Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

50 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 50.1

.

தங்க நிற பார்டர் கொண்ட சிகப்பு நிறப் பட்டுப் பாவாடை சட்டையில் கொலு பொம்மை போல் தன் அப்பாவின் கரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் கௌதமனின் யாழி பேபி.

எனக்குச் சிகப்பு மிகவும் பிடிக்கும் என அந்தக் கூட்டத்திற்குப் பறைசாற்றும் வண்ணம் தலையில் இருந்த கிளிப் முதல் காலில் மினுங்கிய செருப்பு வரையுமே, அந்தக் குட்டி பன்னீர் ரோஜா, சிகப்பு நிறத்தில் உலாவிக் கொண்டிருந்தாள்.



Advertisement

“உன் பொண்ணா பா… வீட்டுக்குப் போனதும் சுத்தி போட சொல்லு”, “அழகு குழந்த”, “சுட்டி பொண்ணு” எனக் கன்னம் வழித்த கைகள் ஏராளமாகிப் போக, கௌதமன் முகத்தில் பெருமை தாண்டவமாடியது.

Advertisement

“யாரு ஜாடை?” என்ற கேள்விக்கு, “அவ அம்மா” என்றவனிடம் யார் கூறுவது, யாழி, அவள் அப்பாவின் ஒட்டு மொத்த வசீகரத்தையும் கொண்டு பிறந்திருக்கிறாள் என்று.

Advertisement

சிகப்பு நிற வளையல்களை ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தவள் கண்களில் மாலதியின் வளையல் நிறைந்த கரம் விழ, தன் கரத்தை பார்த்தாள். தன் கரத்தில் இன்னும் இடம் இருக்கிறதே. அதை நிறைத்தாக வேண்டுமே…

Advertisement

சின்னவளின் கண்கள் அங்கிருந்த வளையல் ஸ்லாலில் நிலைத்தன. கை நீட்டுபவருக்கு எல்லாம் உடுப்புக்கு ஏற்றார்போல் வளையல்களை அணிவித்துக் கொண்டிருந்தனர் அங்கு.

அடுக்கடுக்காகப் பல வண்ணத்தில் இருந்த வளையல்களைப் பார்ப்பதும் கையை பார்ப்பதுமாக நின்றிருந்த குட்டி வாண்டு கடைக்காரனின் கவனத்தைக் கவர, ‘வா’ என்பதாக அவன் செய்கை செய்தான். அப்படி எல்லாம் யாழியைத் தன் பக்கம் இழுத்துவிட முடியுமா என்ன? அப்பாவிடம் ஓடினாள் குழந்தை.

“அப்பா… ஆலி பேபிக்கு இன்னும் நலைய வலையல் நேணும்” எனச் செல்லச் சிணுங்கலில் ஆரம்பித்து, ஆசை நிறைவேறாது போகவும், “நேனுக்கு வலையல் நேணும்” என அடமாக மாறியது.

“வர வர உன் பிடிவாத குணம் ஓவரா போகுது பேபி. பார்க்கிறத எல்லாம் கேக்க கூடாது. நீ கேட்கிற எல்லாத்தையும் உன் அப்பாவால வாங்கி தர முடியாது” என்ற வாக்கியத்தை முடிக்கும் வேளை கௌதமனின் தொண்டையோடு மனமும் இறுகியது.

மகளுக்காக வானத்தையும் வில்லாக வளைக்கத் தயாராக இருக்கும் தகப்பனால் மகள் விரும்பும் வளையலை வாங்கி தரமுடியாதா என்ன?

வளையல்… முடியும். அன்னையாகத் தன்னோடு வைத்துக்கொள்ள ஆசைப்படும் யசோவை? தாய்க்காக ஏங்கும் அவன் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாது நிற்கும் தன் நிலையைக் கௌதமன் உண்மையிலுமே வெறுத்தான்.

“யசோக்கு நல்ல இடம் ஒண்ணு அமைஞ்சிருக்கு கௌதமா. சுயமா தொழில் செய்ற சின்ன வயசு பையன். அவனுக்கு நாப்பது வயசும் இல்ல… அவனுக்குப் பத்து வயசுல குழந்தையும் இல்ல… என் மகள ரெண்டாம் தாரமா கேக்கவும் இல்ல.” என்றவரின் முகப் பிரகாசம் கௌதமன் முன் வந்து போனது.

