50.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,350
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 50.2
.
உணர்வு பெற்றவனாய், “குழந்தைய பார்த்தியா? அப்படியே நம்ம மாலதி ஜாடையில இருக்கா இல்ல?” என நடப்புக்கு வந்தான் கௌதமன்.
Advertisement
அடுத்த மூன்று தினங்களில் குழந்தையின் உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருந்ததால், “அடுத்த ஒரு வாரத்துக்கு வீட்டிலேயே லைட் தெரப்பி செய்யுங்க போதும். இன்னைக்கு டிஸ்சார்ஜ்” என்று மாலதியின் இதயத்தில் பால் வார்த்தார் குழந்தை நல மருத்துவர்.
விக்ரமோடு கௌதமனும் வந்திருக்க, “நீங்க மாலதிய பாருங்க மச்சான். நான் மாலதியோட டிஸ்சார்ஜ் பார்க்கிறேன், இவன் பாப்பாவோட டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கிற வேலைய பார்ப்பான்” என விக்ரம் அவர்களது ரசீதோடு, பணம் கட்ட கிளம்பினான்.
Advertisement
Advertisement
எல்லாம் முடிந்து, மாலதி வீட்டினுள் நுழையும் வரையுமே கௌதமன் அவர்களோடே இருந்தான்.
“குழந்தையை என் பக்கத்துல பாய் விரிச்சு, அதுல போடு, தல உருண்டு வரட்டும்” என்றார் அந்த வீட்டுப் பாட்டி, தன் பக்கத்தில் இருந்த தரையைத் தட்டி.
Advertisement
“இப்போ தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தோம், அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்க” என மாலதி வாய்க்குள் முணுமுணுத்தாலும், சத்தம் வெளியில் வராது பார்த்துக்கொண்டாள்.
அவர் அருகில் கிடந்த குழந்தையின் உடுப்பை கழட்டியவர், “டீ சாந்தா, இந்த துணிய எத்துட்டு போ. அந்த அலமாரில தொவச்சு வச்சிருக்க, சட்டய எடுத்துட்டு வந்து போடு. இந்த மாதிரி டையப்பர் எல்லாம் போடாத. அந்த துணிய இடுப்புல கட்டு” என டையப்பரையும் கழட்ட வைத்தார். காற்று பட்டதும், குழந்தை பாயை ஈரம் செய்தாள்.
குளிருக்குக் குழந்தை வீல் எனச் சத்தம் எழுப்பவும், கிளம்பிக் கொண்டிருந்த கௌதமனின் கவனம் குழந்தையின் பக்கம் சென்றது. காலை உதறிக் கொண்டு அழுதாள் குழந்தை.
“இப்படி ஈரம் பண்றது கண்ணுல பட்டாதான அவ ஒழுங்கா பால் குடிக்கிறாளா? எத்தனத் தரம் ஈரம் பண்றான்னு தெரியும்?” எனப் பாட்டி பாடம் எடுத்தார்.
“இன்னைக்கு எத்தன தரம் போனா?” என்ற பாட்டியின் கேள்விக்கு மாலதி விழிக்க, “அது எல்லாம் சரியாத்தான் போனா. நீ ரெஸ்ட் எடு போ.” என ஸ்ரீராம் இடை புகுந்து மனைவியைக் காப்பாற்றி விட்டவன், “என் குட்டிமாக்கு என்ன ஆச்சு? குளுருதா? அம்மா வேணுமா?” என கைகளில் எடுத்தான் மகளை.
நினைவு வந்தவனாக காருக்கு சென்றான் கௌதமன். குழந்தையோடு ஒரு கோப்பும் வந்திருக்க, அது இன்னும் அவன் வாகனத்தில் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தான். குழந்தைக்கான ‘சார்ட்’ அதில் இல்லை. அவன் தேடிய இரண்டு பொருட்களுமே அதில் இல்லை.
