Skip to content
Post Views: 1,271
அத்தியாயம்: 1
கீ…ங்… கீ…ங்… என்ற ஹாரன்கள் சத்தம், ஆக்சிலேட்டரை முறுக்கும் சத்தம், கூடவே,
Advertisement
“யோவ்... என்னய்யா பராக்கு பாத்திட்டு இருக்க! முன்ன பாத்து ஓட்டுடுயா! நட்ட நடு ரோட்டுல பைத்தியக்காரெ மாதிரி நின்னுட்டு.” என்று ஓட்டுநர் ஒருவர் குரல் கொடுக்கும் சத்தம், அவரின் மரியாதையில்லாத பேச்சில் கடுப்பான மற்றொரு ஓட்டுநர் சண்டைக்குப் போகும் சத்தம்,
Advertisement
“வண்டிய ஓரங்கட்டு…” என்று விசில் ஊதி சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை விலக்கி விடும் போக்குவரத்து காவலாளியின் விசில் சத்தம், எனச் சுற்றி இருக்கும் அத்தனை சத்தமும் அணிந்திருந்த தலைக்கவசத்தை மீறி காதைக் கிழித்தது. புருவச் சுழிப்புடன் அவைகளைக் அவதானித்தாள் அவள்.
Advertisement
பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரம் ஆதலால் மதுரை தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி, நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
Advertisement
அந்த நெரிசலுக்குள்ளிருந்து தப்பித்து ஒருவழியாக KGS மெட்ரிகுலேஷன் பள்ளி என்று எழுதியிருந்த பலகையைப் பார்த்தபடி தன் ஸ்கூட்டியை ஓட்டினாள் ரிதன்யா.
மற்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்தியவள், தலைக்கவசத்தை எடுத்து இருக்கைக்கு அடியில் பத்திரப்படுத்தி விட்டு, கலைந்திருந்த தலையைக் கண்ணாடியில் சரி செய்து விட்டது, நலுங்கி இருந்த புடவையை இழுத்து விட்டபடி உள்ளே சென்றாள்.
“மேம்… பேரன்ஸ் டீச்சர் மீட்டிங்?” என்று அலுவலக கட்டடத்தின் முன் நின்றிருந்த ஆசிரியரைப் பார்த்துக் கேட்க,
“எந்த க்ளாஸ் மேம்?”
“Fifth.”
“மூனாது மாடில லைப்ரேரிக்கு அடுத்த ஹால் மேம்.” என்றார்.
அந்த ஹாலை ரிதன்யா அடையும் முன்னரே ஆசிரியரின் பேச்சுச் சத்தம் கேட்டது. மீட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்டது போலும்.
“எங்களால முடிஞ்ச அளவு தான் பிள்ளைங்களப் பாக்க முடியும். படிப்புங்கிறது ஸ்கூல்ல சொல்லிக் குடுக்குற விசயம் தான். ஜஸ்ட் புத்தகத்துல இருக்குற ஒன்ன சொல்லித் தர்றது. ஆனா ஒழுக்கங்கிறத இங்க மட்டும் தான் சொல்லிக் கொடுக்கணும்னு இல்லை. அது வீட்டுல இருந்து, எங்க கிட்ட இருந்து, சுத்தி இருக்கிற சமூகத்துல இருந்து, பெத்தவங்களான உங்க கிட்ட இருந்து தான் வரும்.
நல்ல வார்த்தைகளப் பேசுறது, நேரத்துல எல்லாத்தையும் செய்றது, வாதாடி தட்டிக் கழிக்காம கடமைகளச் செய்றதுன்னு நிறைய விசயங்கள் இருக்கு. உங்களப் பாத்து தான் உங்க பிள்ளைங்க வளரும். உங்க பிள்ளைங்க எப்படி இருக்கணும்னு நீங்க தான் முன்னுதாரணமாக இருந்து வழி காட்டுறீங்க.
அவங்களுக்குச் சத்தான சாப்பாடு போட்டு, அதை வேஸ்ட் பண்ணாம சாப்பிடணும்னு சொல்றதுல இருந்து, நைட் ஃபோன் பாக்காம தூங்க வைக்கிறது வரை, எல்லாம் உங்களோட பொறுப்பு தான். புத்தகத்துல இருக்குறத படிச்சிப் பரிச்சை எழுதினா ஸ்கூல்ல வேணும்னா முதல் ஆளா பாஸ் ஆகலாம். ஆனா லைஃப்ல பாஸ் ஆக நல்ல ஒழுக்கம் முக்கியம். பொறுமை முக்கியம். நல்ல பண்பு முக்கியம். பிடிக்காமலே இருந்தாலும் பெரியவங்களுக்கு குடுக்குற மரியாதை ரொம்ப முக்கியம்.
