Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

48.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 48.2

.

எதுவும் யோசிக்கவோ, செய்யவோ மனம் இல்லாதவனாய் படிகளில் அமர்ந்தவன் பிள்ளைகள் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். கைப்பேசி சிணுங்கி அவன் மோன நிலையைக் கலைத்தது. அம்மா என்றதும் அழைப்பை எடுத்தான். பேத்தியின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டே மகனோடு பேசினார்.

“என்ன டா, விக்ரம் ரெட் கலர்ல பட்டு பொடவ கொடுத்துட்டு அதுல உன் பொண்ணுக்கு பாவாட சட்ட தைக்க சொல்லிட்டு போயிருக்கான்?”



Advertisement

“அவளும் அவ பிக்கியும் ரெட்ல தான் டிரெஸ் பண்ணனுமாம்… மேடம் சொன்னங்கன்னு அவன் வாங்கி கொடுத்திருப்பான்”

“மூணு வயசுக் குழந்தைக்கு எவ்வளவு துணி தேவைப்படும்? அதுக்கு எதுக்கு…” எனக் கேட்டு முடிக்கும் முன், “முடியும்னா தைங்க. இல்ல இங்க அனுப்பி விடுங்க, நான் பாத்துக்கிறேன்” என்றான் பட்டென.

சட்டென எதற்குமே கோபப்படாத கௌதமனா இது? அதுவும் அவன் அன்னையிடம்? நெற்றியை அழுந்த தேய்த்தவன், “நாளைக்கு ஈவ்னிங் ஏழுக்குள்ள கிளம்ப முடிஞ்சா கிளம்பறேன். இல்ல நெக்ஸ்ட் டே விடிய காலையில கிளம்பி வருவோம். சண்டே ஃபங்க்ஷன்.” என்றான்.

Advertisement

வைஷாலியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாது போக, “என்ன மா? கேட்டுச்சா?” என்றவனிடம், “ரொம்ப மாறிட்ட கௌதமா. நாலு வருஷம் முன்ன என்னையே சுத்தி வந்த மகன் நீ இல்ல. சீரியசா பேசக் கூட தெரியாத என் கௌதமன் நீ இல்ல. கொஞ்சலும் சிரிச்ச முகமுமா சுத்திட்டு இருந்த என் மகனோட குணம் எங்க போச்சு?” எனக் கேட்டவர் குரல் உணர்ச்சியற்று ஒலித்தது.

Advertisement

“ஆமா மா. தண்ணி, பொண்ணு, பொழுதுபோக்குன்னு அப்பா பணத்துல உல்லாசமா சுத்திட்டு இருந்த உங்க மகன் இல்ல. மூணு வயசு குழந்தைக்கு அப்பா நான். எனக்குன்னு கடமை இருக்கு. இன்னும் அப்படியே பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்க முடியாதே.” என்றான் நிதானமாக.

அவனுக்கும் தெரிகிறது தன் மாற்றம். ஏன் மாறினான்? எப்படி மாறினான்? தெரியவில்லை. ஆனால் இந்த புதுப் பரிமாணம் பிடித்திருக்கிறது.

“சரி பத்திரமா வந்து சேரு” என வைத்துவிட்டார் வைஷாலி. அடுத்த நிமிடமே அனைத்தையும் ஒதுக்கியவன், அமைதியாக அமர்ந்துவிட்டான். எதையுமே யோசிக்காது அமைதியாக அமர்ந்திருக்கும் இந்த மோன நிலை அவனுக்குப் புதிது. உடலிலும் மனதிலும் இருக்கும் அழுத்தம் எங்குச் செல்லும் எனத் தெரியாது. உலகமே அமைதியாகத் தோன்றும்.

Advertisement

“அப்பா, சல்வேஷ பிக்கி மாமாட்ட கூட்டு போலாம்” என சர்வேஷை இழுத்துக் கொண்டு வந்தாள் மகள்.

“என்ன சர்வேஷ் நீயும் வரியா? உங்க அம்மா அப்பா இல்லாம நைட் இருந்துடுவியா?” எனக் கேட்ட கௌதமனை யோசனையோடு பார்த்தான் சிறுவன்.