“மாலுமா… மாலதி’ஸ் பேபி கேள்ன்னு போட்டிருந்த டேக்க கொடுத்தனுப்பலியா?” எனக் கேட்டு மாலதியின் முன் நின்றான், யாழியின் தகப்பன்.
“இல்ல அண்ணா. என் கையிலயும் அவ கால்ல இருந்ததையும் டிஸ்சார்ஜ் பண்ணும் போது கழட்டிட்டாங்க. அது அங்க இருக்க வரைக்கும், குழந்தை மாறிடாம இருக்கதுக்காக போடறது.” என்றாள்.
எதோ யோசனையோடே வீட்டுக்கு வந்தவன் முதல் வேலையாக, யாழினியாளோடு இலவ இணைப்பாக வந்தவற்றையும் கையில் எடுத்தான். ‘யசோதராஸ் பேபி கேர்ள்’ என்ற டேக் இருந்தது. ‘யசோதராஸ் பேபி’ என்ற தலைப்பில் குழந்தையின் சார்ட்டும் இருந்தது. கௌதமன் நெற்றி சுருங்கியது. இவை இரண்டையுமே அவன் மருத்துவமனையில் பார்த்திருந்தான். ஆனால் அவை மாலதியோடு வீட்டுக்கு வரவில்லை.
அமைதியாக அமர்ந்திருந்த கௌதமனுக்குள் அலை எழுந்து பேரிரைச்சலை எழுப்பியது. ஒருகட்டத்திற்கு மேல் அமர்ந்திருக்க முடியாதவனாக விக்கரமை அழைத்தான். தென் கொரியாவிலிருந்து வீரை தேடி நேரே திருச்சி சென்றதிலிருந்து, பூங்குவியலாக அவன் கைக்கு வந்த குட்டி யாழியைப் பற்றிக் கூறி முடித்தான்.
“இது தான் என் மகளோட அம்மா பேரு யசோதரான்னு எனக்குக் காட்டி கொடுத்துச்சு” என்றான். “நியோநேட்டல்ல ஒவ்வொரு குழந்தையோட தல மாட்டுலயும் இதே மாதிரி ஒரு சார்ட்ட பார்த்தேன்.” என நிறுத்தினான்.
“என்ன கௌதமா சொல்ல வர? சத்தியமா எனக்கு புரியல?” என்றவனுக்கு ஏதோ புரிவது போல் தான் தோன்றியது.
“யாழியோட பிறந்த நாளக் கவனி, அந்த நேரம் நான் ஹாஸ்பிட்டால்ல அட்மிட் ஆகி இருந்தேன். அப்போ நடந்த தீ விபத்து நினைவிருக்கா? பிறந்த அன்னையில இருந்து அடுத்த அஞ்சு நாளைக்கு… அதாவது தீ விபத்து நடந்த காலைல வரைக்கும் தான் சார்ட் அப்டேட் ஆகியிருக்கு. என் பொண்ணு ஏன் அந்த ஹாஸ்பிட்டல்ல பிறந்திருக்கக் கூடாது?”
கையில் இருந்த காகிதத்தில் மருத்துவமனையின் பெயர் இல்லை. இதே போன்று தான் எல்லா மருத்துவமனையிலும் டேக் மற்றும் சார்ட் பேப்பர் இருக்கும். என்ன முடிவுக்கு வருவது என இருவருக்கும் தெரியவில்லை.
“அருண் அங்கிள்” என்றான் விக்ரம்.
“அவருக்கு என்ன டா?”
“அவர் உங்க ஃபேமிலி ஃபிரெண்ட் மட்டும் இல்ல, உன்ன டிரீட் பண்ண டாக்டர். நீ இருந்த ஹாஸ்பிட்டல்ல நியூராலஜி டிப்பார்மென்ட் ஹெட்.” என விக்ரம் கூறியதும், அவர்கள் இருவரும் நேரே சென்று நின்றது அருணின் அறை வாசலின் முன்.