அந்தக் காலத்து பெரியவங்கள இந்தக் காலத்து தலைமுறைக்குச் சுத்தமா பிடிக்கிறது இல்லை. அட்வைஸ் பண்ணா! கண்டிச்சா! பூமர்னு முகத்துக்கு முன்னாடி கேலி பண்றது நல்ல தலைமுறையா?” என்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் பெற்றவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர்.
ஒரு நொடி அதை நின்று கேட்டவள், பின் காலியாக உள்ள இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டாள். தலையைச் சுற்றி தன் மகள் எங்கேயும் தென்படுகிறாளா? என்று பார்க்க, எந்த மாணவிகளும் இல்லை. ஆசிரியர்கள் மட்டும் தான் பெற்றோர்களின் வருகையைப் பதிவு செய்யும் நோட்டுப் புத்தகத்துடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.
“ஸ்டூடென்ட்டோட நேம் என்ன மேம்?” என்று கேட்டபடி ஓர் ஆசிரியர் நோட்டை நீட்ட,
“சரிகா. Fifth A.” என்றதும் பெயரைக் கண்டுபிடித்து கையெழுத்தை வாங்கிக் கொண்டார் அவர்.
“மேம்… பாப்பா எங்க?”
“முன்னாடி உக்காந்திருக்காங்க மேம்.” என்று விட்டு நகர்ந்தார்.
எக்கி மகள் எங்கே என்று பார்க்க, மேடைக்கும், போட்டப்பட்டிருந்த நாற்காலிகளுக்கு முன்னால் பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் மாணாக்கர் பலர் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
நிறைய பேசினார் தலைமையாசிரியர். அவரைத் தொடர்ந்து துணைத் தலைமை ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர், பின், வகுப்பு ஆசிரியர்கள் என ஒவ்வொருவரும் நேரத்தை விழுங்கி ஏப்பம் விட்டனர்.
ரிதன்யாவிற்கு அதையெல்லாம் கேட்க பிடிக்கவில்லை போலும். ஃபோனில் sudoku விளையாடத் தொடங்கி விட்டாள். பேச்சு முடிந்து பரிசுகளுக்கான அறிவிப்பு வரவும், விளையாட்டை அணைத்து வைத்து விட்டு மேடையில் கவனத்தைப் பதித்தாள்.
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மெடலைக் கழுத்தில் அணிவித்து விட்டார் தலைமையாசிரியர்.
அப்போது அந்த ஆண்டு, பள்ளியில் படிப்பில் முதலிடம் பிடித்த மாணவி என்று சொல்லி, சரிகாவை மேடைக்கு அழைக்க, கைத் தட்டி ஆர்ப்பரித்தாள் ரிதன்யா. தன் ஃபோனை எடுத்து மகள் பரிசு வாங்கும் அழகை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தாள்.
டி யும் சமோசாவும் பரிமாறப்பட்ட, சந்திப்பு இனிதே நிறைவு பெற்றது. அனைத்து ஆசிரியர்களும் வகுப்பு ஆசிரியரிடம் தங்களின் பிள்ளைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர், வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விட்டு எழுந்து சென்றார் தலைமை ஆசிரியர்.
அத்தனை பெற்றவர்களும் ஆசிரியரை மொய்த்து நிற்க, சரிகா தாயைக் கண்டதும் வேகமாக ஓடி வந்து அணைத்தாள்.
“ரிதும்மா… மொத்தம் நாலு மெடல்ம்மா. பாருங்க…” என்று மெடலைத் தாயின் கழுத்தில் போட்டு விட்டவள், சான்றிதழ்களை நீட்டினாள்.
பூரித்துப் போனது தாய் உள்ளம். மகளின் தலையில் கரம் வைத்து கலங்கிய கண்களுடன் அவள் நிற்க,
“இங்க பாத்திங்களா! கவிதைப் போட்டி… போன மாசம் நடந்ததே! அதுல நான் தான் ஃபஸ்ட்.” என்றாள் மகள்.