‘அம்மா அப்பா இல்லாமல் எப்படி?’ என இவன் யோசிப்பதைப் பார்த்த யாழி,

“சல்வேஷ் எங்க பிக்கி மாமா ஐஷ் கீம் வாங்கி தலுவாங்க. நலைய சாக்கி தலுவாங்க. நானுக்கு எல்லா வாங்கி தலுவாங்க. உனக்கு தலேன் சலியா? சல்வேஷ் வா… பீஷ்” பிக்கி மாமாவின் பெருமைகளைக் கூறி, எப்படியாவது தன் தோழனையும் தன்னோடு அழைத்துச் செல்ல யாழி முழு முயற்சியில் இறங்கியிருக்க, மகளின் கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்து அமர்ந்திருந்த கௌதமன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. 

“ஓக்கே வலேன். குட்டி பாப்பாவ கூட்டிட்டு போலாம் சலியா?” என அவன் கேட்க, “பாப்பா, அம்மா சொல்லி அலுவும். வேணா” என்றாள்.

“ஆமா… அலுவுமே. சரி வேணா” என்றான் அவன்.

காற்றுக்கு மலர்க் கூட்டம் அசைந்தாடுவது போல் இருந்தது, இவள் பேச அவன் தலை ஆட்டிக் கொண்டிருந்தது. 

யசோ அழைத்தாள். கைப்பேசியைப் பார்த்தவன் பார்வை அவள் வீட்டின் பக்கம் சென்றது. நூறடி தூரம் என்றாலும் இங்கு அவள் வந்ததே இல்லை. ஏனாம்?

“என்ன யசோ?” என்றான் அழைப்பை ஏற்றவன்.

“நைட் பதினொன்னே முக்கால் பஸ்சுல கொச்சி போறேன்” என்றவள் நிறுத்த, “தனியாவா?” எனக் கேட்டான்.

“ம்ம்… ரெண்டு நாள்ல வந்திடுவேன். மலரும் இல்ல. யாழிய அப்பா பார்த்துப்பாங்கனாலும் நீங்களும் கொஞ்சம் நேரத்துக்கு வந்தா நல்லா இருக்கும்…” என்றாள் தயங்கிய குரலில்.

சிரித்தான். “என்ன சிரிப்பு?” என்றாள் சலிப்பு நிறைந்த குரலில்.

“யாழி என்னோட மக, யசோ. என் பொண்ண என்னை பார்த்துக்க சொல்ற பாரேன். அதுல தயக்கம் வேற! அப்பறம், நாளைக்கு ஈவ்னிங் சென்னைக்கு போறேன், வர ரெண்டு நாள் ஆகும்” என்றான்.

பின்னால் யசோவை கோபாலன் அழைக்கும் சத்தம் கேட்டது. “வைக்கிறேன்” என்றவள் அழைப்பைத் துண்டிக்கும் வேளை, ‘நைட்டு பஸ் ஏத்திவிட நரேன்…’ என்ற பேச்சு காதில் விழுந்தது.

யசோவை போல் கௌதமனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதால் அரவிந்தன் வீட்டிற்குச் சென்றான். தானே யசோவை பேருந்து நிலையம் அழைத்துச் செல்வதாக உரைத்தான்.

“குழந்தை தூங்குற நேரம் பா. வேண்டாம். நரேன் பார்த்துப்பான்” என்றவரை அவன் உரிமையான முறைப்பால் அடக்கினான்.

அவன் கூறியது போலவே தூங்கிய மகளைக் குழந்தையின் இருக்கையில் அமர்த்தி, யசோவோடு பேருந்து நிலையம் அடைந்தான் கௌதமன்.

பேருந்து கிளம்ப நேரம் இருந்ததால் காரைவிட்டு கௌதமன் இறங்கவில்லை. யசோ, தண்ணீரிலிருந்து பிஸ்கெட் பாக்கெட் வரை வைத்திருக்க, வழிக்கான நொறுக்குத் தீனி எதுவும் வாங்கும் அவசியமும் இருக்கவில்லை.

இருவரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். அந்த அமைதி கௌதமனுக்கு பிடிக்கவில்லை. மகள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஏசி ஓடிக் கொண்டிருக்க, காரின் கண்ணாடி இரண்டினை இறக்கி விட்டவன், கதவில் சாய்ந்து நின்று கொண்டான்.

