சுள்ளென கழுத்து இழுத்துப் பிடித்தது. தலை வலித்தது.
“ஏன் ரகு தலய பிடிச்சுட்டு உக்காந்து இருக்க?” அவன் கற்பனையில் உதித்த யசோ கேள்வி கேட்டாள்.
அவளையே பார்த்திருந்தவன் கண்கள் சிவப்பேறி… கண்ணீரை உதிரித்தன. இவள் சண்டையிடவில்லை. அவன் நினைத்ததை அவள் செய்தாள். அமைதியாக அவன் தலையை வருடி விட்டுக்கொண்டிருந்தாள்.
“மெடிசின் வளர்ந்திருக்கு ரகு. கம்யூட்டர் சொல்ற நோய் எல்லாம் இருக்கணும்ன்னு இல்ல. டாக்டர பாப்போம். உனக்கு ஒண்ணும் இல்ல ரகு” என இவன் மனம் அவனுக்குக் கூறுவதை அவள் வாயிலாகக் கேட்டான்.
அவன் பேபியை எச்சில் விழுங்கப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குடித்த தேநீரும், உண்ட ரொட்டியும் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வெளியே வந்தன.
அடுத்து வந்த தினங்கள் அவனோடே ஒட்டிக் கொண்டு சுற்றவது இரத்தமும் சதையும் இல்லாத யசோதரா எனத் தெரிந்தும் அவள் மடியில் கழித்தான். மார்பில் புதைந்தான். துக்கம் தொண்டையை அடைத்தது. கைப்பேசி அதன் உயிரை விட்டிருக்க, உலகோடு அவன் தொடர்பும் அறுந்திருந்தது.
அழைப்பு மணி அவன் செவிப்பறையைக் கிழித்தது. “போய் யாருன்னு பாரு ரகு” என்றவளையும், “சும்மா இரு பேபி… ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு கிளம்பிடுவாங்க” என அடக்கினான்.
ஆனால் வந்து நின்றவருக்கு இவனைப் பார்க்காது செல்லும் நோக்கம் இல்லை போலும்… அழைப்பு மணி மீண்டும் மீண்டும் ஒலித்தது.
எழுந்து வந்து கதவைத் திறந்தவனைப் பார்த்த அரவிந்தன் அதிர்ந்து போனார். ஏதோ நோய்வாய் பட்டவன் போல் அவர் முன் நிற்பவனைப் பார்த்து அதிர்வதா? இல்லை, தன்னை ஒரு மனிதாகக் கூட மதிக்காது, சலிப்போடு, “அடுத்து நீங்களா?” எனக் கேட்டுச் சென்ற தோரணையைப் பார்த்து அதிர்வதா? இரண்டிற்கும் சேர்த்தே அதிர்ந்தார் அரவிந்தன்.
‘இன்னும் எத்தனை பேரை இப்படிக் கற்பனை செய்யப் போகிறேன் நான்?’ என நினைத்தவன் வீட்டினுள் செல்ல, அரவிந்தனுக்கு அவன் செயல் புரியவில்லை. தன்னிடம் இப்படி நடப்பவன் இல்லையே என நினைத்துக் கொண்டே அவனோடு நடந்தார்.
எப்பொழுதும் போல் வீடு பளிச்சென்று இல்லை. ஏதோ சரி இல்லை என் தெரிகிறது. என்ன ஆனது இவனுக்கு?
“ரகு… என்ன ஆச்சு உனக்கு?” என்றவரை திரும்பிப் பார்த்தவன், நீண்ட பெருமூச்சோடே நீளவிருக்கையில் தொப்பென அமர்ந்தான்.
“அப்பா வந்திருக்காரா ரகு?” என அவள் சிரித்தாள். “சும்மா இரு” என அவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்தவளிடம் கூறினான்.
“யார்ட்ட பேசற ரகு?” எனக் கேட்டவருக்கு மனம் பதறியது. “ரகு? ஏன் இப்படி இருக்க? ஃபோன் எங்க? நாலு நாளா ஒருத்தர்ட்டயும் பேசல… ஆப்பீசுக்கும் போகல… என்ன ஆச்சோன்னோ பதறிட்டு வந்தா… நான் எதிர்லயே இல்லாத மாதிரி நீ பாட்டுக்கு தனியா பேசிட்டு இருக்க? என்ன வருத்தம் உனக்கு?” என அமர்ந்திருந்தவன் கேசத்தைத் திருத்தினார்.
சட்டென தலையை உயர்த்தினான். அவர் அவனை ‘என்னடா’ என பார்த்து நின்றிருந்தார்.
“ஐயா” எனத் தேய்ந்த குரலில் அழைத்தவன், அவசர அவசரமாகக் கழிவறைக்குள் நுழைந்தான். முகம் கழுவி, தன்னை சரி செய்தவன் அடுக்களைக்குள் சென்றான். வெளிவந்தவன் காதுகளில், “ரகுவ பார்த்துட்டேன், உடம்பு சரி இல்ல போல… டாக்டர போய் பார்த்துட்டு கூப்பிடுறேன்” எனக் கேட்டது.
“காபி” எனக் காபியை நீட்டினான்.
“சொல்லு என்ன பிரச்சன?” என கேட்டுக் கொண்டே காபியை அவர் அருந்த, அவர் குடித்து முடிக்கும் வரை அவன் வாயைத் திறக்கவில்லை.
“என்ன டா ரகு?” என்றவரின் குரலில் தாய்மை வழிந்தோடியது. “ஐயா” என அழைத்தவன் அவர் கையை அவன் கண்களில் வைத்து அழுத்தினான். அப்படியே அவர் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.
அமர்ந்திருந்தவருக்கு உள்ளுக்குள் பதறியது. மகனை ஏதோ வாட்டுகிறது. என்ன? அவர் பதட்டத்தைக் காட்டாது அமர்ந்திருக்கவே பெரும் பாடாய் போனது. அவர் கரத்தை கேசத்தின் மீது அவன் வைக்க, கேசத்தைக் கோதிவிட ஆரம்பித்தார்.
சற்று நேரம் கண் மூடி படுத்திருந்தவன், “என் கால்மாட்டுல பேபி உக்காந்து இருக்கா… உங்களுக்கு தெரியுதா?” என்ற கேள்வியில் மனிதன் ஆடிப் போனார்.
அடுத்த ஒரு வாரமும் இந்த மருத்துவர் அந்த மருத்துவர், இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட், இந்த ஸ்கேன், அந்த ஸ்கேன் என மாமன், மருமகனின் நேரம் அதிலேயே சென்றது. கடைசியாக உதட்டைப் பிதுக்கி ஒன்று போல் அனைத்து மருத்துவர்களும், அலுங்காது குலுங்காது “பிரெயின் டியூமர்” என்ற இடியை இறக்கினர்.