மொட்டை மாடியிலிருந்து பார்க்க மகிழ மரத்தின் இலைகளிலிருந்து இறங்கும் நீர்த்துளி கிளைகளின் நுனியில் ஊஞ்சலாடி மண்ணை முத்தமிட மரணித்துக் கொண்டிருந்தன.
மகனைக் குமரன் தூக்கிச் சென்றிருக்க தனியே நின்று அந்த பழைய வீட்டையே வெறித்துக் கொண்டிருந்தாள் பூவினி. எந்நேரமும் அவள் அறையின் உள்ளே அடைந்திருக்க மூச்சு முட்டியது.
Advertisement
Advertisement
நாளையோ அல்லது மறுநாளோ இங்கிருந்து கிளம்பியதும், இந்த வீட்டுடனான இவளது பந்தம் முடிந்துவிடும். இதெல்லாம் நினைவில் வந்தாலும் ‘என்ன செய்ய முடியும் என்னால்?’ என எண்ணிக் கொண்டிருந்தாள்.
கீழிருந்து அவளின் மாமியார் அழைக்கும் சத்தத்தில் சுயம் பெற்றவள் “இதோ வர்றேன் அத்தை.” என சற்று குரல் உயர்த்தி சொன்ன படியே வேகமாக இறங்கிச் சென்றாள்.
Advertisement
“பூவினி, பாத்திரம் கெடக்கு இன்னும் வெளக்கிப் போடல. அவளுக்கும் முடியல. எங்க போன நீ?” என்று அதிகாரமாய் ஒலித்த மாமியாரின் குரல் இவளுக்கு முற்றிலும் புதிது.
முன்பெல்லாம் அதட்டினாலும் அந்தக் குரலில் அன்பிருக்கும். ஆனால், சில நாட்களாக ஏதோ ஒரு மாற்றம்.
வசந்தி மற்றும் சுதா இருவரின் பேச்சிலும் ஏதோ ஒரு அந்நியத் தன்மையை இவளால் உணர முடிந்தாலும் அதில் உறுதியில்லை.
“ஹுக்கும், முடியலன்னாலும் இனி நம்மதானே அத்த கழுவிப் போட்டுக்கணும். நானே செய்யிறேன் விடுங்க.” சொன்ன சுதா வேகமாக சமையலறைக்குள் நுழைந்தாள்.
“க்கா,..” என்றிவள் திக்க, “போத்தா, போயி ஒனக்கு உன் வேலை இருக்கும் செய்யி.” என முடித்துக் கொண்டார் வசந்தி.
சற்று நேரம் அங்கே நின்றவள், தானும் சமையலறைக்குள் செல்லலாம் என நினைத்தாலும் சுதா நிச்சயம் ஏதேனும் சொல்லக் கூடும் என நினைத்தபடி அவளின் அறைக்கே திரும்பிவிட்டாள்.
அறைக்குள் வந்தவள் மகனின் உலர்ந்த துணிகளை மடித்து பெட்டியில் அடுக்கி வைக்கத் தொடங்கினாள். நேரம் மாலை மணி ஆறைக் கடந்திருந்தது.
முகம் கழுவி தன்னை திருத்திக் கொண்டு வந்தவள் விளக்கேற்றுவதற்காக பூஜை அறைக்குள் நுழைந்தாள்.
“பூவினி” எனும் குரலில் இவள் வெளியில் வர அவள் பார்த்தது மகிழனோடு வந்த குமரனைத்தான். இவளைக் கண்டவன் மகிழனை இவளிடம் நீட்ட, அம்மாவைப் பார்த்ததும் கை நீட்டி தாவிக் கொண்டு வந்தான் மகிழன்.
“வா, குமரா.” என்று அழைத்த வசந்தியின் அருகில் வந்து அமர்ந்தான் குமரன்.
“ஹுக்கும், உன்கிட்ட எத்தன தரம் கேட்டே கொளுந்தனாரே. நீங்கதே டூஷன் எடுக்கல. அதே பக்கத்து சந்துல இருக்க நிர்மலா அக்கா வீட்டுக்கு படிக்க போயிருக்குக ரெண்டும்.” என்று சடைத்தபடி வந்தாள் சுதா.
“அய்யோ அத்தாச்சி , சொல்லி குடுக்க கூடாதுன்னு இல்ல. நேரம் அமயலயே.”