தனக்குள்ளாக என்ன நிகழ்கிறது? இவளிடம் என்ன எதிர்ப்பார்க்கிறான்? முன்பைவிட இப்பொழுதெல்லாம் அதிகம் கனவு காண்கிறான். அதில் யசோ வருகிறாள். அவனோடு ஒட்டி உறவாடுகிறாள். அவள் நினைவுகளால் இதயம் தளும்பி நிற்கிறது. ஆனால் அனைத்தும் மூடியிருக்கும் இமைகளுக்குள் மட்டும் தான். விழித்தால், அவள் இரண்டடி தள்ளி நிற்கிறாள்.

கௌதமனால் கனவில் வரும் யட்சனியை, நேரில் பார்க்கும் ராட்சசியிடம் இருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. இந்த உணர்வுகள் எல்லாம் தனக்கு மட்டும் தானா? அவள் மனதில் என்ன இருக்கிறது? கௌதமனின் மனம், சில நாள்களாகவே கேட்கும் அதே கேள்விகளை அலுக்காது கேட்க ஆரம்பித்தது. அவன் உணர்வுகளை அவளும் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறதா மனம்?

இரண்டு நிமிடம் காரின் உள்ளே அமர்ந்திருந்தவள், பெருமூச்சோடு அவன் அருகில் வந்து அவனைப் போலவே காரில் சாய்ந்து நின்றாள். இருவரின் பார்வையும் நொடி நேரம் சந்திக்க, எதுவும் பேசும் மனநிலையில் இல்லாதவன் புன்னகைத்துத் திரும்பினான்.

நிலவிற்கு நல்ல தாகம் இருந்திருக்கும் போலும், கதிரவனின் ஒளியை அளவிற்கு அதிகமாகக் குடித்துவிட்டு, கண்களைக் கூசச் செய்து கொண்டிருந்தது. அவன் பார்வை சென்ற திசைக்கு அவள் பார்வை சென்றது.

“கண்ணு கூசுதில்ல? இன்னைக்கு சூப்பர் மூண்.” என்றாள்.

“ஓஹ்..” என்றான்.

“சன் லைட் பூமிக்கு வர எட்டு நிமிஷம் ஆகிற மாதிரி மூன் லைட் நம்மட்ட வர நேரம் பிடிக்குமா?” எனக் கேட்டவளின் பார்வை சூனியத்தை வெறித்தது.

ஆகாயம் தெரியும். அதில் நீந்தும் சூரியன், சந்திரன், விண்மீன்கள் என இவற்றைப் பார்த்து ரசிக்கத் தெரியும். அவற்றைப் பற்றிக் கேட்டால்? பாவம் அவனுக்கு என்ன தெரியும்? கைப்பேசியின் உதவியோடு, “இல்ல… மூன் பக்கத்துல தான இருக்கு. ஒரு செக்கெட் போதும் அதுக்கு” என்றான். அதன்பின் மீண்டும் மௌனம்.

அமைதியை அவனே உடைத்தான். “அப்பாக்கு என்ன சொன்னாங்க?”

“ஹா..ர்ட் வ்வ்..வேல்வுல அடைப்பு இருக்காம். அப்பா உயிரோட இருக்கணும்ன்னா… அவர் சர்ஜரி பண்ணியே ஆ..ஆகணுமாம்.” எனத் திக்கியவளின் நா தழுதழுத்தது.

“வேற டாக்டர்கிட்டயும் கேட்போம்”

“நரேன் அண்ணா, ரிப்போட்ஸ் எல்லாம் அனுப்பி, அவங்க ஃப்ரெண்டுட்ட கேட்டிருந்தாங்க. அவங்களும் ரிப்போட்ட பார்த்துட்டு அதையே தான் சொல்றாங்க”

“ரிப்போட் என் ஃபோனுக்கு அனுப்பு. சென்னைக்கு போரேன் இல்ல… எனக்கு நிறைய டாக்டர்ஸ் கூட பழக்கம். பார்க்கலாம்.” என்றவனைப் பார்த்தவளிடம், “பார்த்துக்கலாம் யசோ” என்றான் ஆதுரமாய்.