எந்த கெட்ட பழக்கமும் இல்லை, எந்த அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளாத ஆரோக்கியமான வாலிபன்… திருமணம் ஆகாத, கையில் குழந்தையோடு இல்லாத வாலிபனிடம் இவன் எப்படிப் போட்டிப் போடுவான்? ப்ச்! தனக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் போலும். தன் ஏமாற்றத்தைக் குழந்தையிடம் காட்டியிருக்கக் கூடாது என்று எடுத்துரைத்தது நல்லவனின் மனசாட்சி.

“அப்பாஆஆஆ”, சிந்தனையிலிருந்து இழுத்து வரப்பட்டான் கௌதமன்.

விக்ரமின் கரத்தில் அமர்ந்திருந்த யாழி, “அப்பா, பிக்கி மாமா நானுக்கு வலையல் போட்டாங்க” என்றவள், தன் குட்டி கைகள் இரண்டையும் ஆட்டிக் காட்டினாள். இவள் கேட்டு விக்ரம் இல்லை என்பானா என்ன? மகளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “இதுக்கு தான உன் மாமன தேடிப் போன. இப்போ… சிரிப்ப பாரு” என முத்தம் வைத்து, “அழகா இருக்கு” என மகளின் தலையை ஆட்டி விட்டான் கௌதமன்.

வளைகாப்பு நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மதிய உணவை முடித்து வாசுதேவனும், வைஷாலியும் சொல்லிக் கொண்டு கிளம்பினர். அனைவரும் கிளம்பும் நேரம் வீட்டினுள் நுழைந்த ராஜீவனைப் பார்த்த விக்ரமின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“என்ன டா இவ்வளவு லேட்?” எனக் கௌதமன் குறைபட, “அது… அக்கா வீட்டுக்கு அவங்க ஃபேமிலி ஃபிரெண்ட் வந்தார். தெரிஞ்ச மனுஷன அப்படியே விட்டுட்டு வரமுடியல. ‘நாலு நாள் இங்க தான் இருப்பேன், பொறுமையா பேசுவோம்’ன்னு சொல்லவும் கிளம்பி வந்தேன். அது தான் லேட் ஆகிடுச்சு” என விலாவாரியாகத் தாமதத்தின் காரணத்தை உரைத்தான்.

விக்ரமிற்கு அவன் வந்ததே பெரிதாக இருக்க, “வா டா… வா டா மச்சான். வந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா மச்சான்” என விக்ரம் ராஜீவனை தழுவிக் கொள்ள, ராஜீவன் “ம்ம்ம்” என்றான் எந்த உணர்வையும் காட்டாது. சட்டென அவனால் இறங்கி வர முடியாத போது அவனும் என்ன செய்வான்?

“பிக்கி மாமா… பேபிய கஷகாதீங்க”, இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்ட குட்டி வாண்டு இருவரையும் பிரித்து விட்டாள்.

“யாழி பேபி, மாமாட்ட வாங்க” என ராஜீவன் ஆசையாக கை நீட்ட, “லீவன் மாமா, நல்லா இக்கீங்களா? சாப்பீங்களா? ஐஷ் கீம் நேணுமா?” எனக் கேட்டுக் கொண்டே அவனிடம் தாவினாள் யாழி. “குழந்தைக்குப் பதிலா தேவதைய பெத்து வச்சிருக்க கௌதமா” என்றவன் உண்மையிலுமே அப்படித் தான் உணர்ந்தான்.

“மாமா சாப்பிட்டாச்சு யாழி பேபி. மாமாக்கு ஐஸ் கிரீம் வேண்டாம்” என்றதும், “ஓ…” என முகம் விழுந்து போனது நொடி நேரம் மட்டுமே.