சின்னவனைப் பார்த்தவருக்கு உள்ளுக்குள் சின்னதாக ஒரு திடுக்கிடல். மூன்று வருடங்களாக நன்றாகத் தானே இருந்தான்… இன்று என்னவாம். கடவுளே… என்று தான் பார்த்தார்.
“மாமா எனக்கு ஒரு இன்ஃபர்மேஷன் வேணும்” என்றான் எந்த முகமனும் இல்லாது.
“முதல்ல ரெண்டு பேரும் உக்காருங்க. நீ நல்லா இருக்கியா? உடம்புக்கு ஒண்ணும் இல்லையே” எனக் கேட்டு, ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, “என்ன வேணும் சொல்லு” என வினவினார்.
அவன் கொண்டு வந்திருந்த தாளோடு, பிறந்த குழந்தையின் கையிலோ காலிலோ மாட்டிவிடும் அடையாள பேண்டை அவர் முன் வைத்தான்.
“இதுக்கு என்ன டா?” என்றவர், சட்டென, “இது எப்படி உன் கையில?” என மாற்றி கேட்டார்.
“இது இந்த ஹாஸ்பிட்டல்தா மாமா?”
வெளிச்சத்துக்கு நேரே தாளைத் தூக்கிப் பிடித்துக் காட்டினார். அந்த மருத்துவமனையின் லோகோவின் வழியே வெளிச்சம் ஊடுருவியது.
“இப்போ சொல்லு, இது எப்படி உன் கையில?” என வினவினார்.
“எந்த காரணத்தாலையும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணுங்க. சொல்றேன். அதுவும் அம்மாக்கு இந்த விஷயம் போகவே கூடாது. சத்தியம் பண்ணுங்க” என்றவனை அவர் முறைத்த முறைப்பிற்கு விக்ரம் பயந்தாலும் இவன் அசரவில்லை.
“சோறு தண்ணிய மறந்து, என் குடும்பத்த மறந்து, நீயே கதின்னு கிடந்து, என் உயிர கொடுத்து உன் உயிர பிடிச்சு நிறுத்த போறாடினேன் மடையா. சொல்லு டா” என அவர் அதட்டல் போட, “என் பேபி எனக்கு உயிர் மாமா. அவள எங்கிட்ட இருந்து பிரிச்சா நான் செத்ததுக்கு சமம்” என்றான்.
தலையில் கைவைத்தவர் ஒரு நிமிடம் அப்படியே அமர்ந்துவிட்டார். ‘திருடினானா?’ என்ற எண்ணம் அவருள் வருவதைக் கூட அவரால் அனுமதிக்க முடியவில்லை. அவரின் உயிர்த் தோழி வைஷாலியின் மகன். அவன் பிறந்த அன்றே அவர் கையில் ஏந்தி முத்தமிட்டார்.
நான்கு வருடங்கள் முன் அவன் உணர்விழந்து குற்றுயிராய் வந்த வேளை சோறு தண்ணீரை விடுத்து அவனே கதி என இருந்தவருக்கு, அவனைத் திருடனாகப் பார்க்க முடியவில்லை.
மடிக்கணினியில் எதையோ தடவினார். அந்த டேகில் இருந்த பெயர், பிறந்த நாளை சரி பார்த்தார். இதையும் அதையுமா எதையோ உருட்டினார்.
“மூணு வருஷம் முன்ன நடந்த தீ விபத்துல காணாம போன குழந்தைங்க பட்டியல்ல, இந்த யஷோதராவோட குழந்தையும் ஒண்ணு. நியோநேட்டல்ல இருக்க குழந்தைங்க எல்லாருமே பிறந்த பச்சிளம் குழந்தைங்க.