“எது! நான் எழுதி குடுத்தேனே! அதுக்கு கிடைச்ச பரிசா இது? முதல் பரிசு!” என்று வாயைப் பிளந்தாள் ரிதன்யா. மகள் தாயை முறைத்து,
“சத்தமா சொல்லாதம்மா… மிஸ் நானே எழுதினதாத்தான் நினைச்சிட்டு இருக்காங்க. மத்த பிள்ளைங்க கிட்டயும் அதையே தான் சொல்லிருக்கேன். இப்ப நீங்க எழுதுனதாச் சொன்னா! என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?” என்று கடிய, அதையெல்லாம் ரிதன்யா காதில் வாங்கவில்லை.
தான் எழுதிக் கொடுத்த கவிதைக்கு முதல் பரிசு!! என்ற உற்சாகக் குமிழியுடனேயே மகளை ஏறிட,
“எழுதுனது நீங்களா இருந்தாலும் டீச்சர்ட்ட குடுத்தது நான் தான். என்னோட பேருல தான் சர்டிபிகேட்ல இருக்கு.” என்று ரோசமாக மகள் செல்ல, சிரித்தாள் ரிதன்யா.
“கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணி, டீச்சர பாத்து பேசுங்க. கூட்டம் குறையட்டும்.” என்ற சரிகா, அந்த ஹாலின் சுவரில் தொங்க விட்டிருந்த மாணாக்கர்களின் ஓவியங்கள், அறிவியல் பரிசோதனை மாதிரிகள் போன்றவற்றைத் தாய்க்குக் காட்டினாள்.
கனகச்சிதம் என்று சொல்லாத முடியாத படி, தப்பும் தவறுமாக பல திறமைகள் அந்த கூடத்தில் அரங்கேற்றப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாக மகளுடன் பார்வையிட்டவள்,
“பாப்பு… இது என்னாது?” என்று கேட்க,
“டிராயிங் ம்மா.” என்றதும் ரிதன்யாவின் முகம் அஷ்டகோணத்திற்கு மாறியது.
“அதுல இருக்குறது அப்துல்கலாம். சந்தேகம்னா கீழ பாருங்க. பேர் எழுதிருக்கு.”
“ஓ… வரையுறதையும் வரைஞ்சிட்டு அதுக்கு பேரும் வச்சிருக்காங்களா! சூப்பர் ஐடியா. எல்லாரும் படத்தப் பாத்து தெரிஞ்சுக்காதீங்க படிச்சிப் பாத்து தெரிஞ்சுக்கங்கன்னு சொல்லாறாங்க போலருக்கு.” என்று ஆச்சர்யம் போல் சொன்னவள்,
“நல்ல வேளை சொன்ன! இல்லன்னா நான் இதை கார்ட்டூன் கதாப்பாத்திரம்னு நினைச்சிருப்பேன்.” எனக் கேலி செய்தாள்.
“நானும் அப்படித்தாம்மா நினைச்சேன். ஐக்கிச்சான்ல வர்ற வழுக்கத் தலை அங்கிள் மாதிரியே இருக்குல இது.” என்று மகள் சொல்ல,
“ஆமாம்… அது நிஜ்ஜா கட்டோடி.”
“இது டோரின் மான் ம்மா.” என்று இருவரும் வெடிப்பு சிரிப்பு சிரிக்க, அது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது போலும். திரும்பி பார்த்தனர்.
“ஷூ… ஷூ…” என மகளின் உதட்டில் தாயும், தாயின் உதட்டில் மகளும் விரல் வைத்துக் கொண்டனர்.
இருவரும் தங்களுக்குள்ளேயே கேலி செய்தபடி வகுப்பு ஆசிரியரைச் சந்திக்க, அவர் சரிகாவைப் பற்றி எந்தக் குறையும் கூறாது பாராட்டி அனுப்பி வைத்தார்.
புறப்பட இருந்த நேரம், விளையாட்டு ஆசிரியர் பிடித்துக் கொண்டார்.
“உங்க பொண்ணுக்கு ஹை ஜம்ப் சூப்பரா வருது. கொஞ்சம் ட்ரெயினிங் குடுத்தா ஸ்டேட் லெவல் போட்டில கலந்துக்கலாம். ஆனா உங்க பொண்ணு எதுக்கும் பேர் குடுக்க மாட்டேங்கிறா! கேட்டா வீட்டுல விடமாட்டாங்கன்னு சொல்ற. நீங்க கொஞ்சம் எக்ரேஜ் பண்ணக் கூடாதா மேம்.” என்றார்.