“பிக்கி மாமா, ஆலி பேபி… டூ பேலும் லெட் டிரெஸ் போட்டுக்கோம். நல்லாக்கா? கைல நலைய வலையல் பிக்கி மாமா போட்டாங்க. அலகாக்கா?” எனத் தன் கைகள் இரண்டையும் ஆட்டிக் காட்டிய குழந்தையின் ஆர்வப் பார்வையில், அவள் கேள்வி என்னவாக இருக்கும் என யூகித்தவனாக,

“யாழி பேபி ரெட் பாவாட சட்டையில ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க கையில இவ்வளவு வளையல் இருக்கே.” என அவனும் பேசக் குழந்தை பூரித்துப் போனாள்.

“நல்லாக்கா?”

“ரொம்ப அழகா இருக்கு டா குழந்த” என்றான் வாஞ்சையாக.

குழந்தையின் முகம் மலர்ந்து போக, கையை ஆட்டிக் காட்டினாள். “மால்தி ஆந்தி பெலிய வயத்துல மம்மம் இல்ல. குட்டி பாப்பா இக்கு தெலியுமா? சல்வேஷ் இல்ல, என் பிரெண்ட் சல்வேஷ், அவன் குட்டி பாப்பா மாதிடியே குட்டி பாப்பா இக்கு ஆந்தி வயத்துல” எனக் குட்டி கண்கள் விரிய, மீன் குஞ்சு வாய் மலர்ந்து கதைத்தது.

அந்தக் குட்டி பூக்குவியல் கூறுவதற்கெல்லாம், “அப்பாடியா?” என ஆச்சரியம் காட்டின லீவன் மாமாவை யாழி பேபிக்கு மிகவும் பிடித்துப் போனது.

“ஈவ்னிங் டின்னருக்கு வெளியில போலாமா டா?” என விக்ரம் கேட்க, கௌதமனுக்கு தெரிந்தது, அது எதற்கான அழைப்பு என்று. வருடங்கள் பல ஓடிவிட்டாலும், சில காயங்கள் ஆற வேண்டுமென்றால், மருந்தைப் பூசித் தான் ஆக வேண்டும்.

அவர்களே பேசி முடிவெடுக்கட்டும் என நினைத்த கௌதமன், “நான் ஃபிரி. நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க” என மாலதியை நோக்கிச் சென்றான்.

ராஜீவனிடம் பதில் இல்லை என்றதும், “நீ சொல்லு தங்கப் பாப்பா, டின்னர் போலாமா? ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடலாமா?” என விக்ரம் யாழியைப் பார்த்தான்.

“பிக்கி மாமா… தங்கா இல்ல. ஆலி பேபி சொல்லுங்க” என அவனைத் திருத்தினாள்.

“பிக்கி இல்ல… விக்கின்னு நீ சொல்லு” என அவனும் திருத்த முயன்றான்.

“பிக்கி இல்ல… பிக்கி!” என்றாள் குழந்தை, கர்மசிரத்தையாக.

“தங்க பாப்பா இல்ல… ஆலி பேபி” எனக் குழந்தையை வம்பிழுத்தான்.

“பிக்கி மாமா” என அலுத்துக் கொண்ட குழந்தை, “ஆலி இல்ல… மை நேம் ஷ் ஆலி” என்றாள். குழந்தைக்கு யாழி எனக் கூற வரவில்லை.

“ஆலி” எனக் கேலி செய்தவனைப் பார்த்த குழந்தையின் உதடு பிதுங்க, ராஜீவன், “டேய்… குழந்தைய இருட்டேட் பண்ணாத” என முதுகில் ஒன்று பலமாகவே வைத்தான்.

ராஜீவன் தன்னை அடித்தது, விக்ரமிற்குள் அப்படி ஒரு நிம்மதியைக் கொடுக்க, “சாரி டா மச்சான். ரொம்ப ரொம்ப சாரி டா… சத்தியமா உன்கிட்ட மறைக்கணும்ன்னு மறைக்கவே இல்ல டா. அந்த கனமான சூழ்நிலைல இவனாவது பிழைக்கணுமேன்னு உயிர பிடிச்சுட்டு இருந்தேன் டா.

மாலதிக்கு குழந்த பிறந்தத கூட நேரத்துக்கு பாக்க போகல டா… என்னை மன்னிச்சுடா மச்சான்” என்றவன் கண்களில் நீர் வழிய, அதைப் பார்த்த குழந்தையின் உதடு பிதுங்கி கண்களில் நீர் வழிய, “அப்பா” என அழ ஆரம்பித்தாள்.