தீயில எதுவும் மிஞ்சாதுன்னு, காணாம போன குழந்தைங்கள அவங்க குடும்பத்திட்ட இறந்துட்டதா டிக்லேர் பண்ணினோம். ஆனாலும் எங்களுக்கும் முழுசா பதில் கிடைக்கலங்கறது உறுத்தல் தான்.
அன்னைக்கு வரைக்கும் இந்த பேப்பர் டேக்க தான் குழந்தைங்க கைல போட்டு விட்டிருந்தோம். இந்த அம்மாக்கு, இது குழந்தைன்னு இது சொல்லும். ஆனா விபத்துக்கு அப்பறம், இதோட சேர்த்து டிஜிட்டல் டிவைஸ் போட்டு விட ஆரம்பிச்சோம்.
குழந்தைய தூக்கிட்டு யாரும் ஹாஸ்பிட்டல்ல தாண்ட முடியாது. சட்டுன்னு அத பிச்சு போடவும் முடியாது. செக்கியூரிட்டி அலாரம் அடிக்கும். டிராக் பண்ணி, குழந்தையோட லொக்கேஷன பிடிச்சுடலாம். அப்போ அது முடியல.” என்றவர் நிறுத்தி அவன் முகம் பார்த்தார், இதற்கு மேல் நீ தான் சொல்ல வேண்டும் என்பது போல்.
“குழந்தையோட அம்மா அப்பா போட்டோ ஏதாவது இருக்கா மாமா?”
இல்லை என்பது போல் அவர் தலை அசைத்தார். “அட்ரெஸ் இருக்கு” என்றவரை அவன் ஆவலாகப் பார்க்க, “இது போலீஸ் கேஸ் கௌதமா.” என்றார் அமைதியை இழுத்துப் பிடித்து.
“மாமா?”
“டேய்… அன்னைக்கு நீ இருந்த நிலமைக்கு, உனக்கே உன்ன யாருன்னு தெரியாது. நீ இந்த குழந்தைய திருடவும் இல்ல, அதைத் திருட வேண்டிய அவசியமும் இல்ல. ஆனா காணாம போன குழந்தை உன் கையில இருக்கு.
அன்னைக்கு நடந்த தீ விபத்த அழகா யூஸ் பண்ணி குழந்தய யாரோ திருடிட்டு போயிருக்காங்க. இதோட அவங்க நிறுத்தினாங்களா? இல்ல இதையே தொழிலா வேற ஹாஸ்பிட்டல்ல செய்றாங்களா? இது எவ்வளவு பெரிய விஷயம் கௌதமா?
வெளியில விஷயம் போச்சு, ஹாஸ்பிட்டல் பேரு என்னாகிறது? போலீஸ் கேஸ்சுன்னு நீ அலையா அலையணும். எப்படி யாழி உன் கைக்கு வந்தா? சொல்லு டா”
“அந்த இன்சிடென்டுக்கு அப்பறம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி முடிச்சுட்டு, திருச்சிக்குப் போனேன் மாமா. அப்போ…” என ஆரம்பித்தவன் அனைத்தையும் கூறினான்.
“இது யாருக்கெல்லாம் தெரியும்?”
“அப்பா, எனக்கு, இவனுக்கு, உங்களுக்கு”
“வைஷூ… தாக்ஷா.. இவங்களுக்கு?”
“இல்ல மாமா… குழந்தை என்னுது இல்லன்னு மட்டும் தான் தெரியும். விபரம் சொல்லல. ஃப்ரெண்டு யாருதோன்னு நினைச்சுட்டு இருக்காங்க” என்றான்.