திரும்பி மகளின் முகத்தை ஒரு பார்வைப் பார்த்தாள். மகளோ! தாயைத் தவிர வேறு இடங்களை நோட்டமிட்டாள். விழி மூடித் திறந்தவள்,
“இல்ல மேம். ட்ரெயினிங் குடுத்து, விளையாட வைக்கிற மாதிரியான சூழல்ல நான் இல்ல இப்ப. எனக்கு வேலை இருக்கு. பாப்பா கூடவே இருக்க முடியாது. அதுனால வேண்டாம் மிஸ். படிக்கிறால்ல அது போதும்.” என்க,
“நீங்க ஏன் மேம் அழையுறீங்க. அவங்க அப்பா இருக்காருல! பக்கத்து ஸ்கூல்லயே காலைல ப்ராக்டிஸ் குடுக்குறாங்க. காலைல அஞ்சர மணிக்கு ஆரம்பிச்சி ஏழு மணிக்குள்ள முடிஞ்சிடும். அவர்ட்ட சொல்லுங்க. அவரே மகளப் பாத்துப்பாரு.” என்று மூளையைக் கழுவ,
“ஓகே மிஸ்… பாக்கலாம்.” என்று மறுப்பை மலுப்பலான புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
“அஞ்சரைக்குப் பயிற்சின்னா அஞ்சிக்கு எழணும். விடியாத சாமத்துல உன்னை ஸ்கூல்ல விட வண்டில வந்தா! என்னை நாய் துரத்தாதா பாப்பா? கடிப்பட்டோ! விழுந்து வாரி ஹாஸ்பிட்டலயோ! கிடந்தா யாரு வந்து பாப்பா என்னை?” என்று தன் கஷ்டத்தை ரிதன்யா புலம்ப,
“ப்ராக்டிஸ் முடிஞ்சி, ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்து எட்டு மணிக்குள்ள ஸ்கூலுக்கு வரணும். இல்லன்னா வெயில்ல நிக்க வச்சிடும் இந்தம்மா. ஸ்போர்ட்ஸ்ல இருக்கேன்னு காரணம் சொன்னாக் கூட விடாது. சாயங்காலமும் ப்ராக்டிஸ் இருக்கும். அதை முடிச்சிட்டு ஹோம் வொர்க்கும் பண்ணணும். எப்ப கேம் விளையாட்டுறது? எப்ப டிவி பாக்குறது? எப்ப தூங்குறது?” என்று தன் கஷ்டத்தைப் புலம்பினாள் சிறுமி.
சரிகாவின் வாய் தான் புலம்பியதே தவிர மனம் விளையாடத் துடித்தது. அவள் ஹப்பர் ஆக்டிவ்வான சிறுமி. ஒரு இடத்தில் அவளால் அமைதியாக இருக்க முடியாது. அவளுக்கு இருக்கும் துறுதுறுப்பிற்கும், வேகத்திற்கும் அத்லெட் சிறந்த தேர்வு தான். ஆனால் யார் அவளைக் கூட்டு கொண்டு வந்து, கூட்டிச் செல்வர். பயிற்சிக்குப் போகிறேன் என்று அவள் கேட்டாள் ரிதன்யா எப்பாடு பட்டாவது அவளை அனுப்பி வைப்பாள். ஆனால் அது அவளுக்கு மேலும் பணிச் சுமையைக் கூட்டும். ஆதலால் ஆசையைப் புதைத்துக் கொண்டாள் சிறுமி.
இருள் கமிழத் தொடங்க, பிற வாகனங்களுக்கு மத்தியில் நெளிந்து கிடந்த தன் வண்டியை லாவகமாக வெளியே எடுத்தவளிடம், “ரிதும்மா, சீஸ் கேக்?” என்றாள் மகள்.
“கொன்னுடுவேன். இருக்குற டிராப்பிங்கல, தெப்பக்குளத்துலலாம் நிறுத்த முடியாது. சாயங்காலம் கண்டு மண்ணு தெரியாம ஓட்டுவானுங்க.” என்று விட்டு தலைக்கவசத்தை அணிந்து கொண்டாள்.
“ரிதும்மா ப்ளீஸ் ம்மா… நாலு மெடலு வாங்கிக்கேன். க்ளாஸ் ஃபஸ்ட் வந்திருக்கேன். அதுக்கு ட்ரீட் கிடையாதா ரிதும்மா!! நீங்க வேலைக்கு லீவ் போட்டதா தான சொன்னிங்க. வாங்க ரிதும்மா போலாம். ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று விடாது கெஞ்ச,
“மணி அஞ்சரை தாண்டி ஆகுது. ஆறரைக்குத் தான் கடையவே திறப்பான்.”