“நேரம் ஆச்சு… கிளம்பலாம்.” என்றவன், வாகனத்தில் இருந்த அவளின் பெட்டியை அவள் முன் வைத்து, கைப்பையை அவளிடம் நீட்டினான்.

தன் முன் நீண்டிருந்த அந்த நரம்பு புடைத்த வெண்ணிறக் கரத்தை பார்த்தவள் அதைப் பார்த்தே நின்றிருந்தாள். அவளுக்கு பரிச்சயமான தழும்புகளில் ஒன்று அந்த கரத்தில் இருந்தது. நான்கு பற்களின் தடங்கள் மேலும், இரண்டு பற்களின் தடங்கள் கீழுமாக ஆறு நீளப் புள்ளிகள் அந்த நீள கரத்தில் இருந்தன. யசோவிற்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

அவள் கரத்தினுள் பையைத் திணித்தவன், காரில் ஏறி, அதன் ஜன்னல்களை மூடி, காரை அணைத்து மகளைத் தூக்கிக் கொண்டான். திகைப்பு நீங்காது நின்றிருந்தவளின் முன் இருந்த பெட்டியை எடுத்தவன், “வா யசோ, பஸ் கிளம்ப ரெடி ஆகிடுச்சு.” என அழைத்துச் சென்றான்.

அவளுக்கு முதுகைக் காட்டி சென்றவனின் பின்-தோற்றம் முதல் முதலாக யசோவின் கவனத்தில் பதிந்தது. உண்மையிலுமே இதயம் தாளம் தப்பும் என்பதை யசோ உணர்ந்தாள்.

பேருந்தில் ஏறி அவளின் படுக்கை இருக்கையில் அவள் அமர்ந்ததும், “பத்திரமா போயிட்டு வா யாசோ” என்றவனை அண்ணாந்து பார்த்தவளின் பார்வையில் இம்முறை என்ன தெரிந்ததோ கௌதமனுக்கு, “பெஸ்ட் டாக்டர வச்சு அப்பாவ பார்க்கலாம். கவலப்படாம போயிட்டு வா யசோ. அப்படி எல்லாம் உன்னத் தனியா போராட விடமாட்டேன்.” என்றவன் அவனையும் மீறி அவள் தலையை மெல்ல வருடி விட்டான்.

அந்த வருடலில், அந்த கரத்தில் என்ன மாயம் இருந்ததோ, கண்களை மூடிய யசோவின் இதயத்தை யாரோ அழுத்திப் பிசைந்ததை போல் இருந்தது.

பேருந்து கிளம்பத் தயாரானது. தோளில் உறங்கிக் கொண்டிருந்த மகளோடு கௌதமன் கீழே இறங்கினான். செல்லும் அவனின் முதுகையே இமை சிமிட்டாது பார்த்து நின்றிருந்தாள் யசோ. “பத்திரம்” என வாயில் அருகில் சென்றவன் திரும்பிப் பார்த்து கை அசைத்தான். அசைந்த வலது கரத்தை கண்கொட்டாது பார்த்தாள். நீள நீள விரல்கள். நரம்பு புடைத்த கரம். அது எப்படித் தழும்பு கூட அதே போல்?

கீழே இறங்கி நின்றிருந்தவன் தலை மறையும் வரை தலையை வெளியே நீட்டிப் பார்த்திருந்தவள் நீள மூச்சோடு படுக்கையில் விழுந்தாள். கண்களுக்குள் வந்தவன் கையில், அவள் கடித்த காயம் கரும்பச்சையாகி இருந்தது. ‘வலிக்குதா லகு?’ எனக் கேட்டவளிடம் என்ன கூறுவான்? சம்பந்தமே இல்லாது, தலை வருடி ‘உன்ன தனியா போராட விடமாட்டேன் யசோ’ என்றான்.

கீழே இறங்கி நின்றிருந்தவன் பார்வையிலிருந்து பேருந்து மறைந்தது. நேரம் சென்றபின்னும், படுக்கையில் விழுந்தபின்னும் யசோவின் தலை வருடிய  கௌதமனின் உள்ளங்கையின் குறுகுறுப்பு மட்டும் மறையவே இல்லை.

… 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!