எதையோ யோசித்தவராக, “முடிஞ்ச எல்லாம் முடிஞ்சதாகவே இருக்கட்டும் கௌதமா. பிணத்த கூர் போட்டு இப்போ எதையும் கண்டுபிடிக்க வேண்டாம். இந்த இடியாப்பச் சிக்கல்ல சீர் படுத்தி குழந்தையோட பெத்தவங்கள கண்டுபிடிச்சு அவங்க கையில உன் பொண்ண கொடுக்க போறீயா? இதுல எங்கயாது ஒரு காயின் தப்பா நகர்ந்தா கூட, நீ மாட்டிப்ப. கீழ கிடைச்சாலும் அது ஒரு உயிர். நேரா போலீட்ட தான் நீ போயிருக்கணும். உனக்கு சொந்தமில்லாத ஒண்ணை வச்சிருக்க நீ சட்டபடி ஒரு குற்றவாளி கௌதமா. இதெல்லாம் போதாதுன்னு போலி பர்த் சர்டிபிகேட்!
குழந்தையோட குடும்பத்த பொறுத்தவரை… அவ மூணு வருஷமாவே உலகத்துல இல்ல. அது அப்படியே இருந்துட்டு போகட்டும். ஹாஸ்பிட்டல்ல பொறுத்தவரை அது முடிஞ்சு போன அசம்பாவிதம். போலீச பொறுத்தவரை அது முடிஞ்சு போன கேஸ். அதனால, இப்படி இத எல்லாம் தூக்கிட்டு சுத்தாத.
இதப் பத்தி இனி யார்கிட்டயும் பேசவே பேசாத. உன் ஃப்ரெண்டு குழந்தைங்கிற கதைய நிறுத்து. போலி பர்த் சர்டிஃபிகேட் விஷயம் வெளியில வந்தா எவ்வளவு பிரச்சனை தெரியுமா?
உனக்கு பிறந்த குழந்தை யாழி. இப்போ நீ மட்டும் தான் அவ அப்பா. அத அப்படியே கன்டினியூ பண்ணு.” என்று திட்டவட்டமாகக் கூறியவர், கௌதமன் கொண்டு வந்த சாதனங்கள் இரண்டையும் அறையிலிருந்த காகித துண்டாக்கியில் போட்டு அதை இல்லாமல் போகச் செய்தார்.
“அந்த யசோஷராவோட அட்ரெஸ் மாமா?” எனக் கேட்டவனிடம், “அவங்கட்ட உன் பொண்ண கொடுக்க போரியா?” எனக் கேட்டார்.
‘மாட்டேன்’ என அவன் தலையசைக்க, “நீ இல்லாம யாழி இருந்துப்பாளா?” என அவனைப் பார்த்தார்.
“அய்யோ… இல்ல மா” என்றான் அவசர அவசரமாக.
“தெரியுதுதில்ல? இவ்வளவு நேரம் என்ன சொன்னேன்?” பெருமூச்சொன்றை விட்டவர் “வேண்டாம்… குப்பைய கிளறாத கௌதமா. உன் நிம்மதியோட வாழப் பாரு. இத நோண்டினா, உன் நிம்மதியும், உன் பொண்ணும் உனக்கில்ல.” என்றார்.
“அது தான் அங்களில் சொல்றாங்க தான…” என்ற விக்ரமை பார்த்தவன் நீண்ட மூச்சு ஒன்றை விட்டு, “தேங்க்ஸ் மாமா” என எழுந்து கொண்டான்.
“நான் இன்னைக்கு உன்ன பாக்கல. நீயும் என்னை பாக்கல. இந்த நாள்… இந்தக் கேள்வி பதில்கள் நடக்கவே இல்ல கௌதமா” என்ற அருணை பார்த்தவன், “சரி மாமா” என்று கிளம்பினான்.
கார் மிதமான வேகத்தில் கௌதமனின் வீட்டை நோக்கிப் பயணித்தது. மனம் கனத்தது. யார் இந்த யசோதரா? குழந்தையைத் தொலைத்தவளுக்கு எப்படி வலித்திருக்கும்? தன்னை யசோதராவின் இடத்தில் வைத்துப் பார்த்தான். அந்த வலி தாள முடியாத வலி எனத் தெரிந்தது.