“அதுவரை முக்தீஸ்வரையும், மாரியம்மனையும் பாத்து நலன் விசாரிச்சிட்டு இருப்போம்.” என்று வழி சொல்ல, வண்டியைக் கோயிலின் பக்கம் திரும்பினாள் ரிதன்யா.
வண்டியைக் கோயிலில் உள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, டோக்கனை வாங்கிக் கொண்டு முதலில் தரிசிக்க சென்ற கோயில் முக்தீஸ்வர் கோயில் தான்.
ஆற அமர ஒவ்வொரு சாமியையும் பார்த்து சரிகா வேண்டிக் கொள்ள, ரிதன்யா மட்டும் இறைவனின் சிலையை வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றாள். தினமும் கோயிலுக்குச் செல்லாது எந்த நாளையும் தொடங்குவதில்லை என்று ஒரு காலத்தில் இருந்தவள் தான்.
இன்று, “நான் என்ன வேண்டிக்கிட்டாலும் நீ எனக்கு என்ன தரணும்னு ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருக்குறத தான் தருவ. பிறகு எதுக்கு உங்கிட்ட இது தா அது தா ன்னு வியாபாரம் பேசணும்.” என்ற நிலைப்பாட்டிற்கு வர வைத்தது காலம்.
பின் மாரியம்மன் கோயிலுக்கு நடந்தே சென்றனர். அங்கு வாசலில் விற்கப்படும் சிவப்பு நிற மிட்டாய் சரிகாவின் ஃபேவரைட். வாங்கி போட்டுக் கொண்டு நிறம் மாறிய தன் நாக்கை நீட்டி பயம் காட்டிக் கொண்டே வந்தாள்.
அவர்கள் திரும்பியிருந்த நேரம் தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் தங்களின் கடைப் பொருட்களை எடுத்து வைத்து வியாபாரத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
சீஸ் கேக்கை வாங்கிக் கொண்டு தெப்பக் குளத்தின் குட்டிச் சுவரில் ஏறி அமர்ந்து கொண்டனர் தாயும் மகளும்.
“ம்… ம்… பெரிய பீஸ்ஸா எடுக்காதம்மா. கொஞ்சோண்டு போதும் உங்களுக்கு.” என்று சிணுங்கியவள்,
“சாக்லேட் சிரப் தீரப்போது. போய் வாங்கிட்டு வாம்மா.” என்று சொல்ல,
“எனக்கு அது பிடிக்காது. உனக்கு வேணும்னா போய் நீயே கேட்டு வாங்கிட்டு வா.” என்று அனுப்பி வைத்தாள். தட்டை ஏந்திக் கொண்டு சாலையைக் கடந்து, சாக்லேட் சிரப் நிறைய ஊற்றச் சொல்லிக் கேட்டு வாங்கினாள்.
திரும்பி தாயிடம் செல்ல சாலையைக் கடக்கும் போது தான் கண்டாள் அந்த ஆடவனை. சாலையின் ஓரமாக பைக்கை நிறுத்தி விட்டு அவளையே பார்த்தபடி அவன் இருக்க, திகைப்பூண்டு நின்று விட்டாள் சிறுமி.
நல்லவேளையாக அந்தச் சாலையில், தடுப்புகள் மூலம், வரும் வாகனங்களின் வேகத்திற்கு தடை விதித்திருந்தது போக்குவரத்து துறை. அது மக்கள் கூடும் இடம் ஆதலால், அந்தக் கட்டுப்பாடுகள்.
சரிகா, சாலையில் நின்று விட்டதைக் கண்ட ரிதன்யா சற்று பயந்து போய் எழுந்தாள். பின் மகளின் பார்வை சென்ற இடத்தைப் பார்க்க அவளுக்கும் அதிர்ச்சி தான்.
“இவனா!” என்று சிறு அச்சம் உள்ளுக்குள் தோன்றியது. சில நொடிகள் தான். பின் தன்னை மீட்டுக் கொண்டவள், மகளின் கரம் பற்றி ஓரமாக இழுத்து வந்தாள்.
“ம்மா…” என்று நடுங்கிய மகளின் கரத்தை ஆதுரமாக அழுத்தியவள்,
“சாப்பிடு பாப்பா. ஆசையா வாங்கின கேக்… வேஸ்ட் பண்ணாத. ம்…” என்று ஊட்டி விட்டாள். தாயின் திடத்தைக் கடனாகவாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் மகள் இருந்தாள். தாயின் இடையை இறுக பற்றிக் கொண்டே ஸ்கூட்டியில் பயணம் செய்தாள்.