“ஹ்ம்ம், எம் புள்ளயலுக்குன்னா உனக்கு நேரமிருக்காதுதே. ஆமா, என்ன இன்னைக்கு போன வேகத்துல திருப்பி தூக்கியாந்துட்ட மகிழன? அம்புட்டுதேம் போல புள்ள ஆசை. அடுத்தவுக புள்ளய எம்புட்டு நேரந்தே நம்ம பாக்க முடியும்.“ என்று சடைத்தாள் சுதா.
“அத்தாச்சி, அவனுக்கு பசி வந்துருக்கும் போல, கொஞ்சம் சிணுங்கவும் தூக்கிட்டு வந்தே. வேறொண்ணுமில்ல.” அவனின் குரலே இறுகி சுதாவின் பேச்சில் பிடித்தமின்மையைக் காட்டியது. குமரன் திரும்பி சங்கடமாக பூவினியைப் பார்க்க அவளோ சிலை போல மகனோடு அங்கே நின்றிருந்தாள்.
இதெல்லாம் இந்த சில நாட்களாகவே நடப்பதுதானே. கர்ணா இருந்தவரை இவளோடு இணக்கமாக இருந்த மாமியாரும் ஓரகத்தியும்தான். அவனின் மரணம் பூவினின் எல்லாவற்றையும் மாற்றி இருந்தது.
இதில் இவனுடனான திருமணம் வேறு முடிவு செய்யப்பட்டிருந்தது, நிச்சயம் இவர்களுக்கு விருப்பமில்லை என விளங்கியது. அது போக தன்னோடு சேர்ந்து தன் மகனும் அல்லவா இந்த புது வாழ்வுக்குப் பழக வேண்டும் என்னும் பயம் அவளை பிடித்துக் கொண்டது.
அது கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல கலங்கிய அவளின் முகத்திலும் பிரதிபலிக்க முதல் முறையாக அவளின் நிலை அங்கு என்ன என்பதைப் பார்த்தான் குமரன்.
பூஜை அறை வாசலில் கையில் குழந்தையுடன் கன்னம் தோட்ட கண்ணீரைத் துடைக்கக் கூட தோன்றாமல் பேசாமல் அதிர்ந்து நின்றாள் பூவினி.
“பெரியம்மா,…” கிட்டத்தட்ட கத்திய குமரனின் குரலை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
“ஏம் பெரிம்மா அவுக வெளக்கேத்தக் கூடாது?”
“அடேய், நாளைக்கி அவ அவுக வீட்டுக்கு போயிருவா. இனி காலத்துக்கும் சுதாதே இங்க வெளக்கேத்த வேண்டியவ. நீ என்னத்துக்கு இப்புடி நிக்கிற. ஒக்காரு. நாளைக்கி நீ கட்டி கூட்டிகிட்டு வந்ததும் தெனமும் விளக்க ஏத்தச் சொல்லு. இங்க வேணாம்.” குரலெல்லாம் உயராமல் வெகு சாதாரணமாக சொன்னார் வசந்தி.
“இனி காலத்துக்கு அத்தாச்சியே ஏத்தட்டும். ஆனா போன மாசம் அவுகதே இந்த வீட்டுக்கு வெளக்கேத்துன மகராசி. மறக்காதிய பெரிம்மா.”
“ஹுக்கும், இவ ஏத்துன ஏத்துலதே உங்கண்ணே பாடையேறிட்டா. போதும் போதும் போ. எம் மவனே இல்லைன்னு போச்சு. இனி இவ வெளக்கேத்திதே எங்களுக்கு என்னமும் கிடைக்க.”
“போதும். நாங் கிளம்புறேன் பெரிம்மா.” சொன்னவன் திரும்பி பூவினியைப் பார்க்க அவள் எப்போதோ அவளின் அறைக்குள் சென்று அடைந்திருந்தாள்.
அதற்குமேல் அங்கிருந்தால் தான் இன்னமும் அதிகம் பேசும் வாய்ப்பிருக்க தன் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டான் குமரன்.
வீட்டில் நுழைந்தவனுக்கு கோவத்தில் உடம்பெல்லாம் எரிய சொம்பு நிறைய தண்ணீரை அள்ளிப் பருகினான்.