“என்ன டா பண்ணினீங்க என் பொண்ண?” என வந்தவனிடம் போகாது, “பிக்கி மாமா பாவம்… அலிக்க நேணா” என ஜீவனிடம் விக்ரமிற்காக பரிந்து கொண்டு பேசினாள்.

அவ்வளவு தான் குழந்தையின் உலகம். தன்னை சீண்டி விளையாடியவனுக்காகப் பரிந்து கொண்டு பேசும் கள்ளமில்லா உலகம்.

“உன் பிக்கி மாமா, உன்ன ஒழுங்கா யாழின்னு கூப்பிட்டா, மாமா அடிக்க மாட்டேன். மன்னிச்சு விட்டுடுறேன்” என்றான் ராஜீவன்.

“சொல்லுங்க… ஆலி பேபி சொல்லுங்க” எனப் பயத்தோடு பார்த்த மகளை, “என் செல்ல யாழி பேபி” என ராஜீவனிடமிருந்து அள்ளி வாரி அணைத்துக் கொண்டான் விக்ரம்.

புன்னகை முகமாக, “உன்ன யாழின்னு கூப்பிட்டாச்சு. உன் ஜீவன் மாமாட்ட என்னை அடிக்க வேண்டாம்ன்னு சொல்லு” என்ற விக்ரம், கன்னம் அழுந்த முத்தம் கொடுக்க,

முகம் கொள்ளா புன்னகையோடு, “பிக்கி மாமாவ அலிக்க நேணா லீவன் மாமா” என ராஜீவனிடம் பரிந்து பேசினாள் குழந்தை.

“உனக்காக… உன் பிக்கி மாமா பிழைச்சு போகட்டும்” என்றவன் கண்களும் குளம் கட்டியிருந்தன.

நடக்கும் கூத்தை எல்லாம் மௌனமாகப் பார்த்திருந்த தகப்பனிடம், “ஆலி பேபி பசிது” எனக் குட்டி தொப்பையைக் காட்டின மகளோடு மூவரும் உணவு மேசையை நோக்கி நகர்ந்தனர்.

உணவை முடித்துவிட்டு அனைவரோடும் சொல்லிக் கொண்டு ராஜீவன் கிளம்பிவிட, “நாங்களும் கிளம்பறோம் மச்சான். நைட் ஏழு மணிக்கா ஹோட்டல்ல பார்ப்போம்” என்றான் கௌதமன்.

“ம்ம்… நைட் டின்னருக்கு அப்பாவோட வாங்க யாழி பேபி” என்றவனிடம், பறக்கும் முத்தங்களோடு, “ஓகே பிக்கி மாமா. டா டா ச்சீ யூ” என்றாள் குழந்தை.

அப்பாவும் மகளும் அனைவரிடமும் கூறிக் கொண்டு வாசல் பக்கம் நடக்கவும், “டேய் விக்ரம், மாப்பிள்ளை எங்க? இந்நேரம் எங்க போனாரு? அவர கூப்பிடு, பாப்பாக்கு பனிக்குடம் உடைஞ்சிடுச்சு. கார எடுத்துட்டு வாசலுக்கு வா” என விக்ரமின் அம்மா அவசர அவசரமாக ஓடி வந்தார்.

“மாலதியோட நீங்க போங்க. நான் ஸ்ரீராம கூட்டிட்டு பின்னாடியே வரேன்” என்ற விக்ரம், மாலதியையும், அவளின் துணைக்கு அவள் அன்னையையும், மாமியாரையும் கிளம்பி நின்ற கௌதமனோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.

மருத்துவமனை பல வலி நிறைந்த நினைவுகளைக் கொண்டு வந்தது. அவன் இறந்து நான்கு வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். இன்று முழுமனிதனாக நிற்கிறான் ஒருவனின் தயவால்.

“ரைட் சைட் இருக்க பிளாக் தம்பி” என்றார் மாலதியின் மாமியார்.

வலது புரம், மூன்று வருடங்கள் முன்பு கருகிப் போய் நின்றிருந்த கட்டிடம், அவனைப் போலவே மறு பிறப்பெடுத்து புதுப் பொலிவோடு நின்றிருந்தது.