வீடு வந்து சேர்ந்ததும் வேகமாக சரிகா உள்ளே செல்ல, அங்கும் அமர்ந்திருந்தான் அவன்.
விக்ரம். சரிகாவின் தந்தை.
“என்ன சிலை மாதிரி நிக்கிற! அப்பா வந்திருக்காரு பாரு! பேசு.” என்று ரிதன்யாவின் தந்தை அண்ணாமலை அதட்டலுடன் சொல்ல, மிரட்சியுடன் ஓடிச் சென்று அறைக்குள் முடங்கிக் கொண்டாள் சரிகா.
வீட்டிற்குள் செல்லாமலேயே அவனின் வருகையை உணர்ந்தவள், செல்லவா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தை நடத்தி விட்டு,
‘அதான் விவாகரத்து வாங்கியாச்சுல. இனி இவன் எனக்கு புருஷன் இல்லை. புருஷனாவே இருந்தாலும் இனி இவனுக்கு நான் பயப்படப் போறதும் இல்லை.’ என்று சொல்லிக் கொண்டு நிமிர்ந்த நடையுடன் உள்ளே சென்றாள்.
“ரிதும்மா, மாப்ளை வந்திருக்காரு. உங்கிட்ட கொஞ்சம் பேசணுமாம்.” என்றார் அண்ணாமலை.
ஒற்றை சோஃபாவில் விக்ரம் அமர்ந்திருந்த விதமும் பரிமாறப்பட்ட காபியும் சொல்லாமல் சொல்லியது விக்ரமை வரச் சொல்லியது தன் தந்தை என்று.
“யாருக்கு யார் ப்பா மாப்ள? அந்த உறவெல்லாம் முடிஞ்சி ரெண்டு மாசமாகுது.”
“அப்படில்லாம் பேசாதம்மா! உனக்காகத்தான்…” என்று அண்ணாமலை ஆரம்பிக்கும் போதே,
“மாமா… நான் பேசிக்கிறேன்.” என்றவன் பட்டென ரிதன்யாவின் காலில் விழுந்து விட்டான்.
“நீயும் எம்பொண்ணும் இல்லாம என்னால வாழவே முடியல ரிது. நான் என்ன தப்பு பண்ணிருந்தாலும் என்னை மன்னிச்சிடும்மா. இனி அது மாதிரி நடக்காது. உனக்காக நான் என்னை மாத்திக்கிறேன். நீ சொல்றத கேட்டு சரின்னு தலைய மட்டும் அசைக்கிறேன். வந்திடு ரிது. எங்கூடவே வந்திடு ரிது.” என்று கதறியவனை,
“ஐயோ! என்ன மாப்ள நீங்க? கால்லலாம் விழுந்துக்கிட்டு.” என்று அண்ணாமலையும், ரிதன்யாவின் அண்ணி தேன்மொழியும் தான் எழுப்பி விட்டு சமாதானம் செய்தனர்.
“எம்பொண்ணு என்னைப் பாத்து பயந்து ஓடுறா மாமா… அதைப் பாத்து என் ரத்தம் கொதிக்குது. நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. அவளோட அப்பா நான்… அவள்ட்ட பேசாமா என்னால இருக்க முடியாலம்மா. இவங்க ரெண்டு பேரும் இல்லாம வீடே சுடுகாடு மாதிரி இருக்கு. என்னோட சாமிங்க ரெண்டும் எங்கிட்ட கோபிச்சிட்டு வந்திடுச்சிங்க. அவங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு குடுக்கச் சொல்லுங்க மாமா. தங்கச்சி நீ சொல்லும்மா. அத்தை நீங்களாவது சொல்லுங்க.” என்று கதறியபடி ஒவ்வொருவர் காலிலும் விழ, அனைவரும் பதறித்தான் போயினர். அந்த அனைவரில் ரிதன்யா மட்டும் சேரவில்லை.
“நீ என்ன மாயாஜாலம் பண்ணாலும், இனி நான் உன்ன நம்பப் போறது இல்லை. மரியாதையா இடத்த காலி பண்ணு. இல்லன்னா நான் போலிஸ்ஸ கூப்பிடுவேன்.” என்று விட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் ரிதன்யா. உள்ளே கட்டிலில் பயத்துடன் அமர்ந்திருந்த மகளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,
“ஒன்னுமில்லடாம்மா. நான் இருக்கேன். அம்மா நான் இருக்கேன்.” என்று முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!