அந்தப் பெண்ணிடம் ‘உன் மகள் நன்றாக இருக்கிறாள்’ என்ற உண்மையைக் கூறி, அவள் வலியிலிருந்து விடுதலை கொடுக்கலாம். ஆனால்… அவள் தன் மகளைக் கேட்டு நின்றால்… நான் என்ன ஆவேன்? என் மகள்? நான் இல்லாது என் மகள்? கௌதமன் உள்ளுக்குள் பயந்து போனான்.
“என்ன டா கௌதமா?” என்ற விக்ரமிடம் மனதில் தோன்றியதை உரைத்தான்.
“குழந்தை காணாம போச்சுன்னு ஹாஸ்பிட்டல் சொல்லி இருந்தா… என்னைக்காவது ஒரு நாள் என் மக கிடைப்பான்னு ஒரு நம்பிக்கையில வலியோட காத்திருந்திருப்பாங்க கௌதமா. ஆனா, இறந்து போனதா நம்பிட்டவங்க, தேட மாட்டாங்க. மூணு வருஷத்துல அவங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிருப்பாங்க. இந்நேரம் அவங்களுக்கு வேற குழந்தை கூட பிறந்து இருக்கலாம்.
நீயா யார் குழந்தையையும் திருடல டா. ஒரு வேள சாப்பாட்டுக்கும் பெத்தவங்க பாசத்துக்கும் ஏங்க இருந்த குழந்தை மேல உன் ஒட்டுமொத்த அன்பையும் கொட்டி, உன்னோட சொந்த மகளா வளர்த்துட்டு இருக்க. நீ இதுல கில்டியா ஃபீல் பண்ண ஒண்ணுமே இல்ல டா…” என அவனுக்குத் தோன்றிய நிதர்சனத்தை உரைத்தான்.
“டாக்டர் அங்கிள் சொன்ன மாதிரி, இந்த சில நாட்களை உன் மனசுல இருந்து எடுத்து போட்டுடு கௌதமா. யாழி பேபி, உன் பொண்ணு. என் தங்க பாப்பா. முகம் தெரியாத உன் காதலி யசோதரா, யாழியோட அம்மா.” எனப் புன்னகைத்தான்.
அந்த முகம் தெரியாத காதலிக்கு ஒரு முகம் கொடுத்தது கௌதமனின் மனம். அந்த உருவத்திற்குக் கௌதமன் கொடுத்த முகம் மிக மிக நேர்த்தியாக பொருந்தியது.
“எனக்கு, உன்னோட வாழ்க்கை பூரா வாழற அளவுக்கு உன்னை பிடிச்சிருக்கு. என் பொண்ணுக்கு, ‘அம்மா நேணும்’ன்னு கேட்டு, உனக்காக அழற அளவுக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கும் யாழியையும் என்னையும் பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும் யசோ. என்ன… நீ அத இன்னும் உணரல. மேட்டர் ஆஃப் டைம்… சீக்கிரம், நீயும் எங்கள பிடிச்சிருக்குன்னு சொல்லிடுவ. நாங்க தான் உன் வாழ்க்கைன்னு சீக்கிரம் உணர்ந்து சொல்லுவ.
ஐயாட்ட சொல்லி இந்த மாப்பிள்ளை பார்க்கும் படலத்த நிப்பாட்ட சொல்லணும். அப்படி எல்லாம் யாருக்காவும், ஏன் உனக்காகக் கூட உன்னை விட்டு கொடுக்க மாட்டேன் யசோதரா” எனத் தனக்குள் இருக்கும் கனவு காதலியிடம் கூறியது கௌதமனின் காதல் மனது.
மனித மனம் எத்தனை விசித்திரமானது? இன்று, ‘வேண்டும்’ என ஆசைகொண்டு ஒன்றிற்காக அடம் பிடிப்பதும், ‘ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என அதே மனம் கூறுவதும், விசித்திரம் தானே?