‘இங்கா?’ எனப் பார்த்தாலும், அதைப் பற்றி யோசிக்க நேரமில்லை. இவர்கள் மாலதியை சேர்த்த பத்தாவது நிமிடம் விக்ரமோடு, குடும்பத்தின் ஆண்கள் கூட்டம் வந்து சேர்ந்தது.

“இது இப்போதைக்கு முடியுற விஷயம் இல்ல டா. போன தரம் ஏழு மணி நேரம் ஆச்சு குழந்த பிறக்க, நீ பேபியோட கிளம்பு. தங்கப் பாப்பா தூங்கி வழியறாங்க. நான் இங்க குழந்த பிறந்ததும் சொல்றேன்” என விக்ரம் கௌதமனை அனுப்பி வைத்தான்.

வலி வராது சில மணி நேரங்கள் வலிக்காகக் காத்திருந்து, பின் வலியில் முக்கி, முனகி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மறுநாள் விடிவெள்ளி தோன்றிய நேரம் மாலதி, அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.

மாலதி மருத்துவமனையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் தமையன்களால் எப்படி ‘டின்னர் பார்ட்டி’ என ஹோட்டல் செல்ல முடியும்?

டின்னர் பார்ட்டி ரத்தானதால், இந்த முறையும் வீரை பற்றிய மருத்துவத் தகவல் எதையும் ராஜீவனோடு பகிர்ந்துகொள்ள முடியாது போனது.

மாலதியின் குழந்தை, பிறக்க வேண்டிய தினத்திலிருந்து மூன்று வாரங்கள் முன்பாகவே பிறந்திருந்ததால், “பிலிருபின் கவுண்ட் கொஞ்சம் எக்சஸ்சா இருக்கு. அது நார்மல் ஆகிற வரைக்கும் நியோநேட்டல்ல வச்சு பார்க்கணும்” என்றுவிட்டார் மருத்துவர்.

‘நியோநேட்டல்’ பிரிவு விக்ரமிற்கு எதையும் நினைவு படுத்தவில்லை என்றாலும், மறுநாள் மாலதியையும் குழந்தையும் காண வந்த கௌதமனுக்கு பல நிகழ்வுகள் நினைவில் வந்து அமர்ந்துக் கொண்டது. அதே நாலாவது தளத்தில் இருந்தது பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவு.

“எப்படி இருக்க மாலு மா?” என வாஞ்சையோடு கேசம் தடவிய கௌதமனை பார்த்தவள் கண்கள் பனித்தன.

“பேபிக்கு ஜாண்டிஸ்ன்னு சொல்றாங்க ண்ணா. ஒழுங்கா குழந்தய பார்த்த மாதிரியே இல்ல ண்ணா. ஃபீட் பண்ணன்னு ரெண்டு தரம் கையில கொடுத்தாங்க. அந்த பக்கமே விட மாட்டேன்றாங்க. ஒரு வாரம் குழந்தைய அவங்க வச்சுப்பாங்களாம் ண்ணா” என்றவளிடம், “இப்போ தான் பார்த்துட்டு வந்தேன் மாலு. ரெண்டரை கிலோ இருக்கா. ஸ்ரீ மாதிரியே நல்ல நீளம். அப்படியே உன் ஜாடை. குழந்த மஞ்சளா எல்லாம் இல்ல டா” என்றான் ஆறுதலாக.

“தூக்க விட்டாங்களா ண்ணா?”

“இல்ல டா. ரெண்டு ரூமுக்கும் நடுவுல கண்ணாடி தடுப்பு இருக்கு. இவங்க தான் மாலதி’ஸ் டாட்டர்ன்னு ஒரு குட்டி ஏஞ்சல காட்டி சொன்னாங்க” என்றான்.

“காலையில என்னை டாக்டர் வந்து பார்த்ததும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. குழந்த மேல நிரைய வையர் போட்டிருக்காங்களா?” எனக் கேட்டவளுக்குள் சோகம் இழைந்தோடியது.

“இல்ல மாலு. மூக்குக்குல இருந்து ஒரு ஆக்சிஜன் டியூப் போகுது. அது அசையாம இருக்க கன்னத்துல ஒட்டி வச்சிருக்காங்க. லைட் தெரப்பின்னு குழந்தையோட நெஞ்சு மேல லைட் போட்டிருந்தாங்க. துணி எதுவும் போடல. அண்டா சைசுக்கு ஒரு டையப்பர். அப்பறம் கணுக்கால்ல இருந்த டேக்ல, குட்டியா ஒரு டிவைஸ் இருந்துது. ரெண்டு காலையும் கையையும் பப்பரப்பேன்னு விரிச்சுட்டு அந்தச் சின்ன பேசினெட்ல நிம்மதியா தூங்கிட்டு இருந்தா.” எனச் சிரிக்க, மாலதிக்கும் சிரிப்பு வந்தது அவன் வர்ணனையில்.

“நல்லா சொல்லுங்க கௌதமன். இதயே நான் சொன்னா, இவ நம்பவே இல்ல” என ஸ்ரீராம் குற்றம் படித்தான்.

“இவர் எனக்காக சொல்றார்ன்னு நினைச்சேன்” என்றாள் முகத்தில் புன்னகை தவழ.

“இதோ உன் பெட்டுக்கு இரு சார்ட் இருக்க மாதிரி அவ தொட்டில் மேலயும் சார்ட் வச்சு, அவ ஃபீடிங் ஸ்கெடியூல், டையப்பர் சேஞ்சிங் டைம் அப்படி எல்லாமே நோட் பண்ணி வச்சு கவனிச்சுகிறாங்க. எப்பவும் அந்த ரூம்ல ரெண்டு மூணு நர்ஸ் இருந்துட்டே இருக்காங்க, நம்மள விட குழந்தையை நல்லாவே பார்த்துகிறாங்க. நீ கவலபடாம கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு மாலதி” எனக் கணவன் மனைவிக்கு ஆறுதல் வார்த்தை கூறிக் கொண்டிருந்தான்.

தன் மகளை இப்படித் தாயும் தகப்பனுமாகத் தாங்கி இருந்திருப்பார்களா? அப்படி இருந்தால், அவள் ஏன் மரத்தடியில் வீசப்பட்டிருப்பாள்? தன் மகளின் பிறப்பைப் பற்றி கௌதமனுக்கு தெரியாது. பிறந்த அன்று யாழினியாள் எப்படி இருந்திருப்பாள்? ஸ்ரீயின் குழந்தை போலவே அவ்வளவு குட்டியாக இன்குபேட்டரில் டியூபுகள் பொருத்தப்பட்டு இருந்திருப்பாளா? இல்லை சரியான நாளில் பிறந்து, அன்னையின் அருகில் இருந்திருப்பாளா? அன்னை என்றதும் யசோதரா என்ற பெயரும், அந்தப் பெயரைக் கொண்ட யசோவுமே நினைவில் வந்தாள்.

அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். முன்பு அவன் இருந்த மருத்துவ கட்டிடத்திடலிருந்து தூரமாகத் தெரிந்த மரம் இங்கிருந்து அருகில் தெரிந்தது. மரத்தடியில் நீல நிற பை ஒன்று பால் பாட்டிலோடு இருப்பது போலவே தோன்றியது.

அன்று சிலை போல, கருநீல நிற பை ஒன்றை நெஞ்சோடு அணைவாகப் பிடித்து நின்றிருந்தவரின் நிர்க்கதியான நிலை இன்று நினைவில் வந்தது. அவரின் பேரக் குழந்தை தப்பித்திருக்குமா?

குழந்தை நெருப்பிற்குத் தப்பித்திருந்தால் பசியாறப் பால் தேவைப்பட்டிருக்குமே. இன்றும் முகம் தெரியா அந்தக் குழந்தைகளுக்காக மனம் கனத்தது.

“எப்போ டா வந்த?” என்ற விக்ரமின் சத்தம் கேட்டது.

அன்றைய விபத்தின் தாக்கத்தில், “வீருக்கு மனைவி குழந்தை இருந்துதா விக்கி?” எனக் கேட்டான். “என்னடா? என்ன கேட்ட?” எனக் கேட்டவன் குரலில் நிச்சயம் பயம் இருந்தது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!